Blog Archive

Thursday, February 14, 2019

இன்னொரு உறவு 3

வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

யார் மகேஷிடம் தவறான செய்தியைச் சொல்லி இருப்பார்கள் என்று குழம்பிப் போனாள்  உஷா.

ஏற்கனவே அவன் மிக எளிதில் உணர்ச்சி  வசப்படுபவன்
என்று தெரியும்.
தன்னை சந்தேகப்படுவான் என்று யோசித்ததில்லை.

 சந்தர் , உஷாவுடன்  ப்ரெசிடென்சியில்  சம்ஸ்க்ருதம் படித்தவன்.
அந்த மொழி மேல் இருவருக்கும் ஆழ்ந்த பற்று உண்டு.
மயிலையில் இருக்கும் சம்ஸ்க்ருதக் கல்லூரியிலும்
 நாடகங்கள் ,உரைகள் நடத்தி இருக்கிறார்கள்.
இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. அவ்வளவுதான்.


சந்தரைத் திடீரென்று குன்னூரில் பார்த்தது உஷாவுக்கு அதிக
மகிழ்ச்சியைக் கொடுத்தது.
தினமும் செய்யும் சமையல்,வீட்டு சுத்தம், முதலிய
வீட்டு வேலைகளிலிருந்து அறிவு பூர்வமான
வேலைகளில் ஈடுபட அவளுக்கு ஆசை.
அது குடும்பத்தைப் பாதிக்காமல் இருக்க விரும்பினாள்.
சந்தருக்கு குன்னூர் டீ எஸ்டேட் ஒன்றில் 
தலமை அதிகாரிப் பொறுப்பு கிடைத்திருந்தது,.
அவனும் அவனது அழகு மனைவி மேனகாவும்
அங்கே வந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப்
பிறகே உஷா அவர்களை மகளிர் மன்றத்தில் சந்தித்தாள்.

அவன் சம்ஸ்க்ருதத்தில் கொண்ட பற்று மாறாமல்
ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவதைக் கண்டு
ஆச்சர்யப் பட்டாள்.
 கிளப்பின் தலைவி  இவர்களது ஆர்வத்தைப் பார்த்து
புதிதாக ஆண்டுவிழா நிகழ்ச்சியில்
இவர்களது எளிய நாடகம் ஒன்று அரங்கேற்றலாமெ
என்று அவள் தான் சொன்னாள்.

இந்த மொழி புரியாதவர்களுக்கு ஆங்கிலத்தில்
மொழி பெயர்ப்பு செய்து கையில் கொடுத்தால் அந்த 30 நிமிட
நாடகத்தை அருமையாகச் செய்யலாம்.

புதுமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்றும் சொன்னாள்.
இருவரும் யோசித்து குமாரசம்பவத்தில்
ஒரு எளிய சம்பாஷணையை எடுத்துக் கொண்டு
 அதைப் படித்து ஒரு நாடகம் போலச் செய்யலாம்.
உடை மாற்றம் எல்லாம் இல்லாமல்
சாதாரணமாகவே  வானொலி நாடகம் போலச் செய்யலாம் என்று தீர்மானம்
செய்தார்கள். மேனகாவிற்கும் சம்ஸ்க்ரித மொழியில் ஆவல் இருந்ததால்
அவளுக்கும் ஒரு பாகம் கொடுக்கப் பட்டது.

இவை எல்லாம் இரண்டு மூன்று நாட்கள் அவகாசத்தில்
தீர்மானிக்கப்
பட்டன. அதைச் சொல்ல அவள் ஆவலுடன் மஹேஷை எதிர்பார்த்திருந்த
போதுதான் இந்தத் திடீர் பிரச்சினை வந்தது.


12 comments:

ஸ்ரீராம். said...

இந்தப் பாடல் நான் கேட்டதில்லை வல்லிம்மா. சந்தேகக்கோடு அது சந்தோஷக்கேடு என்று ஒரு பாடல் கேட்டிருக்கிறேன். மஹேஷ் உஷா கதை என்ன ஆகிறது என்று அறியக் காத்திருக்கிறேன்.

Geetha Sambasivam said...

மிகவும் பிரபலமான அந்தக்காலப் பாடல். பொருத்தமானதும் கூட. ஆனால் பெண் பாடுவது போல் இந்தக் கதைக்கு வந்திருக்கணுமோ? முடிவு அறியக் காத்திருக்கேன்.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல பாடல் ஆனால் கேட்டதில்லை அம்மா..

//தினமும் செய்யும் சமையல்,வீட்டு சுத்தம், முதலிய
வீட்டு வேலைகளிலிருந்து அறிவு பூர்வமான
வேலைகளில் ஈடுபட அவளுக்கு ஆசை.//

மீண்டும் என்னென்னவோ மனதில் எண்ணங்கள்....

