Thank you dear Jayanthi Kannan.
எல்லோருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்.
30 வகை சாரதா நவராத்திரி ஸ்பெஷல் உணவுகள்..( நைவேத்தியங்கள் )
சம்பா அவல்
தேவையானவை: அவல் - ஒரு கப், நெய் - 4 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 10, கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன் (பொடித்துக் கொள்ளவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை 5 நிமிடம் நீரில் ஊறவிடவும். வாணலியில் நெய் விட்டு, முந்திரிப் பருப்பை வறுக்கவும். அதே வாணலியில் நெய்யுடன் எண்ணெய் சிறிதளவு கலந்து கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி... ஊற வைத்த அவல், பொடித்த மிளகு, சீரகம், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கினால்... சம்பா அவல் ரெடி!
குறிப்பு: சம்பா அவல் அல்லது வெண் பொங்கலை நவராத்திரி முதல் நாள் நிவேதனமாக செய்யலாம்..
ஆப்பிள் பன்னீர் பாயசம்
தேவையானவை:
ஆப்பிள் - ஒன்று, காய்ச்சி ஆற வைத்த பால் - கால் லிட்டர், சர்க்கரை - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பன்னீர் - சில துளிகள், முந்திரி, திராட்சை - தலா 5, நெய் - சிறிதளவு.
செய்முறை: நெய்யில் முந்திரி, திராட்சையை வறுக்கவும். ஆப்பிளை தோல் சீவி துண்டுகள் செய்து, சிறிதளவு காய்ச்சிய பால் விட்டு நைஸாக அரைக்கவும். மீதமுள்ள பாலை மிதமான தீயில் பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், அரைத்த ஆப்பிள் விழுது சேர்த்து, கொதிவிட்டு இறக்கி. பன்னீர் துளிகள், முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும்.
முக்கூட்டு வடை
தேவையானவை: உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கப், மிளகு, சீரகம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 10, நெய் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊற வைத்து வடிய விட்டு
... மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரவென அரைக்கவும். இதனுடன் நெய் விட்டு நன்கு பிசைந்து வைக்கவும். எண்ணெயை காய வைத்து, பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, வடைகளாக தட்டிப் போட்டு, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
தாளித்த தயிர் சாதம்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, காய்ச்சி ஆற வைத்த பால், தயிர் - தலா அரை கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியை நன்கு குழைய வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் தாளித்து சாதத்துடன் கலந்து... பால், தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்தால்... தாளித்த தயிர் சாதம் ரெடி!
குறிப்பு : நவராத்திரி நான்காவது நாள் ஜெயதுர்க்கைக்கு தயிர் சாத நிவேதனம் சிறந்தது.
நவராத்திரி அமிர்தம் ..
தேவையானவை: ஆப்பிள், மாம்பழம், அத்திப்பழம், சப்போட்டா, வாழைப்பழம் - தலா ஒன்று, முந்திரி, திராட்சை, பாதாம், பேரீச்சை - தலா பத்து, நெய், தேன் - தேவையான அளவு.
செய்முறை: ஆப்பிள், மாம்பழம், சப்போட்டா, அத்திப்பழம் ஆகியவற்றை துண்டுகளாக்கவும். வாழைப்பழத்தை தோலுரித்து துண்டு களாக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவற்றுடன் துண்டுகளாக்கிய பேரீச்சை,துண்டுகளாக்கிய பழ வகைகள், தேன் சேர்த்துக் கலக்கி நிவேதனம் செய்யவும்.
ஃப்ரூட்ஸ் கேசரி
தேவையானவை: ரவை, சர்க்கரை - தலா ஒரு கப், நெய் - அரை கப், கேசரி கலர் பொடி - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய விருப்பமான பழத் துண்டுகள் - அரை கப், முந்திரி, திராட்சை - அலங்கரிக்க தேவையான அளவு.
செய்முறை: ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவையை வறுத்து எடுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, கேசரி கலர் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதி வந்த பின் ரவையை சேர்த்துக் கிளறவும். முக்கால் பங்கு வெந்த பின் சர்க்கரை, நெய், பழ வகைகள் சேர்த்துக் கிளறி இறக்கவும். முந்திரி, திராட்சை அலங்கரித்து பரிமாறவும்.
இலங்கை அல்வா ..
தேவையானவை: தேங்காய்ப் பால், கடலை மாவு - தலா ஒரு கப், மைதா மாவு - அரை கப், சர்க்கரை, நெய் - தலா 2 கப்.
