Blog Archive

Monday, May 23, 2022

ஸ்ரீரங்கம் கல்லூரி ரயில்.

வல்லிசிம்ஹன்

Thank you Jayanthi Kannan,.
                  __ரமணி

ஸ்ரீரங்கம் கல்லூரி ரயில்.

சுஜாதா ஸார்  சொல்லிக் கேள்வி.
இப்பொழுது இவர் சொல்கிறார்.
சதர்ன் ரயில்வே அதன் முன்னாள் அடையாளமான ஸ்ரீரங்கம் ஐயங்கார் ரயில்வே ( SIR ) என்பதைத் தொலைத்துக் கொண்டிருந்த கடைசிப் பருவம் அது.

 தொன்றுதொட்டு ப்ரிட்டிஷ் வழக்கத்தில் ஸ்டேஷன் மாஸ்டர்களும், கார்டுகளும் ட்ரைய்ன்களை நம்பர் வைத்துதான் கூப்பிடுவார்கள். 

ஆனால், எங்கள் பயணிகளின் குல வழக்கம் அவற்றின் நாமகரணம் அவை வரும் நேரத்தை வைத்துத்தான். வரும் நேரம் என்றா சொன்னேன்? தவறு. வரவேண்டிய நேரம் என்று திருத்திக் கொள்ளவும்.

ஒம்பதேகால் வண்டி என்று செல்லமாய் அழைக்கப்படும் ஆஃபிஸ் வண்டி ரொம்ப ப்ரசித்தி.

 அதற்கு முன்பு அது பத்து மணி வண்டியாகவும் அமாவாசை நாட்களில் இன்னும் கொஞ்சம் லேட்டாகவும் ஸ்ரீரங்கத்திற்கு வந்து சேரும். 

காலை ஆறேகாலுக்கு அதன் அக்கா ( ரயில் பெண்பாலில்லையா? ) ஒர்க் ஷாப் வண்டியாக எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வந்து போகும். 

ஒம்பதேகால் வண்டிக்குதான் ஒய்யாரம் எல்லாம். அதில்தான் கல்லூரி யுவன்களும் யுவதிகளும் தத்தம் தந்தைமார்கள் சகிதம் பயணித்தாலும் கண்கட்டு வித்தையால் அவர்களைக் குருடாக்கி இளமை விளையாட்டுக்களை அளவோடு ஆடிக்கொண்டிருப்பார்கள்

அப்போதைய ஸ்ரீரங்கம் ஸ்டேஷனுக்கு ரெண்டே ரெண்டு ப்ளாட்ஃபார்ம்கள். நடுவில் மரங்கள். உட்கார்ந்துகொள்ள கல் பெஞ்சுகள்.

 SR என்று பெஞ்சில் செதுக்கியதன் பக்கத்தில் ஒரு ராஜா அம்பு துளைத்த இதயத்தில் தன் ராதாவிற்கான காதலைப் பொறித்திருப்பான். பல ராஜாக்களும் ராஜாக்களின் ராதாக்களும் " கண்ணுக்குள் நூறு நிலவா " என பாரதிராஜாவின் வேதம் புதிதை அரங்கேற்றிக் கொண்டிருப்பார்கள். 

ஒன்பதேகால் மணி வண்டிக்கு, முன்னெச்சரிக்கையாகவோ, மாமிகளோடு சண்டையான காரணத்தினாலோ அல்லது பெரும்பாலும், ஸ்டேஷனுக்கு வெளியிலிருக்கும் மணி ஐயர் கடையில் பூரி கிழங்கு சாப்பிடும் உத்தேசத்திலோ எட்டரை மணிக்கே வந்து பெஞ்சில் உட்கார்ந்து பறவைகளின் எச்சத்தை வாங்கிக்கொண்டு வடக்கு நோக்கிப் பார்த்துத் தவமிருப்பவர்களும் உண்டு. 

