Tuesday, February 12, 2019

இன்னொரு உறவு ///2

வல்லிசிம்ஹன்  எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும்.

திருமணம்  நடந்தது 1965இல்

உஷா ஒரு சம்ஸ்க்ருத  முது நிலைப் பட்டதாரி.

மகேஷ்  இன்ஜினியரிங் படித்து அமெரிக்காவில் எம்.எஸ் செய்து வந்த பிறகே
பெற்றோர் பார்த்து நடந்த திருமணம்.
 இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசமே.

மஹேஷுக்குச் சென்னை சூழ்நிலை பிடிக்கவில்லை.
கொடைக்கானல், ஏற்காடு, உதகமண்டலம் என்று குளிர்ந்த பிரதேசங்களில் தன திறமைக்கு கேற்ற வேலையைத் தேடி, இந்த பிலிம்ஸ் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது.
எந்திரங்களை மேற்பார்வையிடும் வேலை அவனுக்குப் பிடித்திருந்தது.

ஆறு வருடங்களில் இரு குழந்தைகளுக்குத் தாயானால் உஷா.
அவளுக்குத் தேவையான  புத்தகங்கள், இசை அவளது பொழுது போக்கு.

குன்னூர்  மகளிர் மன்றத்தில் சேர்ந்து டென்னிஸ்,மற்றும்பலவிதமாகப்    பொழுது போனது.
குழந்தைகளை அங்கிருந்த ஆங்கிலப் பள்ளியில் கிண்டர் கார்ட்டனில் சேர்த்து அவர்களது வளர்ச்சியில்
மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

தாம்பத்ய வாழ்வின் உல்லாசத்தில் குறை இல்லை.
இன்று என்ன குறை  என்று தெரியவில்லை.

வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு விரைந்து சென்று திறந்தாள்.
உள்ளே வந்த மகேஷ்  , நான் சாப்பிட்டு விட்டேன் குட் நைட் என்று
படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டான்.

உஷாவுக்கு  சினம் எழுந்தது மனதில். அவனைப் பின் தொடர்ந்தாள்.
இன்னிக்கு உங்களுக்கு என்ன மூட் இது.
என்னிடம் சொன்னால்  எனக்கும் புரியும்.

இப்படி வெளியில் சாப்பிடுவது தெரிந்தால் நான் சாப்பிட்டுப் படுக்கப் போயிருப்பேன்.

கதவு திறக்க ஒரு ஆள் வைத்துவிடலாம்.என்றபடி நேரத்தைகே காட்டினாள். நீங்கள் வெளியே சென்றது 7 மணிக்கு. இப்போது 11.  என்ன செய்தீர் கள் என்று கேட்கவில்லை.

என்னிடம் சொல்லாமல் உங்களுக்கு என்ன வருத்தம்,கோபம் என்று படபடத்தாள் .
 கால் உரையைக் கழட்டிக் கொண்டிருந்த மகேஷ், நிமிர்ந்தான். என்னிடம் மறைக்க ஒன்றும் இல்லை. நான் என் தோழன்  ரமேஷுடன் சினிமா ஒன்று பார்த்துவிட்டு வருகிறேன்.

என் வருத்தம் ,கோபம் எல்லாவற்றுக்கும் நீதான் காரணம்.
உன் புதிய  தோழன்  சந்தர் , சென்னையிலிருந்து வந்திருக்கிறானே  அவன்.
நீயும்  அவனும் சம்ஸ்கிருதத்தில்  குமாரசம்பவம் நாடகம்  அரங்கேற்றப் போவதாகக் கேள்விப்பட்டேன்.
என்னைப்  பொறுத்தவரையில் எந்த சம்பவமும் நம் வாழ்க்கைக்கு வேண்டியதில்லை.

அவன் நல்லவனாக இருக்கலாம்.. நீயும் அப்பழுக்கில்லாமல் பழகலாம்.
இந்தக் குன்னூருக்கு அது தாங்காது.

என்று வார்த்தை பாணங்களை  வீசி வீட்டுக் குளியல்  அறையில் சென்று கதவை மூடிக் கொண்டான்.

உஷா ,திகைப்பில்  சிலையானாள் .
இன்றுதான் பேசியிருக்கிறோம். நாளை சொல்லலாம் என்று நினைத்திருந்தேன்.
இவனுக்கு என் இந்த அனாவசிய பொறாமை

என்று யோசித்தவள் மனம் குழம்பியது.
மெதுவே அகன்று குழந்தைகள் அறையில் சென்று
படுத்துவிட்டாள்.


13 comments:

வெங்கட் நாகராஜ் said...

அடடா.... இப்படிச் செல்கிறதா கதை.... தொடர்கிறேன்.

Angel said...

