Blog Archive

Friday, January 30, 2015

Beating The Retreat. The Magnificent show

திரு பாரதி மணி சார்  எழுதியதைப் ப படித்துவிட்டு வெறி வந்தது போல லைவ் ரிலே கணினியில் தேடினேன்.  கிடைத்தது. நீங்கள் எல்லோரும் அனுபவித்த   பீட்டிங் த ரெட்ரீத்   முழுவதுமாகக் காணக் கிடைத்தது. என்றும் மாறாத ராணுவ இசை. ஒழுங்கமைப்பு., முரசுகளின் ஒலி.  விஜய்   சௌக்  எல்லாமே  வேறு உலகத்துக்கு   அழைத்துச்  சென்று விட்டன. எத்தனையோ  வேறுபாடுகள்  இருந்தாலும் அடிப்படையில் இது என் இந்தியா என்ற பெருமை  உடல் கூறுகளில்  ஊடுருவியது. அதுதானே  உண்மை. பாரத நாடு  பழம் பெரும் நாடு.நாம் அதன் புதல்வர் .இப்பெருமை மறவோம்.

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
திரு பாரதி மணி சார்  எழுதியதைப்  படித்துவிட்டு வெறி வந்தது போல லைவ் ரிலே கணினியில் தேடினேன்.  கிடைத்தது. நீங்கள் எல்லோரும் அனுபவித்த   பீட்டிங் த ரெட்ரீத்   முழுவதுமாகக் காணக் கிடைத்தது. என்றும் மாறாத ராணுவ இசை. ஒழுங்கமைப்பு., முரசுகளின் ஒலி.  விஜய்   சௌக் ,அபிடே வித்  எல்லாமே  வேறு உலகத்துக்கு   அழைத்துச்  சென்று விட்டன. எத்தனையோ  வேறுபாடுகள்  இருந்தாலும் அடிப்படையில் இது என் இந்தியா என்ற பெருமை  உடல் கூறுகளில்  ஊடுருவியது. அதுதானே  உண்மை. பாரத நாடு  பழம் பெரும் நாடு.நாம் அதன் புதல்வர் .இப்பெருமை மறவோம்.

Wednesday, January 28, 2015

Remembering you Ranga

மணிவிழா   கண்டுவிட்டாய்  மணியான தம்பி
மறைந்திருந்து கொண்டாட வைத்திருக்கிறாய்.

உன் நிறைவேறாத  ஆசைகள் எல்லாம் இப்பொழுது நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.

நேர்மை
நாணயம்
கடமை
அத்தனையையும்  பொன்னாடையாகப் போர்த்திக் கொண்டாய்..

நல்லவனடா நீ.
அறுபது என்ன
எக்காலமும்  நான் வாழ்வேன் என்று கண்தானம் செய்தாய்..

உன் அக்காவும் அண்ணாவும்,உன்  பெண்ணும் உன் மனைவியும் நீ வளர்த்த எங்கள் குழந்தைகளும்
உன் பெயரைச் சொல்லிக் கொண்டே இருப்போம்.

உன்னிடமிருந்து பெற்றது நிறைய.
திரும்பித் தரத்தான் நீ இல்லை.
உலகமெங்கும்  வாழும்   எத்தனையோ நல்லிதயங்களுக்கு உன் பெயரால் உதவி போய்ச் சேரும்.

மீண்டும் சந்திக்கும் வரை.......................................
மன்னனாய் மந்திரியாய்
நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய்
இதயத்தில் குடிகொண்டான் ரங்கன்.
அன்பு  ரங்கா,உன் உதவிகளை இப்போது இன்னும் தேவையாக உணர்கிறேன்.உன் அன்பும் பாசமும் என்னை மீட்டிருக்கும்.





