Blog Archive

Sunday, October 29, 2017

பெண் பார்த்து நிச்சயம் செய்தாச்சு 1965 October 31st.

picture coutesy   Mangai.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 அக்டோபர் 29 ஆம் தேதியும் வந்தது.
எனக்கு இருந்த சந்தோஷம் ,சென்னைக்குச் சென்று
தோழிகளைப்  பார்ப்பதுதான்.
மதுரையில் எங்களை வண்டி ஏற்றிவிட வந்திருந்த சித்தப்பா அப்பாவிடம்
 நிறைய விஷயங்களைச் சொன்னார்.
எப்படிப் பேச வேண்டும். திருமணத்துக்கு என்ன என்ன செலவு,
இது போல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். நம்மால் முடிந்தது இது தான். இதற்கு மேல் செலவழிக்க முடியாது  இது போல விஷயங்களே.
எனக்கு இதெல்லாம்  உரைக்கவில்லை.

அடிமனதில்  அடுத்த நாளைப் பற்றிப் பயம் இருந்தது.
யாரும் அதைப் பற்றி எல்லாம் பேசிக்கொள்ளவில்லை.
  முன் பின் தெரியாத மனிதர். எப்படி,என்ன குணம் என்றேல்லாம் தெரியாது.

திண்டுக்கல்லில் இருந்து எதிராஜில் படிக்க சந்தர்ப்பம் அமைந்ததைப் போல இதுவும் ஒரு
சவால். வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது.
டாக்சியையை விட்டு இறங்கினதுமே தோழி வீட்டில் சொல்லி விட்டுத்தான் பாட்டி வீட்டுக்கு விரைந்தேன்.
 ஏன் பாப்பா உன் பெண்ணுக்கு இப்படிச் செல்லம் கொடுத்திருக்கிறாய் என்று
பாட்டி கோபித்துக் கொண்டார். அவர்கள் பார்த்துப் பிடிக்கவில்லை என்றால்
 சங்கடமாகிவிடாதா என்று பாட்டிக்குக் கவலை.

 என் மனதில் ஏற்கனவே தீர்மானமாகிவிட்ட திருமணம்.
இது நடக்காது என்று நான் எண்ணவும் இல்லை,.
 டெல்லி மாமா வந்திருந்தார். ஜயா மன்னி என் உற்ற தோழி.
என்ன ஆண்டாள் உன் கல்யாணத்தை நீயே முடிவு செய்துட்டயா என்று பரிகாசம் செய்தார்.
  அப்பாவும் மாமாவும் போய்ப் பழங்கள், பூ,சந்தனம்,
வெற்றிலை,மஞ்சள் எல்லாம் வாங்கி வந்தனர்.
அடுத்தனாள் 31 ஆம் தேதி காலையில்  கமலம்மாவிடமிருந்து தொலைபேசி.
நாங்கள் ஒரு திருமணத்துக்குப் போய்விட்டு நேரே அங்கே வருகிறோம்,
எங்களுக்கென்று ஒன்றும் பலகாரம் வேண்டாம்.
பெண் சிம்பிளாக  இருந்தால் போதும் என்று  சொல்லிவிட்டாலும், புத்தம்புது டிகாக்ஷன் போட்டு, புதுப்பால்  காய்ச்சி வைத்திருந்தார் பாட்டி.
பாட்டிக்கு எப்போதும் துணைக்கு வரும் ஜீயா முத்தண்ணா.,அம்மாமி, என் மாமாக்கள் நால்வர்,
வீட்டில் நிற்கக் கூட இடமில்லை. பாட்டி முன்கூட்டியே, வாசல்புற இரு அறைகளையும்
ஒழித்து, திரைச்சீலை போட்டு, ஆண்கள் உட்கார நாற்காலிகளும்,
பெண்கள் உட்கார  கல்யாண ஜமக்காளமும் போட்டு வைக்கச் சொன்னார்.
 பின் அறையில் புடவை கட்டிக் கொண்டு, நான்கு  பக்கத்திலும் இருந்து வரும்
புத்திமதிகளுக்கு தலையை ஆட்டிக் கொண்டிருந்தேன்.
என்னைத் தவிர அனைவரும்  அட்டென்ஷனில் இருக்கும் போது இரண்டு அம்பாஸடர் கார்கள் வாயிலில் வந்து நின்றன. அதற்குப் பிறகு நடந்ததெல்லாம்
பதிவுகளாகப் போட்டு பத்து வருடங்கள் ஆகிறது. பார்த்தோம், பிடித்தது,
திருமணம் நிச்சயம் அப்போதே ஆகிவிட்டது. வாழ்க வளமுடன்.

Saturday, October 28, 2017

பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்1965

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  அக்டோபர் 27  க்கான 1965 வருடக்
 குறிப்பு.  பழைய சினிமாக் காட்சிகளில்,
இல்லை கதைப் புத்தகங்களில்  அம்மா பஜ்ஜி செய்வாள். பெண்
 தங்கை தம்பி கிட்ட ஐடியா கேட்டுப்பா.
தோழி வந்து உதவி செய்வாள். நமக்கு அப்படி எல்லாம் கிடையாதே.
வெள்ளி  கிளம்புகிறோம்.
சனிக்கிழமைக்கு தாவணி பாவாடை போதும்.
ஞாயிற்றுக்கிழமைக்குப் புடவை, காசுமாலி, கைக்க ரெண்டு வளையல் சரி வெல்வெட் பெட்டியில் வைத்து உள்ள வைத்தாச்சு.
 திங்கள்  கிழமைக்கு  ஒயிட் பூ போட்ட தாவணி, பிங்க் பாவாடை, பிங்க் சட்டை.
 ஹ்ம்ம் ரெட்டைப் பின்னல் எல்லாம் மறந்துட வேண்டியதுதான்.
ரயில் அழுக்குப் படியுமோ. பரவாயில்லை. ...

