Thursday, January 08, 2015

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி

கோதைத் தாயார்
வென்று பகை கெடுப்பாய் கிருஷ்ணா
குன்று குடையாய்  எடுத்தாய் குணம் போற்றி
கன்று குணிலா  எறிந்தாய்
பொன்றச் சகடம் உதைத்தாய்
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்
அன்று இவ்வுலகம் அளந்தாய்


 பூமா கோதை ஆண்டாள் சரணங்களுக்கு  போற்றி பாடுகிறோம்.
கழல் போற்றி
அவள் போற்றிய கண்ணன்  கழலுக்கும் போற்றி


அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,
குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,
என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்.//
******************************************************

இதோ  வந்துவிட்டான் கிருஷ்ணன். சீரிய சிங்காதனத்திலும்
அமர்ந்து விட்டான்.

கண்கள் நிறைய   கண்ணனைக் காண்கிறாள்  ஆண்டாள்.
தன் தந்தை    திருத்தந்தை பெரியாழ்வார் திருமாலைக்
கண்ட மறுகணம்  கைத்தாளங்களைக் கொட்டிக்கொண்டு  பல்லாண்டு பாடியது
நினைவுக்கு வந்துவிட்டது  அவளுக்கு.

மனக் குகையிலிருந்து பிரவகிக்கும் பக்தி மேலீட்டில் கண்ணனைப் போற்ற ஆரம்பிக்கிறாள்.

வாமன அவதாரத்தில் ஆரம்பித்து மூவுலகம் ஈரடியால் முறைதிறம்பா வகை முடிய,  மஹாபலிக்கு அருளீய  அடிகள் அல்லவா. அந்தசரணங்களுக்குப்
போற்றி சொல்கிறாள்.

உடனே கானகம் எங்கும் தன் அருமைச் சீதையைத் தேடிக் கல்லிலும் முள்ளிலும் நடந்த அடிகள். சேதுபந்தனம்  முடித்து இராவணன் தலைகளைக் கொய்து வென்ற அடிகளைப் போற்றுகிறாள்.
வெற்றி கொண்ட வீரராகவனே போற்றி.!!!

கண்ணன் குட்டிக் குழந்தை. அவனை அழிக்க அனுப்பப் பட்ட அசுரர்களில்
ஒருவன் சகடாசுரன்
கோபர்கள் இடம்பெயர்ந்து  பிருந்தாவனத்தை அடைந்துகொண்டிருக்கும் போது யசோதை  குழந்தையைப் பத்திரமாக வண்டிக்கடியில்
படுக்கவைத்திருக்கிறாள்.


அந்தவண்டியே   அசுரனாக மாறும் என்று கண்டாளா.
கண்ணன் கண்டான். தன் பாதங்களால் உதைத்தான்.
உருண்டான் அசுரன் .உயிர் இழந்தான். மோக்ஷம் அடைந்தான்.
கண்ணன் பாதம் பட்டபிறகு வேறு புண்ணியம் வேண்டுமா என்ன.


அடுத்தாற்போல வந்தவன் கன்று ரூபத்தில் வந்து
அனைவரையும் மிரட்ட ஆரம்பிக்கிறான்.
கோகுலமே  அல்லோலகல்லப் படுகிறது.
வந்தான் கண்ணன். கன்றின் காலைப் பிடித்தான் சுழற்றினான்
வீசினான். மாண்டான் அந்த அசுரன்.உன் பாதங்களை அகற்றி வைத்து நீ நின்ற கோலம்தான் என்ன அழகு கண்ணா. இடுப்பில் கைகளை வைத்த அழகுதான் என்ன.
நாங்கள்  உடுப்பியில் பார்க்கிறோம் அந்த அழகைபண்டரிபுரத்தில் பார்க்கிறோம் விட்டலனாக.



இந்திரனைப் பகைத்ததில் வந்தது மாமழை.
குன்றம் ஏந்திக் குளிர் மழையிலிருந்து
தன் மக்களைக் காத்தான்  .கழலைப் போற்றத்தானே  வேண்டும்.
கோவர்த்தன கிரிதாரி நீ வாழி.!!

தன்னைப் பகையோடு பார்ப்பவர்களை  வெல்வதற்கு
வேலும் வைத்திருக்கிறான்.  மாலின்  ஆயுதங்கள்
கோடானுகோடி. வேலை எறிந்துதான் குவலயாபீடத்தை
வீழ்த்தினான்.
மாமனுக்கும்  மருமகனுக்கும்   வேல் நல்ல துணை
வினையைத் தீர்க்கிறதல்லவா.

