Monday, April 22, 2013

சிரிப்புதான் வருகுதையா சிலமனிதரைக் கண்டால் 2008 ஸ்விஸ் பயணத்தில் ஒருநாள்

வெள்ளமே   எங்களை மகிழ்விக்க வாராயோ
கோடைக்கு ஏற்ற விளையாட்டுத் திடல்
ஒற்றுமையாக இருக்கத்தான் இந்தக் கொடி
ஒரு பண்ணைவீடு
அம்மம்ம்மா   குளிர்






Friday, July 25, 2008

சுவிட்சர்லாந்து வந்தோம்தோம்.

பசுமை,பசுமை,பசுமை. சூரிக் விமான நிலையத்தில் இறங்கினதும் மனதுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது,.
 அந்த அழகும் நேர்த்தியும் அமைதியான

வரவேற்பும் எப்போதும் போல இதமாக இருந்தது.

மகன் சொன்னபடி இமிக்ரேஷனில் வாயடிக்காமல் வெளியில் வந்தேன்.
அங்கேயிருந்த பெண்தான், இப்பத்தானே போனீங்க அதுக்குள்ள இன்னோரு பயணமான்னு கேட்டாள்.

என்னம்மா செய்யறது அழைத்த குரலுக்கு ஓட நினைக்கிறோம்.
 முடிந்த வரை

செய்வோம்னு சிரித்தேன்.

எனக்கும் இப்படிப் பெற்றொர் கிடைத்தால் தேவலை என்றாள்.

மகனிடம் சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறான்.
அவங்க எல்லாம் பேச மாட்டேங்களே.
சும்மா சொல்றியாம்மான்னு கேக்கறான்.:)

நமக்குத்தான் கண்காது மூக்கு வைக்கும்
பேர்வழின்னு பட்டம் கட்டி இருக்காங்களே:)

நிசத்தைச் சொன்னாக்கூட நம்ப மாட்டேங்கறாங்க.

வழக்கம்போல்(சதங்காவைச் சொல்லலைப்பா)

பாசல் வண்டியைப் பிடித்துப் பொட்டிகளை ஏற்றி வந்த காப்பியையும்
 ருசித்து, நலம் விசாரித்து முடிப்பதற்குள் வீடும் வந்துவிட்டது.

மழை உண்டாடாப்பான்னு கேட்டுக் கொண்டேன்.
 ஏன்ன்னா இவங்க ஊரில மணிக்கு மணி அறிவிப்பு இருக்கும்.
தூறல்னா தூறல். இடின்னா இடி. வெறும் மேக மூட்டம்னா அதே.

நம்ம கவலை நமக்கு:))

. அவனும் போன வாரம் உலகைக் கலக்கிற இடி இடிச்சதும்மா.
 இந்த வாரம் அவ்வளவு இல்லை. வருவதற்கு முன்னால் நீங்க கிளம்பிடுவீங்க என்றான்.

அவன் வீட்டில் ஏற்கனவே விருந்தாளிங்க வந்திருந்தார்கள்.
எல்லாருமா இட நெருக்கடியோடு இருக்க வேண்டாம்னு
 வேற ஒரு மலையடிவாரக் கிராமத்தில் ஒரு விடுதியில் சமைத்துச் சாப்பிடுகிற வசதியோடு

இடம் ரிசர்வ் செய்திருந்தான்.

அடுத்த நாள் அங்கே போகலாம்னு முடிவு.
அதுக்கு முன்னால் உனக்கு ஏதாவது வாங்கணும்னா டவுனுக்குப் போகலாம்னு
 சொன்னதும் ஆஹா அதுக்கென்ன போலாமேன்னு கிளம்பிட்டேன்.

மனசுக்குத்தான் வயசாகலை. உடம்பு அப்படியில்லையே:)

அதைத் தெரிஞ்சு கொண்டால் பிரச்சினையே வராது!!!

கொஞ்ச நேரம் பேத்தியோடு கொஞ்சிவிட்டு ,
ஒரு குட்டித் தூக்கம். ஒரு நல்ல காப்பி ,டவுனுக்குப் புறப்பட்டோம்.
சும்மா காலாற நடந்துவிட்டு வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்த ரைன் நதியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு,
பேருக்கு இரண்டு கம்பளி சாக்ஸ் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப எட்டாம் நம்பர் டிராமில் ஏறினோம்.
 வார நாளாக இருந்ததால் நிறைய கூட்டம் இல்லை.

