Blog Archive

Monday, May 30, 2022

சில பல செய்திகள்.

வல்லிசிம்ஹன்





      அனைவரும் மனம் நிறை அமைதியுடன்,
நோய் இல்லா வாழ்வுடன் வாழ இறைவன் 
அருள வேண்டும்.

இந்த ஊரில் இயற்கை ஒருபுறம், மன நலம் கெட்ட
மனிதர்கள் ஒருபுறம்  நிம்மதியைக் கலைக்கிறார்கள்.

தெய்வ நம்பிக்கை இல்லையா , சகமனிதர்களிடம் வெறுப்பா
ஒன்றுமே கணிக்க முடியவில்லை.
உலகிலேயே பெரிய வளங்கள் கொண்ட
தேசம். மண் வளம், பண வளம், ஏழைகள்
என்பவர்கள் கூட அரசாங்கம் கொடுக்கும் 
இலவச சேவைகளில் நல்ல படியாக 
வாழமுடியும்.

இதே நலத்துக்கு ஆசைப்பட்டு, உலகம் எங்கிருந்தும்
இங்கே வந்தவர்கள் சிலரின் 
குணம் கெட்ட செயல்களினால் சேதம் ஏற்பட்டு இருக்கிறது.
இறைவன் அனைவரையும் நல்ல முறையில் காக்க
வேண்டும்.

  வெளியே சென்று வருவதே பயத்தைக் கொடுக்கின்றது. மிகையாகத் தோன்றுகிறது.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++நல்ல   செய்திகளும் சேர்கின்றன. 
 பல சமூக சேவை நிறுவனங்களும் சேர்ந்து நடத்தும் 
At least one meal a Day''  charity.

இந்த ஊருக்கு வந்து சேர்ந்தும் இன்னும் வேலையோ,
அதன் பலனாக சம்பளமோ,
தங்கும் இடங்களோ இல்லாதவர்களுக்கு அவர்கள்
இருக்கும் இடங்களுக்குச் சென்று பண உதவி, ஒரு வேளைக்கான 
உணவு, சுத்தமான சமூகப் பொதுக் கூடங்களுக்கு
அழைத்துச் சென்று விடுவது, மருத்துவ உதவி செய்வது 

இரண்டு மூன்று டிவிஷனில் இருப்பவர்கள் சேர்ந்து 
வாரம் ஒருமுறை சனிக்கிழமை சென்று கவனிக்கிறார்கள்.
அவர்கள் வாழ்க்கையும் பரபரப்பான குடும்ப சூழலும் அவர்களை
அந்த ஒரு நாளுக்குத் தான் அனுமதிக்கிறது.
அந்தக் குடும்பத் தலைவிகள் நல்ல படியாக
வாழ வேண்டும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  தொடரும் உயர் ரத்த அழுத்தம் , குடும்பத்தில் சிலரின் உபாதைகளும்

பதிவு எழுதுவதில் அக்கறை இல்லாமல் போகிறது.
அன்பின் கோமதி, அன்பின் கீதா ரங்கன் எல்லோருடைய கோவில் பதிவுகள்,அன்பு கீதா சாம்பசிவம் அவர்களின்  எண்ணங்கள்,
மனதுக்கு நிம்மதி அளிக்கின்றன.

   அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்.



Saturday, May 28, 2022

ரயிலே ரயிலே .......2022,..........................சொந்தக் கதை..


 பயணங்கள் ரயிலில்..மகத்தான நினைவுகளைக் கொண்டு வருபவை அதில் சில பாடல்கள்.
பிவிஆர் சாரின் சென்ட்ரல். புத்தகமும்் நினைவில் அருமையான நேரங்களைத் தரும் எழுத்து.


ஸ்ரீரங்கம் ரயில் பற்றிய பதிவு ஒன்று தங்கை
திருமதி ஜயந்தி கண்ணன் +இன்னோருவரும்
அனுப்பி இருந்தார்கள்.

பதிவர்கள் அனைவருக்கும் அவரவர் ரயில் பற்றிய நினைவுகள்
மனதோரம் வருவதை எங்கள் ப்ளாகில்
ஸ்ரீராமின் பதிவில் காண முடிந்தது. என் பதிவைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்
ஸ்ரீராம். மனம் நிறை நன்றி.
எனக்கு தான் இங்கே என்று சுட்டி கொடுக்கத் தெரியவில்லை:)

சென்னைக்கு வருவது ஒன்றே கோடைகாலத்தின் விடுமுறை
நோக்கமாக இருக்கும். மார்ச் 31 ஆம் தேதி பள்ளிகள் மூடப்படும். அடுத்து
ஜூன் முதல் வாரம் தான் ஊருக்குத் திரும்புவோம்.
அம்மாவுடைய அம்மா, மற்றும் மாமாக்களின் அன்பு மழையில்

நனைந்த நாட்கள்.

திண்டுக்கல், திருமங்கலம் இந்த ஊர்களைவிட சென்னை
உண்மையில்  உஷ்ணம் குறைந்தே காணப்படும்.

கடல் காற்றும் மதியம் 12 மணி அளவில் வீச ஆரம்பிக்கும்.
தோழிகளோடு  வீட்டுக்குள் விளையாடுவது, 
புரசவாக்கம் ஹைரோட்டில் உலா போவது, நேரு பார்க்கில்
ரயில் பார்க்க செல்வது, 
புதிதாக வரும் தமிழ் , இந்திப்  படங்களுக்கு
மாமாக்கள் மாமிகளோடு செல்வது
என்று திரும்பிப் பார்ப்பதற்குள்  இரண்டு மாதங்களும் ஓடிவிடும்.


Row houses  என்று அழைக்கப்பட்ட அந்த இடத்தில்,
குளியறையில் ஒரு குழாயிலும், சமையல் உள்ளில் ஒரு குழாயிலும் நல்ல தண்ணீர்
வந்த வண்ணம் இருக்கும். 
கீழ்ப்பாக்கம் தண்ணீர் நிலையம் அருகில் இருந்ததால்
இந்த சௌகரியம்.


மார்ச் 31 அல்ல்து ஏப்ரில் 2 தேதிகளுக்குள் 
டிக்கெட்டுகளைப் பதிவு செய்ய,
அப்பா சொல்படி , மாணவர்களுக்கான
கன்செஷன் ஃபார்ம் வாங்கி , ஏற்கனவே அரை டிக்கட்
ஆக இருந்த எங்கள் பயண செலவு 
இன்னும் குறைக்கப்படும். 
அப்பா அத்தனை கச்சிதமாகச் சிக்கனமாகச் செய்வார்.       (to be continued):)

Friday, May 27, 2022

பழைய கதை.2012 ஜூன்.



Wednesday, June 06, 2012
வளரும் உறவுகள்

கொடுக்காப்புளி ருசித்த காலம் 2 nd part



தபால் சேலத்திலிருந்துதான்.  (COMPLAINTS   FROM MR.C.S.Narasimhan)

குழந்தை பிறக்கணும்னால்   மதுரைக்குத்தான்
போகணுமா. இங்க வைத்துக் கொள்ளக் கூடாதா.
பாண்டில் பட்டன் இல்லை.
சட்டையில் க்ரீஸ் போகலை.

தோய்க்கிறவன் சரியாச் செய்ய மாட்டேன் என்கிறான்.
நெஸ்கபே  பிடிக்கலை.
சாப்பாடு  ஒத்துக்கவில்லை  இத்யாதி இத்யாதி.

இத்தனைக்கும் உள்ளூரிலியே சித்தப்பா இருந்தார்.
போனால்   அழகாக ஒருவேளைச் சாப்பாடாவது
சரியாக இருந்திருக்கும்.
பதில் கடிதத்தில் தயிர் தோய்ப்பது எப்படி.
சாதம் குக்கரில் செய்வது எப்படி என்றேல்லாம் எழுதினால்
எவனுக்கு நேரம் இருக்கு.
வொர்க்க்ஷாப் முதல் சைரனுக்கு நான் அங்க இருக்கணும்னு
அப்பதான் தொழிலாளிகளுக்கு  எல்லாம் டிஜிப்லின் வரும்னு பதில்.

இப்படியே   நாட்கள் தள்ளிவிட்டோம்

நடுவில் லக்ஷ்மியும் வந்தாள்.
பரோடாவிலிருந்து   போபாலுக்கு மாறிவிட்டதாகவும்
உலகமே   அதிசயமாக   இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அதுக்குள்ள எதுக்கு முதல் குழந்தை.

இரண்டு வருடமாவது  எஞ்சாய் செய்ய வேண்டாமா. நாங்கள் பார் பாங்கில்  லீவு வரும்போதெல்லாம் காஷ்மீர்,டெல்லி என்று போய் விட்டு வந்துவிடுவோம்.
உங்க ஆத்துக்காரர் ராத்திரி 12 மணிவரை வேலை செய்வாராமே.
நீ தனியாக   உட்கார்ந்திருப்பியா.
இல்லையே   எனக்குத் துணைக்கு ஆள் உண்டு. நிறைய புத்தகங்கள் படிப்பேன். அழகாக ரேடியோ வாங்கிக் கொடுத்து இருக்கிறார்.
அவர் வரும் வரை கேட்பேன்.
ராத்திரி விழித்தால் என்ன . பகலில் தூங்கிக் கொள்கிறேன்.
அவர் வேலை அப்படிப்பட்டது  என்றேன்.

உனக்குப் புத்தகம் இருந்தால் போதும்,  எனக்கு அப்படி இல்லைமா.
என்று மேலும்  வளவளத்த பிறகு, குழந்தை பிறந்ததும் பார்க்க வருவதாகச் சொல்லிப் போனாள்.

பிறகு அவளுக்கும் இரு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

எனக்கும் மூன்றாவதாகப் பையன் பிறந்தான்.
எங்கயோ இந்தூரிலிருந்து என்னை சென்சார் செய்து கடிதம் போட்டாள். ரெண்டு போறும்னால் கேட்கலியே  என்று பொறுமினாள்.:)

எனக்குக் கஷ்டமே இல்லை  லக்ஷ்மின்னால் ஒத்துக் கொள்ள மாட்டாள்!!

நாற்பது வருடங்கள் கழித்து இப்போது பார்த்தபோது நிறைய சேதிகள். மதுரைக்குத் திரும்பி விட்டதாகவும் பிள்ளைகள் அமெரிக்காவில் இருப்பதால் அங்கே ஒரு வருடம் இங்கே ஒரு வருடம் இருப்பதாகவும் சொன்னாள்.

அப்பா  இறைவனடி சேர்ந்தது.,தம்பிகளும் அமெரிக்காவில் இருப்பது என்று நீண்டு போன பேச்சில் ஒன்றைக் கண்டுபிடித்தேன். குற்றமே சொல்லவில்லை. என்ன  இப்படி  சாதுவாயிட்டியேலக்ஷ்மி  என்று ஆச்சரியப் பட்டேன்.



பசங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதுன்னு சொன்னேனே  என்று முடித்தாள்:)

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்









at June 06, 2012 27 comments:  
Email This

வளரும் தேயும் நிலைக்கும் உறவுகள்  1
++++++++++++++++++++++++++++++++++++++++++










அக்கா பெரியக்கா
என் பெரியக்காவும்  இது போலத்தான் . இன்பம் வந்தால் தலைகால் தெரியாது. நானும் தெரிய மாட்டேன்.
சிறிது ஏறுக்கு மாறாக ஏதாவது காதில் விழுந்தால் புலம்புவாளோ அப்படிப் புலம்புவாள்.
எஸ்டிடி  போட்டுப் புலம்புவாள்.

