வல்லிசிம்ஹன்
அவன்....ஜானி என்னும் நம் ஜானகிராமன் , ரயில்வே இலாகாவில் வேலை
பார்த்த அப்பாவிற்கு முதல் மகனாகப் பிறந்து
பொறுப்புகள் சுமந்து வளர்ந்தவன்.
ஒரு அக்கா ,இரண்டு தங்கைகள் என்று ஆனந்தமும் பாசமும்
நிறைந்த ஆனால் சிக்கனமான சூழ்னிலை.
மகள்களின் திருமணங்கள், மகனின் படிப்பு
எல்லாவற்றுக்கும் மிகத் தீவிரமாக யோசித்து
சமமாகப் பங்கிட்டு செலவு செய்பவருக்குத்
தூணாகத் துணை இருந்தவன் ஜானி.
திருச்சியில் ஆரம்பித்த அவனுடைய மேல்படிப்பு,
பங்களூரில் தொடர்ந்து மேற்படிப்புக்கு
அமெரிக்கா செல்லும் வாய்ப்பில் நின்றபோதுதான்
நீலாவின் திருமணம் நடந்தது.
25 வயது வரை அவன் மனதை ஆக்கிரமித்து
இருந்த நீலாவை,மறக்கவும் முடியாமல்
நினைக்கவும் முடியாமல் அமெரிக்காவுக்குப்
பயணப்பட்டான்.
எவ்வளவு முயற்சி எடுத்துக் கொண்டாலும்
மானசீகமாக நீலாவின் வாழ்க்கையைத் தொடர்ந்தான்.
தந்தையின் 70ஆம் வயது பூர்த்திக்கு
திருச்சி வந்த போது,ஹோட்டல் சங்கத்தில்
பாலச்சந்திரனும் அவனுடைய தோழர்களும்
அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு,நிலை தடுமாறியதால்
ஹோட்டல் நிர்வாகத்தினரால் (மரியாதையாக)
வெளியே அனுப்பப் பட்டதைக் கண்டு மனம் வெதும்பிப்
போனான்.
நீலாவும் அவள் குழந்தைகளும் என்ன பாடு படுகிறார்களோ
என்ற வருத்தம் அவனைத் தாக்கியது. பெற்றோர்
காட்டிய வழியில் திருமணம் செய்யவும்
மனம் இடம் கொடுக்கவில்லை.அப்போது அவன் வயது 42.
தன் பெற்றோரைத் தன்னுடன் பாஸ்டனுக்கு
அழைத்துச் சென்று விட்டான்.
வயதான பெற்றோர் காசிப் பயணம் மேற்கொள்ள
ஆசைப்பட்ட போது,
இந்தியாவுக்கு வந்த போது அவனுக்கு வயது 50.
பாலச்சந்திரன் இறைவனடி சேர்ந்த செய்தியும்
கிடைத்தது.மனம் மிக வருத்தம் அடைந்தாலும்
நீலாவைப் போய்ப் பார்க்க மனம் இடம் கொடுக்கவில்லை.
அவனுடைய பெற்றோருக்கும் அவன் மனம் புரிந்த நிலையில்
அவன் அமெரிக்காவுக்குத் திரும்புவதைத் தடுக்கவில்லை.
தங்கள் மகள்களுடனேயே தங்கி விட முடிவெடுத்தார்கள்.அடுத்த
இரண்டு வருடங்களில் ஜானி,
சென்னையில் மயிலை நாகேஸ்வர ராவ் பூங்காவை ஒட்டி
புதிதாக எழும்பியிருந்த மூன்று படுக்கை அறைகள்
கொண்ட அபார்ட்மெண்ட் ஒன்றை விலைக்கு வாங்கும்
ஏற்பாடு செய்த போது அடுத்து அடுத்து இருந்த
வீடுகளை அவன் சகோதரிகள் வாங்கிக் கொண்டு அங்கே குடியிருக்க வரவும்
அவனுக்குக் கொஞ்சம் நிம்மதி கிடைத்தது. வருடம் 2016. வயது 52.
அவனுக்குத் தெரியாதது நீலாவும் தன் பெற்றோருடன்
மயிலாப்பூருக்கு இடம் பெயர்ந்ததுதான். தொடருவோம்......