Blog Archive

Thursday, March 30, 2023

திருவாளர் அப்துல் ஹமீத். இலங்கை வானொலி

வல்லிசிம்ஹன்13-2-2023-உலக வானொலி தினம் சிறப்பு பதிவு 
-
அதுவொரு அழகிய வானொலி காலம் - 5: பி.எச். அப்துல் ஹமீதை துரத்திய கேள்வி!
நம் தமிழக வானொலிகளில் ரோபோ மாதிரி ஓர் அறிவிப்பாளர் பேசுவார். அடுத்தவர் வருவார். யார் போனவர், யார் வந்தவர் என்று நமக்குத் தெரியாது. காரணம் அவர்களது பெயர்கள் அன்று அறிவிக்கப்பட்டதில்லை. அந்த அளவுக்கு எந்திரத்தனமாக வைத்திருந்தார்கள்.
இலங்கை வானொலியில் பணியாற்றுவோரின் ஒவ்வொருவர் பெயரும் தெரிவதால் அவர்களுடன் நாமும் பயணித்துக் கொண்டே இருப்பதாகத் தோன்றும். அவர்கள் பணியை உணரவைக்கும்.
பி.எச்.அப்துல் ஹமீது பணியாற்றிய போது விசாலாட்சி ஹமீது என்ற அறிவிப்பாளரும் இருந்தார். பெரும் பாலானவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்றுதான் நினைப்பார்கள். அந்தக் குழப்பம் வரக் கூடாது என்பதற்காக அந்த இருவரும் பங்குபெற்ற நிகழ்ச்சிகளில் பி.எச் அப்துல் ஹமீத் விடைபெறும் போது உங்களிடமிருந்து விடை பெறுபவர் சகோதரி விசாலாட்சியுடன் உங்கள் அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் என்பார். அப்போது "சகோதரி" என்பதை அழுத்திச் சொல்வார். இருந்தாலும் அவரைப் பார்க்கிறவர்கள் எல்லாம் விசாலாட்சி உங்கள் மனைவியா என்று கேட்பார்களாம். அந்தத் தர்மசங்கடக் கேள்வி கடைசி வரை அவரைத் தொடர்ந்து கொண்டிருக்கிறதாம் நேரில் பார்த்தபோது வருத்தத்துடன் சொன்னார்.
அப்போது இலங்கை வானொலியும் தமிழ்த் திரையுலகமும் பின்னிப்பி ணைந்து கிடந்தன. இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் படங்கள் எல்லாம் எடுத்தார்கள். அப்போது இலங்கை நடிகைகள் தமிழ்ப் படங்களில் நடித்தார்கள். 'பைலட் பிரேம்நாத்' படத்தில் சிவாஜி கணேசனுடன் பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா இணைந்து நடித்திருந்தார். அது சார்ந்த பாடல்கள் கூட ஞாபகத்தில் இருக்கின்றன.
'இலங்கையின் இளம் குயில் என்னோடு இசை பாடுதோ?' என்றொரு பாடல் உண்டு.
'அழகி ஒருத்தி இளநி விக்கிறா கொழும்பு வீதியிலே; அருகில் ஒருத்தன் உருகி நிக்கிறான் குமரி அழகிலே' என்றும் ஒரு பாடல் உண்டு. 'தென்னிலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை' என்றொரு பாடல் வரும். அந்தப் பாடல்கள் எல்லாம் இன்றும் நினைவுக்கு வருகின்றன. அது மட்டுமல்ல இலங்கை மண் சார்ந்தவையாக சில பாடல்கள் ஒலிக்கும். அதில் மறக்க முடியாத பாடல் அங்கேயே தயாரித்த 'மாமியார் வீடு' என்ற படத்தில் ஜோசப் ராஜேந்திரன் பாடியது.
'இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன் அது தான் எனக்குத் திருநாள்; என் கனவுகள் பலித்திடும் பெருநாள் .'என்ற பாடல் அடிக்கடி ஒலிக்கும். அது மட்டுமல்ல 'சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே? பள்ளிக்குப் போனாளோ; படிக்கப் போனாளோ?' என்ற அந்த நையாண்டிப் பாடலும், 'கள்ளுக்கடை பக்கம் போகாதே; காலைப் பிடித்து கெஞ்சுகிறேன்' என்ற மதுவிலக்கு அறிவுரைப் பாடலும் அடிக்கடி ஒலிக்கும்.
தமிழ்த் திரைப்படப் பாடல்கள் தரவரிசை நேயர்களால் வாக்களிக்கப்பட்டு வாராவாரம் தேர்வாகும். அதில் ’மாம்பூவே சிறு மைனாவே’ என்ற சந்திரபோஸ் இசையமைத்த ’மச்சானை பார்த்தீங்களா’ படப்பாடல் ஓராண்டு தாண்டியும் பல வாரங்கள் முதலிடத்திலேயே இருந்தது ஞாபகத்தில் இருக்கிறது.