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, January 20, 2015

தை அமாவாசைச் சிறப்பு

திரு எவ்வுளூர் வீரராகவனும் உபய நாச்ச்சிமார்களும்.  புண்டரீக மகரிஷியின் இருப்பிடம் வந்து  உணவும் உண்டு, படுக்க இடமும் கேட்டுதுயின்ற பெருமாள்.   இன்று  மக்கள் கூட்டம் அலைமோத சர்வரக்ஷனாக,வியாதிகள் தீர்க்கும் தன்வந்தரியாக மனக் கிலேசம் போக்கும் ஆதரவான அரசனாக விற்றிருப்பான். எங்கும் உள்ள பெருமானே திரூ வள்ளூ ரில் அமைதிகாக்கும் விஜயவீ ரராகவா அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் கொடு.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, January 18, 2015

எனக்கு வயசாகாவில்லை

92  வயது  பாட்டி
இவங்களுக்கு அத்தனை வயசாகவில்லை .என்னை மாதிரிச்  சின்ன வயசுதான்                                           

இந்த ஊரில் பொதுவாக ஐரோப்பாவில் நிறைய கிழவிகள் கண்ணில் தென் படுகிறார்கள். கடைகள்,தெருக்கள்,சிக்னல் ஜங்க்ஷன்கள் இவற்றில் பின்னால் ஒரு தள்ளு வண்டியில் ஷாப்பிங் செய்த பொருட்களோடு மெல்ல நகர்வார்கள். பாதி முதுகு வளைந்த நிலையிலும் அலுப்பு அவர்கள் முகத்தில் தென் படாது.
நான் என் அவ்விதம் இல்லை என்பதற்கு இன்னும் விடை தேடிக் கொண்டிருக்கிறேன்.  நாங்கள் இருப்பது இரண்டாம் மாடியில்.  பளுதூக்கி கிடையாது. இந்தக் குளிருக்கு  தோள்  மேல்  சுமக்கும் மேலங்கியின் கணம் தோளை  அழுத்துகிறது. சுழன்றடிக்கும் காற்றுக்கு தலையில் ராபின் ஹுட் குல்லா. அதற்குக் கீழே  தெரியும் போட்டு  பலபேர் கவனத்தை இழுக்கிறது. .இப்பொழுது போட்டு வைக்காமலேயே போகப் பழகிக் கொண்டுவிட்டேன்.
துணையோடு நடந்த நாட்களிலும்  அவர் முன்னே செல்ல பத்தடி பின்தான் வருவேன். இப்போது அதுவும் இல்லாமல் நடக்கக் கற்க வேண்டும் .
மருமகளோ மகனோ குழந்தையோ செல்லும் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. தனியே சென்று வாருங்கள் அம்மா. அப்பத்தான் தைரியம் வரும் என்று மருமகள் நிறையச் சொல்லிப் பார்க்கிறார்.  செய்வேன். ஏனோ 70 வயது மதுரைப் பாட்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டு சாலைகளைக் கடந்த நினைவு வருகிறது. பாட்டிக்குக் சர்க்கரை   நோய இருந்ததால் சட்டென்று தள்ளாடுவார்.  ஆண்டா  கெட்டியாப் பாட்டியைப் பிடிச்சுக்கோ என்று  சொல்வது இன்னும் காதில் விழுகிறது
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, January 17, 2015

Thamizh Cinema,us and Thiru MGR

http://youtu.be/FB_mHPsm6Bk?list=RDZf-CmIKvRIE
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்                                                                         அறுபதுகளில் என் படிப்போடு கூட  வந்த பாடல்கள் அத்தனையும் மனப்பாடம் ................... உள்ளம் உருகுதைய்யா என்று ஆரம்பித்து,திண்டுக்கல்லில் எந்தக் கல்யாணம் கோவில் விழாவாக இருந்தாலும் எம்ஜியார் பாடல்கள் வந்துவிடும். அப்போது சரோஜாதேவிதான் முக்கால்வாசி கூட நடித்திருப்பார்கள். அப்பொழுது வந்த படங்களை அப்பா  பார்க்க அனுமதிக்க மாட்டார். வானொலியில் கேட்பதோடு சரி. வீ ஆர் செவன் என்று எங்கள் க்ரூப் பள்ளியில் .எல்லோரும் சாப்பாடு டப்பா, ஷாந்தி கொண்டுவரும் பேசும்படம் புத்தகம் வைத்துக் கொண்டு அலசுவோம்.  ரொம்ப அழகுப்பா கமெண்டுக்கு  உஷா சந்தானம் எய் எல்லாம் மேக் அப் என்று உதறுவாள். மேக் அப் ஆ இருந்தாலும் அழகுதான் என்று நான் சப்பைக் கட்டுவேன். கனகா   சிதம்பரம் சரோஜாதேவி போலவே பின்னல்களை மடித்துக் கட்டி ஸ்டைல் செய்வாள்.  பர்தாவோடு வரும் ஜமீலா  கண்கள் மைவழிய  அக்கம்பக்கம் பார்க்காதே  பாட்டுக்கு அபிநயம் பிடிப்பாள் .அவள் சகோதரி ஹம்ரூனிசா  வந்து அதட்டிவிட்டுப் போவாள். திண்டுக்கல் நாட்களுக்கும்   சினிமாப் பாடல்களுக்கும் இனிமை    கூடுதல். வாத்தியார்  பிறந்த நாளுக்கு முதன் முதலாகப் பதிவிடுகிறேன்