இருந்தும் வெய்யில் அடிக்காத பக்கமாகப் பார்த்து நாங்கள் மூவரும் இடம்

பிடித்து உட்காரப் போன போது:)

டிராம் ப்ரேக் போட்டது.

ஒரே ஒரு குலுக்கல் அடுத்த நிமிடம் நான் எதிர் சிட்டில் இருந்த ஒரு (ஏதோ ஊர்காரர்) ஆளின் தலையைப் பிடித்துவிட்டேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அவர் அலறவில்லை. அப்படியே பிரமித்துப் போய் விட்டார்.

கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு நின்ற போது
 யதேச்சையாகத் திரும்பினால் மகன் முகம் சிவந்து போயிருப்பது தெரிந்தது.

ஒன்றும் யூகிக்க முடியாமல் நான் விழ இருந்த ஆளின் தலையைத் தட்டி வெரி வெரி சாரி
என்று இரண்டு மூன்று தரம் சொன்னாலும் ஒரே விரைப்பாப் பார்த்தார்.

அப்படியே பத்ரமாக உட்கார்ந்து மீண்டும்மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

ம்ஹூம் அவருக்கு கோபம் தணியவே இல்லை.

இதென்னடா கஷ்டகாலம் என்று அவர் பக்கம் இருந்த அம்மாவைப் பார்த்தால்
அதுக்கு மேல் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது அவள் முகத்தில்!!

அடுத்த நிறுத்தம் வருவதற்குள் இருவரும் எழுந்து அதே விரைப்போடு

மார்ச் செய்து இறங்கி விட்டார்கள்.

அவர்களுக்குப் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த இன்னோரு அம்மா,

என்னை இன்னும் விரோதமாகப் பார்த்தவுடன்
எங்கிருந்தோ வந்த சிரிப்பு என்னைப் பிடித்துக் கொண்டது.

என் மகனுக்கும் அது தொற்றிக்கொண்டது.

ஏம்மா விழப் பார்த்தால் அவர் தலையை ஏம்மா பிடிக்கறே.

தே டூ நாட் லைக் எனி ஒன் டச்சிங் தெம் என்றானே பார்க்கலாம்.

அதுக்கு மேல குழந்தையைத் தட்டற மாதிரி

அவர் தலையை வேற தட்டறே.

மோசம்பா இந்த அம்மா.

பெரிய வைத்தியம் செய்யற நினைப்பு.'' என்று முகத்தைப் பிடித்துக்கொண்டு

சிரிக்கிறான்.

தீர்ந்தது.கதை கந்தல்.நம்மளை இன்னிக்கு
 நல்ல போஸ்ட் மார்ட்டம் செய்யப் போறாங்க வீட்டுக்குப் போனதும்
 இன்னும் மருமகள்,பேத்தி, சம்பந்திகள் எல்லாம் விழுந்து விழுந்து
 சிரிக்கும் வரை இவங்களுக்கு அவல் கிடைத்ததே என்று
என் தலை எழுத்தை நொந்து கொண்டே இறங்கி வந்தேன்:))

இன்னும் பேத்தி ஒண்ணுதான் பாக்கி.
''பாட்டி என் கையைப் பிடிச்சுண்டு வான்னு '' சொல்லப் போகிறா. ஹூம்.........

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, April 20, 2013

வசுந்தரா---- சுதாமா (குசேலர்) மனைவியின் பெருந்தன்மை.

Add caption
Add caption
அவல்  கொள்ளும்  கொடைவள்ளல்

 தொலைக்காட்சியில் ஸ்ரீகிருஷ்ணா  என்று ஒரு இந்தி  தொடர்  மாலை 4 மணிக்கு வருகிறது.

தெரிந்த பிடித்த கதை.
கிருஷ்ண  மந்திரம் ஒன்றே தெரிந்த குசேலனின் கதை.
ஒரு சுயமரியாதையை உயிருக்கும் மேலாக மதிக்கும் நல்ல மனிதனர். அவர் குடும்பம் நம்பவொண்ணா வறுமையில் வாடுகிறது. அவர் மனைவி வசுந்தரா  கண்வன் மேல் வைத்திருக்கும் மரியாதைக்கு அளவில்லை.
அந்தக் கால பிராமணதர்மப்படி
குசேலசுதாமா ஒவ்வொரு நாளும் ஐந்து வீடுகளில்
பிக்ஷை எடுத்து  அதையே குழந்தைகளுக்கும்
மனைவிக்கும் பகிர்ந்து    கொடுக்கும் வழக்கம் தினசரி  நடக்கும்.

