இந்தப் பதிவுக்கு ஒரு முன்னோடி இங்கே..
http://kurungudi-valli.blogspot.com/2006/05/appa30th-may-1921-3rd-february-1996.html இந்த மாதம் முடிவதற்குள் மூன்று அப்பா பதிவுகள் பார்த்தாச்சு
அந்த வகையில் பார்த்தால் அப்பாக்களுக்குத் தனியிடம்.
அதென்னவோ பெண்கள் ஒடுவது தந்தையிடம் தான
ப்ஃப்ராய்டு தியரிக்கு எல்லாம் அப்பாற்பட்டது இ
முதலில் இந்தத் தியரியில் எனக்கு நம்பிக்கையும் இல்லை
அம்மா கண்டிப்பு,அப்பா பாசம் இரண்டுமே இல்லை என்றால் நாமெல்லாம் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது.
எங்க அப்பா ரொம்பச் சாதாரண மிடில் க்ளாஸ் தந்தை.
தனக்குக் கிடைக்காத எல்லா சௌகரியங்களும் தன் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டி சகல முயற்சிகளையும் மேற்கொண்டவர்.
திருக்குறுங்குடி ஸ்ரீனிவாச நாராயணன்...
பேருக்கேற்ற நெடிய உருவம். சாத்வீகமான கண்கள்
சிரித்த முகம்.நல்ல உழைப்பாளி. காணி சோம்பல் கோடி நஷ்டம் என்ற கொள்கைப்படிவளர்ந்தவர். அப்பாவின் அப்பா ,அம்மா இருவருமே உறவினர்கள்.
தாத்தா சிறுவயதில் பெற்றோரை இழந்து சிற்றன்னையின் அரவணைப்பில் வளர்ந்தவர்.
அவருக்குச் சிற்றன்னையின் குழந்தைகள் மூத்த அண்ணா என்பதைக் குறிக்கும் முத்தண்ணா என்றே பெயர் நிலைத்தது.
அந்த முறையில் பிற்காலங்களில் தங்கை மிகப் பெரிய தொழிலதிபரின் மனைவியாகி இருந்தாலும் மேற்கொண்டு தனக்கு ஆதாயம் தேடிக்கொள்ளாத மகா அறிவாளி.கண்டிப்புப் பேர்வழி. நேர்மைவழியிலிருந்து சிறிதும்
மாறாத குணம்படைத்தவர்.
தோட்டியிலிருந்து தொண்டமான் வரைனு ஒரு பழமொழி பாட்டி சொல்லுவார்.
அத்தனை பேரும் சினேகிதர்கள். தாத்தா ஸ்ரீவைகுண்டம் தபால் அலுவலக மேலாளர். அங்கேதான் அப்பாவும்,அவரின் மூத்த சகோதரிகளும் தம்பிகளும் வளர்ந்தார்கள்.படித்தார்கள்.
அந்த காலத்திலேயே மேல்சாதி,மற்ற சாதி என்ற வேறுபாடுகள் கிடையாது
தாத்தாவுக்கு. பிற மதத்தவருக்கும் வீட்டில் சாப்பாடு உண்டு.மாட்டுவண்டியில் வந்துபோகும் பக்கத்து ஊர் தபால் ஊழியர்கள் எல்லோருக்கும் வீட்டில் இருப்பது பகிர்ந்து கொடுப்பார் பாட்டி, என்று என் தந்தை சொல்லுவார்.
ஐந்து குழந்தைகள் படிக்க வைக்க முடியும் என்ற நிலையில் தாத்தாவின்
பணநிலைமை இருந்திருக்காது.
அத்தைகளுக்குக் கல்யாணம் ஆன கையோடு பிள்ளைகளைப் பாளயங்கோட்டையில் படிக்க வைத்துத் திருநெல்வேலிக்கு வந்து
வண்ணாரப்பேட்டையில் முதலியார் ஸ்டோர்ஸ் என்ற வரிசைவீடுகளில் ஒன்றில் புதுக் குடித்தனம் ஆரம்பித்தார்களாம்.