இவ்வளவு பகைவர்களையும் வெற்றிகொண்டவனே. ஒன்றும்  அறியாச் சிறுமியர்  நாங்கள்.
எங்களையும்  காக்க வேண்டும் நீ.  உன் சேவகம் வேண்டி வந்திருக்கிறோம்.
உன் பாதங்களுக்குச் சேவை செய்ய அருள்வாய்  பெருமானே
என்று வேண்டி நிற்கிறாள்  நம் கோதை.

கழல்கள் சரணம் சரணம் சரணம்.



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, January 07, 2015

மாரிமலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

ப்ரஹ்லாத வரதன் கிருஷ்ணசிம்ஹம்
சிங்கத்துக்குக் காத்திருக்கும் பாவைகோதை
அறிவுற்றுத் தீவிழித்து
சீரிய சிங்காதனத்திருந்து
23 ஆம் பாசுரம்  சிங்கப்  பெருமானுக்கு
***************************************************************

 மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
*******************************************************
கோளரி  மாதவன் கோவிந்தன் என்றொரு  காளை புகுதக் கனாக் கண்ட
கோதா  தேவியின்  பாதகமலங்களில் சரண்.

இந்தப் பாடல்  பிரகலாதன் என்னும் சின்னஞ்சிறு குழந்தையைக் காக்க வந்த சிங்கப் பெருமாளின் பெருமை பாடி  யாதவசிம்ஹமாகக் கண்ணனை
எழுப்புகிறாள்  கோதை.

ஸ்ரீரங்கத்தில்   உறங்கும் ரத்தினம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சயனித்திருக்கும்
ஆல மரத்து இலையில் துயில் கண்ணனாக வடபத்ர  சாயி எல்லோரையும் மனம் நிரம்பி கண்கள் பொங்கப் பொங்கக்  கண்டு  நரசிங்கத்தைப்
பாடுகிறாள்.மார்கழி மாதம் குளிர் உறைக்கின்ற மாதம்.
மழை ஓய்ந்த மாதம்.
வசந்தம் வரப் போகிறது தைமகள்   பிறக்கப் போகிறாள்.
குளிரில்  உறங்கிக் கொண்டிருந்த குகை வாழ்
சிங்கம் கண்விழிக்கிறது.

அதுவும் எந்த மாதிரி சிங்கம் அது.!!  அழகிய சிங்கம்.
எங்கும் உளன் கண்ணன் என்று ஓர் ஐந்துவயது பாலகன்
கூப்பிட்ட   குரலுக்கு அபயம் கொடுத்த  சிங்கம்.
அஹோபிலம் என்ற குகையில் இன்றும்  ஆனந்தம் தரும் சிங்கம். நாடிவருகிறவர்களின்  மனம் நிறைய அருள் பாலிப்பவன்.

அந்தச் சிங்கமாகக் கண்ணனை வர்ணிக்கிறாள்  ஆண்டாள்.
கண்ணா நீ எழுந்துவரவேண்டும்  எப்படித் தெரியுமா. மழைக்காலத்துக்கு மலைக் குகையில் உறங்கிய  சிங்கம், பக்தர்களின் குரல் கேட்டுச் சட்டென்று எழுந்து,உடலெல்லாம் சிலிர்க்கச் சோம்பல் முறித்து, தலையில் இருக்கும் வேரி மயிர் பொங்க எழுந்து நிற்கிறதாம்.

