Blog Archive

Sunday, March 28, 2021

பங்குனி உத்திரக் கோலாஹலம்.

வல்லிசிம்ஹன்

ஸ்ரீரங்கம் தம்பதிகள் மகா தரிசனம்.


சண்பக மாலையும் மேலே பூப் பந்தலும் ரங்கா!!
உன்னையும் தாயாரையும் காணும் நாள் என்னாளோ.!!!!

ஸ்ரீரங்கம் தம்பதிகள் மகா தரிசனம்.
ஜகார்த்தா அதிபதி ஸ்ரீ ஸ்ரீனிவாசனும் தாயார் ஆனந்தவல்லியும் 
சேர்த்தி கண்டருளும் வைபவம்.


28-03-2021 பங்குனி உத்திரம்  

மட்டையடி, ப்ரணயகலஹம் மற்றும் நம்பெருமாள் பெரிய பிராட்டியார் சேர்த்தி நிகழ்வுகள் 

பங்குனி உத்திரம் பெரிய பிராட்டியாரின் திருநட்சத்திரம். திருவங்கத்தில் அந்த ஒரு நாள் மட்டுமே தாயாருக்கும் பெருமாளுக்கும் சேர்த்தி நடைபெறும். 

பெரிய பிராட்டியார் கருணையின் பிறப்பிடம். நம்மைப் போன்ற அடியார்களின் பிழைகளை போக்க புருஷாகாரம் செய்பவர். 

பங்குனி உத்திரம் அன்று நடைபெறும் நிகழ்வுகள்:

பெருமாள் 8 வீதிகள் எழுந்தருள்வார்
தாயார் சன்னதியில் மட்டையடி நடைபெறும்
பெருமாளுக்கும் தாயாருக்கும் நடைபெறும் வாக்குவாதம் – பிரணய கலஹம்
பெரிய பிராட்டியார் சேர்த்தி
ஸ்வாமி இராமானுஜர் சரணாகதி அனுஷ்டித்த கத்யத்ரய பாராயணம்
பெருமாளுக்கும் தாயாருக்கும் ஏக சிம்மாசனத்தில் திருமஞ்சனம்
பெருமாள் தேரில் எழுந்தருளல் கோரதம்
அதிகாலை 4 மணி பெருமாள் ராஜகோபுரத்தை தாண்டியவுடன், பெரியமேளம் (உடல்) நிறுத்தப்பட்டது. சப்தமின்றி நேரே வெளி ஆண்டாள் சன்னதியை அடைகிறார். மாலை மாற்றிக் கொண்டு சப்தமில்லாமல் மூலஸ்தானத்திற்கு எழுந்தருளி விடுகிறார்.

ஏன்? உறையூர் சேர்த்தி முடிந்து திரும்பி வருவதனால்!!!

ஏழாம் திருநாள் எப்போதும் போல் இரவு தாயார் சன்னதிக்குச் சென்று திருமஞ்சனம் கண்டருளுகிறார். எட்டாம் திருநாள் அன்று கொள்ளிடத்தில் இறங்கி பின்னர் உள்ளே செல்கிறார்.

மேலே சொன்ன விஷயங்களுக்கும் பங்குனி உத்திரத்திற்கு என்ன சம்பந்தம்? சம்பந்தம் உள்ளது, தொடர்ந்து படிக்கவும்.

பங்குனி உத்திரத்தன்று காலை பெருமாள் 8 வீதிகளும் வலம்வருதல்
காலை 6 மணிக்கு பெருமாள் தங்கப்பல்லக்கில் புறப்படுகிறார். 

முன்னே அரையர் தாளம் இசைக்க, சத்தம் இல்லாமல் மெதுவாக 8 வீதிகளும் பெருமாள் எழுந்தருளுகிறார்.

மட்டையடி வைபவம்
அதுவரை நிதானமாக வந்து கொண்டிருந்த பெருமாள், சக்கரத்தாழ்வார் சன்னதியை தாண்டியவுடன் திடீர் பரபரப்பு! பெருமானின் முகத்தில் கூடுதல் பொலிவு!!

