Tuesday, April 04, 2023

வாழ்க தமிழ்...!

வல்லிசிம்ஹன்

ஒரு பிரபல நாளிதழில், ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை வாசகர்களை கண்டுபிடிக்க வைத்து, அதில் பொருத்தமான தமிழ்ச் சொல்லை நீதியரசர் வெ.ராம சுப்பிரமணியன் தேர்வு செய்வார் என்று அறிவிக்கப்பட்டது.  இது வாரம்தோறும் ‘சொல் வேட்டை’ என்ற பெயரில் வெளிவந்தது.

ஒரு வாரம் ‘போபியா’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ்ச் சொல் கேட்கப்பட்டது. 

அதற்கு ஒன்றல்ல இரண்டல்ல 47 தமிழ் வார்த்தைகளை ஒருவர் அனுப்பி இருந்தார்.  
அவர் பெயர் தமிழ்ச்செல்வி. சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம்- பொன்னமராவதி அருகே உள்ள பொன்.புதுப் பட்டி கிராமம். 

சமீபத்தில் புதுக்கோட்டை அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விழாவுக்கு தலைமையேற்க சென்றிருந்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அந்த பயணத்தின்போது அவரை எப்படியாவது சந்தித்துவிட  எண்ணி  தன்னுடைய ஆசையை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி ரவியிடம் சொல்ல, அவரும் தனது உதவியாளர் மூலமாக அந்த வாசகரை சந்திக்க ஏற்பாடு செய்தார். 

காலை 8 மணி. 60 வயது மதிக்கத்தக்க தமிழ்ச்செல்வி தனது கணவருடன் வருகிறார். 

நீதியரசர் அவர்கள், “தமிழ்ச்செல்வி அம்மா எப்படிம்மா இருக்கீங்க? உங்களை பார்க்கணும்னு பல வருஷங்களா தேடிக்கிட்டு இருந்தேன். அந்த வாய்ப்பு எனக்கு இன்னைக்குத்தான் கிடைச்சது. உங்களுடைய மொழி அறிவை எத்தனையோ இடங்களில் சொல்லி சொல்லி வியந்து வருகிறேன். ஆனால் இதுவரை உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. எப்படியாவது உங்களை நேரில் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அதனால்தான் இந்தச் சந்திப்பு. காலையில்தான் சென்னையிலிருந்து இறங்கினேன். கல்லூரி நிகழ்ச்சி காலை 10 மணிக்கு. அதை முடிச்சிட்டு 1 மணிக்கு நான் திருச்சி விமான நிலையம் போகணும். நேரப்பிரச்சினை இல்லையென்றால் கட்டாயம் உங்கள் வீடுதேடியே வந்திருப்பேன். தப்பா நினைச்சுக்காதீங்கம்மா. 40 கிலோ மீட்டர் உங்களை அலையவைச்சிட்டேன். கோவிச்சுக்காதீங்கம்மா....

ஒரு ஆங்கில வார்த்தைக்கு நிகராய் 47 தமிழ்ச் சொற்களா? என்னை மலைக்க வைத்துவிட்டீர்கள் அம்மா. ஒரு சின்னக் கிராமத்தில் இருந்து கொண்டு இவ்வளவு பெரிய தமிழ் அறிவா?" 
பரவசப்பட்டுப் போகிறார் நீதியரசர்.

( அந்த 47 வார்த்தைகள்...)

(1)ஓடல், தேங்கல், ஞெரேலெனல், கூசல், திட்கல், உலமரல், அளுக்கல், ஞொள்கல், துடுக்கெனல், துட்கல், குலைதல், வெய்துறல், துண்ணெனல் என்பவை அச்சம் தோன்றுவதற்கான குறிப்புகளை உணர்த்துபவை என்றும்; 
(2) அப்படித் தோன்றி நம் மனதை ஆக்கிரமிக்கும் அச்சத்தை வெருவு, சூர், பீர், வெறுப்பு, வெறி, வெடி, கவலை, பீதி, உருவு, பேம், பிறப்பு, கொன், உட்கு, பனிப்பு, அணங்கு, புலம்பு, அதிர்ப்பு, அடுப்பு, பயம், உரும், தரம் ஆகிய சொற்கள் அடையாளம் காட்டும் என்றும்; 
(3) அச்சம் அடைந்த மனதில் சிந்தனையும், எண்ணங்களும் மாறுபட்டு, சிதிலமடையும் போது, அது கலக்கம் என்றும், துரிதம், பிரமம், கதனம் என்று குறிப்பிடப்படுவதாகவும்;
 (4) கலக்கமுற்ற மனதில் ஏற்படும் நடுக்கம், விதிர்ப்பு, விதப்பு, கம்பம், விதலை, கம்பிதம், பனிப்பு, பொதிர்ப்பு, உலைவு என்ற சொற்களால் உணர்த்தப்படுகிறது.

