Blog Archive

Tuesday, January 04, 2022

1978 திருமலை சென்னை

வல்லிசிம்ஹன்



Saturday, April 27, 2019
1978 இல் ஒரு திருமலா பயணம்.
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும் .

 1978 இல் ஒரு திருமலா பயணம்.
++++++++++++++++++++++++++++++++++++++1977இல் சிங்கத்தின் அப்பா
ஒரு வைகாசி மாதம் இறைவனடி சேர்ந்தார்.. ஒரு வருடம் மாதா மாதம் வைதீகக்
காரியங்கள் முடிந்த பிறகு
திருப்பதி செல்வது வழக்கம்.
பாட்டி சொல்லிவிட்டார்.  குழந்தைகள் புதிதாக வேறு வேறு பள்ளிகளில் சேர்ந்திருந்ததால்
உடனே விடுமுறை எடுக்கத் தயக்கமாக இருந்தது.

மாமியார் இரண்டு நாட்களுக்குத் தான் பார்த்துக் கொள்வதாகவும்
நானும் இவரும் நாத்தனார் கல்யாணி குடும்பத்துடன்
அவர்கள் பெரிய வண்டியில் திருப்பதி போய் வரலாம் என்றும் சொன்னார்.

கல்யாணியின் கணவர் இன்னோரு மகன் மாதிரி தான் நடந்து கொள்வார்.

மிக மிக இதமான மனிதர்.
அவர்கள் ஐவரும்,நாங்கள் இருவருமாகக் கிளம்பிவிட்டோம்.
ஒரு நல்ல காலை நேரம்.
இப்போது இருக்கும் கனத்த சரீரம் அப்போது இல்லை இருவருக்கும்

அதனால் சிங்கம் காரை ஓட்ட ,அத்திம்பேரும் ,அவர்களின்
மூத்தமகனும் முன்னால் உட்கார, கல்யாணி,நான்,அவர்களது பெண், இளையமகன்
பின்னால் உட்கார பத்தரை மணி அளவில் கீழ்த் திருப்பதிக்கு வந்து விட்டோம்.

அப்போதெல்லாம் இப்போதிருக்கும் கூட்டம் தள்ளு முள்ளு இருந்ததாக நினைவில்லை.
அலர்மேல்மங்கைத்தாயாரை மனமார வழிபட்டு

அங்கேயே  ஒரு மரத்தடியில் கொண்டு போயிருந்த உணவைப்
பகிர்ந்து உண்டுவிட்டு,மதியம் மூன்று மணி அளவில்

மலையேறத் துவங்கினோம்.
ஒன்றரை மணி நேரம் கழித்து ஏற்கனவே  பதிவு செய்திருந்த
மூன்று அறைகள் கொண்ட  காட்டேஜ் ஒன்றில்
இறங்கிக் கொண்டோம். எனக்கு அங்கப் பிரதட்சிண வேண்டுதல் இருந்ததால்

சீக்கிரம் உறங்கத் தயாரானேன்.. தானும் துணைக்கு வருவதாகக் கல்யாணி சொல்லவே
எட்டு மணி அளவில் வுட்லாண்ட்ஸ்  உணவு விடுதியில்
சாப்பாட்டை  முடித்துக் கொண்டோம். நல்ல சாப்பாடு கிடைத்த காலம்.

குளிர்காற்று சில்லென்று வீச விடியும் காலம், அது. 
திருமலை தெய்வீகக் காட்சி கொடுக்கும்.
இப்போது மக்கள் வசதிக்காக பலவிதமாகச் சாலைகள்
பலவித வசதி கொண்ட விடுதிக் கட்டடங்கள் அப்போது இல்லை.
உயர்ந்த மரங்கள் வளைந்து செல்லும் பாதைகள்

அமைதியாகச் செல்லும் மக்கள் வரிசை எல்லாமே என் மனதுக்கு
இதமாக இருந்த நினைவு இருக்கிறது.
அப்புறம் திருமலைக்குச் சென்ற வருடங்களில் கூட ஸ்வெட்டரோ
சால்வையோ எடுத்துச் சென்ற ஞாபகம்.

