Blog Archive

Monday, June 06, 2022

பயணங்களில் நேசம்....2022 இல் ஒரு பதிவு.



இப்போது திருமங்கலத்துக்கு வருவோம்:)
 '' ஏணியைக் கொண்டுவா. முதல்ல பரண்ல இருக்கற கூஜா,
பச்சை டிரங்க், ஹோல்டால் எல்லாம்
கீழ கொண்டு வரணும்'' அப்பா சொல்ல பக்கத்து வீட்டிலிருந்து
 ஏணி கொண்டு வந்து விட்டான் ரங்கன்.

அப்பாவுக்கு இன்றிலிருந்து லீவு!!!!!
கடைசி நிமிடம் வரை அப்பாவுக்குப் பர்த்தியாக(டெபுடி)
வரவேண்டிய  போஸ்ட்மாஸ்டர் வரவில்லை.
அம்மாவுக்கு ஒரே டென்ஷன். 
அம்மாவின் தம்பி திருமணம் இன்னும் ஒரு வாரத்தில்.

அம்மாவின் வரவுக்காகக் காத்திருக்கும்
பாட்டியும் மாமாக்களும்.
ஒரே ஒரு மாப்பிள்ளை எங்க அப்பா.
எல்லோரையும் அழைத்துப் போய் ஜவுளி எடுக்க வேண்டும். 
இரண்டு நாட்களில் மங்கலிப் பொண்டு 
பூஜை நடக்கும்.
எத்தனையோ வேலைகள்:)

இப்போது திருமங்கலத்துக்கு வருவோம்:)
இந்தப் பை மாதிரி  இருக்கும் ஹோல்டால் 
அப்பாவின் மிகப் பெருமைக்குரிய சொத்து.
அவருடைய மாமா இரண்டாம் உலகப் போரில்
இந்திய சிப்பாய்களுடன் சென்று வந்தவர்.
அப்பாவுக்குக் கொடுத்த  பொக்கிஷம். 
அவருடைய பெயர் கூட அதில் பொரித்திருக்கும்.

இந்தப் பிரம்மாண்ட பையைத் திறக்கவே அப்பாதான் வரவேண்டும்.

அதன் ஸ்பெஷல் வாசம். ஐந்தடி நீள விரிப்பு.
தலைப்பக்கம் ஒரு தலையணை வைக்க வேண்டும்.
நடுவில் ஜமக்காளம், போர்வை,அம்மாவின் புடவைகள் 
இரண்டு என்று அப்பா மடித்துப் போட்டு
மீண்டும் கட்டுவார்.
இதெல்லாம் எதற்காக என்று கேட்கி றீர்களா.?
எங்கள் ஐவருக்கும் டிக்கெட் வாங்கி இருந்தாலும் அப்போதெல்லாம்
பர்த் வசதி கிடையாது.


  பழைய ரயில் பெட்டிகளைத் தேடினேன் கிடைக்கவில்லை:}

பழைய சினிமாக்களில் வறுமையில் வாடும் குடும்பம்
,குழந்தைகள் பாடுவது  போல எல்லாம் 
வரும். அப்படி இல்லாமல் ஒரு நம்பிக்கைப்
பாடலைப் பதிகிறேன்.
சிங்கத்துக்குப் பிடித்த வஹீதா ,தேவ் ஆனந்த் பாட்டு ஒன்று.:)


   இப்படியாகத்தானே ஒரு டிரங்க், ஒரு ஹோல்டால்
இவற்றில் எங்கள் துணிமணிகள்
அடங்கிவிடும். 
வெங்கலக் கூஜா (இப்போது எந்தக் கடையில் இருக்கோ :()

தேய்க்கும் படலம். என்னைச் சேர்ந்தது. அன்று 
குழம்பு, ரசம் செய்த பிறகு 
சேரும் புளி யைப் போட்டு, கூஜா, அதன் திருகு மூடி, உள்ளே இருக்கும் டம்ப்ளர்
எல்லாவற்றையும் தேய்த்து, மண்ணும், அரப்பும் சேர்த்து
தேங்காய் நார் அழுந்த அழுந்தத் தேய்த்தால்
தங்கம் போல மின்னும்.


இனி குதிரை வண்டி வர வேண்டியதுதான். ஏற வேண்டியதுதான்.

முடிந்தால் இந்த ஊரில் தொடருகிறேன். இல்லாவிடில் மகன் ஊரில் தான். எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்.