பெண்களுக்கு இதற்கான சந்தர்ப்பம் வீட்டில் கிடைத்தால், அவர்களது திறமைகளும் வெளியில் வரும். என்றாலும் கணவனுக்கு ஈகோ கொஞ்சம் அதீதமாக இருந்தால் கஷ்டம்தான்....இதை ஒரு சில வீடுகளில் காண முடிகிறது.....

கண்டிப்பாக உங்கள் முடிவு நல்லதாக சுபமாகத்தான் முடியும்...எனவே அந்த நம்பிக்கையுடன் தொடர்கிறோம்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆனால் தலைப்பு இன்னொரு உறவு என்பதைப் பார்த்ததும் ஓ என்று தோன்றியது ஆனால் உங்கள் முடிவு கண்டிப்பாக நல்லதாகப் பாசிட்டிவாகத்தான் இருக்கும்...

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல முடிவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறன் அம்மா...

Angel said...

மஹேஷுக்கு அந்நேரம் மிட் லைஃப் க்ரைசிஸ் ஆக இருந்திருக்கக்கூடும் .பொதுவா சொல்வாங்க 40 களில் ஒரு பொஸசிவ்னெஸ் கோபம் எல்லாம் அதீதமா வரும்னு ..நல்லவரையும் கெட்டவராக்கக்கூடும் நிலை சூழல் இது சந்தேகக்கோடு அது சாபக்கேடு . பாவம் உஷா .என்ன நடக்குது என்று அறிய தொடர்கின்றேன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
இது ரொம்பப் பழைய பாட்டுமா.
நான் ஆறு வயதிலிருந்து வானொலி சினிமா பாடல்களைக் கேட்கிறேன்.
நீங்கள் அப்போது பிறந்து கூட இருக்க மாட்டீர்கள்.

சில பாடல்களை மறப்பதே இல்லை..சந்தேகம் பெரிய நோய்.
விடுபட்டால் நன்மை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, ஆமாம் அந்தக் கால பிரபலம் இந்தப் பாட்டு.
இன்று எழுதி விடுகிறேன்.
பெண் பாடுவது போலத் தேடினேன். மிகச் சோகமாக இருந்தது.
வேண்டாம் என்று விட்டு விட்டேன் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா அண்ட் துளசி,

நான் நிஜத்தில் நடந்ததை எழுதி விடுகிறேன்.
80 பர்செண்ட் தம்பதிகள் பிரிவதில்லை. மன வேதனை அதிகமாகும் போது
பிரிவு நிகழ்கிறது. நீங்கள் சொல்லும் காரணம் மிக முக்கியம்.
பெண்கள் தங்கள் சுயத்தை இழந்தால் தான்
குடும்ப ஒற்றுமை நீடிக்கும் என்று வரும்பொது பெண் தோற்கிறாள்.
குடும்பத்தை சமூகம் ஏற்கிறது.

இப்போதும் இதுவே நிஜம்.எத்தனை பெண்களைப் பார்க்கிறேன்.
பொறுமை காக்கிறார்கள்.

கண்ணில் மட்டும் சோகம் தேங்கி நிற்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
திரைப்படங்களில் சுபம் போட்டு, திரை போட்டு விடுகிறார்கள்.
உண்மை வாழ்க்கையில் நடப்பது வேறு படுகிறது.
நன்மையில் முடியும் கதைகள் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

ஓஹோ. உங்களுக்குக் கடிதம் எழுதி இருந்தேன்.
உங்களை கைபேசியில் அழைத்தும் பார்த்தேன்.
நேரம் இருக்கும் போது பாருங்கள்.
அன்புக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
அப்போது அவருக்கு 36 வயது ,உஷாவுக்கு 34 இருக்கும் என்று நினைக்கிறேன்.
பொதுவாகக் கூடா நட்பு ,கணவர்களுக்கு அமைந்தால்,திடமாக இருப்பவர்கள்
மனைவியைச் சந்தேகிப்பதில்லை.

தடுமாறும் நெஞ்சம் இருந்தால், தீர விசாரிக்காமல் தண்டிக்கிறார்கள்.
முழுவதும் பெற்றொர் வளர்ப்பிலும், வசதி நிறைந்த வாழ்விலும்
மாறுபடுகிறது. நான் மஹேஷை நினைத்து மிகவும் வருந்துகிறேன்.
தானும் இன்பமுறாமல், குடும்பத்தையும் வருத்திய பிறகு,
யோசித்தால் என்ன லாபம். நன்றி கண்ணா.வாழ்க வளமுடன்.

கோமதி அரசு said...

பிரிவுக்கு நிறைய காரணங்கள் , அதில் சந்தேகம் ஒன்று.