இலங்கை வானொலியில் ஒலித்த தமிழ்த் திரைப்படங்களின் விளம்பரங்கள் கூட நினைவில் பதிந்துள்ளன. உழைக்கும் கரங்கள், சங்கிலி, திசை மாறிய பறவைகள், நினைத்தாலே இனிக்கும் போன்ற பட விளம்பரங்களில் அது சார்ந்த பாடல், வசனம் என்று சில வரிகளைப் போட்டு ஒலிபரப்புவார்கள். புதுமையாக இருக்கும்.
அறிவிப்பாளர்களே தங்கள் விருப்பப் பாடல்களைத் தொகுத்து வழங்கும் 'என் விருப்பம்' என்ற நிகழ்ச்சி வரும். அதில் அறிவிப்பாளர்களுக்குப் பிடித்த பாடல்கள் வரும். ஏன் பிடித்தது என்பதையெல்லாம் சொல்வார்கள். அதிலிருந்து ரசனைப் புரிதலால் ஒவ்வொருவரையும் நமக்கு நெருக்கமாக உணர்வோம்.
'இசையமைப்பாளர்' என்றொரு பகுதி குறிப்பிட்ட இசையமைப்பாளர்களின் பாடல்களை அதில் தொகுத்து வழங்குவார்கள். இப்படி நிறைய நிகழ்ச்சிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். சில நேரம் ’மரண அறிவித்தல்’ வரும். அப்போது மட்டும் மனதுக்கு ’திக்’கென்று இருக்கும்.
அப்போதெல்லாம் எங்கள் ஊர்ப்பகுதியில் எங்கே எந்த விவசாய வேலை நடந்து கொண்டிருந்தாலும் அங்கே ஒரு வானொலிப் பெட்டி கம்பீரமாக அமர்ந்திருக்கும். அந்த உழைக்கும் மக்களின் சுவாசமாகவும் ஆசுவாசமாகவும் இலங்கை வானொலி இருந்தது. மின்சார வசதி கூட இல்லாத காலம் அது. எங்கள் பகுதியில் மிக மிக அவசியமான பொருட்களாக வெல்லம், டீத்தூள் இருக்கும். தேநீர் போட பால் கூட அடுத்தபட்சம்தான்.ஆனால் அச்சு வெல்லம் , டீத்தூள் கண்டிப்பாக வாங்குவார்கள். இந்த அத்தியாவசியப் பட்டியலில் அடுத்தபடியாக வானொலிக்கு பேட்டரி வாங்குவது என்று பட்ஜெட்டில் வைத்திருப்பார்கள். அது இலங்கை வானொலிக்காகத்தான்.
தங்களை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருப்பது இலங்கை வானொலி நிகழ்ச்சிகள்தான் என நினைப்பார்கள்.
புகையிலை சாகுபடி இருக்கும்போது கொல்லை நடுவில் வானொலி இருக்கும். கொல்லை முழுதும் கேட்கும். நாலு பக்கமும் புகையிலைச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார்கள். வானொலி ஒலித்துக் கொண்டே இருக்கும் .
உற்ற தோழனாக உற்சாகம் தரும் ஊக்க மருந்தாக சிலநேரம் கிரியா ஊக்கியாகவும் அந்த வானொலி தோன்றும். வயல்களில் நீர் நிறைந்து நெல் சாகுபடிக் காலம் என்றாலும் வயல் வரப்புகளில் வானொலிப் பெட்டி உட்கார்ந்து இருக்கும். அல்லது மரத்தில் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். சிலர் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு திரிவார்கள். சிலர் சைக்கிளில் பொருத்தி வைத்துக் கொண்டிருப்பார்கள்.
கருவேலங்காட்டில் சருகு குவிக்கப்போனாலும் முள் மரங்கள் நடுவே கூட அங்கே வானொலி ஒலித்துக் கொண்டிருக்கும்.
உழைப்பின் எல்லா வலிகளையும் போக்கும் அருமருந்தாக வானொலி காதுகள் வழியே மனதிற்குள் களிம்பு பூசிக் கொண்டிருக்கும். அதற்குக் காரணம் அவ்வளவு நிகழ்ச்சிகள் வரும். காலை நிகழ்ச்சிகள் 10 மணிக்கு முடிந்தாலும் அடுத்து நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 11 மணிவரை தொடர்ச்சியாக ஒலிபரப்பாகும். நம் ஆல் இண்டியா ரேடியோவை அதற்குள் இரண்டு முறை மூடித் திறந்து விடுவார்கள்.
காலை 10 மணி முதல் பகல் 12 வரை மணி வரை தான் இடைவெளி. அப்போது நிலையம் மாற்றினால் ஒருவர் வயலின் வாசித்துக் கொண்டிருப்பார் அல்லது இன்னொருவர் மிருதங்கம் வாசிப்பார் அல்லது 'மாயா மாளவ கௌள' பாடிக்கொண்டிருப்பார். யாரோ ஒருவர் லயவின்யாசம் செய்வார். யாராவது தலைவர்கள் இறந்து விட்டால் , ஒரு வாரம் சோக இசை போட்டே இழுப்பார்கள். அப்போதெல்லாம் இலங்கை வானொலிதான் எங்களைக் காப்பாற்றும்.