யோகநித்திரை முடியும்போது உடலில் பாயும் புது இரத்தம்  அந்தச் சிங்கத்தைக் கர்ஜிக்க வைக்கிறது. வேட்டையாட வெளியே வரவேண்டுமே. அந்தக் கர்ஜனை கேட்டுப் பாபம் செய்ய நினைப்போரைக் கூட விரட்டிவிடுகிறதாம்..
அந்தச் சிங்கம் நடந்து வரும் அழகோ!கண்கொள்ளாகாட்சி. குகை வாயிலில் நின்று சுற்றுமுற்றும் பார்க்கிறது.பாதமோ பெரியது வலியது.
ஆனாலும் பூமாதேவிக்கு வலிக்காமல் மெத்து மெத்தென்று  வருகிறது வீரநடையாக.
நினைக்கவே  மெய்சிலிர்க்கிறது.
கோதை வேண்டுவதும் இதைத்தான். அந்தசிங்கம் அன்று நடந்தது. இன்று நீ கண்ணா, கட்டிலில் இருந்து எழுந்து கம்பீரமாக சிங்கநடை
நடந்து ராஜனாக  வந்து உன் சீரிய சிங்காதனத்தில் வந்து அமர்வாய்.
கண்ணன் மனம் உருகிவிட்டதாம். இந்தப் பெண்களும் கோதையும் தான் எத்தனை நாட்களாகக் காத்திருக்கிறார்கள். இனித் தாமதிக்கக் கூடாது என்று வீர நடை ராஜநடை சிம்ஹ கதி என்று  சபைக்கு வந்துவிடுகிறான். அவன் வரும்கோலத்துக்கு மங்கலம் சொல்லி,எம்  வார்த்தைகளைக் கேட்பாய் ,எங்களுக்கு வேண்டும்   விஷயங்களை அறிவாய்,கண்ணா என்று அவனிடம் உரைக்கிறாள்  நம் கோதை.
தாயே கோதா ஸ்ரீ!!அத்தனை அவதாரங்களையும் சொல்லி மகிழ்விக்கும் தாயே !!!உனக்குக் கோடி கோடி நமஸ்காரங்கள்.



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அனைத்து சிங்கக்களுக்கும் நன்றி 

Tuesday, January 06, 2015

நாச்சியார் கோவில் கல்கருடனின் எதிர் சேவை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மார்கழி கல்கருட சேவை      நாசியார் கோவில் கல்கருடனை எத்தனை தடவை சேவித்தாலும் போதாது. அவருடைய கண்களின் தீட்சண்யம் தான் வர்ணிக்க முடியாது. அந்த ஆகிருதியோ    ஊனக்கண்களுக்கு  அப்பாற்பட்டது  அண்ட பகிரண்டத்தை ஆளும் எம்பெருமானுக்கு ஏற்ற வாகனம். காலை கருடாழ்வார் ஊன்றி வைக்கும்  அழகே அழகு.  கருடனின்  திருமேனியில்  அ டைக்கலம் புகுந்திருக்கும் நாகங்கள்   ஆபரணங்களாக   ஜ்வலிக்கின்றன. பக்ஷிராஜன் அருளால்   உலகம்  எந்த பயமும் இல்லாமல் சுகமாக இருக்கவேண்டும்.

Monday, January 05, 2015

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

செங்கண்  சிறுச்சிறிதே  எம்மேல் விழியாவோ
சந்திரன்
ரத்னாங்கி சேவையில் அரங்கன்
தாமரைக் கண்ணன்

 கோதை தாள் வாழ்க.  22ஆம் நாள்
************************************
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிலே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு  எங்கள்மேல்
நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
****************************************************
தோழியரும்  கோதையும் கண்ணன்  துயிலும்
அறையில்   அவன் விழித்தெழக் காத்திருக்கிறார்கள்.அவனோ யோக நித்திரை செய்யும் அரங்கன் போல உறக்க நாடகம் ஆடுகிறான்..
கூப்பிய கைகளோடு ஆண்டாள்  பாவைப் பாடலைப் பாட ஆரம்பிக்கிறாள்.

கண்ணா, உலக அரசர்கள் அனைவரும்  உன் அரசவைக் கட்டிலின் பக்கம் வந்து நீ ஒரு நல்ல வார்த்தை சொல்ல மாட்டாயா,உன் நட்பு  தங்களுக்குக் கிடைக்காதோ   என்று  காத்திருப்பது போல
நாங்களும் அதே ஆர்வம் ஏக்கம் கொண்டு நீ கண் விழிக்கக் காத்திருக்கிறோம்.

உன் அழகியதாமரை போலச்  சிவந்த கண்கள்  கொஞ்சமே கொஞ்சம் திறந்தால் கூடப் போதும். எங்கள் மேல் உன்  பார்வை பட்டால் எங்கள் பாவங்கள் அனைத்தும் தூசாகும்.
உன் கண்களோ  சூரியன் போல ஒளியோடும் சந்திரன் போலக் குளிர்ச்சியுடனும் விளங்குகின்றன.நீ கண்களைத் திறந்தால் ஆதித்யனுன் திங்களும் ஒன்றாக எங்களுக்கு  அருள் புரிவது போல நீ  சிறிது சிறிதாக விழிக்க வேண்டும்.
பகவானின் முழுப் பார்வையின் தீக்ஷண்யம் தாங்க முடியாதாம்.

