 |
| வாழ்வு பிறக்கிறது. |

அந்தக் காலத்தில் 40களிலிருந்து ஐம்பதுகள் வரை சமூக அமைப்புகள்
எந்தவிதமாக இயங்கி வந்து இருக்கின்றன என்று ஒரு மாதிரி
புலப்படுகிறது.
எண்பது சதவித நேர்மையும் இருபது சதவிகித அநீதிகளுமாக நடந்திருக்கவேண்டும். குடும்பக் கதைகளைப் படிக்கும் போது நேரே பார்ப்பது போல நினைக்கத் தோன்றுகிறது.
பழைய நினைவுகளைக் கிளறிவிடுகிறது.
நாராயணன் 23 வயது வாலிபன்.
தாயில்லாதவனை வளர்த்தது அன்பு மிக்க சித்தி,அப்பாவின் இரண்டாந்தாரம்.
அவள் மேல் அவ்வளவு பாசத்தோடு இருப்பவனுக்குத் தந்தை திருமணம் முடிக்க ஏற்பாடு செய்கிறார்.
சேந்தமங்கலத்தில் பெண் பார்த்து மணமும் முடிகிறது.
பதினைந்து வயதே ஆன பங்கஜம் பக்குவப்படவில்லை.
பெரியவளானதும் உங்கள் வீட்டுக்கு அனுப்புகிறோம் என்று சொல்லி
விடுகிறார் அவள் தாய்மாமன்.அவளை வளர்த்தவர்..
நாராயணனின் தந்தைக்கு வருத்தம். மணம் முடித்தும் மருமகள் வீட்டுக்கு
வரவில்லையே என்று.
நோய்வாய்ப்படுகிறார். ஆனால் சித்தியின் அன்பான கவனிப்பில்
தேறிவிடுகிறார்..
அதிசயத்திலும் அதிசயமாக அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது.
அழகான தம்பியிடம் நாராயணன் அன்பைச் சொரிகிறான்.
தம்பிக்கு மூன்று வயது இருக்கும் போது தந்தை மறைகிறார்.
அப்போது துக்கத்துக்கு வந்த பங்கஜத்தின்மாமா
'மாப்பிள்ளையிடம் சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு தங்களோடு வந்துவிடுமாறு சொல்கிறார்.
உங்க சித்தி மனம் எப்படி மாறுமோ. பங்கு கேட்பாள்.
எதற்கும் தமிழ் வருஷப்பிறப்பிற்கு ஊருக்கு வாங்க ன்னுட்டுப் போய்விடுகிறார்.
நாரயணனுக்கு மூக்கு மேல் சினம் வந்தாலும் இளம் மனைவியைப் பார்க்கும் ஆர்வத்தில் . வருவதாக ஒத்துக் கொள்கிறான்.
பங்கஜத்தின் மாமா
கொஞ்சம் பேராசை பிடித்த ஆசாமி.
நாராயணன் இந்தத் தடவை மனைவியைச் சந்திக்க முடிகிறது.
அவளோ செழுமையான பூங்கொடியாகச் சுற்றி வருகிறாள்.
.
இவன் ஒன்றும் அறியாமல்,அவளைப் பார்க்கும் தருணத்தில் இன்னும் இங்கே ஏன் இருக்கிறாய்.எனக்கு நல்ல வேலை ஆகிவிட்டது. என்னோடு கிளம்பி வா என அழைக்க,
அவள் கிளிப்பிள்ளை போல''நான் வரவில்லை. மாமா சொல்வது போலச் சொத்தைப் பிரித்துக் கொண்டு, வந்துவிடுங்கள்'என்று பார்க்கும் போதெல்லாம் சொல்கிறாள்.
இவன் வருத்தமும் சினமும் மேலிட இனி உங்களுக்கும் எனக்கும் பந்தம் இல்லை,என்று சட்டென்று கிளம்பி வந்துவிடுகிறான்.
மருமகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சிற்றன்னை,
தன் மகனின் துயரம் கண்டு வருந்தியே உயிர் விடுகிறாள்.