இலங்கை வானொலியில் அடிக்கடி நேரம் சொல்வார்கள். ஒரு பாடல் ஒலித்து முடிந்த பிறகும் அடுத்த பாடல் ஒலிக்கப் போகும் முன்பும் நேரம் சொல்வார்கள். இதனால் அப்போதெல்லாம் உழைக்கும் மக்கள் கைக்கடிகாரம் கட்டிக் கொண்டு இருக்கத் தேவையில்லை. சாலையிலே நடந்தாலும் சோலையிலே இருந்தாலும் யார் வீட்டு வானொலியில் இருந்தோ நேரம் ஒலிக்கும். காற்றலையிலேயே கடிகாரம் பார்த்துக்கொள்வார்கள். கடிகாரம் உள்ளவர்கள் நேரத்தைச் சரிபார்க்கவும் இலங்கை வானொலியை நம்பியிருந்தார்கள்.
லைட்ஸ் ஆன், டயலாக் , விஷ்வல் பேஸ்ட், புக் ஷெல்ப், பயோடேட்டா, ரீடர்ஸ் ஒபீனியன், ஆட்டோகிராப், ரேஷன் கார்டு, டவுன்லோடு மனசு, ப்ளாஷ்பேக், இன்பாக்ஸ், ப்ளாக் அண்ட் ஒயிட், டாப் ஆங்கிள், கமெண்ட்டூன், ரிலாக்ஸ் ப்ளீஸ், டாப்டென் மூவீஸ், சூப்பர் சிங்கர், டிரைலர் டைம், சாங் ஃபார் யூ, க்ரைம் டைம், க்ரைம் ஸ்டோரி, ப்ரைம் டைம், பயோகிராபி, ஹலோ டாக்டர், கிச்சன் டைம் ,பிக் பாஸ், கனெக்‌ஷன்ஸ், ஜீன்ஸ், மியூசிக் ட்ராக்ஸ், மேக்ஸ் மசாலா, மிட்நைட் மசாலா, கிராமபோன், செம காமெடி, கோலிவுட் ஹிட்ஸ், என்றும் சூப்பர், சினி டைம் .
இவை எல்லாம் என்ன தெரியுமா? இன்றைய பிரபல அச்சு, காட்சி ஊடகங்களில் வரும் பிரபலமான தலைப்புகள். இவற்றில் எங்காவது தமிழ் இருக்கிறதா? இலங்கை வானொலியில் அனைத்து அறிவிப்பாளர்களும் அழகான தமிழில் பேசுவார்கள் .ஆங்கிலக் கலப்பின்றி அவர்கள் இயல்பாகவும் விரைவாகவும் தமிழ் பேசுவார்கள் .
'மைக்' என்று சொல்ல மாட்டார்கள் ’ஒலிவாங்கி’ என்றுதான் சொல்வார்கள் . ’வால்யூமைக் குறைத்துப் பேசுங்கள்’ என்று சொல்லமாட்டார்கள் .’ஒலி அளவைக் குறையுங்கள்’ என்பார்கள்..’பெல் அடித்தது’ என்பதற்கு ’மணி ஒலித்தது’ என்பார்கள். ‘பட்டனைத் தட்டுங்கள்’ என்பதற்குப் ’பொத்தானை அழுத்துங்கள்’ என்பார்கள்.’டைம் அப்’ என்பதற்குப் பதிலாக ’உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது’ என்றுதான் சொல்வார்கள்.
அந்தத் தமிழ் இன்று எங்கே போனது? தங்கள் நிகழ்ச்சிகளின் மூலம் அவர்கள் ரசனையை மட்டுமல்ல தமிழையும் வளர்த்தார்கள். அதுமட்டுமல்ல அந்த மண்ணில் புழங்கும் வார்த்தைகளான காலக்கிரமத்தில், மணித்தியாலம், வழமைபோல், கமக்காரர்கள் போன்ற சொற்களைக் கேட்கும்போது புதிதாக இருக்கும்.
இலங்கை வானொலியின் மூலமாக காதுகளுக்குள் கவரி வீசி மனதிற்குள் மகரந்தம் தூவிய அறிவிப்பாளர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். சைக்கிளில் சென்றால் கூட இரண்டு மணி நேரத்தில் சென்று விடக் கூடிய தூரம் தான். ஆனால், இடையில் இந்தியப் பெருங்கடல் இருக்கிறது. அது வேறு நாடாகவும் இருக்கிறதே என்ற ஏக்கம் எங்களுக்கு இருக்கும். ஒவ்வொருவரையும் சென்று பார்க்கவேண்டும் பேசவேண்டும் பழகவேண்டும் என்கிற அவா அடி மனதில் உறங்கிக்கொண்டிருக்கும். ஆனால் எதுவுமே வாய்க்கவில்லை. நான் சந்தித்த ஒரே ஒரு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் மட்டும் தான். நான் அவரை இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கிறேன்.
அவர் தொலைக் காட்சியில் இன்றும் உயிர்ப்போடு நிகழ்ச்சிகளை வழங்கிக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
திரைப்படப் பாடல்கள் சார்ந்த அவரது அனுபவமும் அறிவும் அபரிமிதமான நினைவாற்றலும் ஆச்சரியப்பட வைத்தது மட்டுமல்ல மிரளவைக்கும். அவர் பழகுதற்கு இனிய பண்பாளர்.❣️
-

