மஹரிஷி ரமணர் கேட்ட கேள்வி அவரை மஹான்
ஆக்கியது.
நம்மில் பலர் இந்தக் கேள்வியில் சிக்கி
ஏன், எதற்காக,எப்படி என்று இன்னும் உழன்று கொண்டுதான் இருக்கிறோம்
சுலபத்தில் கிடைக்கக் கூடிய பதிலும்
இல்லை.
ஏதோ ஒரு வினையின் பயனால் இங்கே வந்தோம்.
அது அது நடக்க வேண்டிய போது எதிர் கொள்கிறோம்.
சிரித்த்தாலும் நிலைப்பதில்லை.
அழுதாலும் ஓடுவதில்லை.
பெற்றெடுத்தவர்கள் கூடப் பிறந்தவர்கள்
மணம் புரிந்தவர் என்று அனைவரும் ஏதோ ஒரு இடத்தில்
எப்பொழுதும் நமக்கு நல்ல வழி காட்டுகிறார்கள்.
அவர்கள் வழியில் என் பின் வந்த தலைமுறையும்
என்னைவிடப் புரிந்து கொண்டே வாழ்கிறார்கள்.
நான் மட்டுமே குழம்பிக் கொண்டு இருக்கிறேனோ?
எப்படி எல்லோரும் இவ்வளவு தெளிவாக
இருக்கிறார்கள்?
வாழ்வில் இது தான் வேண்டும் என்று
உரத்துடன் தானும் சென்று மற்றவர்களையும்
வழி நடத்துகிறார்கள்?
ஆற்றங்கரை, அரச மரம், அதனடியில் பிள்ளையார்
என்று சிலர் நிலைத்திருந்தால்
தாமிரபரணி அடித்துச் செல்லும் வெள்ளத்திலும்
இழுத்துச் செல்லப்படும் கட்டைகளும் பூக்களும்
பழங்களும் இலைகளும் உண்டு தானே.
அந்தக் கட்டைகள் கடல் புகுமுன் சில நேரம் கரையோரம்
காய்ந்து கிடைக்கலாம்.
என்றாவது ஒரு நாள் ஒரு பெரிய அலை அதை இழுத்துக் கொண்டு தான் போகப்
போகிறது.
இருக்கும் வரை மணத்துடன் இருக்கலாம்.
அக்டோபர் 31 1965 என்னை சாதாரண மகளிலிருந்து
உன்னத மனைவியாக மாற்ற சிங்கம் வந்தார்.
அன்று மாறிய என் வாழ்வு
56 வருடங்களாக அவர் பின்னே தொடர்கிறது.
8 வருடங்களுக்கு முன் அந்த சங்கிலி
விடுபட்டதோ என்று நினைத்தேன்.
இல்லை உன்னுடன் நான் எப்பொழுதும் உண்டு என்று பழைய பதிவுகளிலிருந்து
சிரிக்கிறார். நன்றி என் சிங்கமே.
21 comments:
பிரிக்கக் கூடிய உறவா இது .என்றும் உங்களுடன் இருப்பார்.
அம்மா.. சிக்கலான சிந்தனை. நானும் பாடம் படித்துக் கொள்கிறேன். சிங்கம் என்றும் உங்களுடன் இருப்பார்.
அன்பின் மாதேவி,
எத்தனை நல்ல வார்த்தை!!!
ஆமாம் ஒவ்வொரு வேலை செய்யும்போதும் அவருடைய எண்ணமாகச்
சில யோசனை தோன்றும்.
பழகின உறவின் உரம் அது.
நன்றி மா.
அன்பின் ஸ்ரீராம்,
சிக்கலை விடுவிக்க ஒரு உரத்த சிந்தனை
அவ்வளவு தான்.
ஏதாவது பாடலோ சொற்களோ மனதில் ஓடுகிறது..
இப்போது மெல்ல சிந்திக்க ,பிரார்த்திக்க
காலம் ஏதுவாக இருக்கிறது. நீங்கள் எல்லாம் ஓடிக் கொண்டிருக்கும் போது நான் உட்கார்ந்திருக்கிறேன்.
அதுதான் வித்யாசம்.:)
//இல்லை உன்னுடன் நான் எப்பொழுதும் உண்டு என்று பழைய பதிவுகளிலிருந்து
சிரிக்கிறார். நன்றி என் சிங்கமே.//
எப்போதும் உடன் இருப்பார்கள்.
நினைவுகள் வழி நடத்தும் அக்கா.
திடம், தெளிவு , எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது இப்போது நாம் இளையவர்களிடமிருந்து.
இருக்கும்வரை எல்லோர் நலத்திற்கும் இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்.
