Friday, September 18, 2026

ஶ்ரீனிவாசா கோவிந்தா ஶ்ரீ வேங்கடேசா கோவிந்தா.

வல்லிசிம்ஹன்



எல்லோரும் வளமாக நலமாக வாழ வேண்டும்.

பெருமாளுக்கு நாராயணன், வெங்கடேஷ்வரா, பாலாஜி, ஸ்ரீஹரி என எத்தனையோ திருநாமங்கள் இருந்தாலும் அனைவரும் அதிகமாக சொல்லி அழைக்கும் திருநாமம் கோவிந்தா என்பது தான். ஆன்மீக நூல்களும் கோவிந்த நாமமே அனைத்து நாமங்களை விடவும் உயர்வான நாமம், புண்ணியம் தரும் நாமம் என சொல்கின்றன. 
கோவிந்தா என்றால் என்ன அர்த்தம், இதன் சிறப்பு என்ன, இதை சொல்லுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது தெரியாமலேயே நம்மில் பலரும் கோவிந்த நாமத்தை சொல்லுவது உண்டு. ஆனால் இதன் அர்த்தம் புரிந்து, பக்தியுடன் சொன்னால் எத்தனை சிறப்புகள் நமக்கு கிடைக்கும்?

புரட்டாசி மாதத்தின் முதல் நாள் என்பது வைணவ பக்தர்களுக்கு மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளை நினைத்து, "கோவிந்தா! கோவிந்தா!" என்று பக்தியுடன் அழைப்பது நம் பாரம்பரியத்தில் ஒரு சிறப்பான வழிபாடாக உள்ளது. இந்த புனித நாளை இன்னும் அழகாக்குவது ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் சுப்ரபாதம்.


"அத்ர்யாதி ஸப்தரிஷய: ஸமுபாஸ்ய ஸந்த்யாம்..." என்ற இந்தப் பாடல், பக்தியின் ஆழமான அர்த்தத்தை நமக்குக் கற்றுத் தருகிறது. ஐதீக மரபின்படி, அத்ரி முனிவரை முதலாகக் கொண்ட ஏழு மகரிஷிகளும் தங்கள் காலைப் பிரார்த்தனையை நிறைவு செய்து, ஆகாய கங்கையிலிருந்து மனம் கவரும் மலர்களை எடுத்துக் கொண்டு, சேஷாத்ரி மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் திருவடிகளை வழிபட வருகிறார்கள் என்பதே இந்த வரியின் அர்த்தம்.
  



இங்கு ஒரு பெரிய ஆன்மீக உண்மை மறைந்திருக்கிறது. ரிஷிகள் மலர்களை மட்டும் கொண்டு வரவில்லை. அவர்கள் கொண்டு வந்தது தூய மனம், பணிவு, சரணாகதி. அதனால்தான் இந்த சுப்ரபாதம், "பெருமாளே! உமக்கு இந்தப் பொழுது இனிய மங்களப் பொழுதாக அமையட்டும்" என்று பக்தியுடன் வணங்குகிறது.

புரட்டாசி நமக்குச் சொல்லும் செய்தி :
இந்த மாதத்தில் நாம் பெருமாளிடம் எண்ணற்ற வேண்டுதல்களை வைக்கலாம். ஆனால் அதைவிட உயர்ந்த பிரார்த்தனை ஒன்று இருக்கிறது.

"பெருமாளே... என் மனதை உமது திருவடிகளில் நிலைத்திருக்க அருள்வாயாக!"

என்ற வேண்டுதலே உண்மையான சரணாகதி என்று பக்தி மரபு எடுத்துரைக்கிறது. எத்தனை கவலைகள் வாழ்க்கையில் இருந்தாலும், எத்தனை எண்ணங்கள் மனதைச் சுற்றியிருந்தாலும் ஒரு கணம் கண்களை மூடி, ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் திருவடிகளை நினைத்து, "

கோவிந்தா... என் மனம் உன் திருவடிகளில் நிலைத்திருக்கட்டும்!" என்று மனமாரச் சொல்லுங்கள். புரட்டாசியின் முதல் நாளை பக்தியுடனும் நம்பிக்கையுடனும் தொடங்குவோம்.

