Blog Archive

Sunday, September 20, 2020

இனிக்கும் சர்க்கரை.ஏன் எப்படி?

வல்லிசிம்ஹன் 
டயாபெட்டீஸ் என்னும்   சர்க்கரை  நோய் எப்படி வருகிறது 
என்று  சில நாட்கள் முன்  எங்கள் ப்ளாகில் 
சில கருத்துக்களை பரிமாற்றம் செய்துகொண்டோம்.
அதன் விளைவு  இந்தப்  பதிவு.




சர்க்கரை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகளாகக் 
கொடுக்கப் பட்ட அட்டவணை.
பார்த்தாலே மயக்கம் வரும். அரிசியே கூடாது.
கோதுமை ரவைதான் சாப்பாடு. ,என்றெல்லாம் பயமுறுத்தி இப்பொழுது 
பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 
சமவிகித உணவுக்கு வந்திருக்கிறார்கள்.

பரம்பரையாக வரும் வியாதி என்று பார்த்தால் 
பாட்டிக்கு இருந்திருக்கிறது.
பெற்றோருக்குக் கிடையாது. என் சகோதரர்களுக்கு இல்லை
என்னை மட்டும் ஏன் பிடித்தது என்று தெரியவில்லை.
அதுவும் இன்ஷுரன்சுக்காகப் பரிசோதனை செய்யப்
 போகும்போது காலை பதினோரு மணிக்கு எடுக்கப்பட்ட 
ரத்தத்தில் இருந்த அளவு 400.

தலைசுற்றி விழலியா நீங்க என்றபடி என்னைப் 
பார்த்தார் மருத்துவர். ஏதாவது சாப்பிட்டுவிட்டு
வருகிறேன் என்று வெளியே வந்தேன்.
குடும்ப மருத்துவரைப் பார்த்த பிறகு மருந்துகள்
எழுதித் தந்தார்.
தினம் நடக்கச் சொன்னார்.
கடற்கரைக்குச் சென்றால் தெரிகிறது...நம்மை மாதிரி
ஆயிரக்கணக்கில் வெவ்வேறு நோய்கள், உடல் நலம்
பேண  என்று நடந்து கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்கள்.

இது 2004 இல்.
எங்கள் குடும்ப மருத்துவர் ,குடும்ப நிகழ்ச்சிகளைப்
பார்த்துக் கவனம் செலுத்துவார்.
சின்ன தம்பி திடீரென இறைவனடி அடைந்ததுதும்
என்னை அறியாமல் உடல் பாதிக்கப் பட்டது
என்று அவர் சொன்ன கணிப்பு.
82 வயதில் அந்த முதியவர் ஆதரவாகப் பேசிய போது
மனம் கொஞ்சம் சமாதானம் அடைந்தது.
சர்க்கரை அளவு மாத்திரை அளவும் குறைந்தது.

இதுதான் காரணம் என்று அறுதியிட்டு 
சொல்ல முடியவில்லை.
என் மாமியாருக்கும்,அவரது தந்தைக்கும்
டயபெடிஸ் இருந்தது.
ஆனால் என் கணவருக்கோ அவரது சகோதரிகளுக்கோ
 பாதிப்பில்லை.
இது என்ன மாதிரி நடக்கிறது என்று புரியவில்லை.
இப்போது எங்கள் மக்கள் எதிலும் சர்க்கரை சேர்ப்பதில்லை.
சேர்த்தாலும் கரும்பு சர்க்கரையே
உபயோகப் படுத்துகிறார்கள்.
இறைவன் எதிர்கால சந்ததிகளைக் காக்க வேண்டும்.

உணவு பழக்க வழக்கங்களுக்கும் இந்தப் பாதிப்புக்கும் 
என்ன சம்பந்தம் என்று புரிவது கடினம்.
காப்பிக்கோ டீக்கோ 4 தேக்கரண்டி சர்க்கரை
எடுத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.
அந்த அத்தைக்கெல்லாம் நீண்ட ஆயுளும், நிறைந்த ஆரோக்கியமும்
இருந்தது:)

நானும் இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அனைவரும் நலமாக இருக்க என் பிரார்த்தனைகள்.

15 comments:

நெல்லைத்தமிழன் said...

ஏன் டயாபடீஸ் என்று சொல்வது ஓரளவு அனுமானிக்கும் விஷயம்தான். ஏற்கனவே சொன்னதுபோல குளம் வெட்டி உண்பவர்கள் ஒல்லியா இருப்பாங்க, கொஞ்சமா சாப்பிடறவங்க குண்டா இருப்பாங்க. இனிப்பு கன்னா பின்னானு சாப்பிடறவங்களுக்கு சர்க்கரை இல்லாமலிருக்கும்.

அது சரி... இப்போல்லாம் வெல்லத்தில் நிறத்துக்காக கன்னா பின்னாவென கெமிக்கல் சேர்க்கறாங்க. மனுசன் எதையும் சாப்பிடக்கூடாது, சாப்பிட்டால் கண்டிப்பா அவங்களுக்கு நோய் வரவழைக்கணும்னு அவங்க திட்டம் போலிருக்கு. கெமிக்கல் சேர்க்காம வெல்லம் வியாபாரம் செய்தால் என்னவாம்?