கல்லூரிப் படிப்பு தொடர்ந்தது.
முதலில் படித்து முடித்தகையோடு அப்பாவுக்கு டி.வி.எஸில் வேலை, கிடைத்து
ஸ்ரீகாகுளம் என்ற இடத்துக்குப் போகச் சொன்னதும்,
தாத்தா மறுத்துவிட்டாராம்.
தனக்கு அறுபது முடியும் வேளையில் பையனை அத்தனை தொலைவு அனுப்ப மனமில்லை.அப்பாவும் மறுபேச்சுப் பேசவில்லை.தாத்தா சொல்படி தபால் அலுவலகத்தில் ஒரு குமாஸ்தாவாக
வேலைக்கு 40 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்துவிட்டார்.1941 என்று நினைக்கிறேன். அடுத்த வருடம் வெள்ளயனே வெளியேறு போராட்டத்துக்குப் போஸ்டர் ஒட்டியதாகவும் (சுவற்றில் எழுதி இருக்கலாம்) ஒரே ஒரு நாள் ஜெயில் வரை போய் வந்ததையும் சிரித்துக் கொண்டே சொல்லுவார்.
அதற்குமேலாக ஏதும் செய்ய தாத்தாவின் அனுமதி இருந்திருக்காது.
20 வயதில் வேலைக்குச் சேர்ந்தவர் 1978 டிசம்பர் வரை அலுப்புத் தட்டாமல்
வேலைசெய்தார்.அப்பாவைப் பற்றி எழுதி இருக்கிறேன் என் இன்னோரு பதிவில். அது பதிவு செய்வதற்காக எழுதப்பட்ட எழுத்து. ஒரு பின்னூட்டமும் இருக்காது. ப்ளாக்தேசம் பக்கம் போகிறவர்கள்குறைவு என்று நினைக்கிறேன்.
இப்பவும் ரவிகண்ணபிரான் தான் காரணம் இந்தப் பதிவுக்கு. நாங்கள் மூவர் பிறந்தோம் அம்மாஅப்பா குழந்தைகளாக. எனக்கு மூத்த குழந்தை ரங்கராஜன் என்ற பேரோடு 10 மாதங்கள் மட்டுமே பூமியை ஸ்பரிசித்துவிட்டுப் போனது.
அந்தக் குழந்தையைப் பற்றி இருவரும் என்ன கனவு கண்டார்களோ
இவ்வளவு பாசம் அப்பா மேல் நாங்கள் வைக்கக் காரணம் அம்மாவின் இம்மிகூடப் பிசகாத விஸ்வாசம்தான். ஒருவருக்கொருவர் இவ்வளவு புரிதலோடு இருந்த தம்பதிகளை நான் பார்த்ததில்லை. நான் பெரிசு நீ பெரிசு ஈகொவே கிடையாது.
சில நாட்கள் முன்னால் சிகாகோவில் பெண்ணின் வீட்டுக்கு வந்திருந்த ஒரு முதியவர்,பேச்சுவாக்கில் தபால் துறையின் பொன்னான நாட்களில் எங்கள் நாட்கள் ஓடின. இப்போது அந்த மதிப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை உன்னைப் பபர்த்தால் என் பழைய நண்பர் நினைவுக்கு வருகிறார் என்று விசாரித்து இருக்கிறார். எங்க தாத்தாவும் போஸ்ட்மாஸ்டர்தான் என்று சொல்லவும்.,"நாராயணன் சார் பேத்தியா நீ.
அவரை மாதிரி உண்டா.எங்களுக்கெல்லாம் நம் நாட்டுக் கொடிமேல் பற்று வர அவர்தான் காரணம்.சுதந்திர,குடியரசு தினங்களில் கொடி ஏற்றிப் பாட்டு பாடி, பேசவும் செய்து உற்சாகம் கொடுப்பார்.
E.D. Packers(கடைநிலை ஊழியர்கள்)அத்தனை பேருக்கும் ஊக்கம் கொடுத்து தேர்வு எழுதி முன்னுக்குவரச் செய்தார்."நல்ல மனுஷர்மா..