மேலும், ஃபோபியா என்ற சொல்லில் உள்ள 3 எழுத்துகளும் பேம், பீதி, பயம் என்ற 3 தூய தமிழ்ச் சொற்களின் சேர்க்கையில் உருவாகிப்பின் மருவியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டு, தமிழ்ச்சொல் அகராதி சூளாமணி நிகண்டு நுலைச் சான்றாகக் காட்டியுள்ளார்

“ஐயா நான் பத்தாவதுதான்யா படிச்சிருக்கேன். அப்பாவுக்கு தமிழ் மீது மிகப்பெரிய ஆர்வம். அந்த ஆர்வம் தான் என்னையும் நம்ம இலக்கியப் பக்கம் கொண்டு வந்திருச்சு. பக்தி இலக்கியங்கள் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரும் கொடை. அது வெறும் இலக்கிய இன்பம் இல்லையா. சொல்லப்போனா வாழ்வியல் முறை..”- இப்படி கூறியபடி ஏராளமான பாடல்களை மேற்கோள் காட்டுகிறார் தமிழ்ச் செல்வி. வடமொழியும், பிற மொழியும் தமிழ்மொழி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கொதிப்போடு பேசுகிறார். “திருவாசகத்திலும் தாலாட்டு இருக்குங்கய்யா...” அழகான குரலில் பாடியும் காட்டுகிறார். அறையிலிருந்த அனைவரும் வியந்துபோகிறார்கள்.

“நீங்க நிறைய எழுதுங்கம்மா... உங்க தமிழ் மொழி அறிவு, இலக்கிய அறிவு எல்லோரையும் போய்ச் சேர ணும்மா...” –நீதியரசரின் வேண்டுகோளை ஏற்று ‘கண்டிப்பா செய்யுறேன்ய்யா...’ என்கிறார் தமிழ்ச்செல்வி. 

தன்னுடய கட்டுரைகளை தாங்கி வெளிவந்த மலர்களையும், புத்தகங்களையும் அன்பாய் ஏற்றுக் கொள் ளுங்கள் எனப் பரிசளித்து, “ ஒரு வாசகியாய் நான் எழுதியதை மறக்காமல் இலக்கிய மேடைகளில் எல்லாம் என்னை மேற்கோள் காட்டிவாறீங்க, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி என்னைத் தேடி வந்திருக்கீங்கன்னா இது என் தமிழ் அறிவுக்கு கிடைத்த சன்மானம்ய்யா.. உண்மையில் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்..” நெகிழ்ந்து போகிறார் தமிழ்ச்செல்வி.

பல ஆண்டுகளாய்த் தேடிய தமிழ்ச்செல்வி அம்மாவை நேரில் கண்டதில் நீதியரசருக்கு மெத்த மகிழ்ச்சி. விமானம் ஏறும்வரை தமிழ்ச்செல்வியின் தமிழ் அறிவில் கரைந்து போகிறார் நீதியரசர்.

பட்டிக்காட்டில் வாழ்ந்தும் மொழியில் ஆழந்த அறிவும், ஆராய்ச்சிப் போக்கும் கொண்ட தமிழ் ஞானமிக்க தமிழ்ச்செல்வி அம்மாக்களும், அவர்களை சரியான இடங்களில் அடையாளப்படுத்தும் நீதியரசர் ராமசுப்பிரமணியன் போன்றவர்களும் இருக்கும் வரை தமிழ் வாழும் – என்றும் அழியாப் புகழுடன்...!

 வாழ்க தமிழ்...! வெல்க தமிழினம்..!!

# தம்பி வீர ராகவன் அனுப்பிய செய்தி.


Monday, April 03, 2023

சுப்புடு......

வல்லிசிம்ஹன்

அந்த காலத்து குசும்பன் - சுப்புடு -நினைவஞ்சலி😓

சென்னையில் வருடந்தோரும் நடைப்பெறும் மார்கழி கர்நாடக இசை உற்சவங்கள் நேரத்தில், அதைப்பற்றி தினமணியிலும்,ஆனந்த விகடனிலும் சிறப்பு செய்திகளை வெளியிடுவார்கள் எது இருக்குமோ இருக்காதோ ஆனால் பாடகர்கள் பற்றியும் நாட்டியம் சம்பந்தமாகவும் விமர்சனம் செய்வதற்கென்றே சிலப்பக்கங்களை ஒதுக்கிவிடுவார்கள்!

தற்போதைய சுழல்களில் அது அந்தளவுக்கு முக்கியத்துவமாக யாராலும் கருதப்படாவிட்டாலும், ஒரு காலத்தில்அதைக்காண்பதற்கு பாடகர்கள் & நாட்டியக்கலைஞர்கள் மத்தியில் கொள்ள பயமாக இருந்து வந்தது,

அதற்கு காரணம் சுப்புடு!

பேரைக்கேட்டு அதிர்ந்தவர்கள் பலருண்டு..!

பாடும் பணியை விட்டு சென்றவர்களும் உண்டு!

மனுசன் யாருக்கும் பயந்தவர் கிடையாது,கச்சேரிக்கு சுப்புடு வந்திருக்காருன்னு சொன்னாலே அலறியவர்கள் பலர்! ஒரு முறை ஜேசுதாஸ்,இவர் வந்திருப்பதை பற்றி கேள்விப்பட்டு நான் கச்சேரி செய்யமுடியாது என்று கூறினாராம்!

