திரு சுந்தரராஜனுக்கு
ஐந்து குழந்தைகள். முதல் நாலும் பெண்ணாகப் பிறந்ததால் இராமேஸ்வரத்துக்குப் போய்ச் சேதுக்கரையில் பூஜை செய்து மகனும் பிறந்தான்.
அவர் மனைவி கமலம்மாவுக்குப் பொறுமையின் மறு அவதாரம்னு பேரு சொல்லுவாங்க.
பின்ன அடிக்கடி டூர் போகும் புருஷன், சதா நச்சு செய்யும் கூட்டுக் குடும்பம்,வளரும் குழந்தைகள். அவர்களுக்குத் தேவையான,உடை,படிப்பு
எல்லாவற்றுக்கும் மாமியாரையே சார்ந்து நிற்க வேண்டிய அவசியம்,
இதையெல்லாம் தாக்குப் பி்டிக்கக் கொஞ்சமாவது பூமா தேவி வேஷம் போட வேண்டுமே:)
இதைத் தவிர தோட்டம்,மாடுகள்.
நாலு மணிக்குக் காப்பி மெஷின் முகத்தில் முழித்து நாலு மச்சினர்கள் ஓரகத்திகள்,மாமனார்,மாமியார் இவர்களுக்குக் காப்பிப் பொடி அரைத்து,
எழுந்து வரும் கடைசிக் குட்டி ஓரகத்தியிடம் புழைக்கடைக் கதவு சாவியைக் கொடுத்துக் கோனாரிடம் பால் cans(5) கழுவச் சொல்லி, விளக்கும் விளக்கெண்ணை சகிதம் நின்று கறந்த பாலை உள்ளே கொண்டு வரச் சொல்லி...ஸ் அப்பா நினைத்தாலே பயமாக இருக்கிறது.!!
அப்போது ஆரம்பிக்கும் காப்பிக் கடை முடிய 8 மணி ஆகும்.
மாட்டு வண்டியில் (ஒற்றை மாடு பூட்டியது) 12வயதிலிருந்து 6 வயது வரை இருக்கும் (பெண் குழந்தைகளுக்கு மட்டுமே )பசங்களை ஏற்றிவிட்டு,
பாதி லேடி சிவஸ்வாமிக்கும் மீதி ரோசரி மெட்ரிக்கும் போகும்.
அதுவும் கடைசிப் பெண் பட்டுப் பாலாடை இல்லாமல் பள்ளிக்குப் போகாது.அதென்ன பட்டுப் பாலாடைனு கேட்டீர்களானால் அதற்கு ஒரு பெரிய கதை வரும். அது தன்னுடைய ஒரே ஒரு பட்டுப் பாவாடையைத் தான் அப்படிக் கேட்கும்.
அது தோய்த்துத் தோய்த்துக் கிழிந்த பின்னரே வேறு உடைக்கு மாறியதாக மாமியார் சொல்லுவார்:)
மற்ற மச்சினர்களின் பையன்கள் கல்லூரிக்குப் போகும்போது தன்பையனை அவன் விருப்பப்படிப் பள்ளிப் படிப்பு முடிந்ததும்,
மெகானிக்காக வேலை செய்ய மோட்டார் சுந்தரம் கம்பனிக்கு அனுப்பினார். அந்தப் பையனும் தன் வேலையில் சிறப்புப் பட்டம் வாங்கி,வெளிநாட்டுக்குப் போய் ஆட்டொமொபைல் என்ஜினீயர்னு பட்டமும் வாங்கி வந்தார்.
நாலே வருஷத்தில் அசிஸ்டண்ட் மேனஜர் பதவி.:)
காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன் போடுவாரே ஒரு வேஷம்!! அது:)
எல்லாப் பசங்களுக்கும் திருமணம் ஆகி, பேரன்கள் பேத்திகள்னு ஒரு பதினோரு செல்வங்கள் சேர்ந்தன.
''இப்பத்தான் பிஎஸ் ஹைஸ்கூலில் உன்னைப் பார்த்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள உனக்கு அறுபது ஆகிறதே மாமா'' என்று என் மாமியார் தன் கணவரிடம்,என் மாமனாரிடம்சொல்வதை நான் காதில் போட்டுக் கொண்டது 1972ஆம் வருஷம் புரட்டாசி மாதம்.
ஆமாம். இந்த வீட்டில் எல்லாம் வா போ. தான்.
எனக்குப் புழங்க முடியாத வார்த்தைகள்.பழகவில்லை.
அது வந்தது.இது போச்சு இந்த அஃறிணைப் பேச்சு மட்டும் சுலபமாகப் பிடித்துக் கொண்டது.