செய்முறை: தேங்காய்ப் பாலுடன் கடலை மாவு, மைதா மாவு, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். அடி கனமான பாத்திரத்தில் இந்தக் கலவையை சேர்த்து, சிறிது நெய் விட்டு, அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கிளறவும். நன்கு வெந்து வரும்போது மீதியுள்ள நெய் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்.
சத்து மாவு புட்டு .
தேவையானவை: சத்து மாவு (நவதானியங்களை வறுத்து, அரைத்த மாவு) - ஒரு கப், தேங்காய் துருவல், சர்க்கரை - தலா கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: அகலமான பாத்திரத்தில் சத்து மாவை போட்டு... உப்பு, எண்ணெய் விட்டு பிசிறி, சிறிதளவு தண்ணீரை மாவின் மீது தெளித்து, பிசைந்து வைக்கவும்.
பிசைந்த மாவை இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இந்த மாவை கட்டிகள் இல்லாமல் கைகளால் உதிர் உதிராக உதிர்த்து, தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்... சத்தான புட்டு ரெடி!
குறிப்பு: இதை நவராத்திரி ஏழாம் நாள் செய்வது விசேஷம்.
சிகிலி .
தேவையானவை: கறுப்பு எள், வெல்லம் - தலா 50 கிராம்.
செய்முறை: கறுப்பு எள்ளை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். பின்பு களைந்து, வடிகட்டி உலர்த்தவும். நன்கு காய்ந்த பின்பு, வாணலியில் சிறிது சிறிதாக போட்டு வெடிக்கவிட்டு வறுக்கவும். ஆறிய பின்பு கையால் தேய்த்து தோலை நீக்கி, புடைத்து சுத்தம் செய்யவும். பிறகு மிக்ஸியில் எள்ளை போட்டு அரைக்கவும். பாதி அரைபட்டவுடன் பொடித்த வெல்லத்தை போட்டு மேலும் ஒரு சுற்று சுற்றி நன்கு ஒருசேர அரைக்கவும். பிறகு உருண்டைகளாக பிடித்து சாப்பிட லாம். அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்.
குறிப்பு: இரும்பு சத்து அதிகம் கொண்டது இந்த சிகிலி!
வெஜ் சோயா சுண்டல்..
தேவையானவை: சோயா பீன்ஸ் - ஒரு கப், கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), தேங்காய் துருவல், கேரட் துருவல் - தலா கால் கப், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோயா பீன்ஸை முதல் நாள் இரவே கழுவி ஊறவிடவும். மறுநாள் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து... வேக வைத்த சோயா, தேங்காய் துருவல், கேரட் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பின் எலுமிச்சைச் சாறு கலந்து கிளறி பரிமாறவும்.
ரங்கோலி சுண்டல் ..
தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, பட்டாணி, வேர்க்கடலை, ராஜ்மா - தலா ஒரு சிறிய கப், கடுகு, பெருங்காயம் - தாளிக்க தேவையான அளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
பொடி செய்வதற்கு: கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: பொடி செய்ய கொடுத்துள்ளவற்றை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். கடலை வகைகளை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறு நாள் வேக வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவிட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து... வேக வைத்த கடலை வகைகள், மிக்ஸியில் அரைத்து வைத்த பொடி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கினால்... கலர்ஃபுல்லான ரங்கோலி சுண்டல் ரெடி!
முத்து சுண்டல் ..
தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை வறுத்து இரண்டு பங்கு வெந்நீர் ஊற்றி ஊறவிடவும். ஒரு மணி நேரம் கழித்து நீரை வடியவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி, அதனுடன் ஊற வைத்த ஜவ்வரிசி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கினால்... முத்து சுண்டல் தயார். ஆறிய பின் எலுமிச்சைச் சாறு பிழிந்து கலந்து பரிமாறவும்.
கேரட் பாசந்தி ..
தேவையானவை: பால் - 4 கப், கேரட் - ஒன்று, பாதாம், முந்திரி - தலா 4, சர்க்கரை - ஒரு கப்.
செய்முறை: கேரட்டை துருவவும். பாதாம், முந்திரியை சிறிதளவு பாலில் ஊற வைத்து கேரட் துருவல் சேர்த்து அரைக்கவும். பாலை அடி கனமான பாத்திரத்தில் விட்டு காய்ச்சவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை சுண்ட விடவும். ஓரங்களில் படியும் ஏடுகளையும் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு சர்க்கரை, அரைத்த கேரட் விழுது சேர்த்து மீண்டும் நன்கு சுருள கிளறி இறக்கினால்.... கேரட் பாசந்தி தயார்!
வேர்க்கடலை ஃப்ரூட் சுண்டல் .