அம்மா வந்தார், எந்த லோகத்தில இருக்கே. லாத்திண்டே இருந்தால் என்ன நடக்கும்..
சின்னவனுக்குக் கணக்குப் போட்டுக் கொடு என்று கலைத்துவிட்டுப் போனார்.
சிடுசிடுவென்று இருந்தவனைச் சமாதானப் படுத்தி
நாம் இன்னோரு தடவை போகலாம்டா. இந்தத் தடவை சாரிடான்னு
சரிக்கட்டினேன். என் அன்பு ரங்கனும் அப்பாவிடம் சொல்லி காரம்போர்ட்.
ஸ்ட்ரைக்கர் இரண்டு வாங்கி வரச் சொன்னான்.
 புஸ்தகமும் வாங்கிண்டு வரேண்டா என்று ப்ராமிஸ் செய்தேன்.
28...அக்டோபர்....... மீனாக்ஷி அம்மன் கோவில். புதுமண்டபத்தில் கண்ணாடி வளையல். நிறைய மல்லிப்பூ
எல்லாம் வாங்கி வந்தாச்சு. இனி சலோ மெட்ராஸ் தான்.

Wednesday, October 25, 2017

நான்கு ஆண்டுகள் நிறைவு.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சென்னைக்கு மழை வருகிறது. நல்ல செய்தி. நம் வீட்டுக்குத் தண்ணீர் விடுவார்களா என்று தெரியவில்லை.
 வழக்கமாக இந்த நாட்கள் சென்னையில் 
இருப்பேன். வருடா வருடம் நிறைவேற்ற வேண்டிய
பித்ருக் கடமைகளைப் பிள்ளைகள்
அருமையாக நிறைவேற்றுகிற்றுவார்கள்.
உறவுகளை அழைத்து  ஒன்று கூடி 
சிங்கத்தை நினைவு கூறுவோம். 
அவரது அத்தை மகன், பெரியப்பா மகன் ,
சித்தப்பா மகன் என்று அனைவரும் வந்துவிடுவார்கள்.

இந்தக் குடும்பத்தின் அருமையை எனக்குக் காட்டிக் கொடுத்த சிங்கத்தை 
எண்ணி எண்ணிப் பெருமைப் படுவேன்.
அருமை,அன்பு மட்டுமே சூழ்ந்த உறவுகள்.
இந்த முறை அங்கு போக முடியவில்லை
என்பது மனம் தாளாத வருத்தம்.
மனம் செல்லும் வேகம் உடல் செல்லவில்லை.
என் அன்பு ஓர்ப்படி ராதா மாதவன்  இறுதியாகச் சிங்கம் கிளம்பும்போது என்னை இறுக்கி அணைத்து ஆதரவு காட்டியது மனதில் நிற்கிறது.
அனைவருக்கும் என் உள்ளம் கடன் பட்டிருக்கிறது.
இன்னோரு உள்ளம் என் தம்பி. அவன் இப்போது இல்லை
அவனுக்கும் என் நன்றி.
வாழ்க வளமுடன் அனைவரும்.

Sunday, October 22, 2017

மீண்டும் பார்க்கலாம்

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பயணங்கள்..... இனித் தொடரும்
++++++++++++++++++++++++++++++++++++++++
 திருச்செந்தூரில்  ஒரு குன்றின் மேல் மண்டபம்
பார்க்கச் சென்ற நினைவு. அங்கு  கொண்டு போன உணவை
உண்டு இளைப்பாறி அலைகள் சீறும் கடற்கரைக்கு வந்தோம்.
 பாட்டியும் அம்மாவும்  சாப்பிட்ட பாத்திரங்களை தண்ணீரில் முக்கை அலம்ப முற்படுகையில் பாத்திரங்களை அலைகள் எடுத்துப் போயின. தாத்தாவுக்குப் படு கோபம்.
அதென்ன அவசரம்.
   ஊருக்குப் போய்ச் சுத்தம் செய்து கொள்ளக் கூடாதா என்று
சொல்லவும் அம்மா பாட்டி இருவரும் கரைக்கு வந்துவிட்டனர்.
 நம்ம ஊரு தாமிரபரணின்னு நினைச்சிட்டுயா, தேய்த்து எடுத்துண்டு வரத்துக்கு
என்று அப்புறம் ஒரே சிரிப்பு.
 குறுங்குடி,ஸ்ரீவைகுண்டம்,பின் திரு நெல்வேலியில் அவர்கள் இருந்த போதுதான், அப்பா, பெரிய சித்தப்பாவுக்குத் திருமணங்கள் நடந்திருக்கின்றன.

பெரிய சித்தப்பாவுக்கு திருநெல்வேலி டிவிஎஸ் சில் வேலை.
பிறகு கோவைக்கு மாற்றிச் சென்றார்.  திருச்செந்தூரிலிருந்து , குறுங்குடி வந்து
 பிரியா விடை பெற்றுக்கொண்டு மதுரை வந்து சேர்ந்தோம்.
அடுத்த பயணம்  சமயபுரம், திருச்சி,கோவை, குருவாயூர்
என்று தொடர்ந்தது. மீண்டும் பார்க்கலாம். நன்றி நண்பர்களே.

