Monday, February 18, 2019

திருமணம் இன்னொரு உறவானது.5

வல்லிசிம்ஹன்
எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும் .

மன முறிவு  வளர்ந்தது. உஷாவுக்கு ஒரே ஒரு மகிழ்ச்சி விழா நல்ல விதமாக நடந்தது தான்.

சென்னையிலிருந்து திரும்பி வந்ததிலிருந்து  மஹேஷிடம் ஒரு வார்த்தை பெயரவில்லை.
உஷாவும் எவ்வளவோ முயற்சித்தாள் .

சரி. போதும் இதைத்தவிர வேறு பேசவில்லை மகேஷ்.
போதாதா குறைக்கு அவன் வீடு திரும்பும் நேரம்
சந்தர் விழாவில் எடுத்த புகைப்படங்களைக் கொண்டு வந்திருந்தான்.
குழந்தைகளோடு அவைகளை ரசித்துக் கொண்டிருந்த உஷாவை அதிர்ச்சி செய்தது வாசல் கதவின் சத்தம்.

என்ன எது என்று பார்ப்பதற்குள் மாடிக்கு விரைந்து விட்டான் மகேஷ்.

சந்தர் முகம் சுருங்கி விட்டது. என்ன உஷா ,அவருக்கு வெளியே போக வேண்டுமா. அவசரமாக மேலே
சென்றார்.
நீயும் தயாராகு.
நான் நாளை வந்து இவைகளை எடுத்துக் கொள்கிறேன்.
என்றபடி குழந்தைகளிடம் விடை பெற்று வெளியேறினான்.
உஷா  தன்னுள் படர்ந்த சினத்தை  அடக்கியபடி, குழந்தைகளை உட்கார வைத்துப் பாடங்களைபி படிக்க வைத்தால்.
நிலைமையின் கசப்பு  அவளை ஆட்கொண்டது.

சிறிது நேரம் ஆகியும் கீழே வராத  மகேஷைப் பொருட்படுத்தாமல்  குழந்தைகளுக்கு
உணவு அளித்து விட்டுத் தானும் உண்டாள் .

தூக்கம் வர மருத்துக் கண்ணில் நீர் திரண்டது.
இது என்ன கொடுமை. இப்படி சந்தேகப் படும்படி என்னதான்  நடந்துவிட்டது. இத்தனை பலவீன மனம் கொண்ட மனிதனையா நான் மணந்தேன்.

இனி வாழ்வு எப்படிச் செல்லும். குழந்தைகள் கதி
என்ன.
யாரிடம் பேசுவது என்று எண்ணியபடியே உறங்கி விட்டாள்

அடுத்த நாள் காலை உணவு கூட உண்ணாமல் சென்று விட்டான் மகேஷ். பையனும் பெண்ணும் அப்பா அப்பா என்றபடி சுற்றி வந்தன.

மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு தன அக்காவுக்கு ஒரு
trunkcall  செய்தாள்  உஷா.

அக்காவிடம் விளக்குவதற்கும் அழுகைதான் வந்தது.
 அவளை வரச்  சொல்லி வேண்டிக்கொண்டாள் .

வார இறுதியில் வந்த அக்கா விலாசினி
மகேஷிடம் பேச, மரியாதை இல்லாத வார்த்தைகள் வெளிப்பட்டன மகேஷிடம் இருந்து .
இந்தக் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் என்றால்  மகளிர் மன்றமே சிரிக்கிறதே இந்த விஷயத்தைப் பேசி என்று அதிர்ச்சி கொடுத்தான் .

சற்றுக்கூட உண்மை இல்லாத வார்த்தைகளைக் கேட்ட
உஷா   பொறுக்க முடியாமல்  ,உங்களிடமிருந்து இந்த  கொடுமையை எதிர்பார்க்கவில்லை.
நாங்கள் நல்ல நண்பர்கள்.
அவரின் மனைவி யும் கூடவேதானே இருப்பாள்.
உங்களுக்குத் பொறாமையில் புத்தி பேதலித்துவிட்டது.

