Blog Archive

Friday, September 29, 2017

அழைத்தது ஆண்டு விழா.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இது மாதிரி ஒரு வேடம்   அம்மா யோசித்துவைத்தார்.
அவளுக்கு உள்ளுக்குள் ஆதங்கம். தன பெண்ணைச் சின்னக் கண்ணினு இந்த அம்மா சொல்லிவிட்டார்கள் என்று.

இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் தேடிப்பார்த்து ஒருவிதமாக உடையைத் தேர்ந்தெடுத்தார்.
அம்மாவின் தையக்காரர்  புரசைவாக்கத்தில் புது மோஸ்தர் சட்டைகள் எல்லாம் எனக்காகத்  தைப்பார்.
இப்போ அதற்காக மெட்றாஸ் போகமுடியுமா. ஒரு நீல நிற
பூ போட்ட சாட்டின் பாவாடை இருந்தது.
 மேலே சட்டை..  காலர் வைத்த  நீளமான குர்தா வகை
.சிவப்புக் கலர்.
இரண்டு நீல நிற ரிப்பன்களை  இடையில் Bow
வைத்துக் கட்டி அனுப்பிவிட்டார் பள்ளிக்கு. கண்ணுக்கு மையிட்டு மறக்கவில்லை. அவ்வளவு ரோசம் அம்மாவுக்கு.
😉😉
மேடையில் ஏறினால்  ஏதாவது பேச வேண்டுமே.
எட்டு வயசு ஜப்பான் பொண்ணு என்ன பேசும் .
அப்பொழுது சயனோரா எல்லாம் தெரியாது.  கையில் ஜாப்பனீஸ் விசிறியும் கிடையாது

 யோசித்துக் கொண்டே எல்லோரும் வரிசையாக தாலுகா ஆபிஸ் வந்துவிட்டோம். சாதாரண மேடை. கலெக்டர் இன்னும் வரவில்லை.
என் சின்ன மூளைக்கு , சக தோழியரிடம் வம்படிக்கத் தெரியும். பெரியவர்கள் முன் நாக்கு சுருண்டுவிடும்.

பரபர வென கலெக்டர் வந்தார். என்னை விட பெரிய பெண்கள் போறவளே  பொண்ணு ரங்கம்
பாட்டுக்கு நடனம் ஆடினார்கள்.

ஒரு பையன் பட்டணம் தான் போகலாமடி  இரண்டு வரிகள்
பாடினான்.

அடுத்தது என் முறை.
கீழே  இருந்து அங்கு உட்கார்ந்திருந்த கோட் சூட் மனிதர்களை பார்த்ததும் உடல் சில்லென்ரது
தட்டுத்தடுமாறி மேடையில் ஏறிட்டேன்.

பெப்பே என்கிற விழிக்கும் பெண்ணைப் பார்த்து கலெக்டர்
புன்னகை புரிந்தார். யாரும்மா நீ. 
ஜாப்பனீஸ்  .

ஓஹோ ஏதாவது பேசேன் .

நேராக உக்கிரமான கண்களுடன் பெரிய டீச்சர்.

சிங்சங் என்று ஏதாவது பேச நினைத்ததும் மறந்து விட்டது

நான், நான்  என்று  சொல்லி  திருத்திரு  வென்று விழித்ததும், கலெக்டர் சிரித்துவிட்டாள். ஜப்பான் பொன்னுக்குத் தமிழ் வரலை
என்று நீ   போம்மா  என்று அனுப்பிவிட்டார்.
வேடிக்கை என்ன வென்றால், அந்த உளறலுக்கும்
ஒரு பிளாஸ்டிக் சோப் பேட்டி கிடைத்ததுதான்.😛😜
.

Tuesday, September 26, 2017

விந்தைகள், வேதனைகள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் பதிவைப் படித்ததும்
 அவர் படும் வேதனை,சினம் கண்டு,
மனம் கொதித்து அடங்கியது. அதற்காகவே இந்தப் பதிவு.


 நவராத்திரி மட்டும் என்றில்லை,சகல விழாக்களிலும்
 நம் ஊரில் ,முகம் காட்டாமலேயே வந்து விடுகிறேன்.
எல்லாம் சரியாக இருக்கும்.
கடைசியில் தாம்பூலப் பை கொடுக்கும்போது
அதில் குங்குமம் இருக்காது.