உனக்கென்ன என்று ஆரம்பித்தால் தெரிந்துவிடும். ஏதாவது தகறாரு
மாமியாருடன்   என்று,
நான் என்ன செய்யட்டும். என் மாமியாரும் எண்பது தொண்ணூறு வயது இருந்தால் நானும் சந்தோஷம்தான் பட்டிருப்பேன்.
அருமையான  மனுஷி.

இவள் இந்த  லக்ஷ்மி இருக்கிறாளே, அப்பா  செல்லம். 
வரைந்த சித்திரம் போல அழகு. 
பதினெட்டு வயதிலியே கண்கள் நாலும் பேசும்.
மதுரை   வசந்தநகர்  வீட்டுக்கு யாராவது ஏதாவது காரணத்தைக் கொண்டு வருவார்கள் போவார்கள்.
பாதி நபர்களுக்குச் சின்னம்மாவைப் பார்ப்பதுதான். வேலை. இவளும் ஊஞ்சலை விட்டு நகராமல்,நீண்ட கூந்தலைப் பின்னித் தளர்த்தி
இந்தக் கையில் ஜயகாந்தன் புத்தகம் வைத்துக் கொண்டு  அசையும் ஓவியமாய்க் காட்சி தருவாள்:)
அப்பா   சீதாலக்ஷ்மி மில்லில் நல்ல வேலையில் இருந்தார்.
எப்பவாவது  நம்  வீடு வழியாகப் போகும்போது   லக்ஷ்மியை இற்க்கிவிட்டுப் போவார்.
சாயந்திரம்    வரை கதை அளந்துவிட்டுப் புதிதாகக் கற்றுக் கொண்ட எம்ப்ராய்டரிக் கலையில் பட்டாம்பூச்சியையை ஏற்றிய  
துணியைத் தைக்க தயார் செய்வோம்.

ஒருநாள்   காலையில் பெரியப்பா வந்தார்.
லக்ஷ்மிக்குப்  பரோடாவிலிருந்து வரன் வந்திருக்கிறது. அவர்களும் 
மதுரைக்காரர்கள் தானாம்.

மாப்பிள்ளை மானேஜர் வேலையில் இருக்கிறார் வசதியான  குடும்பம்.
இவர் ஒரே    பையந்தான். படமும் அனுப்பி இருக்கிறார்கள் .
நல்ல உயரம் , சேப்பா நன்றாக இருக்கிறார்.
உன் மனைவி கலர் இருப்பார்' என்றதும் அப்பா சிரித்துக் கொண்டார்.
அம்மா  உள்ளே  டப்பென்று எதையோ   வைக்கிற சத்தம் கேட்டது.:)

அப்பா  படத்தைப் பார்த்துவிட்டு, நல்லதாப் போச்சு   கோவிந்தா,
லக்ஷ்மியைக் கேட்டியா,அவள் சம்மதம் இல்லாமல் செய்யாதே
என்றார்.
அதெல்லாம் நேற்றே  ஆச்சு.
அவளுக்கு எப்படியாவது இந்த மதுரையைவிட்டுப் போனால் போதும் என்றிருக்கு, அவள் அம்மாவுக்குத்தான் இவ்வளவு தூரத்துக்குப் பெண்ணை அனுப்பணுமே.அடிக்கடி  பார்க்க முடியாதே. உன் பெண்ணாவது இங்கே புதுக்கோட்டையில் இருக்கிறாள்.

இதோ கல்யாணமாகி ஆறு மாதத்தில் கருவும் தரித்தாச்சு.
மாப்பிள்ளையும் வாராவாரம் மோட்டார்சைக்கிளில் வந்துவிடுகிறார் பார்க்க. 

நாங்கள் அப்படி செய்ய முடியாதே   என்று ஜானகி
கவலைப் படுகிறாள்  என்று முடித்தார் பெரியப்பா.

இது நடந்தது ஒரு ஆவணியில். அதற்குள் எங்அளுக்குச் சேலம்  மாற்றம் கிடைத்துப் போய்விட்டோம். திருமணத்துக்கு வரமுடியவில்லை.
சென்னையில் எங்களுக்குச் சீமந்தம் முடிந்த அம்மா கையோடு என்னை மதுரைக்கு அழைத்துவந்துவிட்டார்.
அதற்குள்  லக்ஷ்மி  திருமணம் முடிந்து பரோடா போயிருந்தாள். அம்மா
அந்தக் கல்யாணப் பெருமைகளைச் சொல்லி முடிக்க ஒரு நாள் எடுத்துக் கொண்டார்.!!

எனக்குத்தான் கதை கேட்கப் பிடிக்குமே,பிரசவத்துக்குத் துணயாக வந்திருந்த பெரிய பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டு
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தேன்.
பெரிய  பாட்டி  என் கல்யாணத்தையும் அவள் கல்யாணத்தையும்
ஒத்து நோக்கிக் கொண்டே, 
பாப்பா    உனக்கும்  உங்க ஆத்துக்காரருக்கும் சாம்ர்த்தியம் போதாது போ.
அவனைப் பார்த்தியா. ஊர்ப் பெரிய மனுஷாளையெல்லாம் கூப்பிட்டு  
பந்தல் நிறையப் பரிசாக அடுக்கிவைத்திருந்தான் பார்,

மதுரை ஜங்க்ஷனே கொள்ளாமல்   வண்டிகள், ஃபர்ஸ்ட்    க்ளாஸ்
குப்பியாமே  அதில் இவா மட்டும் போகிறமாதிரி

ஏற்பாடு. மாமியார் மாம்னார் தனியா ஃஃபர்ஸ்ட் க்ளாஸில் போனார்கள்
என்றதும் எனக்குச்  சிரிப்புத் தாங்கவில்லை.
பெரியம்மா அது குப்பி இல்லை  கூபே. இரண்டு பேர் மட்டு போகக் கூடிய ஃபர்ஸ்ட் க்ளாஸ்  .தேன்நிலவுத் தம்பதிகள் இல்லியா 
என்று குறும்பாக முடித்தேன்.

என்னவோடிம்மா.நாங்கள் எல்லாம்  ஒருத்தருக்கு ஒருத்தர் முகம் பார்க்கவே நாலு மாசம் ஆகும்;''

ஆமாம் அதுக்குள் பாப்பா மட்டும்    சீக்கிரம் வந்துடும் என்று சிரித்த என்னை அம்மா அடக்கினாள். வாயாடாதே.
இல்லம்மா இப்பா எல்லாம் மாறியாச்சு. நம்ம லக்ஷ்மி சந்தோஷமா இருக்கட்டும்.  
அவர், அவளோட கணவர் எப்படி இருந்தார்.கலகலப்பா  இல்லைன்னா வேற மாதிரியா  என்று கேட்டேன்.வம்பு வேண்டாமா:)
அய்யோ  அதையேன் கேட்கறே. அவர் சிரிச்சே நான் பார்க்கலைடிம்மா.

நம்ம லக்ஷ்மி குணத்துக்கும் அவர் குணத்துக்கும் ஒத்து வருமோ என்று யோசனையில் ஆழ்ந்தாள் பெரியபாட்டி
கன்னத்தில் கைவைத்தபடி.
என்ன இருந்தலும் நம்மகத்து மாப்பிள்ளை போல வராது.
என்று  பெருமிதப் பட்டுக் கொண்டாள். அதற்குள் 
போஸ்ட்  வரவே அவசரமாக எழுந்த என்னை,
அமர்த்தியபடியே அம்மா போய்   வாங்கி வந்து கொடுத்தாள். தினம் எழுத என்ன இருக்கிறது உங்கள்  இரண்டு பேருக்கும்  
என்று  பரிகாசம் செய்தபடி  உள்ளே சென்றாள் அம்மா.

தொடரும்.
கதையின் மறுபாகம் உடனே வந்தாலும் வரும். இல்லை    ,நாட்களானாலும் ஆகும்.
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, May 25, 2022

சின்ன வெங்காயம் பயன்கள்.

வல்லிசிம்ஹன்


 சின்ன வெங்காயம் பயன்கள்.

ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும். மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது.''



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 

சின்ன வெங்காயத்தின் 10 மருத்துவ பயன்கள் !

சின்ன வெங்காயம் உடலுக்கு மிகவும் நல்லது .சின்ன வெங்காயத்தில் கால்சியம் , மினரல் ,வைட்டமின் ,ஐயன் ,பொட்டாசியம் ,பாஸ்போரோஸ் இது போன்ற சத்துகள் உள்ளது .பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் அதிக சத்து உள்ளது .ஆனால் நாம் பெரிய வெங்காயத்தை உரிப்பது எளிமை என்று பெரிய வெங்காயத்தை பயன் படுத்துகிறோம் ,சின்ன வெங்காயத்தில் மட்டுமே அதிக அளவு சத்து உள்ளது .இதில் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் முழுமையான சத்து கிடைக்கும் .இதனால் தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த குழாயில் அடைக்கும் கொழுப்பை கரைத்து இதய நோய் வராமல் தடுக்கும்.

சின்ன வெங்காயத்தின் 10 மருத்துவ பயன்கள் !
 யுரிக் அமிலம் அதிகமாக நம்முடைய சிறுநீரக பையில் சேர்வதால் தான் கற்கள் உருவாகிறது ,இதற்கு தினமும் சின்ன வெங்காயம் சாப்பிட்டால் கற்கள் கரைந்து ஓடிவிடும்.

  வயது ஆக  ஆக மூட்டு வலி வரும் இதற்கு சின்ன வெங்காயம் நல்ல மருந்து ,இரவு உறங்குவதற்கு முன் சின்ன வெங்காயம் சாப்பிட்டு வந்தால் இருமல் ,சலி ,நுரை ஈரலில் அடைப்பு ,மூக்கடைப்பு போன்ற பிரச்னை தீரும்.

பல் வலி ,பல் ஈறில் வீக்கம் இருப்பவர்கள் சின்ன வெங்காயம் மெல்லலாம் ,இதனால் வாய் தூறு நாற்றம் வராது .இரவு உறங்குவதற்கு முன் சின்ன வெங்காயம் எடுத்து கொண்டால் நரம்பு தளர்ச்சி வராது ,உடலும் பலம் பெரும்.



    இரவு தூக்கம் வர வில்லை என்று கூறுபவர்கள் சின்ன வெங்காயத்தை மென்று இளசுடான தண்ணீரை குடித்தால் இரவு நன்றாக தூக்கம் வரும்.

 
Related: வயிற்றுப்புண்(Gastric ulcer or peptic ulcer) மற்றும் குடல் புண் (Duodenal ulcer) அதிகப்படியான பாதிப்பு மற்றும் அதன் தீர்வுகள்
  சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கும்.

   செரிமானம் ,வயிற்று பிரச்னை குணமாகும்,நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதற்கு சின்ன வெங்காயம் எடுத்து கொள்ளலாம்.

  சிலர்க்கு மூக்கில் இருந்து இரத்தம் வருகிறது என்றால் சின்ன வெங்காயத்தின் சாறை மூக்கில் தினமும் 2 சொட்டு விடுவதனால் சீக்கிரமாக குணமாகும்.

     இதனுடன் காது வலி தொடர்ச்சியாக இருப்பவரும் 2 சொட்டு விடுவதனால் குணமாகும் .சின்ன வெங்காயத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டால் மூலம் சமந்தமான பிரச்னை குணமாகும்.

     சின்ன வெங்காயத்தை வேகவைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் சீக்கிரமாக நல்ல பயன் கிடைக்கும்.