Thursday, January 15, 2015

இனிய தைத்திரு நாள் வாழ்த்துகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அனைத்து அன்பர்களுக்கும் இனிய  பொங்கல் நாள் நல வாழ்த்துகள்   பால் பொங்கி   புத்திளம் அரிசியுடன் கலந்து,,  கூட்டுக் குடும்பமான வெல்லம் ,குங்க்குமப்பூ, முந்திரிப் பருப்பு  அனைத்துடன் நெய் மணம் வீச,இறைவன் அடியில் சிறிது நேரம்  அமர்ந்து    காத்திருக்கும் குழந்தைகளைக் சென்றடையும்.      இந்த  இனிப்பு    எல்லோர் இல்லத்திலும் எப்பொழுதும் நிறைய இறைவனை வேண்டுகிறேன்.

Wednesday, January 14, 2015

முற்பகல், பிற்பகல்:)





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

முற்பகல்........... 25  வருடங்களுக்கு  முன்னால்


வெள்ளிக்கிழமை,தை மாதம்  காலை வேலைகளை முடித்துவிட்டு வந்து
இராமயணம் சுந்தரகாண்டத்தைப்  படிப்பது  ஒரு வழக்கம் பிரபாவிற்கு.
விளக்கு பூஜை சேய்து முடித்தவுடன்,
அந்தப் பத்தரை மணி கெடுவிற்குள்(ராகு காலம் வந்து விடுமே)
எல்லாவற்றையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாதது வேறு கண்ணைச் சுழற்றியது.

இதெல்லாம் பார்த்தால்   செய்யும் காரியம்    நிறைவடையாது.
சின்னவனுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கணும். பெரியவனுக்கு முதுகலை வகுப்பில்  படிக்க ஸ்காலர்ஷிப் வரவேண்டும்.

மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து
நெற்றியில்  குட்டிக் கொண்டு பிள்ளையாருக்குச்  சமர்ப்பிக்க அட்சதை கையில் எடுக்கவும்,
தொலைபேசி அடிக்கவும் சரியாக  இருந்தது.

கண்மண் தெரியாமல் கோபம் தலைக்கேறியது.

வீட்டில் தொலைபேசி  எடுத்துப் பேச ஒரு ஆள் வைக்கவேண்டும்.
இப்ப எந்தக் கரடி கூப்பிடுகிறதோ  தெரியவில்லையே
என்றபடி ''கத்தாத குறையாக'ஹலோ' என்று விளித்தாள்.


'வெளில போயிருந்தியாமா,.ஃபோன் எடுக்க இவ்வளவு நேரமாகி விட்டதே'

என்று அம்மாவின்  குரல்தான் மறுமுனையில்.
'நான்  எப்படிமா வெளில போவேன்.?
பாட்டும் நானே பாடறதும் நானே ரேஞ்சில வேலை.
இப்பதான்  வேலை முடிந்து மங்கா  போனாள்.
சரின்னு ராமாயணம் படிக்கலாம்னு உட்கார்ந்தேன்.
நீ ஃபோன்    பண்றே'
அலுப்பும் சலிப்பும் குரலில் தெரிய பெற்ற அம்மா என்கிற நினைப்பு கூட
இல்லாமல்  ஒலித்தது பிரபாவின்  குரல்.
பெண்ணின் குணாதிசாயங்களைத் தெரியாத அம்மா இல்லையே  தாய்.!