அதையே நல்ல  உணவாக சமைத்துப் பகிர்ந்து
கொடுப்பார் வசுந்தரா.சுசீலை என்று பெயர்க்காரணமும் அவளுக்கு உண்டு..
அவ்வளவு சீலமான குணத்தைக் கொண்டவள்.

கணவனின் பக்தியையும்  சம்சார பந்தத்தில்  அவ்வளவு 
ஈடுபாடு காண்பிக்காததையும்  அவள் மதித்தாலும் குழந்தைகள் பசியில் வாடுவதைப் பொறுக்க முடியவில்லை.

சுதாமவின் தொழன் ஒருவர் அந்த ஊர் அரசனைப் புகழ்ந்துபாடிப்
பிழைக்கிறார்.
அவர் சுதாமிவின் வறுமையைப் போக்க ஏண்ணி அரசனிடம்
அழைத்துப் போக, அரசவையில் ஸ்ரீகிருஷ்ண  துதி பாடுகிறார் சுதாமா.
மது போதையில் இருந்த அரசன் அவரை விரட்டி அடிக்கிறான்.
உள்ளமும்   உடலும் நொந்து வீட்டுக்கு வந்து அரற்றும் கணவனைத் தேற்றுகிறாள்.

அடுத்தநாள்  கணவனிடம் இதமாக எடுத்துச் சொல்லுகிறாள்
''நீங்கள்  உங்கள் நண்பர் கிருஷ்ணனைப் பார்த்துவரலாமே.
அவர் உங்களைப் பார்த்ததுமே புரிந்து  கொள்வார்''
என்று சுதாமவைப் பலவழியில் இத உபதேசம் செய்து பக்கத்து விட்டில்  கடனாக  வாங்கின  அவலைச் சுத்தம் செய்து
அவர் கையில் கொடுக்கிறார்.
பிறகு நடந்தது அனைவருக்கும்   தெரிந்ததே.

நடுவில் நடப்பதைத்தான்  இன்று  பதிவிட வந்தேன்.
குசேலரும்  கிருஷ்ணரைப் பார்த்து
மகிழ்ந்து
கண்ணீர்விட்டு நெகிழ்ந்து அவன் உபசாரத்தில்திளைது அவலைக் கொடுக்கிறார்.
ஸ்ரீகிருஷ்ணனும் அதை உண்டபிறகு,நண்பனின் கால்களைப் பிடித்தவாறு

அவரது குடும்பத்தைப் பற்றியும் விசாரிக்கிறார்.

நட்பின் பரிசாகச் சுதாமவுக்குத் தான் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று கேகும்போது சுதாம  மறுக்கிறார்.


தன் குடும்பம் களிப்புடனும்,
நிம்மதியாலவும்  சங்கடமில்லாமல் இருப்பதாகவும் மனதாரச் சொல்கிறார்.
ஸ்ரீகிருஷ்ணனுக்கு உண்மை நிலை தெரியும்.

பக்கத்தில் லக்ஷ்மி தேவியான ருக்மணியும்


குசேலசுதாமாவுக்கு  ஏதாவது செய்யவேண்டும்  என்று தவிக்கிறாள்.

கண்ணன் அவளைச் சமாதானப் படுத்தி,  குசேலரின் வாய்வழியாக வந்த வார்த்தைகளைத் தான் மெய்ப்பிப்பதாகச் சொல்லி
தேவசிற்பி விஸ்வகர்மாவை  வரவழைக்கிறார்.
அவரிடம்
சுதாமாவின் விவரங்களைச் சொல்லி
உடனே வ்ரிந்தாபுரிக்குச் சென்று  ஒரு மாளிகையை அமைக்கும்படி 
கேட்டுக் கொள்கிறார்.
அவரும் உடனே வசுந்தரா வீட்டில் பிரத்தியட்சமாகிறார். கிருஷ்ணரின் கட்டளையை நிறைவேற்றத் தான்    வந்திருப்பதாகச் சொல்கிறார்.

பிரமிப்புடன் கேட்ட வசுந்தரா,
தான் அந்த உதவியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகச் சொல்கிறாள்.
விஸ்வகர்மா சுற்றும்  முற்றும் பார்த்து விசனப்படுகிறார்.
அவரிடம் வசுந்தரா தெளிவாகத் தன் நிலையை விளக்குகிறாள்.

இந்த இருபது வருடங்களாக   இந்தக் கிராமத்தில் உள்ள  அத்தனை மக்களும் எங்கள் ஒரு வேளைபோஜனத்துக்காவது வழிவகுத்திருக்கிறார்கள்.