அதற்குமுன்பெருமுறை ஜேசுதாஸை கச்சேரி செய்யவரும்முன்பு நன்றாக பயிற்சி எடுத்துவரணும் சொன்னதுல இவருக்கு அவர் மேல ரொம்ப கோபம்!

ஒரு முறை திருவையாறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த சுப்புடுவை தாக்கினார்களாம்! (பாருங்க எவ்ளோ கொலவெறியை உண்டு பண்ற அளவுக்கு நடந்துக்கிட்டிருக்காரு!)

இளையாராஜாவின் இசையில் வெளிவந்த சிந்து பைரவி படம் பார்த்து சுப்புடு கூறிய வார்த்தைகள் " 25 வருஷத்த தமிழ் சினிமாவில வேஸ்ட் பண்ணிட்டீங்களேன்னுத்தான்"

 
"சுற்றளவைக் குறைத்தால் உலகம் சுற்றலாம்" இது நாட்டிய அரங்கேற்றம் செய்த பிரபல பாடகியின் மகளுக்கான விமர்சனம். 

"காதிலும் கம்மல்; குரலிலும் கம்மல்" - இது பிரபல சங்கீத வித்வான் ஒருவருக்கு. 

"கேதாரம் சேதாரமாகிவிட்டது" - இது பாடலைப் பாடியவருக்கும், இசையமைத்தவருக்கும் சேர்த்து வைத்த குட்டு.

"best luck for next year" - இது ஒரு பிரபல இசைக் கலைஞருக்குத் தெரிவித்த அனுதாபம். 

இப்படி நறுக், சுருக் சொற்களில் காரசாரமாக விமர்சனம் எழுதி, இசை விமர்சனத் துறைக்குப் புத்துயிரூட்டியவர் சுப்புடு என்றழைக்கப்படும் பி.வி. சுப்பிரமணியம். இவர், மார்ச் 27, 1917 அன்று பர்மாவில், வெங்கட்ராம ஐயர், சரஸ்வதி அம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். சிறுவயது முதலே இவருக்கு இசையார்வம் இருந்தது. சகோதரிகளுக்கு இசை கற்பிக்கவந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் மூலம் இசை கற்றுக்கொண்டார். மிமிக்ரியும் கைவந்தது. நடிப்பு, கேட்கவே வேண்டாம். பதினைந்து வயதிலேயே 'பிரஹலாதா', 'சீதா கல்யாணம்' போன்ற நாடகங்களை எழுதி நடித்தார். உயர்கல்வியை முடித்த இவருக்கு ரங்கூனில் கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் வேலை கிடைத்தது. படிக்கும்போதே பள்ளி இதழில் எழுதிய அனுபவம் இருந்ததால், 1938ல் இசை பற்றிய சிறு விமர்சனக் குறிப்புகளை Rangoon Times பத்திரிகைக்கு எழுதி அனுப்ப, அவை பிரசுரமாயின. 1942ல் போர் சமயத்தில் ஏற்பட்ட நெருக்கடியால் நடந்தே இந்தியா வந்துசேர்ந்தார். சிம்லாவில் சில வருடங்கள் இருந்தார். பின் டெல்லியை அடைந்தார்.

டெல்லியில் மத்திய அரசின் நிதியமைச்சகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். டெல்லியே இவரைச் சிறந்த இசை விமர்சகர் ஆக்கியது. ஓய்வுநேரத்தில் நாட்டியம், நாடகம், இசைக்கச்சேரி போன்றவற்றிற்குச் செல்வார். ஒருமுறை பிரபல இசைக்கலைஞர் ஒருவரது கச்சேரிக்குச் சென்றுவந்த சுப்புடு, அதைப்பற்றிய விமர்சனம் ஒன்றை 'ஆனந்த விகடன்' இதழுக்கு எழுதி அனுப்பினார். அதில் "அந்த வித்வான் நன்றாகப் பாடுவதெல்லாம் சரிதான். ஆனால் 'தாயே நீ இரங்காய்' என்று பாடும்போது ஏன் 'இற்றங்காய்' என்று பாடுகிறார்? அம்பாள் என்ன மரத்தின் மேலா ஏறிக் கொண்டிருக்கிறார்? ஒருவேளை அவர் வீட்டுத் தோட்டத்தில் இருந்த மாமரத்தில் பக்கத்துவீட்டுப் பையன் மாங்காய் பறிக்கிறான் போலிருக்கிறது. நீ இறங்காவிடில் பல்லை உடைச்சிடுவேன் என்று சொல்கிற மாதிரி கொஞ்சம்கூட பாவம் இல்லாமல் இருந்தது. இந்த அதிகப்பிரசங்கத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்" என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்த ஆசிரியர் கல்கி, "உங்கள் அதிகப்பிரசங்கம் ஜோரைய்யா. மேலும் மேலும் எழுதுங்களைய்யா!" என்று பதில் கடிதம் எழுதி ஊக்குவித்தார். அதுமுதல் விகடனில் இசை விமர்சனம் வெளியானது. அடுத்து கல்கி, சதாசிவத்துடன் இணைந்து "கல்கி" இதழை ஆரம்பிக்கவே அதிலும் சுப்புடுவின் கைவரிசை தொடர்ந்தது. கல்கியையே மானசீக குருவாகக் கொண்டார் சுப்புடு.