9 comments:

ஸ்ரீராம். said...

எவ்வளவு அருமையான கட்டுரை.. எதையும் விடவில்லை. இலங்கை வானொலியை ரசிப்பது போலவே உங்கள் கற்ருறையையும் ரசித்துப் படித்தேன்.

ஸ்ரீராம். said...

சென்ற கமெண்ட்டில் கட்டுரை என்கிற வார்த்தை தவறாக தட்டச்சியிருக்கிறேன்!  மன்னிக்கவும்.  வானொலி என்றால் நம்மால் எல்லாம் நம் நாட்டு வானொலியைச் சொல்ல முடியவில்லை பாருங்கள்.  இலங்கை வானொலியைதான் சொல்ல வேண்டி இருக்கிறியாது.

ஸ்ரீராம். said...

ஆம், ஒவ்வொரு பாடலுக்கும் முன்னும் பின்னும் நேரம் அறிவித்துக் கொண்டே இருப்பர்கள். எல்லாம் தமிழ் வார்த்தைகள்தான் உபயோகிப்பார்கள். ரசனையாய் நிகழ்ச்சியை மனமொன்றி தொகுத்தளிப்பார்கள். திரைவிருந்து போன்ற நிகழ்ச்சிகளும் இருக்கும்.

ஸ்ரீராம். said...

