Tuesday, September 26, 2017

விந்தைகள், வேதனைகள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் பதிவைப் படித்ததும்
 அவர் படும் வேதனை,சினம் கண்டு,
மனம் கொதித்து அடங்கியது. அதற்காகவே இந்தப் பதிவு.


 நவராத்திரி மட்டும் என்றில்லை,சகல விழாக்களிலும்
 நம் ஊரில் ,முகம் காட்டாமலேயே வந்து விடுகிறேன்.
எல்லாம் சரியாக இருக்கும்.
கடைசியில் தாம்பூலப் பை கொடுக்கும்போது
அதில் குங்குமம் இருக்காது.

என் கணவர் இறந்தால் அதில் என் தவறு என்ன.
   அப்படித் தப்பித் தவறிப் போய் விட்டால்,
சந்தனம் குங்குமம் கொடுக்கும் போது, ஒரு தடவை
பழக்க தோஷத்தில் ,
குங்குமமும் எடுத்துக் கொண்டேன் .
நானே பதறி மன்னிப்புக் கேட்டேன்.
கொடுத்த பெண்மணியின் முகம் விகாரமானது.

என் புக்ககம் மிகச்சிறந்த முற்போக்கு சிந்தனை கொண்டது.
அங்கு விதவா விவாகம் உண்டு, வேற்று நாட்டுப் பெண் மருமகளாக உண்டு,
 என் மாமியார்  கமலம்மா எந்த வித்தியாசமும் காட்ட மாட்டார்.

எல்லோரும் நலமாக இருந்து அறிவோடு நடந்து
கொண்டால் போதும் என்பார்.
பெண்கள் கணவரை இழந்ததும் சுருங்கித்தான் விடுகிறார்கள்.
நாம் இதற்கு லாயக்கில்லைன்னு
ஒரு வரைமுறை.
நானும் அந்த வகையில் தான் இருக்கிறேன்.
பொட்டு வைப்பதை மட்டும் தவிர்க்கவில்லை.

சமுதாயம் மாறுவது சிரமம். என்னை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
அழைத்து அவமதிப்பதைவிட  அழைக்காமல் இருப்பது எவ்வளவோ மேல்.
 
உலகத்தில் சுமங்கலிகளுக்கு மட்டுமே இடம் என்றால்
 மற்றவர்கள்   என்ன செய்வது.

19 comments:

நெல்லைத் தமிழன் said...

அம்மா... காலம் மாறிவிட்டது என்றுதான் நான் நினைக்கிறேன் (எனக்கு முந்தைய தலைமுறையிலிருந்து). 'மாற்றம் என்பது மானிடத் தத்துவம்'. மாறாமல் இருப்பவர்கள், அவர்களையே அவமதித்துக்கொள்கிறார்களே தவிர விருந்தினர்களை அல்ல. கணவன் வருவதற்கு முன்பிருந்தே இருந்தது, துரதிருஷ்டவசமாக கணவன் மறைந்தால், போய்விடவேண்டுமா? நான் அப்படி நினைக்கவில்லை.

Thulasidharan V Thillaiakathu said...

துளசிதரன்: அம்மா உங்கள் ஆதங்கம் மிகவும் நியாயமானது. அப்படி நடத்தும் மனிதர்கள் பேதைகள். நாங்கள் உங்களுக்கு ஆதரவு!!!!

கீதா: வல்லிம்மா நானும் உங்க்ளோடு குரல் கொடுக்கிறேன். எனக்குப் பிடிக்காத ஒன்று. அதாவது நீங்கள் சொல்லியிருக்கும் இப்படி வித்தியாசப்படுத்துவது. என் அத்தை எனக்கு அம்மா போன்று. அவருடைய கணவர் இறந்த போது அத்தையே தன்னைச் சுருக்கிக் கொண்டார். எனக்கு அதுவரை அவரை குங்குமம், தலையில் பூ காது கழுத்து மெட்டி என்று பார்த்துவிட்டு அக் கோலத்தை என்னால் ஏற்க முடியவில்லை. வீட்டில் எது நடந்தாலும் பின்னாடி சென்றுவிடுவார். நான் அவரை இழுத்து முன் வந்து எனக்கு நீதான் இருக்க வேண்டும் யார் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்....என்று சொல்லி அத்தையை வைத்துத்தான் நான் நிகழ்வுகளை நடத்துவது வழக்கம். இதில் அனுராதாரமணன் அவர்கள் இறுதிவரை இருந்தது எனக்கு மிகவும் பிடிக்கும்! பொட்டு எல்லாம் நாம் தானே ஏற்படுத்திக்கொண்டது?