Monday, May 23, 2022

ஸ்ரீரங்கம் கல்லூரி ரயில்.

வல்லிசிம்ஹன்

Thank you Jayanthi Kannan,.
                  __ரமணி

ஸ்ரீரங்கம் கல்லூரி ரயில்.

சுஜாதா ஸார்  சொல்லிக் கேள்வி.
இப்பொழுது இவர் சொல்கிறார்.
சதர்ன் ரயில்வே அதன் முன்னாள் அடையாளமான ஸ்ரீரங்கம் ஐயங்கார் ரயில்வே ( SIR ) என்பதைத் தொலைத்துக் கொண்டிருந்த கடைசிப் பருவம் அது.

 தொன்றுதொட்டு ப்ரிட்டிஷ் வழக்கத்தில் ஸ்டேஷன் மாஸ்டர்களும், கார்டுகளும் ட்ரைய்ன்களை நம்பர் வைத்துதான் கூப்பிடுவார்கள். 

ஆனால், எங்கள் பயணிகளின் குல வழக்கம் அவற்றின் நாமகரணம் அவை வரும் நேரத்தை வைத்துத்தான். வரும் நேரம் என்றா சொன்னேன்? தவறு. வரவேண்டிய நேரம் என்று திருத்திக் கொள்ளவும்.

ஒம்பதேகால் வண்டி என்று செல்லமாய் அழைக்கப்படும் ஆஃபிஸ் வண்டி ரொம்ப ப்ரசித்தி.

 அதற்கு முன்பு அது பத்து மணி வண்டியாகவும் அமாவாசை நாட்களில் இன்னும் கொஞ்சம் லேட்டாகவும் ஸ்ரீரங்கத்திற்கு வந்து சேரும். 

காலை ஆறேகாலுக்கு அதன் அக்கா ( ரயில் பெண்பாலில்லையா? ) ஒர்க் ஷாப் வண்டியாக எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வந்து போகும். 

ஒம்பதேகால் வண்டிக்குதான் ஒய்யாரம் எல்லாம். அதில்தான் கல்லூரி யுவன்களும் யுவதிகளும் தத்தம் தந்தைமார்கள் சகிதம் பயணித்தாலும் கண்கட்டு வித்தையால் அவர்களைக் குருடாக்கி இளமை விளையாட்டுக்களை அளவோடு ஆடிக்கொண்டிருப்பார்கள்

அப்போதைய ஸ்ரீரங்கம் ஸ்டேஷனுக்கு ரெண்டே ரெண்டு ப்ளாட்ஃபார்ம்கள். நடுவில் மரங்கள். உட்கார்ந்துகொள்ள கல் பெஞ்சுகள்.

 SR என்று பெஞ்சில் செதுக்கியதன் பக்கத்தில் ஒரு ராஜா அம்பு துளைத்த இதயத்தில் தன் ராதாவிற்கான காதலைப் பொறித்திருப்பான். பல ராஜாக்களும் ராஜாக்களின் ராதாக்களும் " கண்ணுக்குள் நூறு நிலவா " என பாரதிராஜாவின் வேதம் புதிதை அரங்கேற்றிக் கொண்டிருப்பார்கள். 

ஒன்பதேகால் மணி வண்டிக்கு, முன்னெச்சரிக்கையாகவோ, மாமிகளோடு சண்டையான காரணத்தினாலோ அல்லது பெரும்பாலும், ஸ்டேஷனுக்கு வெளியிலிருக்கும் மணி ஐயர் கடையில் பூரி கிழங்கு சாப்பிடும் உத்தேசத்திலோ எட்டரை மணிக்கே வந்து பெஞ்சில் உட்கார்ந்து பறவைகளின் எச்சத்தை வாங்கிக்கொண்டு வடக்கு நோக்கிப் பார்த்துத் தவமிருப்பவர்களும் உண்டு. 

வேலைக்குச் செல்லும் சில பெண்கள் குளித்துவிட்டுப் புடவையை மட்டும் கட்டிக்கொண்டு வந்து தலை சீவி சிங்காரித்தல்களையும், டிஃபனையும் ஸ்டேஷனுக்கு வந்தே முடித்துக்கொள்வர். 

உத்தமர்கோவிலிலிருந்தே தன் வருகையைப் பறையறிவித்து, கொள்ளிடப் பாலத்தில் படபடத்து நீராவிப் பெருமூச்சை விசிறிக்கொண்டு கருங்கூந்தல் அலைபாய ஒம்போதேகால் வண்டி ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் கிறீச்சிட்டு நிற்கும். 

நாலுகால் பாய்ச்சலில் சில லேட் மாமாக்கள் பரபரப்பாய் வந்து தன் சகாக்களைத் தேடுவார்கள்.

 வரதூ..... என்ற சத்தம் ரயிலின் கூ ஊ....வுடன் இணைந்து கேட்க ஓடிவந்தவர்கள் பெட்டியைக் கண்டுபிடித்துத் தாவி ஏறுவார்கள்.

 அந்த வண்டிக்குள் சுழலும் உலகமே வேறு. 

பஞ்சகச்ச மாமாக்கள் சிலர் கழற்றின சட்டையை ஜன்னலுக்கு மேல் வளைந்திருந்த கொக்கியில் மாட்டிவிட்டு, ராம நாம பஜனில் ஐக்கியமாகி, உச்சஸ்தாயில் சஞ்சரிக்கும்போது காலையிலேயே வயிறுமுட்ட சாப்பிட்டு விடுவதால் வரும் நிறுத்த முடியாத எக்ஸ்பிரஸ் ஏப்பத்தை லாவகமாக பெளன்ஸரைக் கெந்திவிடும் பேட்ஸ்மேன்போல அதன்போக்கில் வெளியேற்றுவார்கள். 

ஹிண்டு சகிதம் சிலபேர், ஓசியில் பேப்பரை இதழ் இதழாகப் பிரித்து சிலபேர், க்ராஸ்வொர்ட் சிலபேர் என சமூகம் பிரிந்து கிடக்க அந்த காலத்திலேயே அந்த  பேப்பர் உதவ,  தூங்கமுடியாத சிலபேர் ஆபிச்சுவரி காலத்தில் பேருரக்கத்தில் ஆழ்ந்தவர்கள் யார் எனப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். 

 காவிரிப் பாலம் வரும்வரை படியில் தொங்கிக்கொண்டோ அல்லது அதிக சாகசமாக வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போதே கம்பார்ட்மெண்ட் விட்டு கம்பார்ட்மெண்ட் ( வெஸ்டிப்யூல் இல்லாத காலம் அது ) தாவி வந்து பெண்கள் பெட்டியில் கண்வைத்திருந்த ராஜாக்கள் சற்றே உயிர் பயம் வர உள்ளிழுத்துக்கொண்டு தலை சிலுப்பிக் கொள்வார்கள். 

இவர்கள் எஸ் ஆர் சி பெண்கள் காலேஜின் ஹாஸ்டல் வராண்டாக்களில் தென்படும் தேவதைகளுக்கும் உச்சிப்பிள்ளயாருக்கும் வந்தனம் சொல்லி முடிக்குமுன்,வண்டி டவுன் ஸ்டேஷனிற்குள் நுழைந்து முதல் டவுன் லோடிற்கு நிற்கும். 

பள்ளிக்குச் செல்பவர்கள் சின்ன புத்தகங்களையும் பெரிய பயத்தையும் சுமந்துகொண்டு இறங்க, கல்லூரி இளசுகள் பெரிய புத்தகங்களுனுடன் சின்ன பயத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு  அல்லிமால் தெரு, பட்டர் ஒர்த் ரோட் எனத் தமிழைக் கலப்புமணம் செய்துகொண்ட ஏதேதோ தெருக்களின் வழியே நடந்தேகுவார்கள். ஒம்பதேகால் வண்டி சடுதியில் ஏதோ சாபத்தின் வசப்பட்டு இளமையை இழந்தது போல் தோன்றும். அவர்கள் போகட்டும்.

நாம் ஒம்பதேகால் வண்டிக்குள் வருவோம். டவுன் ஸ்டேஷனில் கவர்ந்துகொண்ட புது அரசாங்க அடிமைகளோடும் ஜாலி ஜமால் மற்றும் தேசிய கல்லூரி ஹீரோக்களோடும் வண்டி, வாழைத்தோப்பும் தென்னந்தோப்பும் வரப்பு கட்டி வகிடெடுத்த தண்டவாளப் பாதையில் இளம் வெய்யிலில் பளபளக்க தொண்டைகட்டின குரலில் இறங்கிப்போன இளசுகளை நினைத்து  புலம்பும்.

சீட்டாட்ட ஸ்வாரஸ்யத்தில் டவுன் ஸ்டேஷனில் இறங்காமல்," எல்லாம் ஜங்ஷன் போய்ட்டு திரும்பி பஸ்ல வந்துக்கலாம் " என்று விட்ட காசைத் திரும்பி எடுக்க விரும்பும் கும்பலோடு, வெற்றிலையும் புகையிலையும் வாயில் குளம்கட்டி நிற்க ," ஏழ்ன் யா மூழைப் போட்டீர் " என்று பக்கத்து ஆளின் தொடைதட்டித் தெரிவித்த கோபத்தில் தெளித்த சிவப்புத் துளிகள் சலவை வேஷ்டியில் மாட்ர்ன் ஆர்ட் போலச் சிதறிவிழ அங்கு பின் நடக்கும் கலவர வார்த்தைகளை எழுதினால் சென்சார் பிடித்துக்கொள்ளும். 

மற்ற கல்லூரி மாணவர்கள் போலல்லாது, எஸ். ஐ. டி என்றழைக்கப்பட்ட சேஷசாயீ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள் மிகவும் அடக்கமானவர்கள். 

நெற்றியில் நாமமோ விபூதியோ துலங்க, சங்கரரையும் ராமானுஜரையும் ப்ரத்யட்சமாக்கிவிட்டாற்போன்ற தோற்றத்துடன் அந்தத் தோற்றத்திற்கு சிறிதும் சம்பந்தமற்ற டீ ஸ்கொயர் என்ற திரேதாயுகத்து வரை உபகரணத்தை ஏசு நாதரின் சிலுவை போல சுமந்துகொண்டு அரியமங்கலம் ஹால்ட் ஸ்டேஷனில் அவர்கள் இறங்கத் தயாராவார்கள். 

இதற்குள், வண்டிக்குள் சம்பள நிர்ணயம் பற்றியோ, வர வேண்டிய நிலுவைத் தொகை குறித்தோ அக்கவுண்ட்ஸ் மற்றும் பெர்சனல் ப்ராஞ்ச் விற்பன்னர்களுக்குள் நடக்கும் பட்டிமன்றத்தில் அடிபட்டுக் கொண்டிருக்கும் ஊழியர் நலனும் ப்ரிட்டிஷ் ஆங்கிலமும். 

எஸ்.ஐ. டீயின் தேவமைந்தர்கள் துரிதமாய் இறங்கிப்போக, அரியமங்கலத்தின் அரிய பொருளான தண்ணீருக்கு ஒரே மூலமான ஒம்போதேகால் வண்டியின் எஞ்சினை, இந்தியாவின் பிரதமரே வந்து உடனே எடு என்று சொன்னாலும் வண்டியைக் கிளப்பமாட்டார்கள் ஆங்கிலோ இந்திய ட்ரைவர்கள்.

 அவர்கள் ஆண்டாளின் வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல்கள்.

