Blog Archive

Monday, April 26, 2010

ஓடம் அது ஓடும்.அது சொல்லும் கதை என்ன.
























எல்லோரும் வாழ வேண்டும்.





Posted by Picasa
ஒரு ஊரில ஒரு அம்மா அப்பா இருந்தாங்களாம். அவங்களுக்குப் பிள்ளைங்களும் இருந்தாங்களாம்.
பிள்ளைங்க ஒவ்வொண்ணும் படிச்சு வேலை தேடிக், கல்யாணம் கட்டிக்கிட்டு
வெளியூருக்கும் போய்ட்டாங்களாம்.
அப்பப்போ போனு போட்டு இங்க வா,அங்க வான்னு சொல்லுவாங்களாம். அம்மா அப்பாவும் , பாவம் பிள்ளைங்க ,நாமும் தான் ஏதோ நம்மால முடிஞ்ச உதவியைச் செய்துட்டு,ஊரையும் சுத்திப் பார்த்துட்டு வந்துடலாம்னு போவாங்க,.


அப்புறம் ஒரு பயணம் முடிஞ்சு வரும்போது வீட்டில எலிகள் நடமாட்டம்+ ரெண்டு எலிகள் இறந்தே கிடந்த நிகழ்ச்சி எங்களை வெகுவாகப் பாதித்தது. கிட்டத்தட்ட பத்து மாத அழுக்கை அகற்ற வேண்டிய கட்டாயம்.
உதவி செய்ய வருபவர்களுக்கோ இப்போது வேலை செய்யாமலே பழகிவிட்டது. நமக்கோ உடல் நலமும் முன் போல் இல்லை. ஒவ்வொரு வேலையும் இமாலய முயற்சியாகப் படுகிறது.
வீடும் சிறிது சிறிதாக வேலை வாங்குகிறது.அதற்கும் வயசாகிவிட்டது இல்லையா.
அதனால் தீர்மானம் செய்தோம்.
இனிமேற்கொண்டு குழந்தைகள், பேரன்,பேத்திகள் வந்து நம்மைப் பார்க்கட்டும்.
வீட்டைப் பூட்ட வேண்டாம். என்ற தீர்மானம்.
அதுவும் நல்லபடியாகவே நிறைவேறியது.

இதில நாங்க வெளியூரில் இருப்பதாக நினைத்துக் கொண்டு எங்களுக்கு வராமல் போன திருமண அழைப்புகள் ,நிகழ்ச்சிகள், கோவில் பயணங்களும் விட்டுப் போயின.:)
சம்பந்தப் பட்டவங்களைக் கேட்டால் ,''நீ ஊரிலயா இருக்கே!!! அடக் கடவுளே.ஏன்பா கல்யாணத்துக்கு வரலை''ன்னு ஒரு தோழி கேட்டதும் 'சே;ன்னு போய்விட்டது.
இது முன்கதை.
இப்போ பின்னுரை.
நாங்க துபாய் போறோங்க.
ம்ஹூம் அங்கிருந்து எங்கயும் போகலை. மூணு வாரத்தில திரும்பிடுவோம்.

கடவுள் கிருபைல ஒழுங்காப் போயிட்டு, ஒழுங்கா இருந்துட்டு, ஒழுங்கா திரும்ப அந்த லஸ் விநாயகனே பொறுப்பு.
நீங்கதான் பதிவே போடறதில்லையே.அதுக்கு எதுக்கு இந்த நீட்டி முழக்கி ஒரு பதிவுன்னு நீங்க கேட்டீங்கன்னால்.,என் பதில் இதுதான்.
நாங்களும் மொக்கை எழுதுவோமில்ல:)
வருகிறேன் நண்பர்களே. எல்லாரும் பத்ரமா இருங்க.