ஓ!சாரிமா.
முக்கியமான   விஷயம் .உன் பொண்ணுகிட்ட நீயே  சொல்லுன்னு அப்பா சொன்னார்.
நான் ராகுகாலம் முடிந்த  கையோடு உன்கிட்டப் பேசுகிறேன். நீ பூஜையைப் பூர்த்தி செய்மா'' என்று இதமாகப் பேசி அம்மா ஃபோனை வைத்து விட்டார்.

'ஏன் எனக்கு இப்படி  ஒரு வாய்த்துடுக்கு.  பாவம் அம்மா. அவர் எங்கயோ திருச்சியிலிருந்து பேசுகிறார்.
இப்படி  உனக்கு என்ன வேணும் இப்ப 'என்று  கேட்காத குறையாகப் பேசியிருக்க வேண்டாம்  என்றபடி பூஜை அறைக்குள் புகுந்தாள்.

செய்ய வேண்டிய பிரகாரம் அர்ச்சனைகள், நைவேத்யம் எல்லாம் முடித்து
வெளியே வருவதற்குள் வியர்த்து விறுவிறூத்துப் பசி
  வயிற்றைக் கிள்ள  ,ஒரு சிறு கிண்ணத்தில் குழம்பும் சாதமும் போட்டுக் கலந்து கொண்டு பொரியலையும் எடுத்து வைத்துக் கொண்டு
மேஜையருகே நாற்காலியையும் இழுத்துப் போட்டுக் கொண்டு
சாப்பிட உட்காரவும் 12  மணி ஆகிவிட்டது.


இப்ப திருச்சிக்கு ஃப்போன் செய்ய வேண்டாம். சாயந்திரம் பார்ர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தபடி சாப்பிட்டு  விட்டுத் தொலைகாட்சியில்
வரும் பாட்டுகளைக் கேட்டபடியே  தூங்கியும் விட்டாள்.


மீண்டும் தொலைபேசி அடிக்கவும்  ,இன்னிக்கு இந்த
தூக்கமும் போச்சு.. இப்ப  எந்தப் புண்ணியவதி எந்த பாங்கிலிருந்து அழைக்கிறாளோ,  நீயும் ஆச்சு, உன் கிரெடிட் கார்டும் அச்சுனு ஃபோனைத் தூக்கிப் போடப் போறேன்'என்று முணு முணுத்தபடி,
இந்த மத்யான வேளைல கூப்பிடறதை நீங்க நிறுத்தினால் நன்றாக இருக்கும்
என்று காரமாக ஆரம்பித்தவளை அம்மாவின் மென் குரல்
நிறுத்தியது.


அச்சோ திருப்பியும் தொந்தரவு பண்ணீட்டேனா.
இல்லைமா சொல்லு. என்ன விஷயம்.
அப்பாவுக்கு எதாவது மருந்து வாங்கணுமா.'
என்றவளை
அதெல்லாம் இல்லைமா. பெரியவன்  படிப்பு விஷயமாக இங்க
திருவெறும்பூர்க் காலேஜுக்குப் போய் விசாரித்தார் அப்பா.
அவன் மதிப்பெண்களைப் பார்த்து அவர்கள் ஒரு வருடப்
படிப்புக்கான   செலவை  ஒரு தனியார் நிறுவனம் வழியாக
ஏற்பாடு செய்யலாம் என்று   சொன்னார்களாம்.
மாப்பிள்ளை அந்த நிறுவனத்தோட  சென்னைக்கிளையை
அணுகினால்  , அங்கிருப்பவர் வேண்டிய உதவியைச் செய்வார்'
என்று சொன்ன  அம்மாவை  ஓடிப்போய்க் கட்டிக் கொள்ளவேண்டும் போல
உடல் பறந்தது பிரபாவுக்கு.
உடனே கண்ணில்   கண்ணீரும் சேர்ந்து கொண்டது.
தான்க்ஸ் ம்மா. கார்த்தால உன்னைக் கடிக்காத குறையாப் பேசிட்டேன்.
ரொம்ப சாரிமா'என்றாள்'  அழாத குறையாக.
அடடா.எல்லாம் நல்லபடியாகத் தான் நடக்கிறது. இதெல்லாம் மனசில வச்சிக்காதே . ஆக வேண்டியதைச் செய்யுங்கோ'என்றபடி அம்மா ஃபோனை வைத்துவிட்டார்.