வேலைக்குச் செல்லும் சில பெண்கள் குளித்துவிட்டுப் புடவையை மட்டும் கட்டிக்கொண்டு வந்து தலை சீவி சிங்காரித்தல்களையும், டிஃபனையும் ஸ்டேஷனுக்கு வந்தே முடித்துக்கொள்வர். 

உத்தமர்கோவிலிலிருந்தே தன் வருகையைப் பறையறிவித்து, கொள்ளிடப் பாலத்தில் படபடத்து நீராவிப் பெருமூச்சை விசிறிக்கொண்டு கருங்கூந்தல் அலைபாய ஒம்போதேகால் வண்டி ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் கிறீச்சிட்டு நிற்கும். 

நாலுகால் பாய்ச்சலில் சில லேட் மாமாக்கள் பரபரப்பாய் வந்து தன் சகாக்களைத் தேடுவார்கள்.

 வரதூ..... என்ற சத்தம் ரயிலின் கூ ஊ....வுடன் இணைந்து கேட்க ஓடிவந்தவர்கள் பெட்டியைக் கண்டுபிடித்துத் தாவி ஏறுவார்கள்.

 அந்த வண்டிக்குள் சுழலும் உலகமே வேறு. 

பஞ்சகச்ச மாமாக்கள் சிலர் கழற்றின சட்டையை ஜன்னலுக்கு மேல் வளைந்திருந்த கொக்கியில் மாட்டிவிட்டு, ராம நாம பஜனில் ஐக்கியமாகி, உச்சஸ்தாயில் சஞ்சரிக்கும்போது காலையிலேயே வயிறுமுட்ட சாப்பிட்டு விடுவதால் வரும் நிறுத்த முடியாத எக்ஸ்பிரஸ் ஏப்பத்தை லாவகமாக பெளன்ஸரைக் கெந்திவிடும் பேட்ஸ்மேன்போல அதன்போக்கில் வெளியேற்றுவார்கள். 

ஹிண்டு சகிதம் சிலபேர், ஓசியில் பேப்பரை இதழ் இதழாகப் பிரித்து சிலபேர், க்ராஸ்வொர்ட் சிலபேர் என சமூகம் பிரிந்து கிடக்க அந்த காலத்திலேயே அந்த  பேப்பர் உதவ,  தூங்கமுடியாத சிலபேர் ஆபிச்சுவரி காலத்தில் பேருரக்கத்தில் ஆழ்ந்தவர்கள் யார் எனப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். 

 காவிரிப் பாலம் வரும்வரை படியில் தொங்கிக்கொண்டோ அல்லது அதிக சாகசமாக வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போதே கம்பார்ட்மெண்ட் விட்டு கம்பார்ட்மெண்ட் ( வெஸ்டிப்யூல் இல்லாத காலம் அது ) தாவி வந்து பெண்கள் பெட்டியில் கண்வைத்திருந்த ராஜாக்கள் சற்றே உயிர் பயம் வர உள்ளிழுத்துக்கொண்டு தலை சிலுப்பிக் கொள்வார்கள். 

இவர்கள் எஸ் ஆர் சி பெண்கள் காலேஜின் ஹாஸ்டல் வராண்டாக்களில் தென்படும் தேவதைகளுக்கும் உச்சிப்பிள்ளயாருக்கும் வந்தனம் சொல்லி முடிக்குமுன்,வண்டி டவுன் ஸ்டேஷனிற்குள் நுழைந்து முதல் டவுன் லோடிற்கு நிற்கும். 

பள்ளிக்குச் செல்பவர்கள் சின்ன புத்தகங்களையும் பெரிய பயத்தையும் சுமந்துகொண்டு இறங்க, கல்லூரி இளசுகள் பெரிய புத்தகங்களுனுடன் சின்ன பயத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு  அல்லிமால் தெரு, பட்டர் ஒர்த் ரோட் எனத் தமிழைக் கலப்புமணம் செய்துகொண்ட ஏதேதோ தெருக்களின் வழியே நடந்தேகுவார்கள். ஒம்பதேகால் வண்டி சடுதியில் ஏதோ சாபத்தின் வசப்பட்டு இளமையை இழந்தது போல் தோன்றும். அவர்கள் போகட்டும்.