செம அட்டகாசமான பாட்டு செலக்க்ஷன் வல்லிம்மா .அடுத்த பகுதி எப்போ வரும்னு இருக்கு .அழகா எழுதறீங்க வல்லிம்மா .அழகான குடும்பத்தில் கல்லெறிந்தவர் யாரோ :( தொடர்கின்றேன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,

சில குடும்பங்களில் சரியான புரிதல் இல்லாமையும் மனக்குழப்பங்களும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.
தம்பதிகளுக்குள் பரஸ்பரம் நம்பிக்கை வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல் நல் வரவு கண்ணா.
இந்தக் குடும்பத்தில் நம்பிக்கை இல்லாத கணவனே கல்லாகிறான்.

வேறு யாராவது என்றால் இருவரும் சேர்ந்து
சமாளிக்கலாம்.

ஆமாம் இந்தப் பாட்டு எப்போதும் என் காதில் ஒலிக்கும் அழகு பாட்டு. முத்துராமனின் நடிப்பும் . எஸ்பீபீயின் குரலும் மெருகூட்டும் பொருள் நிறைந்த பாடல்.
மயங்குகிறாள் ஒரு மாது படம் நான் மிக ரசித்துப் பார்த்த படம்.
மிக நன்றி ஏஞ்சல்.

ஸ்ரீராம். said...

பொறாமைப் பாதையா? இப்படிச் சில விஷயங்கள் சங்கடமானவை. 'என்னையா சந்தேகப் படுகிறாய்' என்ற கேள்வியும், 'நீ இப்படிச் செய்யலாமா' என்கிற கேள்வியும் இரு கூர்க்கத்திகள்!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம், ஸ்ரீராம்.
படித்தவர்களும் சரி படிக்காதவர்களும் சரி இந்த
விஷயத்தில் வேறுபடுவதில்லை.

படித்தவர்கள் மத்தியில் ஈகோ பிரச்சினை வேறு.
எனக்குத் தெரிந்து இவருடைய கசின் ஒருவரின் மனைவி அவருக்குப் பேச்சுத்திறன் இல்லை என்று
அவரை விவாகரத்து செய்தார்.
பெண் வேறு திருமணம் செய்து கொண்டார்.
இவர் இறக்கும் வரை வேறு யாரையும் மணம் புரியவில்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

இணைத்த பாடலும் அருமை...

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், எனக்கு மிகப் பிடித்த இனிமையான
பாடல் மா. இனது போலக் கணவனும் மனைவியும் இணைந்து விட்டால்
அப்புறம் என்ன சங்கடம்.

Geetha Sambasivam said...

நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு, அதனாலே முழிக்குதே அம்மாப்பொண்ணு! :)))))

வல்லிசிம்ஹன் said...

அட கீதா மா. எனக்கு இந்தப் பாட்டு மிகவும் பிடிக்கும். என் தம்பி எஸெஸ் ஆர். மாதிரியே ஆடிக்காண்பிப்பான்.

ஆமாம் அவள் பொழுது போக்குக்காக இந்த நாடகம் ஆரம்பிக்க,அவனிடம் யாரோ வேறு விதமாகச் சொல்லக் குழப்பம் தான்.

Thulasidharan V Thillaiakathu said...

பாடல்கள் மிகவும் பொருத்தம். அடடா சந்தேகம் முளைத்துவிட்டதா? கஷ்டம்தாம்...அதுவும் நேரடியாகத் தெரிந்து கொள்ளாமல் இப்படி மூன்றாவது மனிதர் சொல்லுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் பிரச்சனைகள். கணவன் மனைவி உறவுக்குள் மூன்றாவது நபருக்கு இடம் கொடுக்காமல் இருத்தல் மிக நலம். அருமையாக இருக்கு தொடர்கிறோம் அம்மா

துளசிதரன், கீதா

கீதா: அம்மா கூடவே இந்தப் பகுதி எனக்கு என்னென்னவோ நினைவுகளை எழுப்பிவிட்டது.....

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி அண்ட் கீதா,

ஏதோ ஒரு வகையில் இந்த சந்தேகம் உள்ளே புகுந்துவிடுகிறது.

எங்களுக்கு நெருங்கிய உறவினர்களாக இருந்த தம்பதி இவர்கள்.

கொஞ்சம் 4,5 வயது அதிகம் இருக்கும். மிட் லைஃப் க்ரைசிஸ்
என்று சொல்லும் அளவு வயதாகவில்லை.34,32 தான் இருக்கும்.
ஜாதகம் பார்க்கும் போது இந்த compatibility பார்க்கவில்லையோ என்று உஷா வருத்தப்
படுவாள். மனித உணர்வுகள் எப்போது மேலோங்கும்,எப்போது கீழ் நோக்கிப் பாயும் என்பது தெரிவதில்லை.
எனக்குத் தெரிந்து அந்தக் கால கட்டத்தில் 3 குடும்பங்களில்
உறவு பிரிந்தது.

கோமதி அரசு said...

சந்தேகம் வந்தால் வாழ்க்கை பாதிக்க படும்.
தொடர்கிறேன்.