நாங்கள் அவர்களுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம்.

இப்பொழுது உங்கள் கருணையால் எங்கள் வீடு மட்டும் கிருஷ்ணரின் த்வாரகா போலக்   காட்சி  அளித்தால்
அது  தர்மமாகாது என்று சொல்லி நிறுத்துகிறாள்.

விஸ்வகர்மா,   வறுமையிலும் ஒளிவிடும் அவள் கருணையையும் நேர்மையையும் கண்டு வியந்து ஸ்ரீகிருஷ்ணரிடம் விண்ணப்பிக்க

அவரும் வசுந்தராவிம்  தயாள உள்ளத்தை மெச்சி அவள் விருப்பபடியே பிருந்தாபுரி வீடுகள் அத்தனையும் மாளிகையாக வேண்டும் என்று கட்டளை இடுகிறார்.

வெளியே   வந்து அந்த ஊர்மக்கள்
அனைவரிடமும் வசுந்தராவின் பெருமையைச் சொல்கிறார்  விஸ்வகர்மா!
அவர் பேசின சில நொடிகளில்

அந்த ஊரே த்வாரகா புரி போல  ஒளிர்கிறது.
மக்களின்  இன்பத்துக்கு அளவில்லை.
வசுந்தராவின் கருணையை வாய்விட்டு மெச்சுகிறார்கள்.

ருக்மணி தேவி தன்பங்குக்கு  வீடுகளில் செல்வம் செழிக்கச் செய்கிறாள்.
இந்தக் காட்சி நேற்று நான் பார்த்தது.
இனி சுதாமா வந்து வியக்க வேண்டும். அதற்காகக் காத்திருக்கிறேன்.:)

அன்பர்கள் பலருக்கு இந்தக் கதை தெரிந்திருக்கலாம்
இருந்தும் நான் அறிந்தது இப்போதுதான்.
அதை உங்களுடன்  பகிர்ந்து கொண்டேன்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.





 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, April 19, 2013

ஸ்ரீராமன் பிறந்தான்

எத்தனை ராமனடி!
பானகம்,நீர்மோர்,வடபருப்பு
எங்க வூட்டு ராமரும் சீதையும்
கல்யாணராமன் மதுராந்தகம்
வடுவூர்  ராமன்
ஸ்ரீராமபட்டாபிஷேகம்
பத்ராசல   சீதாராமா லக்ஷ்மண    சரணம்


எத்தனை எத்தனை பிரபாவம்

ஸ்ரீராமா  உன் நாமம் சொன்னாலே போதும்
நினைத்த மாத்திரத்தில்   அத்தனை பாபங்களும் தீரும்.
உன்னை    நினைக்க மனம் கொடு..

அவன் தோன்றியதே அதிசயம்.
கடவுள் மனிதனாகப் பிறந்து மனிதனாகவே வாழ்ந்து மனிதனாக
வருத்தப்பட்டு,மனிதனாகப் பிறர் சொல்லுக்குப் பயந்து,
மனிதனாக  மகிழ்ந்து

சங்கடம் வந்தபோது  மனைவியை  மீட்க வீராவேசம் கொண்டு
வெற்றி பெற்ற ராமனாக அயோத்தி வந்து சேர்ந்தான்.

அவன் சாதுராமன், தோழ ராமன்,
சகோதர ராமன் ,  சீதாவின் இனிய மணாளராமன்,
பாதுகையைக் கொடுத்து பரதனை ரட்சித்த ராமன்.
சபரிக்கும் ,ஜடாயுவுக்கும் மோக்ஷம் கொடுத்தராமன்,
அனுமனுக்கு தூது   சென்ற பெருமையைக் கொடுத்த ராமன்
தசரத ராமன,கௌசல்யா  ராமன்.

ராமா இன்று நீ  வீடு தோறும் பிறந்து எங்களை  வாழ்விக்க வருகிறாய்.

என்றும் கைவிடாத உன் பாதங்களை நாங்கள் என்றும் மறக்காமல் இருக்க நீயே அருள்.

ஜயஜயராம் ஜய சீதாராம்.
ஜய ஆஞ்சனேய ராம்


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, April 15, 2013

ஒரு பெண் குழந்தை பிறக்கிறது

கண்ணே    என் கண்மணியே

 சித்ரா பௌர்ணமி!
ஜயாம்மா  வாசலுக்கு வந்து  வானத்தில்நிலாவைத் தேடினாள்.

