Blog Archive

Friday, March 30, 2018

மாசி மாத வற்றல்,வடாம் கதையின் ..........11 the part

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

முருகனோடு நலம் விசாரித்தார் ஜயம்மா.  வீட்டில
பாப்பா எப்படி இருக்கா, குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தியா
என்று துவங்கினாள்.
அல்லாம் தாடிக்கார ஸ்கூலுக்குப் போகுதுங்க. அங்கயும்
யூனிஃபார்ம் எடுக்கச் சொல்றாங்க. பொஸ்தகம்
வாங்கச் சொல்றாங்க..
மதியம் சாப்பாடு கிடைக்குது. ஒரு வேளை ஓடிப்போகுது. என்றான் முருகன்.

தாடிக்கார பள்ளி என்பது மந்தைவெளி சாயிபாபா கோவிலை ஒட்டி
நடத்தப்பட்ட ஸ்கூல்.

கவலைப் படாதே ,ஏதாவது வேண்டுமானா வீட்டுக்கு வா. என்னால் முடிந்த உபகாரம்
செய்யறேன் என்றபடி இறங்கினார்.
அவனும் ,
//விளாமரத்து வீட்டு மருமவ, அவங்க பிள்ளைங்களோட துணி மணிகளக்
கொடுத்திச்சு. நம்ம குழந்தைகள் ஈடுதான் அந்தக் குழந்தைகளும்.
  அய்யரு வீட்டு உதவி எல்லாம் இருக்கையல
எனக்குக் கவலை இல்லம்மா என்றான்.
 அவனுக்கு உண்டான பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குள்
சென்றார்கள்.

செங்கமலம், வேதா,சீனு,மாது எல்லோரும்
மாடியிலிருந்து ,பாதி காய்ந்த வடாம், வற்றல்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
வீடு முழுவதும் பரவியது ஈர வாடை.
என்ன  வேலை முடிஞ்சதா. பாட்டி சரி என்று ஒத்துக் கொண்டாரா
என்று கேட்டபடி சீனு வேஷ்டிகளை மூடி வைத்தார்.

ஆஹா, பாட்டியும் அவரது மருமகளின் அருமையைச் சொல்லி முடியாது.
பாவம் அந்த மாமாவுக்கு இப்படித் திடீரென்று ஆகி இருக்க வேண்டாம்
என்று வருத்தப்பட்டார் ஜயம்மா. கண் படுகிற மாதிரி
பெரிய குடும்பம். இப்போது பங்கஜம்மா பிள்ளையும் இங்கேயே
வந்துவிட்டார். மூன்று குழந்தைகளும் அத்தனை சமத்துகள்.
இரண்டு பாட்டிகளிடமும் ஒட்டிக் கொண்டு வளர்கின்றன. அவர்களுக்கு
இது பெரிய  சமாதானம் இல்லையோ.
ஆமாம் பகவான் எதையும் பொருள் இல்லாமல் செய்வதில்லை.

அது இருக்கட்டும் இருவரும் சாப்பிட்டீர்களா என்றார்.
பசியே இல்லை. இதோ இந்த டப்பாக்களில் புளியோதரை
இருக்கிறது , பசங்களா நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

நான் கொஞ்சம் படுத்துக் கொள்கிறேன் என்று ஒரு ஓரமாகப் படுத்துக் கொண்டார் ஜயம்மா.

இரண்டு பெண்களும், இலைகளில் சமமாகப் பங்கிட்டு, மாதுவிடம் கொடுத்துவிட்டுத் தாங்களும் சாப்பிட்டார்கள்.

இன்னும் இரண்டு நாட்களில் நம் எடுத்துக் கொண்ட அளவு
வத்தல்கள் தேறிவிடும்.
நாளை மீண்டும் ஒரு ஈடு ,போட்டுவிட்டால்  பத்து வீடுகளுக்கும் கொடுத்துவிடலாம்.

பிறகு பட்சணக் கடை ஆரம்பிக்க வேண்டும்.
என்ற  ஜயம்மாவைப்  பார்த்து, இரு இரு
அவசரமே இல்லை.
இந்த வேலை முடியட்டும்.
 மாதுவுக்கும் ஒரு காலேஜ் சீட் கிடைக்கட்டும்.
பிறகு  நாம் மூவரும் பத்ரி போக திருவல்லிக்கேணி
சம்பத்திடம்  ஏற்பாடு செய்திருக்கிறேன்.
20 நாட்கள் லீவு தான். இனிமேல் ஜூலை தான் நம் வேலை ஆரம்பம்.

என்னது இப்படி திடீர்னு சொல்கிறீர்களே.
குழந்தை எங்கே   இருப்பான்.
அங்கெல்லாம் பனியாக இருக்குமே, நாம் எல்லாம் குளிர் தாங்குவோமா.
கேள்விகளை அடுக்கினாள். அசதி எல்லாம் எங்கோ போய்விட்டது.

கீதுவின் முகம் மலர்ந்தது.
நெடு நாட்கள் கழித்து மனம் நெகிழ்ந்தது.
மாது ஆச்சரியத்தோடு பார்த்தான்.

சாப்பிட்டுக் கைகள் கழுவி வந்த அக்கா தங்கைகள், மாமி
நாங்கள் நாளை எப்போ வரணும் என்று கேட்டார்கள்.

