எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அடை மாங்காய் ஊறுகாய்.
+++++++++++++++++++++++++++++++
பாட்டியின் ஸ்பெஷாலிடி இந்த ஊறுகாய்.
பெரும்பாலும் ருமானி மாங்காய் உபயோகப் படுத்துவார்.
அவரவர் வீட்டு அரிவாள் மணைகளை எடுத்துக்கொண்டு
அக்கம்பக்கம் மாமிகள் வந்துவிடுவார்கள்.
கொத்தவால் சாவடியில் இருந்து வாங்கிவந்த மாங்காய்கள் மூட்டை நிறைய இருக்கும்.
அவரவர் முடிந்த வரை அரிந்து தள்ளிவிடுவார்கள்.
நாலைந்து விறகடுப்புகள் திகுதிகு என்று எரிந்து கொண்டிருக்கும்.
அதில் இரண்டு படி கொள்ளும் அண்டாக்கள். உள்ளே ஈயம் பூசப்பட்டவை.
அவைகளில் பாதி அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றப்படும். மாங்காய்த் துண்டுகள் உப்பில் புரட்டப் பட்டிருக்கும்.
ஒருபடி மாங்காய்த் துண்டுகளுக்கு இரண்டு ஆழாக்கு உப்பு தூள். இரண்டு ஆழாக்கு மிளகாய்த்தூள்,
ஒரு கட்டிப் பெருங்.
காயம் வறுத்துப் பொடி செய்யப் பட்டிருக்கும். மஞ்சள் பொடி
ஒரு ஆழாக்கு. மெந்தியம் வறுத்துப் பொடித்தது அரை ஆழாக்கு.
இங்கே ஒரு படி என்பது எட்டு ஆழாக்கு.
கிட்டத்தட்ட ஒண்ணரைக் கிலோ.
இப்போது ஒரே ஒரு அடுப்பைப் பார்க்கலாம்..
அதில் அண்டாவில் ஒன்றரைக் கிலோ எண்ணை ஊற்றிக் கொதிக்க வைப்பார்கள்.
சூடானதும் இரண்டு கைப்பிடி கடுகு முதலில் போட்டு வெடித்ததும்
உப்பு மாங்காய்த்துண்டுகள் போடப்படும்.
தளதள வெனக் கொதிக்கும் போது அடுப்பைக் குறைத்துவிடுவார்கள்.
மரக்கரண்டி பெரிதாக இருக்கும் அதனால் அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டிருப்பார்கள்.
ஏதோ கணக்குப் பார்த்து,ஒரு துண்டை எடுத்து பதம் பார்த்து வெந்துவிட்டதா
என்று உறுதி கொள்வார்கள். உடனே மஞ்சள் பொடி,மிளகாய்ப் பொடி,பெருங்காயப் பொடி போடப்பட்டு மீண்டும் விரைவாகக் கிளறுவார்கள்.
அதற்குள் ஊறுகாயை ஆற வைக்கும் பாத்திரம் தயாராகும்.
எண்ணெய் மேலாக வந்ததும் அந்த அடுப்பு அணைக்கப் படும்.
இரண்டு பேராக அந்த அண்டாவை இறக்கிவைப்பார்கள். ஆறிய
பின் வறுத்துப் பொடித்த மெந்தியத்தூள் ஊறுகாயின் மேல் தூவப்பட்டு மீண்டும் மேலும் கீழுமாகக் கிளறப்படும்.
அப்போது தெரியும் துண்டாக உள்ளே அனுப்பப்பட்ட மாங்காய் உருமாறியோன்றோடொன்று ஒட்டி இருக்கும். அதனால் தான் அந்த அடைமாங்காய் என்ற பெயர்.
ஆறும் வரை ஊர்க்கதைகள் பேசப்படும்.
மீண்டும் குளிர்ந்த பாத்திரத்துக்கு மாற்றப்படும்.
இதற்காகத் தயாராக இருக்கும் உயர ஜாடியில் மரக்கரண்டியினால் மாற்றப்படும்.
. |