தேவையானவை: வேர்க்கடலை - ஒரு கப், ஆப்பிள், மாங்காய் - தலா ஒன்று, கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கவும்), தேங்காய் துருவல் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலையை வேக வைக்கவும். ஆப்பிள், மாங்காயை கழுவி துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவிட்டு கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, வேக வைத்த வேர்க்கடலை, மாங்காய் துருவல், ஆப்பிள் துருவல், தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கினால்... ஃப்ரூட் சுண்டல் தயார்.
ஸ்வீட் கார்ன் சுண்டல் ..
தேவையானவை: ஸ்வீட் கார்ன் - ஒன்று, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: ஸ்வீட் கார்னை குக்கரில் வேகவிடவும். அதன் முத்துக்களை உதிர்த்து... அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கி, சூடாக பரிமாறவும்.
மிகவும் ஆரோக்கியமான சுண்டல் இது!
முளைப்பயறு சுண்டல் .
தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல் - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப் பயறை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் வடிகட்டி ஒரு துணியில் போட்டு மூட்டை கட்டி வைத்து, முளைகட்ட விடவும். அதற்கு மறுநாள் நன்கு முளைத்துவிடும். முளைத்த பயறை குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆறிய பின் வடிய வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து... வேக வைத்த பயறு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கறுப்பு உளுந்து சுண்டல்
தேவையானவை: கறுப்பு உளுந்து - ஒரு கப், கடுகு, பெருங்காயம் - தாளிக்க தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 5, தேங்காய் துருவல் - 10 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கறுப்பு உளுந்தை நன்கு கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பின்பு வடியவிடவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு, கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து... வெந்த உளுந்து, தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் ஏற்ற சுண்டல் இது!
கோல்டன் ரிங்ஸ் ..
தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு , வெண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அகலமான பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, மிளகுத்தூள், சீரகம், பெருங்காயத்தூள், வெண்ணெய், உப்பு சேர்த்துக் கலந்து, சிறிதளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல பிசையவும். பிசைந்த மாவில் இருந்து சிறிய கோலி உருண்டை அளவு எடுத்து ஒரு இன்ச் அளவு பென்சில் போல நீளமாக தேய்த்து, அதன் இரு முனைகளையும் ஒன்று சேர்த்து வளையங்கள் போல் செய்து வைக்கவும். கடாயில் எண்ணெயை காய விட்டு, செய்த வளையங்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அப்பம் ..
தேவையானவை: வெல்லம் - ஒன்றரை கப், கோதுமை மாவு - 2 கப், அரிசி மாவு - கால் கப், வாழைப்பழம் - ஒன்று (பிசைந்து கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, சமையல் சோடா - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும். இதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, வாழைப்பழத்தை பிசைந்த விழுது, ஏலக்காய்த்தூள், சமையல் சோடா சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு, கரைத்த மாவை சிறிய கரண்டியால் எடுத்து அப்பங்களாக ஊற்றி, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
வேர்க்கடலை வெல்ல லட்டு ..
தேவையானவை: வறுத்த வேர்க்கடலை (தோல் நீக்கியது), பொடித்த வெல்லம் - தலா ஒரு கப்.
செய்முறை: தோல் நீக்கிய வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இதனுடன் பொடித்த வெல்லம் சேர்த்து மேலும் நைஸாக ஒருசேர அரைத்து, லட்டுகளாக விருப்பமான அளவுகளில் பிடிக்கவும்.
ஹனி பால்ஸ் ..
தேவையானவை: பாதாம், முந்திரி, வேர்க்கடலை - தலா 10, பேரீச்சை - 4, தேன் - 2 டீஸ்பூன்.
செய்முறை: பாதாம், முந்திரி, வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து ஆறவிடவும். இவற்றுடன் கொட்டை நீக்கிய பேரீச்சை துண்டுகள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த பொடியுடன் தேன் கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். நவராத்திரி சமயத்தில் வரும் குட்டீஸ்களுக்கு கொடுக்க ஏற்ற ஸ்வீட் இது!
மோதகம் ..
தேவையானவை: தேங்காய் துருவல், வெல்லம் - தலா ஒரு கப், கோதுமை மாவு - தேவையான அளவு, ஏலக்காய்த்தூள், உப்பு - தலா ஒரு சிட்டிகை, நெய் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: தேங்காய் துருவலுடன் வெல்லம் சேர்த்து கெட்டியாக மிக்ஸியில் அரைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். அரைத்த தேங்காய் விழுதுடன் ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து வாணலியில் பூரணமாக கிளறவும். இதை சிறிய உருண்டைகளாக செய்யவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து... கரைத்து வைத்த கோதுமை மாவில் பூரண உருண்டைகளைத் தோய்த்துப் போட்டு பொரித்து எடுக்கவும்.