//ஒருவர் ஆன்மீகத் துறையில் உச்சநிலையை அடைந்திருக்கிறார் என்பதின் அடையாளம் 'நான் யார்?' என்ற கேள்வி அவர் மனதில் எழுவதுதான். உடல், ஆன்மா, மனம், உயிர், தெய்வநிலை இவையனைத்தும் தெளிவாக உணர்ந்து கொண்ட பிறகுதான் 'நான் யார்?' என்ற கேள்வி அவரிடம் எழும். //
இப்படி வேதாத்திரி மகரிஷி சொல்கிறார்கள்.
அப்படித்தான் ரமண மகரிஷிக்கும் எழுந்தது மகான் ஆனார்.
எங்கும் நிறைந்த இறைநிலையை வேண்டிக் கொள்வோம்.
🌺🌺🌺🌺 உண்மைதான் அன்பு கோமதி மா.
என்றும் வாழ்க வளமுடன்.
நாள் முழுவதும் ஏதாவது இருக்கிறது செய்ய, இல்லை என்றால் தேட.. இரவு படுத்துக் கொள்ளும் போது தூக்கம் வராமல் விசாரம்
பிடித்துக் கொள்கிறது. நடு இரவிலும் விழிப்பு வருகிறது. நல்ல. புத்தகங்களைப் படிக்கும் போது இறை சிந்தனை
வரும் போகும். எப்போது நிலையான சிந்தனை வரும் என்று யோசிக்கிறேன். வேதாதரி மகரிஷிகளின் சிந்தனை தத்துவங்களையும் படிக்கிறேன். நன்றி மா.
வணக்கம் சகோதரி
நடைமுறை வாழ்வில், இந்த பாசப் பிணைப்புகள்தாம் நம்மை நாம் யார் என கண்டறிய இயலாமல் கட்டிப் போடும் இரும்பு சங்கிலிகள். அதை அறுக்கும் உடல்/மன வலிமை எப்போதோ ஏற்படப்போகிறதோ தெரியவில்லை. அது போக நினைவுகள் என்றுமே நமக்கு இன்பங்களையும், தொடர்ந்து சுமையான துன்பங்களையும் தருபவைதான்."இதையெல்லாம் நீ வெல்ல வேண்டுமென்றால் யதார்த்த கீதையை படித்து அதிலிருக்கும் சாராம்சத்தை கொஞ்சமாவது உள் வாங்கிக் கொள்" என என் மகன் (இளையவன்) எனக்கு அந்தப் புத்தகம் வாங்கித் தந்து படிக்குமாறு அறிவுறுத்தி வருகிறார்.நானுப் சங்கிலியை வளைத்து அறுக்க அந்த பரந்தாமன் துணையாக இருக்க வேண்டுமென கூறிக் கொண்டிருக்கிறேன்.அது எந்த பிறவியிலேயோ.?
நீங்கள் இப்போதுள்ள இளையவர்களின் மனத்திண்மையை பகிர்ந்த போது எனக்கும் இதைச் சொல்ல தோன்றியது.
உண்மை... உங்கள் கணவர் உங்களுடன்தான் இருப்பார். அவரின் அன்பான ஆசிர்வாதங்களுடன் கூடிய அருகாமை உங்களுக்கு எப்போதும் உண்டு. அனைவரும் உடல் /மன நலத்துடன் இருக்க நானும் இறைவனை பிரார்த்தித்தபடி உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நினைவுகளுடன் என்றும் உங்களுக்குத் துணையாக இருப்பார்.
அம்மா வினை என்பதை நினைத்தாலும் நாம் குழம்புவோம். அதை எல்லாம் ஒதுக்கிவிடுங்கள்.
நான் மட்டுமே குழம்பிக் கொண்டு இருக்கிறேனோ?
எப்படி எல்லோரும் இவ்வளவு தெளிவாக
இருக்கிறார்கள்?
வாழ்வில் இது தான் வேண்டும் என்று
உரத்துடன் தானும் சென்று மற்றவர்களையும்
வழி நடத்துகிறார்கள்?//
இல்லை பலர் குழம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு சிலர் திடத்தோடுக் கடக்கிறார்கள்
இதற்கு அடுத்த பாராவில் சொல்லியிருப்பது...ஆம் அதுதான் வாழ்க்கை. சிலர் கரை தேறுகிறார்கள் இதிலும் சில கட்டைகள் முகத்துவாரத்தில் சிக்கி கடலுக்குள்ளும் போக முடியாமல், நதியிலும் புரள முடியாமல் முட்டி மோதிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோமே....