நாம் ஒம்பதேகால் வண்டிக்குள் வருவோம். டவுன் ஸ்டேஷனில் கவர்ந்துகொண்ட புது அரசாங்க அடிமைகளோடும் ஜாலி ஜமால் மற்றும் தேசிய கல்லூரி ஹீரோக்களோடும் வண்டி, வாழைத்தோப்பும் தென்னந்தோப்பும் வரப்பு கட்டி வகிடெடுத்த தண்டவாளப் பாதையில் இளம் வெய்யிலில் பளபளக்க தொண்டைகட்டின குரலில் இறங்கிப்போன இளசுகளை நினைத்து  புலம்பும்.

சீட்டாட்ட ஸ்வாரஸ்யத்தில் டவுன் ஸ்டேஷனில் இறங்காமல்," எல்லாம் ஜங்ஷன் போய்ட்டு திரும்பி பஸ்ல வந்துக்கலாம் " என்று விட்ட காசைத் திரும்பி எடுக்க விரும்பும் கும்பலோடு, வெற்றிலையும் புகையிலையும் வாயில் குளம்கட்டி நிற்க ," ஏழ்ன் யா மூழைப் போட்டீர் " என்று பக்கத்து ஆளின் தொடைதட்டித் தெரிவித்த கோபத்தில் தெளித்த சிவப்புத் துளிகள் சலவை வேஷ்டியில் மாட்ர்ன் ஆர்ட் போலச் சிதறிவிழ அங்கு பின் நடக்கும் கலவர வார்த்தைகளை எழுதினால் சென்சார் பிடித்துக்கொள்ளும். 

மற்ற கல்லூரி மாணவர்கள் போலல்லாது, எஸ். ஐ. டி என்றழைக்கப்பட்ட சேஷசாயீ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள் மிகவும் அடக்கமானவர்கள். 

நெற்றியில் நாமமோ விபூதியோ துலங்க, சங்கரரையும் ராமானுஜரையும் ப்ரத்யட்சமாக்கிவிட்டாற்போன்ற தோற்றத்துடன் அந்தத் தோற்றத்திற்கு சிறிதும் சம்பந்தமற்ற டீ ஸ்கொயர் என்ற திரேதாயுகத்து வரை உபகரணத்தை ஏசு நாதரின் சிலுவை போல சுமந்துகொண்டு அரியமங்கலம் ஹால்ட் ஸ்டேஷனில் அவர்கள் இறங்கத் தயாராவார்கள். 

இதற்குள், வண்டிக்குள் சம்பள நிர்ணயம் பற்றியோ, வர வேண்டிய நிலுவைத் தொகை குறித்தோ அக்கவுண்ட்ஸ் மற்றும் பெர்சனல் ப்ராஞ்ச் விற்பன்னர்களுக்குள் நடக்கும் பட்டிமன்றத்தில் அடிபட்டுக் கொண்டிருக்கும் ஊழியர் நலனும் ப்ரிட்டிஷ் ஆங்கிலமும். 

எஸ்.ஐ. டீயின் தேவமைந்தர்கள் துரிதமாய் இறங்கிப்போக, அரியமங்கலத்தின் அரிய பொருளான தண்ணீருக்கு ஒரே மூலமான ஒம்போதேகால் வண்டியின் எஞ்சினை, இந்தியாவின் பிரதமரே வந்து உடனே எடு என்று சொன்னாலும் வண்டியைக் கிளப்பமாட்டார்கள் ஆங்கிலோ இந்திய ட்ரைவர்கள்.

 அவர்கள் ஆண்டாளின் வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல்கள்.