இனி மேற்கொண்டு என்ன செய்வது. என்னால் குழந்தைகளை இந்தக்
கீழ்த்தரமான நிலையில் வளர்க்க முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள்.
இதோ சென்னைக்கு உங்களுக்கு டிக்கட் பதிவு செய்தாச்சு. நீ உங்க அக்காவுடனே கிளம்பலாம்.
மற்றது என் வக்கீல் மூலம் நாம் முடிவு செய்யலாம். நீ எங்கள் வீட்டுக்குப்
போக வேண்டிய அவசியம் இல்லை.
உன் பெற்றோரிடமே செல்லலாம். என் அம்மாவும் சரி என்று சொல்லி ஆகிவிட்டது
என்றான்.
விலாசினியும்,உஷாவும் அப்படியே உறைந்து போனார்கள்.
ஏட்ஹோ துக்கம் நடந்த வீடு போல அங்கே தெளிவில்லாத சுமை சூழ்ந்தது.
திடீரென்று சுதாரித்துக் கொண்ட உஷா,

அவ்ர் மீண்டும் வந்து வெளியே போ என்று சொல்லும்வரை
 நான் இருக்கப் போவதில்லை என்றபடி
என்றபடி, பெட்டிகளை தயார் செய்தாள்.
 பயணத்துக்கு வேண்டிய  உணவை மட்டும் தயார் செய்து
கொண்டு  கனத்த இதயத்தோடு வீட்டைப் பூட்டிக் குழந்தைகள்
 கைகளைப் பிடித்தபடி இறங்கினாள்.
தோட்டக்காரரிடம், ஊரில் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதாகவும்
ஐய்யாவிடம் சாவியைக் கொடுத்துவிடும்படியும்
சொல்லி,
 ஒரு டாக்சியும் அழைத்து வரச் சொன்னாள்.
அவன் மௌனமாக் அவள் சொன்னதைச் செய்ய
மேட்டுப் ப்பாளையம் வந்து நீலகிரி விரைவு வண்டியில் ஏறினர்.
விலாசினி குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டியபடி
உஷாவைக் கவலையோடு பார்த்தாள்.
 வெறித்த பார்வையோடு இருந்த உஷா
சென்னையிலும் பெற்றோரிடம் உடைந்து அழவில்லை.
 அடுத்து வந்த மாதங்களில் ,தந்தை தாயுடன் பெங்களூருக்கு இடம் மாறினாள்.
அங்கிருந்த பள்ளியில் சம்ஸ்க்ருதம் ,ஆங்கிலம் இரண்டும் சொல்லிக்
கொடுக்கும் வேலை கிடைத்தது..

விவாகரத்து,  கிடைத்து அவளுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை திருப்பி அனுப்பி
விட்டாள்.

இரண்டு வருடங்கள் கழித்து மகேஷ் மறுமணம் செய்த செய்தி கிடைத்துத் தனக்குள்
சிரித்துக் கொண்டாள். இன்னோரு உறவு அவருக்குத் தான் வேண்டியிருந்தது.
தனக்கில்லை என்று நினைத்தபடி தனியே வாழக் கற்றுக் கொண்டாள்.
 மனமும் அலைபாயவில்லை.
குழந்தைகளும் நன்று முன்னேறினார்கள்.
நல்ல வேலை,அவர்களுக்குப் பிடித்த திருமணம் என்று பார்த்துப்
பார்த்து செய்தாள்.

 நிம்மதியுடன் இந்த எழுபத்தைந்து வயதில் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்.
வாழ்வில் நடக்கும் விபரீதங்களுக்கு நல்ல முடிவு சிலசமயமே கிடைக்கிறது.
உஷாவைப் பொருத்தவரையில் குறை இல்லை.
மங்களம். வாழ்க வளமுடன்..


14 comments:

Geetha Sambasivam said...

கொஞ்சம் யோசித்திருக்கலாம். மனம் விட்டுப் பேசி இருக்கலாம். இப்படி ஒரு நிர்மூடனைக் கண்டதே இல்லை. என்ன படித்து என்ன? சோகமான முடிவு என்றாலும் உஷாவின் தைரியம் மெச்சத்தக்கது, பாராட்டத்தக்கது.