ஆஹா!அதோ .எத்தனை அழகு.மஞ்சள் நிறத்தில்  எவ்வளவு பக்கத்தில் தெரிகிறது.
ராமேஸ்வரத்தில் அவரும் பார்த்திருப்பாரோ. இராமநாத ஸ்வாமி கோவிலில் விசேஷ பூஜைகள் இருக்குமே.

ஆனால்  இவருக்குத் தபால் லெட்ஜர்களிலிருந்து  தலையைத் தூக்கி வெளியே
பார்க்க நேரம் ஏது?
சின்னவன்   பரிட்சையெல்லாம் எப்படி எழுதினானோ.
தினம் தபால் எழுதாமல் இருக்க முடியவில்லை அவனுக்கு.

இவர் தானாகட்டும். வெள்ளெழுத்துக் கண்ணாடியோட போராடிண்டு
 முத்து முத்தாப் பெண்ணுக்கு எழுதற  அதிசயம்!!!ம்ம்ம்ம்.

இந்தப் பெண்ணும் விடுவதாயில்ல. அப்பா இன்னிக்கு லெட்டர் போடலயாமானு
கேட்கிறது.  20 வயசுல இரண்டாவது குழந்தையும் பொறக்கிற  நாளும் வந்தாச்சு. இன்னும் அப்பாச் செல்லம்  விட மனசில்ல.
 நல்ல அப்ப நல்ல குழந்தைகள்.
இப்படி ஓடாத் தேஞ்சு மாய்ஞ்சு  மாஞ்சு உழைக்கிறார்.
குழம்பு  செய்தால் எண்ணேயும் காரமும் தான் இருக்கு.

சின்னவன் எழுதி இருந்தானே அப்பாவுக்கு வயிற்றுவலி வந்து கஷ்டப்பட்டார்  என்று.
அந்த ஊரில டாக்டர் என்ன தரப் போகிறார் /
சீக்கிரம் குழந்தை பிறந்து  மே மாசம்   அழைத்துப் போக
மாப்பிள்ளை அனுமதி தரணும்.
காரைக்குடிக்கு வேற மாற்றல் வந்துடுத்தாமே. நான் இல்லாமல் இரண்டு பேரும்
எப்படி  எல்லாத்தையும் ஏறக் கட்டுவா.
நானும் வந்து பத்துநாளாச்சு. இன்னிக்கொ நாளைக்கோன்னு
இந்தப் பொண்ணு முனகிண்டு இருக்கு.
நல்லபடியப் பெத்துப் பிழைக்கட்டும்.

அதென்னவோ ப்ரீச்  பேபின்னாளே அந்த  டாக்டர்.
ஏடாகூடமா ஆகாம  திருப்பதி பெருமாள் தான் பார்த்துக்கணும்.

மாப்பிள்ளையோ இன்னும் வீட்டுக்கே வரவில்லை .அப்படி என்ன  வொர்க்ஷாப்போ.
எப்ப பார்த்தாலும்  வண்டி டெலிவரி. கஸ்டமர் விசிட்னு ஜீப்ல பறக்கிறார்.

எனக்கோ நேர்ல நின்னு பேசக் கூச்சமா இருக்கு. இந்தப் பெருசு இருக்கே.
அம்மா புதுப் பாப்பா கொண்டு வருவாடா.
உனக்கு ஜாலிதான் என்றால் பாப்பா வேணாம் ங்கறான்:(
சவலை.

ரெண்டையும் எப்படிச் சமாளிக்கப் போறாளோ.

'அம்மா  உள்ள வரயா.ஏதோசங்கடமா இருக்கு'' உள்ளே இருந்து
பெண்ணின் குரல் கேட்க,
உடனே  விரைந்தார் ஜயாம்மா.
என்ன பண்றதுமா.
சாப்பிட்ட வடை ஒத்துக்கலையா. கஷாயம் வச்சுக் கொடுக்கட்டுமா.
இல்லமா இது வயித்துவலி இல்லை.அந்த வலி.....
ஓ!எப்படிச் சொல்கிறே. இரு எதுக்கும்  சீராக் கஷாயம் கொடுக்கிறேன். அவசரப் பட்டுண்டு
ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டாம்.
டாக்டர் கோவிச்சுக்கப்  போகிறாள். உங்க இவரையும் காணோமே.