Friday, October 20, 2017

1972 ஒரு தீபாவளியின் புது 4 ஆம் பாகம்

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அடுத்த நாளும் நான்கு  மணிக்கே எழுந்துவிட்டாள்  மைதிலி
காப்பி குடித்த கையோடு  ஸ்ரீனிவாசனையும் எழுப்பி,
அன்றைய திட்டங்களை விவரித்தாள். அரிசி, உளுந்து ஊறப் போட்டுவிட்டு
வந்தாள்.
 இன்னிக்கு ரங்கம்,குழந்தைகள் எல்லோரும் வந்துவிடுவார்கள்.
யாராவது வீட்டில் இருக்க வேண்டாமா என்று
சந்தேகம் எழுப்பினான் ஸ்ரீனிவாசன்.

குழந்தைகளுக்கு இன்று லீவு. இதோ இங்க இருக்கற சிந்தாமணிக்கு நம்மால்
போய் வர முடியாதா
என்று சொல்லி அவனையும் ஜரூர் செய்தாள்.
 அக்கா வரும் சந்தோஷம் ,குளியலறையிலிருந்து பாட்டாக
ஒலித்தது.
மைதிலி முகத்தில் புன்னகை ஓடியது. செட்டியார் அம்மா வரவழைத்துக் கொடுத்த சிகப்பும் பச்சையும் பூக்கள் வரைந்த  ஷிஃபான் புடவை அணிந்து அவள் தயாராகிக் குழந்தைகளை எழுப்பினாள்.
பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருங்கள், அப்பாவும் நானும் வந்து விடுகிறோம்
என்றபடி அவர்களுக்குச் சாப்பிடக் கொடுத்து,
   லீலா நாயரிடம் ஒப்படைத்து விட்டு இருவரும் கிளம்பினார்கள்.
உடனே பஸ் கிடைத்தது தான் அதிசயம்.
  சிந்தாமணியில் இறங்கி பரபரவென்று, வெற்றிலை, களிப்பாக்கு,சந்தனம்,
சீனுவுக்கு வேஷ்டி ,பச்சைக்கரை போட்டது,
சாரதாவுக்கு வாயில் தாவணி, பாவாடைத்துணி,சட்டைத்துணி எல்லாம் வாங்கி மீதி இருந்தது
 35 ரூபாய்.
உலகமே தன் கைவசமான சந்தோஷத்தில்
வீட்டுக்குத் திரும்பியவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.
 நாத்தனார் ரங்க நாயகியின் கார் நின்றதுதான் காரணம்.
வாங்கோ வாங்கோ குழந்தைகளா என்று ரங்கம் ,மைதிலியை அணைத்துக் கொண்டாள்.
அவள் அகத்துக்காரரோ சீனுவைத் தட்டிக் கொடுத்தபடி உள்ளே அழைத்துச் சென்றார்.

 என்ன அக்கா இது சாயந்திரம் வருவீர்கள் என்று நினைத்து வெளியே போய் விட்டோமே
  என்று அழாத குறையாகச் சொன்னாள் மைதிலி.
என் தம்பி வீடுதானே. என்னை வான்னு கூப்பிட்டு ஆரத்தி எடுக்கணுமா, பைத்தியமே என்று அணைத்துக் கொண்ட ரங்கத்தை விழுங்குவது போலப் பார்க்கத் தோன்றியது மைதிலிக்கு.
 என்ன அழகுமா நீ. என்ன பாந்தம் ரங்க நாச்சியாரே எங்கள் அகம் வந்தது போல இருக்கு.
என்றபடிக் குழந்தைகளைக் கவனித்தாள். மாதவனும் கேசவனும் ஹலோ மாமி என்று அழைத்தார்கள்.
என்னடா இப்படி உசந்துவிட்டீர்கள் என்று பிரமித்தாள்.
 சரி சரி ராகு காலத்துக்கு முனாடி எங்களை சேவி என்று உத்தரவு போட்டாள் ரங்கம்..
காஃபி ஏதாவது கொடுக்கிறேனே.
எல்லாம் ஆச்சு. வரவழியில் நாங்களே பாலும் வாங்கி வந்து விட்டோம்.
சொன்னதைச் செய் என்றதும்
இருவரும் தங்கள் சீரை இரு தட்டுகளில் வைத்து அக்கா அத்திம்பேரிடம் கொடுத்து வணங்கினார்கள்.
 வாங்கோ அக்கா, உள்ள வேலை இருக்கு


