About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Sunday, October 23, 2011

சினிமாவில் காதலும் காதலர்களும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
முன்பொரு தடவை'' டூ ஃபார் த ரோட் ''
என்ற படத்தை விமரிசித்துப் பதிவொன்று போட்டிருந்தேன்.
காதலர்களாக வாழ்க்கையை ஆரம்பிப்பவர்கள், காலப் போக்கில் எப்படி மாறுகிறார்கள்
 என்பதை எனக்குத் தெரிந்த விதத்தில் எழுதி இருந்தேன்.
ஆட்ரி  ஹெப்பர்ன்   எனக்கு மிகவும் பிடித்த நடிகை.
அந்த மான் போல விழிகள் இன்னும் என்னை  மயக்கிவைத்திருக்கின்றன.

அதில் வரும் ஒரு வசனம்.
கணவன் மனைவியைப் பார்த்துக் கேட்பது.

ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு பேசாமல் இருக்கும்  ஆணையும் பெண்ணையும்
 பற்றி என்ன நினைக்கிறாய் என்பதே.
அவள் சொல்வால் ''ஒ. தே  மஸ்ட்  பி மார்ரீட்"  என்று
 அந்த அளவுக்கு அவர்கள் காதல் கசந்து போயிருக்கும்.

இந்தப் பதிவில் நான் பேசுவது சில நிறைவேறாத நிஜம் காதலைப் பற்றி.
சங்கம் படம் இந்தியில்  வந்தது.
அப்பொழுது ராஜ்கபூர் வைஜயந்திமாலா  காதல் பற்றி விரிவாகப் பேசப்பட்டது. அது நிஜமோ பொய்யோ தெரியாது.
அப்புறம் நடந்தது எல்லாம்  நமக்குத் தெரியும்.
  இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால்  அமெரிக்க வாழ்
திரு.பிரகாஷ் ஸ்வாமி நம் பத்மினியைப் பேட்டி எடுத்துப் போட்டு இருந்தார்.

அதில் பத்மினி தன்   பழைய காதலைப் பற்றி க் கண்ணீர் சிந்தாத குறையாகப் பேட்டி கொடுத்திருந்தார்.
  நடிகர் திருசிவாஜிகணேசனுக்கும்   தனக்கும் நடுவில் இருந்த ஈர்ப்பு  எப்படி நிறைவேறாமல் போனது என்று விரிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

இப்பொழுதும் தில்லானா மோஹனாம்பாள் படத்தில் வரும் ''நலந்தானா '' பாடலைப் பார்க்கும் போது அவர்களிடமிருந்த ''கெமிஸ்ட்ரி''  அற்புதமாக
வெளிப்படும். நம் மனமும் அவர்கள் காதலுக்காக   வலி  அடையும்.

 அதே போல    ரோமன் ஹாலிடே  படம்.
கிரிகரி பெக்  ,ஹெப்பர்ன் ஜோடி   படத்தில் தான் காதலர்கள். நிஜ வாழ்வில் இல்லை. ஆனால் என்ன ஒரு நடிப்பு. ரொமான்ஸ் என்றால்
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு அங்க அசைவிலும் தெரியும்படி நடித்திருப்பார்கள்.

அதே வரிசையில் ''கிங் அண்ட் ஐ'' என்கிற படம் யூல் ப்ரன்னரும் டெபோரா கெர்ரும் நடித்தது.

படித்த கௌரவமான ஆங்கில கவர்னஸாக டெபோரா சையாம் நாட்டுக்கு வருவார். அந்த ஊர் அரசனாக யூல் ப்ரென்னர்.
பல மனைவிகள் இருபது முப்பது குழந்தைகளுக்குத் தந்தை.

இந்தப் படமெல்லாம் ''க்ளாஸிக்''  வகையைச் சேர்ந்தவை.
தன் மூர்க்கமான நடிப்பினாலயே  டெபோராவிடம் தன்   காதலை வெளிப்படுத்திவிடுவார்.
சட்டம் மதம் இரண்டும் அவர்களைச் சேரவிடாமல் இரும்புத்திரையாக நிற்கும்.
அதைப்பற்றி அவர்களுக்கும் தெரியும்.
அரசனின் கடைசிப் படுக்கையில்   டெபோரா  மரியாதையே உருவாக
தலைகுனிந்து  முழந்தாள் இட்டு அவருக்கு மரியாதை
செலுத்தி நிமிரும்போது அரசனின்  கண்கள் தன் மேல் நிலைத்திருப்பதைப் பார்த்து  உணர்ச்சிவசப்படுவார்.
நிதானமாகத்   தன் மகனின் கைகளைப் பற்றியபடி வெளியேறி விடுவார்.
ஒரு விரசம் கிடையாது. ஒரு முகம் சுளிக்கும் வசனம் இருக்காது.
இவர்களும் மணம் புரிய நினைத்துப் பிரிந்தவர்கள்.

அந்த வழியில் நான் நினைவு   கொள்வது அபூர்வ ராகங்கள் படம்.
ஸ்ரீவித்யாவின் நயன மொழிக்கு உலகையே அள்ளித் தரலாம்.
வாழ்வில்  சோகத்தைத்  தவிர வேறு எதைக் கண்டாரோ.

மொகலேஆசம். மதுபாலா திலீப் குமார் நிஜ வாழ்க்கைக் காதலர்கள்.

உண்மையாகவும் பிரிந்தார்கள்.


   சில சமயம் தோன்றும்    உண்மையான காதல்   சேர்ந்தாலும் காதலர்கள் சேருவதில்லையோ.
இல்லை காதல் வெற்றியாகக் கல்யாணத்தில் முடிந்தாலும்
அலுத்துக் கொள்ளாமல்  வாழ்க்கை போகிறதா:)
எப்பவோ  எழுதின  பதிவு.
இப்பொழுது எவ்வளவோ   காலம் மாறிவிட்டது.