Monday, April 12, 2010

அது ஒரு பகல் காலம்







வெய்யில் போதுமா!! வருடா வருடம் நாம் கேட்கும் கேள்விதான். இருந்தாலும் இந்த வருடம்

ரொம்பவே அதிகமாக இருக்கு.
இதில் ஒரு நாள் முழு மின்வெட்டு.!
மின்சாரம் போவதைவிட அதோட பின் விளைவுகள் படு மோசம்.
முதலில் வருவது காத்து. .வருவதுன்னு சொல்லக் கூடாது.வராம,ஒரு இலை அசையாமல்

மரமெல்லாம் மௌனம் சாதிக்கிறது.
முன் காலம் போல வாயில் கதவெல்லாம் திறந்து வைத்து,அழியை மட்டும் போட்டுக்

கொண்டு தலைக்குசரம் வைத்துக் கொண்டு படுக்க முடியுமா. கேட்' டை யாரொ திறப்பது

போலவே தோன்றுகிறது.

கொஞ்ச நெரம் பெஞ்சில் படுத்தாச்சு. அதுவும் வியர்க்கவே தரைக்கு வந்து படுத்தால்

எறும்பார் வரிசையாகப் போகிறார்.
ஓஹோ லஸ் பிள்ளையாருக்குத் தேங்காய் சூறைவிடவில்லை.
சரி, இடத்தை மாத்திக் கொண்டு படுக்கலாம்னால், ஒரு தொலைபேசி. ரிங்.
தரையிலியே நீந்தும் திமிங்கலமாக என்னைக் கற்பனை செய்துகொண்டு, நகர்ந்து போய்ப்

போனை எடுத்தால் பக்கத்து வீட்டு அம்மா,'கரண்டு எப்ப வரும்னு தெரியுமோ' இப்ப மேகலா

முடிஞ்சிருக்குமே என்கிறார்.
அந்த நிமிஷத்தில் நான் தற்பெருமையில் ,சுய மதிப்பீட்டில் உயர்ந்து விட்டேன்.
நான் சீரியலே பார்ப்பதில்லையேம்மா, கரண்ட் 6 மணிக்குத்தான் வருமாம்ன்னு சொல்லி ,

அந்த அம்மாவின் ஆ!!! கேட்டுக்கொண்டே வைத்துவிட்டேன்.
உண்ட மயக்கத்தில் வந்த தூக்கமும் போச்சு.
இவரையாவது கேட்டு, அவர் அக்கா வீட்டுக்குப் போகலாமான்னு கேட்க வந்தால்,
ஒரு மினி பாட்டரி விசிறி காற்றில் நல்ல உறக்கம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

அக்காவீட்டில் மின்வெட்டு இல்லை என்று தெரிந்துதான் இந்த யோச்னையே வந்தது.:)
''இருந்த ஒரு வேப்ப மரத்தையும் கார் நிறுத்துவதற்காக வெட்டியாச்சு. இப்போ அது இருந்தா

எவ்வளவு நிழல் இருக்கும். ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு ,ஊர்வம்பு புத்தகத்தை

நாலாவது தடவையாகப் படிக்கலாமே என்று நினைத்துக் கொண்டேன். இல்லை வாய்விட்டுச்

சொன்னேன்.
அதுவரை ,இவர் யோக நித்திரையில் தான் இருந்திருக்கிறார்.:)அதுதான் நான் சொன்னது

காதில் விழுந்துவிட்டது.
'கட்டிடம் கட்டினவர், வேப்ப மரத்தின் வேர் பற்றி சொன்னதுனாலதானே எடுத்தோம். அது

கூட மறந்து போச்சா? உனக்கு ஏதாவது கிடைச்சா போதும் என் மண்டையை உருட்டிடுவே

என்றபடி தன் மரநாய் ,(சிற்பம்)செதுக்கப் போனார். அப்போதுதான் அந்த மின் உளி

இயங்காது என்று நினைவு வரவே ,அவரும் மின்வெட்டு பற்றிக் காரசாரமாக நான்கு

வார்த்தைகள் சொல்லிவிட்டு ,மாமரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டார். அவருக்கு