இதோ நாற்காலி போடுகிறேன் என்று நகரப் போனவளை,
நில்லுடி பொண்ணே, என்றபடிக் கணவரை விளித்தாள்.
 கை நிறையப் பைகளோடு ,வண்டியிலிருந்து எடுத்து வந்த
பட்டாசுக் கட்டுகள் எல்லாவற்றுடனும் அவரும் வந்தார்.
மைதிலி,குழந்தைகள் எல்லோரும் பிரமிப்போடு பார்க்க
 ஆலிவ் க்ரீன் மைசூர் சில்க் புடவை, மயில்கண் வேஷ்டி, பெண்குழந்தைகளுக்கு நீலமும்,
சிகப்புமாக புதுவிதமான ஃப்ராக், பையன்களுக்கு  கச்சிதமான ரெடிமேட் பாண்ட் ,ஷர்ட்
என்று அசத்திவிட்டார்கள்.
 கிருஷ்ணனும் ருக்மிணியும் வந்து கருணை செய்கிறார்களோ என்று கண்ணில்
கலக்கம் தோன்றியது. ரங்கம் மீண்டும் அணைத்துக் கொண்டாள்.
  பைறகென்ன , வெளியே பட்டாசு, உள்ளே லேகிய மணம், உக்கோரை,
 மருதாணி அரைக்கும் மணம்  பரவியது. சமைத்துச் சாப்பிட்டு,வெற்றிலை போட்டுக் கொள்ளும்போது இட்லி அரைக்கும் நினைவு வர எழுந்தாள்.
அலுப்பில் சற்றே உறங்கிய ரங்கமும் வந்து சேர்ந்து
சுலபமாக வேலை நிறை வேறியது.
கனவு போல இந்தத் தீபாவளி நடப்பதை நம்ப முடியாமல் மகிழ்ச்சியில் திளைத்தது மைதிலியின் குடும்பம் ரங்க நாயகியின் அன்பால்.
http://naachiyaar.blogspot.com/2012/11/1972.html  முதல் பகுதி

http://naachiyaar.blogspot.com/2012/11/1972-2.html  இரண்டாம் பகுதி

http://naachiyaar.blogspot.com/2012/11/19723.html    மூன்றாம் பகுதி

புதிதாகப்  படிப்பவர்களுக்கு 😃😃😃😃😃😃


Wednesday, October 18, 2017

பயணங்கள் 4 ஆம் பாதம்

1956 பிளிமத் ஸ்டேஷன் வேகன். Google  உபயம் 
Add caption
இப்போதைய ஸ்ரீவைகுண்டம் சந்நிதித்தெரு 
ஸ்ரீவைகுண்டம் கோவில் கோபுரத்தில் ப்ரஹ்லாத வரதன் 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
குறுங்குடியில் இருந்த ஐந்து நாட்களும் தினம்
நம்பியாற்றில் குளிக்கத் தாத்தா அழைத்துச் சென்றார். யாருக்கும் நீந்தத் தெரியாது. கரையோரமாகவே காக்காக் குளியல் தான். இருந்தும் ஓடும் தண்ணிரின் இன்பம் இன்னும் மறக்க முடியாது.

பாட்டி சாதம் கைகளில் போடும்போது கதை சொல்வார் என்று எழுதி
இருந்தேன்.அப்போது மகேந்திர மலைக் கதையும் சொல்வார்.  மகேந்திர மலைக்கு
மேலே ஏறினால்  பரமபதம் தெரியும். என்பார்.
 தென்கோடியில் திருக்குறுங்குடி இருப்பதால்
யமலோகம்  பக்கம். சர்வ ஜாக்கிரதையாக நடக்கணும் 
என்று மனத்தில் பதிய வைத்தார். தந்தை தாய்க்கு பணிந்து நடக்க வேண்டும்.
பொய் சொல்லக் கூடாது. சித்திரகுப்தன் கேட்டுக் கொண்டே இருப்பான்.
இப்படி எல்லாம் சொல்லிச் சொல்லி எங்களைத் தப்பு வழிக்குப் போகாமல்
 செய்ததில் பாட்டிக்குப்  பெரும்பங்கு உண்டு.
தினம் வீட்டுக்குப் பின்புறமும் வாசல் பக்கமும்
 தீபங்கள் தினம் ஏற்றப்படும்.
அம்மியில் எப்பொழுதும் இஞ்சிச் சாற்றுக்கு அரைத்து
 தண்ணிர்கலந்து தேனுடன் கொடுப்பார்.
வேப்பமரத்திலிருந்து கொழுந்து பறித்து
சாப்பிடச் சொல்வார்.  இந்தப் பழக்கம் மதுரை வந்த பிறகும் தொடர்ந்தது.
     அடுத்த நாள் திருச்செந்தூர் போவதாக ஏற்பாடு. கூடவே கன்யாகுமரியும்
 சேர்ந்து கொண்டது.
கன்யாகுமரிக்கு  சூர்யோதயம் பார்க்கவே சென்று விட்டோம்.
அந்த அலைகளுக்கு நடுவே சங்கிலிகளைப் பிடித்தபடி  அப்பா
நின்றுகொள்ள, பற்கள் கிடுகிடுக்கக் குளித்த நினைவு இருக்கிறது.
அலைகளுக்கு நடுவே சித்தப்பாவும் அப்பாவும் எங்களையும்,பாட்டி
அம்மா,சித்தி  அனைவரையும் கவனித்துக் கொண்டார்கள். மாலை திருச்செந்தூர்.

