Blog Archive

Thursday, March 25, 2021

அன்பு,பாசம் தபால் அலுவலகம்



வல்லிசிம்ஹன்
அனைவரும் ஆரோக்கியமாக இணைந்திருப்போம்.

திண்டுக்கல்


இங்கே....

  ஆழ்வார்பேட்டை
இங்கு ஆரம்பித்த எழுத்துகள் அரிச்சுவடியிலிருந்து இன்று வலைப் பதிவு வரை தொடரும் எண்ணங்கள்.
அறியும் செய்திகள் ,தொடரும் நட்புகள்
எல்லாவற்றுக்கும் அடிப்படையான நம் தமிழ்.

1963,64,65,66  இந்த வருடங்கள் தபால் துறைக்கு என்னால் வருமானங்கள்
அதிகரித்தன என்று நான் பெருமையாகச் சொல்லிக்
கொள்வேன்.
1963இல் சென்னை வந்து பள்ளியில் சேர நினைத்து மீண்டும்
 திண்டுக்கல்லுக்கு வந்த போது
என் தோழிகளிடம் வாங்கிக் கொண்ட செல்லக் கோபங்கள்
கொஞ்ச நஞ்சம் இல்லை.
அந்த ஒரு வருடத்தை முடித்து சென்னை திரும்பி
கல்லூரியில் படித்த அந்த ஒரு வருடம்
தொடர்ந்து தொடர்பில் இருக்க 
உதவியது கடிதங்களே.

நட்பில் இருக்கும் போது எப்படி காலையிலிருந்து
இரவு வரை கணமும் பிரியாது
பேசிக்கொண்டிருந்தோமோ,
அந்தத் தோழமையைப் பிரிவது மிகக் கடினம்.

வாழ்க்கையின் அடுத்த கட்டம் நம்மை எல்லாவிதத்திலும்
பழக்கி விடுகிறது இரு கோடுகள் தத்துவம் போல
மகிழவைக்கும் நிகழ்வுகள், புதுத் தோழமைகள்
புதிய உறவுகள் வந்தாலும், அந்தப் பதினாறு வயதுvarai கூடவே வந்த பிம்பங்கள் அவ்வளவு
எளிதாக நம்மை விட்டு நகர்வதில்லை.


இப்பொழுது ஒரே ஒரு தோழி வாட்ஸாப்பில் 
தொடர்பில் இருக்கிறாள்.
பழையபடி மூச்சு விடாமல் பேச நேரம் இல்லை. 
எல்லோருமே மாறி விடுகிறோமோ.??

ஆனால் பெற்றோர் மாறுவதில்லை . எப்பொழுதும்
நம்முடன் யார் வடிவத்திலாவது
நிரூபித்துக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.



13 comments:

கோமதி அரசு said...


//புதுத் தோழமைகள்
புதிய உறவுகள் வந்தாலும், அந்தப் பதினாறு வயதுvarai கூடவே வந்த பிம்பங்கள் அவ்வளவு
எளிதாக நம்மை விட்டு நகர்வதில்லை.//

உண்மை அக்கா . அவர்கள் நம் நினைவை விட்டு அகலமாட்டார்கள் என்றும் நம்மின் நினைவுகளில்.

குடும்பகவலைகள் இல்லாமல் துள்ளி திரிந்த காலம், நட்புகள் மிகவும் மகிழ்ச்சி தந்த காலம் . எத்தனை நட்புகள் எனக்கு ஊர் ஊராக மாறும் போது புது புது நட்புகள் சில நட்புகள் திருமணம் ஆனபின்னும் தொடர்ந்தது.


உங்கள் மலரும் நினைவுகள் நினைக்க வைத்தது . தையல் வகுப்பு தோழிகள், தட்டச்சு தோழிகள் , திறந்தவெளி பல்கலைகழக நட்புகள் என்று எத்தனை எத்தனை நட்புகள். மாயவரம் கோவில் பழக்கம், அக்கம் பக்கம் நட்பு எவ்வளவு வந்தாலும் சிறு வயது நட்பு மனதை விட்டு அகலாது.

நெல்லைத்தமிழன் said...

சிறு வயது நட்புகள்..... அவர்களிடம் தொடர்பே இல்லை... தொடர்பு கிடைத்திருந்தால் உதவியிருக்கலாமோ என்று மனம் யோசிக்கிறது.