நான் இப்போதும் எங்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் வித்தியாசம் பார்ப்பது இல்லை. எல்லோருக்கும் ஒரே போன்றுதான். பிறக்கும் போது எப்படிப் பிறந்தோம்?

விடுங்கள் வல்லிம்மா அற்ப மனிதர்கள்! கிடக்கிறார்கள் உங்கள் குரலுடன் என் குரலும்!!!

ராஜி said...

மனசை தளர விடாதீங்கம்மா.

இதுமாதிரியான குறுகிய மனசு கொண்டோர் சில உண்டு. மஞ்சளும், குங்குமம், பூலாம் நாம் பிறந்ததிலிருந்து வச்சிக்கிட்டு இருக்கோம். கணவனோடு வந்ததது தாலியும், மெட்டியும். அது எடுத்தா போதும்ன்னு சொல்லுறவங்க இப்ப நிறைய உண்டு. நீங்கலாம் ஒதுங்கி வீட்டில் இருந்துட்டா உங்க அனுபவம்லாம் எங்களுக்கு கிட்டாமயே போஒகும்.

Avargal Unmaigal said...

மனம் கனக்கிறது

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத் தமிழன்,

காலம் பெண்களுக்குத் தயவு காட்டவில்லை அப்பா.
ஒரு அனுராதா ரமணன் போதாது இந்த சமூகத்துக்கு.

அம்மா, மாமியார் எல்லோரும் பொறுமையாக ஏற்றுக் கொண்டார்கள்.
நானும் மறுக்கவில்லை. நம் வருகையால் ஒருவருக்குக் கெடுதல் என்று அவர்கள் நினைத்தால்
நாம் அங்கே போகாமல் இருப்பதே நல்லது. என் வரையில் மனம் சுத்தம்.
பேரன் உபனயனம் நடந்தது.
அதில் பிக்ஷை இடக்கூட எனக்கு உரிமை இல்லை.
என் மனம் ஆசைப்படவும் இல்லை.
இது நியாயமா என்பதே கேள்வி. நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன் ,அன்பு கீதா, உங்கள் இருவரின் மனமார்ந்த அன்புக்கு மிகவும் நன்றி.
பராசக்தியில் ஒரு வசனம், உனக்கேன் இந்தக் கோபம் என்பதற்குக் கதானாயகன் பதில் சொல்வான். நானே பாதிக்கப் பட்டேன். நேரிடையாகப் பாதிக்கப் பட்டேன் என்று.
இந்த நான்கு வருடங்களுக்கு முன் நான் யாரையும் நோகடித்திருக்கக் கூடாதே என்று நினைத்துப் பார்க்கிறேன். செய்யவில்லை.
இப்பொழுது குங்குமம் கொடுக்கக் கூடத் தயக்கமாக இருக்கிறது.
வாழையடி வாழையாக்ப் போதிக்கப் பட்ட பயங்கள்.
அது எல்லோரிடமும் விரவிக்கிடக்கிறது.

காலம் மாறட்டும். அடுத்த தலைமுறையாவது சீர் பெறட்டும்.
நெகிழ்வான நன்றி உங்கள் இருவருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜி,
நீங்கள் சொல்வதுதான் உண்மை.
அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் என் தலைமுறைக்கு இல்லை.
ஒரு மங்கை, மங்கலம் இல்லை என்று நினைக்கிற எதையுமே தொடத் தயங்குகிறாள்.
மேலே கீதா ,சொல்லி இருப்பது போல அனுராதா ரமணன் கள் ஆயிரம் பேர் தோன்றினால் ஒரு வேளை மாற்றம் வரலாம் கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை ,
இதுதான் என் உலகத்தில் நடந்தது. இளைய தலைமுறை மாறி இருக்கலாம். மாறி சந்தோஷமாக இருக்க வேண்டும். நன்றி ராஜா.

ஸ்ரீராம். said...

முக நூலிலேயே படித்தேன். கஷ்டமாக இருந்தது. நாங்கள் அப்படி இல்லை என்று சொன்னாலும், இனியும் இந்த விஷயத்தில் ரொம்பவே கவனமாக இருப்போம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சரியான கேள்வி கேட்டுள்ளீர்கள். என் உறவினர் ஒருவர் இவ்வாறான ஒரு நிலையை மிகவும் அனாயசமாக எதிர்கொள்வதை நான் பார்த்துள்ளேன். ஆரோக்கியமான மன நிலை என்றும் நம்மை முன்னுக்கு இட்டுச்செல்லும். அனாவசியப் பேச்சு பேசுபவர்களைப் பற்றி நாம்சிந்திக்க வேண்டியதில்லை.

middleclassmadhavi said...