பிற்பகல்.
கணினி முன்னால் உட்கார்ந்து    கையில் காப்பிக் கோப்பையோடு
பெண்ணிடம் கணினித் தொலைபேசியில் பேசத் தயாரானாள் பிரபா.
இப்போ  எட்டு மணியிருக்கும் அங்கே. சாப்பிட்டு முடித்திருப்பார்கள்.
இந்த நாள்   எப்படிப் போச்சு என்று விசாரிக்கலாம்
என்றபடி பெண்ணின் வீட்டு நம்பாரைத் தட்டினாள்.
அடித்துக் கொண்டே இருந்தது தொலைபேசி.

ஏன் யாரும் எடுக்கவில்லை என்று யோசித்தபடி பேரனின்
கூகிள் அரட்டையில் டிங்  செய்தாள்.
ஹலோ  பாட்டி என்று ஒலித்த பேரன் குரல் கேட்டதும்.
சந்தோஷமாக  இருந்தது.
நான் ஹோம் வ்வொர்க் செய்யறேன் பாட்டி. அப்புறமா உன்னோட பேசட்டுமா'
என்ற பேரனின்  மரியாதையை மெச்சியபடித் தொடர்பைத் துண்டித்தாள். மீண்டும் கீழ்த்தளத்து எண்ணைத்   தட்டினாள்.
யாரும் எடுக்கவில்லை.
சரி பத்து நிமிடம் போகட்டும். உடனே  மனம் கேட்காமல் பெண்ணின் கைபேசியில் அழைத்தாள்.

'என்னம்மாஆஆ...!!!????

ஃஃபோன் யாருமே எடுக்கலியே. எங்கயாவது வெளியே வந்திருக்கியாம்மா'
என்று  இயல்பாகக் கேட்டாள்.
மறுமுனையில் வெடித்தது  பெண்ணின் குரல்.
ராத்திரி அதுவும் வார நாளில் நான் எங்கமா போகப் போறேன்.
பனி பொழிந்திருக்கிறது.
அது ஸாஃப்டாக இருக்கும்போதே   நீக்கிவிட்டால் தான் நாளை  காலை நாங்கள் வெளியே வர முடியும்..
பையனுக்கு நாளை  ஏதோ தேர்வுப் பரீட்சை.
அவனும் படித்துக் கொண்டிருக்கிறான்.

நீ என்னடா என்றால்  வெளிய போயிருக்கியான்னு கேட்கற..என்னம்மா.
நம்ம ஊரு மாதிரியா இங்க...
பிரபாவுக்கு வாய் அடைத்துவிட்டது. நான் என்ன பண்ணிட்டேன் இப்ப.
????

சரிம்மா அப்புறமா  உனக்குக் கூப்பிட்டுப் பேசறேன். நீ பாவம் உன் வேலையைப்   பாரு..''
என்றபடி,

அடுத்துத் தன்  ஈமெயில்களைப் படிக்கும்போது காரணமே இல்லாமல்,
அம்மா நினைவு வந்தது.





இந்தப் பதிவுவை மங்கையர் உலகத்திலும் இணைக்கப் படும்



http://ithu-mangayarulagam.blogspot.com/



Posted by Picasa

Saturday, January 10, 2015

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா

கடைக்கண் அருள்வாய் கோவிந்தா!!
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
குறையொன்றுமில்லாத கோவிந்தா
சர்க்கரைப் பொங்கல்
Add caption
கண்ணனும் தோழர்களும்

 எங்கள் கோதை கேட்கும் அனைத்தும் நீ கொடுப்பாய் கோவிந்தா. அவள்
எங்களுக்கும் அளித்தருளுவாள். எம்மைக் காத்தருள்.வாய்.
**********************************************************


 கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!* உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்*
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே*
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்*
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு*
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
**********************************************
கண்ணன் கொடுத்துவிட்டான் அவன்  அருளை.