 அரியமங்கலத்தின் டிஸ்டிலரீஸ் வெளித்தள்ளூம் சாராய வாடையை மாஸ்க் இல்லாமல் தாங்கிக்கொண்டு தண்ணீருக்கும் தவிக்கும் அப்பகுதி குடிசை வாழ் மக்கள் எல்லோரின் குடம் நிறைய அதனால் அவர்கள் மனம் நிறைய அதன்பின்தான் அங்கிருந்து கிளம்பும் ஒம்பதேகால் வண்டி.

இனி பொன்மலை நாயகர்கள் இறங்கி ஆஞ்சனேயரையும் பிள்ளையாரையும் வணங்கி அந்த மண்ணின் காற்றில் வேஷ்டி படபடக்க கருங்கல் கோட்டைக்குள் நுழைய ஆயத்தமாவார்கள். 

இனி வண்டியில் நிறைய இடமிருக்கும். எதிர்த்த பெஞ்சில் காலை நீட்டிக் கொள்ளலாம்.

 ஆனால் திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் என்ற சரித்திர ஸ்டேஷனில் மாத்திரம் இந்த வண்டியை நிறுத்த உடனடியாக ப்ளாட்ஃபார்ம் இருக்காது. 

எனவே, டைம் டேபிளில் இல்லாத  முடுக்குப் பட்டியில் பெருமூச்சு
விட்டுக்கொண்டு காத்திருக்கும் ஒம்பதேகால் வண்டி.  

இது ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்களுக்கு நடை தூரத்தைக் குறைப்பதால் அவர்களுக்கு வசதியாகப் போகும். 

அதன்பின்,  இந்தப் ப்ரயாணத்தின் கடைசிப் பயணிகள் கீழே உட்காரப் போட்டுக்கொண்ட அங்கவஸ்த்திரத்தையும் வெற்றிலைச் செல்லத்தையும் எடுத்து பையில் வைத்துக்கொள்ள கடன் கொடுத்தவருக்கு ஹிந்து பேப்பரைத் திரும்ப வாங்க, எக்ஸாம் ஹாலில் மணி அடித்தபின் ஆன்சர் பேப்பரைப் பிடுங்கும் அவலம் நேரும். 

நேஷனல் கல்லூரி மாணவர்கள் ஜங்ஷனையும் தாண்டி வண்டி யார்டுக்குப் போனபின்தான் இறங்கிக்கொள்வார்கள். 

ஆனால், சீட்டுக் கச்சேரி மாத்திரம், முடியவே கூடாத ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரத் தோடி மாதிரி அந்த இடத்திலும் முடிந்துவிடக் கூடாது என்ற பிடிவாத ரசிகர்களை ரயில்வே ஊழியர்கள் அடித்துதான் இறக்குவார்கள். 

இப்படி ஒம்பதேகால் வண்டியின் எக்ஸ்டெண்டட் பயணம் ஒரு தற்காலிக சோகத்தில் நிற்பது நினைவின் தடங்களில் எந்த சிக்னல் தடையும் இல்லாமல் இப்போது எனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.

Friday, May 20, 2022

சின்ன வெங்காய வதக்கல்.

வல்லிசிம்ஹன்

 சின்ன வெங்காய வதக்கல்.

ஏதோ மோகம்... சின்ன வெங்காயத்தின் பேரில்.:)
எல்லாம் அம்மா கை பழக்கத்தினால் தான்.

முன்னாலியே எழுதி இருக்கிறேனோ என்னவோ.
இன்று அம்மாவின் நினைவு நாள்.மே 20.

தேவையான பொருட்கள்.

சின்ன வெங்காயம் அரைக்கிலோ.
பெரிய வெங்காயம் ஒன்று.
மஞ்சள் பொடி,'  ஒரு ஸ்பூன்
கஷ்மீரி மிளகாய்ப் பொடி ஒரு ஸ்பூன்,
கார மிளகாய்ப்பொடி ஒன்றரை ஸ்பூன்,
தனியாப் பொடி இரண்டு ஸ்பூன்.

புளி அவரவர் விருப்பம். நான் கொஞ்சம் தாராளம்.
உப்பு விருப்பப்படி,
 வெல்லப் பொடி ஒரு ஸ்பூன்.
பெருங்காயப் பொடி அல்லது கரைத்து விட்ட
பெருங்காய ஜலம்.
கடைசியில் சேர்க்க கருவேப்பிலை இரண்டு ஆர்க்.

கொத்தமல்லி சேர்ப்பதில்லை.

நான் செய்த முறை.
+++++++++++++++++++++++++
அம்மாவும் அப்பாவும் ஞாயிறும்  சின்ன வெங்காய வதக்கல், கூடவே
உ.கி பொடிமாஸ். யம்ம்ம். 

அப்பா தான் காய்கறி வாங்கி வருவார். வீட்டில் கருவேப்பிலையும், செம்பருத்தியும்,
நந்தியாவட்டை, நித்தியமல்லி.



 இந்தச் செடிகள் இல்லாமல் நாங்கள் வளர்ந்ததே இல்லை.
நறு மணம், நல்ல வார்த்தைகள், முகம் சுணங்காத அம்மா, எப்பொழுதும் சுறு சுறுப்பாக
இருக்கும் அப்பா, 
சண்டை போட்டாலும் சேர்ந்து கொள்ளும் தம்பிகள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சரி கரியடுப்பில்  இலுப்ப சட்டி வைத்தாச்சு.

நல்லெண்ணெய் இரண்டு கரண்டி விட்டு நன்றாகச் சுட்டதும்,
கடுகு சீரகம் வெந்தயம் போட்டு
வெடித்ததும் நறுக்கி வைத்த பெரிய வெங்காயம் 
போட்டுலேசாக வதங்கியதும் 
உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தைப் போடணும்.
நன்றாகச் சுருள வதங்க வேண்டும்.


இப்போது மஞ்சள் பொடி , தனியாப் பொடி, இரண்டு மிளகாய்ப் 
பொடியையும் சேர்த்து மீண்டும் பச்சை வாசனி 
போக வதக்க வேண்டும்.



வாணலியை மூடி வைக்கலாம். இரண்டு நிமிடம் கழித்துக்
கரைத்து வைத்த கெட்டிப் புளி ஜலத்தை 
விடவேண்டும். உப்பையும் சேர்த்து
இப்பவும் மூடி வைக்க வேண்டும்.

வெங்காய வாசனை வந்து, புளி வாசனை போனவுடன்,
எண்ணெயும் பிரிந்து நிற்கும்.

இப்பொழுது பொடித்த வெல்லம், பெருங்காயம் எலாம் சேர்த்து
எல்லாம் கெட்டியாகும்.
கறிவேப்பிலையைப் போட்டு இறக்க வேண்டியதுதான்.

தேங்காய்த் துகையல், உ கி பொடிமாஸ் 
சூடான் சாதம் தட்டில் போட்டு,
ஆளுக்கு ஒரு ஸ்பூன் நெய் விட்டு
சாப்பிட்டால்  ஸ்வர்க்கம் போய்த் திரும்பி வரலாம்.
அன்பு அம்மா ஜயலக்ஷ்மிக்கு என் நமஸ்காரமும்
நன்றியும்.

Thursday, May 19, 2022

KI RAA SHORT STORY " கதவு "

மனதைப் பிழிந்த கதை. நன்றி ஐயா.

Tuesday, May 17, 2022

இசை பாடும் தென்றலோடு ....

வல்லிசிம்ஹன்

  எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

  அன்பின் கீதாவுக்கும் அவர் அன்புக் கணவர் திரு சாம்பசிவத்துக்கும் இனிய மண நாள் வாழ்த்துகள். என்றும்
ஆனந்தமும் அமைதியும் ஆரோக்கியமும்
நிறை வாழ்வு அமைய வேண்டும்.
ஸ்ரீரங்கன் அருள். மகள்,மாப்பிள்ளை,பேத்திகள்,
மகன்,மருமகள் குட்டிக் குஞ்சுலு அனைவரும்
அமோகமாக இருக்க வேண்டும்.

  சில நாட்கள் நடந்ததை நினைத்து 
சந்தோஷம். சில நாட்கள் நடந்ததை நினைத்து வருத்தம்.

ஆனால் நிலா மட்டும் என்றும் மகிழ்ச்சி தர மறுப்பதில்லை.

ஏய்...மூன் வந்துட்டது. பார்க்கணுமா?   இது சிங்கம்.

பாட்டி..... ''moon pictures .I am sending from my apartment" இது பெரிய பேரன்.

அம்மா ,பால்கனில நிலா தெரிகிறது பார்க்கணுமா?''   மருமகள்:)

வாசலுக்கு வரியாம்மா. மூன் படம் எடுக்கணுமா ?''
இது மகள் மாதாமாதம் கேட்கும் கேள்வி.

இறைவா நன்றி.
இன்று கிரஹணம் பிடித்து விட்ட முழு நிலா,
ஜகஜ்ஜோதியாக  வானில் ஒரு தங்கத்தட்டு 
போல மின்னியது.  காலை நான்கு  மணிக்குக் 
கண் விழித்ததும் நினைத்தது அதைப் பற்றித்தான்.

படங்களும் எடுத்துவிட்டு மற்ற வேலைகளைப்
பார்த்தேன். 
பழைய கிரஹண நினைவுகள்.
பாட்டி நாட்கள் பட்டினியும் குளியலும்,
சிங்க நாட்கள் அவ்வளவு சிரமம் இல்லாமல்
கடந்தன.

முதல் பையன் தரித்த போது ,புதுக் கோட்டையில் 
ஒரு அறையில் ஜன்னல்களையும், கதவையும் அடைத்து
வேலைக்கார கிழவி (அவர் பெயரே  அதுதான்)
துணை இருக்க நாலு மணி நேரம் இருந்த நினைவு.
அதற்கப்புறம் எத்தனையோ கிரஹணங்கள்.
ஒவ்வொன்றும் ஒரு விதம்.

பேரன் சொன்ன ஐடியா. எல்லா சாப்பாட்டையும் 
ஃப்ரிட்ஜுக்குள் வைத்து ,ஃப்ரிட்ஜின் மேல் 
தர்ப்பையைப் போட்டு வைக்கலாமா!!!


மகள் வீட்டில் சௌகரிய கிரஹணம். நான் தூங்கும் போது 
பிடித்து விழிப்பதற்குள்  பூரணமானது.


Monday, May 16, 2022

சதுரங்கம்...நீயும் நானுமா? 2008.

வல்லிசிம்ஹன்


Saturday, July 26, 2008



சதுரங்கம்...நீயும் நானுமா?


புதிதாக மகன் வாங்கி வைத்திருக்கும்  மடி கணினிசாப்பாட்டு மேசையில் இருப்பது மகா சௌகரியம்.

மடியில் பாப்பாவை வைத்துக் கொண்டு தமிழ்மணம் மேயலாம். 
இதிலென்ன சங்கடம் என்றால் பாப்பாவுக்கும் கணினி மேல் ஆர்வம் வந்து விட்டது.

கண்முன்னால் பாட்டி கை மட்டும் போய்ப் போய் வருதே பாட்டி எங்க என்று மேலே முகத்தை நிமிர்த்துகிறது.
இல்லாவிட்டால் கைவளையலைப் பிடித்துக் கொள்ளுகிறது.
இப்ப என்ன பண்ணுவேங்கிற மாதிரி.:)

அப்படியாவது இணையத்துல உலாவணுமான்னு கேக்கலாம்.
நமக்கு அஷ்டாவதானியாகணும்னு ரொம்ப நாள் ஆசை.