விகடன், கல்கியைத் தொடர்ந்து மணியன் ஆசிரியராக இருந்த இதயம் பேசுகிறது இதழில் 16 ஆண்டு காலத்திற்கு மேலாக இசை விமர்சனம் எழுதினார். சுப்புடுவின் விமர்சனங்களில் நகைச்சுவை மிளிரும். அதே சமயம் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களும் இருக்கும். அவரது பேனா சிலருக்குத் தேளாகவும் சிலருக்குத் தேனாகவும் இருந்தது! அதனால் பல சர்ச்சைகளும் எழுந்தன. தஞ்சையில் இவருக்கு கறுப்புக்கொடி காட்டப்பட்டது. இவர்மீது தாக்குதல்களும் நிகழ்ந்தன. அதற்கெல்லாம் அஞ்சாமல் இவர் எழுதி வந்தார். இசைக்கலைஞர்கள் மட்டுமல்லாது சபாக்களையும் இவர் கடுமையாகச் சாடியிருக்கிறார். "ரொம்ப சபாக்களில் காரியதரிசிகள் அரங்குக்கு வெளியேதான் நிற்பார்கள். 'உள்ளே நடக்கும் அக்கிரமங்களுக்கு நான் பொறுப்பு இல்லை' என்பது போல" - இது அவரது சாடல். இவரது விமர்சனத்தால் பாடகர்களுக்கும் இவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததுண்டு. இவரது விமர்சனத்தால் சீண்டப்பட்ட சபாக்களும் 'Dogs and Subbudu not allowed' (நாய்களுக்கும் சுப்புடுவுக்கும் அனுமதியில்லை) என்று வாயிலில் எழுதி மாட்டுமளவுக்கு விரோதம் இருந்தது. . 

வார்த்தை ஜாலத்தில் படுசுட்டி சுப்புடு. ஒரு சமயம் செம்மங்குடி சீனிவாச ஐயர் "சுப்புடு என்னைத் தாக்குவது பற்றி எனக்குச் சந்தோஷம். அவர் தாக்கும்போதெல்லாம் எனக்கு நிறையக் கச்சேரி வாய்ப்புக்கள் வருகின்றன" என்று கிண்டலாகச் சொன்னார். அடுத்து மேடையேறிய சுப்புடு, "செம்மங்குடிதான் எவ்வளவு அழகாகப் பேசுகிறார்! அவர் தொடர்ந்து மேடைகளில் பேசலாமே? ஏன் பாடுகிறார்?" என்று சீண்டினார். இவ்வாறு பல வித்வான்களை பேச்சாலும், எழுத்தாலும் இறுதிவரை விமர்சித்து வந்தார் சுப்புடு. அதே சமயம் தகுதியுள்ள கலைஞர்களைப் பாராட்டவோ, ஊக்குவிக்கவோ தவறியதில்லை. சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, சௌம்யா, சஞ்சய் சுப்ரமணியம்
உன்னிகிருஷ்ணன், வயலின் ஏ. கன்யாகுமரி உள்ளிட்டோரை அவர்களின் இளவயதிலேயே அடையாளம் காட்டியவர் சுப்புடுதான். "நானும் கிட்டத்தட்ட 65 வருஷங்களாக இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த மாண்டலின் சீனிவாசைப் போல் ஒரு அவதார புருஷனைக் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. என்னால் அவனது இசை மேதாவிலாசத்தை ஆய்வு செய்யவோ, எடை போடவோ இயலவில்லை" என்று மனமாரப் பாராட்டியிருகிறார்.
ஒரேநாளில் தொடர்ந்து பல கச்சேரிகளுக்குச் சென்றாலும், ஒரு துண்டுச்சீட்டில்கூடக் குறிப்பெழுதிக் கொள்ளாமல், இரவு பத்து மணிக்கு மேல் உதவியாளரை அழைத்து டிக்டேட் செய்வார் சுப்புடு. அது மிகச் சரியாகவே இருக்கும். அந்த அளவுக்கு நினைவாற்றல். காரணம் அவர் தன் இறுதிக்காலம்வரை செய்துவந்த யோக ஆசனங்கள்தான். கர்நாடக இசை மற்றும் தமிழிசை பற்றிச் சொல்லும்போது, "சங்கீத பிதாமகர்கள் என்று சொல்லுகிறவர்களுக்குத் தமிழ் தெரியாது. அதனால அவுங்க அவுங்க பாஷையில பாடினாங்க. அந்தப் பாட்டுக்கள் பிரபலம் ஆயிட்டுது. அதுதான் கர்நாடக இசைன்னு ஆயிட்டுது. பாஷை புரியாம ரசிக்கமாட்டான். தியாகராஜ கீர்த்தனையில எதை ரசிக்கிறான்? அந்தச் சங்கதியை. இப்ப 'ப்ராவ பாரமா' என்ற கீர்த்தனையை அந்த பாவமே இல்லாமப் பாடினா எப்படி இருக்கும்? 'பண்டித மோதிலால் நேருவைப் பறிகொடுத்தோமே'ன்னு ஜாலியா தாளம் போட்டுக்கொண்டு பாடினா ரசிக்க முடியுமா? பாபநாசம் சிவன் பாடல்கள் எத்தனை இருக்கு? 'நானொரு விளையாட்டு பொம்மையா' மாதிரிப் பாடல்கள் எல்லாம் பாவத்தோட பாடினா ஏன் ரசிக்க முடியாது?" என்று கேள்வி எழுப்புகிறார். கர்நாடக சங்கீத வித்வான்கள் சினிமாவில் பாடக்கூடாது. அப்படிப் பாடினால் குரல் கெட்டுவிடும் என்பது இவரது உறுதியான கருத்து. 