ஸ்ரீராம். said...

கொஞ்சம் யோசித்திருக்கலாம்தான். தன்னம்பிக்கை நிறைந்தவர். சந்தேகப்பேய் நாளும் ஆட்டும் கொடுமை இல்லாமல் பின்னாட்களைக் கழித்துக் கொண்டிருப்பார் உஷா. ஆனாலும்....​

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,
எப்போது இது போலத் தப்பு அபிப்பிராயம் ஏற்பட்டதோ
அப்பொழுதிலிருந்து உஷாவின் வாழ்வு திகிலுடன் தான் போய்க் கொண்டிருந்தது.

சிடிசிடுவென்று இருப்பவரோடு குடும்பம் நடத்தலாம். சந்தேகப் படுபவர்
கூட எப்படி இருக்க முடியும்.

மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்பது தெரிந்த விஷயம் தானே.
இதில் என்ன அதிசயம் என்றால் குன்னூர் தோழர்களும் தோழிகளும் பெங்களூர் வந்து பார்த்த வண்ணம் தான் இருக்கின்றனர்.
ஒரு அருமையான குடும்ப வாழ்வு அமைய வில்லை
என்று எங்களுக்கும் வருத்தம் இருந்தது.
அவளை ஒத்தவர்கள் சிலர் மறு மணம் செய்து கொண்டனர்.
அவளுக்கு என்னவோ அது பிடிக்கவில்லை.
சன்னியாசி போல வாழ்வு.தொடர்ந்து படித்தற்கு நன்றி மா.

கரந்தை ஜெயக்குமார் said...

உஷாவின் மன உறுதி போற்றதலுக்கு உரியது

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

உண்மைதான். மனம் விட்டு அந்தக் குழந்தைகளுக்காகவாவது பேசி இருக்கலாம்.
தன்னை சந்தேகித்தது அவளை மிகவும் பாதித்தது.
மேலும் அவன் கேட்கிற நிலையிலேயே இல்லை.

முற்போக்கு எண்ணம் கொண்டவளுக்குத் தன் சுயமரியாதையை இழக்க மனமில்லை
அதுதான் அங்கே ஆதாரமாய் இயங்கியது.

இது போல ஒன்றில்லை மூன்று தம்பதிகளை நாங்கள் பார்த்தோம். எல்லாம் மேல்தட்டுக் குடும்பங்கள். இங்கே ஆண் தவறு செய்தால் அடுத்த இடத்தில் பெண்
பிரிவுக்குக் காரணமானாள். 70 களில் இப்படிப் பார்த்தது
மிக ஆச்சர்யமாகத் தான் இருந்தது மா. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் அன்பு கரந்தை ஜெயக்குமார். மன உறுதியோடு 40 வருடங்களைக் கழித்து விட்டாள். பேரன் பேத்தி பார்த்தாச்சு.
ஆனாலும் தனிமை.

கோமதி அரசு said...

வாழ்க்கையில் சில நேரம் எடுக்கும் முடிவுகள் மற்றவர் பார்வையில் தப்பாக தெரிந்தாலும் அவர்களை பொறுத்தவரை அது சரியான முடிவாகத்தான் இருக்கும்.
சேர்ந்து வாழ்ந்து தினம் தினம் நரக வாழ்க்கை அதனால் குழந்தைகள் மனம் பாதிக்கபடும்.அதற்கு பிரிவு எவ்வளவோ மேல்.

Angel said...

ஹ்ம்ம் ..:( மஹேஷ் என்ன ஒரு அவசரபுத்தி ..தன்னில் மறுபாதியை சந்தேகப்படுகிறோம் என்பதை உணராதவரோடு பேசி பயனில்லை என்றுதான் உஷா இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார் .மூர்க்கன் முரடனோடு கூட வாழலாம் ஆனால் சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும் விஷம் . மகேஷின் மறுமணம் எப்படி இருந்தது ..அடுத்து வந்தவரையாவது ஒழுங்காக நடத்தினாரா .மகேஷ் போன்றவர்களுக்கு படித்த சகலமும் அறிந்த ஞானமுள்ள உஷா போன்ற பெண் பொருத்தமில்லை

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி. வாழ்க வளமுடன்.
ஆமாம் அப்போது எங்களுக்குத் தெரிந்தவர்கள் அனேகமாக
அவள் தீர்மானத்தை ஆதரிக்க வில்லை.
பொறுத்துப் போவதுதான் பெண்களுக்கு அழகு என்றார்கள்.
எத்தனையோ பேச்சுகளைக் கேட்க சகிக்காமல் தான்
பெங்களூர் சென்றாள்.