என் கணவர் இறந்தால் அதில் என் தவறு என்ன.
   அப்படித் தப்பித் தவறிப் போய் விட்டால்,
சந்தனம் குங்குமம் கொடுக்கும் போது, ஒரு தடவை
பழக்க தோஷத்தில் ,
குங்குமமும் எடுத்துக் கொண்டேன் .
நானே பதறி மன்னிப்புக் கேட்டேன்.
கொடுத்த பெண்மணியின் முகம் விகாரமானது.

என் புக்ககம் மிகச்சிறந்த முற்போக்கு சிந்தனை கொண்டது.
அங்கு விதவா விவாகம் உண்டு, வேற்று நாட்டுப் பெண் மருமகளாக உண்டு,
 என் மாமியார்  கமலம்மா எந்த வித்தியாசமும் காட்ட மாட்டார்.

எல்லோரும் நலமாக இருந்து அறிவோடு நடந்து
கொண்டால் போதும் என்பார்.
பெண்கள் கணவரை இழந்ததும் சுருங்கித்தான் விடுகிறார்கள்.
நாம் இதற்கு லாயக்கில்லைன்னு
ஒரு வரைமுறை.
நானும் அந்த வகையில் தான் இருக்கிறேன்.
பொட்டு வைப்பதை மட்டும் தவிர்க்கவில்லை.

சமுதாயம் மாறுவது சிரமம். என்னை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
அழைத்து அவமதிப்பதைவிட  அழைக்காமல் இருப்பது எவ்வளவோ மேல்.
 
உலகத்தில் சுமங்கலிகளுக்கு மட்டுமே இடம் என்றால்
 மற்றவர்கள்   என்ன செய்வது.

Sunday, September 24, 2017

நவராத்திரி நினைவுகள் 1978 -------1

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சென்னைக்கு மாற்றலாகி வந்த புதிது. ஒருவருடம் ஓடிவிட்டது. நவராத்திரி நாட்கள் வரப் போகிறது என்று குழந்தைகளிடம் பேச்சு.
  என்னிடம் வந்து கேட்டார்கள். நாம கொலு வைக்கப் போறோமா ம்மா.
ஆஜிப் பாட்டி கிட்டதான் கேட்கணும் செல்லம் என்று சொல்லிவிட்டேன்.
 பெண்தான் கச்சேரி ரோடு வழியாகப் பள்ளிக்குப் போகிறவள்.
அவள் கொலுபொம்மைகள் கண்காட்சி என்பதைப் பார்த்து விட்டு ஒரே
உற்சாகத்துடன்  என் மாமியாரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

மாமியாருக்கும்  இந்த மாதிரி    கலை விஷயங்களில்  மிகுந்த  சுவை. செய்யலாமே. உன் கையில 30 ரூபாய் தரேன். அதுக்குள்ள  நீயும் அம்மாவுமாப் போய்  வாங்கிக் கொண்டு வாருங்கள். என்றார் மகிழ்ச்சியாக.

பெண்ணுக்கு  ஏக சந்தோஷம்.

அமாவசைக்கு  அடுத்த தினம் இருவரும் கிளம்பி மாட வீதிக்குப் போனோம்.
சின்னச் சின்ன  பொம்மைகளைப் பார்த்து  வாங்கினோம். பூனை,முயல், நாய்ககுட்டிகள்,   ஒரு

துர்க்கை  அம்மன்   , இரண்டு  பாவை விளக்குகள்  எல்லாம்  வாங்கியாச்சு.

அப்படியே   இந்திரா  நகருக்குப்    போய்    , தாத்தா  செய்து  வைத்திருந்த   தேர்  , மாத்திரை  பாட்டில் களில்  செய்தது, பாட்டியின் க்ரோஷா  மேஜை  விரிப்பு,  தாத்தாவின்  ராமர்சீதா வரைபடம்  எல்லாம் வீட்டுக்கு  வந்தாச்சு.






Wednesday, September 20, 2017

ஒரு இருமலின் கதை..2. Finish,the end .

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
1950ஸ்   பெண்கள்.
ஒன்றும் பதில் சொல்ல முடியாத  சவுந்திரத்துக்குக் கணவரின் குரல்
தப்பிச் செல்ல வழியானது.
மூ ன்று மாதங்கள் ஆகியும்  சரியாகாத வலி யை நொந்து கொண்டு
மாடிப்படியருகில் நின்று என்ன மா வேண்டும் என்று வினவினாள்.