விடுதிக்கு வந்து உறங்கி,  ஒரு மணி அளவில்,குளித்துவிட்டு
கோவில் வாசலுக்குச் சென்றுவிட்டோம்.
அப்போது  கோபுரவாசலிலிருந்தே அங்கப் பிரதட்சிணம் செய்பவர்கள்
நேரே உள்ளே போய்விடலாம்.
அங்கப் பிரதட்சணம் செய்யும் போது புடவை விலகாத வண்ணம்
பார்த்துக் கொண்டு ,முனை வந்தால் சரியாகத் திருப்பிவிட்டு
கோவிந்தா கோஷங்களோடு பெருமாள் கருணையால்
நல்லபடி பூர்த்தி செய்து சன்னிதி வாசலுக்கு துவஜஸ்தம்பம் அருகிலிருந்து
வரிசையில் சேர்ந்து கொண்டோம்.

அந்தத் தரிசனத்தை என்னவென்று சொல்வேன்.

அங்கப்பிரதட்சணம் செய்தவர்களுக்கான்  தனி வரிசை.*
(இப்பொது அங்கப் பிரதட்சணமே கிடையாது என்று சொன்னார்கள்.
தங்கை சென்று வந்தாள்.)
குளிர் காற்று,புடவையைக் காயவைத்த அதிசயம்.
மனம் முழுவதும் கோவிந்த நாமம்.கண்முன்னே நீண்ட நெடிய தங்க மய ஜோதியாக
கோவிந்தன்.
என்ன புண்ணியம் செய்தேன் என்று என்னை அழைத்தாய் கோவிந்தா
என்று அரற்றியவாறு கூப்பிய கைகளுடன் ஜருகண்டி சொல்லாத தள்ளாத
மனிதர்களுக்கு நடுவில் அடுத்து வருபவர்களுக்கும்
நான் அருள்வேண்டும் என்று அவன் சொல்வது போல ஒரு தோற்றம்.
கல்யாணிக்கும் அதே நிலை. முடக்குவாதம் ஆரம்ப நிலை அவருக்கு.

அதை அவன் சரி செய்துவிடுவான் என்று சொன்னபடியே சன்னிதியைச் சுற்றி வெளிப்பிரகாரத்தில் கிடைத்த சர்க்கரைப் பொங்கலையும்
புளியோதரயையும் அந்த  அதிகாலை மூன்று மணிக்கு
மனதினிக்க சாப்பிட்டது அமிர்தமான நினைவு.
 கால் நடையாகவே விடுதிக்கு வந்து புடவை மாற்றி உறங்க நினைத்தேன்.
பெருமாளைத் தரிசித்த நிறைவு எங்களைத் தூங்க விடவில்லை.
மீண்டும் திருமண உத்சவத்துக்குப் போக வேண்டும் என்று நினைப்பில்
வெளியே வந்து காப்பி விற்றவரிடம் எல்லோருக்கும் காப்பி வாங்கிக் கொண்டு
எல்லோரையும் எழுப்பினோம்.
உத்சவத்துக்கு ஏற்பாடு செய்திருந்த கல்யாணி ,சின்னி அத்திம்பேர் இருவரும்
வைணவ உடையாக முறையாகப் பஞ்சகச்சம், ஒன்பது கஜப் புடவை என்று
உடுத்திக் கொள்ள,மற்ற அனைவரும் புதிய உடைகளை அணிந்து
கொண்டு  காலை உணவை  முடித்து மீண்டும் கோவிலுக்குப் புறப்பட்டோம்.
அந்த முறையும் நேராகக் கல்யாண மண்டபத்துக்குப் போய்விட்டோம்.

தம்பதிகள் சங்கல்பம் செய்து கொள்ள இரண்டு மணி நேரம்.
தாயாரும் பெருமாளும் ஆனந்த தரிசனம் கொடுத்தார்கள்.