Monday, October 16, 2017

பயணங்கள் 3 ஆம் பகுதி

Nambi AARU.
 அனுமனை அன்பில் அரவணைக்கும் இராமன். ஸ்ரீவைகுண்டம்  கோயில் 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அனைவருக்கும் இனிமை தழைக்கும் இனிய   தீபாவளி   வாழ்த்துக்கள்.   பயணங்கள் 3 ஆம் பகுதி
++++++++++++++++++++++++++++++++++
வண்டியை ஓட்டிய மாயாண்டி, எங்களுடையப் பிந்தியப் பயணங்களுக்கும் வந்தார்.
சுகமாகப் பயணம் செய்ய அவருடைய  ஓட்டுதலும், நகைச்சுவை உணர்வும் காரணம்.
 தாத்தாவிடம் அளவில்லாத மரியாதை.
உள்ளே  திண்ணையில் வந்து படுத்துக் கொள்ளப்பா என்றாலும் வரமாட்டார்.
வண்டியிலும் படுக்க மாட்டார். கோவிலில் போய்ப் படுத்துக்கொண்டு நம்பி ஆற்றில் குளித்துவிட்டு, 
white and white dress போட்டுக் கொண்டு வந்துவிடுவார்.
இத்தனை அன்பு,மரியாதைக்கு அவருடைய
நல்ல குணமும் மதுரை அக்காப் பாட்டியின்
 கரிசனமும் தான்
காரணம்.
 குறுங்குடிப் பாட்டி, அவர் பெயரே அதுதான்
 தன் தோழியைப் பார்க்கவந்துவிட்டுக்
கை நிறைய முறுக்கு, திரட்டிப்பால், எல்லாம் கொடுத்து,
அதைச் சேமிக்க ஒரு வெண்கலப்
பானையும் கொடுத்துவிட்டுப் போனார்.
அடுத்த நாள் பயணத்துக்கு அது உதவியது.
 ஸ்ரீவைகுண்டம் போனதும் தாத்தா  சென்றது தான் போஸ்ட்மாஸ்டராக இருந்த
தபால் அலுவலகத்துக்குத்தான்.
 அங்குதான் ரிடயரானதும். அப்பாவும் ,சித்தப்பாவும்
தாங்கள் அங்கு அனுபவித்த ,
செய்த லீலைகளை மீண்டும் சொல்லி மகிழ்ந்தார்கள்.
 அங்குதான் அத்தைகளுக்குப் பிரசவங்கள் நடந்ததாம்.
தாத்தாவிடம் புது பென்சில் கேட்க பயந்து  கொண்டு,
வாசலில் இருந்த தூணைச் சுற்றிச் சுற்றி வருவாராம் அப்பா.
அத்தை எனக்குச் சொல்லி இருக்கிறார்.
 லக்ஷ்மி அத்தைக்கு  மனசு கேக்காமல் ,சிபாரிசு செய்து
இன்னோரு பென்சில் வாங்கித்தருவாராம்.
 அவ்வளவு பயம் முத்தண்ணாவிடம். ஆமாம் அப்பா ,சித்தப்பாக்களுக்கும் தாத்தா
முத்தண்ணா தான்.
அதே போல ராஜகோபாலச் சித்தப்பா,
பரிட்சைக்குப் படிக்கும் மும்முரத்தில் , தூக்கம் கண்ணைச் சுழற்ற
 பக்கத்தில் இருந்த அரிக்கேன்   விளக்கின் மேல் சாய்ந்து கன்னம் முழுவதும் சுட்டுக் கொண்டாராம். இது அப்பா சொன்னது.
படிப்பவர்களுக்குச் சந்தேகம் வரலாம், இது கோவில் பயணமா ,
இல்லை வாழ்க்கைப் பயணமா என்று..
இரண்டும் என்று வைத்துக் கொள்ளலாமே.
பேசி மகிழ்ந்துகொண்டே கோவிலைச் சென்றடைந்தோம்.
தாத்தாவுக்கு அங்கே தனி மரியாதை.
 ஒவ்வொரு சிற்பமாகத் தன் கைத்தடியினால் சுட்டி,
எங்களுக்குக் கதை சொன்னது நினைவுக்கு வருகிறது.
என்ன கதை என்று கூகிளாரிடம் தான் கேட்க வேண்டும்.

Sunday, October 15, 2017

பயணங்கள் 2 ஆம் பாதம்

😊 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஆமாம் .செகண்ட்  லெக் னும் வைத்துக்கொள்ளலாம். மீன ராசிக்குப் பாத ரஜ்ஜு என்பதால் பாதம் 2 என்றும்  வைத்துக் கொள்ளலாம்.😊
அதிகாலை 4 மணிக்கு எல்லோரும் தயார். நானும் தம்பிகளும்  பேச்சிலேயே தூங்கி விழித்தோம். யார் முன் ஸீட். யார் பின் ஸீட் இல்லை என்றால்  ட்ரங்க்  என்று சொல்லப் படும் டிக்கி.
இந்த வண்டியில் அந்த வண்டிக்குள்ளேயே இருந்ததால், அப்பா உணவுப் பொருட்களையும் எங்களையும் ஒரு ஜமுக்காளம் விரித்து உட்கார வைத்தார்.
 எங்களுக்கு முன் இருந்த இருக்கையில் அம்மா,சித்தி,பாட்டி,அப்பா.
வண்டி ஓட்டுநர் மாயாண்டி. அவர் அருகில் தாத்தாவும் சித்தப்பாவும்.
78 வயசில் தாத்தா மிக்க  கம்பீரமாக, வெள்ளைப் பஞ்சகச்சமும், வெள்ளை முக்கால் கை  சட்டையுமாக   இருப்பார். அவருக்கு என் முதல் தம்பி முரளியை ரொம்ம்ம்ம்பப் பிடிக்கும்.