மிகவும் நியாயமான ஆதங்கம்!!
விதவைத் தாயை தன் சொந்த வீட்டு கிரகப்ரவேசத்துக்கு அழைத்துச் செல்லாத மகளை எனக்குத் தெரியும்!! பழைய வீட்டில் காவலாக விட்டுச் சென்றார்!! இத்தனைக்கும் அந்த மகள் முற்போக்குச் சிந்தனைகளை தான் படிக்கும் காலத்தில் பேச்சுப் போட்டிகளில் முழங்கி பரிசு பெற்றவர்!! முற்போக்கு நாட்டில் வசிக்கிறார்!! என்ன சொல்ல?!!

ராமலக்ஷ்மி said...

எத்தனையோ விஷயங்களில் மாறி இருக்கிற சமூகம் இது போன்ற சிந்தனைகளிலிருந்து விடுபடாமலிருப்பது வேதனை. என் அம்மா நிறையப் பார்த்து விட்டார்கள். அந்த நாட்களை விட இப்போது சற்று பரவாயில்லை என நினைத்திருக்கையில், உங்கள் பதிவு அப்படி அல்ல என உணர்த்தியிருக்கிறது. ஒதுக்குபவர்களை ஒதுக்கி விட்டு சென்று கொண்டே இருக்கலாம்!

Angelin said...

வல்லிம்மா குறுகின மனதுள்ள விகார மனுஷங்களை பொருட்படுத்தவே வேணாம் .சிலர் மட்டும் அடுத்தவங்களை கஷ்டப்படுத்தவே உலகத்தில் பிறந்தவங்க போலிருக்கு .இக்னோர் THEM .
இந்த சில மனுஷங்க அடுத்த தலைமுறைக்காவது இவங்க அழுக்கு மனசை தாரை வார்த்திடாம பார்த்துக்கணும் ..

அப்பாதுரை said...

shocking

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
உலகில் எத்தனையோ கஷ்டங்கள், வித்தியாசங்கள், வருத்தங்கள் இருக்கும் போது ,இதை எடுத்து எழுதி எல்லாரையும் சங்கடப் படுத்தி விட்டேன்.
யாராவது ஒருவர் பதிய வேண்டும் இல்லையா.
இங்கு ஓரிடத்தில் அது போல நடந்தது. இனி வெளியே போவதில்லை என்று தீர்மானித்துவிட்டேன்..பெண்களில் எத்தனையோ முன்னேற்றம் வந்து விட்டது.
என் தலைமுறையிலேயே மாற்றங்கள் பல. இந்த ஒரு விஷயம் மாற காலம் ஆகும் என்பது புரிகிறது. என்ன மூட நம்பிக்கையோ. பூனை குறுக்கே போவது, ஒற்றை பிராமணன் என்று
நீள்கிறது. ஆசிகள் ராஜா..

வல்லிசிம்ஹன் said...

மதிப்புக்குரிய முனைவருக்கு வணக்கம்.
நம் காது பட அவர்கள் பேசுவதில்லை.

ஒரு இனிமையான நவராத்திரி காலத்தை
பெண்கள் முன்னேற்ற காலமாகப் பயன்படுத்தாமல்
ஆடம்பரம், வீண் பேச்சு, தான் உயர்ந்தவர் என்று காட்டிக் கொள்வதில் அன்பும் ,உறவும் விட்டுப் போகிறது. நீங்கள் சொல்வது சரி. நானும் அப்படியே இருக்க முயற்சிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
நான் இப்போது சென்னையில் இல்லை என்பதே நிம்மதியாக இருக்கிறது. எத்தனை நபர்கள்
என்னை அழைக்க வேண்டிய நிர்ப்பந்ததிலிருந்து விடுபட்டு இருக்கிறார்கள்.
பெண்களுக்கு உள்ளோஓர எத்தனை பயம் இருக்கிறது என்பது எனக்குப் புரிகிறது. ஒருவர் உங்கள் வீட்டுக்கு வந்தததினாலோ வராததினாலோ எதுவும் மாறப் போவதில்லை. தீதும் நன்றும் பிறர் தர வாரா.
அம்மா இன்னும் வேறு பலரை நினைத்துக் கொண்டேன் மா.என் அன்பு.

வல்லிசிம்ஹன் said...

இது ஒரு பயம் ஏஞ்சல்.
ஒரு கலக்கம். இன்னார் வந்தார். இன்னது நடந்தது
என்ற படபடப்பு. மன்னித்து விடுவோம்.
மறந்தும் விடுவோம் கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

yes Durai. It is. In the last four years my world has turned sort of confusing.