 அரியமங்கலத்தின் டிஸ்டிலரீஸ் வெளித்தள்ளூம் சாராய வாடையை மாஸ்க் இல்லாமல் தாங்கிக்கொண்டு தண்ணீருக்கும் தவிக்கும் அப்பகுதி குடிசை வாழ் மக்கள் எல்லோரின் குடம் நிறைய அதனால் அவர்கள் மனம் நிறைய அதன்பின்தான் அங்கிருந்து கிளம்பும் ஒம்பதேகால் வண்டி.

இனி பொன்மலை நாயகர்கள் இறங்கி ஆஞ்சனேயரையும் பிள்ளையாரையும் வணங்கி அந்த மண்ணின் காற்றில் வேஷ்டி படபடக்க கருங்கல் கோட்டைக்குள் நுழைய ஆயத்தமாவார்கள். 

இனி வண்டியில் நிறைய இடமிருக்கும். எதிர்த்த பெஞ்சில் காலை நீட்டிக் கொள்ளலாம்.

 ஆனால் திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் என்ற சரித்திர ஸ்டேஷனில் மாத்திரம் இந்த வண்டியை நிறுத்த உடனடியாக ப்ளாட்ஃபார்ம் இருக்காது. 

எனவே, டைம் டேபிளில் இல்லாத  முடுக்குப் பட்டியில் பெருமூச்சு
விட்டுக்கொண்டு காத்திருக்கும் ஒம்பதேகால் வண்டி.  

இது ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்களுக்கு நடை தூரத்தைக் குறைப்பதால் அவர்களுக்கு வசதியாகப் போகும். 

அதன்பின்,  இந்தப் ப்ரயாணத்தின் கடைசிப் பயணிகள் கீழே உட்காரப் போட்டுக்கொண்ட அங்கவஸ்த்திரத்தையும் வெற்றிலைச் செல்லத்தையும் எடுத்து பையில் வைத்துக்கொள்ள கடன் கொடுத்தவருக்கு ஹிந்து பேப்பரைத் திரும்ப வாங்க, எக்ஸாம் ஹாலில் மணி அடித்தபின் ஆன்சர் பேப்பரைப் பிடுங்கும் அவலம் நேரும். 

நேஷனல் கல்லூரி மாணவர்கள் ஜங்ஷனையும் தாண்டி வண்டி யார்டுக்குப் போனபின்தான் இறங்கிக்கொள்வார்கள். 

ஆனால், சீட்டுக் கச்சேரி மாத்திரம், முடியவே கூடாத ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரத் தோடி மாதிரி அந்த இடத்திலும் முடிந்துவிடக் கூடாது என்ற பிடிவாத ரசிகர்களை ரயில்வே ஊழியர்கள் அடித்துதான் இறக்குவார்கள். 

இப்படி ஒம்பதேகால் வண்டியின் எக்ஸ்டெண்டட் பயணம் ஒரு தற்காலிக சோகத்தில் நிற்பது நினைவின் தடங்களில் எந்த சிக்னல் தடையும் இல்லாமல் இப்போது எனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.

24 comments:

ஸ்ரீராம். said...

மிக ரசனையான எழுத்து.  ரொம்ப அனுபவித்து எழுதி இருக்கிறார்.  நிச்சயம் அவர் அந்த ரயிலில் நித்தம் பயணம் செய்தவராயிருக்க வேண்டும்.

ஸ்ரீராம். said...

ஒவ்வொரு ரயிலுக்கு ஒவ்வொரு பெயர்.  திருச்சியில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து இந்த ரயிலில் சென்று வந்த அனைவரும் இதை அனுபவித்திருப்பார்கள் (நான் அல்ல!)  எனவே அவர்கள் இந்தப் பதிவை மிக மிக் ரசிப்பார்கள்.  நல்ல பகிர்வு அம்மா.

ஸ்ரீராம். said...

