Blog Archive

Sunday, May 20, 2012

இன்று அ(ம்)மாவாசையாம்..........சூரிய கிரகணமும் கூட.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பச்சை நீலம் வெள்ளை கரும்பச்சை
கலந்து பொங்கி வரும் நீர் வெள்ளம்

பொங்கும்  பரிவு, கருணை,எளிமை
கண்டிப்பு, அபரிமிதமான புரிதல்
இதெல்லாம் சேர்த்தால்
அம்மா .

திருமங்கலத்தில் ஒரு வீட்டில்  தலைவி 
இறைவனடி சேர்ந்தாள்.
பாட்டி,தாத்தா,அந்த அம்மாவின் கணவர் கதறினர்.
குழந்தைகள் எங்கள்  வயதுதான் இருக்கும்
இங்கே வந்துவிட்டன.
எங்களுடன் சேர்ந்து அம்மா அந்தக் குழந்தைகளுக்கும் கைகளில் சாதம் கலந்து போட்டாள்.
பக்கத்துவீட்டு அழுகைக் காதில் விழா வண்ணம் கதவுகளை மூடி அவர்களைப் படுக்க வைத்துத் தூங்கச் சொன்னாள்.

குழந்தைப் பிறப்பின் போது இறந்துவிட்டதால் அந்தக் குழந்தையின் அலறல் வேறு.
என்  எட்டு வயதிற்கு இவை அனைத்தும்
அளவுக்கு மீறின கலவரத்தை   ஊட்டின.

அம்மாவைவிடாமல் அவளுடன் எவ்வளவு
ஒட்டமுடியுமோ அப்படி ஒட்டி இருந்தேன்.
தம்பிகள்  நிலைமை புரிந்தும் புரியாமலும்
விழித்துக் கொண்டிருந்தார்கள்.

கடைசி நேரத்தில்  குழந்தைகளை எழுப்பவும் அலறிக் கொண்டு சென்றன.

அம்மாவிடம் அன்று உறுதி மொழி வங்கினேன். நீயெல்லாம் நிறைய நூறு நூறு வருஷம் இருப்ப இல்லமா.
ஆமாம் உம்மாச்சி எப்பவும் பார்த்துப்பார்.
இதெல்லாம் பார்த்துப் பயப்படக் கூடாது.

சரியாகிவிடும் கொஞ்சநாளானால் உனக்கே புரியும்.


புரிகிறது. ஆனல் பிடிக்கவில்லை. இப்பொழுது   நீ  இங்கே  இருந்தாலும் அழாதே என்றுதான் சொல்வாய்.
எத்தனை வயது எனக்குத்தான் ஆனால் என்ன,உனக்குத் தான் ஆனால் என்ன.
அம்மா நீ என்றும் வேண்டும்.


19 comments:

ராமலக்ஷ்மி said...

என் தந்தை மறைந்த நாளில் குழந்தைகள் நாங்கள் புரிந்தும் புரியாமலும் வெருண்டு நின்ற கணங்கள் நினைவுக்கு வருகிறது. இப்படிதான் இன்னொரு வீட்டுக்கு சிலமணிகள் அனுப்பப் பட்டோம்.

அத்தனைக்குப் பின்னும் உறுதியுடன் நின்று எங்களை ஆளாக்கியது யார் என்று சொல்ல வேண்டியதில்லை. நீங்களே சொல்லியுள்ளீர்கள்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,அவ்வளவு சின்ன
வயதிலா அப்பாவை இழந்தீர்கள். மனசே வலிக்கிறது.உங்கள் அம்மாவை இப்பொழுதே பார்க்கவும் ஆவல்.
இத்தனை உன்னதமாகப் பெண்ணை வளர்த்திருக்கிறாரே.என் வணக்கங்கள் அவருக்கு.
அவரது உறுதிக்கு என் வணக்கம் சேரட்டும்.

துளசி கோபால் said...