கேடு நினைத்து மற்றவர்களைத் துன்பிக்கும் ,,,,,,, உன்னைக் கூடாரை
வென்று எங்களைக் காக்கிறாய்.
உன்னைப் பாடுவதினால் நாங்கள் பெறும் பரிசுகள் என்ன
என்ன தெரியுமா.
நீ நேற்று உன்னைத் துதிக்க வேண்டிய   உபாயங்களைக்
கொடுத்து அருளினாய்.
இத்தனை நாட்கள் நெய்,பால்,சாப்பிடுவதையும்,அலங்காரங்கள் செய்து கொள்வதையும்  தவிர்த்து  உண்மையே உரைப்பதையும் கொண்டிருந்தோம் .

இப்பொழுது உன்னருளால்நோன்பு இனிதே பூர்த்தியானது.

உன்னருளினால் யாம் பெற்ற அணிகலன்களையும் பெண்களுக்கே
உரித்தான  ஆபரணங்களான  தலைக்கணி, காதணிகள், கழுத்துறையும் காசுமாலைகள், வளையல்கள் ,கொலுசு முதலானவற்றை அணிந்து  மகிழ்வோம்.பட்டாடை உடுப்போம்.
அதன் பின்  பாலில் சமைக்கப் பட்ட வெல்லம் கலந்த நெய் வழியும் சர்க்கரைப் பொங்கலை உன் பிரசாதமாக  உன்னோடு கூடியிருந்து களித்து
உண்போம்.

அந்த சர்க்கரைப் பொங்கலைக் கையில் வைத்தாலே நெய் கைவழியே வழிந்து
முழங்கையை அடையும்படி அத்தனை செம்மையாக  இருக்கும்.

நீ மேய்க்கும்  பசுக்கள் போல நாங்களும் அறியாதவர்கள். உன்னை மட்டும் அறிந்தவர்கள். ஆதலால் கோவிந்தா எம்மைக் காத்தருள்.

பகவானே உன் தாள்களில் சரணம்.
பாவை கொடுத்த பாவாய்  உன் பாதங்களில் சரண்.

Add caption
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.இவை எல்லாமே 2012 முடிவில் மார்கழியில் எழுதப்பட்ட பதிவுகள்.
திருமலை வாசா கோவிந்தா.

மாலே மணிவண்ணா

கோல விளக்கே
வெற்றி முழக்கம் செய்த பாஞ்சஜன்யம்   வேண்டும்
உன் சங்கமும் வேண்டும் கண்ணா
ஆலின் இலையாய்   விதானமும் வேண்டும்
உன் அருள் பாடவேண்டும்
கருடக் கொடி வேண்டும்
அன்புக்கடலான   ஆண்டாள் நாச்சியார்
மாலோடு மகிழ்ந்து இருக்கும் வேளையில் நம்மையும் அருளட்டும்
************************************************************************
மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!
******************************************************

கோதைக்குக் கண்ணனிடம் எல்லாம்  சொல்லிவிட வேண்டும் என்றுதான் விருப்பம்.
சிங்காதனத்துக்கு  வந்துவிட்டான். உட்கார்ந்து கனிவாக  உங்களுக்கு என்ன வேண்டும் என்றும் கேட்டுவிட்டான். நீதான் வேண்டும் என்று சொல்வதைச் சிறிய சிறிய வழிகளில் சொல்கிறாள்.
எம்பெருமானிடம் வீடு கொடு,நகை கொடு என்று அப்புறமாகக் கேட்டுக்கொள்ளலாம். முதலில் அவனைப் பாடத் தேவையான பொருட்களை
வாங்கிக் கொள்ளலாம் என்று பட்டியல் இடுகிறாள் .


கண்ணா,திருமாலே,  மணிவண்ணனே நாங்கள் சொல்வதைக் கேட்டு அருள் செய்வாய்  என்கிறாள். அப்படியே செய்கிறேன் என்று கண்ணனும் வாக்களிக்கிறான்.


மார்கழி  நீராட்டம் முடிந்து நாங்கள் வீதியில்  உன்பெருமைகளைப் பாடிவரவேண்டும்.

அதற்கு  ஒரு விதானம் வேண்டும்.
சரி கொடுத்துவிட்டேன்.

உன் கருடக் கொடி வேண்டும். நிறையக் கொடிகள் வேண்டும்.
கொடுத்தேன்
உன் சங்கம்,பாஞ்சஜன்யம் வேண்டும்,உன் நாமம் சொல்லி நாங்கள்
முழங்க வேண்டுமே. இதோ எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒன்று போதாது. எங்கள் அனைவருக்கும் வேண்டும் என்கிறாள்.