அவர்களுக்குப் புரியவில்லை. ஆதார சுருதி யே கலைந்த போது
தன்மானமுள்ளவள் எப்படி சகிப்பாள்.
அவளும் ஒரு வருடம் போல் காத்திருந்து பார்த்தாள்.
முடியாமல் போகவே வெளியே வர நினைத்த போது அவனே
சொல்லிவிட்டான். சிறிதேனும் அன்பு காட்டி இருந்தால் இருந்திருப்பாள்.
பாவம். குழந்தைகளும் அவனைப் போலவே வளர்ந்தால்
சமூகத்துக்கே கேடு.
பணம் ஒன்றுதானே சில பெண்களை சம்சாரத்தில் இருக்க வைக்கிறது.

அதையும் சமாளித்தாள். பெற்றோர் உதவி ஒரு வீட்டு ரூபத்தில் கிடைத்தது.
இரண்டு வருடம் முன்னால் கூட அங்கே இருந்த போது அவளைச் சென்று பார்த்தேன். மல்லேஸ்வரம் பாபா கோவிலில். சலனமில்லாமல் இருந்தாள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
உஷாவுக்கு இருந்த தன்மான அளவு அதிகம். அதுவே மகேஷுக்கு வெறுப்பைக் கொடுத்தது. காலில் விழுந்து கெஞ்ச வேண்டும் என்று எதிர்பார்த்தான்.
அவர்கள் வீட்டில் இவளைப் பற்றித் திமிர் பிடித்தவள் என்றெல்லாம்
பேசினார்கள்.

எது காதில் விழுந்தாலும் உறுதியாக இருந்தாள்.
பாபாவிடம் பக்தி அதிகம். முற்றிலும் தன்னை ஒப்புக் கொடுத்து வாழ்வைப் பெற்றொருடன் தொடங்கினாள்.35 வயதில் சந்திக்காத பிரச்சினைகளே இல்லை.
முன் வைத்த காலைப் பின் வைக்கவில்லை.
ஆமாம் மஹேஷுக்குக் கிடைத்த பெண் அவன் போக்குக்கு வளைந்து கொடுத்து
சாமர்த்தியமாக நடந்து தன் சுயம் என்று பார்க்காமல்
அவனை சகலவிதத்திலும் உபயோகப் படுத்திக் கொண்டாள்.

அவள் குணம் அவனுக்குப் பிடித்திருந்தது.
நன்றாகவே இருந்தார்கள். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள்
மகேஷின் வாரிசுகளாக அறிவிக்கப்
பட்டு சொத்துக்களை அடைந்தார்கள்.
தொடர்ந்து படித்துக் கருத்துகள் சொன்னதற்கு நன்றி மா.
இதெல்லாம் எனக்கு சுய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியது.
நாங்கள் எவ்வளவோ சொல்லியும் இன்னோரு துணை தேடிக்கொள்ளவில்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

சரியான முடிவு... நிம்மதியான வாழ்வு...

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு தனபாலன். தனக்குக் கிடைத்த விடுதலை என்றே அவள் சொல்வாள்.

Bhanumathy Venkateswaran said...

மனது கனக்கிறது. உஷாவின் திடம் போற்றுதலுக்குரியது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு மா. உண்மைதான். கூடு நல்லதுதான்.
அதில் முள்ளிட்டது போல் இருந்தால் எந்தப் பறவையும் தங்காது இல்லியாமா.
அவள் சுதந்திரத்தை மிக விலை கொடுத்து வாங்கினாள்.
வருகைக்கு நன்றி மா.