வல்லிசிம்ஹன் https://youtu.be/Z4IpRksAGuE
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
எங்கள் ப்ளாகில் ,
தாழையாம் பூ முடிச்சு பாடலைக் கேட்டதும்,
1959 ஆம் வருடத்துக்கே மனம்
போய் விட்டது.
மதுரை அருகே திருமங்கலம் என்று ஊரில் இருந்தோம்.
கிராமம் இல்லாத டவுன் என்றும் சொல்ல முடியாத ஊர்.
12 மைல் தூரத்தில் தாத்தா வீடு. டிவிஎஸ்சில்
பஸ் விடும் வரை எந்தப் போக்குவரத்து என்று தெரியாது.
பஸ்கள் சுத்தமாகத்தான் இருக்கும். பிறகு ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் என்று அறிமுகமானது
1964லில் என்று நினைக்கிறேன்.
அரைப் பரீட்சை முடிந்ததும் அடுத்த நாள்
பாட்டி தாத்தாவைப் பார்க்க அழைத்துப் போய் விடுவார் சித்தப்பா.
இப்போது நம் கோமதி அரசு (மதுரையில்)இருக்கும்
இடம் அப்போது வெறும் பழங்கா நத்தமாக இருந்தது.
சௌடாம்பிகா லாரி சர்வீஸ் பக்கத்தில் கோகுலம் காலனி.
எண்ணி ஒன்பது தனி வீடுகள்.
தாத்தா வீடு வயல் வெளி ஓரத்தில் இருந்தது.
அப்போது ஒரு தடவை ,அந்த வயல்களில் அறுவடை முடிந்து
புதிதாக ஒரு டெண்ட் கொட்டாய் வந்திருந்தது.
நாங்கள் அங்கிருந்த மூன்று வாரங்களில்
4 படங்கள் மாறி விட்டன.
அதில் ஒரு படம் தான் இந்தப் பதிவில் உள்ள ராஜா ராணி படம்.
கேட்டுக் கேட்டு வசனம் எல்லாம்
மனப் பாடம் ஆகிவிடும்:)
தாத்தா, பாட்டி தூங்கும் நேரம் எங்களுக்கு அந்த அறைதான்
விளையாடும் நேரம்.
நானும் தம்பியும் அந்த ஜன்னலில்
சேர்ந்து உட்கார்ந்து தூரத்தில் தெரியும் ஆனைமலைகளையும்,
பச்சையும் கறுப்புமாகத் தெரியும் மரங்களையும் பார்த்துக் கொண்டிருப்போம்.
நடுவில் ரயில் வண்டி போவதும் மறைந்து மறைந்து தெரியும்.
இனிமையான நினைவுகளை கொண்டு வரும் பழைய பாடல்களுக்கு வந்தனங்கள்.
16 comments:
வீடுகள், நெரிசல் குறைந்த பழைய ப.நாத்தத்தை நினைத்துப் பார்க்க முடிகிறது. மெல்லத்தான் நெரிசலானது அந்த இடம்!
இனிமையான நினைவுகள். டிக்கெட் கொடுப்பதற்கு ஒரு பாடலா? சுவாரஸ்யம்தான். மழை பெய்யாமல் தெளிவாக இருக்கிறது படம்!
என் எஸ் கே யின் சிரிப்பு பாடல் இதில்தானா? ஓஹோ... பூனை கண்ணை மூடினாள் பாடல் வரிகள் கொண்ட இன்னொரு பாடல் இருக்கிறது.. அதுவோ என்று பார்த்தேன். இல்லை, இது வேறு.
அன்பு ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம்.
நலமுடன் இருங்கள்.
2019 இல் இதே பழங்கானத்தம் ஜிஆர்டி ஹோட்டலில்
தங்கினோம்.
நம் கோமதியைத் தான் சந்திக்க முடியவில்லை.
அன்றே திரு நெல்வேலி சென்று விட்டோம்
ஊர் அடையாளமே தெரியவில்லை.
60 வருடங்களுக்கு முந்தி பார்த்த ஊர்:)
இன்னும் அப்படியேவா இருக்கும்.
இந்தப் பாட்டைத்தான் தேடினேன்.
முதலும் தெரியாது முடிவும் தெரியாது.
காலி காலி நாற்காலி அஞ்சு ரூபா
மட்டும் நினைவில் இருந்தது:)
ஆமாம் ஸ்ரீராம்.
என் எஸ்கே மதுரம் ஜோடி பாரலல்லா
படம் முழுவதும் வரும்.
எங்கள் குடும்பத்துக்கே பிடித்த இதமான நகைச்சுவை.
மிக நன்றி மா.
பழைய நினைவுகளை அழகாக பகிர்ந்திருக்கிறீர்கள்.
டிவிஎஸ் நகரில் ராஜம் ரோடில் மாமா வீடு பி3 யில் தான் என் கல்யாணம் நடந்தது. :) சத்ய சாயி நகர் அப்போது தான் கொஞ்சமாக விரிவடைந்து கொண்டிருந்தது. எதிரே பழங்காநத்தம் தன் பழமையோடு காட்சி கொடுக்கும். ஆனால் இங்கே இருந்த டூரிங் தியேட்டரோ அதில் வந்த படங்களோ தெரியலை. அதிலும் இந்தப் படம் ராஜா/ராணி பெயர் கேள்விப்பட்டிருக்கேன். படம் பற்றித் தெரியலை.