என்னால் ரயில் பதிவை இப்படி சுவாரஸ்யமாக அமைக்க முடியவில்லையே என்கிற ஏக்கமும் வருகிறது!  கொஞ்சம் புத்தகம், நிறைய பயம், சங்கரர் பிரத்யட்சமானது போல,  தேவமைந்தர்கள், சீட்டாட்டம், ராஜரத்தினம் தோடி என்று அடித்து ஆடியிருக்கிறார்.  பாராட்ட வேண்டும் அவரை.

Jayakumar Chandrasekaran said...

விவரணம் அருமையாக இருக்கிறது. கூடவே பயணித்த உணர்வும் ஏற்படுகிறது. சுஜாதா இந்த வண்டியைப் பற்றி பல கதைகளில் எழுதியிருப்பார்.

Jayakumar

இணைய திண்ணை said...

அதி அற்புதமான வர்ணனை. தொடர் வண்டியில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து, ரசித்து, வார்த்தைகளில் வடித்திருக்கிறார்.

ஸ்ரீராம் அவர்கள் சொன்னது போல அந்த தொடர் வண்டியில் பயணித்தவர்கள் எனில் இதை படித்தவுடன் மானசீகமாக மீண்டும் அந்நாட்களுக்கு சென்று வருவார்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

மாதேவி said...

அன்றைய நாட்களின் ரயில் வண்டி பிரயாணத்தை மிகவும் சுவாரசியமாக தந்துள்ளார்.

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா என்ன அழகான ரசனையான எழுத்து. எங்கள் ஊரின் 7.40, மாலை 6.40 பஸ் பிதுங்கி வழியும் பஸ் பயணத்தைத் தவிர (அதைப் பற்றி எழுதிய பதிவு பாதியில் இருக்கிறது!!!) பஸ் பயணத்தைத் தவிர இப்படியான ரயில் பயண அனுபவம் இல்லை என்றாலும் அனுபவித்து வாசித்தேன்.

கலக்கல். அருமை அருமை

சுஜாதா இதைப் பற்றி இந்தவண்டி பற்றிதான் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். அதுவும் கதைகளில்!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பல வரிகள் இடையில் வார்த்தைகள் பலதையும் ரசித்தேன் அம்மா.

சீட்டாட்டம், கடைசியில் ராஜரத்தினம்பிள்ளை தோடி என்று வாவ்!!! அழகான உவமைகளையும் சேர்த்து அவரும் ரசித்து ரசித்து எழுதியிருக்கிறார் இப்போது அவை எல்லாம் மிஸ் ஆவதால்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா இப்பவும் ரயிலில் பஸ்ஸில் வேலைக்கு அல்லது கல்லூரி செல்வோர் குளித்துவிட்டு வந்து அவசரமாகப் பிடித்து ஆற அமர் உட்கார்ந்து (சில சமயம் உட்கார ரயில் சினேகிதிகள் இடம் பிடித்து வைத்திருப்பார்கல்) தலை கட்டிக் கொள்ளுதல் டிபன் சாப்பிடுதல் எல்லாம் தாம்பரம் டு பீச் ரயிலில் பார்க்கலாம். பெண்களின் அரட்டை, பூ விற்பவர்கள் சாப்பாடு விற்பவர்கள், மிட்டாய்கள் கர்சீஃப் ஹெர்க்ளிப் என்று செமையா இருக்கும். தாம்பரம் டு பீச் ரயில் அது நான் அவ்வப்போதுதான் பயணித்திருக்கிறென் ஆனால் தினமும் பயணித்தவர்கள் இருந்தால் எழுதுபவர்கள் இருந்தால் அவர்களும் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன் ஆனால் சென்னையில் இப்படி ரயில் பயணத்தை ரசிப்பவர்கள் உண்டோ?!!! வேர்வையில் பரபரப்பில்...அந்தக் காலகட்டத்தில் பயணித்தவர்கள் எழுதினால் நன்றாக இருக்கும்

ரசித்து வாசித்தேன் அம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் வாழவேண்டும்.
உண்மைதான். எத்தனை அனுபவித்து எழுதி இருக்கிறார்.