ஒரு நாள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்  ,அடுத்த நாள் ஜவ்வரிசி கூழ்தான். அதை நாங்களே
செய்துவிடுவோம். நீங்கள் வந்து  மாடிக்கு ,எடுத்துப் போய் வத்தல் இட்டால் போதும்.
எங்களுக்குப் பெரிய வேலை வைத்திருக்கிறார் லஸ் பாட்டி. பணியாரம் செய்யச் சொல்லி இருக்கிறார்.

சரி, நாங்கள் அன்றைக்கு வருகிறோம். நீங்கள் ஊருக்குப் போவதை
அப்பாவிடம் சொல்கிறேன்.
அவர்களும் உங்களுடன் வர ஆசைப் படுவார்கள்
 என்று சிரித்தாள் பெரியவள் செங்கமலம்.
 அம்மா அப்பா இல்லாமல் தனியாக இருப்பீர்களா என்று அதிசயப்
பட்ட ஜயம்மாவிடம்,
அதான் எங்கள் அத்தை அடுத்த போர்ஷனில் தானே இருக்கிறார்கள்.
வேண்டுமானால் உங்கள் மாது கூட அங்கே வந்து இருக்கலாம்.
 வசதி குறைச்சல் என்றாலும் பாதுகாப்பாப் பார்த்துக் கொள்ளுவாள் அத்தை,
என்று குறும்புடன் சொல்லி விட்டுக் கிளம்பின பெண்களைப் பார்த்து மகிழ்ந்து
போனாள் ஜயம்மா.

பாத்தியோ இந்தப் பொண்ணை .  பட்டு பட்டுன்னு பேசறதே.
எல்லாம் இந்த ஊர்ப் பொண்களுக்குச் சொல்லியா தரணும்.
பிழைத்துக் கொள்வார்கள் என்று மனசாரப் பாராட்டினாள் கீது.

 சரி சரி நீ வாடா மாது, நாம் ஜட்ஜ் வீட்டுக்குப் போய் விட்டு
அப்படியே திருவல்லிக்கேணி போய் வரலாம் என்று கிளம்பினார்
சீனு. மாது தொடர்ந்தான்.








12 comments:

ஸ்ரீராம். said...

தாடிக்கார ஸ்கூல்!!!

அப்போ எல்லாம் ஆஸ்தான ரிக் ஷாவா? இப்போ நாங்க ஆஸ்தான ஆட்டோக்கள் வைத்திருப்பது மாதிரி! கதை சொல்வது போலப் போகிறது பழைய நி(கழ்)(னை)வுகள்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடர்கிறேன். செண்டலங்காரரின் அழகு அருமை.

கோமதி அரசு said...

நாங்களும் தொடர்கிறோம்.
கதையோடு பயணிக்கும் உணர்வு.
எழுத்து லட்சுமி அவர்களை நினைவு படுத்துகிறது.

வெங்கட் நாகராஜ் said...

மாசி மாத வற்றல்.... நடுவில் கொஞ்சம் படிக்க விட்டிருக்கிறேன். விரைவில் படிக்கணும்.

Thulasidharan V Thillaiakathu said...

வெரி ஸ்வீட் அனுபவங்கள், நிகழ்வுகள்...நினைவுகள்..அன்பு பிரதானமாக..இப்படியான நினைவுகளை அசை போடுவதிலும் ஒரு ஸ்வாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது இல்லையா அம்மா..

தொடர்கிறோம் வல்லிம்மா

கீதா

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன் சகோதரியாரே

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்,
தொடர்ந்து படித்து கருத்து சொல்வதற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா , மன உளைச்சல்கள் வராமல் இருக்காது. வந்த நொடியில் போய்விடும்.
வருபவர்கள் ,வாய்க்கி ருசியாக எதாவது சாப்பிட்டுவிட்டு,
பாட்டியிடம் வம்பு சொல்லிவிட்டுப் போவார்கள்.
பாட்டி மஹா புத்திசாலி. சிரித்துக் கொண்டே விலக்கிவிடுவார்.
அதுதான் வாழ்க்கை. எட்டு வயதில் திருமணம் செய்து 13 வயதில் முதல் பிள்ளை பெற்றவர்.
அங்கே ஜயம்மாவும் மன்னார்குடியிலிருந்து வந்தவர்.

மஹா பதவிசு. இருவருக்கும் ஒத்துப் போனதில் அதிசயமே இல்லை.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட், பொழுது போகாமல் பழைய நிகழ்வுகளைக் கதம்பமாக அசை போடுகிறேன்.முடிந்த போது படியுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
நாம் எல்லோரும் கதைகள் படித்தே ,கேட்டே வளர்ந்தவர்கள் இல்லையா. நம் எழுத்துக்களும்
நம்மைப் பிரதி பலிக்கின்றன. லக்ஷ்மி அம்மா எழுத்துக்கள். அவர்

மிக விவரங்களையும் சேர்த்து அழகாக எழுதுவாரே.
அரக்கு மாளிகை சௌமினியின் உடை வர்ணனை என் மனத்தை விட்டுப் போனதே இல்லை. அதே போல வீடுகளின்,மனிதர்களின் தோரணைகளும் சிறப்பாக இருக்கும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் தொடர்ந்து ,படிப்பதற்கு மிக நன்றி.இன்னும் ஒரே
ஒரு பாகம் முடித்துவிடுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் முனைவர் திரு .ஜம்புலிங்கம் ஐய்யா.
மன்னை ராஜகோபாலனின் அழகுக்கும் கம்பீரத்துக்கும் கேட்பானேன்.
நன்றி ஐய்யா.