எத்தனையோ இருக்கு தோட்டத்தில் செய்ய. நமக்கு அப்படியா. படி தாண்டி அறியோமே:0)
இவ்வளவு அலுப்பும் மணி மதியம் இரண்டு வரைக்கும் தான்.
கிட்டத் தட்ட 100 வீடுகளுக்கு ஆவின் பாலக் கொடுத்துவிட்டு, பால் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு ,நம்வீட்டின் பின் பக்கத்தில் உட்கார்ந்து,கணவனுக்குக் கொண்டு வந்திருந்த சாப்பாடைக் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்ட எங்க வீட்டு ராணியைப் (உதவி செய்பவர்) பார்த்ததும் 'சே' ன்னு போய்விட்டது. இதற்கப்புறம் இன்னும் இரண்டு வீட்டு வேலையை அவள் பார்க்கப் போகணும்.
என்னை நினைத்து எனக்கே இனம் தெரியாத கோபம் வந்தது!

எல்லோரும் வாழ வேண்டும்.


Posted by Picasa

Thursday, April 08, 2010

ஆஜிக்கு வணக்கங்கள்.


ஆஜி


அதென்ன ஆஜி? என்று எல்லோரும் கேட்பார்கள்.
இந்தப் பெயரோடு நான் இது வரை யாரையும் பார்த்தது இல்லை.
நற்குணங்களோடு ஒரு பெரிய குடும்பத்தை
நிர்வாகம் செய்தவர், அதுவும் 6 தலைமுறைகளோடு ஒற்றுமையாகப் பழகி எல்லோருக்கும்
நல்ல வழி காட்டியவர்.
எட்டு வயதில் ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்துக்கு
மருமகளாகி,
பதின்மூன்று வயதில் முதல் மகனைப் பெற்றவர்.
ஆஜியின் தந்தை ,
கும்பகோணம் பக்கத்தில் கடம்பங்குடி என்ற ஊரில்
சாதாரணமான ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்

சிறு வயதில் பல ஆங்கிலேய மாவட்ட (1860)ஆட்சியாளர்களைப் பார்த்து எப்படியாவது வாழ்க்கையில்
முன்னேற வேண்டும் என்று தெளிவாகச் சிந்தித்து
அந்தக் கால வழக்கப்படி துண்டை உதறித் தோளில் போட்டு, கையில் வெறும் ஐந்து ரூபாயுடன்,
தீராதக் கல்வி தாகத்தோடு வந்தவர்.
அப்போது ரயிலுக்கு செலவழிக்கக் கூட அவரிடம் பணம் கிடையாது என்று பாட்டி சொல்லிக்
கேள்வி.
சென்னை வந்தவர் தன் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரிய
கிரிமினல் வழக்கறிஞரிடம் சேர்ந்தார்.
அந்தச் சிறு பையனின் அறிவும் தீர்க்கமும் பெரியவரை
ஈர்த்து விட்டன. மேலே படிக்க விருப்பமா என்று அவனைக் கேட்டபோது அவனும் தயங்கவில்லை.
எப்படியும் கடமையைச் செய்ய வேண்டும் என்று
உதவியை ஏற்றுக்கொண்டான்.
பெரியவரின் ஊகம் மோசம் போகவில்லை.
வழக்கறிஞராக வந்து நின்ற இளைஞனுக்குத்
தன் பெண்ணையேத் திருமணம் செய்து வைத்தார்.
மயிலைக் குளத்து அருகில் அப்போது வீடுகளும்
கோவில்களுமே இருந்தன.
அதில் ஒரு வீட்டில் குடியமர்த்தப்பட்டனர் இந்தத் தம்பதிகள்.
குடும்பம் பெருகியது. வருமானமும் பெருகியது.
நல்லபடியாக ஆளத்தெரிந்த அரசிபோல வளைய வந்த தன்
அம்மாவை ஆஜி எப்போதும் மறந்ததில்லை.
இதிலென்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா?
அந்த நூற்றாண்டில் பெண்கள் செல்லம் கொடுத்து வளர்க்கப் படவில்லை.புத்தி சொல்லி, சமையல் கற்றுக்கொடுத்து,
இன்னோரு வீட்டில் அடங்கி,நளபாகம் வேலை செய்து
வந்தவர்களை உபசரித்து,
குழந்தைகளைப் பெற்று,
அவர்களைத் தன் பிம்பமாக வளர்த்து................
வயதாகி அடங்க வேண்டியதுதான்.
இந்த அச்சில் வார்க்கப் பட்ட பொம்மையாக
இருக்க ஆஜி மறுத்ததுதான் அதிசயம்.
திருமணம் செய்ய வரனைத் தேர்ந்து எடுத்தது
என்னவோ தன் தந்தையாக இருந்தாலும்(திருமணத்திற்கு
அப்புறம்)