நான் கணிணிப் பயிற்சி படித்துக்கொண்டிருந்தபோது கீழந்த்தம் நட்பு நண்பர்கள் இருவர் சென்னையில் உதவி கோரி வந்தனர். நல்ல நிலையிலிருந்தவர்கள் திடுமென கஷ்டத்திற்கு உள்ளாகினர். அவர்களைப் பிறகு காணவில்லை. நிறையபேரின் தொடர்பு எண்ணையோ இல்லைஅட்ரசையோ வாங்கி வைத்துக்கொள்ளணும் என்ற அடிப்படை எண்ணம்கூட இல்லாமல் இருந்திருக்கிறேனே என வருந்தியிருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,

வாழ்க வளமுடன் அம்மா.
நட்புகள் நம்மை எவ்வளவு சுகமான
சூழ்னிலையில் வைத்திருந்தன!!!
/////உங்கள் மலரும் நினைவுகள் நினைக்க வைத்தது . தையல் வகுப்பு தோழிகள், தட்டச்சு தோழிகள் , திறந்தவெளி பல்கலைகழக நட்புகள் என்று எத்தனை எத்தனை நட்புகள். மாயவரம் கோவில் பழக்கம், அக்கம் பக்கம் நட்பு எவ்வளவு வந்தாலும்///

உண்மைதான். எத்தனை விதமான நட்புகள்.
திருமணமான பிறகு வந்த நட்புகள்
இனியவையே.
மனதில் குடும்ப வேலைகளும் ஓடிக்கொண்டிருக்கும்.
சின்ன வயதில் அந்தப் பொறுப்புகள் இல்லாததால்
மகிழ்ச்சியும் அதிகம் இருந்தது.
நீங்கள் சொன்ன பிறகே, என் சமையல் வகுப்பு, தட்டச்சு வகுப்பு,
ஊர் ஊராகத் தேடிக் கொண்ட ,தானாக வந்த நட்புகள்
எல்லாமே நினைவுக்கு வந்தன.

கொஞ்ச நாட்களுக்கு கடிதங்கள் தொடரும். இன்னோரு ஊருக்கு மாறும்போது
வீடு பார்த்து,
குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து, உடல் நலம் பேணி
என்று நாட்கள் ஓடிவிடும்.
இணையம் இருப்பதால் இன்னும் நம் மனம்
துடிப்புடன் இருக்கிறது என்றே நம்புகிறேன். அன்புக்கு மிக நன்றிமா.

ஸ்ரீராம். said...

பழைய நட்புகள் என்பது சந்தோஷம், நெகிழ்ச்சி தரும் நினைவுகள்.  சமீபத்தில் நான் என் சிறுவயதுத்தோழனின் மகள் திருமணத்திற்குஸ் என்று வந்தேன் (மார்ச் ஐந்தாம் தேதி)  அவன் அம்மாவைப் பார்த்தபோது நெகிழ்ச்சியாக இருந்தாலும் "டேய் ஸ்ரீராமா.." என்று அழைத்த அவர்கள் என்னைக் கையெடுத்துக் கும்பிட்டு "நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டபோது கஷ்டமாக இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,

அப்படித்தான் சில அன்புகளை இழந்து விடுகிறோம்.
விலாசங்கள் இருந்தால் மட்டும் என்னம்மா.

எழுத வேண்டுமே.
என் தோழி ஆறுமுகத்தாய் ,கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப்
பிறகு
என் வீட்டு விலாசம் தெரிந்து சென்னைக்கே வந்துவிட்டாள்.
அவளுடைய திண்டுக்கல் விலாசம் இருந்ததால்
அவர்கள் வீட்டுக்குத் தொலைபேசி
அவள் ஆரணியில் இருப்பதைத் தெரிந்து கொண்டு
நான் எழுதிய கடிதத்திலிருந்து
கண்டுபிடித்து தனது கணவருடன் வந்து விட்டாள்.

மாமியார் இருந்ததால் தனியாக உட்கார்ந்து பேசக்கூட முடியவில்லை.

பிறகு அவளிடம் தொடர்பில்லை. விருது நகர் செல்வதாகச்
சொன்னதுதான் நினைவில் இருக்கிறது.

மிகவும் கட்டுப்பாடான குடும்பம்.
இனிமேலாவது நல்ல நட்புகளைத் தக்க வைத்துக் கொள்வோம்
அப்பா.

Geetha Sambasivam said...

ஶ்ரீராம் சொல்வது போல் என் நெருங்கிய தோழிகளின் அம்மாக்கள் என்னைப் பின்னாட்களில் பார்த்து, எப்படிம்மா இருக்கீங்க? என்று கேட்டது தான் எனக்கும் நினைவுகளில். என்னை விடப் பல மடங்கு வயதில் பெரியவங்க கூட மரியாதையாக அழைத்தனர். இப்போ எந்தத் தோழியிடமும் தொடர்பு இல்லை. உங்களுக்கு ஒரு தோழியாவது வாட்சப்பில் தொடர்பில் இருப்பது ஆச்சரியம் தான். ஆனாலும் அந்த நாட்கள் மீண்டு வருமா?