மின்னல் வேகத்தில் தாயார் சன்னதியை அடைகிறார். பெரியமேளம் (உடல்) ஒலிக்கத் தொடங்குகிறது. விண்ணைப் பிளக்கும் வேகத்தில் தாயார் சன்னதிக்குள் நுழைய முற்படுகிறார். பெருமாள் வருவது கண்டு தாயார் சன்னதி கதவுகள் மூடப்படுகின்றன. உறையூர் சென்று வந்த பெருமாளை, தாயார் அனுமதிக்க மறுப்பதால் கதவுகள் மூடப்படுகின்றன.

கதவுகள் மூடப்படுவதை கண்ட பெருமாள் மெல்ல பின்னே செல்கிறார். தாயார் சன்னதி கதவுகள் மீண்டும் திறக்க இரண்டாவது முறையாக பெருமாள் ஓட்டத்தில் வேகமாக உள்ளே நுழைய முற்படுகிறார். இந்த முறையும் கதவுகள் மூடப்பட்டு பூவும், தயிரும் வீசப்படுகின்றன. மீண்டும் பெருமாள் பின்னே மெதுவாக சென்று விடுகிறார். (மட்டையடி வாங்கிய சிலர்)

மூன்றாவது முறையாக கதவுகள் திறக்கப்பட்டு பெருமாள் முன்னே ஓட, கதவுகள் மீண்டும் மூடப்படுகிறது. பெருமாள் மெதுவாக பின்னே சென்று நின்று விடுகிறார்!!

தாயார் தன் மீது கோபத்தில் இருப்பதால், இனி பேச்சுவார்த்தை நடத்துவது உசிதம் என்று பெருமாள் நினைக்க! மணியக்காரர் சமயம் சொல்லி அரையருடன் நம்மாழ்வார் சமாதானம் செய்ய வருகிறார்.

பிரணய கலஹம் – பெருமாளுக்கும் தாயாருக்கும் நடக்கும் வாக்குவாதம்
பெருமாள் சார்பாக அரையரும், தாயார் சார்பாக பண்டாரியும் விண்ணப்பம் செய்வார்கள். இந்த விண்ணப்பங்கள் தம்பிரான் படி வியாக்கியானத்தை கொண்டு அரையர்கள் சேவிப்பார்கள்.

இந்த விண்ணப்பங்களின் சுருக்கத்தை மட்டும் நாம் இங்கே பார்ப்போம். முழுவதுமாக அறிந்து கொள்ள கோயிலொழுகு புத்தகத்தை படிக்கவும்.

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம்-1:
தாம் தாயாரை காண வந்தால் தன்னை உள்ளே வரவேற்று, சிம்மாசனத்தில் அமர்த்தி உபசாரங்கள் செய்வீர். இன்று தன்னை பார்க்காமல், கதவுகளை மூடி, பூக்களை எறிந்து இப்படி அவமானம் செய்வது ஏன்?

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-1:
பெருமாள் எப்போதும்போல் எழுந்தருளியிருப்பது மெய்யானால்:

திருக்கண்கள் சிவந்து இருப்பானேன்?
கஸ்தூரி திலகம் கலைந்து இருப்பானேன்?
திருவதரம் வெளுத்து இருப்பானேன்?
திருமேனியில் குங்குமப் பொடி இருப்பானேன்?
தாம் நேற்று எழுந்தருளிய இடத்திற்கே செல்லலாம் என நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம்

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -2
திருக்கண்கள் சிவந்து இருப்பானேன்?

தாம் “செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்” ஆதலால் இரவு முழுவதும் தூக்கமின்றி ஜெகத்ரக்ஷகம் செய்ததால் கண்கள் சிவந்து இருக்கிறது!

கஸ்தூரி திலகம் கலைந்து இருப்பானேன்?

சூரியனின் கிரணங்கள் காரணமாக கஸ்தூரி திலகம் கலைந்து இருக்கு!