தன் வாழ்வை நிர்ணயிக்கும் மன உறுதி அவரிடம்
இருந்தது. அதை நினைத்துதான் எங்களுக்கெல்லாம்
ஆச்சர்யமாக இருக்கும்.
ஆஜிப் பாட்டி வாழ்க்கைப்பட்டது பெரிய மிராஸ்தார் குடும்பத்தில்.
ஆறு மைத்துனர்கள், இரண்டு நாத்தனார்கள்.
திருமணத்துக்கு முன்னாலேயெ இறைவன் திருவடி சேர்ந்ததால்,
திருமணம் செய்து வரும் குழந்தை மருமகளுக்கு அறிவுரை
சொல்லி, நடத்திச் செல்ல யாருமில்லை.

வீட்டு ஆண்களோ விவசாயத்தையும், வைதிகத்தையும்,
வேதாந்தத்தையும் விடாமல் பின்பற்றுபவர்கள்.
இந்த ஆஜிப் பாட்டிக்கு முன்னாலேயெ வந்து விட்ட முதல் மருமகள் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் கொஞ்சம் நெளிவு சுளிவு தெரிந்து
நடப்பாராம்.

மச்சு என்னும் மாடியில் பெண்கள் இருக்க, கீழே
கும்பல் கும்பலாக சாப்பாட்டுப் பந்தி நடக்கும் என்றும்,
சாப்பாட்டு மணம் வரும்போது பசி பொறுக்காமல் அந்த மச்சிலேயெ குமித்து வைத்து இருக்கும் உப்பு புளி, வெல்லம் எல்லாம் கலந்து அரிசி யோடு சாப்பிடப் பழகியதாகவும் சிரித்துக் கொண்டே சொல்லுவார்.
இவர்கள் சமையல் செய்யப் போகாத காரணம்,
அந்த சமயத்தில் ஆஜிப் பாட்டியின் மாமனார்
ஒரு மடாதிபதியாகப் பொறுப்பேற்றதுதான்.
பெண்களுக்கு சமையல் அறை பக்கம் போக முடியாது.
அதனால் மடத்தில் குருவைப் பார்க்க வருபவர்கள் நேரே
வீட்டுக்கு சாப்பிட வந்து விடுவார்கள்.
அந்தப் போஜனம் எல்லாம் முடிந்த பிறகுதான்
வீட்டுப் பெண்கள் சாப்பிட முடியும்.!
தினம் தினம் இந்தக் கதைதான்.