தெய்வத் திருமணம் முடிந்த கையோடு மீண்டும் ஸ்ரீனிவாச தரிசனம்..
 மீண்டும் எங்களை அழைத்துத் தரிசனம் அருள்வாய்
என்று மனதார வேண்டிக் கொண்டு  பனிரண்டு பெரிய லட்டுகள்,
வடைகள் எல்லாம் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு,
தயிர்சாதம், புளியோதரை என்று கூவிகூவிக் கொடுத்ததை வாங்கி அங்கேயே மண்டபத்தில்
உட்கார்ந்து சாப்பிட்டுக்
கொண்டுபோயிருந்த பாட்டில்கள் நிறைய திருமலைத் தீர்த்தத்தை நிரப்பிக்
கொண்டு வண்டி ஏறினோம்.
நானும் சிங்கமும் மீண்டும் மீண்டும் கல்யாணிக்கும் அத்திம்பேருக்கும்
 நன்றி சொல்லிக் கொண்டே வந்தோம்.


6 comments:

வெங்கட் நாகராஜ் said...

திவ்யமான தரிசனம்.... நினைவுகள் இனிமை. திருப்பதிக்கு நான் சென்று முப்பத்தி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.... என்றைக்கு அழைப்பானோ... காத்திருக்கிறேன் நான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
இதைப பப்ளிஷ் செய்துவிட்டேனா. எழுத்துப் பிழை சரி செய்து கொண்டிருந்தேன் மா.

திருமலைக்கு முன்பதிவு செய்து கொள்ளுங்கள் கட்டாயம் அழைப்பான்.

ஆறு மாதங்களில் செல்லலாம் அப்பா.
நலமாக இருங்கள். கவலை வேண்டாம்.

நானும் அவரைப் பார்த்து 11 வருடங்கள் ஆகின்றன.

கோமதி அரசு said...

திருமலை பயண அனுபவம் மிக அருமை. மலரும் நினைவுகள் அருமை. கூட்டமில்லாமல் தரிசனம் செய்தீர்கள் என்று படிக்கும் போது ஆனந்தமாக இருக்கிறது.


நானும் பல வருடம் ஆச்சு மலையப்பனை தரிசனம் செய்து.
காணொளி மூலம் அருமையான தரிசனம்.

நன்றி அக்கா.

Geetha Sambasivam said...

இப்போத்தான் 2,3 வருடங்கள் முன்னர் மூத்த குடிமக்களுக்கான சலுகையில் தரிசனம் கிடைத்தது. நல்ல தரிசனம். சென்னையில் இருக்கையில் அடிக்கடி போவோம். இப்போல்லாம் முன்னை மாதிரிப் போக முடியாது. முதல் முதல் போனது அண்ணா/தம்பி உபநயனத்துக்காக. நல்ல கூட்டம் அப்போ! கஷ்டப்பட்டு தரிசனம் கிடைச்சாலும் அங்கே கிடைத்த பிரசாதங்கள் கஷ்டத்தை மறக்கடித்தன.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
அறியாமல் உணராமல் செய்யும் காரியங்கள்
என்ற வரிசையில் இந்தப் பதிவும் வந்துவிட்டது.

ஆனால் அவன் அருள் என்றே நம்புகிறேன்/

கோடி பாப விமோசனம் தரும் ஸ்ரீ கோவிந்த தரிசனம்.
நாங்கள் முதன் முதல் அவனைத் தரிசிக்கச் சென்ற போது ,
1966இல் கோவில் வாசலிலேயே
இறங்கி உள்ளே செல்லும்படி
தரிசனம் கிடைத்தது.
அதெல்லாம் ஒரு காலம். இப்போது எல்லாமே
வியாபாரம் ஆகிறது.
இருந்தாலும் அவன் நம் கோவிந்தன்.
நலமுடன் இருங்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பா.

அப்போது எல்லாம் மாறி இருக்குமே!!
வயதானால் இதுவும் ஒரு நன்மை:)

கோவிந்தா கோவிந்தா.
நன்றி அம்மா.