இதையும் செய்து அதையும் செய்து, இடுப்பில் குழந்தை, அடுப்பில தோசை
இதெல்லாம் அந்தக் காலத்தில செய்தது.
அது போறாதுன்னு ரேடியோ வேற பாடிக்கிட்டு இருக்கும்..:)
பார்க்க்கிறவங்களுக்குக் கொஞ்சம் விபரீதமாவே தோணும். ஏன்னா
அடுப்புக்கு அந்தப் பக்கம் படித்துக் கொண்டிருக்கும் நாவல் வேற இருக்கும்,
 பக்கம் திரும்பாமல் இருக்க அது மேல ஒரு குழவி:)
சப்பாத்தி செய்யறதுதான்..

இதெல்லாம் செய்தது ஒண்ணும் பெரிசில்லைம்மா. இப்ப இந்தக் கணினியில் செஸ் விளையாட்டு இருக்கு.அதுகிட்ட நம்ம வீரம் பலிக்க மாட்டேன் என்கிறது
நானும் ஏதோ எங்க அப்பா கத்து கொடுத்த
மூவ்ஸ் வச்சு சுலபமா என் பேரனை ஜெயிச்சுடுவேன். சே:)...................................

இந்த கல்லுக் குண்டு கணினி என்னைத் தோற்கடிப்பதிலியே இருக்கு. தோற்பதும் ஜெயிப்பதும் விளையாட்டில் சகஜம்தான் இல்லைன்னு சொல்லலை.
ஆனா இது ரொம்ப மோசம். என்னோட சுய மதிப்பீட்டையே கவுத்துடும் போல இருக்குப்பா..

முதல் ஐம்பது கேம் வரை தோற்பது பிரமாதமாகப் படவில்லை.
என்ன இருந்தாலும் ஒரு கணினிகிட்டத் தோற்கிறதில பெரிய நஷ்டம் ஒண்ணுமில்ல.:)))
அப்புறம் கொஞ்சம் கவனமாகத் திட்டம் போட்டு விளையாடியதில் நான்கு முறை ஜெயித்துவிட்டேன்.

பிறகு திடீரென ஸ்ட்ராட்டிஜி மாற்றிக் கொண்டு விட்டது. நான் ஜெயிப்பது போன்ற நிலைமை வந்தால் ''நௌ தெ கேம் இஸ் அ ட்ரா'' என்கிறது.
செக்மேட் வைத்து வெற்றி பெறப்போகிறோம் என்கிற நிலைமையில் என்னைச் செக் செய்துவிடுகிறது.

பின்னூட்டம் வரலைன்னால் கூட இவ்வளவு கவலையும் வருத்தமும் இருக்காது.
இப்ப என்னடா என்றால் இந்தப் பொட்டிகிட்ட தோற்கிறோமே 
என்ற தாழ்வுணர்ச்சி பயங்கரமாக இருக்கிறது, காரம் அதிகமானா ஒரு ஸ்பூன் சர்க்கரை வாயில் போட்டுக் கொள்ளுவதைப் போல ,வெறும் ஃப்ரீசெல்லும்,ஸ்பைடரும்,சாலிடேரும் விளையாடி மனதை சமாதானப் படுத்திக்கொள்கிறேன்.:(

அடிமனதில் எப்படியாவது இந்த வெற்றி விகிதத்தைச் சமமாக்க வேண்டும் என்கிற வெறி மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது. யார் விட்டா:)
ஒரு கை பார்த்துடலாம்,.:)
இதுக்காக MaGrudi book shop போயி ''ஹௌ டூ'' புத்தகம் வாங்கறதாக இல்லை.:))))))))))))))))))))))))))))))))))))))))))))))

Friday, May 13, 2022

பழைய படம் பழைய பாடல்...



"தேன் தூங்கும் தென்பொதிகை சாரலிலே"... அழகர் மலைக் கள்வன் (1959) பாடல் : புரட்சி தாசன் இசை : பி. கோபாலம் பாடியவர் : திருச்சி லோகநாதன்
மதுரை அருகினில் இருக்கும் திருமங்கலம் ஊரில் 1954 லிருந்து 1960 வரை இருந்து இனிமையான வாழ்வு அமையப் பெற்றோம். எளிமையான மக்கள். இதயம் நிறை அன்பு.

 பாடல்கள் கேட்கமுடியும் என்று 
நம்புகிறேன். இல்லாவிடில் யூ டியூபிலாவது கேட்கவேண்டும்.
பாதுகாப்பான வாழ்க்கை. 62 வருடங்களுக்கு முன்பு இருந்த அருமையான நட்புகள். அம்மாவின் தோழிகள். அப்பாவின் சினேகிதர்கள். உறுத்தாத வெய்யில். உருட்டி மிரட்டாத மழை. நல்ல மருத்துவர்கள். அரச மருத்துவமனை. மதம் நல்லிணக்கம் என்ற வார்த்தைகளை அறியாமலேயே இணங்கி இருந்த காலம். ஒரே ஒரு தியேட்டர், ஒரே ஒரு நெடு வீதி, இரண்டு உயர் நிலைப் பள்ளிகள். பெருந்தலைவர் காமராஜ், நடிகர்கள் சிவாஜி, மக்கள் திலகம் எம் ஜி ஆர், பண்டித ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி என்று அனைத்துப் பிரமுகர்களும் வந்து சென்ற ஊர். நாங்கள் இருந்த வீடும், கிணற்றங்கரையும், கோடைப் பந்தலும், அதன் நடுவே காணும் மஞ்சள் வெய்யில் அழகும், நித்திய மல்லிக் கொடியும், செம்பருத்தியும், மீனாக்ஷி அம்மன் கோவிலையும் இன்னோரு முறை பதிகிறேன். நல்ல நினைவுகளைப் போற்ற வேண்டும் இல்லையா. எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.

Thursday, May 12, 2022

மனம் விரும்பும் பாடல்கள் சில


வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
சில பாடல்கள் காதில் அவ்வப்போது ரீங்கரிக்கும்.

அவற்றில் சில இனியவற்றை இங்கே பகிர்கிறேன்.

காதல் கோட்டை  ஒரு சலனம் இல்லாத
காதல் கதை. 
இளைய அஜீத் சாதாரணமாக நடிக்க

தேவயானி சிறந்த உணர்ச்சிகளைக் கொட்டி
சிறப்பாகச் செய்திருப்பார்.
கவர்ச்சிக்கு ஹீரா:)
கூடவே தலைவாசல் விஜய், கரண், கமலியின் தோழி,
அந்த ஹாஸ்டலில் வேலை செய்பவர் கூட
அருமையாக வசனம் பேசுவார். 

வசனங்களின் சிறப்புக்கு அகத்தியன் காரணம்.
நல்ல இசை இந்தப் படத்தின் வெற்றிக்கு
இன்னோரு வெற்றி. இதயத்தில் ஆரம்பித்து கண்ணில்
முடியும் காதல்.

கமலியின் அக்கா கணவராக  ராஜீவ், அக்கா நடிகை
யாரென்று நினைவில்லை:) சபிதா?
ஜெய்ப்பூர் காட்சிகள். இந்தி பேசும் தமிழ் நடிகர்,
 டெலிஃபோன் பூத்  நடத்தும் மணிவண்ணன்.
ஊட்டி காட்சிகள் எல்லாமே அருமை.





இந்தப் பாடலும் மிக அழகாகப் படமாக்கப்
பட்டிருக்கும்.


கமலி ரயில் ஏறியதும் கைப்பையைப்
பறி கொடுத்ததும்,

டிக்கெட் பரிசோதகர் வரும்போது ,
எந்த இளைஞர்களைப் பார்த்து அவள் பயப்படுகிறாளோ
அவர்களே  அவளுக்கு உதவுவது அருமை.
மிகப் பிடித்த சீன்.

அடுத்ததாக நான் ரசிக்கும் இன்னோரு படம்

திரு திரு துறு துறு.
++++++++++++++++++++++





த்ரில்லர்+காமெடி.


Tuesday, May 10, 2022

May 2010 ஒரு நாள் முழு மின்வெட்டு.!

Vallisimhan




அது ஒரு பகல் காலம் 2010 இல் ஒரு நாள்
+++++++++++++++++++++++++++++
வெய்யில் போதுமா!! வருடா வருடம் நாம் கேட்கும் கேள்விதான். இருந்தாலும் இந்த வருடம்
ரொம்பவே அதிகமாக இருக்கு.
இதில் ஒரு நாள் முழு மின்வெட்டு.!
மின்சாரம் போவதைவிட அதோட பின் விளைவுகள் படு மோசம்.
முதலில் வருவது காத்து. .வருவதுன்னு சொல்லக் கூடாது.வராம,ஒரு இலை அசையாமல்
மரமெல்லாம் மௌனம் சாதிக்கிறது.
முன் காலம் போல வாயில் கதவெல்லாம் திறந்து வைத்து,அழியை மட்டும் போட்டுக்
கொண்டு தலைக்குசரம் வைத்துக் கொண்டு படுக்க முடியுமா. கேட்' டை யாரொ திறப்பது
போலவே தோன்றுகிறது.
கொஞ்ச நெரம் பெஞ்சில் படுத்தாச்சு. அதுவும் வியர்க்கவே தரைக்கு வந்து படுத்தால்
எறும்பார் வரிசையாகப் போகிறார்.
ஓஹோ லஸ் பிள்ளையாருக்குத் தேங்காய் சூறைவிடவில்லை.
சரி, இடத்தை மாத்திக் கொண்டு படுக்கலாம்னால், ஒரு தொலைபேசி. ரிங்.
தரையிலியே நீந்தும் திமிங்கலமாக என்னைக் கற்பனை செய்துகொண்டு, நகர்ந்து போய்ப்
போனை எடுத்தால் பக்கத்து வீட்டு அம்மா,'கரண்டு எப்ப வரும்னு தெரியுமோ' இப்ப மேகலா
முடிஞ்சிருக்குமே என்கிறார்.
அந்த நிமிஷத்தில் நான் தற்பெருமையில் ,சுய மதிப்பீட்டில் உயர்ந்து விட்டேன்.
நான் சீரியலே பார்ப்பதில்லையேம்மா, கரண்ட் 6 மணிக்குத்தான் வருமாம்ன்னு சொல்லி ,
அந்த அம்மாவின் ஆ!!! கேட்டுக்கொண்டே வைத்துவிட்டேன்.
உண்ட மயக்கத்தில் வந்த தூக்கமும் போச்சு.
இவரையாவது கேட்டு, அவர் அக்கா வீட்டுக்குப் போகலாமான்னு கேட்க வந்தால்,
ஒரு மினி பாட்டரி விசிறி காற்றில் நல்ல உறக்கம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
அக்காவீட்டில் மின்வெட்டு இல்லை என்று தெரிந்துதான் இந்த யோச்னையே வந்தது.🙂
''இருந்த ஒரு வேப்ப மரத்தையும் கார் நிறுத்துவதற்காக வெட்டியாச்சு. இப்போ அது இருந்தா
எவ்வளவு நிழல் இருக்கும். ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு ,ஊர்வம்பு புத்தகத்தை
நாலாவது தடவையாகப் படிக்கலாமே என்று நினைத்துக் கொண்டேன். இல்லை வாய்விட்டுச்
சொன்னேன்.
அதுவரை ,இவர் யோக நித்திரையில் தான் இருந்திருக்கிறார்.:)அதுதான் நான் சொன்னது
காதில் விழுந்துவிட்டது.
'கட்டிடம் கட்டினவர், வேப்ப மரத்தின் வேர் பற்றி சொன்னதுனாலதானே எடுத்தோம். அது
கூட மறந்து போச்சா? உனக்கு ஏதாவது கிடைச்சா போதும் என் மண்டையை உருட்டிடுவே
என்றபடி தன் மரநாய் ,(சிற்பம்)செதுக்கப் போனார். அப்போதுதான் அந்த மின் உளி
இயங்காது என்று நினைவு வரவே ,அவரும் மின்வெட்டு பற்றிக் காரசாரமாக நான்கு
வார்த்தைகள் சொல்லிவிட்டு ,மாமரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டார். அவருக்கு
எத்தனையோ இருக்கு தோட்டத்தில் செய்ய. !!!!!!!