எங்கம்மா மறந்தபோது எனக்கு 11 வயசுப்பா. அப்போ சரியாகப்புரிஞ்சு துக்கம் கொண்டாடத் தெரியலை:(

தோழியின் மாமியார் புறப்படும் தருணம் போய்ப் பார்த்து கைகளைப்பிடிச்சு மௌனத்தால் அவர்கல் மனதுடன் பேசி, ஆறுதல் சொல்லிட்டு தோழியின் குழந்தைகளை நம்ம வீட்டுக்குக் கூட்டி வந்துட்டேன்.

இங்கேயே எல்லாக் குழந்தைகளுக்கும் உணவூட்டி, விளையாட வச்சுருந்த சமயம் எல்லாம் முடிந்தது'என்று தோழி ஃபோனில் சேதி சொன்னதும் நான் மட்டும்போய் அம்மாவுக்குப் புடவை உடுத்தி வேண்டியவை எல்லாம் செய்தபின் ( அண்டர் டேக்கர் வருமுன்) குழந்தைகள் அனைவரையும் கோபால் அழைத்து வர பிள்ளைகள் பாட்டி முகம் பார்த்து 'பை ' சொன்னது நினைவுக்கு வந்துவிட்டது. :(

ஹுஸைனம்மா said...

//எத்தனை வயது எனக்குத்தான் ஆனால் என்ன,உனக்குத் தான் ஆனால் என்ன.
அம்மா நீ என்றும் வேண்டும்//

மிக உண்மை. இறைவனருளால் பெற்றோரின் அன்பை இன்றும் சுவைத்து வருகிறேன். எனினும், (யார் முன்னே, யார் பின்னே என்று யாரறிவார்) இதுபோல ஒருகாலம் வந்தேதானே தீரும் என்று நினைக்கும்போது, தானாகக் கண்ணீர் வருகிறது.

(நான் அல்லது அவர்கள்) இருக்கும்போதே அவர்களது அருமையை உணர இதுபோன்ற உங்களின் பதிவுகள், மற்றவர்களின் அனுபவங்கள் உதவுகின்றன. மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

தெரியும் துளசி.அது தனி துக்கம்.அம்மாவே தெரியாமல் வளர்ந்ததுதான் உங்களை எல்லோரிடமும் கனிவோடும் அக்கறையாகவும் இருக்கவைக்கிறது.
கொடுத்த வைத்தவர் உங்கள் சிநேகிதி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா,இன்ஷா அல்லாஹ். உங்கள் பெற்றோர் எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
சமயம் வரும் போது இறைவன் வேண்டும் சக்தியையும் கொடுப்பார். அதற்கு இன்னும் நிறைய நாட்கள் வருடங்கள் இருக்கின்றன.கவலை வேண்டாம்.

மாதேவி said...

நெஞ்சைத் தொட்ட பதிவு.

இராஜராஜேஸ்வரி said...

எத்தனை வயது எனக்குத்தான் ஆனால் என்ன,உனக்குத் தான் ஆனால் என்ன.
அம்மா நீ என்றும் வேண்டும்.


நிரம்பித்ததும்பும் உணர்வுகள் ...

ஸ்ரீராம். said...

2002 இல் அம்மாவை இழந்தேன். இழப்பின் வலி நின்று நிதானமாக இன்றும் நெஞ்சில் தொடர்கிறது. தவிர்க்க முடியாததாயினும் இந்த இழப்பு ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் தவிக்கவைக்கும் இழப்பு..

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி நீங்களும் சுற்றமும் நல்வாழ்வு பெற்று சுகமாக இருக்க வேண்டும்.வருகைக்கு நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இரஜராஜேஸ்வரி உங்கள் பதிவிற்கு வந்தேன். படங்களைப் பார்க்கமுடியவில்லை.ஆனால் படிக்க முடிந்தது. வருகைக்கு மிக நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம், எனக்குத் தெரியாதே. அம்மாவுடன் இருக்கிறீர்கள் என்றல்லவா நினைத்தேன். இத்தனை அழகாகப் பதிவிடுகிறீர்கள் அம்மா இருந்தால் படித்து மகிழ்ந்திருப்பாரே.
காலம் வலியை ஆற்றட்டும்.