அதற்குப் பிறகு அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல்
நிலபுலன்களைக் குத்தகைக்கு விட்டுவிட்டு,வீட்டை விற்றுப் பணத்தையும் எடுத்துக் கொண்டு தான் வேலை செய்யும் சென்னைக்கே,
குட்டித் தம்பியுடன் வந்துவிடுகிறான். இரண்டு வருடங்கள் கழிகின்றன.
தம்பியை அருகில் உள்ளப் பாடசாலையில் முதல் வகுப்பில் சேர்க்கிறான்.
நன்றாகச் சமைக்கக் கற்றுக் கொண்டுத் தானும் உண்டு
குழந்தைக்குச் சாதம் ஊட்டி,அன்பாக வளர்த்து வருகிறான்.
பக்கத்துவீட்டுப் பாட்டி இந்தக் குழந்தையை,நாராயணன் வேலையிலிருந்து வரும் வரை பார்த்துக் கொள்கிறாள்.
ஒரு சனிக்கிழமை .அடுத்தநாள் வருடப் பிறப்பு.
அண்ணா பாயசம் செய்து தரயா. மணி எல்லாம் சாப்பிடுவானாம் நாளைக்கு என்கிறது பையன்.
அதுக்கென்னடா நாம ஓட்டலுக்குப் போய் ஜம் ஜம்னு சாப்பிடலாம்
என்று தம்பியை அணைக்கும் போது குழந்தை முகம் சிணுங்குகிறது.
குழந்தைக்கு அவசரமில்லாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டலாம் என்று அவனை அழைத்துச் சட்டையைக் கழட்டுகிறவன் திடுக்கிறான்.
குழந்தையின் முதுகில் பழுப்பு நிறத்தில் கோடு போலத் தெரிகிறது காயம்.
ஏதடா இது ,யார் உன்னை அடித்தது
என்று கேட்கிறான்.
குழந்தை மென்று முழுங்கியபடி டீச்சர்தான் அடித்தார் அண்ணா
என்கிறான். அவ்வளவுதான்!!
ஆஹா குழந்தை முதுகில் கைவைக்கப் போச்சா?
இதோ உடனே பள்ளித் தலைமை ஆசிரியரிடம் போய் அவளை உண்டு இல்லை என்று செய்கிறேன் பார்.
என்றபடி தன் சட்டையை மாட்டிக் கொள்கிறான்.
டீச்சர் நல்ல டீச்சர் அண்ணா. ஒண்ணும் பண்ணாதே என்று கெஞ்சுகிறது குழந்தை.
ஏன் நீ என்ன செய்தாய் இத்தனை அடிப்பதற்கு?
ஒரு பையனோட புது பென்சிலை எடுத்தேன் அண்ணா.
அதுக்கு இப்படி அடிப்பதா
இல்லை இரண்டாந்தரமும் எடுத்து ஒளித்து வைத்தேன்'
என்ன இருந்தாலும் அவள் உன்னை அடித்திருக்கக் கூடாது.
நீ வா அந்த டீச்சர் வீட்டுக்கே போகலாம். தெரியுமா இடம்?
ஓ.தெரியுமே பக்கத்துவீட்டு பாலு கணக்குக் கத்துக்கொள்ள டீச்சர் வீட்டுப் போவான். நானும்போயிருக்கேன்.
நாராயணனின் முகம் சுருங்கியது. என்ன வெல்லாம் எனக்குத் தெரியாமல் இந்தக் குழந்தை பண்ணுகிறானோ என்று யோசிக்கும் போதே டீச்சர் வீடு வருகிறது.
ஒரு வீட்டின் பல குடித்தனங்களுக்கு நடுவே
ஒரு சிறிய பகுதியைத் தம்பி காண்பித்ததும்
புயலாக உள்ளெ நுழைகிறான்.
திடுக்கிட்டு எழுந்திருகிறாள் ஒரு இருபது வயதுப் பெண்.
