Blog Archive

Friday, August 05, 2022

- பிரபஞ்சன் நன்றி: விகடன்.காம்

வல்லிசிம்ஹன்

"ஜானகிராமன் மகாகலைஞன். ஆனால், அதைப் பற்றிய எந்தப் புரிதலும் அகங்காரமும் அவருக்கு இல்லை. டிபன், காபி, மனித வாழ்க்கை, மிராசுகளின் பெண்கள் சார்ந்த ஈர்ப்புகள், காவிரியில் தண்ணீர் ஓடுகிற வைபவம்... இவை போன்ற எளிய விஷயங்களைத்தான் அவர் சிலாகித்துப் பேசுவார். அவர் கதைகள் குறித்த விமர்சனம் போன்ற ஏதோ ஒன்றை நானும் தஞ்சை ப்ரகாஷும் ஆரம்பிப்போம். `அதை விடுங்கள் சார்... அவை எல்லாம் நேற்றின் விஷயங்கள். நாளை எழுதப்போகும் கதைகளை மனதுக்குள் வார்த்தை வார்த்தையாக எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்றைக்கு சாயங்காலம் எந்த ஹோட்டலில் இட்லி சாப்பிடப்போகலாம் என்று சொல்லுங்கள்’ என்பார். ஆனால், உலகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களை அவர் அறிவார். தன் படைப்புகளை அவர்களோடு ஒப்பிட்டு மனசுக்குள் மார்க்  போட்டுக்கொள்வார். ஆனால், எதையும் பேசமாட்டார். என்னுடைய `பிரும்மம்’ கதை, தி.ஜானகிராமன் கணையாழி ஆசியராக இருந்தபோது அதில் பிரசுரமானது. அது அவருக்கு மிகவும் பிடித்த கதை. அந்தக் கதை பிரசுரத்தைக் கொண்டாட, அன்று மாலை 4 மணிக்கெல்லாம் என்னை வரச் சொல்லி, திருவல்லிக்கேணி ரத்னா கஃபேயில் ஸ்வீட், காரம், காபி வாங்கிக்கொடுத்துக் கொண்டாடினார். நான் புகழப்படும்போதெல்லாம், எனக்கு புளகாங்கிதமோ ஆணவமோ வருவதில்லை. காரணம், தி.ஜானகிராமனை நான் பார்த்துப் பழகியிருந்ததுதான். எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமன் கடல்போன்ற ஆழமுடையவர். அவருடைய சொத்து, பொருளாதாரம் எல்லாம் வீழ்ச்சியடைந்த ஒரு காலகட்டத்தில்தான் நானும் தஞ்சை ப்ரகாஷும் அவரைச் சந்தித்தோம். அந்த இழப்பின் சுவட்டை நாங்கள் அறியாவண்ணம் சிரித்துச் சிரித்துப் பேசினார். பிறகுதான் அவரின் மாபெரும் இழப்புகள் குறித்து நாங்கள் அறிந்தோம். பிற எழுத்தாளர்கள் மீது காழ்ப்போ வெறுப்போ இல்லாமல் அவர், தன் மனதைப் பக்குவம்செய்து வைத்திருந்த விதம் எனக்கு இப்போதும் ஆச்சர்யம் தருகிறது. எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு மகத்தான சம்ஸ்கிருத அறிஞர். அவருடைய மேதமைத்தனத்தை வெளியிட வாழ்க்கை அவரை அனுமதிக்கவே இல்லை. அது குறித்து அவருக்கு நிறைய சோகங்கள் உண்டு. அவரிடம் இருந்து, வேதத்தில் சில உபநிஷத்துக்களை நான் அறிந்துகொண்டேன். சாதனையாளர்களை நான் சந்தித்தவரை, அவர்கள் பல நல்ல விழுமியங்களோடு தங்கள் வாழ்க்கையை வாழ்ந்தார்கள். நான் பெருமையாகச் சொல்லவில்லை... இவர்கள் போன்றவர்களின் அடியையொற்றி மேன்மையான மனிதனாக வாழ வேண்டும் என்பதே இந்த அரைநூற்றாண்டு எழுத்து வாழ்வு எனக்கு கற்றுத்தந்திருக்கிறது.’’

- பிரபஞ்சன் 
நன்றி: விகடன்.காம்

2 comments:

Gayathri Chandrashekar said...

அன்புள்ள வல்லிம்மா, நீண்ட நாட்களுக்கு பின் தங்கள் பதிவை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.

கோமதி அரசு said...

பிரபஞ்சன் அவர்கள் எழுதிய கட்டுரை பகிர்வு அருமை.
உடல் நலமாகி விட்டதா?
மகள் ஊருக்கு வந்து விட்டீர்களா?
எல்லோரும் நலம் என நினைக்கிறேன்.