நமக்கு அப்படியா!!!படி தாண்டி அறியோமே:0)
இவ்வளவு அலுப்பும் மணி மதியம் இரண்டு வரைக்கும் தான்.
கிட்டத் தட்ட 100 வீடுகளுக்கு ஆவின் பாலைக் கொடுத்துவிட்டு, 
பால் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு ,நம்வீட்டின் பின் பக்கத்தில் உட்கார்ந்து,கணவனுக்குக் கொண்டு வந்திருந்த சாப்பாடைக் கொடுத்துவிட்டு
 தானும் சாப்பிட்ட எங்க வீட்டு ராணியைப் (உதவி செய்பவர்) பார்த்ததும் 'சே' ன்னு போய்விட்டது. 
இதற்கப்புறம் இன்னும் இரண்டு வீட்டு வேலையை அவள் பார்க்கப் போகணும்.
என்னை நினைத்து எனக்கே  என் மீது இனம் தெரியாத கோபம் வந்தது!
எல்லோரும் வாழ வேண்டும்.

இதை நீங்கள் முக நூலில் படித்திருக்க வாய்ப்புண்டு.

Monday, May 09, 2022

தேடி மீண்ட கதைகளில் ஒன்று

வல்லிசிம்ஹன்



Friday, May 28, 2010
மீண்டோம் சென்னை... 2010 மே மாதப் பதிவு.
தேடினேன் வந்தாரே:)






துபாயிலிருந்து சென்னை மீளும் பதிவு.

 
மதிய தூக்கத்துக்குப் பேத்தி தயார் ஆனதும் ''பாப்பா ,அப்புறமா பார்க்கலாம்' என்று பயந்துகொண்டே சொன்னோம். ''நின்னி தாச்சி.ஈவனிங் வவ்வா'' என்று அவளும்
சம்மதம் சொல்ல அறைக்கதவு சாத்திக் கொண்டது.
அதாவது நான் தூங்கப் போகிறேன். சாயந்திரம் வருவேன் என்கிற அர்த்தம்.:)

சத்தம் போடாமல் பெட்டிகளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம்.
எழுந்ததும் எங்களைத் தேடுமே என்கிற பயம்.
இன்னும் கொஞ்சம் மாதங்கள் ஆகுமே என்கிற மனக் கிலேசம், எல்லாம் கலந்து
எங்களை மௌனமாக்கியது.

வெளியில் வந்து கண்கூசும் ,சுட்டெரிக்கும் பாலைவெய்யிலைக் கண்டதும் ,ஆளைவிடு !
சென்னை இதற்கு எவ்வளவோ தேவலை என்று விமான நிலையம் வந்தடைந்தோம்.
அதி நவீன புதிய டெர்மினல்.வரிசையில் நிற்கவேண்டிய அவசியமில்லாத போர்டிங் ரொடீன்.

212ஆம் எண் கொண்ட எமிரெட்ஸ் வாயிலுக்கு வந்ததுதான் கையில் தண்ணீர் இல்லை என்று தெரிந்தது.
உடனெ வீட்டு எஜமானர் நான் வாங்கி வரேன்,நீ வேணுமானால் ட்யூட்டி ஃப்ரீல ஏதாவது வாங்கிக் கொள் என்றதும், பழைய அனுபவங்கள் காரணமாக நான் நாற்காலியை விட்டு நகரமாட்டேன், நீங்கள் போய் வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.

அவரும் போனார். போனார்.போனார்.
என்ன வாழ்க்கையின் ஓரத்துக்கே போய் விட்டாரா என்று நான் பயப்பட ஆரம்பிக்கும்போதே லாஸ்ட் அண்ட் ஃபைனல் கால் ஃபார் போர்டிங் சென்னை ஃப்ளைட்'' ஒலிபெருக்கியில் வந்தது.
அங்கு நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் ''அம்மா, எங்க வூட்டுக்காரர் தண்ணி பிடிச்சாரப் போயிருக்காரு. நீ கொஞ்சம் பொறுமையா இரு தாயீ'' ன்னு சொல்லிட்டு நான் ஒரு காலில் தவம் இயற்ற ஆரம்பித்தேன். நிமிடம் நகர எனக்கு துடிப்பு அதிகமாகியது. இப்போது அந்த லௌஞ்சில் நான் மட்டுமே திக்கற்ற ரேவதியாக நின்று கொண்டிருந்தேன்.!!!!

இதென்னடா கஷ்டகாலம், ஓரோரு தடவையும் நாந்தானே தொலைவேன். இப்ப இவர் எங்க போனார்.எங்கபோய்த் தேடுகிறது. இந்தப் பொண்ணு வேற மகாக் கேலியாக என்னைப் பார்க்கிறாள்!!!. ''ஹி ஹேஸ் டு கம் நௌ''என்று மிரட்டல் அவள் கண்ணில்.
சடக்கென்று எதிர்வரிசையில் நடக்கும் உருவம் ரொம்பப் பழகினதாகத் தெரியவே
நம்ப முடியாத வேகத்தில் அந்தத்திசையில் பாய்ந்தேன்.
சத்தியவான் சாவித்திரி கூட அப்படி இரைச்சல் போட்டு இருக்க மாட்டாள்.
இவர் பெயரைச் சொல்லிக் கையைத் தட்டி..ம்ஹூம், மனுஷன் திரும்பணுமே!!

இப்ப தானா  என் குயில் குரல் மங்கி ஒலிக்க வேண்டும்???????
சத்தம் போடத் தெரியவில்லையே ரேவதி உனக்கு:*****(((((((((((((

அவர் பாட்டு எண்களைப் பார்த்துக் கொண்டே எதிர்வரிசையில் போய்க் கொண்டிருக்கிறார்.
இந்தச் சமயம் ஒன்று சொல்லியே ஆகணும். அவருக்கு எப்பவுமே ஏகாக்கிர சிந்தனை தான்.
ரிஷப ராசி. ஒன்றில் முனைந்தால் வேறு எதுவும் அவர் சிந்தனையைக் கலைக்க முடியாது!!!

ஒரே எட்டு. இருபது நொடிகள் தான் ஆகியிருந்தது. அவர்கையைப் பிடித்துவிட்டேன்.
ஏனோ சுஜாதா சாரின் பத்துசெகண்ட்.....கதை நினைவுக்கு வந்து தொலைத்தது:)
எப்பவுமே யாராவது  தன் மேலெ இடிப்பதோ கையைப் பிடிப்பதையோ விரும்பாத அவர், படு கோபமாக இன்னோரு கையை என்னைப் பார்த்துத் திருப்பினார்.
''சாமி, நாந்தான்பா எங்க போறதா நினைப்பு, கேட் இந்தப் பக்கம்னு''
 அவரைத் திருப்பினேன்.
''ஓ,இங்கேயா இருக்கு. நான் கீழ் தளத்துக்குப் போய்த் தண்ணீர் வாங்கிக் கொண்டு வந்து தப்பான படிகளில் ஏறி விட்டேன் போலிருக்கிறது''
என்றவரைப் பார்த்து
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

என் முகத்தைப் பார்த்துப் புரிந்துகொண்டு,''சரிம்மா என்ன ஆச்சு இப்ப, ப்ளேனைக் கிளப்பிட்டானா? ''என்று சிரிக்கிறார்.
கஷ்டப்பட்டுக் கோபத்தை அடக்கிக் கொண்டு அவர்கையிலிருந்து
தண்ணீரை வாங்கி குடித்துக் கொண்டே எங்கள் போர்டிங் கேட்டு'க்கு வந்தேன்.
அவரும் பாஸ்போர்ட்,டிக்கட் எல்லாவற்றையும் காட்ட ஒருவழியாக ,
விமானத்தில் போய் உட்கார்ந்தோம்.
இதில் சுவை என்ன வென்றால் எங்களுக்கு அப்புறமாக ஐந்து நபர்கள் வந்ததுதான்.:)

பற்றாததற்கு விமானம் பல தடவை. கீழே இறங்கி,குதித்து,ஆடி எங்கள் பயணத்தை இன்பமாக முடித்து வைத்தது.
வந்துட்டோம்பா.:)



எல்லோரும்  நிறைவாக வாழ வேண்டும்.

Sunday, May 08, 2022

அன்னையர் தின வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன்



 உலகத்தின் தாயார் காஞ்சி காமாக்ஷியில் ஆரம்பித்து 
அலர்மேல் மங்கை முதலாக
அனைத்து அன்னையருக்கும் வணக்கங்கள். 

  அன்பு ஒன்றே ஆதாரமாக நம்மைப் பெற்று வளர்த்த
அம்மா,  கவனித்துக் காப்பாற்றிய அப்பா, 
 மதித்து இணைந்த கணவர்,
கருத்துடன்  நடத்தும் நாம் பெற்ற மக்கள்,
இணைய வழி சேர்ந்த சகோதர சகோதரிகள்
நட்புகள்  எல்லோரின்  அன்புக்கும் , எப்பொழுது வேண்டுமானாலும்
காத்தருள தயாராக இருக்கும் தாய் உள்ளங்களுக்கும்

இனிய வாழ்த்துகள்.
 எல்லோரும் நலம் பெறுவோம்.




Thursday, May 05, 2022

எண்ணமும் எழுத்தும்.

வல்லிசிம்ஹன் படிப்பது எவ்வளவு பயன் தரும் என்பதை நாம் எழுதுவதைச் சிறிது நிறுத்தினால் தான் தெரிகிறது:)  #கீதா சாம்பசிவம்,#எல்கார்த்திக்.
2011 இல் எழுதிய பதிவு


நாச்சியார் பதிவில் படங்களை ஏற்றுவதில் இருக்கும் சுலபம்,

எழுதுவதில் இல்லை.

இ கலப்பையும் உதவ முடியாத இந்த நேரங்கள் மற்ற பதிவுகளைப் படிக்கத் தோதாக அமைகிறது.

முக்கால்வாசி நேரம் மழலைகளுடன் செலவாகிவிடுகிறது.

ஓய்வெடுக்க ஒரு மணி.

மீண்டும் வேலைகள். மருமகளைப் பார்த்தால் அனுதாபம்தான் தோன்றுகிறது.

நம் ஊரைப் போல இஸ்திரி செய்ய ஒரு ஆள். வீடு பெருக்கித் துடைக்க ஒரு ஆள் என்றெல்லாம் இங்கு இல்லை.

தெரிந்த விஷயமே.



இருந்தாலும் கையில் ஏழு மாதக் குழந்தையுடன் எல்லாவற்றையும் கவனிப்பது

கடினம்..
(அந்தப் பிள்ளைக்கு இப்போது 11 ஆகப் போகிறது:)  )

இருந்தும் எனக்குக் கிடைக்கும் சில மணித்துளிகளில் கமலா சடகோபனின்

"என் இனிய மந்திரக் கோலே" படித்தேன்.

பக்கத்துவீட்டில் நடப்பதை நேரில்பார்ப்பது போல இருக்கிறது.