நல்ல பாண்ட், ஷார்ட், ஜாக்கெட் எல்லாம் வேணும்.
இன்னிக்கு கிளப்பில்  மீட்டிங் என்று குரல் வந்தது
இறங்கி வந்து கொண்டிருந்த மகனிடம்
அப்பாக்கு எடுத்துக் கொடு கண்ணா என்று தயவாகக் கேட்டுக் கொண்டாள்
அவனும்   அப்பாவுக்கு உதவ உள்ளே சென்றான்.

அனைவரும் வெளியே சென்ற பிறகு நிதானமாக
உட்கார்ந்த  சவுந்திரத்துக்குக் கணவனின் எழுபதாவது பிறந்த நாள் வருவது நினைவுக்கு வந்தது.

அவர் ஹோமம் செய்வதற்கெல்லாம் ஒத்துக்க கொள்ள மாட்டார் என்பதும் தெரியும்.
கோவிலில் தரிசனம் என்று பூர்த்தி செய்யலாம்  பிறகு அவர் தன நண்பர்களோடு   பார்ட்டி வைத்துக் கொள்ளட்டும் என்று முடிவு செய்தாள்

மாலையில் ஒவ்வொருவராக வந்து அவரவர் அறையில்
உணவுக்குப் பின் அடைந்து கொள்ளவும், சவுந்திரம் மெதுவாகக் கணவரிடம், அவர் பிறந்த நாள் திட்டத்தைச் சொன்னார்.
 நல்ல மனநிலையில் இருந்தவர் சரி என்று சொல்லி மாடிக்குச் சென்றார்.
அடுத்த நாள் காலையிலும்
அதே இருமல், பல் தேய்க்கும் கர்ஜனை  .,கமறல், இத்யாதி நிறைவேறியது.
இன்னும் கனை த்த வண்ணம் இறங்கி வந்தார் வாசுதேவன்.
பின்னால் சுருங்கிய முகத்துடன் மருமகள்.

கணவர் தன வண்டியை எடுத்துச் செல்லும் வரை காத்திருந்த சவுந்தரம் ,
 மாலதி, அப்பாவுக்கு மூச்சு விடமுடியாமல், பக்கத்தில் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்த போதுதான் அவரது நுரையீரல் பாதிப்பு தெரிந்தது
அப்பொழுது டாக்டர் சொன்ன அறிவுரைகளைக் கடைப் பிடித்து வருகிறார்.
இந்த ஆறு மாதமும், அவர் பக்கத்தில் இல்லாமல் நான் கீழே நிம்மதியா இருக்கேன்னு நினைக்கிறியா.
ஒவ்வொரு நாளும் அவர் எழுந்திருக்க கொஞ்ச நேரம் சென்றாலும் மனம் படபடக்கும். பிறகு பல் தேய்த்து, சளியை வரவழைத்து சுத்தம் செய்யும் சத்தம் கேட்டால் தான் எனக்கு நிலை கொள்ளும்.
என் ஆதாரசுருதியே இந்த இருமலும் அவர் விடும் குறட்டை சத்தமும் தான்.

நான் பழகிவிட்டேன்.

நீங்கள் கஷ்டப் பட வேண்டாம். இதே தெருவில் இன்னொரு ஃ பிளாட், விற்பனைக்கு வருகிறது. தென்னை மரம் பால்கனி என்று அழகாக இருக்கிறது.
இந்த ஆவணி மாதம் நீங்கள் அங்கே போய் விடலாம்.
இதே மாமியே உனக்கு உதவி செய்ய வந்துவிட்டுப் பிறகு இங்கே வருவார். கவலைப் படாதே என்றால் ஆதரவாக.
மாலதிக்கு கண்ணில் நீர்.
சரிம்மா. உங்கள் அளவுக்கு எனக்கு இன்னும் புரிபடவில்லை. ஆனால் உங்களை மாதிரியே பொறுமையாக இறுக்கப் பழகிக் கொள்கிறேன் என்றாள் .
சிக்கல் விடுபட்டது.
உண்மையில் நடந்தது வேறு.
கதைக்கு மங்கலம்   தான் தேவை என்று எனக்குத் தோன்றியது. நன்றி நண்பர்களே.