வீட் பிரட்டல் ..
தேவையானவை: கோதுமை மாவு, சர்க்கரை - தலா ஒரு கப்.
செய்முறை: கோதுமை மாவை வெறும் வாணலியில் நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். எளிதில் செய்யக்கூடிய இது, சுவையாக இருக்கும்.
குறிப்பு: நவராத்திரியின் சமயத்தில், இந்த வீட் பிரட்டல் செய்து வைத்துக் கொண்டால்.... நிவேதனங்கள் தீர்ந்த பின்பு வருபவர்களுக்கு இதை பாக்கெட் செய்து தரலாம்.
கல்கண்டு பாத் ..
தேவையானவை: பச்சரிசி, பால், டைமண்ட் கல்கண்டு - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரி, திராட்சை - தலா 10, நெய் - 5 டீஸ்பூன்.
செய்முறை: பச்சரிசியை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். இதனுடன் இரண்டு கப் நீர் விட்டு குக்கரில் வைத்து, நான்கு விசில் வந்ததும் இறக்கவும். கல்கண்டை மிக்ஸியில் பொடிக்கவும். அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு, முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். அதே வாணலியில்... வெந்த சாதம், பால், கல்கண்டு பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி, கொதிக்க வைத்து இறக்கி... வறுத்த முந்திரி, திராட்சையை மேலே அலங்கரித்து பரிமாறவும்.
ஸ்வீட் மிக்ஸர் ..
தேவையானவை: அவல் - ஒரு கப், வெல்லம் - 2 கப், தேங்காய் துருவல், வேர்க்கடலை - தலா அரை கப், எள், நெய் - தலா கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். எள், அவல், தேங்காய் துருவல், வேர்க்கடலை ஆகியவற்றை வெறும் வாணலியில் தனித்தனியே வறுக்கவும். வெல்லக் கரைசலை அடுப்பில் வைத்து கொதி விட்டு, இறுகி வரும்போது இறக்கி... அவல், வேர்க்கடலை, தேங்காய் துருவல், எள், நெய், ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கிளறி எடுத்து வைக்கவும்.
இது, ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
அவல் லட்டு ..
தேவையானவை: வெள்ளை அவல், சர்க்கரை - தலா ஒரு கப், முந்திரி, திராட்சை - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிட்டிகை, நெய் - தேவையான அளவு.
செய்முறை: அவலை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வறுக்கவும். ஆறிய பின் அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் பொடிக்கவும். சிறிதளவு சர்க்கரை பொடியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, பொடித்த அவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யை காய்ச்சி இதில் ஊற்றி உருண்டைகளாக பிடித்து, தனியாக எடுத்து வைத்த சர்க்கரை தூளில் புரட்டி எடுத்தால்... அவல் லட்டு தயார்!
ஹெல்தி ரோல்ஸ் ..
தேவையானவை: பாதாம், முந்திரி, பேரீச்சை - தலா 10, தேங்காய் துருவல், நெய் - தேவையான அளவு.
செய்முறை: நெய்யில் பாதாம், முந்திரியை வறுக்கவும். இதனுடன் கொட்டை நீக்கிய பேரீச்சை சேர்த்து அரைத்து வைக்கவும். தேங்காய் துருவலை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் அரைத்து வைத்த பேரீச்சை விழுது, உருக்கிய நெய் சேர்த்துப் பிசைந்து ரோல்களாக செய்யவும்.
கடலைப்பருப்பு சுண்டல் ..
தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து... வேக வைத்த பருப்பு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கோசுமல்லி ..
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், கேரட் துருவல், வெள்ளரி துருவல் - தலா கால் கப், தேங்காய் துருவல் - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, பெருங்காயத்தூள் - தேவையான அளவு, கடுகு, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின்னர் வடித்து எடுக்கவும். இதனுடன் கேரட் துருவல், வெள்ளரி துருவல், தேங்காய் துருவல், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.
பானகம் ..
தேவையானவை: தண்ணீர் - ஒரு கப், வெல்லம் - 2 டீஸ்பூன், சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள் - தலா ஒரு சிட்டிகை.
செய்முறை: வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி கலந்து நிவேதனம் செய்யவும்.
குறிப்பு: எந்த நிவேதனமும் கைவசம் இல்லாத சூழ்நிலையில்,பானகம் கை கொடுக்கும்!
13 comments:
நவராத்திரி கொலு வைப்பவர்களுக்கு உபயோகமாய் இருக்கும். என்ன செய்வது என்ன செய்வது என்று குழம்புபவர்களுக்கு இப்படி ஒரு மெனு கிடைப்பது அதிருஷ்டம்!