நிகழ்ச்சிக்கு வராமலேயே விமர்சனம் செய்ததாகவும் இவர்மீது விமர்சனம் இருந்ததுண்டு. "விமர்சனத்துக்கு என்றே சில வார்த்தைத் தொடர்கள் இருக்கு. 'காம்போதி களைகட்டவில்லை' என்று மட்டும் எழுதுவாங்க. ஏன் களைகட்டவில்லை என்று நான் சொல்லுவேன். அதோட நான் dry ஆக எழுதமாட்டேன்" என்கிறார் தன் எழுத்தைப்பற்றி. தினமணி கதிர், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஸ்டேட்ஸ்மென் போன்ற இதழ்களில் நிறைய விமர்சனம் எழுதியிருக்கிறார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சரளமாக எழுதுவார். இசை விமர்சனம் மட்டுமல்லாமல் நாடக, நாட்டிய விமர்சனமும் எழுதியிருக்கிறார். பரதநாட்டியம் பற்றியும் நன்கு அறிந்தவர். சில நாட்டியங்களுக்கு நட்டுவாங்கமும் செய்திருக்கிறார். பரதம் குறித்து சிறு நூல் ஒன்றும் எழுதியிருக்கிறார். டில்லியில் பல நடன நிகழ்ச்சிகளுக்கு இவர் ஹார்மோனியம் வாசித்திருக்கிறார். கஞ்சிரா வாசிக்கவும் அறிந்தவர்.. 'South Indian Theatres' என்ற அமைப்பை பூர்ணம் விசுவநாதன், கோபு, ராஜி இவர்களுடன் ஆரம்பித்தார். பல நாடகங்களை எழுதி இயக்கி, நடித்திருக்கிறார். "கோமதியின் காதலன்", தி.ஜா.வின். "வடிவேலு வாத்தியார்" உள்ளிட்ட பல நாடகங்களை மேடையேற்றியிருக்கிறார். வானொலி நாடகங்களிலும் நடித்திருக்கிறார். சுப்புடுவின் சகோதரர் திரு. P.V. கிருஷ்ணமூர்த்தி, டில்லியில் அகில இந்திய வானொலியிலும், பிறகு தூர்தர்ஷனிலும் டைரக்டர் ஜெனரலாக இருந்து ஓய்வுபெற்றவர். இசை அறிந்தவர்.

இவரது இசை விமர்சனம் பற்றி கவிஞர் வாலி,

சுப்புடு
பாடகர்களின் தலையெழுத்தை
பேனாவால் எழுத
பர்மாவிட்டு பாரதம் வந்த பிரம்மா

பாலையும் நீரையும் 
பிரித்துக் காட்டுவதற்காக 
டிசம்பர் மாதத்தில்
டில்லியிருந்து சென்னைக்கு வரும்
அன்னப்பறவை.

இளம்வித்வான்களுக்கு
இவர் தூண்டுகோல்
முதிய வித்வான்களுக்கு
இவர் துலாக்கோல்

கொன்னக்கோலைக் கூட
குற்றமிருக்கிறதா என்று
குடைந்து பார்க்கும்
கன்னக் கோல்

என்று எழுதியது முற்றிலும் பொருத்தம். இவரது வாழ்க்கை தொகுக்கப்பட்டு BEYOND DESTINY - The Life and Times of Subbudu என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளது.

ஒருசமயம் உடல்நலமில்லாதிருந்தபோது சுப்புடுவைச் சந்திக்க வந்திருந்தார் அப்போதைய ஜனாதிபதி அப்துல்கலாம். "உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?" என்று கேட்ட அவரிடம், "நான் இறந்த பிறகு, உங்கள் மொகல் தோட்டத்தில் இருந்து ஒரு மஞ்சள் ரோஜாவைக் கொண்டுவந்து என் உடல் மீது வையுங்கள்" என்று குறிப்பிட்டார் சுப்புடு. மார்ச் 29, 2007 நாளன்று சுப்புடு காலமானார். மறுநாள் மொகல் தோட்டத்தில் பறிக்கப்பட்ட மஞ்சள் ரோஜாக் கொத்தை சுப்புடுவின் உடல்மேல் வைத்து அஞ்சலி செலுத்தினார் அப்துல்கலாம்.

தனது நகைச்சுவை எழுத்தாலும், கருத்தாலும் அவரது ரசிகர்களால் என்றும் நினைவு கூறப்படுவார் சுப்புடு......