காரண காரியங்களை cause and effect ஆராயத் தொடங்கினால் நம் மனம் வேறு ஒரு நிலைக்குச் சென்றுவிடும். அதைத் தவிர்க்கவே நானும் முனைந்துகொண்டிருக்கிறேன் அம்மா.
சிறு வயதிலிருந்தே எத்தனை பாடங்கள் ஒவ்வொரு தினமும்....இல்லையா?
கீதா
8 வருடங்களுக்கு முன் அந்த சங்கிலி
விடுபட்டதோ என்று நினைத்தேன்.
இல்லை உன்னுடன் நான் எப்பொழுதும் உண்டு என்று பழைய பதிவுகளிலிருந்து
சிரிக்கிறார். நன்றி என் சிங்கமே.//
அம்மா கண்டிப்பாகச் சிங்கம் அப்பா உங்களோடுதான் இருக்கிறார். அது எப்படி அறுந்து போகும். எப்போதும் உங்களுடன் தான் உங்களோடு கலந்து தான் இருக்கிறார் அம்மா. வழி நடத்துகிறார்.
கீதா
அருமை... இதே தலைப்பில் எழுதிய பதிவும் ஞாபகம் வந்தது...
என்றைக்கும் அவர் உங்களுடனேயே இருப்பார். சிந்தனைகளின் ஓட்டம் தடுக்க முடியக் கூடியதா என்ன... சிந்தனைகள் தொடர்ந்து கொண்டே தானே இருக்கிறது.
மறக்க முடியாத உறவல்லவா? என்றென்றும் நிலைத்து இருப்பார் உங்கள் மனதில். ஒரே தரம் பார்த்திருந்தாலும் அவருடைய சிரித்த முகம் எனக்கு மறக்கவில்லை. நினைவுகளில் ஆறுதல் கொள்ளுங்கள். உங்களுடனே அவரும் கூடவே வந்து கொண்டிருக்கிறார்.
அன்பின் கமலாமா,
நம் குழந்தைகளே நமக்கு ஸ்வாமி நாதன்கள்..
"இதையெல்லாம் நீ வெல்ல வேண்டுமென்றால் யதார்த்த கீதையை படித்து அதிலிருக்கும் சாராம்சத்தை கொஞ்சமாவது உள் வாங்கிக் கொள்" என என் மகன் (இளையவன்)
எத்தனை விசாரப்பட்டாலும் எந்தப் பிரச்சினையும் தீர்வதில்லை.
அது ஒன்று தான் நிச்சயம்.
நொடி கூட நிற்காத தொடரும் பிரார்த்தனைகளே
நமக்கு வழியாகிறது.
கையறு நிலை பல நேரங்களில் சூழ்கிறது.
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள இந்த எண்ணங்கள்
உதவலாம்.
அன்பின் கமலாமா,
நாம் எல்லோரும் ஒரே படகில் வேறு வேறு இடங்களில் பயணிக்கிறோம். அதனால் தான்
நம் சிந்தனைகளும் ஒத்துப்
போகின்றன.
நல்ல சிந்தனைகளுக்கு நன்றி மா.
நலமுடன் இருப்போம்,
நன்றி.
அன்பின் முனைவர் ஐயா,
நல்ல வார்த்தைகளுக்கு மிக நன்றி.
அன்பின் கீதாமா,
''சிறு வயதிலிருந்தே எத்தனை பாடங்கள் ஒவ்வொரு தினமும்....இல்லையா?''
நமக்கு சொல்லிக் கொடுத்தவர்கள் மிகப்
பெரியவர்கள்.
பின் பற்றுவது கடினம் தான்.
அவரவர் வாழ்க்கை எப்படி எல்லாமோ
திருப்பி விடப்படுகிறது. சில நேரம் தேங்கி விடுகிறொம்.
ஆனாலும் விடுதலை உண்டு என்பதே உண்மை.
அது கிடைக்கும் வரை பொறுமைதான் காக்க வேண்டும்.
அன்பின் கீதாமா,
உங்கள் வார்த்தைகள் உண்மையோடு கேட்கின்றன.
அதே நம்பிக்கை தான் எனக்கும்.
அப்பாக்கள் உலகை விட்டு செல்வதில்லை. நாம் இருக்கும் வரை
அனைவரும் நம்முடன் தான் இருக்கிறார்கள்.
அந்த துணை நமக்கு எப்பொழுதும் வேண்டும்.
நன்றி மா.
அன்பின் வெங்கட்,
மிக நன்றி மா.
அன்பின் கீதாமா,
ஆமாம். நம்முடன் இருக்கும் நல்ல மனதை
அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
உண்மைதான்.
Post a Comment