Tuesday, September 19, 2017

ஒரு இருமலின் கதை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


+++++++++++++++++++++++
1995 இல்  அம்மாவின்  ஒன்றுவிட்ட சகோதரியின் கணவருக்கு ஓயாத இருமல்.
நெஞ்சில் கபம். சின்ன வயதில் நிமோனியா வந்ததிலிருந்து வெகு ஜாக்கிரதையாக இருப்பார்.
ஒரு பெண்ணும் ஒரு மகன் என்று செழிப்பான குடும்பம். இந்திரா நகரில் வசதியான பங்களா.

எல்லோரும் ஒவ்வொரு அடுக்கில் குடி இருப்பது போல அந்த நாளிலியே 
  வாசு கட்டி வைத்திருந்தார்.
பெண் மட்டும் டெல்லியில் வாசம்.  
குழந்தைகள். பேரன் பேத்திகள். என்று ஆளுக்கு இரண்டு
வாசு என்கிற வாசுதேவன் நல்ல உயர் பதவியிலிருந்து ரிடயர் ஆகி,
சென்னை ரொடீனுக்கு செட்டில் ஆனார்.
ப்ரிட்ஜ் க்ளப், நடைப் பயிற்சி, அளவான  சாப்பாடு
என்று கம்பீரமாக இருப்பார். எப்பொழுதும் ஒரே போல இருந்தால் வாழ்க்கை என்று எப்படி அழைப்பது
சோதனையாக சௌந்தரம்,,அம்மாவின் கசின் 
கீழே விழுந்து முழங்காலில் முறிவு என்று ப்ளாஸ்டர்...போடும்படி ஆச்சு.
 மாடி ஏறிப் போய்ப் படுக்க முடியாது. கீழேயே 
Day bed ஒன்று வாங்கி அங்கிருந்தே குளியல் அறை,சாப்பாடு எல்லாவற்றையும் அமைத்துக் கொண்டார். துணைக்கு சமையல் செய்யும் அம்மாவும் இருந்ததால் 
எல்லாம் சௌகர்யமானது.
ஒரு பிரச்சினை, வாசுமாமாவுக்குச் சரியாகக் கவனிப்பு இல்லை.

மனைவி இல்லாமல் அவருக்கு ஒன்றும் செய்ய ஓடாது.
போதாதற்கு சளி,ஜுரம் எல்லாம் வந்தது.
பிள்ளைக்கோ ,மருமகளுக்கோ
நின்று நிதானித்துக் கவனிக்க முடியவில்லை.
அவர் குணமும் அப்படித்தான். சௌந்திரம் என்று 
குரல் கொடுத்த வண்ணம் இருப்பார்.
காய்ச்சலுக்கு வைத்தியரிடம் போய் வந்து மருந்து எல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள்.
காய்ச்சல் சரியானாலும் இருமல் நிற்கவில்லை.
 காலை எழுந்ததும் இருமல் ஆரம்பிக்கும்.
அதுவும் காலைக்கடன் களைக் கழிக்க அவர் செய்யும் சப்தம்
கீழே சௌந்திரத்துக்குச் சிரிப்பு வரவழைக்கும்.
வீடே அதிரும் அந்தப் பல்லைத்தேய்த்து விட்டு வருவதற்குள்.
கீழே வந்து  முதல் டிகாக்ஷன், புதுசாக் காய்ச்சின பால், அளவாகக் கலந்து 
 சௌந்திரம் மேற்பார்வையில் சமையல்கார மாமி
கொடுத்தால் தான் அவருக்குச் சரிப்படும்.
அன்று அவரிடம் கேட்டுப் பார்த்தாள் சௌந்திரம். நீங்களும்
கீழேயே படுத்துக் கொள்ளலாம். லைப்ரரி இருக்கும் இடத்தில் உங்கள் கட்டிலைக் கீழே கொண்டுவந்து போட்டுக்கலாம். ஒவ்வொரு நாளும் நீங்கள் இருமும் போது
எனக்கு சிரமமாக இருக்கு. ஏதுவும் உதவி செய்ய முடியவில்லையே என்று தோணுகிறது
என்றாள் மெதுவாக.
 அதெல்லாம் என்னால் முடியாது. கீழே எனக்குத் தூக்கம் வராது என்றவரை அயற்சியுடன் பார்த்தாள் சௌந்திரம்.
அடுத்த நாள் கீழே இறங்கி வந்த மருமகள் முகத்தைப் பார்த்து
என்னமா உடம்புக்கு முடியலையா என்றாள்.
அப்படி இல்லைமா, காலையில் எழுந்திருக்கும்போதே
அப்பா இருமல்தான் குழந்தைகளையும் என்னையும் எழுப்புகிறது.
மெதுவாகப் பல் தேய்க்கக் கூடாதாம்மா.
எதுக்கு இத்தனை சத்தம்.என்றாள் மருமகள்.
சௌந்திரத்துக்குப் பிரமிப்பானது. தொடரும்.😃😃😃