அடக்கமே உருவெடுத்து வந்த ராகவன் இவன் என்பார்.
நான் வாயாடி, சின்னவன் ரங்கனுக்கு விஷமம்
நாங்கள் இந்த லேபில் 😀😀 எல்லாம் தட்டிவிட்டு எப்போதும் போலவே இருப்போம்.
இந்தப் படமும்  அந்தப் பயணங்களில் எடுத்ததுதான்.
 அன்று  பயணம் எடுத்த நேரம்   6 மணியாவது இருக்கும்.
திரு நெல்வேலியில் உறவினர் வீட்டுக்குப் போய் விட்டு, நேரே திருக்குறுங்குடி சென்றுவிட்டோம்.
அப்போது  தாத்தாவீடும் அவரது தம்பி வீடும் பக்கத்துப் பக்கத்தில் இருந்தது. இருவீட்டுக்கும் ஒரே கிணறு.
முதல் முதலில் அது போல ஒரு கிராமத்துவீட்டைப் பார்ப்பது மிக வேடிக்கை..

வீட்டு வாசலில் திண்ணை.
உள்ளே பெரிய கூடம். அதை அடுத்து உரல், ஆட்டும்  உரால், மாவரைக்கும் யந்திரம். ஒரு பக்கம் கிணறு. அதில் ஒரு தடுப்பு.
தடுப்புக்கு அப்பால்  தாத்தாவின் தம்பி வீட்டு  சகடை  உருளும் சத்தம்.
தாத்தாவின் தம்பி இறந்துவிட்டதால் அந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டார்கள்.
பாட்டி முகத்தில் இருந்த ஆனந்தம்  சொல்லி முடியாது.

அப்பாவும் சித்தப்பாவும் தாங்கள் விளையாட்டுத் தோழர்கள் எப்படி இருக்கிறார்களோ என்ற யோசனையில்.
 புழக்கடையில் முருங்கை மரம், கீரைப் பாத்திகள், கொய்யா மரம்
எல்லாம் இருந்தது.
பாட்டியிடம் பயணக்களைப்பே இல்லை.
சீக்கிரமாக அடுப்பை மூட்டி,  விசாரிக்க வந்திருந்த தன தோழிகளிடம் சொல்லிப் பாலுக்கு ஏற்பாடு செய்தார்.
இரவு   சாப்பாட்டுக்கு நாங்கள் கொண்டு வந்திருந்த உணவுப் பண்டங்கள் செலவாயின.
பாட்டி   ,வழக்கம் போல்  எங்கள்  அனைவருக்கும் சேர்த்து
கலந்து கொண்டு  வந்து , தாங்கள் வளர்ந்த கதை, அக்கா,தங்கைகள் பற்றிச் சொன்னபடியே  உணவுஉட்டினார்.
 மறு  நாள் காலை அழகிய நம்பியைத் தரிசிக்கத் தாத்தா அழைத்துச் சென்றார். வீட்டுத் துளசியும் கற்கண்டும் தான் கோவிலில் கொடுப்பார். தேங்காய் உடைக்கும் வழக்கமே கிடையாது. எனக்கு அந்தக் கோவில் படிகள் நினைவில் இருக்கின்றன . பெருமாள் உருவம் கூட நினைவில் இல்லை.பெரிய பெரிய சிலைகளும் ,யானையும்
வீட்டுக்கு வருகை தந்த  நம்பி மாமாக்களும்,
அழிக்கதவு போட்ட பெரிய வீடுகளும்  இது எந்த ஊருக்கும் பொருந்தும்  மனதில்
வந்து போகின்றன. அடுத்த நாள் ஸ்ரீவைகுண்டம் பெருமாள்.
பிறகு நாங்குநேரி,





Friday, October 13, 2017

#பயணங்கள், பயணம் ஆரம்பம்

Mahendra malai
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 பழைய ...பயணங்கள் 1957
+++++++++++++++++++++++++++++++++++++++
 திருமதி துளசி கோபாலின் பயணக் கட்டுரைகள் Thulasidhalam
Add caption
வலை உலகப் பிரசித்தி பெற்றவை.
அவர் இன்று பதிந்திருந்த திருக்குறுங்குடியைப் பற்றிய
எழுத்துகள்
என்னை ,தாத்தா,பாட்டி, சின்னப்பாட்டிகள் காலத்துக்குத் தள்ளிவிட்டன.
தாத்தாவும், பாட்டியும் பிறந்த ஊர் திருக்குறுங்குடி.
பாட்டியின் தந்தை விவசாயம் செய்த ஊர்.
பாட்டி தாத்தா இருவரும் அத்தை, மாமன் மக்கள்.
அப்பாவும், அவர் அக்காக்கள், தம்பிகள் விளையாடிய ஊர்.

இந்தப் பழைய பயணம் நடந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அப்பொழுது தாத்தாவுக்கும், அவர் மைத்துனருக்குமாக வீடு பாகம் பிரிக்கப் பட்டு
இரண்டு கிணறு இரு வாசல்கள் என்று இருந்தாலும்
ஒற்றுமையாக உறவு கொண்டாடிய  காலம்.

அந்தப் பக்கத்து வீட்டு உறவு என் மாமியார் ஆனதும் இன்னோரு கதை.