Geetha Sambasivam said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இங்கேயும் வந்துடுத்து, நான் ரோபோவா எனக் கேட்டுக் கொண்டு.

வெங்கட் நாகராஜ் said...

Bபால்ய கால நட்புகளுடன் தொடர்ந்து நட்பில் இருப்பது ஆனந்தமான விஷயம். எனக்கும் சில பள்ளி/கல்லூரி நட்புகள் இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உங்கள் எண்ணங்களை சிறப்பாக பகிர்ந்து வரும் உங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இங்கேயும் கேட்கிறதா நீ யாருன்னு:(

எனக்கும் சில சமயம் வரும். பாவம் ப்ளாகருக்குக் குழம்பிப் போயிடறதுன்னு
நினைக்கிறேன்.!!!!

தோழிகள் சிலரைச் சந்தித்தபோது ஏமாற்றமே
மிஞ்சி இருக்கிறது. அவரவர் வாழ்க்கையில் மாறி விடுகிறார்கள்.

என்னைக் காண வந்த தோழியின் வீட்டுக்காரர்
ரொம்பக் கூச்சப்பட்டுக் கொண்டு வாசலிலேயே
நின்று விட்டார்:(

அவளுக்கு இரண்டு பெண் களும் ஒரு மகனும்.
மகனின் திருமணப்பத்திரிகை
அழகான முருகன் படத்துடன் வந்தது.
விருது நகரில் நடந்ததால் உடனே போக முடியவில்லை.

மனதில் அவர்கள் அன்பைப் பூட்டி வைக்க வேண்டியதுதான்
என்ன செய்வது. நீங்கள் சொல்லும் தோழிக்கும்
குடும்ப பாரம்.
பேசும்போதே கணவர் வந்து காப்பி கேட்கிறார்.:)))))

பழசு திரும்பாது. நம்மை பதம் செய்து கொள்ள வேண்டியதுதான்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...


Kamatchi Mahalingam
8:56 AM (0 minutes ago)
to me

அழகாக எழுதி இருக்கிறீர்கள் நானும் கடிதம் மூலம் நட்பு சுற்றம் யாவரையும் வளர்த்தவள் அன்புடன்

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி காமாட்சிமா. உங்கள் அனுபவம்
வணங்கக் கூடியது.
நாங்கள் நிறையக் கற்க வேண்டும் மா

Angel said...

//அந்தப் பதினாறு வயதுvarai கூடவே வந்த பிம்பங்கள் அவ்வளவு
எளிதாக நம்மை விட்டு நகர்வதில்லை.//

உண்மைதான் வல்லிம்மா .பள்ளிக்கால நட்புகளுடன் புகைப்படம் கூட எடுக்கலை எவ்வித தொடர்புமில்லாம போச்சு .கல்லூரி நட்பும் அப்படிதான் அவரவர்க்கு பல நியாயங்கள் வேலை பிசி .ஒரு நட்பை தேடி கண்டுபிடித்து கடிதம் எழுதினேன் ஒரே ஒரு லெட்டர் வந்து அப்புறம் அவரும் பிஸியாகிட்டாதார் .சரி விடுவோம் யாருக்கு நாம தேவையோ அவர்களிடம் அன்பை காட்டுவோம்ன்னு  இருந்துட்டேன் .அனால் மகளுக்கு அவள் 1 ஆம் வகுப்பு தோழி இப்போ இருவரும் வெவ்வேறு பல்கலைக்கழகம் என்றாலும் அடிக்கடி சந்தித்து பேசுவரகள் .நட்பை ஊக்குவிப்பதில் பெற்றோருக்கும் முக்கியப்பங்கு இருக்கு .

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,

இப்போது மாதிரி அப்போது படம் எடுக்கும் வசதி இல்லை.
எடுத்த படங்களும்
ஒன்றிரண்டில் என் கண்கள் எங்கே இருக்கிறது
என்று கூடத் தெரியாது.அவ்வளவு சூரிய வெளிச்சம்:)))))

உங்கள் மன வருட்தம் புரிகிறது.
எந்தத் தோழியின் பெயர் சொன்னாலே
எனக்குக் கண்ணில் நீர் வருமோ,'
அவளை ஒரு திருமணத்தில் சந்தித்து
ஆனந்த அதிர்ச்சி அடைந்தேன்.
அவளே என் மகனுக்கும் ஒரு பெண்ணைப் பார்த்துக் கொடுத்தாள்.
துரதிர்ஷ்ட வசமாக அந்த சம்பந்தம் நடக்கவில்லை.

அதில் அவளுக்கு மன வருத்தம். நான் என்ன செய்யட்டும்.
பிறகு அவளிடமிருந்து ஃபோன் வரவில்லை.
அந்தப் பழைய நட்பு விகல்பம் இல்லாதது
மறைந்து விட்டது.
இதுதான் உலகம்.