ஆகா அறுபதா!உடனே ஆஜிப் பாட்டியோடு எல்லோரும் கான்ஃபரன்ஸ்.
புரட்டாசி மூல நட்சத்திரத்தன்று தான், தன் பெண்டாட்டிக்குத் திருமாங்கல்யம் வாங்கிடத் தரமுடியும்,ஆனால் கட்டாயம் மணையில் உட்கார்ந்து மந்திரம் எல்லாம் சொல்ல நேரம் கிடையாது என்று தீர்மானமாகச் சுண்டு என்கிற சுந்தரராஜன் சொல்லிவிட்டார்.
ஒரே சத்தம் அந்தப் பெரிய வீட்டில் அன்று.
அதெப்படி சொல்லப் போச்சு இந்த மாதிரி? ஆயுஷ்ஹோமம் செய்ய வேண்டாமா.குழந்தைகளுக்கு நல்லதாச்சே? ம்ஹூம் எந்த அஸ்திரமும் பலிக்கவில்லை.
என் கமலா எனக்கு பலம் வேற ஒண்ணும் வேண்டாம் என்று விட்டார்.
கமலம்மாவும் பதிக்கேத்த பத்தீஇ. பாவம் மாமாவைக் கஷ்டப் படுத்த வேண்டாம். மத்தபடி ஜமாய்ச்சுடலாம் என்று தீர்மானம்.
ஒரு பட்டாளம் ஸ்ரீபார்த்தசாரதி கோவிலுக்குப் போய்
ஒரு தளிகைச் சர்க்கரைப் பொங்கலும் அரைத் தளிகை பிளியோதரையும்,கால் தளிகை (ஸ்பெஷல்) பொங்கலும் சொல்லி விட்டு,பெருமாளுக்கும் தாயாருக்கும் நிலமாலை ஏற்பாடு செய்துவிட்டு
வந்தது.
இன்னோரு கும்பல் புடைவைக் கடை (எல்லாம் நம்ம ராயப் பேட்டா நல்லிதான்)க்குப் படையெடுத்தத.
இன்னோரு கூட்டம் ஆசாரியைக் கூப்பிட்டு அவரோடு உட்கார்ந்து
நான்கு கிராம் தங்கக் காசுகள்(லக்ஷ்மி பொறித்தது) எல்லாப் பேரன்,பேத்திகளுக்கும் செய்யச் சொல்லிக் கேட்டுக் கொண்டது.
இத்தனை கூட்டம்னு எப்படிச் சொல்கிறேன்னு பார்க்கிறீர்களா. திரு.சுந்தரராஜனுக்கு மூன்று சகோதரகள் இரண்டு சகோதரிகள். அவர்கள் எல்லோருடைய புத்திரச் செல்வங்களும் இந்த முக்கியமான ஃபங்க்ஷனில்
படு உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள்.
எங்கள் பழைய வீட்டில் கலயாணக் கூடம் என்று ஒரு பெரிய
அறை இருக்கும். நான்கு உயரமான தூண்கள்.
அதற்கு நடுவில் பித்தளை சங்கிலிகளில் தொங்கும் அழகான ஆறடிக்கு ஒண்ணரையடி அகலத்துக்கு ஒரு ஊஞ்சல். ஆகா.என்னமா இருக்கும் அந்த வழ வழா ஊஞ்சல்.
பாட்டிக்கு மத்தியானத் தூக்கத்துக்கும்,எங்களுக்குச் சாயந்திர நேர அரட்டைக்கும்,
சில பெரியவர்களுக்குச் சாப்பாட்டு மேஜையாகவும் அது பயன்படும்.
அந்தத் தூண்களைச் சுற்றி மாவிலை கட்டி, பூச்சரம் தொங்கவிட்டு,
அம்மாவுக்க்கு கத்திரிப்பூ கலரில் இரட்டைப்பேட்டு ஒன்பது கஜம் புடவை, நல்ல கனமான சங்கிலியில் கோத்த திருமாங்கல்யாம்,
மாமாவுக்கு டில்லி சென்று முக்கியப்பட்டவர்களைப் பார்க்கும்போது தோதாகப் போட்டுக் கொள்ள ஒரு புஷ்கோட்(சஃபாரி மாதிரி)
ஆஜானுபாகுவாக 6'2'' மாமாவும்,பக்கத்தில் சிரித்த முகத்தோடு கொஞ்சமே குள்ளமாகக் கமலம்மாவும் அந்தக் கூடத்தில் மாலைகள் கூடப் போட்டுக் கொள்ளாமல் வெகு சந்தோஷமாக நின்ற காட்சி போன வாரம் என் நினைவில் நின்றது.
வழி நடத்தும்,காக்கும் பெரியவர்களுக்கு என் வணக்கங்கள்.