ரொம்பப் பழைய பாட்டு. ஒன்று.சிட்டுக் குருவி சிட்டுக் குருவி என்று வரும்.
எலிமெண்டரி பள்ளிக்கூடக் கலை நிகழ்ச்சிகளில்
இரண்டு குட்டிப் பெண்கள் வந்து ஆடும் பாடல்களில் இதுவும் ஒன்று.
ஒரு மனைவியின் எதிர்பார்ப்புகள் அந்தப் பாட்டில் அழகாக அமைக்கப்பட்ட வரிகளில் பளிச்சிடும்.
எதிர்பார்ப்பு
இருக்கும் இடத்தில் ஏமாற்றமும் இருக்கும் என்று புரிய நிறைய அனுபவங்கள்
வந்தாலும், பட்டுத் தெரியும் அறிவு வர, மனது தெளிய நிறைய நாட்களும்
வருடங்களும் ஆகும்.
நியாயமான எதிர்பார்ப்புகளைப் பற்றிச் சொல்ல வரவில்லை இங்கே.
இந்த குட்டி குட்டி(!!!) ஆசைகள்.
பெண்களும் பிறந்தகமும் பிரிக்க முடியாத பந்தங்களில் எப்போதும் இருக்கும்.
என்ன வயதாகட்டுமே. எம்பது வயசுப் பாட்டி ஆகட்டும்,
அவர்களைக் கேட்டால் ''எங்க அப்பா அம்மா மாதிரி வருமா. தலையால வர்ஷித்துக் கல்யாணம் செய்து கொடுத்தார்கள்.
இந்தக் காலம் மாதிரியா.
பைசா பைசாவாப் பார்த்துச் செலவழித்த காலம்.
எங்க அப்பா நாலு பொண்ணையும் கரையேத்தினார்,. முத்து முத்தா மாப்பிள்ளை பார்த்து,
சம்பந்திகளைக் கவனித்து,வருஷ சீர் செய்து, வரிசையா பேரன் பேத்திகளுக்குச் செய்து அப்புறமும் ஓயலை.
என் அறுபதுக்கு அறுபது வரை கூடச் சீர் செய்தார்னா பார்த்துக்கொள்ளுங்கோ''
சரி...இதுவரை சரி. தந்தையும் பரலோகித்தார். அப்புறம் வித்தியாசங்கள் வருமா அப்படீன்னு நாம் கேட்கலாம்.
வரலாம். வராமலும் இருக்கலாம்
அதான்
இந்தப் பாட்டிக்கு எழுபதும் மேல ஐந்தும் ஆச்சே, கொஞ்சம் விவரம் விவேகம்
வந்ததா என்று பார்க்கப் போனால் எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
பாட்டியின் வசதிக்குக் குறைவில்லை. இரண்டு பெண்கள், இரண்டு பையன்கள் என்று, குழந்தைச் செல்வத்துக்குக் குறைவில்லை.
பெரிதாகக் கட்டிய வீடு. விசுவாசமிக்க வேலையாட்கள்.
அடிக்கடி வந்து விசாரித்துக் கொள்ளும் மகன்களும் மகள்களும்.
நேற்று
நான் பாட்டியைப் பார்க்கப் போயிருக்கும்போது ஊஞ்சலில் ஒரு கம்பியைப்
பிடித்துக் கொண்டு எங்கேயோ வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்.
தாத்தா படு ஸ்மார்ட்டாக அப்பத்தான் பார்க்கில் அரட்டை அடித்துவீட்டு வந்திருந்தார். ஒரே உற்சாகமான வரவேற்பு.
பாட்டியிடம் சத்தமில்லை.
என்னப்பா ஆச்சு என்று பெரியவரைக் கேட்டேன்.
நாளைக்கு அவள் பிறந்த வீட்ல ஒரு கல்யாணம். என்று நிறுத்தினார்.
பாட்டி போகலியா என்று ஆச்சரியமானேன்.
''எங்கடி, அவர்கள் வந்து நேரயா கூப்பிட்டார்கள். ஒரு அழைப்பிதழ் வந்தது.
வந்துடுங்கோ ன்னு ஒரு போன் கால்.
போறுமா.
நான் யார்!! வீட்டுக்குப் பெரிய மனுஷி.