Thursday, March 30, 2023

திருவாளர் அப்துல் ஹமீத். இலங்கை வானொலி

வல்லிசிம்ஹன்



13-2-2023-உலக வானொலி தினம் சிறப்பு பதிவு 
-
அதுவொரு அழகிய வானொலி காலம் - 5: பி.எச். அப்துல் ஹமீதை துரத்திய கேள்வி!
நம் தமிழக வானொலிகளில் ரோபோ மாதிரி ஓர் அறிவிப்பாளர் பேசுவார். அடுத்தவர் வருவார். யார் போனவர், யார் வந்தவர் என்று நமக்குத் தெரியாது. காரணம் அவர்களது பெயர்கள் அன்று அறிவிக்கப்பட்டதில்லை. அந்த அளவுக்கு எந்திரத்தனமாக வைத்திருந்தார்கள்.
இலங்கை வானொலியில் பணியாற்றுவோரின் ஒவ்வொருவர் பெயரும் தெரிவதால் அவர்களுடன் நாமும் பயணித்துக் கொண்டே இருப்பதாகத் தோன்றும். அவர்கள் பணியை உணரவைக்கும்.
பி.எச்.அப்துல் ஹமீது பணியாற்றிய போது விசாலாட்சி ஹமீது என்ற அறிவிப்பாளரும் இருந்தார். பெரும் பாலானவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்றுதான் நினைப்பார்கள். அந்தக் குழப்பம் வரக் கூடாது என்பதற்காக அந்த இருவரும் பங்குபெற்ற நிகழ்ச்சிகளில் பி.எச் அப்துல் ஹமீத் விடைபெறும் போது உங்களிடமிருந்து விடை பெறுபவர் சகோதரி விசாலாட்சியுடன் உங்கள் அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் என்பார். அப்போது "சகோதரி" என்பதை அழுத்திச் சொல்வார். இருந்தாலும் அவரைப் பார்க்கிறவர்கள் எல்லாம் விசாலாட்சி உங்கள் மனைவியா என்று கேட்பார்களாம். அந்தத் தர்மசங்கடக் கேள்வி கடைசி வரை அவரைத் தொடர்ந்து கொண்டிருக்கிறதாம் நேரில் பார்த்தபோது வருத்தத்துடன் சொன்னார்.
அப்போது இலங்கை வானொலியும் தமிழ்த் திரையுலகமும் பின்னிப்பி ணைந்து கிடந்தன. இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் படங்கள் எல்லாம் எடுத்தார்கள். அப்போது இலங்கை நடிகைகள் தமிழ்ப் படங்களில் நடித்தார்கள். 'பைலட் பிரேம்நாத்' படத்தில் சிவாஜி கணேசனுடன் பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா இணைந்து நடித்திருந்தார். அது சார்ந்த பாடல்கள் கூட ஞாபகத்தில் இருக்கின்றன.
'இலங்கையின் இளம் குயில் என்னோடு இசை பாடுதோ?' என்றொரு பாடல் உண்டு.
'அழகி ஒருத்தி இளநி விக்கிறா கொழும்பு வீதியிலே; அருகில் ஒருத்தன் உருகி நிக்கிறான் குமரி அழகிலே' என்றும் ஒரு பாடல் உண்டு. 'தென்னிலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை' என்றொரு பாடல் வரும். அந்தப் பாடல்கள் எல்லாம் இன்றும் நினைவுக்கு வருகின்றன. அது மட்டுமல்ல இலங்கை மண் சார்ந்தவையாக சில பாடல்கள் ஒலிக்கும். அதில் மறக்க முடியாத பாடல் அங்கேயே தயாரித்த 'மாமியார் வீடு' என்ற படத்தில் ஜோசப் ராஜேந்திரன் பாடியது.
'இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன் அது தான் எனக்குத் திருநாள்; என் கனவுகள் பலித்திடும் பெருநாள் .'என்ற பாடல் அடிக்கடி ஒலிக்கும். அது மட்டுமல்ல 'சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே? பள்ளிக்குப் போனாளோ; படிக்கப் போனாளோ?' என்ற அந்த நையாண்டிப் பாடலும், 'கள்ளுக்கடை பக்கம் போகாதே; காலைப் பிடித்து கெஞ்சுகிறேன்' என்ற மதுவிலக்கு அறிவுரைப் பாடலும் அடிக்கடி ஒலிக்கும்.
தமிழ்த் திரைப்படப் பாடல்கள் தரவரிசை நேயர்களால் வாக்களிக்கப்பட்டு வாராவாரம் தேர்வாகும். அதில் ’மாம்பூவே சிறு மைனாவே’ என்ற சந்திரபோஸ் இசையமைத்த ’மச்சானை பார்த்தீங்களா’ படப்பாடல் ஓராண்டு தாண்டியும் பல வாரங்கள் முதலிடத்திலேயே இருந்தது ஞாபகத்தில் இருக்கிறது.