அதனல் கண்கள் குளிர்ச்சியை மட்டும் எங்கள் மேலே
மெல்லமெல்லப் படருமானால்  வாழ்வின் அத்தன பாக்கியங்களையும் பெறுவோம்.எங்கள் தாபத்தையும் பாபங்களையும் போக்குவாய்  தாமரைக் கண்ணா
என்று வேண்டுகிறாள்  ஸ்ரீகோதா.
அவள் வழி நாமும் அவன் கண்திறந்து அருள் செய்யும் காலத்துக்குக்
காத்திருப்போம்.


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, January 04, 2015

முப்பத்துமூவர் அமரர்க்கு முன் சென்று

ஆதிமூலமே
பாதங்களில் சேவை செய்ய  அருள்
அமிர்தம் கொடுத்தவனே






த்ரௌபதி மானம் காத்தாய்
குசேலனுக்குத் தோழன்
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
      கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
      வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
      நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
      இப்போதே எம்மை நீர் ஆட்டுஏலோர் எம்பாவாய்  
*********************************************************


கோடானு கோடி தேவர்கள். அத்தனை பேர் , கவலை என்று ஒன்று வரும்போது அழைக்கப் படுபவன் கண்ணன் என்கிறாள் கோதை.
 நினைத்த   கணத்தில்  கூர்மாவதாரம் எடுத்து மந்திரமலையைதாங்கி அதன் பாரம் சுமந்தவன்,. குழந்தை துருவனுக்கு அருள் செய்தவன். துரௌபதியின்  மானம் காக்க காத்து நின்றவன்.
அழைக்கின்ற யானையின் துயர் தீர ,கருடனையும் தூக்கிக் கொண்டு ஓடோடி வந்தவன்.
பூபாரத்தை ஒழிக்க பாபம் புரிந்தவர்களின் பாபங்களை நீக்க
அவதாரங்கள் செய்தவன்.
அம்மா நப்பின்னைப் பிராட்டியே அவன் பாதம் பணிந்து சேவை செய்யக் காத்திருக்கிறோம். நீயும் அவனை மாயத்துயி லிலிருந்து எழுப்பி
அவனுக் கு வேண்டிய உபசாரங்களைச் செய்து எங்களை மகிழ்விப்பாய்  பாவாய்..

மாதா கோதா எங்கள் துயர் தீரப் பாடல்கள் இசைத்து எம்பெருமானைச் சென்றடந்தவளே.
உனக்கு ஒரு பல்லாயிரம் பாடுகிறோம். எங்களைக் காப்பாய்.
உன் தாள் சரணம்.












 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, January 02, 2015

2015 புதிய வருடம் புதிய நிகழ்வுகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

இனிய புத்தாண்டு வாழ்த்துகளோடு புதிய வருடத்தைத் துவங்குகிறேன்.
சென்ற வருடம் நினைவுகள்,நிகழ்ச்சிகள்  அனைத்தையுமே  முடிந்தவரைப் பதிவுகளாக எழுதி முடித்தேன்.
இப்பொழுது புது வருடத்தில்  நிறைவான எண்ணங்களையும் ,சுற்றுப்  பயணங்களையும்,படங்களையும்
  பதிவிட  வேண்டும்.. அனைத்து நட்புகளும் ஆதரவாக இருந்ததால் இழப்பிலிருந்து மீள்வது எளிதாக இருக்கிறது. மனசுக்கு இதம் வார்த்தைகளால்  என்னைப் புரிதலோடு அணுகும்  அன்புகளுக்கு நன்றி.

Thursday, January 01, 2015

வைகுண்ட ஏகாதசியும் புத்தாண்டும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இன்று   புத்தாண்டின் முதல் நாள்.   வைகுண்ட ஏகா தசியும்  சேர்ந்துகொண்டது . இனிய நாளில் இறைவனை அடையும் வழிகளை  யோசிக்க வேண்டிய   தினம்.கண்ணன் நாமமும்  கோவில் தரிசனமும்  என்றும்  கிடைக்க பெருமானே  நீயே  அருள் அருளவேண்டும்.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...