சுஜாதா சாரும் தன் ஸ்ரீரங்க நாட்களில் இந்த ரயில் ,
இந்தக் கல்லீரி, காவேரி ,தன் பாட்டி எல்லோரையும் சொல்லி இருப்பார்.

வல்லிசிம்ஹன் said...

ஒவ்வொரு ரயிலுக்கு ஒவ்வொரு பெயர். திருச்சியில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து இந்த ரயிலில் சென்று வந்த அனைவரும் இதை அனுபவித்திருப்பார்கள்.''என்னால் ரயில் பதிவை இப்படி சுவாரஸ்யமாக அமைக்க முடியவில்லையே என்கிற ஏக்கமும் வருகிறது! ''

அன்பின் ஸ்ரீராம், உங்கள் காசிப் பயணத்தை நாங்கள் ரசித்தோமே.
இந்தப் பதிவு ஆத்ம அனுபவத்தைச் சொல்கிறது.

இதை எழுதியவரின் அந்த நாட்கள் மனதை ஒட்டி நீங்காமல் இருந்திருக்க வேண்டும்.
பயணம் அதுவும் தினம் அதை செய்த அனுபவம்
எல்லாமே இனிமைதான்.
நானும் தம்பிகளும் பள்ளிக்குச் சென்ற பாதை அப்படியே
என் மனதில்.
உங்களுக்கு இந்த பதிவு பிடித்தது மிக மகிழ்ச்சி மா.
அற்புத எழுத்து.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார் சார்,
வணக்கம்

மிக அருமையாக எழுதி இருக்கிறார் இல்லையா,. நானும் ரசித்தேன்.
நமக்குள்ளும் எத்தனையோ
பயணங்கள் இருக்கின்றன. எல்லோரும் எழுதலாம்.
மிக நன்டி மா.

வல்லிசிம்ஹன் said...

''அதி அற்புதமான வர்ணனை. தொடர் வண்டியில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து, ரசித்து, வார்த்தைகளில் வடித்திருக்கிறார்.

ஸ்ரீராம் அவர்கள் சொன்னது போல அந்த தொடர் வண்டியில் பயணித்தவர்கள் எனில் இதை படித்தவுடன் மானசீகமாக மீண்டும் அந்நாட்களுக்கு சென்று வருவார்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.''

அன்பின் இணைய திண்ணை,
வணக்கம். வரவுக்கு நன்றி.

மிக இயல்பாக எழுதி இருக்கிறார் திரு.ரமணி.
யாரென்று தெரியவில்லை.

கல்லூரி நாட்களும், பள்ளிக்கு சென்ற நாட்களும் பஸ் பாஸ்
வாங்கிய நாட்களும் மனதில் நிழலாடுகின்றன.

வல்லிசிம்ஹன் said...

அன்றைய நாட்களின் ரயில் வண்டி பிரயாணத்தை மிகவும் சுவாரசியமாக தந்துள்ளார்.''

அன்பின் மாதேவி,

ஆமாம் மா. நமக்கும் நினைவுகள் உண்டு. இது போல அழகாக
வடிக்கத் தெரியவில்லை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாரங்கன்,
என்றும் நலமுடன் இருங்கள் அம்மா.

ஆஹா என்ன அழகான ரசனையான எழுத்து. எங்கள் ஊரின் 7.40, மாலை 6.40 பஸ் பிதுங்கி வழியும் பஸ் பயணத்தைத் தவிர (அதைப் பற்றி எழுதிய பதிவு பாதியில் இருக்கிறது!!!) பஸ் பயணத்தைத் தவிர இப்படியான ரயில் பயண அனுபவம் இல்லை என்றாலும் அனுபவித்து வாசித்தேன்.''

அந்தக் கூட்ட நெரிசலை எங்கள் பிள்ளைகளும் அனுபவித்திருக்கிறார்கள்.
உங்கள் கடம்போடு வாழ்வு ரயிலை நான் மிக அனுபவித்தேன் மா.