என்று பெருமையோடு சொல்லவும் மகள் எனக்கு உடனே தொலைபேசிவிட்டாள்.அநேகமாக குழந்தைகளுக்குத் தாத்தாவின் அருமை தெரியும் என்றாலும் அவருடைய தொழிலின் மீது அவருக்கு இருந்த பக்தி,கோட்பாடுகள் எல்லாமே நேர்மை வழியில் ஏற்பட்டவை.
எங்களுக்கும் ஏதாவது கொஞ்சமாவது நல்ல குணங்கள் வந்தன என்றால் அது அப்பா நடந்து கொள்வதைப் பார்த்துத் தான்.
அனாவசியமாக யாரைப் பற்றியும் வார்த்தைகள் விட மாட்டார். "words have a way of returning to you sometimes in your life. so be very careful
when you think of talking."
இதுதான் அவர் எப்பவும் சொல்வது.
அப்பாவின் கடவுள்பக்தி அளவிடமுடியாதது. ஸ்ரீராமன் பாதம் திண் சரணாகக்கொண்டவர். தன் தந்தை சொன்ன ஒரு வார்த்தையைக் கூட விடாமல் ,மறக்காமல் நிறைவேற்றியவர்.
சில காலம் எங்கள் வாழ்க்கையில் சில பல தொந்தரவுகள் வரும்போது அசராமல் உதவி செய்வார். நான் வருத்தப் படக்கூடாது என்று
ஒரு கை தருவது இன்னோரு கைக்குத் தெரியாமல் உதவுவார்.
பிள்ளைகள் படிப்புக்காக மட்டுமே பாங்கில் கடன் வாங்கி அடைத்தவர்.
மற்றபடி கடன் என்ற வார்த்தைக்கே இடம் கொடுக்காதவர்.
என் சம்பளத்தைவிட என் பென்ஷன் அதிகம் அம்மா என்று சிரிப்பார்.
ராமேஸ்வரம் புயல் அடித்த 1967ஆம் வருடம் அங்கே வந்த அத்தனை தந்திகளையும் ,அந்தக் கடுங்காற்றில் கைவிட்டுப் பறக்கும் குடை சகிதம் தன் மகனுடைய உதவியோடு கொண்டு போய்க் கொடுத்து எல்லாருடைய நன் மதிப்பையும் பெற்றவர்.
அவர் மேற்பார்வையில் இருக்கும் அலுவலகத்தில் தூசி தும்பு பார்க்கமுடியாது. அழகப்பாநகர் ,காரைக்குடியில் அந்தத் தபால் அலுவலகத்துக்குப் பரிசு கிடைத்தது.இப்படி எத்தனையொ.
ரிடையர் ஆகி வீடு கட்டி வத பிறகு அப்பா சும்மா இருந்தநாட்களே கிடையாது. கொலு பொம்மைகள் செய்வார். காஸ் அடுப்பைப் பழுது பார்த்து வண்ணம் அடிப்பார். வரைவதிலும் ,கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும்....எங்களுக்காகச் செய்வார்.
அவரைப் பற்றி ச் சொல்ல ஒரு பதிவு போதாது.
இருந்தாலும் எனக்கு அவரிடம் ஒரே ஒரு குறை உண்டு.என் மகள் திருமணத்திற்கு பார்த்த சத்திரத்திற்கு வார் அறுந்த செருப்போடு வந்து பணம் கட்டியவர்
அடுத்த நாள் உடல்நலம் சீரில்லாமல் போய் அதற்கு அடுத்த நாள் மறைந்தார்.அவருக்குப் பிடித்த பெருமாள் பாதங்களைத் தேடிப் போயிருப்பார். இது கூட எனக்குத் தொந்தரவாகச் செய்யவில்லை. திருமணம் நல்ல படியாகத்தான் நடந்தது. எல்லாம் அப்பா சொல்படி இறைவன் சித்தம்.
இந்த நீண்ட பதிவைப் படித்தவர்களுக்கு என் நன்றி.