Blog Archive

Saturday, November 03, 2018

புதுப்பயணம் 4

Vallisimhan
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.

அடுத்த நாள் சனிக்கிழமை.
அன்று  எப்பொழுதும் போல பூஜை முறைகள் உண்டு. கொஞ்சம் தாமதமாக
ஆரம்பித்தன. பெரிய மாமியாருக்குத் துணையாக வனிதா தோட்டத்திலிருந்து பூக்கள் கூடை நிறையக் கொண்டுவந்து வைத்தாள்.

சந்துருவின் அம்மா, துளசி மாடத்தை நன்கு  சுத்தம் செய்து,
கோலமிட்டுப் பூஜைகளைச் செய்து கொண்டிருந்தார்.

வழக்கமான வழிபாடுகள் முடிந்ததும், அனைவரும் காலை உணவை
சேர்ந்து உட்கார ராதா அம்மா, வனிதா, இன்னோரு உதவிக்கான அம்மா
எல்லாரும் பரிமாற சந்தோஷமாகப் பேச்சு  சத்தம் ஆரம்பித்தது.
.
சந்துருவின் சகோதரிகள்  எல்லோருடைய அன்பிலும் நனைந்தபடி
உற்சாகமாக உரையாடினர். 
பெரியப்பா,பெரியம்மாவுக்குக் குழந்தைகள் இல்லை.
தம்பி குழந்தைகளே அவர்களது செல்வங்கள்.
அதுவும் இப்போது வந்த மருமகளிடம் இன்னும் அதிகப்
பாசம் வைத்திருந்தனர்.
அவளிடம் பணிவும். சொன்னதும் வார்த்தைகளை நிறைவேற்றுவதும்
மிகப் பிடித்திருந்தன.

காலை உணவு முடிந்ததும் அனைவரும்  வரவேற்புக் கூடத்தில் நிதானமாக உட்கார்ந்து
பேசிக்கொண்டிருந்த போது, வரப் போகும் தீபாவளிக்கான
உடைகள் வாங்க முடிவு செய்யப் பட்டது.
அம்மா,பெரியம்மா, சந்துருவும் தி.நகர் நல்லியில் புடவைகள் வாங்குவதாகவும்,

வனிதாவும், பெண்களும் RMKV போவதாகவும் தீர்மானம்.
சந்துரு அம்மா, பெரியம்மாவை விட்டு நல்லியில் இறக்கிவிட்டுவிட்டு
ஆரெம்கேவிக்கு வந்து விட்டான்.

வனிதாவின் முகம் மலர்ந்தது அவனைப் பார்த்ததும்.
தங்கைகளுக்கும் ,அவளுக்கும் உயர்தரத்தில்  சுடிதார் 
வகைகளை வாங்கிக் கொடுத்தான் சந்துரு,.

அங்கேயே அவனுக்குப் பிடித்தவிதத்தில் இரண்டு மூன்று சட்டைகளை எடுத்தாள்.

முடித்துக் கொண்டு அவர்கள் கிளம்பவும், சந்துரு நல்லிக்கு வந்தான்,
அங்கேயும் எல்லோருக்கும் வேட்டிகளும்,பட்டுப் புடவைகளையும்
முப்பாத்தம்மனுக்கு ஒரு அரக்குப் புடவையும் எடுத்துக் கொண்டு திருப்தியாக வீடு திரும்பினார்கள்.
 மீண்டும் சாப்பாட்டு மேஜையில் குழுமியவர்களுக்குப் பெரியப்பா
அவரவருக்கான புடவைகள் எல்லாம் எடுத்துக் கொடுத்தார். 
அத்தனை அழகான தரமான அவரவர்க்குப் பிடித்த வர்ணங்களில் 
அமைந்திருந்த புடவைகளைப் பார்த்ததும்
ஒவ்வொருவர் முகத்திலும் மகிழ்ச்சி அளவில்லாமல் நிறைந்தது.
சந்துருவின் தங்கைகள்  பெரியப்பாவின் இருபக்கமும் நின்றி அவர் முகத்தோடு 
ஒட்டி அணைத்துக் கொண்டார்கள்.