எண்ணங்களில் கீதாவின்  பெண் எழுத்து 
+++++++++++++++++++++++++++++++++++++++++
படித்தேன் அருமையாக பெண்களின்  எழுத்துப் பரம்பரையையே அலசி இருக்கிறார்.

இந்தப் பதிவிலேயே     .எல்.கார்த்திக்
*********************************************

அவர்கள் என்னை எழுத அழைத்த  பெண்களின் எழுத்தைப் பற்றிய என் கருத்துகளைப் பதிவிடுகிறேன்.

நாங்கள் பள்ளியில் படிக்கும் காலங்களில் எழுதிய பெண்கள் குறைவாக இருந்தாலும்  எங்களுக்குப் பழகிய சூழ்நிலைக் களமாகக் கொண்டே
கதைகள் அமைந்தன.மிகவும்...பிடித்தவர்....லக்ஷ்மி.....பிறகு///சிவசங்கரி

அதில் புதுப்பாணியைக் கொண்டு வந்தவர் ஆர். சூடாமணி.
பெண் மனசில் உள்புகுந்து அழகுகளையும் விகாரங்களையும் தைரியமாக எழுதியவர்.
பின் என்னைக் கவர்ந்தவர்  ராஜம் கிருஷ்ணன்.
முறுக்கு,சீடை,மைசூர்பாகு என்று உழலாமல்  வேறு  நிலைக்கு எடுத்துவைத்தார்.
அதற்குப் பின்னர் வந்தவர்களின் கதைகளில் , கண்ணம்மா,,டார்லிங் இவைகள் முக்கிய வார்த்தைகளாக உயர் மட்டக் காதல்களும் தியாகங்களும்
வேறொரு பார்வை பார்க்க வைத்தன.
கண்ணம்மா  என்றழைக்கும் கணவன் வேண்டும் என்று என் தோழி ஒருத்தி கனவு காணுவாள்:):சிவசங்கரி,வாஸந்தி,இந்துமதி..)

ஆறடி உயரம் ரிம்லெஸ்  கண்ணாடி,,பியட் கார் என்று வலம் வந்த கதா நாயகர்கள். படித்த காதலி, இப்படிப் போகும் கதை..
இப்பொழுது இணையத்திலும் காதல் கவிதைகளுக்குக் குறைவில்லை.

அதில்லாவிட்டால் உலகம் இல்லையோ.
இல்லைதான் என்று நினைக்கிறேன்.:)
பிறகுபடித்தவர்கள்....வித்யாசுப்ரமணியம்,உஷாசுப்ரமணியம்.
கமலாசடகோபன்.....அனுராதாரமணன்.

பாட்டியின் பார்வையில் வேறென்ன தெரியும்!
படிக்க அனைத்து எழுத்துகளுமே நன்றாக இருக்கின்றன.
நேரம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இலவசமாகக் கரும்பு போல இனிக்கும் எண்ணங்களையும்,ஆழ் நோக்குடன் பதியப்படும் முற்போக்குக் கதைகளையும் வாசிக்கக் கிடைக்கின்ற ஒரே இடம் இணையம்.

பெண்பேசும்   தமிழுலகம் இன்னும் விரியும்.
ஆன்மீகத்திலிருந்து, ,பற்பல சுற்றுலா சென்று நம்மை மகிழ்விக்கும்
***************************************************************************
 பதிவுகளிலிருந்தும்,
படித்தாலே சிந்தனையைக் கிளரும் ராமலக்ஷ்மி போன்றவர்களின் தீர்க்கமான கருத்துகளும், லக்ஷ்மியின் மலர்வனமும்,
சித்ரா,அன்புடன் அருணா, மாதங்கி மாலி,அப்பாவி புவனா,ஹுசைனம்மா,மாதேவி,சிறுமுயற்சி   முத்துலட்சுமி,
இவர்களெல்லாம் இளைய தலைமுறை.

பெரியவர்களாக நம் துளசி,கீதா,நானானி,கோமா,கோமதி அரசு, திருமதி
************************************************** லக்ஷ்மி பூனாவிலிருந்து
***************************************************************** எழுதும் பதிவுகள்
***********************************************
 எல்லாமே அள்ள அள்ளக் குறையாத இன்பம் தரும்  எழுத்துகள்.

இவர்களைப் பற்றி  மதிப்பிடவோ,கருத்துக் கூறவோ
 நான் இன்னும் நிறைய தொலைவு கடக்க வேண்டும்.
தெரிந்ததை எழுதி

விட்டேன் கார்த்திக்.!!
 நேரக் குறைவு காரணமாக நிறைய
பதிவர்கள் விட்டுப் போயிருக்க வாய்ப்பு அதிகம்
நம் சின்ன அம்மிணி அகிலா மாதிரி.:)
மற்றவர்கள் மன்னிக்கணும்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
at May 03, 2011 23 comments:  

Wednesday, May 04, 2022

பால்யு பக்கங்கள். 2012

வல்லிசிம்ஹன்

 எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

பால்யு பக்கங்கள்.

அன்பும்   நம் எண்ணங்களும்
நமக்குப் பின் வரும் சந்ததியை நோக்கியே
தொடரும்..
தந்தையின் கை நீளும் மகனின் தோளை அரவணைக்க
மகனின் கை தேடும் தன் பிள்ளையின் பிஞ்சுக் கரத்தைப் பிடிக்க.
பிள்ளையின் கரத்தில் 
தாத்தா வாங்கின குட்டி மோட்டார் கார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

பால்யூ  அவர்கள் எழுதின சிறுகதை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.
தவிப்பு என்று அந்தக் கதையின் தலைப்பு.

பேரனைத் தாத்தா கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறார்.
அவன் அங்கு போய் ஆறு மாதம் ஆகியும் திரும்பவில்லை.
சென்னையில் இருக்கும்   தந்தைக்கு மகனைப் பார்க்கும் ஆவல். அதற்குள் மனைவி  இரண்டாவது  கர்ப்பம் தரித்திருப்பது தெரிய வருகிறது. அவளோ என்னுடைய இந்த நிலையில் அவனைப் பார்த்துக் கொள்வது கடினம். அவன் உங்கள் அப்பாவுடனேயே இருக்கட்டும்  என்று விடுகிறாள்.

முத்துப்பேட்டை கிராமத்தில் இறங்கும்
இந்தத் தகப்பன் மகனைத் தேடி ஓட,
   அவன் தந்தை அவன் உடல் நலம் விசாரிக்கிறார்.  அவருக்குப் 
பதில் சொல்லாமல் தன் மகனைத் தேடுகிறான்.  

அதிகாலை வேளையில் வாயில்  விரலை  வைத்துப் பல் தேய்க்கும்
 அந்தப் பிஞ்சோ கொஞ்ச நேரம் கழித்தே புரிந்து கொள்கிறது.
யப்பா.....என்று ஓடி வருகிறது.
அவன் கிராமத்தில் இருக்கும் நான்கு நாளும் அவனுடனேயே
ஒட்டிக் கொள்கிறது.
அப்பா கிளம்பும் நேரமும் வருகிறது.
அப்பாவோட ஊருக்கு  வரியா கண்ணா 
என்று கேட்டால்
துளி கூடத்தயக்கம் இல்லாமல் தாத்தாவின் தோளைத் தழுவிக் கொள்கிறது
குழந்தை..''நீயும் இங்க இரு அப்பா'' என்கிறது,.
தாத்தாவும் சொல்கிறார்.
''நீ  தான் எங்களை மறந்து   நாட்களைக் கழிக்கிறாய்.
இவனாவது எங்களிடம் இருக்கட்டும் என்று
ஆதரவாக  பேரனை அணைத்துக் கொள்கிறார்..

ரயிலில் ஏறும்  மகனின் தொண்டையில்
தவிப்பு உருள்கிறது.
தன்னை ஈந்தவரையும் தான் ஈந்தமகவையும்
விட்டுப் பிரியும்  சோகம்.

இது போல  கதைகளை   இப்பொழுது படிக்க முடியவில்லையே
என்ற   தவிப்பு எனக்கும்:)

ஆசிரியர் பால்யூவைப் பற்றித் தெரியாதவர்கள்  இருக்க முடியாது.  குமுதம் பத்திரிகை வந்ததும் படிப்பது பால்யூவின் பக்கம் தான்.
அவ்வளவு பிரபலம்.
சிறுகதைகளை  நாம் தேடிப் படிக்கவேண்டி இருக்கிறது இப்போது.
என்னுடைய  இளமைக்காலங்களைப் பற்றிப் பேசினால்,
 ஒரு  விகடன் என்றால் மூன்று, கல்கி என்றால் மூன்று, குமுதம் என்றால் இரண்டாவது  இருக்கும். ஏனெனில் தொடர்கதைகளும் நிறைய வரும்.
தற்கால  நிலை....ம்ஹூம்   நான் சொல்வதாக  இல்லை.
இப்போது இந்தப் பதிவில்   பால்யூ அவர்கள் 1948 இலிருந்து எழுதின கதைகள் இந்தப் புத்தகத்தில்  இருக்கின்றன.
இந்தப் புத்தகத்தகத்தை நான் வாங்கினது    எட்டு வருடங்களுக்கு முன்னால்..


இப்போது கிடைக்கும் என்றே நம்புகிறேன். தொலைபேசி எண்ணும் இருக்கிறது. வாங்கிப் படியுங்கள். நல்லதொரு அனுபவம்    கிடைக்கும்.:)





Tuesday, May 03, 2022

எழுத்தாளர் சுஜாதா.


வல்லிசிம்ஹன்

நாகலிங்கப்பூ

வல்லிசிம்ஹன்
நாகலிங்கப்பூ - விசேஷங்கள்:

நாகலிங்கப்பூ.   இதுவே கடவுள்.   இந்தப் பூவுக்குள்ளே தானே இறங்கி வந்து குடியிருக்கிறான். அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலர்தான் நாகலிங்கப்பூ.
நாகமுமிருக்கிறது. உள்ளே லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றன. உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று கவனித்தால் ஒரு மினியேச்சர் கைலாயமே கைக்குள் இருப்பது போல் இருக்கும். ஒரு சில நிமிடங்கள் நம் கவனத்தை ஒழுங்குபடுத்தி இந்தப் பூவின் மத்தியப் பகுதியில் இருக்கும் சிவ லிங்கத்தை உற்று நோக்கி அப்படியே நம்மை தியானத்தில் கொண்டு சென்று விட்டால் உடல் சிலிர்க்கும். உள்ளம் அமைதி பெறும். கயிலாயம் கண்ணுக்குள் விரியும்
சிவபூஜைக்கு உரிய அஷ்ட மலர்களில் இது இடம் பெற வில்லை. பூமிக்கு வந்த சிவ மலர் என்பதாலோ என்னமோ விசேஷமான நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்க வடிவத்தைப் பெற்றுள்ளது.  பாம்புகள் விரும்பி தஞ்சம் புகும் மரமாக நாகலிங்க மரம் உள்ளது .  விசேஷத்திலும் விசேஷமாக மரத்தில் பூக்கும் பூவாக  வேர்ப் பகுதிக்கு சற்று மேலே கொத்துக் கொத்தாக இலைகளைக் கொண்ட கிளைகளில் பூக்காமல் தனக்கென்று, தான் பூப்பதற்கு  என்று பிரத்யேகமாக ஒரு கிளையை உருவாக்கிக் கொண்டு பூக்கும் மலராக நாகலிங்கப்பூ உள்ளது.
“ஷல்பூல்” என்றும் “கைலாஷ்பதி” என்றும் வடநாட்டவரும்  “நாகவல்லிப்பூ”  மல்லிகார்ஜுனப்பூ” என்று தெலுங்கர்களும் பய பக்தியுடன் அழைக்கிறார்கள். வந்காலமோ இதனை “நாககேஷர்” என்கிறது. நாகலிங்க மரத்திற்கு ஏனைய தாவரங்களைப் போல பருவகால மாற்றங்கள் கிடையாதாம். என்றும் பசுமையான மரம் என்று போற்றப்படுகிறது. ஒரு நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் ஆயிரம் மலர்கள் வரை பூக்குமாம்.
நாகலிங்கப் பழம் மகா விசேஷம்  ஒவ்வொரு பழமும் ஒரு கால்பந்து அளவுக்கு இருக்கும். அதில் 65 முதல் 550 விதைகள் வரை இருக்கும். இவைகள் முதிர்ச்சி அடைய சுமார் 12 லிருந்து 18 மாதங்கள் வரை ஆகுமாம். அமேசான் காட்டுப் பகுதிகளில் இந்த மரம் துர்தேவதைகளிலிருந்துகாக்கும் மரமாகவும் ஆசிய கண்டத்தில் செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. மேலும் இந்த மரம் மாசுக் கட்டுப்பாட்டின் தன்மையைக் காட்டும் குறியீட்டுக் கருவியாகவும் கருதப்படுகிறது. காற்றில் அதிகமான சல்பர் இருந்தால் இதன் இலைகளை உதிர்த்து வெளிப்படுத்துமாம்.
கடன் நீக்கி வல்லமை தரும் இந்த மரத்தின் இலைகளை அரைத்து தோல் நோய்களுக்கு மருந்தாகவும் இலைகளை மென்று தின்பதால் பல்வலிக்கு மருந்தாகவும் பட்டைகளையும் காய்களையும் பக்குவப்படுத்தி விஷ ஜுரத்துக்குமருந்தாகவும் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.