வல்லிசிம்ஹன் said...

@கீதா ரங்கன்,

சீட்டாட்டம், கடைசியில் ராஜரத்தினம்பிள்ளை தோடி என்று வாவ்!!! அழகான உவமைகளையும் சேர்த்து அவரும் ரசித்து ரசித்து எழுதியிருக்கிறார் இப்போது அவை எல்லாம் மிஸ் ஆவதால்.''

அதே தான் மா.

''கட்டிக் கொள்ளுதல் டிபன் சாப்பிடுதல் எல்லாம் தாம்பரம் டு பீச் ரயிலில் பார்க்கலாம். பெண்களின் அரட்டை, பூ விற்பவர்கள் சாப்பாடு விற்பவர்கள், மிட்டாய்கள் கர்சீஃப் ஹெர்க்ளிப் என்று செமையா இருக்கும். தாம்பரம் டு பீச் ரயில் அது நான் அவ்வப்போதுதான் பயணித்திருக்கிறென் ஆனால் தினமும் பயணித்தவர்கள் இருந்தால் எழுதுபவர்கள் இருந்தால் அவர்களும் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன் ஆனால் சென்னையில் இப்படி ரயில் பயணத்தை ரசிப்பவர்கள் உண்டோ?!!! வேர்வையில் பரபரப்பில்...அந்தக் காலகட்டத்தில் பயணித்தவர்கள் எழுதினால் நன்றாக இருக்கும்''

இதே ஒரு பதிவாகி விட்டதே. அன்பின் கீதாமா,
நானும் பயணம் செய்த சில நேரங்களில் இந்த நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறேன்.
விற்பவர்கள் ஒரு கோச்சிலிருந்து அடுத்த கோச்சுக்குத்
தாவுவதும் அருமையாக இருக்கும்.
ஒரு அதிசய உலகம் அங்கே இயங்கும்.
உங்கள் ரசனைக்கு வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

ரயில் பயணத்தை அப்படியே கண் முன் கொண்டு வந்து விட்டார்.

பயணிகளை உன்னிப்பாக கவனித்து ரசித்து எழுதி இருக்கிறார்.

சார் "மொழியல்" என்ற படிப்பு சிதம்பரம் அண்ணாமலையில் படித்தார்கள், தினம் காலை ரயிலில் பயணம் மாயவரத்திலிருந்து. அப்போது வந்து சொல்வார்கள் தினம் தொடர் பயணம் செய்பவர்களை பற்றி .
ரசித்து படித்தேன்.

Geetha Sambasivam said...

நான் வேலைக்குப் போன காலத்தின் ஞாபகங்களை நினைவில் கொண்டு வந்தது ஒன்பதே கால் வண்டியில் போனால் பத்து மணிக்கு பேசின் பிரிட்ஜில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து தண்டவாளங்களையும் அவ்வப்போது நிறுத்தி வைத்திருக்கும் கல்கத்தா விரைவு வண்டிகளையும் கடந்து பேசின் பிரிட்ஜுக்கு வெளியே வந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் தண்டையார்ப் பேட்டைப் பேருந்து பிடித்துக் காவல் நிலையம் வாசலில் எதிரே இருந்த (இப்போவும் இருக்கு) அலுவலகத்திற்குச் செல்வதற்காக இறங்கிச் செல்வேன். அநேகமாகப் பத்தரைக்கு முன்/பின்னாக இருக்கும். அதே போல் மாலை ஐந்து மணிக்குப் பேருந்து பிடித்து பேசின் பிர்ட்ஜ் ஸ்டேஷனில் ரயில் பிடிக்க இறங்கி அங்கே இருந்த பின் வாசல் வழியே ஸ்டேஷனுக்குள் புகுந்து முதல் நடைமேடைக்கு வரும் அரக்கோணம்/திருவள்ளூர் ரயிலைப் பிடித்து வீடு போய்ச் சேர ஆறே முக்கால் ஆகிடும். அப்போல்லாம் கரி இஞ்சின்கள் தான். ஒன்றிரண்டு ஆங்காங்கே அதிசயமாக டீசல் வரும் எப்போவானும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.
தினம் ரயிலில் சென்று வருவாரா சார்!!!
அவ்வளவு பக்கமா சிதம்பரம்?