திருக்குறுங்குடிக்குப் போக முடிவு செய்த அடுத்த நொடி
 திட்டங்கள் விரிந்தன.
தாத்தாவின் சித்தப்பா பெண் மதுரை T.V . சுந்தரம் அய்யங்காரின் மனைவி.
 அதனால் பயணத்துக்கான வண்டி தயார்.
ஒரு வெள்ளை வர்ணக் கப்பல் போன்ற வண்டி முதல் நாள் இரவே வந்துவிட்டது.
 தாத்தாவின் விருப்பப்படி நாங்களும் திருமங்களத்திலிருந்து வந்து விட்டோம்.
 சின்ன சித்தப்பா, அவர் மனைவி, குழந்தை,என்று கிட்டத்தட்ட பத்துப் பேர் அந்த வண்டியில் பயணம் செய்தோம்.
நவ திருப்பதிகள் போய்வர திட்டம்.
 மதுரையின் காலைப் பொழுதுகள் எப்பொழுதும் இனிமை.
பாட்டியின் கைவண்ண இட்லிகளும் ,தோசைகளும்,
 புளியோதரை, தயிர்சாதங்களும்.
 செய்தவண்ணம் அந்தந்த பாத்திரங்களில் வாழையிலையால் மூடிக் கட்டப்பட்டு, சலங்கை குலுங்கும்  குடங்களில் ,தண்ணீர் சேகரிக்கப் பட்டு, ஒரு நல்ல காலையில் கிளம்பினோம்.
வாழ்க வளமுடன்.

Tuesday, October 10, 2017

நேற்றும் இன்றும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
#கடிதங்களும்நினைவுகளும்

கடிதங்களைப் படிக்கும் போது அந்தக் காலத்துக்கே
போய் வந்த உணர்வு.
எத்தனையோ ரகசியங்கள். அந்த வயதிற்கான ஏமாற்றங்கள் ஏக்கங்கள்.
அத்தனையும் பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு கடிதத்துக்குப் பதில் போட நாட்கள் எடுத்தால்
பத்துப் பதில் கடிதங்கள் வந்துவிடும்.
சென்னையிலிருந்து  பத்து தோழிகள் போடும் கடிதங்களுக்கு
ஒன்றொன்றாகத்தானே பதில் போடமுடியும். அதுவும்
நாலைந்து முழுத்தாளில் வரும் செய்திகள்
 அதற்கு சரியாகப் பதில் எழுத வேண்டும்.,
சோகமாக எழுதிய ஜானுவுக்கு ,அதே கரிசனத்தோடு எழுத வேண்டும்.
எங்க அக்காவுக்குக் கல்யாணம் என்று எழுதின
ஜயந்திக்கு , விவரங்கள் சொல்லச் சொல்லி கேட்கவேண்டும்.
தீபாவளிக்கு என்ன வண்ண தாவணி என்று கேட்கும்
சந்திரா,அவள் தங்கைகளுக்கு .கடைக்குப் போன விவரம் சொல்ல வேண்டும்.

பாடங்கள் புரியவில்லை, நீ ரொம்ப லக்கி. உனக்குக் கல்லூரி
போகவேண்டாம் என்று புலம்பும் ராஜேஸ்வரிக்கு, நான் படும்
அவஸ்தைகளைச் சொல்ல வேண்டும்.
பெரம்பூரிலிருந்து  கவி மழை பொழியும் சீதாவுக்குப் பதில் கவிதை.
 இத்தனை அன்புகளையும் மீண்டும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்.

Saturday, October 07, 2017

#எழுதினதில் பிடித்தது.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பாட்டி என்ன பண்றே.
அரிசி உப்புமா கண்ணா.
இட் ஸ்மெல்ஸ் நைஸ். .
வாசனை டேபிள் வரை வருது நான் சாப்பிடட்டுமா.
இன்னும் ஆகலைடா ராஜா. உப்புமா ஆனதும் தரேன்.
அவன் வந்து கேட்டதே போதும். குழந்தைக்கு உடம்பு சரியாகி விட்டது.
உப்புமாவை அவன் சாப்பிடவில்லை என்பது வேற கதை.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இன்னொரு  கதை.😍😍😍
+++++++++++++++++++++++++++++++
சுத்தம் என்பது எமக்கு
 வருடத்துக்கொரு முறைதான்.
அசுத்தம் என்பதை மறக்க விட மாட்டார் சிலர்தான்
பொட்டிகள் உள்ளே நுழையும்
அன்புகள் அரவணைக்கும்போதே
வந்த கண்கள் மேலே நோக்கும்.
ஆசையுடன் காத்திருந்த பல்லியோ அந்நேரம் பார்த்து முகமன்  சொல்லும்.
அரளுவான் பேரன்.
‘’தர் இஸ் அ  giant லிசர்ட் சம்வேர் ஹியர் மா’’
லெட்ஸ் லீவ்.
அனுபவப்பட்ட மூத்தவனோ அது குட்டிப் பல்லிதான் ப்ரதர்
நைட்தான் வெளில வரும்’
மாடியில் நம்    அறையில் பல்லி இருக்கிறதா என்று பார்த்துவருகிறேன்
என்று புறப்படுவான்.
அவன்வரும்போதே பெரிய  கறுப்பு பீரோ பின்னிருந்து

அண்ணா  என்று பல்லி விளிக்கும்.:)
ஓ ரியலி,!
!பாட்டி  ஐ தாட் யூ

  ஹேவ் டன் அவே வித் ஆல் தெ பல்லீஸ்.
ஹௌ ஆர் வி டு  ஸ்லீப்  இன் திஸ்  ரூம்?
அடுத்தநாள் தாத்தாவும் பேரன்களும் பல்லிவேட்டையாடப் போவார்கள்.

மாயமாய் மறைந்திருக்கும் பல்லிகள்.
கஞ்சி வரதா
நான் என் செய்வேன்
நீ இந்தப் பல்லிகளையும் தங்கப் பல்லிகளாக மாற்றி இன்னும் இரு வாரங்களுக்கு வைத்துக் கொள்.
உனக்குக் கோடி கோடி கும்பிடு.
இப்படிக்கு,
பல்லி கரப்பான்களுக்குப் பயப்படாத பாட்டி.

