Blog Archive

Thursday, April 04, 2013

எதிர்பாருங்கள் நடக்கும். நம்பிக்கையின் சாரம்




ரொம்பப் பழைய பாட்டு.  ஒன்று.சிட்டுக் குருவி சிட்டுக் குருவி  என்று வரும்.

எலிமெண்டரி பள்ளிக்கூடக் கலை நிகழ்ச்சிகளில்
இரண்டு குட்டிப் பெண்கள் வந்து ஆடும் பாடல்களில் இதுவும் ஒன்று.
ஒரு மனைவியின் எதிர்பார்ப்புகள் அந்தப் பாட்டில் அழகாக அமைக்கப்பட்ட வரிகளில் பளிச்சிடும்.



எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தில் ஏமாற்றமும் இருக்கும் என்று புரிய நிறைய அனுபவங்கள் வந்தாலும், பட்டுத் தெரியும் அறிவு வர, மனது தெளிய நிறைய நாட்களும் வருடங்களும் ஆகும்.




நியாயமான எதிர்பார்ப்புகளைப் பற்றிச் சொல்ல வரவில்லை இங்கே.
இந்த குட்டி குட்டி(!!!) ஆசைகள்.
பெண்களும் பிறந்தகமும் பிரிக்க முடியாத பந்தங்களில் எப்போதும் இருக்கும்.
என்ன வயதாகட்டுமே. எம்பது வயசுப் பாட்டி ஆகட்டும்,
அவர்களைக் கேட்டால் ''எங்க அப்பா அம்மா மாதிரி வருமா. தலையால வர்ஷித்துக் கல்யாணம் செய்து கொடுத்தார்கள்.
இந்தக் காலம் மாதிரியா.
பைசா பைசாவாப் பார்த்துச் செலவழித்த காலம்.
எங்க அப்பா நாலு பொண்ணையும் கரையேத்தினார்,. முத்து முத்தா மாப்பிள்ளை பார்த்து,
சம்பந்திகளைக் கவனித்து,வருஷ சீர் செய்து, வரிசையா பேரன் பேத்திகளுக்குச் செய்து அப்புறமும் ஓயலை.
என் அறுபதுக்கு அறுபது வரை கூடச் சீர் செய்தார்னா பார்த்துக்கொள்ளுங்கோ''
சரி...இதுவரை சரி. தந்தையும் பரலோகித்தார். அப்புறம் வித்தியாசங்கள் வருமா அப்படீன்னு நாம் கேட்கலாம்.
வரலாம். வராமலும் இருக்கலாம்





அதான் இந்தப் பாட்டிக்கு எழுபதும் மேல ஐந்தும் ஆச்சே, கொஞ்சம் விவரம் விவேகம் வந்ததா என்று பார்க்கப் போனால் எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
பாட்டியின் வசதிக்குக் குறைவில்லை. இரண்டு பெண்கள், இரண்டு பையன்கள் என்று, குழந்தைச் செல்வத்துக்குக் குறைவில்லை.
பெரிதாகக் கட்டிய வீடு. விசுவாசமிக்க வேலையாட்கள்.
அடிக்கடி வந்து விசாரித்துக் கொள்ளும் மகன்களும் மகள்களும்.
நேற்று நான் பாட்டியைப் பார்க்கப் போயிருக்கும்போது ஊஞ்சலில் ஒரு கம்பியைப் பிடித்துக் கொண்டு எங்கேயோ வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்.








தாத்தா படு ஸ்மார்ட்டாக அப்பத்தான் பார்க்கில் அரட்டை அடித்துவீட்டு வந்திருந்தார். ஒரே உற்சாகமான வரவேற்பு.
பாட்டியிடம் சத்தமில்லை.
என்னப்பா ஆச்சு என்று பெரியவரைக் கேட்டேன்.
நாளைக்கு அவள் பிறந்த வீட்ல ஒரு கல்யாணம். என்று நிறுத்தினார்.
பாட்டி போகலியா என்று ஆச்சரியமானேன்.









''எங்கடி, அவர்கள் வந்து நேரயா கூப்பிட்டார்கள். ஒரு அழைப்பிதழ் வந்தது.
வந்துடுங்கோ ன்னு ஒரு போன் கால்.
போறுமா.
நான் யார்!! வீட்டுக்குப் பெரிய மனுஷி.
இவர் யார். எம்பது ,சதாபிஷேகம் செய்து கொள்ளப் போகிறவர். என்னை விடு. இவரை மதிக்க வேண்டாமோ!!!!

நான் ஏன் போவேன் அந்தக் கல்யாணத்துக்கு. வேண கல்யாணம் பார்த்தாச்சு. வேணது சாப்பிட்டாச்சு. இனிமே வாயைக் கட்ட வேண்டியதுதான்.
இதைத்தான் அவர்கள் எனக்குச் சொல்லாமல் சொல்கிறார்கள். ஓரங்கட்டியாச்சு. எங்க அப்பா அம்மா இருந்திருந்தா இப்படிச் செய்வர்களா, என்று கலங்கிய அந்த மூதாட்டியைப் பார்த்து நிஜமாகவே கஷ்டமாக இருந்தது.

இது என்ன பிறந்துவீட்டுப் பந்தம்.!! தனக்கு ஒரு குடும்பம் ,அவர்களுக்கு ஒரு குடும்பம் ஆகிவிட்டது.

இன்னும் என்ன எதிர்பார்ப்பு! எதிர்பர்ப்பும் ஏமாற்றமும் தாண்டி வர வேண்டாமா.

ஆசை அதிகமானால் வருத்தமும் அதிகம் தானே.
என்று விட்டு விடுதலையாகிப் போவது???

என்று யோசித்தபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். உடனே திருமண மண்டபத்துக்குத் தொலை பேசி, திருமணம் செய்து வைக்கும் என் சினேகிதியைப் பிடித்தேன்.


ஏன்பா பாட்டியை நேர்ல கூப்பிடல.
உடனே ஒரு வண்டியை அனுப்பி கூட இருந்து அழைத்து வர ஏற்பாடு பண்ணும்மா, என்றேன்.
அவளும் சிறிது சலித்துக் கொண்டாலும் அனுப்புவதாக ஒத்துக் கொண்டாள்.
பார்க்கலாம்!!! இன்று திருமணத்துக்குப் போனால் பாட்டி எப்படி வந்து இருகிறார் ,மனசு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்:)

நானும்   இவரும் அழைக்கப் பட்டிருந்தோம் . மாப்பிள்ளைப் பையன் எங்கள் மகனின்  தோழன் என்று பிறகுதான் தெரிந்தது.
  ,படு ஆரம்பமான   அந்தக் கல்யாண மண்டபத்தில் எங்கள் சின்னக் காரை நிறுத்திவிட்டு  உள்ளே  நுழைந்த பொது  ஊஞ்சல் கல்யாணம் நடந்து கொண்டிருந்தது .
மாப்பிள்ளைக்கு முன்னாள் பாட்டி நின்று கொண்டிருந்தார், பிடிசுத்தி போட்டுக் கொண்டு. பாட்டியின் முகத்தில்  ஒளி  வெள்ளம்.  ஒன்பது கஜ  கொட்டடி . கழுத்தில பவழ மாலை. இடுப்பில ஒட்டியாணம். அமர்க்கள அழகு
 மெதுவாகப் பாட்டியைப் படம் எடுத்துக்  கொண்டேன்.

பிறகு  நாங்கள்  கிளம்பி விட்டோம்.
அடுத்த நாள் காலையில்   பாட்டியிடம் இருந்து   தொலைபேசி.
ஒரே   சிரிப்பும் கும்மாளமும்.
என்ன ஆச்சு  மாமி.  என்று கேட்டதற்கு,
அந்தப் பொண்ணு என்னைக் கூப்பிட்ட பொது போனே அடிக்கலையாம்.
ரொம்ப    நல்ல குழந்தை டி. நீங்க இல்லாமல் கல்யாணமா அத்தை .
கார்த்தால   விரதத்திலிருந்து நீங்கதான் நம்ம வழக்கத்தைச் சொல்லிக் கொடுக்கணும்.நு  கேட்டுக் கொண்டாள் .
அதே போலாச்சு. ஒருத்தருக்கும் ஒன்னும் தெரியலை.
ஆன்னா ஊனா வீடியோ   எடுத்துக்கப் போயிடருதுகள் .
அவளுக்கே ஒன்பது கஜம் நான்தான் கட்டி விட்டேன்.

என்னமோ போ   இப்பவாவது சமத்து  வந்ததேன்னு  இவரிடமும் சொன்னேன் என்று முடித்தார்

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

17 comments:

Geetha Sambasivam said...

hihihi, nan kodutha pinnutam ulla pathivu kanom, kaka kondu pocha?

இராஜராஜேஸ்வரி said...

ஆசை அதிகமானால் வருத்தமும் அதிகம் தானே.
என்று விட்டு விடுதலையாகிப் போவது???


விட்டுப்போகாத பந்தம் ..!

வல்லிசிம்ஹன் said...

இல்லைப்பா.இன்னிக்கு மின்வெட்டுப் படுத்தும் பாடு.
எ.பி யைத் திருத்தும்போது டோட்டலா பதிவு காயப்.!!!!!!
அப்புறம் நோட் பாடில் இருந்ததைக்

காப்பி பேஸ்ட் செய்தேன். பழைய பின்னூட்டங்கள் ஓடிவிட்டன:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் இராஜராஜேஸ்வரி.ஆமாம்.பெண்களுக்குப் பிறந்த வீட்டிலிருந்து ஒரு சிறு அவமதிப்பு வந்துவிடக் கூடாது.:(

அதுவும் நான்கைந்து சகோதரிகள் இருக்கும் வீட்டில் இது வெகு சகஜம்.
பந்தம் விடுவதில்லைதான்.
நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

எந்த வயசானாலும் பந்தங்கள் விட்டுப்போகாது (போகக்கூடாது) என்பதை நன்றாக சொல்லி உள்ளீர்கள் அம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,

பந்தமும் பாசமும் எப்பொழுதுமே போஷிக்கப் படவேண்டும்.
உங்கள் கருத்துதான் சரி.

ராமலக்ஷ்மி said...

எதிர்பார்ப்புகளைத் தாண்டி வராவிட்டால் வாழ்க்கை என்றும் சிரமமே. ரொம்ப அழகாக ஒரு வாழ்வியல் பாடத்தை இந்தச் சம்பவத்தின் மூலம் சொல்லியுள்ளீர்கள், வல்லிம்மா. பாட்டி சமாதானமானாரா என்பதையும் அறியத் தாருங்கள்:)!

கோமதி அரசு said...

இப்போது கோபமாய் இருக்கும் அவர்கள் உறவினர்கள் நேரே வந்து அழைத்து சென்று விட்டால் அதை எல்லாம் மறந்து ஆசீர்வாதம் செய்வார்கள்.

தன் கணவரிடம் எங்கள் வீட்டு ஆட்கள் நமக்கு எப்படி முக்கியத்தவம் கொடுக்கிறார்கள் பாருங்கள் என்று பெறுமை பேசிக் கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் ஏற்பட்ட வருத்தம் தான் வேறு ஒன்றும் இல்லை.
நீங்கள் இரு குடும்பத்திற்கும் உறவு நல்ல முறையில் இருக்க வழி வகுத்து விட்டீர்கள்.
உங்களுக்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

சாலமன் பாப்பையா போலச் சொல்ல வேண்டுமென்றால் பெரியவர்களும் பெருந்தன்மை காட்டுவதிலும் , உறவைப் போஷிப்பதிலும் முன்னுதாரணமாய்த் திகழ வேண்டும். சிறியவர்களும் பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். :)

வல்லிசிம்ஹன் said...

அதுதானே அங்கே அதிசயம்.
திருமணத்துக்கு முதல் நாளே இருவரும் மண்டபத்துக்கு வந்துவிட்டார்கள்.
தோழி தன் வேலையை விட்டுக் கொடுத்துவிட்டுத் தானெ சென்று அழைத்துவந்திருக்கிறாள்.
நம்ம அத்தைதானே.
தானே வருவார்கள் என்ற நினைப்பு அவளுக்கு.
பாட்டியின் கணவர் எல்லாவற்றையும்
படு குஷியாக எடுத்துக் கொண்டார். அத்தை சீர் எல்லாம் சீராக இருந்தது. அத்தையும் தன் குல தனமாக ஒரு ராக்கொடியை மணப்பெண்ணுக்குப் பரிசளித்தார்.:)

ராமலக்ஷ்மி said...

சந்தோஷம்:)!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

வயதானவர்களுக்கு மனக்குறையில்லாமல் நீங்கள் நடுவில் நுழைந்து நேரில் அழைக்கச் சொல்லி சொன்னதும் நல்லதே.

பாராட்டுக்கள்.

இதே சம்பவத்தை நான் நகைச்சுவையாக ஓர் ப்திவில் எழுதியுள்ளேன்.

தலைப்பு: அழைப்பு

இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2_11.html

நேரமிருந்தால் படிச்சுட்டு கருத்துச் சொல்லுங்கோ. பகுதி-1 + பகுதி-2 மட்டுமே.

அன்புடன்
கோபு [VGK]

வல்லிசிம்ஹன் said...

நிறையப் படித்தவர்தான் அந்தப் பாட்டி ,கோமதி. பாசம் எதை அறியும்.?
புகுந்த வீட்டிலும் நல்ல மதிப்பு.
அவர்கள் முன் தன் கௌரவம் குறையக் கூடாது.
செல்லமாய் வளர்த்த பெற்றோர் எல்லாம் அஞ்ஞானத்தை வளர்த்துவிட்டிருந்தார்கள். எப்படியோ வயதான காலத்தில் அவர் எதிர்பார்ப்பு நிறைவேறியது.
எனக்கு அவரது சிரித்த முகமே மகிழ்ச்சி கொடுத்தது.அது போதும்.:)

வல்லிசிம்ஹன் said...

கண்டிப்ப ஸ்ரீராம். பெரியவர்கள் கட்டாயம் விட்டுக் கொடுக்க வேண்டும்.
சிறியவர்களும் பெரியவர்கள் மரியாதைப் பட்டவர்களைக் கவனித்து நடக்கணும்.

திருமணம் நடந்து 5 வருடங்கள் ஓடிவிட்டன.காலங்கள் மாறிவிட்டன. அவரும் மாறிவிட்டார்:)(பாதி)

வல்லிசிம்ஹன் said...

வேறு வழி ? கோபு சார்!
இப்படியே அவர்களை விட்டால் திருமணம் சோபிக்காது.
கடைசிவரை நாங்கள் குற்றம் செய்து வலம் வருபவர்களைப் போல இருக்கவேண்டும். சட்டெனப் பிரச்சினை தீர்ந்தது பாருங்கள்.:)
நன்றி. உங்கள் பதிவைப் போய்ப் பார்க்கிறேன்.

அப்பாதுரை said...

என் நண்பர் சொன்னது: "என் அக்கா கல்யாணத்துக்கு போரூர் அண்ணா நகர் வடபழனி மயிலாப்பூர் எல்லாம் போய் பத்திரிகை கொடுத்து வீட்டுக்கு அஞ்சு மணி நேரத்துல திரும்பி வந்துருவேன்.. இப்ப என் பொண்ணு கல்யாணப் பத்திரிகை கொடுத்து அழைச்சுட்டு வர குரோம்பேட்டையிலிருந்து போரூர் போய்வர இப்போதெல்லாம் மூன்று மணி நேரத்துக்கு மேலாச்சு. மிச்ச இடங்களுக்கு எங்கருந்து நேருல போக? இத்தனைக்கும் அப்ப டிவிஎஸ்50 வச்சிருந்தேன். இப்ப காரு இருந்தும் ஒரு ப்ரயோசனமில்லே.."

இன்றைய நிலவரத்தில் இது சாத்தியமில்லை என்றாலும் நிறைய பேர் இன்னும் இந்த வழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள். சாதாரண பூணூல் நிகழ்ச்சிக்கே, வயதான காலத்தில் நிச்சயம் வரமாட்டார் என்று தெரிந்தாலும் கூட ஆசி வாங்க வேண்டும் என்று சென்னையிலிருந்து மாயவரம் பயணம் செய்து சாதாரண பூணூல் நிகழ்ச்சிக்குப் பத்திரிகை கொடுத்து நேரில் அழைப்பவர்களும் இந்தக் காலத்தில் இருக்கிறார்கள். பெரியவர்களை வீடு தேடிவந்து நேரில் அழைப்பது நம்ம கலாசாரமாச்சே?

இன்றைய வளர்ச்சி அண்மைகளைத் தொலைவுபடுத்திவிட்டது. எனினும், நிகழ்வில் சினேகிதி பெரியவர்களை தொலைபேசியாவது அழைத்திருக்கலாம்.

கோமதி அரசின் . interesting - இப்படியெல்லாம் பெருமை பேசிக்கொள்ள முடியுமா!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துரை.
பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே
வர இது போன்ற சந்தர்ப்பங்கள் அருமையாக அமைகின்றன.

அவர்களின் அனுபவம் சாதாரணமாக எடை போட முடியாது. கொஞ்சம் பிகு பண்ணிப்பார்கள். இருந்தாலும் அவர்களை அனுசரித்துப் போவது மிகுந்த பலன் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்.
சிநேகிதி(என் ஓரகத்தி)ஃபோன் எல்லாம் செய்துவிட்டாள்/நேரில வரலைன்னுதான் அத்தையோட ஆதங்கம்.;)