எங்களுக்கு கே எஸ் ராஜா ஹமீதைவிட பிடிக்கும்.  அவர் விடுதலைப்புலிகளால் கொல்லபப்ட்டார் என்று சொன்னார்கள்.  கொடுமை.  "வீட்டுக்கு வீடு வானொலிப்பெட்டியின் அருகில் ஆவலுடன் குழுமி இருக்கும் எம் அன்பு ரசிகப்பெருமக்களுக்கு என் அன்பு வணக்கம்.  இது திரை விருந்து என்று அவர் அறிவிக்கும் வேகம், குரல் மனதில் ஒலிக்கிறது.

ஸ்ரீராம். said...

ஒரே வார்த்தையை மூன்று தரம் உபயோகிக்கக் கூடாது, பத்து நொடிகளுக்குமேல் மௌனம் சாதிக்கக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன் கூடிய விளையாட்டு, பாட்டுக்குப் பாட்டு போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் இலங்கை வானொலி மூலமாகவே பிரபலம்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா அழகான ரசனையான பதிவு.

நான் ரசித்து ரசித்து வாசித்தேன். பின்னே என் மனதிற்குகந்த வானொலி அது. அதுவும் கொழும்பில் இருந்தப்ப நம் வீட்டிற்கு எதிர்த்தாற்போல் ராஜேஸ்வரி சண்முகம் இருந்தாங்க. அத்தைகளுக்குத் தோழி. என்னை மடியில் அமர்த்து வைத்துக் கொண்டு கொஞ்சியவர். நான் ஒன்றாம் வகுப்பு படிச்சப்ப இரவு மாலை நிகழ்ச்சி. என்னைப் பாடவும் கதை சொல்லவும் கூட்டிக் கொண்டு போனாங்க. மழை கொட்டுது. அப்படியும் அத்தை என்னை அழைத்துக் கொண்டு சென்றார். அப்போது அறிவிப்பாளர்கள் பலரையும் சந்தித்ததுண்டு. மயில்வாகனன், ராஜேஸ்வரி சண்முகம், ஹமீது, ராஜா....என்றாலும் ராஜேஸ்வரி அவர்கள் எங்களுடன் கடிதம் மூலம் தொடர்பில் இருந்தார், நாங்கள் 1970-71ல் இந்தியா வந்த பிறகும். 1975க்குப் பிறகு இலங்கைப் பிரச்சனை தீவிரமடைய....தொடர்பு விட்டுப் போனது. எனக்கு மிகவும் பிடித்த ஊர். அழகான தமிழ். அழகான வாழ்க்கை. நான் அப்போதெல்லாம் இலங்கைத் தமிழ்தான் பேசிக் கொண்டிருந்தேன். எனக்கு இலங்கைத் தமிழ் மிக மிகப் பிடிக்கும்.

இன்னும் சில முக்கியப் புள்ளிகள் தொடர்பில் அப்போது. நிறைய இலங்கை நினைவுகள் வருகின்றன.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஹமீது மாமா ரொம்ப இனிமையானவர். அவரது நினைவுத்திறன் அசாத்தியமானது. விவேக் வசனம்தான் கொஞ்சம் மாற்றி நினைத்துக் கொள்வேன்
'எனக்கு அவரை நினைவிருக்கிறது...ஆனா அவருக்கு என்னை நினைவிருக்காது!!"

கீதா

மாதேவி said...

'அது ஒரு பொற்காலம்' என்று சொல்லலாம்.
மிகவும் நன்றாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

அன்றைய அறிவிப்பாளர்களின் தமிழ் சிறப்பு.இலங்கை வானொலியும் கொடிகட்டிப் பறந்த காலம்.பல அறிவிப்பாளர்கள் இருந்தார்கள்.

இப்போது உள்ளவர்களின் தமிழ் தடுக்கி விழும் நிலைதான்.

ராமலக்ஷ்மி said...

இலங்கை வானொலி காலத்து இனிய நினைவுகளை மலரச் செய்தது பதிவு. மிக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். கதை வாசிப்பு நிகழ்ச்சிகளும் நன்றாக இருக்கும்.
வார்த்தை விளையாட்டு, ஏழு கேள்விகள் போன்ற நிகழ்ச்சிகளை அப்போது நாங்கள் வீட்டில் விளையாடி மகிழ்வோம்.

தற்கால நிகழ்ச்சிகளைப் பற்றிய தங்கள் ஆதங்கம் மிகக் சரியானது. சிந்திக்க வேண்டியது.