Saturday, September 16, 2017

இசை கேட்டால் புவி அசைந்தாடும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Wood Metal Gramophone Decor With Musical Blend
சமீபத்தில்  டவுன் டவுன்  சிகாகோ போயிருந்த பொது, ஒரு மியூசிக்லஸ் கடைக்குள் நுழைந்து விட்டேன்.
அவ்வளவுதான் உலகமே மறந்து. என் ஆரம்ப கால இசையிலிருந்து அதுக்கு முன்னால்  வந்த எத்தனையோ அருமையான இசைத்தட்டுகள்.
ஒவ்வொன்றாக எடுத்துத் தடவி மகிழ்ந்தேன். மிகப் பழைய இசைத்தட்டுகள் என்பதால் விலை மிக உயர்வு.
க்ஷண நேர பித்தத்தில் ஆயிரம் டாலரை அள்ளிவிட
நமக்கு மனசு வருமா.

அழகாக ஒரு  டூர், சுற்றி வந்தோம். அந்த ஏக்கத்தை அங்கேயே
விட்டுவிட்டு,
வெளியில் வரும்போது , அம்மாவோட அம்மா வீட்டில் இருந்த கிராமஃபோன்,  அதில் கேட்ட எம்.எஸ் , தாண்ட பாணி தேசிகர் பாடல்கள், மதுரை மணி அய்யர் எல்லாம் நினைவிலிருந்து பேரனிடம் சொல்லி வந்தேன்.
உனக்குத்தான்  ஆங்கிலப் பாடல்கள் பிடிக்குமே பாட்டி. என் வாங்கலைன்னு கேட்டான்.
நீ எல்லாம் என்ன செய்யறேன்னு  கேட்டேன். என் செல் ஃபோனில்
எல்லாம்   டவுள் லோட் செய்துப்பேன். காதில் மாட்டிக் கொண்டால் போதும் என்றான்.
பாட்டிக்கு  அப்படி வேண்டாம் கண்ணா.
ஏற்கனவே  சிறிய வயதில்  வாங்கின எல்பி ரெக்கார்டுகள் எல்லாம் உருமாறி அழிந்து போயாச்சு.
அதைப் பார்க்கும் போது ,நாம் எத்தனை விதமாக ஒவ்வொரு பொருளையும் இழக்கிறோம் என்று தோன்றிவிட்டது.
அதனால் நோ மோர்  பையிங்  என்று சிரித்தேன்.

எஸ் ,யு ஆர் ரைட் என்று ஒத்துக் கொண்டான்.
நானும் என் செலவுகளைக்  கட்டுப்படுத்திக் கொள்ளணும் என்று சிந்தனை வேறு ஓடியது  அவன் மனதில்.
என்னை மாதிரி அவன் இருக்க மாட்டான். சாமர்த்தியசாலியும் கூட.
இப்பொழுது எல்லாமே இணையத்தில் இருக்கும் போது , இதை போல
அனாவசிய செலவுகளைக் கண்டிப்பாகக் குறைக்கலாம்.
புத்தகம் வாங்குவதிலும் இதைக் கடைப்பிடிக்கப் போகிறேன்.
இணையத்தில் மின்னணுப் பதிவாக வெளிவரும் புத்தகங்கள்
அனைத்தும் அருமை. அதுவும் நமக்குத் தெரிந்தவர்களின் படைப்பு
என்றால்  கேட்கவே  வேண்டாம்.
நம் காதுகளுக்கும் ,கண்களுக்கும், அறிவுக்கும் விருந்து படைக்கும் அனைவருக்கும் நன்றி.