அவனுடைய செல்லப் பெண்டாட்டி ஆகப் போகிறாளே. மறுப்பானா!
அதையும் அருளுகிறான்.

  அழகான விளக்குகள் வேண்டு,மே  என்று கேட்க
அவைகளையும் வழங்குகிறான்.  உன் அருளும் வேண்டும்  ஹே  வடபத்ர சாயி,ஆலின் இலையாய்!!!  என்று பூர்த்தி செய்கிறாள்.

மனமெல்லாம் பூரிக்கிறதே  கண்ணா கொடைவள்ளலே எங்களையும் சேர்த்துக் கொள்
உன் அடிகளில் சரணம்.
உன் அருள் வெள்ளத்தில்.


சாலப் பெரும் பறை
சொல் ஆழி வெண் சங்கே 
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
விதானம் 

Friday, January 09, 2015

ஒருத்திமகனாய்ப் பிறந்து ஓரிரவில்

நெருப்பென  நின்ற  நெடுமாலே
தந்தையின் கையில் குழந்தை வாசுதேவன்
மற்றொருத்தி மகனாக வளர்ந்த மாதவன்
பல்லாண்டு  பாடும் கோதையின் தந்தை பெரியாழ்வார்
கண்ணனின் கோதையின் பாதங்களில் சரண்
தேவகி வசுதேவன்  மகனே போற்றி
*************************************************

 ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்க்ல னாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
**************************************************
ஸ்ரீகண்ணனின் திருமுக மண்டலத்தில் லயித்த ஆண்டாள்
தன் திருவாய் திறந்த கண்ணனைப் போற்றத்துவங்குகிறாள்.
கண்ணா நீ  எப்பேர்ப்பட்டவன். மாயன் அல்லவா.
கம்சன் கண்ணை மறைத்து தேவகி வசுதேவருக்கு மகவாய்ப்
பிறந்து அவர்களுக்கு மட்டட்ட மகிழ்ச்சி கொடுத்தாய்!!


வசுதேவரின் மார்பில் அணைந்து கொண்டு சின்னஞ்சிறு குழந்தையாக
ஆய்ப்பாடி வந்தடைந்தாய்.
யமுனை காலை வருட ஆதிசேஷன் குடைபிடிக்க வந்த உன் பெருமையை
என்னவென்று சொல்ல!
செருக்கு மிகுந்த கம்சனின் நெஞ்சில் பயம் எனும் நெருப்பை எப்பொழுதும் எரிய
வைத்தாய்.
உன்னைதேடி உன் அருகில் வந்தோம்.
எங்களுக்கு வேண்டியது உன் அருள், அதைப் பறையாகப் பரிசாகக்
கொடுப்பாய்.  அப்படிக் கொடுப்பாயானால்  திருவுக்கு நிகரான பாகவதர்களுக்குச்
  சேவை  செய்வோம். உன்னைப் பாடுவோம்.
எங்கள் வருத்தமும் தீரும்.  இது போதும் எங்களுக்கு. கொடுத்து நீயும் மகிழ்வாய்
கண்ணா.  என்று பூர்த்தி செய்கிறாள் நம் ஆண்டாள்.



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, January 08, 2015

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி

கோதைத் தாயார்
வென்று பகை கெடுப்பாய் கிருஷ்ணா
குன்று குடையாய்  எடுத்தாய் குணம் போற்றி
கன்று குணிலா  எறிந்தாய்
பொன்றச் சகடம் உதைத்தாய்
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்
அன்று இவ்வுலகம் அளந்தாய்


 பூமா கோதை ஆண்டாள் சரணங்களுக்கு  போற்றி பாடுகிறோம்.
கழல் போற்றி
அவள் போற்றிய கண்ணன்  கழலுக்கும் போற்றி


அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,
குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,
என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்.//
******************************************************

இதோ  வந்துவிட்டான் கிருஷ்ணன். சீரிய சிங்காதனத்திலும்
அமர்ந்து விட்டான்.

