Blog Archive

Thursday, October 14, 2021

துர்காஷ்டமி,சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்


வல்லிசிம்ஹன்

👨‍👧‍👧👨‍👧‍👧









பட்டீஸ்வரம் துர்கா  அம்மா.


அன்னை துர்க்கா தேவி என் வாழ்வில் 
வந்து அமர்ந்தது ஒரு நவராத்திரி போதுதான். 


காதி க்ராமாத்யோக் பவன் கொலு காட்சிகள் அப்போது 
மிகப் பிரசித்தம். 2005 இல் அங்கு பொம்மைகள் வாங்கச் சென்றபோது 
இரண்டரை அடி  அழகுப் பாவையாக ஒரு வடிவம். தங்கத்தில் 

வண்ணம் பூசி எட்டு கரங்களுடன் காட்சி அளித்தாள்.

உடனே வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் 
என்ற பரபரப்புத் தோன்றி விட்டது.

அங்கு இருந்த விற்பனைப் பெண்ணிடம் ,இது எந்த
தேவி என்று கேட்டதும் 'பட்டீஸ்வரம் துர்க்கை. விஷ்ணு
துர்க்கை என்று பளிச்சென்று சொன்னாள்.
விலை அதிகம் இல்லை.

அப்படியே காகிதங்களில் பொதிந்து கொடுத்தார்கள்.
ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது
வீடே கலகலத்து ஆனந்தத்தில் மூழ்கியது 
போலத் தோன்றியது.இரண்டு வருடங்கள் 

பத்திரமாகப் பார்த்துக் கொண்டேன்.  இரண்டாவது 
பேரன் பிறக்கப் போகும் போது 
அந்தத்  தாயை பூஜை அறையில் வைத்து விட்டு
வந்ததுதான் சரியாகவில்லை.
பேப்பர் மாஷ் இல் செய்யப் பட்ட பொம்மை,
அந்த அறை சீலிங் கசிந்து 
அம்பாள் மேலே விழுந்திருந்தது.
அதற்குப் பிறகு  பட்டீஸ்வரம் போய் 
இன்னோரு துர்க்கா அம்மா வாங்கியாச்சு. இதோ கொலுவில் இருக்கிறாள்.
அவள் மனது வைத்தால்
எங்கும் வந்து நம்மைக் காப்பாள்.
அனைவரும் நல் நவராத்திரி கொண்டாடி மகிழ்வுடன் இருக்க வேண்டும்.


12 comments:

ஸ்ரீராம். said...

ஓ...   மனமுவந்து வாங்கிய பொம்மை உடைந்தால் மனதுக்கு மிகவும் கஷ்டமாய் இருந்திருக்கும்.  அதேபோல மறுபொம்மை வாங்கும்வரை மனம் சமாதானம் அடைந்திருக்காது இல்லையா?  துர்கா பூஜை, சரஸ்வதி பூஜை விஜயதசமி வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். நல்ல நாள் வாழ்த்துகள்.
யோசனையில்லாமல் காரியங்கள் செய்யும் போது பலனையும் அனுபவிக்க வேண்டி
வருகிறது.
பரவாயில்லை. புது துர்க்கா வாங்கி மருமகள் களுக்கும் மகளுக்கும் கொடுத்துவிட்டேன் மா.
நன்றி.

கோமதி அரசு said...

கொலு படங்கள் அழகு.
பட்டீஸ்வரம் துர்கையை அடிக்கடி தரிசனம் செய்வோம் முன்பு.

பட்டீஸ்வரம் துர்க்கை மீண்டும் கொலுவில் இடம்பெற்றது மகிழ்ச்சி.

//அவள் மனது வைத்தால்
எங்கும் வந்து நம்மைக் காப்பாள்.
அனைவரும் நல் நவராத்திரி கொண்டாடி மகிழ்வுடன் இருக்க வேண்டும்.//

அம்மா மனது வைக்கட்டும், அனைவரையும் காக்கட்டும்.
துர்காபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்.

KILLERGEE Devakottai said...