Geetha Sambasivam said...

முன்னரே சொல்லி இருக்கேன் நானும் என் மாமியார் கரண்டியால் சர்க்கரை போட்டுப்பார். அவருக்குக் கடைசிவரை சர்க்கரையே இல்லை. மாமனாருக்கும் சர்க்கரை இல்லை. ஆனால் குடும்பத்தில் முதல் முதலாக இவருக்கு வந்தது. எனக்கு 2005 ஆம் ஆண்டு வரை சர்க்கரை கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அதன் பிறகு தான் சர்க்கரை அளவு ஏறியது. என்றாலும் அதுக்காக ரொம்பவெல்லாம் கட்டுப்பாடு இல்லை. கட்டுப்பாடு இல்லாமலும் இல்லை. உணவு எப்போதுமே குறைந்த அளவு தான். இதற்கும் மேல் குறைக்க முடியாது. இட்லியோ, தோசையோ 2, 3 க்குள் தான். சப்பாத்தியும் 2,3 தான். வந்தாச்சு! அதனுடன் வாழ்ந்தாக வேண்டும். வேறே வழி இல்லை. என்னைப் பொறுத்தவரை யோகா செய்யமுடியாமல் போனதும் ஒரு காரணம். கீழே உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாமல் போய்விட்டது. பிராணாயாமம் எல்லாம் பண்ணிட்டுக் கீழே இருந்து எழுந்துக்கிறது என்பது ஓர் வித்தையாக மாறிப் போச்சு. அதன் பின்னரே யோகா செய்வதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தும்படி ஆச்சு.

KILLERGEE Devakottai said...

ஆம் நாளைய சந்ததிகளை இறைவன் காக்கட்டும். காணொளிப்பாடல் அருமை அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா. ஆமாம் அது பெரிய புதிர்

எல்லோருக்கும் இப்போது ஆர்கானிக் வெல்லம் கிடைக்கிறது.
சுத்தமாகவே இருக்கிறது. அதில் கவலை இல்லை.
நடப்பதற்கும் அஞ்சுவதில்லை.

பலவித உணவுகள் நோயைக் கிளப்பவே உற்பத்தி செய்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது.

துரை செல்வராஜூ said...

இன்றைய காலத்தில் வெல்லத்தை ஆர்கானிக் வெல்லம் என்று வாங்கினால் அரும் பெரும் சாதனை என்று ஆகிவிட்டது... அக்காலத்தில் கொள்ளிடத்தின் தென்கரை கிராமங்களில் கரும்பு விவசாயிகள் வீட்டுக்கு வீடு வெல்லம் சர்க்கரை தயாரிப்பார்கள்..

அது யாரால் கெட்டுப் போனது?..

நம்மால் தான்... பழுப்பு நிற வெல்லத்தை யாரும் வாங்கத் தயாரில்லை..

வெள்ளைப் பட்டு போல் மினுக்கிக் கொண்டு சீனி பிரபலமாயிற்று.. இதைத்தான் சென்னை மாதிரியான ஊர்க்காரர்கள் சர்க்கரை என்கிறார்கள்...

இந்த சீனி கொண்டு வந்து சேர்த்த பிரச்னைகள் ஏராளம்...

இன்றைக்கு இயற்கை வெல்லம் என்று கலப்படமும் விற்பனையாகின்றன..

எல்லாம் காலத்தின் கோலம்...

திண்டுக்கல் தனபாலன் said...

எனக்கு 25 வருடத்திற்கும் மேலான நட்பு... நட்பை உயிரினும் மேலாக மதிப்பதால், உடலில் இருக்கும் இந்த குறைபாடு, அவ்வப்போது தவறு செய்தால் தண்டிக்கும்...!

எப்படியோ இது போன்ற பாடல்களும் அவ்வப்போது மருந்து அம்மா ...

நெல்லைத் தமிழன் said...

ஆர்கானிக் வெல்லம் - எல்லாத்தையும் ஆர்கானிக்னு சொல்லி நல்லா விலையை ஏத்தி நம்மளை ஏமாத்தறாங்க என்பதுதான் என் எண்ணம் வல்லிம்மா. ஆர்கானிக் என்று போட்டிருந்தாலே அதன் அருகிலேயே நான் போவதில்லை. அட் லீஸ்ட் இந்தியாவில் இதுதான் நிலைமை என்று நினைக்கிறேன். சும்மா ஆர்கானிக்னு சொல்லி வித்துடறாங்க

கோமதி அரசு said...

சர்க்கரை ஏன் வருகிறது என்று சொல்ல முடியாது.
சிறு குழந்தைகளுக்கு வருகிறது, பிறந்த குழந்தைக்கு வருகிறது.
கணையம் தன் வேலையை சரியாக செய்யவில்லை என்றால் ஏற்படும் என்கிறார்கள்.