திருவதரம் வெளுத்து இருப்பானேன்?

அசுரர்களை அழிக்க பாஞ்சஜன்யதை பயன்படுத்தியதால், ஆதரம் வெளுத்து இருக்கு!

திருமேனியில் குங்குமப் பொடி இருப்பானேன்?

தேவதைகள் புஷ்பங்கள் தூவியதால் குங்குமம் திருமேனியில் இருக்கு!

தான் வேட்டையாடி வரும்போது திருமங்கையாழ்வார் வந்து தன் பொருட்களை களவாடினார். அவரை திருத்தி, பின்னர் ஆபரணங்களை கருவூலத்தில் சேர்த்தோம். அப்போது பார்த்தால் கணையாழி தொலைந்து இருக்கு! ஆகையாலே தான் கொடுக்கும் புஷ்பத்தை ஏற்றுக் கொண்டு தன்னை உள்ளே அழைக்கச் சொல்லி பெருமான் அருளிச்செய்த பிரகாரம்.

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-2:
கணையாழி மோதிரம் காணாமல் போனது மெய்யல்ல. தாங்கள் அதிகாலையில் கிளம்பி உறையூர் சென்று அங்கு நாச்சியாருடன் சேர்த்தி கண்டருளிய தடயங்கள் இவை. இந்த பொய்களை ஏற்க முடியாததால், நேற்று எழுந்தருளிய இடத்திற்கே இன்றும் செல்லலாம் என்று நாச்சியார் அருளிச்செய்த பரிகாரம்.

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -3
நாம் உறையூரை கண்ணாலும் கண்டதில்லை காதாலும் கேட்டதில்லை!
யாரோ சிலர் சொன்னதை நம்பி தன்னை அவமானம் செய்கிறீர். ஆகவே தான் கொடுக்கும் புஷ்பத்தை ஏற்று உள்ளே அழைக்கச் சொல்லி பெருமாள் அருளிச்செய்த பிரகாரம்.

இதை அறிந்து தான் ஆண்டாள் பாடினால் போலும்

“ஏலாப் பொய்கள் உறைப்பான இங்கே போதக் கண்டீரே”

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-3:
ஏழாம் திருநாள் அன்று இங்கு எழுந்தருளிய போது நாங்கள் செய்த உபசாரங்களை சரியாக ஏற்றுக் கொள்ளாமல், தாங்கள் மிகவும் அசதியாக இருந்தீர். நாங்கள் பதறிப்போய் தங்கள் திருமேனிக்கு என்ன ஆயிற்று என்று தங்கள் அந்தரங்க பரிஜனங்களிடம் விசாரித்ததில் தாங்கள் உறையூர் சென்று வந்த விஷயம் அறிந்தோம்! ஆகையாலே தாங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் என்று நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம்.

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -4:
இந்த சந்தேகங்கள் தீர தான் சில பிரமாணங்கள் செய்து தருகிறோம்.

கடலில் முழுகுகிறோம்
அக்னிப்பிரவேசம் செய்கிறோம்
பாம்பு குடத்தில் கை இடுகிறோம்
இப்படிப்பட்ட பிரமாணங்களை ஏற்று உள்ளே அழைக்க சொல்லி பெருமாள் அருளிச்செய்த பிரகாரம்.

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-4:
கடலில் முழுகுகிறோம் என்று சொல்ல வந்தீரே!!

பிரளய காலத்தில் சகலத்தையும் வயிற்றில் வைத்து ஒரு ஆலிலையில் துயின்ற உமக்கு சமுத்திரத்திலே முழுகுவது அருமையா?

அக்னி பிரவேசம் செய்கிறேன் என்று சொல்ல வந்தீரே!!

பிரம்மாவின் வேள்வியில் ஆவிர்பவித்த உமக்கு அக்னி சுடுமோ?

பாம்புக் குளத்தில் கட்டுகிறோம் என்று சொல்ல வந்தீரே!!