துர்க்கை அம்மன் நலம் தரட்டும்.
சரஸ்வதி பூஜை விஜயதசமி வாழ்த்துகள் அம்மா.

5:27 AM

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள்...

வெங்கட் நாகராஜ் said...

பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் அழகு. சில சமயங்களில் இப்படி நடந்து விடுவதால் மனது கலக்கம் அடைந்து விடுகிறது. மீண்டும் பொம்மை வாங்கி வைத்து விட்டது மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
பட்டீஸ்வரம் செல்லும்போது உங்கள் ஊரும் நினைவுக்கு வந்தது.

2012 இல் சென்றோம்.
மிக அருமையான சன்னிதி. தேனுபுரீஸ்வரர்
ஆலயம் அவ்வளவு சுத்தமாக இருந்தது
இன்னும் நினைவில் ....

நீங்கள் சென்று தரிசனம் செய்திருப்பீர்கள்
என்றே நினைத்தேன்.

இன்னமும் நம் வாழ்க்கையை அவளே காக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி.
நம் அனைவருக்கும் பாதுகாப்பையும் மன
அமைதியையும் அன்னை அருள வேண்டும்.
வாழ்த்துகளுக்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
வாழ்க்கை செழிக்க நம் அன்னை காப்பாள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,

நலமுடன் இருங்கள். மன கலக்கத்தைப் போக்குபவளே அவள் தானே.

அந்த விக்கிரகம் பேப்பர் மாஷில் செய்த அழகு வடிவம்.
துணியில் சுற்றி உள்ளே வைத்திருக்கலாம்.

பரவாயில்லை மா.
அனைவரும் நலம் பெறுவோம். நன்றி மா.

Geetha Sambasivam said...

ஆசைப்பட்டு வாங்கிய பொம்மை (பொம்மைனு சொன்னாலும் நாம் துர்கையாகவே பாவிப்போமே) உடைந்தால் மனக்கஷ்டம் தான். வேறொன்று கிடைத்ததும் சந்தோஷம். எங்களிடம் ராஜராஜேஸ்வரி பொம்மை பெரியது சுமார் ஒன்றரை அடியில் இருந்தது. தூக்கி வைக்க முடியாது. அவ்வளவு கனம். அம்பத்தூர் வீட்டில் இருக்கையில் பெட்டிக்குள் மழை நீர் புகுந்து பொம்மைகள் பலவும் மழை நீரில் ஊறிப்போய் வீணாகிவிட்டன. உங்களுக்கு வேறு துர்கைகள் கிடைத்ததில் சந்தோஷம். எல்லாம் அவள் அருள்.

வல்லிசிம்ஹன் said...

@Geetha Sambasivam,

ஆசைப்பட்டு வாங்கிய பொம்மை (பொம்மைனு சொன்னாலும் நாம் துர்கையாகவே பாவிப்போமே)////


அன்பு கீதாமா,
இதுதான் நமக்குள்ள இருக்கிற பெரிய தாபம்.
எல்லாவற்றின் மேலும் பாசமும் பக்தியும் வைத்து விடுவது. இதோ பொம்மைகளை
எடுத்து சுற்றி வைக்கப் போகிறோம்.

மனம் இப்பவே கனக்கிறது.

அந்தத் துர்க்கா, பொம்மையென்றே நினைக்க முடியவில்லை.
அவ்வளவு உயிரோட்டத்துடன் தங்க வடிவில்
இருந்தாள்.
அவளை அமைத்த ,வடித்த மனிதரின் கைகளைப்
போற்றுகிறேன்.

உங்களுக்கு அந்த வெள்ளம் வந்த நாட்கள் எவ்வளவு மன உளைச்சல்
கொடுத்திருக்கும் என்று இப்போ நினைத்தாலும்
சிரமமாக இருக்கிறது.
பகவான் உங்களை சிரமம் இல்லாமல்
வாழ வைக்க வேண்டும்.
அன்னை துர்க்கா பார்த்துக் கொள்வாள். நன்றி மா.