இப்போது நாராயணன் முறை அவளைப் பார்த்து வெறிக்கிறான்.
பங்கஜம்!
இவள் எங்கே இங்க வந்தாள்
என்று நினைத்தபடி ஏன் குழந்தையை இப்படி அடித்தாய்
என் தம்பி என்றதாலா?
என்று கேள்விகளை வீசுகிறான்.
அவள் அவன் இருக்க ஒரு நாற்காலியைப் போட்டுவிட்டு
வா கண்ணா என்று குழந்தையை அழைக்கிறாள்.
அவனும் அவள் புடவையோடு ஒட்டிக் கொள்கிறான்.
இன்னும் கோபமடையும் நாராயணன் ஏன் அடித்தாய். பிஞ்சு முதுகு பிளந்து போயிருக்கும்.!!
முதலில் நான் சொல்வதைக் கேளுங்கள்.
அவன் தவறு என்று தெரிந்தே செய்தான். மெதுவாகத் தான் அடிக்க நினைத்தேன்.
பலமாகப் பட்டு விட்டது.
கண்ணா வலிக்கிறதா. என்றபடி குழந்தையை அணைத்துக் கொள்கிறாள்.
நான் இந்த ஊருக்கு இரண்டு மாதங்கள் முன்னால்தான் வந்தேன்.
நீங்களும் இங்கே இருப்பீர்கள் என்று தெரியாது.......''
''என்ன ஆச்சு உங்க மாமா மாமிக்கு.''
அவர்கள் செய்கை பிடிக்காமல் தான் தனியே ஹாஸ்டலில் இருந்து படித்துப் பிறகு இந்த ஆசிரியைத் தொழிலில் சேர்ந்தேன்.
அவர்களுக்கு ஏகப்பட்ட கடன்.
என்னை மிகவும் தொந்தரவு செய்து உருவேற்றி உங்களிடம் ஒப்பிக்கச் சொன்னதை அப்படியே உங்களிடம் சொன்னேன்.
இப்போதுதான் நான் செய்த தவறை உணர்கிறேன்.
என்னை மன்னியுங்கள் என்று மெதுவாகச் சொல்கிறாள்.
இப்போதும் அவர்களுக்கு என் சம்பாத்தியத்தில் ஒரு பங்கை அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறேன் என்றும் சொன்னாள்.
குழம்பியபடியே வீடு திரும்பும் நாராயணன் பழையதையெல்லாம் யோசிக்கிறான்.
அடுத்தநாள் புத்தாண்டாக துன்முகி பிறக்கிறது.மன்மத வருடம் முடிகிறது.
சற்றுத் தாமதமாக எழுந்திருக்கும் கண்ணனின் காதில் அண்ணாவும் இன்னோருவரும் சிரிக்கும் ஓசை கேட்கிறது.
டீச்சர் என்று விளித்தபடி ஹாலுக்கு ஓடிவருகிறான்.
அங்கே நின்று பேசிக்கொண்டிருக்கும் டீச்சரைப் பார்த்து ஆச்சரியப்
படுகிறான்.
இங்கே வா கண்ணா என்கிறாள் அவள். அண்ணாவைத் திரும்பிப் பார்க்கும்
கண்ணனிடன்
நாராயணன் இனிமேல் இது மன்னி டா. டீச்சர் இல்லை. என்று சிரிக்கிறான்.
கண்ணனுக்கு உறவு புரியாவிட்டாலும் பிடித்திருக்கிறது.
மன்னி பால் பாயசம் செய்கிறாயா என்றபடி அவளை அணைத்துக் கொள்கிறான்.
அவளும் அவனைக் கட்டி அணைத்து நிறையச் செய்து தருகிறேனடா
'என்று முடிக்கிறாள்.
கொஞ்சம் நீண்ட கதைதான். நேற்று ஆரம்பித்து இன்று முடிக்க முடிந்தது.
சி.ஆர்.ராஜம்மாவின் கதைகள் எனக்கு மிகவும் விருப்பம்.
.
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்