இலங்கை வானொலியில் ஒலித்த தமிழ்த் திரைப்படங்களின் விளம்பரங்கள் கூட நினைவில் பதிந்துள்ளன. உழைக்கும் கரங்கள், சங்கிலி, திசை மாறிய பறவைகள், நினைத்தாலே இனிக்கும் போன்ற பட விளம்பரங்களில் அது சார்ந்த பாடல், வசனம் என்று சில வரிகளைப் போட்டு ஒலிபரப்புவார்கள். புதுமையாக இருக்கும்.
அறிவிப்பாளர்களே தங்கள் விருப்பப் பாடல்களைத் தொகுத்து வழங்கும் 'என் விருப்பம்' என்ற நிகழ்ச்சி வரும். அதில் அறிவிப்பாளர்களுக்குப் பிடித்த பாடல்கள் வரும். ஏன் பிடித்தது என்பதையெல்லாம் சொல்வார்கள். அதிலிருந்து ரசனைப் புரிதலால் ஒவ்வொருவரையும் நமக்கு நெருக்கமாக உணர்வோம்.
'இசையமைப்பாளர்' என்றொரு பகுதி குறிப்பிட்ட இசையமைப்பாளர்களின் பாடல்களை அதில் தொகுத்து வழங்குவார்கள். இப்படி நிறைய நிகழ்ச்சிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். சில நேரம் ’மரண அறிவித்தல்’ வரும். அப்போது மட்டும் மனதுக்கு ’திக்’கென்று இருக்கும்.
அப்போதெல்லாம் எங்கள் ஊர்ப்பகுதியில் எங்கே எந்த விவசாய வேலை நடந்து கொண்டிருந்தாலும் அங்கே ஒரு வானொலிப் பெட்டி கம்பீரமாக அமர்ந்திருக்கும். அந்த உழைக்கும் மக்களின் சுவாசமாகவும் ஆசுவாசமாகவும் இலங்கை வானொலி இருந்தது. மின்சார வசதி கூட இல்லாத காலம் அது. எங்கள் பகுதியில் மிக மிக அவசியமான பொருட்களாக வெல்லம், டீத்தூள் இருக்கும். தேநீர் போட பால் கூட அடுத்தபட்சம்தான்.ஆனால் அச்சு வெல்லம் , டீத்தூள் கண்டிப்பாக வாங்குவார்கள். இந்த அத்தியாவசியப் பட்டியலில் அடுத்தபடியாக வானொலிக்கு பேட்டரி வாங்குவது என்று பட்ஜெட்டில் வைத்திருப்பார்கள். அது இலங்கை வானொலிக்காகத்தான்.
தங்களை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருப்பது இலங்கை வானொலி நிகழ்ச்சிகள்தான் என நினைப்பார்கள்.
புகையிலை சாகுபடி இருக்கும்போது கொல்லை நடுவில் வானொலி இருக்கும். கொல்லை முழுதும் கேட்கும். நாலு பக்கமும் புகையிலைச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார்கள். வானொலி ஒலித்துக் கொண்டே இருக்கும் .
உற்ற தோழனாக உற்சாகம் தரும் ஊக்க மருந்தாக சிலநேரம் கிரியா ஊக்கியாகவும் அந்த வானொலி தோன்றும். வயல்களில் நீர் நிறைந்து நெல் சாகுபடிக் காலம் என்றாலும் வயல் வரப்புகளில் வானொலிப் பெட்டி உட்கார்ந்து இருக்கும். அல்லது மரத்தில் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். சிலர் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு திரிவார்கள். சிலர் சைக்கிளில் பொருத்தி வைத்துக் கொண்டிருப்பார்கள்.
கருவேலங்காட்டில் சருகு குவிக்கப்போனாலும் முள் மரங்கள் நடுவே கூட அங்கே வானொலி ஒலித்துக் கொண்டிருக்கும்.
உழைப்பின் எல்லா வலிகளையும் போக்கும் அருமருந்தாக வானொலி காதுகள் வழியே மனதிற்குள் களிம்பு பூசிக் கொண்டிருக்கும். அதற்குக் காரணம் அவ்வளவு நிகழ்ச்சிகள் வரும். காலை நிகழ்ச்சிகள் 10 மணிக்கு முடிந்தாலும் அடுத்து நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 11 மணிவரை தொடர்ச்சியாக ஒலிபரப்பாகும். நம் ஆல் இண்டியா ரேடியோவை அதற்குள் இரண்டு முறை மூடித் திறந்து விடுவார்கள்.
காலை 10 மணி முதல் பகல் 12 வரை மணி வரை தான் இடைவெளி. அப்போது நிலையம் மாற்றினால் ஒருவர் வயலின் வாசித்துக் கொண்டிருப்பார் அல்லது இன்னொருவர் மிருதங்கம் வாசிப்பார் அல்லது 'மாயா மாளவ கௌள' பாடிக்கொண்டிருப்பார். யாரோ ஒருவர் லயவின்யாசம் செய்வார். யாராவது தலைவர்கள் இறந்து விட்டால் , ஒரு வாரம் சோக இசை போட்டே இழுப்பார்கள். அப்போதெல்லாம் இலங்கை வானொலிதான் எங்களைக் காப்பாற்றும்.
