வல்லிசிம்ஹன்
இரவும் வரும் பகலும் வரும்....1
கதை எழுதிய காலம் 2010 ஆகஸ்ட்.
தம்பி ஒருவர் வீட்டில் நடந்த கலகல சம்பவம்.
எல்லோரும் நல் வாழ்வு பெற இறைவன் அருளட்டும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++கதை ஆரம்பம்.
***********************
''வாழ்வென்றால் சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று ஏதாவது சட்டம் போட்டு இருக்கா என்ன? எனக்கு கோபம்தான். அதைக் காண்பிக்க எனக்கு ரைட்டு இருக்காக்கும் ''
முணுமுணுக்கும் ஜானு என்கிற ஜானகியை அலுப்போடு பார்த்தேன்.
'பின்ன என்ன முணுக்'னால் பிறந்த வீட்டுக்கு ஓடறது எந்த விதத்தில நியாயம்?
புருஷன் பொண்டாட்டிக்குள்ள இதுவரை சண்டையே வந்தது கிடையாதா .
அப்படிப் போவதானால் நானே நானூறு தடவை காரைக்குடிக்கு ஓடி இருக்கணும்.'
'எதுடி, அப்ப எல்லாம் நீ பொட்டி கட்டரத்துக்குள்ள ,சின்னத்துக்கு சளி பிடிச்சுக்கிம்,
பெரிசுக்கு வயத்தவலி வந்துடும்.
சரி நாளைக்குப் போலாம்னு பொத்துன்னு உட்கார்ந்துடுவே.
கார்த்தால உனக்கு கோவம் வந்தது கூட நினைவில்லாம, இட்லி வேக வைத்துண்டு இருப்பன்னுதும் ஜானுவுக்கே சிரிப்பு வந்தது. கூடவே சுய பச்சாத்தாபமும் சேர்ந்து கொண்டது.
அடச்சே கோவிச்சுக்கரத்துக்கூட நேரமில்லாமல் என்ன தான் குப்பை கொட்டினேனோ'' என்றாள்.
சரி 35 வருஷம் கழிச்சு இப்ப வருத்தப் படாதே. எதுக்காக இவ்வளவு கோபம்.
சனி ஞாயிறு வந்தால் நடக்கிற கூத்துதானே.?
''வாராவாரம் நடக்கணும்னு எங்கயாவது காலட்சேபத்தில கேட்டுண்டு வந்தீர்களா,
அதென்ன பழக்கம் ?
நாளைக்கு எனக்கு அறுபது வயசாகப் போகிறதுன்னு தெரியாதா.
பிரமாதமா பட்டும், வைர நெக்லஸும் கேட்டேனா.
எல்லாரும் ஒண்ணா இங்க இருக்கற மதுராந்தகத்துக்குப் போய் வரலாம்னு தானே
சொன்னேன்.
புளிக்காய்ச்சல் கூட காய்ச்சி வச்சுட்டேன். இட்லிமாவு பந்து பந்தா உருட்டி
வச்ச மாதிரி அரைச்சு வைத்தாச்சு. ராத்திரி சாதம் வடிச்சு, தயிர் சாதத்துக்கு
ரெடி செய்யணும். அவ்வளவுதான்.
இப்ப இந்த வெள்ளிக்கிழமை சாயந்திரம் ரெண்டு பையன்களுக்கும்
காரைக் கிளப்பிக் கொண்டு மாமனார் மாமியாரை
அழைத்துக் கொண்டு அந்த ரிசார்ட் ,இந்த ரிசார்ட்னு போகணுமா.?""
குமுறியவளை அநுதாபத்தோடு பார்ப்பதைத் தவிர என்னால் ஒன்றும் முடியவில்லை.
அவளது ஆற்றாமைக்கும் காரணம் உண்டு.
இரண்டு பிள்ளைகளக் கொடுத்த கடவுள் இன்னோரு பெண்ணையும்
கொடுத்திருக்கலாம்.
பெற்றோர்கள் நாலு பெற்றுக் கொண்டால் , எங்கள் காலத்தில் இரண்டு பெற்றுக் கொள்வது தான் அளவாக இருந்தது.!!
ஜானுவின் உடல் நிலையும் ஒத்து வரவில்லை. அதனால் இரண்டோடு
போதும் என்று நிறுத்தி ஆச்சு .
August 17, 2010
Tuesday, August 17, 2010
இரவும் வரும் பகலும் வரும்---2
இத்தனைக்கும் உங்க அம்மாவோட அறுபதுக்கு சம்பந்திகள் வரலைன்னு ஒரு இஷ்யூ ஆச்சே அதுமாதிரி ஏதாவது கேட்டேனா'' என்று மீண்டும் புலம்பலை ஆரம்பித்தவளைப் பார்த்து எனக்குக் கோபம் வந்தது.
''அம்மா அம்மானு நீயும் தான் எங்க அம்மாகிட்டப் பாசமாயிருந்த. அவளும் பெருமாள் கிட்டப் போய் 15 வருஷம் ஆச்சு . இப்ப என்னத்துக்கு அவளை இழுக்கிற??