நல்ல வேளை இந்த அம்முப் பொண்ணு பெரியவனைத் தூக்க்கிக்கும்.
எத்தனை நல்ல குழந்தைடி இந்தப் பொண்ணூ. அக்கா அக்கான்னு உன் மேல எத்தனை பாசமா இருக்கு.
காலில் ஊனம் இருந்தாலும் எத்தனை  சம்த்து. மேட்டூர் ஜலத்தை எவ்வளவு கொண்டு வந்து கொட்டறது பாரு.
உங்க மாமியாருக்குத் தந்தி கொடுக்கச் சொல்லணும்.
அவர் வந்துட்டா எனக்கு நிம்மதி.

அம்மா நிற்காமல் பேசுவது இதுவே முதல் தடவை.பாவம். இப்படிக்கூட ஒரு அப்ராணி இருக்குமா.
''கவலைப் படாதே அம்மா.  நான் தைரியமா  இருப்பேன்.
மாப்பிள்ளை வராவிட்டால் பரவாயில்லை' நானும் நீயும் சாரதாவும் நடந்து  ,ஆஸ்பத்திரிக்குப் போயிடலாம்.
ஒரு மணிநேரத்தில் இது நிஜவலியான்னு தெரியும்.''

பாபு,இங்க வா செல்லம்.
மாத்தேன்'
சுருட்டை முடியும் வெள்ளைவெளேர்னு பால் வெள்ளை முகமும்,
பெரியகண்களும்,கண்ணை நிறைக்கும் நீண்ட இமைகளும்
என்னை வெறித்தன.  அம்மா  தூக்கு என்று கைகள் விரிந்தன. என் மனம் வலித்தது.
ஒரு கணம் என்னைவிட்டு  அகல மாட்டான். 16  மாதம் தான் ஆகிறது.
அதற்குள் இன்னோரு ஜீவனைத் தன் வாழ்வில் வரவேற்க வேண்டிய சுமை அவனுக்கு.
அப்பா  இருந்திருந்தால் அவரோடு ஒட்டிக் கொண்டுவிடுவான். அவரோ வரக் காணோம்.

கஷாயத்துக்கு   மசியவில்லை  வலி .மணி 11 ஆகிவிட்டது.
இனிமேல் கிளம்ப வேண்டியதுதான். இருட்டில் சேலத்தில் அப்போது தெருவிளக்குகள்
அவ்வளவு  வெளிச்சம்  கொடுக்காது.
எங்கள்  காம்பவுண்டைத் தாண்டுவதே பெரிய  வேலை.
ஒரு 40 வயசு,ஒரு 20 வயசு,
ஒரு பனிரண்டுவயது,,அதன் தோள்மேல் எங்க பாபு
வரிசையாக மெதுவாகத் தாண்டிப் போனோம்.

நல்லவேளையாக ஆஸ்பத்திரியின் விளக்குகள் அணைக்கப் படவில்லை.

அம்மாவுக்கு வந்த தைரியத்தைத்தான் சொல்லணும்.
  கதைவைத் தட்டித் திறக்கச் சொன்னார். கூர்க்கா வந்துட்டு
எங்களைப் பார்த்தவுடன் கேட்டை திறந்து உள்ள வாங்கம்மா. டாக்டரமா இல்ல.
ஆயாக்களைக் கூப்பிடறேன்.
என்றவாறு  உள்ளே விரைந்தான். மெள்ள மெள்ளப் படிக்கட்டுகளில் ஏறும்போது
வெள்ளைப் புடவை அணிந்த ஆயா வந்தார்.
என்னம்மா  வலி சரியா வந்தாச்சா..இல்ல முன்னாடியே வந்துட்டீங்களா.

என் அம்மாவைப் பார்க்கணும்.!!  வாய்திறக்காத   அம்மா க் கோபித்து அப்போதுதான் பார்த்தேன்
 உங்க பேரு தெரியாது
 இரண்டு மணி நேரம்
 வலி அனுபவித்த பிறகுதான் இங்க வந்திருக்கோம்.
இன்னாருடைய மனைவி .
சீக்கிரம் கவனிங்க.''
உடனே நாற்காலி வந்தது.
அப்பாடா என்று உட்கார்ந்த என்னை உள்ளே தூக்கிச் சென்றனர்.

போன  அடுத்த நிமிடம் கால்களில் சில்லென்று உணார்ச்சி.
அம்மா    அடடா  உடனெ அறைக்குச் சென்றுவிடலாம் என்று விரைந்தார்.
டாக்டருக்குஃபோன் செய்தீர்களா.
பனிக்குடம் உடைந்தாச்சு.
குழந்தை வர நேரம் வந்தாச்சு என்றதும். அவரும்  மாடியில் இருக்கும்
டாக்டரம்மாவை அழைக்க விரைந்தார். இன்னாத்துக்குத்தான் இந்தப் பிள்ளைங்கள்ளாம்
ராத்திரிதான் வரணும்னு அடம்  பிடிக்குதுங்களோ!!!!!

இந்தம்மா  பிள்ளையெல்லாம் சீக்கிரம் வந்துடாது. பொறுமையா  இரு.''

இத்தனைக்கும் நான் முனகக் கூட இல்லை. அவ்வளவு பயம்.
அம்மா என் கையைப் பிடித்தவாறு இருந்தார்.
டாக்டர் அழகா மல்லிப்பூ வைத்துக் கொண்டு சிரித்தபடி வந்தார்.

பரிசோதித்து, வயிற்றைக் குடலைச் சுத்தம் செய்யக் கட்டளையிட்டு ஏதோ ஒரு ஊசி போட்டார்.
வலிகுறையும்மா. சீக்கிறம் குழந்தை பிறந்துவிடும்.
நாங்கள்  மருத்துவமனையில் நுழைந்த நேரம் 12.

குழந்தை  வெளிவந்த  நேரம் மூன்று மணி.
அதற்குள் வீட்டு எஜமானர்  பரபரப்பாக வந்துவிட்டார்.
அம்மா ஹார்லிக்ஸைக் கரைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

நான் இவர் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
அம்மா மட்டும் அவரிடம் பாபுவை வீட்டுக்கு அழைத்துப் போய்ப் பால் கொடுத்துத் தூங்கவைக்கும்படிச்
சொன்ன பிறகே நான் கண்ணைத்திறந்து பார்த்தேன்:)

சரி இந்தக் கதை இப்போது எதற்கு.
அந்தப் பெண்ணும் வளர்ந்து தானும் ரெண்டு பசங்களைப் பெற்றுக் கொண்டு
என்னையும்  அவ்வப்போது அதட்டிக் கொண்டு அறிவுரை சொல்லித் தாயாக வளர்த்து வருகிறாள்.

14 ஆம் தேதி பிறந்தநாள்  காணும்(கண்டுவிட்ட) என் இனிய மகள் எல்லாவளமும் பெற இறைவன் அருள்வான்.
வாழ்கவளமுடன்.
பின் குறிப்பு

பிறகு ஒரு வார காலத்துக்கு தினம் ஆர்ச்சி காமிக்ஸும், எம் அண்ட் பூன்
ரொமான்ஸ் கதைகளும் வாங்கி  கொடுத்து ஐய்யா தாஜா செய்தார்!!!

நிகழ்ச்சி  நடந்தது 1968.









 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, April 14, 2013

சித்திரைப் புத்தாண்டு விஜய வருடம் பிறந்துவிட்டது



அனைவருக்கும் இனிய   தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
இனி எல்லாம் விஜயமே

இனியவையே  நடக்க    இறைவன் அருளவேண்டும்.
காதில் விழும் செய்திகள் நல்லவையாக இருக்கவேண்டும்.

அன்புள்ளங்கள்   கொண்ட   அனைவருக்கும்    ஆரோக்கியம்,
வேண்டும் அளவு
பொருள்
குடும்பத்தாருடன்     ஆனந்தம்

எல்லாம் பெருக  இனிய வாழ்க்கையை இந்தப் புத்தாண்டு

வழங்கவேண்டும்.
இறைவனிடமும் இதையே     வேண்டுகிறேன்.







எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, April 13, 2013

வெயிலோ வெயில் படங்கள் ஏப்ரில் படப் போட்டி பிட் குழுமம்

ஈச்ச மரம்  கூர்முனையுடன்
மாம்பூவே
கள்ளியின் நிழல்
முருங்கை இல்லை
மாங்காய்  மாங்காய்
உச்சிவெய்யில்
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, April 12, 2013

தொல்லை பேசியாக மாறும் பெண்மணிக்கு ஒரு யோசனை.

நான்  மியூட்லயே  தொலைக்காட்சி பார்ப்பேன்
அம்மா  போன் பண்ணா   நேரம்  இருக்கணுமே!
நீயா நானா
காதலன்   அழைக்கவில்லை
 


ஹலோ  யார் பேசறது.
நீங்க யாருக்குப் போன் செய்தீர்களோ அவர்தான்.

அது  தலமைச் செயலகமா. அம்மா  மேடம் இருக்காங்களா?