ஏன் கோவிந்த நாமத்திற்கு இத்தனை சிறப்பு?
பெருமாளை அழைப்பதற்கு எத்தனையோ திருநாமங்கள் இருந்தாலும், கோவிந்தா என்ற நாமமே அவை அனைத்தையும் விட மேலானதாக சொல்லப்படுகிறது.இந்த நாமத்திற்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு? ஏன் அனைவரும் பெருமாளை "கோவிந்தா" என்று நாமத்தையே முதன்மையாக கொண்டு அழைக்கிறார்கள்? என்ற காரணம் பலருக்கும் தெரியாது.

கோவிந்தா என்னும் நாமம் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலும், ஆன்மீக பலனும் நிறைந்தது என்பதால் மிகச் சிறப்பானதாக சொல்லப்படுகிறது. இந்திரன் பகவான் கிருஷ்ணருக்குப் பட்டாபிஷேகம் செய்து 'கோவிந்தா' என்று அழைத்ததாக பாகவதம் மற்றும் ஹரிவம்சம் கூறுகிறது. 'கோ' என்றால் பசு, பூமி மற்றும் வாக்கு (வேதம்) என்று பொருள். இத்தகைய அனைத்தையும் காத்து அருள்பவர் கோவிந்தன் ஆவார். கலியுகத்தில் எளிமையாகக் கூறி இறைவனின் அருள் பெற உகந்த நாமம் இதுவென்று ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. ஆதி சங்கரர் தனது 'பஜ கோவிந்தம்' பாடலிலும், ஆண்டாள் 'குறையொன்றும் இல்லாத கோவிந்தா' என்றும் இந்த நாமத்தைப் போற்றியுள்ளார்.

கோவிந்தன் என்ற பெயர் இந்து சமயத் தோத்திரமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 187-வது, 539-வது பெயர்களாக வருகின்ற பெயர். "கோவிந்தா" என்பதற்கு "பசுக்களைப் பாதுகாப்பவர்" அல்லது "புலன்களுக்கு இன்பம் அளிப்பவர்" என்று பலபொருள்கள் உண்டு. "கோ", "இந்தா" எனப் பிரித்துப் பார்த்தால் "கோ" என்றால் பசு, "இந்தா" என்றால் வாங்கிக்கொள் என்றும் பொருள் கொள்ளலாம். கோவர்த்தன மலையைத் தூக்கி மக்களையும் பசுக்களையும் காப்பாற்றிய கண்ணனுக்கு தேவேந்திரன் சூட்டிய பெயர் இது.

கோவிந்தா என்றால் போனால் திரும்ப வராது என்னும் அர்த்தத்தையும் கொண்டது. அதாவது பூவுலகில் மனிதப்பிறவியாய் அவதரித்து அவதிப்படுபவன் இத்திருநாமத்தை விடாது பற்றிக் கொண்டால் மீண்டும் இப்பூமியில் பிறப்பெடுக்க மாட்டான் என்பதையே குறிக்கும். கோவிந்த நாமம் சொல்ல சொல்ல போன உயிர் மீண்டும் திரும்பாது என்பதே இதன் பொருள். அதாவது மறுபிறவியில்லாத நிலை என்று சொல்லலாம்.

8 comments:

ஸ்ரீராம். said...

கோவிந்தா கோவிந்தா என்றழைத்து அவன் பாதாரவிந்தங்களில் பணிவோம். ஆதாரமே அவன்தானே..

ஸ்ரீராம். said...