இவர் யார். எம்பது ,சதாபிஷேகம் செய்து கொள்ளப் போகிறவர். என்னை விடு. இவரை மதிக்க வேண்டாமோ!!!!
நான் ஏன் போவேன் அந்தக் கல்யாணத்துக்கு. வேண கல்யாணம் பார்த்தாச்சு. வேணது சாப்பிட்டாச்சு. இனிமே வாயைக் கட்ட வேண்டியதுதான்.
இதைத்தான்
அவர்கள் எனக்குச் சொல்லாமல் சொல்கிறார்கள். ஓரங்கட்டியாச்சு. எங்க அப்பா
அம்மா இருந்திருந்தா இப்படிச் செய்வர்களா, என்று கலங்கிய அந்த மூதாட்டியைப்
பார்த்து நிஜமாகவே கஷ்டமாக இருந்தது.
இது என்ன பிறந்துவீட்டுப் பந்தம்.!! தனக்கு ஒரு குடும்பம் ,அவர்களுக்கு ஒரு குடும்பம் ஆகிவிட்டது.
இன்னும் என்ன எதிர்பார்ப்பு! எதிர்பர்ப்பும் ஏமாற்றமும் தாண்டி வர வேண்டாமா.
ஆசை அதிகமானால் வருத்தமும் அதிகம் தானே.
என்று விட்டு விடுதலையாகிப் போவது???
என்று
யோசித்தபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். உடனே திருமண மண்டபத்துக்குத்
தொலை பேசி, திருமணம் செய்து வைக்கும் என் சினேகிதியைப் பிடித்தேன்.
ஏன்பா பாட்டியை நேர்ல கூப்பிடல.
உடனே ஒரு வண்டியை அனுப்பி கூட இருந்து அழைத்து வர ஏற்பாடு பண்ணும்மா, என்றேன்.
அவளும் சிறிது சலித்துக் கொண்டாலும் அனுப்புவதாக ஒத்துக் கொண்டாள்.
பார்க்கலாம்!!! இன்று திருமணத்துக்குப் போனால் பாட்டி எப்படி வந்து இருகிறார் ,மனசு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்:)
நானும் இவரும் அழைக்கப் பட்டிருந்தோம் . மாப்பிள்ளைப் பையன் எங்கள் மகனின் தோழன் என்று பிறகுதான் தெரிந்தது.
,படு ஆரம்பமான அந்தக் கல்யாண மண்டபத்தில் எங்கள் சின்னக் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த பொது ஊஞ்சல் கல்யாணம் நடந்து கொண்டிருந்தது .
மாப்பிள்ளைக்கு முன்னாள் பாட்டி நின்று கொண்டிருந்தார், பிடிசுத்தி போட்டுக் கொண்டு. பாட்டியின் முகத்தில் ஒளி வெள்ளம். ஒன்பது கஜ கொட்டடி . கழுத்தில பவழ மாலை. இடுப்பில ஒட்டியாணம். அமர்க்கள அழகு
மெதுவாகப் பாட்டியைப் படம் எடுத்துக் கொண்டேன்.
பிறகு நாங்கள் கிளம்பி விட்டோம்.
அடுத்த நாள் காலையில் பாட்டியிடம் இருந்து தொலைபேசி.
ஒரே சிரிப்பும் கும்மாளமும்.
என்ன ஆச்சு மாமி. என்று கேட்டதற்கு,
அந்தப் பொண்ணு என்னைக் கூப்பிட்ட பொது போனே அடிக்கலையாம்.
ரொம்ப நல்ல குழந்தை டி. நீங்க இல்லாமல் கல்யாணமா அத்தை .
கார்த்தால விரதத்திலிருந்து நீங்கதான் நம்ம வழக்கத்தைச் சொல்லிக் கொடுக்கணும்.நு கேட்டுக் கொண்டாள் .
அதே போலாச்சு. ஒருத்தருக்கும் ஒன்னும் தெரியலை.
ஆன்னா ஊனா வீடியோ எடுத்துக்கப் போயிடருதுகள் .
அவளுக்கே ஒன்பது கஜம் நான்தான் கட்டி விட்டேன்.
என்னமோ போ இப்பவாவது சமத்து வந்ததேன்னு இவரிடமும் சொன்னேன் என்று முடித்தார்
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.