21 comments:

ஸ்ரீராம். said...

அம்மா முதல் பகுதி திரும்பத்திரும்ப வந்திருக்கிறது. திரும்பத் திரும்ப திருமங்கலத்துக்கு வந்து கொண்டு இருந்தேன்!!

ஸ்ரீராம். said...

அவ்ளாம்பெரிய ஹோல்டால் சுவாரஸ்யம்தான்.  ஆனால் தூக்கிச் செல்லும் சிரமம் இருக்கிறதே...  வெண்கல கூஜா, டிரங்குப்பெட்டி...  அந்தக் கால பயணங்கள்...

ஸ்ரீராம். said...

வீட்டில் விசேஷம் எனும்போது ஆபீசில் லீவு எடுக்கும் கஷ்டம் இருக்கிறதே..  தை என்னிடம் கேளுங்கள்.  அதில் நான் எப்போதுமே ஏமாளி....   நிறைய திட்டு வாங்கி இருக்கிறேன், இரண்டு இடங்களிலும்.

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான நினைவுகள்.

சில பாராக்கள் மீண்டும் மீண்டும் வந்து இருக்கின்றன.

கோமதி அரசு said...

பயண அனுபவம் அருமை.
இரண்டு மூன்று முறை வந்து இருக்கிறது சில செய்திகள்.
எங்கள் அப்பாவும் இரண்டு ஹோல்டால் வைத்து இருந்தார்கள். ஹோல்டால் செய்தி அருமை.
கூஜா எங்கள் வீட்டிலும் வெள்ளி, சில்வர், பித்தளையில் இருந்தது. வெள்ளி கூஜாவை தங்ககைகளுக்கு விளக்காய் மாற்றினார்கள், சிலவர், பித்தளை கூஜாக்கள் தம்பியிடம் இருக்கிறது.
என் தனி குடித்தனம் பதிவில் எங்கள் வீட்டு கூஜா இடம்பெற்றது. அப்போது கூஜா, இப்போது தண்ணீர் பிளாஸ்க், பாட்டில் கொண்டு போகிறோம்.
பாடல் பகிர்வுகளும், நினைவுகளும் அருமை.
உங்கள் பயணம் இனிமையாக இருக்கட்டும்.

KILLERGEE Devakottai said...

சுவாரஸ்யமான தொடக்கம் அம்மா...

Geetha Sambasivam said...

ஸ்விட்சர்லாந்தில் சௌகரியமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். பேரன், பேத்தி எல்லாம் வளர்ந்திருப்பார்கள். ஸ்கைபில்/வாட்சப்பில் பார்ப்பதால் புதிதாய்த் தெரியாது.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. பயணத்திற்கு ரெடியாகி விட்டீர்களா? படுக்கைப் பெட்டி படங்கள் அருமை. அந்த வெங்கல கூஜா தங்களின் பராமரிப்பில் உண்மையிலேயே தங்கமாக பளபளக்கிறது.காட்சிகளை கோர்வையாக சொன்னது ரசிக்க வைக்கிறது. காணொளிகள், பாடல்கள் கேட்கிறேன். தங்களது பயணங்கள் இனிதாக மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

இராய செல்லப்பா said...

கூஜா பளாபளா என்று இருக்கிறது! கூஜாவின் நல்ல படம் தேடிக்கொண்டிருந்தேன். உங்கள் கூஜாவின் படத்தை 'சுட்டு'க் கொள்ள அனுமதி உண்டா?

KILLERGEE Devakottai said...

எனது கருத்துரை என்னாச்சு ?

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
இதோ வந்து விட்டதே. பயணம் அலுப்பு என்று
தாமதமாகி விட்டது பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
நன்றி மா. இப்போது திருத்தி விட்டேன் மா. திருமங்கலத்துக்கு
நல்ல ஈர்ப்பு இருக்கிறது மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

செண்டிரல் கவர்ன்மெண்ட் என்றாலே
இதுதான் கஷ்டம். அதுவும் என் அப்பா போலயோ உங்களைப் போல
இருப்பவர்கள் மிக சிரமப்படுவீர்கள்.

நன்றி மா. அப்பா கடைசியாக ஓய்வு பெறும் வரை
கஷ்டப்பட்டார்கள்.
அதுவும் வயிற்று வலியோடு அவஸ்தைப்
பட்டார்கள்.

வல்லிசிம்ஹன் said...