எக்கச்சக்கமான குறிப்புகள். இதில் ஜவ்வரிசியில் செய்யும் குறிப்பைச் செய்து பார்க்க ஆசை. சரியாய் வரணும். பார்ப்போம். :) பகிர்வுக்கு மிக்க நன்றி.
அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்.
அன்பின் ஸ்ரீராம்,
நவராத்ரி நன்றாக நடக்கட்டும்.
இந்தப் பதிவில் சொல்வதில் பாதி செய்தாலே
போதும்.
எல்லாமே சூம் வழி விசிட் தான்.:)
உடல் நலம் செழிக்கப் பாராட்டுகள் மா.
அன்பின் வாழ்த்துகள் கீதாமா.
எனக்கும் அது புதிதாகத் தெரிந்தது.
கொலு பொம்மை அடுக்கவே இன்னும் நேரம் இல்லை.
படிகள் மட்டும் நேற்று தயார்.
பாவம் பெண். என்ன செய்வாள்.
எல்லோரும் நலமாக இருந்தாலே போதும். நன்றி மா.
அம்மா... இந்த வாரம் நான்கு ஐந்து வீடுகளுக்கு கொலு பார்க்கச் செல்ல பாஸ் திட்டமிட்டு என் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார் என்று தெரிவித்துக் கொள்கிறேன்! அவர் சித்தி வீடு 2, அண்ணன் டு பி சம்பந்தி வீடு 1, தங்கை வீடு 1, பழைய, புதிய நண்பர் (நண்பி) வீடு 3...
ஹையோ அம்மா செம செம ரெசிப்பீஸ்!!! சிலது பெயர் புதுசு ஆனால் பழக்கம்தான். ஹெல்தி ரோல்ஸ், ட்ரைஃபூரூட்ஸ் வீட் பிரட்டல் ஹனி பால்ஸ் பேர் புதுசு செய்திருக்கிறென் இரண்டுமே லட்டு ஹாஹாஹா..ட்ரைஃப்ரூட்ஸ் கோக்கனட் லட்டு மற்றது ட்ரைஃப் ஃப்ரூட்ஸ் லட்டுன்னு..
ஸ்வீட் மிக்சர் நான் நிலக்கடலையுடன் எள் சேர்ப்பது உண்டு ஆனால் இது நீங்கள் வித்தியாசமாக தேங்காய் வெல்லம் போட்டு சொல்லிருக்கீங்க. ஸோ இப்படிச் சில சின்ன சின்ன வித்தியாசம் சூப்பரா இருக்கும்மாஅ
நவராத்திரிக்கு போனஸ்!!!
ஆப்பிள் பன்னீர் பாயாசம்...ஆப்பிள் பாயாசம் செய்ததுண்டு பன்னீர் விட்டதில்லை.
முத்து சுண்டல் கிட்டத்தட்ட ஜவ்வரிசி உப்புமா...போல..
எல்லா ரெசிப்பிஸும் எடுத்து வைத்துக் கொண்டேன்.
அம்மா பொறுமையா எழுதியிருக்கீங்களே ஸாரி தட்டியிருக்கீங்களே இத்தனையும்...உங்க கையைக் கொஞ்சம் காட்டுங்க ....எடுத்துக் கண்ணுல ஒத்திக் கொள்கிறேன்.
கீதா
நவராத்திரி வாழ்த்துக்கள்.
நவராத்திரிக்கு தேவையான அருமையான குறிப்புகள்.
🌸🌸🌸🌸அன்பின் கீதாமா, உங்களுகுத் தெரியாததா.! அழகாகத் தொகுத்திருகிறார்கள் மா.நலமுடன இருங்கள்.
அன்பின் ஶ்ரீராம் ,எலாம் நல்லது தான் மா. மாஸ்க் போட்டுக்க சொலுங்கோ. வீட்டில் இருந்து எனகே அலுக்கிறது. நீங்கள் எலாம் சின்னவர்கள்..
போய்விட்டு வரட்டும். ரிலாக்ஸ்.:)
அனபின் கீதாமா, தட்டவும் இல்லை. கொட்டவும் இல்லை. 🌝 வெறும் பார்வார்ட்:). எனகு சுண்டல் போதும் பேருக்கு ஒரு இனிப்பு.
அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.
நல்ல நாட்கள் தொடங்கட்டும் அம்மா.
அம்பிகை காப்பாள்.
நவராத்திரி பிரசாத் குறிப்புகள் நன்று.
அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்.
Post a Comment