ஒருவழியாகத் தாத்தாவின் பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பும் முடியும் போது
சென்னைக்கு இருவரும் அனுப்பி வைக்கப் பட்டார்கள்
தாத்தா சட்டம் படித்து , குழந்தைகள் பிறந்தது அப்போதுதான்.
தாத்தாவுக்கு நிலபுலன்களைப் பார்த்துக் கொள்ளும் வேலையும் சேர்ந்து கொண்டதால்
பாதி நேரம் கும்பகோணம் போக வேண்டிய நிலைமை.
எத்தனை நாள் தந்தையின் வீட்டில் இருப்பது?
அதனால் ஆஜிப் பாட்டி தனக்கென்று ஒரு இடம்
வேண்டும் என்று தன் தந்தையின் ஆசியோடு 1930(என்று நினைக்கிறேன்)ல் இப்போது இருக்கும் சாலைக்கு
வீடும், தோட்டமும் மாடு கன்றுகளோடு வந்தார்கள்.
இதற்குள் ஆஜிப் பாட்டியின் குடும்பத்தில்
இரண்டு புதல்விகள், நான்கு புத்திரர்கள்.
எல்லோருக்கும் நல்ல கல்வி ஏற்பாடு
செய்து கொடுத்தார் ஆஜி..
கோமள
வல்லியாக இருந்த அம்மா , ஆஜி(பாட்டி)  ஆனது அப்போதுதான்.
பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தது பங்களூரில்.
அந்தப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தைகள் , அந்த ஊர் வழக்கப் படி அஜ்ஜி(கன்னடத்தில் பாட்டி)
ஆஜி என்று கூப்பிட ஆரம்பித்ததும்
எல்லோருக்கும் ஆஜியாகி விட்டார்.
அவருக்கு மாற்றுப் பெண்களும் மாப்பிள்ளைகளும் வந்த
பிறகும் ஆஜி ஓய்வெடுத்து நான் பார்த்ததில்லை.
நிலத்திலிருந்து விளைந்து வரும் பொருட்களைத் தனியாக சீர்செய்து வைப்பது.,
அத்தனை பெரிய வீட்டுக்கு ஒரே ஒரு ஆளை வைத்து
சுத்தம் செய்வது, கடைக்குப் போவது,(மாட்டு வண்டியில் தான்) , பேத்திகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்குப் போய்,
விவரங்கள் அறிவது,
மாடுகளுக்குத் தீவனம் வைத்து,பால் கறக்கும் ஆட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது,
சமையல் அறையில் நின்று தன் பெரிய சம்சாரத்துக்கு அளவாக அரிசி, பருப்பு, காய்கறி செலவு செய்து
வேளைக்கு சாப்பாடு செய்து போடுவது..
எப்போதும் சேமிப்புக்கு மாதந்தோறும்
பேரன்கள், பேத்திகள் கணக்கில் பணம் போடுவது.
மகன்களின் வருமானத்துக்கு மீறி செலவு இல்லாமல்
அவர்களைக் கட்டிக் காத்த குடும்பம் நடத்தும் பாங்கு
சொல்லிக் கொடுத்து,
தவறு செய்தால் திருத்திக் கொள்ள வழி சொல்லி,
நேர்மையிலிருந்து ஒரு துளி கூட விலகாமல்,
எல்லாப் பேரன் பேத்திகளுக்கும் கல்லூரி வரைப் படிக்க வைத்தவர்.
படிப்பின் அருமை தெரிந்தவர்.
4 வகுப்பு வரைதான் படித்தவர்.
ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடத்தெரியும்.
நான் என் லெண்டிங் லைபிரரிக்குப் போகும்போது,
கவுண்ட்  ஆஃப் மாண்டி  க்ரிஸ்டோ, ஷெர்லக் ஹோம்ஸ் நாவல்கள் தமிழாக்கப் பட்டவை, வை.மு.கோதைநாயகி அம்மாள் கதைகள் எல்லாம் எடுத்து வரசொல்லுவார்.
கூர்மையான புத்தி.
எதிராளியின் முக பாவத்தை  வைத்தே , சொல்வது பொய்யா  உண்மையா என்று எடை போடுவார்,.
எல்லாரிடமும் இருக்கும் பலம் பலவீனம்    இரண்டும் தெரியும்.