பழைய நினைவுகள் சுவாரசியம் தான். மதுரையும் சுற்றுப் புறமும் அப்போது இப்போது இருப்பது போல் இருந்திருக்காதுதான். நீங்கள் இருந்த காலத்திற்குப் பிறகு நான் 70 களின் கடைசியில் இருந்த போது கூட இப்போது இருக்கும் நெரிசல் இல்லை. இப்போது அடையாளமே தெரியவில்லை.
உங்களைப் போன்று எனக்கும் எங்கள் பதிவில் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் சொல்லியிருந்த கருத்து என் பழைய நினைவுகளைக் கொண்டுவந்துவிட்டது.
பாடல்கள் எல்லாமே கேட்ட நினைவு இருக்கிறது.
மிக்க நன்றி வல்லிம்மா
துளசிதரன்
அம்மா நீங்கள் சொல்லியிருக்கும் நினைவுகளும் என் ஊர் போல இருக்கிறதே! மலைகள் தென்னை மரங்கள் என்று.
லீவுக்கு நீங்களும் பாட்டி தாத்தா வீடு ஆஹா நாங்களும் லீவிற்கு பாட்டி தாத்தா வீட்டிற்குச் சென்று வருவதுண்டு. அருமையான நாட்கள் அவை. பல சமயங்களில் தோன்றுவதுண்டு ஏன் வயசாயிற்றோ என்று!!!!
மதுரைக்கு நான் அடிக்கடி சென்றதுண்டு. உறவுகள் இருப்பதால். இப்பவும் இருக்கிறார்கள். தூங்கா நகரம். இப்போது தெரியவில்லை.
பாடல்களில் மணிப்புறாவும் சிரிப்பு பாடலும் கேட்டிருக்கிறேன் அம்மா மற்ற இரண்டும் இப்போதுதான் கேட்டேன்.
டிக்கெட் கொடுத்துக் கொண்டே பாடுவது!!! அந்த இடத்தில் கூட பாட்டு எப்படி? படம் பார்த்தால்தான் தெரியும் போல..
கீதா
மணிப்புறா,சிரிப்பு கேட்டிருக்கிறேன். மற்றைய பாடல்கள் இப்பொழுதுதான் கேட்டேன்.
அன்பின் பானுமா,
நலமுடன் இருங்கள்.
பழையவைகளின் அடிப்படையில் புதிய நினைவுகளைப்
பதிவதிலும் ஒரு சந்தோஷம்:)
அன்பின் கீதாமா,
இந்தப் படம் வந்தது 1956 இல்.
அந்த டெண்ட்டுக் கொட்டாய் ஒரு அறுப்பும் போது
வந்துவிட்டுப் போயிருக்கும்.
நான் சொல்லும் காலத்தில் டிவிஎஸ் நகர் கூட இல்லை.
எல்லாம் வயல்வெளி தான்.1964 வாக்கில் தான் இவை எல்லாம்
உருவாகின.
அதுவரை ரெயில்வே க்ராஸிங்கும் ,கோவலன் பொட்டலும் தான்.
அது இறுதி இடம் என்பதால் கண்ணால்
பார்க்கக் கூட பயமாக இருக்கும்.
உங்கள் திருமணம் பற்றிய பதிவு நினைவில் இருக்கிறதுமா.
அன்பின் துளசிதரன்,
நலமுடன் இருங்கள். நீங்கள் 70 களில்
அங்கே இருந்தீர்களா!!!
இப்போது அங்கே ஏதாவது ஒரு இடத்தில் தென்னை தென்படுகிறது.
நாங்கள் இருந்த இடம் இப்போது பெரிய அபார்ட்மெண்டாக
மாறி இருக்கிறது.
தெரிந்தவர் யாருமே இல்லை.
ஆனால் அதுதான் காலத்தின் போக்கு.
மாற்றம் ஒன்று தான் நிலையானது என்று சொல்வார்களே..
மிக மிக நன்றி மா.
அன்பின் கீதா ரங்கன் மா.
நலமுடன் இருங்கள்.
நீங்களும் மதுரை சென்றிருக்கிறீர்களா.
நான் சொல்வது 60 வருடங்களுக்கு முன் சென்ற காலம்.
இப்பொழுது பார்ப்பது மேம்பாலங்களும், புழுதியும் தான்.
தாத்தா வீட்டு ஜன்னலில் இருந்து தெரிந்தது, தூரத்தில்
இருந்த மலைகளும் தோப்புகளும். அப்படியே மனதில் பதிந்த
காட்சி.
காட்சிகள் மாறும் நாடகம் போலே
காலமும் மாறாதோ. பாடலும் நினைவுக்கு வருகிறது.
காலமும் மாறி காட்சிகளும் மாறி இருப்பதே
நிதர்சனம் மா.
டிக்கெட் கொடுத்துப் பாட்டும் பாடி
அந்த நாடகத்தில் நடித்தும் இருப்பார் பத்மினி:)
Post a Comment