நிறைய காரணம் சொல்கிறார்கள், அதை படித்தால் அது கவலையை போக்குவதற்கு பதில் அதிகரிக்கவே உதவுகிறது.

வந்து விட்டால் நம்மால் முடிந்ததை நம் உடம்பு ஒத்து கொள்வதை செய்து கொள்ள வேண்டும்.



கோமதி அரசு said...

பாடல் பிடித்த பாடல் கேட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
ஆமாம் படித்திருக்கிறேன்.
புரியாத புதிர்.
இந்த மரபணு விசேஷம்!!!! என் பெற்றோருக்கு
மார்பு அடைப்புதான் வந்தது.
சர்க்கரை இருந்தது இல்லை.
இத்தனைக்கும் மஹா பத்தியம். வெளியில்
சாப்பிட்டால் வயிறு அப்செட் ஆகிவிடும்.

இப்பொழுதும் திருமணங்களுக்குப் போனால்
வெறும் குழம்பு சாதம், தயிர் சாதம்
சாப்பிட்டு எழுந்து விடுவேன்.
ஏதாவது பழ ரசம் அருந்தினால் அன்னிக்கு
அந்த அந்த நாளே கெட்டு விடும்.

உங்களைப் போல இருக்கப் பழகிக் கொள்ளணும்.
இங்கே உப்பு உரைப்பு எண்ணெய் எல்லாமே குறைவு.

இருந்தும் இந்தத் தடவை ரத்தப் பரிசோதனையில்
ஆவரேஜ் 8 ஆக வந்திருக்கிறது.
ரத்த அழுத்தம் கூடினால் சர்க்கரையும் கூடும் என்பது கண்கூடு.

இருக்கும் வரை யாருக்கும் தொந்தரவில்லாமல்
இருக்கத்தான் பிரார்த்திக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி.
நீங்களும் நன்றாக இருக்க வேண்டும். உங்கள் சந்ததியும் நன்றாக இருக்க வேண்டும். நோய் நொடி இல்லாமல் இருக்க ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை நல் ஆசிகள் மா.
ஆமாம் குடிசைத்தொழில்களை ஒழித்து ஆலைகள் கையில்
புகுந்த கரும்பு வெள்ளை ரூபம் எடுத்து
நம்மை வாட்டுகிறது.
எங்க மகன் பெரியவன் சொல்வான்
வெள்ளை நிறத்தில் எந்த உணவையும் உட்கொள்ளாதே மா
என்பான். அவனும் சாப்பிட மாட்டான்.
பழுப்பு அரிசி, சோளம் என்றுதான் அவன் உணவு.

எல்லாவற்றிலேயும் கலப்படம் புகுந்து
மக்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது.
அந்த வியாபரிகளின்
பாபக் கணக்கு அவர்களை என்ன செய்யுமோ.

நம் குழந்தைகள் பேரக் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும். மனம் சதா அந்தப் பிரார்த்தனையில் தான்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் என்னம்மா இப்படி சொல்கிறீர்கள்.

எனக்குத் தெரியவே தெரியாதே.
நீங்கள் கவனமாக இருப்பீர்கள்.
இருந்தும் அலைச்சல் மிகுந்த தொழில் உங்களது.
இது கழைக்கூத்தாடி கயிற்றின் மேல்
நடப்பது போல, அதே சமயம் சலனப்
படாத மன நிலையில் நடத்த வேண்டிய வாழ்க்கை.

உங்களுக்கும் அதே போல இருக முடியும்.
என்றும் வளமுடன் இருக்க ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
உண்மைதான். இவர்கள் ஆர்கானிக் எருவிலிருந்து எல்லாத்துக்கும் ஆர்கானிக்
முத்திரையோடுதான் வாழ்கிறார்கள்.
இந்த ஊரில் நம்பலாம். தேங்காயிலிருந்து சர்க்கரை,
அதில் ஆரம்பித்து எத்தனையோ வித விதமாக சாப்பிட
நேர்த்தியாக உணவுகள் இருக்கின்றன.

உங்கள் ஃப்ரண்ட் திருமலை இருக்காரே
அவர் அம்மா, முக்கூரோட மகள். அவர்
எத்தனை நாட்களாக இனிப்புடன் அமைதியாக
இருக்கிறார்.
நடுவில் இதய சிகித்சையும் செய்துகொண்டார் என்று நம்புகிறேன்.
திட மனுஷி. நன்றாக இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா. ஆமாம் பிறக்கும் போதே அப்படித்தான் சொல்கிறார்கள்.
கணையம் தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம்.
நானெல்லாம் எவ்வளவோ தேவலை.
டைப் 1 டயபெடிஸ் இருந்தால்
இன்சுலின் வாங்க வேண்டும்
ஊசி ஏற்றிக் கொள்ள வேண்டும்.
சள்ளை பிடித்த நோயம்மா இது.
இங்கே லாக் டௌன் சமயத்தில் இன்சுலின் வாங்க
முடியாமல் தவித்த ஏழைகளும் உண்டு.

இறைவன் அனைவரையும் காக்கட்டும்.
நன்றி மா.