பால கணேஷ் said...

நானெல்லாம் ஏழு வயதில் அப்பாவை இழந்தவன். எனக்கு அந்த வலி தெளிவாகப் புரியும்மா.... கடைசி இரண்டு வரிகள் நிதர்சனம். அருமை.

என் அலுவல் நிமித்தம் தினம் மைலாப்பூர் வருகிறேன் வல்லிம்மா. 98406 11370 என்ற என் எண்ணில் அழையுங்கள். நானே புத்தகம் தருகிறேன் உங்களுக்கு. படிக்கும் ஆர்வத்துக்கு என்னாலானது. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

வல்லிசிம்ஹன் said...

இன்னோரு சிறுவயது இழப்பு!!
ஏன் இப்படி நடக்கிறது.உங்கள் அலைபேசி எண்ணைக் கொடுத்ததற்கு நன்றி கணேஷ்.அழைத்துச் சொல்கிறேன். ஒரு சதாபிஷேகம் இருக்கிறது அது முடிந்ததும் சொல்கிறேன்.கட்டாயம் வீட்டிற்கு வரவேண்டும்.

அப்பாதுரை said...

உறுதிமொழி beautiful!

வல்லிசிம்ஹன் said...

நன்றி துரை.

சாந்தி மாரியப்பன் said...

சின்ன வயசுல தாய் தந்தை ரெண்டு பேர்ல ஒருத்தரை இழக்கறதுங்கறது ரொம்பவே கொடுமை. உங்க மனநிலை அப்போ எப்படி இருந்துருக்கும்ன்னு நல்லாவே புரிஞ்சுக்க முடியுது வல்லிம்மா.

என்னோட அப்பா "விடைபெற்று" கிளம்பினப்ப நான் எட்டாவது வகுப்பில்,.. என்னோட கடைசித்தம்பிக்கு மூன்று வயது. எதையும் பார்த்து அவன் பயந்துரக்கூடாதுன்னு கிட்டத்தட்ட ஒரு வாரமா கோழி தன்னோட குஞ்சை அடைகாக்கற மாதிரி அவனைச் சுமந்துக்கிட்டே திரிஞ்சது ஞாபகம் வருது.

Vetirmagal said...

இந்த இழப்பு மனசிலிருந்து மறைவதே கிடையாது.

திடீரென்று அம்மா மறைந்த வலி இன்றும் மறையலியே!
அம்மாவுக்கு நம்மால ஒண்ணுமே செந்ந முடியலைசேன்னு இப்போதும் பாரமாக இருக்கிறது.

எல்லாரிடமும் அன்பாக இருப்பதுதான் அவளுக்கு செய்யும் கைம்மாறுன்னு மனச தேத்திகிறேன்.

மனச தொட்ட பதிவு வல்லி!

கோமதி அரசு said...

என் அப்பா இறந்த போது அப்பாவுக்கு 51, எனக்கு 16, என் தம்பி, தங்கைகள் மிகவும் சின்னவர்கள். எல்லோர்ரையும் உறவினர்கள் ஆறுதல் படுத்தினார்கள்.

என் கடைசி தங்கைகளுக்கு 4, 5,வயது. அவர்களுக்கு விபரம் தெரியாத வயது.அப்பா தூங்குகிறார்களா? ஏன் எல்லோரும் அழுகிறார்கள் என்று கேட்டு எல்லோரையும் கதறி அழவைத்தார்கள்.

எத்தனை வயதானாலும் தாய் தந்தை எல்லோருக்கும் வேண்டும் அவர்களின் அன்பும் அரவணைப்பும் என்றும் வேண்டும்.

பதிவு நெஞ்சை நெகிழ வைத்து விட்டது.