நேர்மையாக இருப்பவர்களைப்பார்த்தால் தனி அன்பு காட்டுவார்.
இறக்கும் தருணத்தில் அவர் தன் சொத்து என்று வைத்து இருந்தது இரண்டே இரண்டு நூல் புடவைகள்தான்.
மற்ற எல்லாவற்றையும் நாலு தலைமுறைகும் சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டு,
வங்கியில் தன் ஈமச் சடங்குக்கு என்று எட்டு ஆயிரமும் வைத்துதான் இறந்தார்.
கீழே விழுந்ததால் தான் அந்த 88 வயதில் இறக்க நேர்ந்தது.
அதுவும் எப்படி?
தன் உயிர் சினேகிதியின்(கலைமகள்  பத்திரிகையை ஸ்தாபித்தவரின் மனைவி) பேரன் அமெரிக்காவுக்கு
எடுத்துப் போக , காலை 4 மணிக்கு, சமையல் அறையில்
புளிக்காய்ச்சல் தயாரிக்கப் போனவர், எண்ணை சிந்தி இருப்பதை பார்க்காமல் வழுக்கி விழுந்து விட்டார்.
கலைமகளில் என் பதிவு பற்றி ஷைலஜா  எழுதியபோது ,
அந்த  அலுவலகத்துக்குப் போனேன்.
பாட்டி இருந்திருந்தால் எத்தனை பெருமைப் பட்டிருப்பார் என்று  மகிழ்ந்தேன்.
ஒரு நல்ல முற்போக்கு எண்ணங்கள் கொண்ட
அறிவாளி நிறை வாழ்வு வாழ்ந்து
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார்.
இத்தனை தனித் தன்மை பொருந்திய பெண் எனக்குப் புகுந்த வீட்டுப் பாட்டியானது என் அதிர்ஷ்டம் தான்.
இன்று அவரது நினைவு நாள் .அவரை நான் மறக்கக் கூடாது என்பதற்காக இதை மீள்பதிவாகப் பதிகிறேன்.
Posted by revathiNarasimhan at Tuesday, August 29, 2006 4 comments Links to this post

Tuesday, April 06, 2010

ஏப்ரில் புகைப்படப் போட்டிக்கான '''தண்ணீர்''









ஏப்ரில் மாத புகைப்படப்போட்டிக்காக ,

இரண்டு ஆண்டுகளுக்கு முன்
அமெரிக்கா கானடா இரண்டு நாடுகளையும் இணைக்கும் நயகராவைக் காணச் சென்ற போது எடுத்த படங்கள். இதில் ஒன்றை அனுப்புகிறேன்.
பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்கள்.

எல்லோரும் வாழ வேண்டும்.


Posted by Picasa

நன்றி சொல்லும் நேரம்


சில

முதலில் எழுதின எழுத்துகள் சரியாகத் தெரியவில்லை.
காலையில் வந்த பின்னூட்டங்களைப் பிரசுரிக்க முடியவில்லையே என்று இந்தப் பதிவை எழுதினால், இது கண்ணுக்கே தெரியவில்லை:)
அதனால மீண்டும் எழுதுகிறேன். ப்ளாக்கர் சரியாகிவிடும் என்றும் நம்புகிறேன்.
முந்தைய பதிவில் ,
நிறைய அன்பு நண்பர்களைப் பற்றி எழுதாமல் விட்டுவிட்டேன்.
அவர்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றி.அவர்கள் எல்லாம் படித்து உற்சாகப் படுத்தாவிட்டால் என்னைப் போன்றவர்கள் இவ்வளவு தூரம் வரமுடியுமான்னு தெரியவில்லை.
நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் நன்றி.
இந்தப் பதிவாவது படிக்கக் கன்னுக்குத் தெரிய வேண்டும்.எல்லோரும் வாழ வேண்டும்.

Monday, April 05, 2010

நாலு வருஷமா என்னப்பா செய்த?





மக்களே,பெருமதிப்பிற்குரிய தமிழ் வலைப்பதிவர்களே
வணக்கம்.
கிட்டத்தட்ட எட்டு பேராவது விசாரிச்சுட்டாங்க. ஏன் எழுதலை கொஞ்ச நாளா அப்படீன்னு.
ரொம்பவே மகிழ்ச்சியாப் போய், தலை கனம் கூடிடுச்சு.

அதற்காக ஏகப்பட்ட எழுத்தாளர்கள் ஏமாந்துருவாங்களேன்னு தங்கவேலு வசனம் பேச முடியுமா.
நம்ம எழுத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்.
என்னவெல்லாம் இந்த நாலு வருஷம் எழுதி இருக்கேன்னு ஒரு சுய அலசலில் இந்தப் பத்து நாட்கள் ஓடி விட்டனப்பா.