'அப்ப எல்லாரும்(என் அக்கா,தங்கை,பாட்டி) சேர்ந்து நான் அன்னிக்கு சாயந்திரம் காரைக்குடிக்குப் போறேன்னூ
சொன்னதுக்கு'' ..........,சரி வேண்டாம் நான் ஒண்ணும் சொல்லலை. விடுங்கோ.
என்னைக்கு ஏழை சொல் அம்பலம் ஏறியிருக்கு.!
இவள் ஏழையா:)
ஒரு தனியார் கம்பனியின் தலைமை அதிகாரியின் பெண்டாட்டி. வாழ்க்கைத்துணை.
அண்ணா நகர்லியே முதலாக வீடு வாங்கின பெருமை. ஊஞ்சலென்ன, போர்ட்டிகோ என்ன,
தோட்டம் என்ன. மாடு ஒன்றுதான் இல்லை.
அலுக்காமல் என் உயர்வுக்கு துணை இருந்தவள் தான். எத்தனை வெளிநாடுகள்
போய்வந்தாலும் அலுக்காமல் துணிமணிகள் ,மருந்துகள் மொத்தமும்
அழகாக அன்போடு எடுத்து வைப்பாள்.
'எங்க இரண்டு பேருக்கும் இதுதான் சரிப்படும். அவரோட ஸ்டைலே வேற. நானே வேற.
கூடவே இருந்தால் தகறார் வரச் சந்தர்ப்பங்கள் அதிகம்''னு தோழியிடம்
வேற சொல்லுவாள்..
இதோ ரிடயரும் ஆகி இரண்டு வருஷங்கள் போயாச்சு.
அதிலயும் அவளுக்கு ஆதங்கம்.
''ஊர்ல உலகத்தில ரிடயராவதற்கும் ,எங்க வீட்ல ரிடயராகரதுக்கும் வித்யாசம் உண்டு தெரியுமோ விமலா.?
இவர் இன்னமும் ஆஃபீஸ் போகிறார்..என்னன்னால் கன்சல்டண்டாம் !!
நினைத்த பொது போகலாம் வரலாம் .மீட்டிங் இருக்கிற அன்னிக்கு முழு நாள் என்று யாரிடமோ அளந்து கொண்டிருந்தாள்.
என் கதையை யார்கிட்டயோ சொல்றியே 'என்று கேட்டால் '' நிஜத்தைத் தானே சொல்றேன்.
நீங்க ரிடையரானால்'' என்ன கோவிலுக்குப் போகணும், எந்த பாக்கேஜ் டூர் எடுக்கனும்னு கனவு கண்டு கொன்டிருந்தால்,'' நீங்கள் இப்படி செய்து இருக்கிறீர்கள்.''
என்கிறாள் .
''நான் வீட்டிலிருந்தால் உனக்குத் தான் சிரமம்.
இப்பப் பாரு சுலபமா கார்ந்ப்லேக்ஸ் சாப்பிட்டு விட்டு ,மதியம் அலுவலக காண்டீனில் பத்திய சாப்பாட்டை முடித்துக் கொள்கிறேன்.
சாயந்திரம் நானும் நீயும் பேரக்குழந்தைகளும் பார்க் போகிறோம்.
உனக்கு நடையாச்சு.எனக்கு குழந்தைகளோடு இருக்கும் சந்தோஷம்.
இதில கஷ்டப்பட என்ன இருக்கு ?''
''அதானே!! நான் செய்ததையே செய்துண்டு இருக்கேன். ஒரு மாற்றமும்
இல்லை. நாப்பைந்து வருஷம் இப்படியே போயாச்சு.
செக்கு மாடு மாதிரி சுத்தி வந்து.''....முடிக்காமல் கண்கலங்குவது தெரிந்தது .
என்னையும் பட்டம் படிக்க விட்டிருந்தால் , வேலைக்குப் போயிருக்கலாம்.
இப்ப இந்தப் பெண்கள் ,
பறக்கிற மாதிரி நானும் ஏதாவது சாதிச்சிருப்பேன்.''
''அதுக்குப்புறம் எனக்கும் என் வயசுக்கு ஏத்த தோழிகள், எனக்கு என்று ஒரு
குரூப், சிரிக்க,பேச,அழ எல்லாத்துக்கும்தான். ''
எனக்குப் புரியலை ஜானு. இப்ப இந்த வாழ்வுல என்ன குறை ?
நீ சந்தோஷமாத் தான இருக்க.
இந்த அறுபதாவது பிறந்த நாளுக்கு மட்டும் , உனக்கு திடீர்னு
என்ன ஆச்சு.
பிள்ளைகள் உன்னிடம் அன்பாகத் தான் இருக்கிறார்கள்.
பெரியவன் நுங்கம்பாக்கம் ஸ்ரீநிவாசர் கோவிலில் சர்க்கரைப் பொங்கல் சொல்லி இருக்கிறான். சின்னவன் புரசைவாக்கம் பிள்ளையார் கோவிலில் நூத்தி எட்டு கொழுக்கட்டைக்கு சொல்லி இருக்கிறான்.
நாளை சாயந்திரம் வந்துவிடுவார்கள்.
நேத்திக்கு நடந்த சமாசாரத்துக்கு இன்னிக்கு வருத்தப் படாதே.! என்றேன்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
at August 17, 2010
No comments:
Post a Comment