உண்மையில் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
அதுவும் சார் சொல்லும்போது
கட்டாயம் கேட்க நன்றாக இருந்திருக்கும்.

இங்கே நீங்கள் பகிர்ந்தது ரொம்ப மகிழ்ச்சிமா.

வல்லிசிம்ஹன் said...

@ Geetha Sambasivam,

நான் வேலைக்குப் போன காலத்தின் ஞாபகங்களை நினைவில் கொண்டு வந்தது ஒன்பதே கால் வண்டியில் போனால் பத்து மணிக்கு பேசின் பிரிட்ஜில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து தண்டவாளங்களையும் அவ்வப்போது நிறுத்தி வைத்திருக்கும் கல்கத்தா விரைவு வண்டிகளையும் கடந்து பேசின் பிரிட்ஜுக்கு வெளியே வந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் தண்டையார்ப் பேட்டைப் பேருந்து பிடித்துக் காவல் நிலையம் வாசலில் எதிரே இருந்த (இப்போவும் இருக்கு) அலுவலகத்திற்குச் செல்வதற்காக இறங்கிச் செல்வேன்.''


அன்பின் கீதாமா,
எத்தனை சிரமம் மா.
எப்படித்தான் இவ்வளவு தைரியமாக
செயல் பட்டீர்களோ !!!

அப்போது உடம்பு நாம சொல்றபடி கேட்டது.
உங்கள் தினசரி உழைப்பை நினைக்கும் போது
திகைப்பாக இருக்கிறது.

"ரயிலைப் பிடித்து வீடு போய்ச் சேர ஆறே முக்கால் ஆகிடும். அப்போல்லாம் கரி இஞ்சின்கள் தான். ஒன்றிரண்டு ஆங்காங்கே அதிசயமாக டீசல் வரும் எப்போவானும்."

எனக்கும் கரிப்புகை வண்டிகள் மிகப் பிடிக்கும். டீசல் எஞ்சின் வந்த பிறகு எல்லாமே மெக்கானிக்கலாகவும், சத்தம் நிறைந்ததாகவும் தோன்றும்.
உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டது மிக மிக அருமை அன்பு கீதாமா.
நன்றி. என்றும் நலமுடன் இருங்கள்.
வெங்கட் நாகராஜ் said...

இரயில் பயணம் எப்போதும் பிடித்தமானது. அதையும் இப்படி அனுபவித்து அனுபவித்து எழுதி இருப்பதும் சிறப்பு. மிகவும் ரசித்தேன்.

நெல்லைத் தமிழன் said...

இரயில் பயணம் எப்போதுமே அனுபவிக்கமுடியும். அதனை மிகுந்த ரசனையோடு எழுதியிருக்கீங்க. அந்தக் காலக்கட்டத்துக்கே உங்கள் எழுத்து அழைத்துச்சென்றுவிட்டது. பாராட்டுகள் வல்லிம்மா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள் மா.
மிக ரசனையான ஃபார்வர்ட் இது. நானும் மிகவும் ரசித்தேன்.
நீங்கள் ஸ்ரீரங்க வாசி. இன்னும் ரசித்திருப்பீர்கள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,

என்றும் நலமுடன் இருங்கள்.
தங்கை அனுப்பிய ஃபார்வர்ட் மா. ரசனை மிகுந்தவர்கள்
அவர்களின் எழுத்தினால் நம்மையும் அந்த உலகத்துக்கு அழைத்துப்
போகீறார்கள்.