Sunday, September 03, 2017

Madras mom and Billy Walker.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இது ஒரு மலரும் நினைவு(!).ரஸ வாசனையொடு வருகிறது
எங்கள் மகளின் முதல் பிரசவத்துக்குப் போன்போது விமான நிலயத்தில் இறங்க்கினதிலிருந்தே உதவிக்கு வந்த மாமியாரைப் பார்த்துக்கொள்வது எங்க மாப்பிள்ளைக்கு (பெரிய) கவனித்து செய்ய வேண்டிய விஷயமாகி விட்டது.
பெட்டியை இறக்கி,ஆவக்காஇ வாசனையை சமாளித்து,
ஜெட் லாகினால் தூங்கி வழியும் என்னை இன்னுமொரு கனெக்டிங்க் விமானத்தில் ஏற்றியதும் தான் அவருக்கு நிம்மதி.
அப்பவே அவருக்கு தோன்றி இருக்கணும் ,இது உதவிக்கு வந்து இருக்கா உபத்திரவத்துக்கு வந்து இருக்கா என்று.
பாவம் ஜெண்டில்மேன். ஒண்ணும் கண்டுக்கவில்லை.
அடுத்த தளத்தில் இறங்கி வீடு வந்து பெண்ணைப்பார்த்து
களித்து, விசாரப்பட்டு(எல்லா அம்மாக்களும் செய்வது தானெ)
சூட்கேசைப் பிரித்தால்... ஆவக்காய் ஏன் அவ்வளவு சுகந்தம் பரப்பியது என்று தெரிந்தது.
மூடி நெகிழ்ந்து சாறு சிந்தி ஒரே மணம் தான். இரண்டரக்கலந்து விட்டது ஆவக்காய் நான் சீமந்ததுக்காக வாங்கி வந்த பொருட்களோடு.
எங்கள் மகளும் மகா பொறுமை சாலி. போனா போறதும்மா. இங்கெ கூட வாங்கிக்கலாம் என்று சொல்லி விட்டாள்.
வீட்டை சுத்தி பாரும்மா ,இதுதான் உன் ரூம் என்று காண்பித்து அவள் வெளியெ போவத்ற்கு முன்னாலேயெ நான் தூங்கியாச்சு.
அவர்கள் இருவரும் என்னை எழுப்பி சாப்பிட வைக்க செய்த முயற்சி வீண்.
சென்னை கஸ்டம், போர்டிங், ஜெர்மன் நிலய வெய்ட்டிங்க்
எல்லாம் படுக்கையில் விழுந்ததும் தூக்கமாக என்னை கும்பகர்ணியாக்கி விட்டன.
அதே போல் அவர்களுடைய இரவு 1 மணிக்கு என் இடும்பை கூர் வயிறும் விழித்துக்கொண்டது. இருக்கும் இடம் ஏவல், பொருள் புரிய கொஞச நேரம் பிடித்தது.
கூடவே அமெரிக்கா வந்தோமே. அட, ஒரு இடம் பார்க்காமல் தூஙகி விட்டேனே என்று ஒரு சிறு எண்ணம், அத்தோடு பயங்கரப் பசி.
சரி, முதலில் கிச்சன் கண்டுபிடிக்கலாம், பிறகு கவலைப் படலாம் என்று தட்டு தடுமாறி வ ழி தேடி சமையல் அறை அடைந்தேன். ச்விட்ச் தேடும் படலம்,ஃப்ரிஜ் தேடும் படலம் எல்லாம் தனி அத்தியாயம்.:-)