புரட்டாசி ஒன்று என்று நீங்கள் பதிவிட்டாலும் அது இன்னும் பொருத்தமாய் புரட்டாசி சனிக்கிழமை அன்று நான் பார்க்கிறேன்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. கோவிந்தா நாமத்தைப் பற்றிய அருமையான விளக்கம். இறைவனை நம் அருகாமையில் உணர எப்படி அழைத்தாலும் வருவான். ஆனால் இந்த கோவிந்தா எனும் நாமம் அழைக்கும் நம் நாவுக்கும், மனதிற்கும் எத்தனை சுகமாக உள்ளது.

இவ்வுலகத்தில் எவ்விதத்திலும் கட்டில்லாமல் மந்தையாய் அலையும் நம் மனதை அவன் அன்பினால், அருளினால் கட்டுப்படுத்தி நல்வழியோடு, ஒருமனதாக்கி அவன் அடிச்சேர அழைத்துச் செல்லுபவன் அந்த கோவிந்தன். நல்ல பதிவு.

கோவிந்தா, கோவிந்தா, கோபாலா கோபாலா என நாளும் அவனைப் போற்றி கொண்டாடுவோம் .🙏 பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

நெல்லைத் தமிழன் said...

கோவிந்தா என்பதை ஏக வசனம் என்பர். அதாவது பன்மையில்லாமல் ஒருமையில் விளிப்பது

நம்மைக் கூப்பிட்டானே என அவன் மகிழ்கிறானே அன்றி ஒருமையில் கூப்பிட்டானே என எண்ணுவதில்லை

அவ்வளவு சௌலப்யன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம் எப்போதும்.நலமுடன் இருங்கள் இனிய புரட்டாசி சனிக்கிழமைக்கான பிரார்த்தனைகள்..

வல்லிசிம்ஹன் said...

:))))) மாயபாஜாரில் கடோத்கஜ வத்சலா சொல்லும் வார்த்தை உனக்கு இரண்டென்றால் எனக்கும் இரண்டு தான். இரண்டு கண்டங்களில் இரவும் பகலும் கண்டுகொள்ளாமல் நாம் வாழ்கிறோம்:)நன்றி ஶ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

''இவ்வுலகத்தில் எவ்விதத்திலும் கட்டில்லாமல் மந்தையாய் அலையும் நம் மனதை அவன் அன்பினால், அருளினால் கட்டுப்படுத்தி நல்வழியோடு, ஒருமனதாக்கி அவன் அடிச்சேர அழைத்துச் செல்லுபவன் அந்த கோவிந்தன். நல்ல பதிவு.''
அன்பின் சகோதரி கமலா
என்றும் நலமுடன் வாழ பிரார்த்தனைகள்.

உங்கள் சொற்கள் வலிமை கூட்டுபவை. ஆழ்ந்த அர்த்தமுள்ளவை.
அன்பானவை. ஆநிரை மேய்த்து அன்பர்களைக் காத்தவன், நம்மையும்
அருகில் இருந்து காப்பான்.
இளவயதில் திருமலை சென்று அவனை வழிபட்ட நாட்களை நன்றியுடன்
நினைக்கிறேன்.

உங்க்களுக்கும் குடும்பத்துக்கும் என்னாளும் அவன் அருள் நிலைக்கப்
பிரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பின் முரளி.
கோவிந்தா என்று அழைத்ததால் தான் பாஞ்சாலியின் மானம் காத்தான். பரிபூரண சரணாகதி யை அங்கீகாரம் செய்யும் போது ஒருமை பன்மை என்று பார்க்க அவனுக்கு நேரமேது? அவன் பூரண சௌலப்யன் தான். நன்றி மா.

ஶ்ரீனிவாசா கோவிந்தா ஶ்ரீ வேங்கடேசா கோவிந்தா.

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக நலமாக வாழ வேண்டும். பெருமாளுக்கு நாராயணன், வெங்கடேஷ்வரா, பாலாஜி, ஸ்ரீஹரி என எத்தனையோ திருநாமங்கள் இருந்தாலும் ...