இலங்கை வானொலியில் அடிக்கடி நேரம் சொல்வார்கள். ஒரு பாடல் ஒலித்து முடிந்த பிறகும் அடுத்த பாடல் ஒலிக்கப் போகும் முன்பும் நேரம் சொல்வார்கள். இதனால் அப்போதெல்லாம் உழைக்கும் மக்கள் கைக்கடிகாரம் கட்டிக் கொண்டு இருக்கத் தேவையில்லை. சாலையிலே நடந்தாலும் சோலையிலே இருந்தாலும் யார் வீட்டு வானொலியில் இருந்தோ நேரம் ஒலிக்கும். காற்றலையிலேயே கடிகாரம் பார்த்துக்கொள்வார்கள். கடிகாரம் உள்ளவர்கள் நேரத்தைச் சரிபார்க்கவும் இலங்கை வானொலியை நம்பியிருந்தார்கள்.
லைட்ஸ் ஆன், டயலாக் , விஷ்வல் பேஸ்ட், புக் ஷெல்ப், பயோடேட்டா, ரீடர்ஸ் ஒபீனியன், ஆட்டோகிராப், ரேஷன் கார்டு, டவுன்லோடு மனசு, ப்ளாஷ்பேக், இன்பாக்ஸ், ப்ளாக் அண்ட் ஒயிட், டாப் ஆங்கிள், கமெண்ட்டூன், ரிலாக்ஸ் ப்ளீஸ், டாப்டென் மூவீஸ், சூப்பர் சிங்கர், டிரைலர் டைம், சாங் ஃபார் யூ, க்ரைம் டைம், க்ரைம் ஸ்டோரி, ப்ரைம் டைம், பயோகிராபி, ஹலோ டாக்டர், கிச்சன் டைம் ,பிக் பாஸ், கனெக்‌ஷன்ஸ், ஜீன்ஸ், மியூசிக் ட்ராக்ஸ், மேக்ஸ் மசாலா, மிட்நைட் மசாலா, கிராமபோன், செம காமெடி, கோலிவுட் ஹிட்ஸ், என்றும் சூப்பர், சினி டைம் .
இவை எல்லாம் என்ன தெரியுமா? இன்றைய பிரபல அச்சு, காட்சி ஊடகங்களில் வரும் பிரபலமான தலைப்புகள். இவற்றில் எங்காவது தமிழ் இருக்கிறதா? இலங்கை வானொலியில் அனைத்து அறிவிப்பாளர்களும் அழகான தமிழில் பேசுவார்கள் .ஆங்கிலக் கலப்பின்றி அவர்கள் இயல்பாகவும் விரைவாகவும் தமிழ் பேசுவார்கள் .
'மைக்' என்று சொல்ல மாட்டார்கள் ’ஒலிவாங்கி’ என்றுதான் சொல்வார்கள் . ’வால்யூமைக் குறைத்துப் பேசுங்கள்’ என்று சொல்லமாட்டார்கள் .’ஒலி அளவைக் குறையுங்கள்’ என்பார்கள்..’பெல் அடித்தது’ என்பதற்கு ’மணி ஒலித்தது’ என்பார்கள். ‘பட்டனைத் தட்டுங்கள்’ என்பதற்குப் ’பொத்தானை அழுத்துங்கள்’ என்பார்கள்.’டைம் அப்’ என்பதற்குப் பதிலாக ’உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது’ என்றுதான் சொல்வார்கள்.
அந்தத் தமிழ் இன்று எங்கே போனது? தங்கள் நிகழ்ச்சிகளின் மூலம் அவர்கள் ரசனையை மட்டுமல்ல தமிழையும் வளர்த்தார்கள். அதுமட்டுமல்ல அந்த மண்ணில் புழங்கும் வார்த்தைகளான காலக்கிரமத்தில், மணித்தியாலம், வழமைபோல், கமக்காரர்கள் போன்ற சொற்களைக் கேட்கும்போது புதிதாக இருக்கும்.
இலங்கை வானொலியின் மூலமாக காதுகளுக்குள் கவரி வீசி மனதிற்குள் மகரந்தம் தூவிய அறிவிப்பாளர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். சைக்கிளில் சென்றால் கூட இரண்டு மணி நேரத்தில் சென்று விடக் கூடிய தூரம் தான். ஆனால், இடையில் இந்தியப் பெருங்கடல் இருக்கிறது. அது வேறு நாடாகவும் இருக்கிறதே என்ற ஏக்கம் எங்களுக்கு இருக்கும். ஒவ்வொருவரையும் சென்று பார்க்கவேண்டும் பேசவேண்டும் பழகவேண்டும் என்கிற அவா அடி மனதில் உறங்கிக்கொண்டிருக்கும். ஆனால் எதுவுமே வாய்க்கவில்லை. நான் சந்தித்த ஒரே ஒரு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் மட்டும் தான். நான் அவரை இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கிறேன்.
அவர் தொலைக் காட்சியில் இன்றும் உயிர்ப்போடு நிகழ்ச்சிகளை வழங்கிக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
திரைப்படப் பாடல்கள் சார்ந்த அவரது அனுபவமும் அறிவும் அபரிமிதமான நினைவாற்றலும் ஆச்சரியப்பட வைத்தது மட்டுமல்ல மிரளவைக்கும். அவர் பழகுதற்கு இனிய பண்பாளர்.❣️
-

விடுதலை எப்போது?

வல்லிசிம்ஹன்  அனைவருக்கும்   இனிய காலங்களுக்கான வாழ்த்துகள். நம்மை விடுவிக்க நாம் தான் முன்வரவேண்டும். இளமைக்காலங்களில்  கணவன், குழந்தைகள், ...