சிவாயநம!







Sunday, May 01, 2022

May...........2022

வல்லிசிம்ஹன்


எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.

நேற்று  வந்த சூறாவளி,சத்தம் நிறையப் போட்டுவிட்டு அண்டை மானிலத்துக்குச் சென்றது.

அந்த நேரம் கீழே சென்று காதில் ஹெட்ஃபோன் போட்டுக் கொண்டு
 பிடித்த பாடல்களைக்
கேட்டுக் கொண்டிருந்தேன்.
மற்றவர்கள் அவர்கள் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

பெரிய பேரனுக்கு என் பயத்தைப் பார்த்து வருத்தம்.
மேல வா பாட்டி . ஒன்றும் ஆகாது 
என்று வற்புறுத்தினான்.
பிறகு தான் செய்தியில்  இந்தக் காற்றின் அட்டூழியம் தெரிந்தது.

கீழே நான் கேட்ட பாடல்கள்.:)







பெரியவங்க பேச்சைக் கேக்கலாமா ! June 2008

வல்லிசிம்ஹன்



Tuesday, June 03, 2008
பெரியவங்க பேச்சைக் கேக்கலாமா !













ஜூன் 2008 எழுதின பதிவு.
திருவேங்கடப்
பாட்டியும் நானும்.
இடம் திண்டுக்கல் பஸார் தபால் ஆஃபீஸ்.
கச்சேரி ரோடு மலைக் கோட்டை அருகே.

கிணற்றில் நான் தண்ணீர் சேந்திக் கொண்டிருக்க,
பக்கத்து வீட்டுப் பின்புறத்தில் இருந்து ,தோஹி இந்திராவின் குரல்


''எத்தனை தடவைம்மா சொல்றது.புத்திமதி சொல்லறதுல்லாம் உன் காலத்தோட போச்சு.
இன்ஃபாக்ட் உன் அப்பா காலத்தோட ஓவர் மா.
இப்ப எல்லாருக்கும் எல்லாம் தெரியும்.
நின்னு, பாட்டி சொல்கிறதை எல்லாம் கேட்டுக் கொண்டு பின்பற்ற
நேரம் இல்லை.''

இது நாங்கள் தினம் கேட்கிற வசனம், அதுவும் காலை வேளைல
அம்மியில் தேங்காய்ச் சில்லுகளைத் தட்டிக் கொண்டூ இந்திராவோட
அம்மா தாழ்ந்த குரலில் பேசுவதும்,
இந்திரா அதைக் கேட்டுப் பொரிந்து கொட்டுவதும்,
உள்ளே இருந்து அவளுடைய பாட்டியின் அழைப்பும்
எங்க வீட்டுத் தாழ்வாரத்தில் கேட்கும்.
நான் அப்போது வீட்டுக்குத் தேவையான தண்ணீரைக் கிணற்றிலிருந்து
இழுத்துக் கொட்டிக் கொண்டிருப்பேன்.
எங்க பாட்டி ஒரு தூணில் சாய்ந்து கொண்டு கால்களை நீட்டி
தைல எண்ணையைத் தடவிக்கொண்டு இருப்பார்.
எனக்கோ எட்டுமணிக்கு வரும் ஒரே ஒரு டவுன் பஸ்ஸைப் பிடித்துப்
பள்ளிக்குப் போக வேண்டும்.
பாட்டிக்கோ பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசை.:)
''அந்தப் பொண்ணு ,சொன்னதைக் கேக்காதோ.என்ன பிரச்சினை ஆண்டாள்?''
என்று என்னை விளிப்பார். பாட்டிக்கு இந்த திருநெல்வேலிக் குசும்பு ரொம்ப ஜாஸ்தினு எனக்கு அப்பத் தெரியாது.:)
ஐயோ சத்தம் போட்டுப் பேசாதே பாட்டீஈஈஇ
நான் அவளோட தான் ஸ்கூலுக்குப் போணும். அப்புறமா உள்ள வந்து சொல்றேன். ''
 என்று ஓடி விடுவேன்.
திருப்பி சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும், பாட்டி ரெடியாக வாசல் திண்ணையில் உட்கார்ந்திருப்பார். என்ன ஆச்சு.அப்புறம் அந்த சண்டை தீர்ந்துதா?"
 என்று ஆவலோடக் கேட்கும் அந்த 70 வயசுக் குழந்தையைப் 
பார்த்தால் கோபம் தான் வரும்:)

மாலைப்பசி,உப்புமா காத்துக் கொண்டிருக்குமோ என்கிற கோபம்,
அத்தனை அல்ஜீப்ராவையும் போட்டு முடிக்கணுமே என்கிற தாபம்,
பாட்டிக்குப் பின்னால் மெயில்(தபால்) மூட்டைகளைக் கட்டி சீல்
 வைத்துக் கொண்டிருக்கும் தங்கப்பத் தாத்தாவின் நமுட்டுச் சிரிப்பு.
''பாப்பா மாட்டிக்கிட்டியா'' என்கிற மாதிரி கேலி செய்யும்.

வர்ரேன் பாட்டி என்று கடித்த பற்களுக்கிடையே பேசிவிட்டு உள்ளே போய்விடுவேன்.
அங்கே போய் அம்மாவிடம் புலுபுலுவென்று ஒரு சண்டை போட்ட பிறகு
மீண்டும் வாசலுக்கு வந்தால் அங்கே மீண்டும் பாட்டி!!
சரி இன்னிக்குச் சொல்லாமல் தீராது,அப்புறம் அப்பா வரை விஷயம் போய்விடும் என்கிற பயத்தில் ,''இல்ல பாட்டி...''.என்று ஆரம்பித்தால்.,
இந்த ' 'இல்லை,வந்து '' ரெண்டு வார்த்தை இல்லாம உன்னால பேச முடியாதா
என்று கேலியாகக் கேட்பார்.:)

நமக்குத்தான் ரோஷம் நெத்திக்கு நடுவில உட்கார்ந்திருக்குமே:)
முறைப்பேன் பாட்டியை.
இப்படியெல்லாம் முறைச்சா நாளைக்கு எப்படி கலெக்டராப் போவ. ?
நாலு பேர் நாப்பது பிராது கொடுப்பார்கள். எப்படித் தீர்த்து வைப்ப.' பொறுமை
 என்னும் நகை அணிந்து 'அப்படீனு அவ்வையார் பாடியிருக்கார் தெரியுமா" என்பார்.
எனக்கு அதுவரை இருந்த நல்ல குணமெல்லாம் அப்படியே மறைந்துவிடும்!!
''போ உன்கிட்ட ஒண்ணுமே சொல்ல மாட்டேன். 
எனக்குத்தான் பொறுமை இல்லையே '' என்று வேறு பக்கம் திரும்பினால் எதிரே இருக்கிற லாரி ஆபீசைப் பார்க்கணும்,:)))அதனால் மீண்டும் பாட்டியைப் பார்ப்பேன்.

''தாழ்ந்த இடத்திலதான் தண்ணீர் தங்குமே, தெரியுமா? என்பார்.
ஆமாம் தண்ணியும் தங்கும் கொசுவும் வளரும்' அப்டீனு "தொச்சு"க் கொட்டுவேன்;)
இந்த மாதிரி ரெண்டு மூணு ஸ்டாக் டயலாக் முடிஞ்சதும் பக்கத்து வீட்டுச் சமாசாரமும் சொன்னேன்.
எப்படி அந்த இந்திராவுக்கு ஒரு பையன் லவ் லெட்டர் கொடுக்கப் பார்த்தான். அவ எப்படி வாங்கிக்காம கல்யாணப் பரிசு சரோஜாதேவி மாதிரி நடந்து கொண்டா, அது தெரிந்து (அவளுடைய) பாட்டி அவளைப் பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டாம்னு சொல்கிறார் என்று முடித்தேன்.
எல்ல்லாத்தையும் கேட்டுவிட்டு,  ''சூ!! இவ்வளவுதானா''. என்பது போல் 
எங்க பாட்டி மட்டும்தான் முகத்தை வச்சுக்க முடியும்:)
நீ என்ன சொல்றே பாட்டி. அவ ஸ்கூலுக்குப் போலாமா வேண்டாமா என்றதும்,
பாட்டி வினோதமாப் பார்த்தார்.
இது என்னடீ உலக அதிசயமா. பசங்களுக்கும் பொண்களுக்கும் இப்படித்தான் இருக்கும்.
எங்களை மாதிரி எட்டு வயசில கல்யாணம் ஆனா ஒண்ணும் தெரியாது.
நீங்கள்ளாம் குமுதம்,சாண்டில்யன் படிச்சே கத்துண்டாச்சு. அப்புறம் இப்படித்தான் நடக்கும்.
நீங்க எல்லோரும் ஒத்துமையா ஒரே குருப்பா போய் வந்தா யாரும் வாலாட்ட மாட்டான்.
ஒரு தடத்தை விட்டு இன்னோரு வழியாப் போங்கொ.
அப்படியும் பின்னால வந்தா என்னடானு அதட்டுங்கொ.
நாங்களும் இப்படி அப்படி யெல்லாம் பார்த்து இருக்கோம்.
எங்களுக்கும் தெரியும் என்று மறுபடி அதே நக்கல் சிரிப்பு.
'போ பாட்டி உனக்கு ஒண்ணும் புரியலை'' என்று எழுந்து விட்டேன்.
இப்பவெல்லாம் நிலைமை மாறிவிட்டதாக் கேள்வி.:)
,
இன்னோரு டிஸ்க்ளெய்மர்..
அதே பையனை இந்திரா கல்யாணமும் பண்ணிக் கொண்டார்கள். ஏன்னா அது அவளுக்கு அத்தை பையன்.:)