பெரியப்பாவின் கண்களில் நீர்.எப்பவும் சந்தோஷமாக இருங்கடா தங்கங்களே என்று சொல்லிஉச்சி முகர்ந்தார்.
அவர்கண்  வனிதா பக்கம் திரும்பியது.
அவள் கண் இன்னும் புடவையிலிருந்து எடுபட வில்லை.
இத்தனை பெரிய பார்டர். இளம்சிவப்பும்,பச்சையும் புடவையின் மேல் பக்கமும் கீழேயும்
இருக்க ஓர் அடி அகலத்துக்கு ஜரிகை ஓடக் கண்களைப் பறித்தது அவள் புடவை.
என்னம்மா ,வனி, உனக்குத் தலை தீபாவளி ...மறந்துட்டியா என்று சிரித்தார்கள் 
பெரியவர்கள். சட்டென்று எழுந்தவள். அப்படியே அவர்கள் காலில் விழுந்து வணங்கினாள்.

பெரியம்மாவும், மாமியாரும் அவளை அப்படியே அணைத்துக் கொண்டார்கள்.
நீ எங்கள் வீட்டுக்குக் கிடைத்த பொக்கிஷம்மா.
தீர்க்காயுசுடன் சந்துருவோடு குடும்பம் தழைக்க வாழணும் என்று 
ஆசிகள் வழங்கினார்கள்.

சந்துரு எனக்கு என்ன அவள் மாத்திரம் ஸ்பெஷலா
என்று கூவ சட்டென்று உணர்ச்சியிலிருந்து விடுபட்டுப் பழைய கலகலப்பு வந்தது.
இந்தாடா போனாப் போகிறதுன்னு 
இதை வாங்கி வைத்திருக்கேன் என்று விலை உயர்ந்த
கைக்கடிகாரத்தை அவனிடம் கொடுத்தார்
உலகத்தரம் வாய்ந்த கைக்கடிகாரம். ஒரு நவ நாகரீக மனிதனுக்குத் தேவையான
அத்தனை  விஷயங்களும் அதில் அடங்கி இருந்தன.
அடடா, பெரியப்பா பதினாறடி பாய்ந்தால் நான் முப்பத்திரண்டடி
பாயணுமே  ...போனாப் போறது, நீங்க நாலு பேரும் சொகுசாப் பயணம் செய்ய ,இதோ ஒரு சாவி
என்று ஒரு பெரிய என்வலப்பை அவர் கையில் வைத்து வணங்கினான்.
என்னடா இது. என்று திறந்தவர் கையில் புது ஹோண்டா அக்கார்ட்  சாவி
கிடைத்தது .
இப்படி செலவு செய்வாயோ என்னடா பையா இது என்று செல்லமாகத் திட்டிய
பெரியப்பா அப்பா கண்களில் ஆர்வம் மின்னியது.

பின்ன எப்ப பார்த்தாலும் உங்களையும் கூட அழைத்துப் போகும்போது என் பெண்டாட்டியைக் கொஞ்ச நேரமே இருப்பதில்லை
என்று சொன்னவனைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.

தங்கைகளைக் கண்டு கண் சிமிட்டிய சந்துரு உங்கள் இருவருக்கும் பொங்கல்
விழாவுக்கு ஸ்கூட்டி வந்துவிடும் என்று புன்னகைத்தான். ஹை என்று இருவரும்
 அவனைச் சுற்றி வந்தனர். புது மதினி,எல்லாம் உன் ராசிதான்.
என்று வனிதாவையும் அணைத்துக் கொண்டனர்.

பெரியப்பா அப்பா புது வண்டி நாளைக்கு வந்துவிடும்.
எல்லோரும் கோவிலுக்குப் போகலாம் என்றான் சந்துரு.
இப்ப சாப்பிடலாமா மணி இரண்டாகப் போகிறது... அடுத்த பாகத்துடன் பூர்த்தி.
  எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்....தொடரும்.

No comments: