Blog Archive

Saturday, October 16, 2021

லிஸா மார்ட்டின் கதை 4

வல்லிசிம்ஹன்,

1978 

 ஒரு மறக்க முடியாத வருடம் ஆனது லிஸாவுக்கு. 

இனிதாகக் கழிந்த கோடை விடுமுறை 
இறுதியில் அவள் திடீரென உணர்ந்தது 

தான் தாயாகப் போவதை. :(

எப்படி மார்ட்டினிடம் சொல்வது. 
கல்லூரியில் சேர்க்கத் தயாராகிக் 
கொண்டிருக்கும் பெற்றோரிடம் எப்படி விவரிப்பது.....

அளவில்லாத கலவரத்துக்கு உள்ளானவள்
மார்ட்டின் வீட்டை அடைந்த போது 
அவன்  தன் தாயுடன்  "ஆன் ஆர்பருக்கு"ப் போயிருந்ததாகத் தெரிந்தது.
இரண்டு மூன்று நாட்களாக அவனைக்
காணாமல் தவித்துப் போனாள்.

ஆன் ஆர்பர் ஆஸ்பத்திரியில் மார்ட்டினின் 
அன்னைக்கு  மருத்துவ ஆலோசனை
கேட்கத் தான் போயிருக்கிறான்.

ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த மார்ட்டினின் தந்தை  Andrew 


லிஸாவின் கலக்கத்தை உணரவில்லை.

வீட்டிற்குத் திரும்பிய லிஸாவை,அவள் அம்மா
கேள்விக் குறியுடன் பார்த்த போது,
தன் நிலையைச் சொல்ல வேண்டிய கட்டாயம்
வருகிறது. தாய் அதைத் தந்தையுடன் 
பகிர்ந்து கொள்ள,
அவருக்கு முதலில் வந்தது அடக்க முடியாத
சினம். 
கைத்துப்பாக்கியுடன் சென்று அவர்கள் அனைவரையும்
அழிக்கும் அளவுக்குக் கோபம் கொண்ட 
அவரை சாந்தப்படுத்துவது லிஸாவின் அம்மாதான்.

அவளது சிந்தனைப்படி இரண்டு திட்டம் தான் இருந்தது.
''ஒன்று கருவை அழிப்பது.
முடியாத பட்சத்தில் லிஸா பெற்ற குழந்தையை
சுவீகாரம் கொடுப்பது.
லிஸாவுக்கு நல்ல கணவனைத் தேர்ந்தெடுத்து மணமுடிப்பது''

லிஸாவுக்கு வட கரோலினா மானிலத்தில் 
ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதார வகுப்பில் இடம் கிடைத்திருந்தது.

தந்தை தாயின் விருப்பத்துக்குக் கட்டுப் படுவது ஒன்றே 
அவளால் முடிந்தது. 17 வயதில் அவள் செய்ய முடிந்தது அதுதான்.

தன் வைத்தியசாலையைத் தற்காலிகமாக மூடிவிட்டு
குடும்பத்துடன் வட கரோலினாவின் ராலி பல்கலைக் கழக
வளாகத்துக்குக் குடி பெயர்ந்தார்.
North Carolina Raleigh   college.

லிஸாவும் பெற்றொரும் வடகரோலைனாவுக்குக் கிளம்பிச்
 சென்ற இரு நாட்களில் 
மார்ட்டின் தன் தாயுடன் அவள் நோய் பற்றிய கவலையுடன்
வந்தான். அடுத்த வீட்டுக் கதவு பூட்டி இருப்பது அவனை மேலும்

கவலை கொள்ள வைத்தாலும் தந்தையுடன் தாயின் 
உடல் நலத்தை மீட்பதில் கவனம் செலுத்தினான்.

பெயர் சொல்லாத நோய் குடும்பத்தை சீரழிக்க
அவனது கல்லூரிப்படிப்பு தாமதமாக ஆரம்பித்தது.
லிஸா குடும்பம் எங்கு சென்றார்கள், என்ன காரணம்
ஒன்றுமே அவனுக்குப் புரிபடவில்லை.தன் வீட்டு மாடி அறையிலிருந்து 
லிஸாவின் வீட்டு மாடி ஜன்னலைப்
பார்த்தவாறே படிப்பது  தான் அவனால் முடிந்தது.
என்றாவது வருவாள்.தன் வாழ்வு மீண்டும் வளம் பெறும்
என்று நினைத்தவனுக்கு மூன்று வருட காத்திருப்பு

சலிக்கவில்லை. மருந்துத் துறையில் ஆராய்ச்சி செய்ய நியூயார்க்
பலகலைக் கழகம் அவனுக்கு அனுமதி அளித்த
மாதம் லிஸாவும் பெற்றோர்களும்
லிஸாவின் குழந்தை,கணவனுடன் வந்தார்கள்.
இருவீட்டுக்கும் நடுவில் இருந்த வேலி அடைக்கப்
பட்டது.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

முன்னை விட அழகான லிஸா, குட்டி தேவதை
போல ஒரு குழந்தை, உயரமும் கம்பீரமுமாக
கணவன் எவரார்ட்,ஹார்வர்டில் படித்தவன்,
பெரிய ஆயத்த உடை கடைகளின் 
உரிமையாளர் 32 வயதான ஆண்மகனாக
அடுத்த வீட்டில் வந்ததும் மார்ட்டினின்
உலகம்  ,கற்பனை,ஆசை எல்லாம் உடைந்தது.
தன்னிடம் ஒரு கடிதம் கூட எழுத முடியாத
லிஸாவைக் காணக்கூட அவனுக்கு முடியவில்லை.


அவனுடைய பெற்றோருக்கு அவன் வருத்தம் புரிய
அவனை நியூயார்க்குக்கு அனுப்பி வைத்தார்கள்.
22 வயதில் நியூயார்க்குக்குக் கிளம்பியவன்

ஊர்ப்பக்கமே திரும்பவில்லை.பெற்றோரைத் தான் இருக்கும் 
பல்கலைக்கழகத்துக்கு  வரவழைத்துக் கொண்டான்.

மனம் போன போக்கில் சென்றவனுக்குப்
பெண்களிடம் மதிப்பும் இல்லை.
அவனைக் காதலித்த பல் பெண்களில்
இருவரைத் திருமணம் செய்து
அவர்களிடம் லிஸாவைத் தேடித் தோற்று
நிறைய ஜீவனாம்சம்  கொடுத்து விலகிக் கொண்டான்.


அவர்களிடம் ஈடுபாடு இல்லாமல் நடத்தின வாழ்க்கையின் 
பலனாக ஒரு குழந்தை கூட இல்லை.
தன்னைப் பார்த்து தனக்கே பிடிக்காமல் இருந்த
போது மேலும்  13  வருடங்கள் சென்றிருந்தன.

தந்தையின் உடல் நிலை அவனை டெட்ராய்ட்டுக்கு
வரவழைத்தது..............................தொடரும்.




22 comments:

Geetha Sambasivam said...

லிசா/மார்ட்டின் காதலின் பின்னணி தெரியாததால்/படிக்க விட்டிருக்கேன். கொஞ்சம் புரியவில்லை என்றாலும் சுவாரசியமாகச் செல்கிறது. லிசாவுக்கு எப்படித் திருமணம் நடந்தது/குழந்தை பெற்ற பிறகா/அதற்கு முன்னாலேயேவா என்பதெல்லாம் மனதில் எழும் கேள்விகள். தொடர்ந்து நீங்க எழுதக் காத்திருக்கேன்.

ஸ்ரீராம். said...

கதை நமக்கு சுவாரஸ்யமாக கதாபாத்திரங்களுக்கு வேதனையாக நகர்ந்து மெல்ல ஒரு கட்டத்தை எட்டி இருக்கிறது.  தொடர்கிறேன்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

தொடர் கதை (உண்மை சம்பவம்) நன்றாகப் போகிறது. இதன் முந்தைய பதிவாக 2ம்,3ம் படித்தேன். 1ம் பகுதி கிடைக்கவில்லை. தேடிப் படிக்கிறேன். ரத்தின சுருக்கமான வரிகளுடன் அருமையாக எழுதுகிறீர்கள். தொடரும் பகுதிக்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

ஏன் தன்னை விட்டு பிரிந்து சென்றார் என்று தெரியாமல் இருப்பது மிகவும் கடினமான விஷயம். மேலும் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

கோமதி அரசு said...

மிகவும் கஷ்டமாக இருக்கிறது படிக்கவே!

தான் விரும்பிய பெண் எங்கு சென்றார் என்ற குழப்பம், திரும்பி வந்த போது கண்வன், குழந்தையுடன் வந்தது அதிர்ச்சி.
வாழ்க்கையில் எடுத்த அவசர முடிவுகள் என்று மார்டின் மனநிலையை நன்றாக சொன்னீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

@Kamala Hariharan,

This is the first part

https://naachiyaar.blogspot.com/2021/10/blog-post_04.html

வல்லிசிம்ஹன் said...

@ கீதா சாம்பசிவம்.

அடுத்த பகுதியிலாவது முடிக்கணும்னு பார்த்தால்
எனக்கு சொல்லத் தெரியவில்லை.
லிஸாவும் மார்ட்டினும் பிறந்ததிலிருந்தே ஒண்ணா
வளர்ந்தவர்கள்.

இருவரும் இணைந்து குழந்தை வருகிறது.

அது மார்ட்டினுக்குத் தெரியவில்லை.
17 வருடங்கள் கழித்தே புரிந்து கொள்கிறான்.
லிஸாவின் பெற்றோர், வேறு திருமணம்
செய்து கொடுக்கிறார்கள். அவரும் லிஸா நிலைமையைப் புரிந்தே
திருமணம் செய்து கொள்கிரார்.

அடுத்த பகுதியில் இது வரணும்.

மனம் போகிற வேகம் கை எழுத முடியவில்லை மா.
வந்து வாசித்ததற்கு மிக நன்றி.

மாதேவி said...

மாட்டின் லிஸா இருவருடைய மனநிலையுமே குழப்பத்தில்தான் இருந்திருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
ஆமாம் 17 வருடங்களைக் கடப்பது அவர்களுக்குக்
கஷ்டமாகத் தான் இருந்திருக்கிறது.

எனக்கு அதைச் சுருங்கச் சொல்ல முடியவில்லை:)

நல்ல முடிவை நோக்கி ஓடிவிடலாம்.
ஆனால் நடுவில் வரும் சுவார்ஸ்யங்களைத் தாண்ட முடியவில்லை.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள்.

லிஸாவை மீண்டும் எழுதும்படியாக வரும்பொழுது
நடந்த சம்பவங்களைஹ் தொகுப்பதே
பெரிய பிரமிப்பாக இருக்கிறது.

அதை முடிந்த வரையில் சுருக்கப் பார்க்கிறேன்.
நல்ல இதயங்களை மீண்டும் இணைத்த
இறைவனுக்குத் தான் நன்றி செய்ய வேண்டும்.

வாழ்க்கை ஒரு நொடியில் வருத்தமும் தருகிறது,
நன்மையும் செய்கிறது. ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தான்

நமக்குக் கிடைப்பது கடினம்.
மிக நல்ல வார்த்தைகளுக்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.

''தான் விரும்பிய பெண் எங்கு சென்றார் என்ற குழப்பம், திரும்பி வந்த போது கண்வன், குழந்தையுடன் வந்தது அதிர்ச்சி''

அவர்களுக்குப் புரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் பெரியவர்கள்
அளிக்கவே இல்லை.
அனாவசியமாக அந்த இளமைக்காலம்
வீணானது.
ஆனால் தாமதமாகவாவது புரிதல் வந்ததே.
அந்த வரையில் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்.
நன்றி மா.

நெல்லைத் தமிழன் said...

இந்தப் பகுதியைப் படித்துவிட்டு, எப்படி மற்ற பகுதிகளை மிஸ் பண்ணினேன் என்று தேடிப் படித்தேன்.

ரொம்ப நல்லா எழுதறீங்க..... கொஞ்சம் இடைல இடைல எங்க கற்பனை சக்தியையும் உபயோகித்துக்கணும்.

எந்த விஷயத்தையும், ரசாபாசமான நிகழ்வுகளையும், பூடகமா அதேசமயம் ஆபாசமில்லாமல் ரொம்ப நல்லா எழுதறீங்க வல்லிம்மா. பாராட்டுகள்.

கொஞ்சம் zig zagஆக வருகிறது...ஆனாலும் கதையின் flow புரிகிறது. எப்படி லிஸா பெற்றோர் அப்படிப்பட்ட முடிவை (யாருக்கோ திருமணம் செய்துகொடுப்பதை) எடுத்தார்கள்? கொஞ்சம்கூட, பேசி, புரிந்து, இவன் சரிப்படுவான்;இவன் சரியில்லை என்றெல்லாம் தீர்மானிக்க நேரமே கொடுக்கவில்லையே... இந்தப் பகுதி புரியலை. எப்படி அப்படி மண்டூகமாக, அந்தக் கலாச்சாரத்தில் இருந்தவர்கள் இருக்க முடிகிறது?

நெல்லைத் தமிழன் said...

//லிசா/மார்ட்டின் காதலின் பின்னணி தெரியாததால்/படிக்க விட்டிருக்கேன். கொஞ்சம் புரியவில்லை என்றாலும் சுவாரசியமாகச் செல்கிறது. லிசாவுக்கு எப்படித் திருமணம் நடந்தது/குழந்தை பெற்ற பிறகா/அ//

@கீசா மேடம்... அதை விஸ்தாரமாகச் சொல்லவில்லை என்றாலும் புரிகிறதே.. லிஸா கர்ப்பமாகியிருக்கிறாள் (மார்ட்டின்).. கலைக்க முடியலை. பிற்பாடு குழந்தை மார்ட்டின் மாதிரியே இருக்கு என்று சொல்லியிருக்காங்க. ஆனால் லிஸாவுக்கு திருமணம் ஆகிப் பிறகு திரும்பி வந்திருக்கிறார். (18 வயசு குழந்தையோடு). I also assume லிஸாவின் கணவன் இல்லை என்று.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,

நீங்கள் சொல்வது உண்மையே,.
வாழ்க்கையின் உன்னதமான இளமையில்
பாதியைக் கவலையிலேயே தொலைத்தாலும்
மீண்டும் ஒன்று சேர வாய்ப்புக் கிடைத்ததை
இன்னும் கொண்டாடுகிறார்கள்.
தொடர்ந்து வந்து படிப்பதற்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
எனக்கு லிஸாஅண்ட் மார்ட்டின் இருவருமே நல்ல
நண்பர்கள்.

இரு பக்கக் கதைகளையும் சொல்ல வேண்டி வருகிறது.
பொறுமையாகப் படிக்க வேண்டும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,

கதையை இரண்டு கோணங்களில் இருந்து எழுதுவதால்
zig zag ஆகிறது.:)

இருவரின் உணர்வுகளையும் அறிவேன்.
நல்ல காதலையும் வாழ்வையும்
லிஸாவின் பெற்றோர் மடை மாற்றி விட்டார்கள்.

ரொம்பப் பாவம்மா.
இந்த ஊரிலும் நம் ஊர் மாதிரி மேல்குடி, அப்படி இல்லாதவர்கள்
பாரம்பரியம் உள்ளவர்கள், இங்கிலாந்திலிருந்திலிருந்து வந்தவர்கள்,
வேற்று தேசத்திலிருந்து வந்தவர்கள் என்றெல்லாம்
வித்தியாசம் அப்போது பார்த்தார்கள்.

இப்போது எல்லாம் தலைகீழ் , இதோ பக்கத்து வீட்டுப் பெண்
வேறெதோ சினேகம் வைத்துக்
கொண்டிருக்கிறது. அம்மா அப்பா அரவணைத்துக் கொண்டார்கள்.
கடும் சொல்லே கிடையாது.

வல்லிசிம்ஹன் said...

""""எந்த விஷயத்தையும், ரசாபாசமான நிகழ்வுகளையும், பூடகமா அதேசமயம் ஆபாசமில்லாமல் ரொம்ப நல்லா எழுதறீங்க வல்லிம்மா. பாராட்டுகள்///
மிக நன்றி மா.

அன்பின் முரளிமா.

ரசாபாசத்தை அப்பட்டமாகப் பேசுவதே கஷ்டம். அதை எழுதுவது இன்னும் சிரமம்:))))

சுத்தி வளச்சு எழுதுகிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா ரொம்ப ரொம்ப மனதிற்கு வேதனையாக இருந்தது பாவம் மார்ட்டின் அண்ட் லிசா இல்லையா.

அமெரிக்கா என்றால் அங்குள்ள எல்லாரும் ரொம்ப அப்படியே முன்னேறிய எண்ணங்கள் உள்ளவர்கள் என்று நம்மூரில் பலரும் நினைப்பதுண்டு. ஆனால் அங்கும் பழைய எண்ணங்கள் உள்ளவர்கள் குறிப்பாக இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், இப்படியான பழைய எண்ணங்கள் உடைய வேறு சமூகத்தினர் இருக்கத்தான் செய்கிறார்கள் இப்போதும் கூட. என் மகன் சொல்லித் தெரிகிறது.

ஆனால் லிசாவின் பெற்றோர் யோசித்திருக்கலாம் இல்லையா. ம்ம்ம்ம் ஆனால் கோபம் ஆத்திரம் எல்லாம் கண்ணை மறைக்கும் போது?

லிசாவுக்கு எப்படி மணம் புரிந்தார்கள்? அந்தக் கணவன் ஏற்றுக் கொண்டானோ? இனிதான் வருமோ அந்தப் பகுதி?

ஆனால் கதையை நீங்கள் சொல்லும் விதம் அசாத்தியமாக் இருக்கிறது. ரொம்பவே நன்றாக எழுத வருகிறது அம்மா உங்களுக்கு

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா கதையை மீண்டும் முற்பகுதிகளை கீதா எனக்கு அனுப்பிக் கொடுக்க அதையும் வாசித்து நினைவுபடுத்திக் கொண்டேன்.

கதை நன்றாக இருக்கிறது. 1978 எனும் போது கிட்டத்தட்ட 43 வருடங்களுக்கு முன் குழந்தை என்றால் இப்போது அக்குழந்தைக்கு மணம் ஆகி குழந்தைகளுக்கும் இருக்கும் இல்லையா?

மார்ட்டினும் லிசாவும் பல வருடங்களுக்குப் பின் சந்திக்கிறார்கள் இது ஃப்ளாஷ் பேக். சந்திக்கும் போது என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை அறிய ஆவலுடன்

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் @கீதாரங்கன்,

கீதாமா,
இந்த ஊர்க்காரர்கள் ஒவ்வொரு மானிலத்திலும் வேறு படுகிறார்கள் .
இன்னும் தென் மாவட்டப்களில்
நிற வேற்றுமை, சமய வேற்றுமை அதாவது வழிபாட்டு வேற்றுமை
என்று சொல்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.

பணக்காரக் குடும்பம், அவர்கள் அளவு பணமில்லாத குடும்பம்
இதுவும் அப்போது இருந்தது.
உங்கள் மகன் சொல்வதும் உண்மை.

இந்த வேற்றுமைக் கோபம் வாழ்வை அழிக்கக் கூடாது.
அவர்கள் நல்ல தலைவிதிதான் அவர்களை ஒன்று சேர்த்தது.

நல்ல கருத்துகளுக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசி மா,
கீதாவுக்கு நன்றி சொல்லணும்.

நீங்களும் படிக்க வேண்டும் என்ற மும்முரம் காட்டியது மிகவும்
சிறப்பு.

ஆமாம் 1978 இல் பிறந்த கேத்தி 1998இல் மணமுடித்தாள்.

அவளுடைய காதல் திருமணமும்
நடந்தது. 2000த்தில் ஆண் மகனைப் பெற்றாள். அந்த மகனுக்கும்
பெண் சினேகிதி இருக்கிறாள்:)
அது இன்னோரு கதை.

வல்லிசிம்ஹன் said...

"மார்ட்டினும் லிசாவும் பல வருடங்களுக்குப் பின் சந்திக்கிறார்கள் இது ஃப்ளாஷ் பேக். சந்திக்கும் போது என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை அறிய ஆவலுடன்"

நல்ல முடிவுக்கு வர ஒரு வருடம் ஆனது அப்பா.
அதுதான் இனி எழுத வேண்டும். நன்றி மா.