Wednesday, October 04, 2017

அம்மாவின் கடிதம் #2 .... 1969

Add caption
Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  மகள்  பிறந்து, சேலம் வந்ததற்குப் பிறகு காரைக்குடிக்குப்
போக இயலவில்லை. கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் அம்மா அப்பாவைப் பார்க்கவில்லை.  பாட்டியிடம் கடிதம் ஒரு மத்திய வேலை வந்தது. அப்பாவுக்கு வயிற்று வலி என்று அம்மா எழுதி இருந்தாலே நீ போய்ப் பார்க்கவில்லையா என்று கேட்டிருந்தார்
சட்டென்று வருத்தமானது.  எனக்குத் தெரிந்தால் சலனப் படுவேன் என்று அம்மா சொல்லவே இல்லை.

உடனே சிங்கத்திடம் சொல்லிக் காரைக்குடிக்குப்  பேசச்  சொன்னேன். ஆபீஸ் வழியாக .
   அவர் மதியம் வரும்போது ,
அப்பா கிட்டத்தட்ட   மூன்று மாதங்களாகக் கடும் வலி யில் அவதி பட்டது தெரிந்து ,
என் மடமையை நொந்து அழுதேன்.  இரண்டு குழந்தைகளும் சிறிய வயது. சமாளிக்க முடியாமல் போனாலும் ,அம்மாவுக்கு கடிதம் எழுத்தாக கூடவா ஒரு பெண்ணிற்குத் தெரியாது,.😞😟😠
இருபத்தொரு வயதுக்கான மன முதிர்ச்சி இல்லையே
என்று வருத்தம் மேலிட்டது.

அடுத்த நாள்  என் வருத்தத்தை மெலிதே விரட்டுவதாக அம்மாவின் கடிதம் வந்தது.
பிறகு  வண்டி எடுத்துக் கொண்டு அப்பாவைப் பார்க்கப் போனது, அப்பாவுக்குச் சென்னையில் மருத்துவம் பார்த்தது,
பயப்படும் அளவு  வயிற்றில் அல்சர் பரவாமலிருந்து,
அம்மா அப்பாவைக் கண்ணின் இமையாகப் பார்த்துக் கொண்டது தனிக்கதை   இது   போன்ற பெற்ரோரைப் பெற நான் என்ன புண்ணியம் செய்திருந்தேனோ  தெரியாது.
அனைவரும் வாழ்க வளமுடன்.



Sunday, October 01, 2017

வாராய் என் தோழி. #கடிதங்கள்.... 1

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அன்பில் தோய்ந்த கடிதம். ்
டிசம்பர் 1965. திருமணம் நிச்சயமாயிற்று என்ற
கடிதம் கிடைத்ததும் என்னைப்  பார்க்க ஆசையாய்
என் தோழி அறுமுகத்தாய் எழுதிய கடிதம். ரெட்டியபட்டிக்கு ,,
தன அண்ணன்  குழந்தைகள் நாகலட்சுமி, சங்கரபாண்டியன்,ஸ்ரீநிவாசன் எல்லோருக்கும் முடி இறக்க  வருவதாகவும், பசுமலை ரயில்வே ஸ்டேஷனில் வந்து பார்க்கும்படியும், முடிந்தால் தன்னுடன் விருதுநகர் வரை வந்து இருக்கும்படியும் எழுதி இருக்கிறாள்.
எத்தனை ஆவலாதி. என்ன ஒரு ஆதுரம்.

இத்தனை நல்ல தமிழில் கடிதங்கள் நாங்கள் எழுதிக் கொண்டோம் என்று தெரிய வியப்பாக இருக்கிறது.
சென்னை  வந்த பிறகுதான் இதெல்லாம் மாறி இருக்க வேண்டும்.

இடங்கள் மாறும்போது மனம் மட்டும் அங்கே தங்கி விடுகிறதே. தன்  சோமு  அண்ணாவின் மீது  அத்தனை பாசம் அவளுக்கு.
திருமணமாகி ஆரணிக்கு வந்தாள் .
மூன்று   குழந்தைகள் பிறந்து, அவர்கள் பட்டப்  படிப்பு முடிக்கும் வரை தொடர்பிருந்தது .
கடைசியாக  1996 இல் சந்தித்தோம்.
MSPM SANGU  NAADAAR , INDIAN DRUGS  SHOP
என்கிற விலாசம் மட்டும் மறக்கவில்லை.

விருதுநகருக்கே சென்று விடுவதாக கடைசிக் கடிதம்.
ஒரு கணம் தோன்றுகிறது , திண்டுக்கல் ,விருது நகர் என்று போய்ப் பார்க்கலாமா  என்று.

எல்லாத்   தோழிகளும் அருமையானவர்களே. இவள் என் மேல் உயிரையே வைத்திருந்தாள்.
அவளுக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு பள்ளி வரும்
ஆயா கூட என்  முகத்தை வழித்து  செல்ல முத்தமிட்டது
நினைவிருக்கிறது.
நல்லதொரு நினைவுகளைத் தருவிக்க கடிதத்துக்கு நன்றி. எங்கிருந்தாலும் நலமாக இரு என் தோழி. சாந்தி என்கிற ஆறுமுகத்தாய்.