திருவனந்த் ஆழ்வான் மீது திருக்கண் வளர்ந்திருக்கிற உமக்கு பாம்பு குடத்தில் கைவிட்டால், பாம்பு கடிக்குமா?

இப்படிபட்ட பிரமாணங்களை ஏற்கும் இடத்திற்கு செல்லவும் என்று நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம்.

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -5:
நாம் சொல்லும் பிரமாணங்களை பரிகாசம் செய்து, சற்றும் இறக்கம் வராமல் கோபத்தில் – “கண்கள் சிவந்து இருக்கு!” “திருமுகம் கருத்து இருக்கு!” இப்படி இருந்தால் நமக்கு என்ன கதி இருக்கிறது?

அழகிய மணவாளன் தாயார் சன்னதி வாசலில் தள்ளுப்பட்டு கொண்டிருக்கிறார் என்ற அவமானம் தங்களுக்கே!! எனவே தன்னை அழைக்கச் சொல்லி பெருமாள் அருளிச்செய்த பிரகாரம்.

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-5:
தாம் ஆண்டுக்கு ஒருமுறை இப்படி வழிமாறி சென்று இங்கு மீண்டும் வந்து பிரமாணங்கள் செய்வதை பொறுக்க மாட்டோம். நம்மாழ்வார் வந்து மங்களமாக சொன்னதால் பொறுத்தோம்! பொறுத்தோம்!! பொறுத்தோம்!!!
பெருமாளை உள்ளே எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம். 

பெருமாளின் மாலை, சந்தனம், சால்வை ஆகியவை தாயாருக்கு கொடுக்கப்படும். தாயாரிடம் அனைவருக்கும், பெருமாளிடம் பண்டாரிக்கும் விண்ணப்பம் செய்ததற்காக மரியாதை வழங்கப்படும்.

முதல் ஏகாந்தம்: பெருமாள் பல்லக்கில் தாயாரை பார்த்தபடி நேராக எழுந்தருள்வார். ஏகாந்தத்தில் நாயனம் சற்று நேரம் வாசிக்கப்பட்டு பின்னர் முதல் ஏகாந்த தளிகைகள் சமர்ப்பிக்கப்படும்.

பெருமாளும் தாயாரும் சேர்த்தியில் நமக்கு சேவை சாதிப்பார்கள்

இரவு சின்ன பெருமாள் கொள்ளிடத்திற்கு சென்று தீர்த்தவாரி கண்டு, பின்னர் தாயார் பெருமாளுடன் சேர்த்து எழுந்தருளுவார்.

ஸ்வாமி இராமானுஜர் சரணாகதி அனுஷ்டித்த கத்யத்ரய கோஷ்டி
ஸ்வாமி இராமானுஜர் இதே பங்குனி உத்திர நாளில் சேர்த்தியில் சரணாகதி அனுஷ்டித்தார். கத்யத்ரயம் சொல்லி இருவரிடம் சரணாகதிஅடைந்தார். இதற்காக கத்ய த்ரயம் பாராயணம் செய்யப்படும். இதன் பின்னர் இரண்டாவது ஏகாந்தம் நடைபெறும்

பெருமாளுக்கும் தாயாருக்கும் ஏக சிம்மாசனத்தில் நடைபெறும் திருமஞ்சனம்
திருமஞ்சன நேரத்தில் வசந்தனுக்கு அருளப்பாடு ஆகும். அதன் பின்னர் 18 முறை பெருமாளுக்கும், தாயாருக்கும் ஈரவாடை (வஸ்திரம்) மாற்றி திருமஞ்சனம் நடைபெறும். உடையவர் திருக்கோஷ்டியூருக்கு ரகசியங்களை அறிய 18 முறை நடந்ததை எடுத்துக் காட்டுவதற்காக, இந்த திருமணத்தில் 18 முறை ஈரவாடை மாற்றப்படுகிறது.