கண்கள் நிறைய   கண்ணனைக் காண்கிறாள்  ஆண்டாள்.
தன் தந்தை    திருத்தந்தை பெரியாழ்வார் திருமாலைக்
கண்ட மறுகணம்  கைத்தாளங்களைக் கொட்டிக்கொண்டு  பல்லாண்டு பாடியது
நினைவுக்கு வந்துவிட்டது  அவளுக்கு.

மனக் குகையிலிருந்து பிரவகிக்கும் பக்தி மேலீட்டில் கண்ணனைப் போற்ற ஆரம்பிக்கிறாள்.

வாமன அவதாரத்தில் ஆரம்பித்து மூவுலகம் ஈரடியால் முறைதிறம்பா வகை முடிய,  மஹாபலிக்கு அருளீய  அடிகள் அல்லவா. அந்தசரணங்களுக்குப்
போற்றி சொல்கிறாள்.

உடனே கானகம் எங்கும் தன் அருமைச் சீதையைத் தேடிக் கல்லிலும் முள்ளிலும் நடந்த அடிகள். சேதுபந்தனம்  முடித்து இராவணன் தலைகளைக் கொய்து வென்ற அடிகளைப் போற்றுகிறாள்.
வெற்றி கொண்ட வீரராகவனே போற்றி.!!!

கண்ணன் குட்டிக் குழந்தை. அவனை அழிக்க அனுப்பப் பட்ட அசுரர்களில்
ஒருவன் சகடாசுரன்
கோபர்கள் இடம்பெயர்ந்து  பிருந்தாவனத்தை அடைந்துகொண்டிருக்கும் போது யசோதை  குழந்தையைப் பத்திரமாக வண்டிக்கடியில்
படுக்கவைத்திருக்கிறாள்.


அந்தவண்டியே   அசுரனாக மாறும் என்று கண்டாளா.
கண்ணன் கண்டான். தன் பாதங்களால் உதைத்தான்.
உருண்டான் அசுரன் .உயிர் இழந்தான். மோக்ஷம் அடைந்தான்.
கண்ணன் பாதம் பட்டபிறகு வேறு புண்ணியம் வேண்டுமா என்ன.


அடுத்தாற்போல வந்தவன் கன்று ரூபத்தில் வந்து
அனைவரையும் மிரட்ட ஆரம்பிக்கிறான்.
கோகுலமே  அல்லோலகல்லப் படுகிறது.
வந்தான் கண்ணன். கன்றின் காலைப் பிடித்தான் சுழற்றினான்
வீசினான். மாண்டான் அந்த அசுரன்.உன் பாதங்களை அகற்றி வைத்து நீ நின்ற கோலம்தான் என்ன அழகு கண்ணா. இடுப்பில் கைகளை வைத்த அழகுதான் என்ன.
நாங்கள்  உடுப்பியில் பார்க்கிறோம் அந்த அழகைபண்டரிபுரத்தில் பார்க்கிறோம் விட்டலனாக.



இந்திரனைப் பகைத்ததில் வந்தது மாமழை.
குன்றம் ஏந்திக் குளிர் மழையிலிருந்து
தன் மக்களைக் காத்தான்  .கழலைப் போற்றத்தானே  வேண்டும்.
கோவர்த்தன கிரிதாரி நீ வாழி.!!

தன்னைப் பகையோடு பார்ப்பவர்களை  வெல்வதற்கு
வேலும் வைத்திருக்கிறான்.  மாலின்  ஆயுதங்கள்
கோடானுகோடி. வேலை எறிந்துதான் குவலயாபீடத்தை
வீழ்த்தினான்.
மாமனுக்கும்  மருமகனுக்கும்   வேல் நல்ல துணை
வினையைத் தீர்க்கிறதல்லவா.

இவ்வளவு பகைவர்களையும் வெற்றிகொண்டவனே. ஒன்றும்  அறியாச் சிறுமியர்  நாங்கள்.
எங்களையும்  காக்க வேண்டும் நீ.  உன் சேவகம் வேண்டி வந்திருக்கிறோம்.
உன் பாதங்களுக்குச் சேவை செய்ய அருள்வாய்  பெருமானே
என்று வேண்டி நிற்கிறாள்  நம் கோதை.

கழல்கள் சரணம் சரணம் சரணம்.



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்