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இல்லீங்க இது வீடு..
அம்மா    கிட்டப் பேசணும்.
அம்மா நீல்கிரீஸ் போயிருக்காங்க.

அதுக்குள்ளயா
பின்ன வீட்டுச் சமாசாரமெல்லாம்  வாங்கணும் இல்லையா.
நீங்க  யாருங்க.
நான் அவங்க வீட்டுக்காரர்.

ஸாரிங்க ராங்   நம்பர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இது எங்க வீட்டுக்கு வர  ராங்  நம்பர்களில்  ஒண்ணு.

இது பரவாயில்லை.என் மனதுக்கு இனிய தோழி  ஒருத்தி.
அவள் எஸ்டி டியில்    மருமகள்,மகள்,சம்பந்தி எல்லாம் பேச ஆரம்பித்து,
நடுவில் அழுது,
என்னை  ஆறுதல்   சொல்வேனோ  என்று எதிர்பார்ப்பாள்.

எனக்கு அந்த வாரத்தில் அது முதல் அழைப்பாக இருந்தால்
ஒத்து ஊதுவேன்.
இரண்டாம்   அழைப்பில்    மௌனம். மூன்றாம் அழைப்பில்
அவளுக்கு  எதிராகப் பேசி அறிவுரைகள் சொன்னால்
அவள் தொலைபேசியை வைத்துவிடுவாள்.

இரண்டு வாரங்கள்   சத்தமே இருக்காது.

இதற்கு நடுவில்    ஸ்கைப்பில்   நான் தொந்தரவு கொடுக்கும் நபர் ஒருவர் உண்டு.
ஒருவர் நல்ல தோழி.,பெயர் வேண்டாம்:)
அவர் இதைப் பத்திப் பதிவே போட்டு இருக்கிறார்:)


அவர் மட்டும் இருந்தால் பரவாயில்லையே.
வசமாக   மாட்டிக் கொள்பவர் என் மகளே.

நேரம்  வித்தியாசமாக இருப்பதால் அநேகமாகக் கண்விழித்ததும் (காஃபிக்குப் பிறகு)  அழைக்கும் போது,
அவளுடைய  பெரிய பையன் வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருப்பான்.
சாயுங்காளம் ஏழரைக்கு.
சின்னவன் விளையாட்டு அலுப்புப் போக  குளித்துவிட்டு ச்  சூடாக சாப்பிட அம்மா ஏதாவது கொடுப்பாள் என்று மேஜையில் தாளம் போட்டுக் கொண்டிருப்பான்.

மாப்பிள்ளையோ டாக்ஸ் பேப்பரில்    தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பார்.

மகள் அடுப்பில் பாத்திரத்தில்  புலவ் செய்து கொண்டே  ,டிஷ்வாஷரில் பாத்திரங்களை அடுக்கிக் கொண்டிருப்பாள்.

பொறுமையாக என் கேள்விகளுக்குப் பதில் சொல்லுவாள்.
''அம்மா  நான் இன்னும் சாப்பிடவில்லை.
கொஞ்ச நேரம் கழித்து நானே செய்கிறேன்'' என்பாள்.:(

அந்தக் கொஞ்ச நேரம்  நீண்டு அவளுடைய 10 மணிக்குத் தொலைபேசி
குட்நைட்  சொல்லிவிட்டுத் தூங்கப் போவாள்.

இந்த ஜாலமெல்லாம் என் மகன்களிடம் செய்ய மாட்டேன்.
இந்த மாதிரி அந்த வீட்டில நடந்தது என்று ஆரம்பித்தால்
இரண்டு மகன்களுமே   போனப் போறதுமா.  டூ நாட் மைண்ட் தெம்.
யூ  ஆர்  சச்  அ க்ரேட் லேடி.
விட்டுடும்மா  என்று   பேச்சின் ட்ராக்கை மாற்றிவிடுவார்கள்:)

இன்றிலிருந்து  முடிவெடுத்துவிட்டேன்.

தொலைபேசியிலோ ஸ்கைப்பிலோ  மூக்கு  உறிஞ்சுவதில்லை என்று.

ஒரு ப்ராப்பர் அம்மாவாக    கௌரவமாக நடந்து கொள்வது என்று,
9  கழுதை வயசுக்கு   இது கூடத் தெரிய வேண்டாமா.!!!!!

ஒரு விஷயம் தெரியுமா. நான் பேசிப் பேசி எங்கள் சிங்கம்

காது  கேட்பது குறைந்து விட்டதுப்பா.:)







எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...