இதன் பின்னர் மூன்றாவது ஏகாந்தம் முடிந்து தாயார் உள்ளே செல்ல பெருமாள் பிரிய மனமில்லாமல், தாயார் சன்னதி வாசலில் சற்று நேரம் நின்று பின்னர் கோரதTHதிற்க்கு எழுந்தருளுவார்.

 இந்தப் பதிவிற்கு முழுக்காரணம்
என் தோழி பி எஸ் சந்த்ரா.
அன்புடன் அனுப்பி வைத்தவளுக்கு மிக நன்றி. எனக்கு இந்தக்
கோயில் பரிபாஷை எல்லாம் தெரியாது. காணொளி கண்டிருக்கிறேன்.
நன்றி அன்பு சந்திரா.



11 comments:

கோமதி அரசு said...

ஜகார்த்தா அதிபதி ஸ்ரீ ஸ்ரீனிவாசனும் தாயார் ஆனந்தவல்லியும்
சேர்த்தி கண்டருளும் வைபவம் படம் மற்றும் மட்டையடி, ப்ரணயகலஹம் மற்றும் நம்பெருமாள் பெரிய பிராட்டியார் சேர்த்தி நிகழ்வுகள் விவரங்கள் மிக அழகாய் சொன்னீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன்.
பங்குனி உத்திரத்திற்கு திருப்பரங்குன்றத்திலும்
விழா காண்போமே.

இன்றும் முந்தின நட்களும் உத்சவ நாட்களே.
உங்களிடம் இருந்து பதிவை எதிர்பார்க்கிறேன் அம்மா.

ஸ்ரீராம். said...

எவ்வளவு சுவாரஸ்யம்...    அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

Geetha Sambasivam said...

அருமையாயும் சுருக்கமாயும் விவரித்துள்ளீர்கள். இப்போத் தான் ப்ரணய கலஹம் முழு வீடியோ பார்த்தும்/கேட்டும் சந்தோஷப் பட்டோம். இவை எல்லாமும் அனைத்தும் மாறாமல்/மாற்றாமல் இன்றளவும் தொடர்ந்து நடைபெறுவதும் சந்தோஷமாக இருக்கு.

உங்கள் விவரணை அருமை. கொள்ளிடத்தில் இறங்கிப் பெருமாளைத் தூக்கிக் கொண்டு ஶ்ரீபாதம் தாங்கிகள் மேடெல்லாம் ஏறி இறங்கியதையும் கண்டோம்.

நெல்லைத் தமிழன் said...

மிக அருமையா எழுதியிருக்கீங்க. நானும் சிலவற்றைப் புதிதாகத் தெரிந்துகொண்டேன்.

நேற்று சரணாகதி கத்யமும் ஸ்ரீரங்க கத்யமும் பாராயணம் செய்தேன்.

வெங்கட் நாகராஜ் said...

பங்குனி உத்திர சேர்த்தி திருவிழா குறித்த தகவல்கள் சிறப்பு. உங்கள் பதிவு வழி படிக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
வந்து படித்ததற்கு மிக நன்றி மா.
எல்லாம் தோழியின் பதிவில் படித்தவை.
இத்தனை நல்ல தமிழில்
எனக்குக் கோர்வையாக எழுத முடியாது. அந்த நாளையத்
தமிழ். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

Re: நாச்சியார் தரிசனங்கள் கொள்ளை அழகு சம்பங்கி மாலை நினைத்தாலே மணம் வீசுகிறது இப்படியாவது தரிசனம் கிடைத்தது உங்களுக்கு மிகவும் நன்றி அன்புடன் Kamatchi.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
மிக நன்றி ராஜா. நானும் கத்யத்ரயம் கேட்டு ,கூடவே படித்தேன்.
உத்தமர்களைப் போற்றுவோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
பங்குனி உத்தரத்துக்கு நீங்களும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வேலைப்
பளு அதிகமாக இருக்கும் நாட்கள்.
பத்திரமாக இருங்கள்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு காமாட்சிமா,
நீங்கள் வந்து படித்து கருத்து சொல்வது எனக்குப் பெருமை. நமஸ்காரம் அம்மா.