அதிர்ஷ்டவசமாக என் பெண் சொன்னது நினைவில் இருந்தது. ரசம் சுட வைத்தால் வாசனை போய் அவர்களை எழுப்பி விடும் என்று சில் ரசம் சில் சாதம் சில் கூட்டு எல்லாம் ஒரு கதம்பம் செய்து, பசிக்கு சமைத்து வைத்த மகளை வாழ்த்தி, சாப்பிட்டுவிட்டு, சின்க்கில் எல்லாவற்றையும் சேர்த்து குழாயைத் திறந்தேன்.......
இங்குதான் கதை ஆரம்பம்.
நான் நிரம்ப அமைதியாக வேலை செய்ததாக நினைக்க,அது எப்படி யானையும் வெங்கலமும் சத்தம் செய்யாமல் இருக்கும் என்பதை நிரூபிக்க என் மகளும் மாப்பிள்ளையும் அம்மா என்று கூப்பிட , நான் என்னவோ ஏதோ என்று அவர்கள் உறங்கும் அறைக்கு போக,
அவர்கள் ' அம்மா நீங்கள் படுத்துக்கொள்ளலாம்.
நாளை மத்த விஷயம் பார்க்கலாம்னு சொல்ல,"
நான் சாதுவாக மீண்டும் படுக்கப் போக,காலை
5 மணிக்கு " maintenance, please open the door' என்று ஒரு அதிகாரக் குரல்.
நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தயங்கித் தயங்கி மாப்பிள்ளை பெண்ணை எழுப்ப,
என்னவோ ஆகிவிட்டது என்று அவர்கள் கீழெ இற்ங்க,
எனக்கு மூச்சே நின்றது ஒரு நிமிடத்துக்கு.
தமிழ் சினிமா அம்மாக்கள் மாதிரி 'ஆ ஆ தந்தியா அய்யொ படிடா யாருக்கு என்ன ஆச்சோ, 'என்று சக தெய்வஙகளைக் கூப்பிடா விட்டாலும் பதைப்பாகத்தான் இருந்தது.
அவர்கள் கீழே இறங்கினதும், என் காதுகள் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்டு ஹேய் ராம் {அப்போது கமல் படம் வரவில்லை] என்று சமயலறைக்குப் போனால்....
அந்தக் கோலாகலத்தை என்ன சொல்ல.
நான் மூட மறந்த சின்க் குழாய் வெள்ளம் பெருக்கெடுத்து
ரசம், ஏற்கனவே அதிலெ இருந்த சாம்பார்,கூட்டு,சட்னி எல்லாம் ஒன்று சேர்ந்து சமயல் அறை பூராவும் தளும்பிக் கொண்டு இருந்தது.
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு(அதை எப்படி உயிரைக் கையில் பிடிக்க முடியும்? கேட்காதீர்கள். எனக்குத் தெரியாது) மெள்ள நீந்திக் குழாயை அடைத்து விட்டு நிமிர்ந்தேன்.
பார்த்தால் (நாண்டுக்கிட்டு என்ற வார்த்தை நினைவில் வருகிரதா?) கீழெ குடியிருக்கும் பில் என்பவர், அந்த ஃபார்மிங்டன் ஹில் ஹௌஸ் மெயிந்டினன்ஸ்
ஆளு எல்லாரும் ஒரு 6,7 அடி உயரத்தில் இருந்து என்னை ஒரு எலியைப் பார்ப்பது போல் பார்க்கிரார்கள். இங்கே உங்களுக்கு பிடித்த பிடிக்காத எந்த இன்ஸெக்ட் டும் போடலாம்.
என்ன ஆகீயிருக்கிறது தெரியுமா?
குழாய்த் தண்ணீர் நிரம்பி வழிந்து தரையை ஊடுருவி(அப்படிக்கூட போகுமா) கீழ் வீட்டுக்கு சீலிங்கில் ஐக்கியமாகி , ஊறி, சொட்டு சொட்டு சொட்டுது பாரு இங்கே!! என்று மஞ்சள் கலரில் அவர்களை எழுப்பி, அழைக்க
அவர்கள் மஞசள் மகிமை அறியாதவர்கள் அல்லவா?
பயந்து விட்டார்கள்.
நல்ல வேளை .... என்னோட முன்னோர்கள் செய்த புண்ணியம் ,,911 கூப்பிடலை. நான் பிழைத்தேன்.
என் முகம் இந்த astrix comic character மாதிரி கலர் மாறிக் கொண்டே இருந்திருக்கனும்.
I was mortified!!
அவஙக என்ன சொன்னாஙக தெரியுமா/ OH?! Momm? அப்படின்னு சிரிச்சுட்டு போனார்கள்.

அதிலெருந்து கீழெ எங்க வண்டியை எடுக்கும்போது அவர் பார்க்க நேர்ந்தால் கொஞசம் தள்ளியெ நின்று புன்னகை செய்து விட்டு போய் விடுவார்.
இது தான் இந்த மசாலா மாமின் கதை.