ஆரம்பம் என்னவொ பூஜ்யம் பின்னூட்டத்தோடுதான். ஃபிப்ரவரி 2006 ல ஆரம்பித்த ஆங்கில வலைப்பூ ,
துளசி, மஞ்சுரார் அவர்கள் உதவியால் கலப்பைக்கு மாறி அறுவடை செய்துதான் வரேன்.
ஆகக் கூடி நான்கு வருஷம் ஓடிப்போச்சு. ரெண்டு பத்திரிக்கையில் நம்ம பேரு வேற வந்துடுத்தா....கேக்க வேண்டாம். ஒரே தொலைபேசி அழைப்பும், இங்க வரீங்களா, அந்தப் பத்திரிகைல எழுதறீங்களான்னு ஒரே கேள்வி மயம்.:)

உறவுகாரங்களை மட்டும் நம்ப வைக்க முடியவில்லை..:)
நீயா,கதையா என்று இரண்டு மூன்று பெரியவர்கள் கேட்டார்கள்.
ஆமா ஆமா என்று ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டியதாப் போச்சு.
என் குழந்தைகள் மட்டும் பெரீயதாகத் தலை ஆட்டி ஆமோதித்தார்கள். நீ அப்பவே ரீல் விடுவியேம்மா. ஒரு சமாசாரத்தையாவது கண்,காது, மூக்கு வைக்காம சொல்லுவியா.
உதாரணத்துக்கு சாலையைக் கடந்து நடைப் பயிற்சி செய்ய வணங்கவில்லை என்று ஒரு விஷயத்தைச் சொல்ல உன்னால்தான், பல்லவனையும், பாங்க் ஆஃப் பரோடாவையும், பக்கத்துவீட்டில் மண் கொட்டிக் கிடப்பதால் வழுக்குகிறது என்று இத்தியாதி நூறு பொய் சொல்ல முடியும்.
அத்தனையையும் கோர்வையாக விவரித்து, ''ஐய்யோ பாவம்டா அம்மா. பாவம் , பயிற்சி செய்ய முடியவில்லை, நாம் வேணுமானால் மாடியில் ஒரு பார்க் கட்டிக் கொடுத்துவிடலாம்'' என்று சொல்லும் அளவுக்கு வைத்துவிடுவாய் நீ!!
இப்படிப் பேசிப் பேசிப் பேசி நான் சொல்லும் எந்த விஷயத்தையும் தலையிலிருந்து கால் வரை ஆராய்ச்சி செய்துதான் ஒப்புக் கொள்ளுவார்கள். ஒரே விஷயத்தைக் காலையில் ஒரு மகன் விசாரித்து வைத்துக் கொள்ளுவான். அதே விஷயத்தைப் பகலில் இன்னோரு மகன் ஏம்மா அப்படியா??? அப்டீனு கேட்டுப்பான்.
கடைசியா ராத்திரி பொண்ணு கேப்பாங்க. ஏதோ கேள்விப்பட்டேனே நிஜமா? என்று. எல்லோருக்கும் கையில் சிவப்பு பெரி,நீல பெரி எல்லாம் இருக்கு .உடனுக்குடன் உறுதி செய்து கொண்டு நம்மை மாட்டுவார்கள். சிலசமயம் என்னையும் மீறி உண்மையைச் சொல்லிவிடுவேன்:)

அதுக்காக இந்த வலைப்பூவை கப்சா பதிவுன்னு நினைக்கக் கூடாது நீங்க.:)
அப்பப்போ நல்ல விஷயங்களும் எழுதி இருக்கிறேன்.
இதய பூர்வமான நன்றி சொல்லி ,உங்களோட வாழ்த்துகளை எல்லாம் வாங்கிக் கொண்டு அடுத்த பதிவுக்குப் போகலாம்.:) நன்றிங்கோவ்!!


எல்லோரும் வாழ வேண்டும்.

Posted by Picasa