''அவ்ளாம்பெரிய ஹோல்டால் சுவாரஸ்யம்தான். ஆனால் தூக்கிச் செல்லும் சிரமம் இருக்கிறதே... வெண்கல கூஜா, டிரங்குப்பெட்டி... அந்தக் கால பயணங்கள்...''

அன்பின் ஸ்ரீராம்,
இப்போசின்னதாகத் தெரியுமென்று நினைக்கிறேன்,:)

எல்லாவற்றையுமே அதுல அடக்கி விடும்

திறமை அம்மாவுக்கு உண்டு.
குதிரை வண்டியில் ஏற்றினால்,
ரயில்வே ஸ்டேஷனில் போர்ட்டர் எடுத்து வண்டியில் வைத்து விடுவார்.
எடை நிறைய இருக்காது ப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.

இப்போது எடிட் செய்து விட்டேன் மா.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.
ஆமாம். தவறிப் போய் மீண்டும் வந்து விட்டது.

ஹோல்ட் ஆல் எல்லார் வீட்டிலும் இருந்திருக்க வாய்ப்புண்டு.

அந்தப் பச்சை நிறம் மட்டும்
எனக்கு மறக்கவே முடியவில்லை.
கூஜாவுக்கும் அதே கதை. முந்திரிப் பருப்பு கூஜா
என்றும் ஒன்று இருந்தது.
குண்டு கூஜாவின் வேறு உருவம். சிறு வயதினர் கூடத்
தூக்கி வரலாம்.
''வெள்ளி, சில்வர், பித்தளையில் இருந்தது. வெள்ளி கூஜாவை தங்ககைகளுக்கு விளக்காய் மாற்றினார்கள், சிலவர், பித்தளை கூஜாக்கள் தம்பியிடம் இருக்கிறது.''

இந்தக் கதை அதாவது வெள்ளிப் பாத்திரங்கள் வேறு இரு மாற்றம் கொள்வது
எல்லோர் வீட்டிலும் வரும் தலைமுறை வழக்கம்:)

அம்மாவின் ஒரு சில்வர் கூஜா

என் சீதனமாக (வெவ்வேறு வடிவங்களில்) வந்தது.
பெரிய வென்னீர் சருவம் அப்படியே
என் வீட்டுக்கு வந்தது. அண்டா தவலை எல்லாம்
வைத்துக் கொள்ள இடமில்லை.

பயணங்கள் இனிமைதான். நன்றி மா.

''

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
கருத்துக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள் மா.
ஆமாம் நல்ல உயரமாக வளர்ந்து விட்டார்கள்.

வயதும் கூடிவிட்டது. சின்னவன் ஒட்டிக் கொள்கிறான்.
பேத்தி அளவோடு பேசுகிறாள்.:)

அங்கிருந்து இங்கே வந்த களைப்பு போகவே மூன்று
நாட்கள்
எடுக்கின்றது.
பயணங்கள் அதுவும் நீண்டதூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டிய வேளை
வந்து விட்டதுமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
தாமதமாகப் பதில் எழுதுகிறேன் . மன்னிக்க வேண்டும்.
விமானப் பயணம் முன்பு போலச் சுலபமாக இல்லை ஒன்பது மணி நேரம் உட்கார்ந்து வருவது சிரமமே.

கூஜா உங்களுக்கும் பிடித்ததா.
அது கூகிளில் எடுத்தது அம்மா.
எங்கள் வீட்டு கூஜா இப்படித்தான் இருக்கும்.
ஒரு குண்டு குழந்தை உட்கார்ந்து இருப்பது போல!!

நான் பராமரித்து வைக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை
சகோதரி.
என் பித்தளை ,வெண்கலப் பாத்திரப் பெட்டி மாமியார் வீட்டோடு
நின்று விட்டது.
அவர்கள் வீட்டை விற்றுப் புது வீட்டுக்கு மாறும்பொது,
தொலைந்த பொருட்களில் கூஜாவும் ஒன்று.
மனம் நிறை நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் திரு ராய செல்லப்பா,
வணக்கம் மா.
அனுமதி எதற்கு. அதுவே கூகிளில்
சுட்ட படம் தானே!!! மகிழ்ச்சியும் நன்றியும் மா.

மாதேவி said...

அந்தக் கால பயணங்களை கண்முன்னே கொண்டுவந்துவிட்டீர்கள் .

கூஜா எங்கள் அம்மா வீட்டில் இருந்தது. காப்பி போட்டுக் கொண்டு கோவில்களுக்கு செல்வார்கள்.