Blog Archive

Saturday, October 09, 2021

இங்கேதான்.....................வானப்ரஸ்தம் 2011.

வல்லிசிம்ஹன்

பழைய நினைப்பு தான் பேராண்டி ..பதிவு 7

August  2011.
***********************************
இரண்டுவாரங்களுக்கும் முன்னால் நாங்கள் எங்கள் மகனோடு ஸ்விட்சர்லாண்டின் ஒரு அழகிய நகரமான
இன்டர்லாகன் எனும் இடத்திற்குப் பயணம் மேற்கொண்டோம்.

எங்களுக்குக் கிடைத்த நேரம்   ஏழு மணித்துகள் தான்.

பேத்தி பள்ளியில் இருந்து வருவதற்குள்
திரும்ப வேண்டும்.
-ரயிலில் ஏறியதும் இன்னொரு இந்திய தம்பதியினரின்   அறிமுகம் கிடைத்தது.
பேச்சு வாக்கில்  அவர்களுக்குக்   குழந்தைகள் இல்லை,இவர்கள் மட்டுமே குடும்பம்,
 என்றும் நல்லவசதி படைத்தவர்கள் என்பதும் புரிந்தது.
இருவரும் சென்னையில் ஒரு டூரிஸ்ட் கம்பெனியில்  பாக்கேஜ் டூர் எடுத்துக் கொண்டு
இருபது நாட்கள் ஐரோப்பியப் பயணமாக வந்திருக்கிறார்கள்.


 பெரியவருக்கு ௭ழுபது வயதிருக்கும் .  நல்ல திடகாத்திரமான  உடல். கம்பீரத்தைப் பார்த்தால் எதோ பெரிய அலுவலகத்தில் 
தலைமைப் பொறுப்பாளராக   இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
மனைவிக்கு அறுபத்தெட்டு வயது என்று சொன்னார்..


ஆளுக்கொரு ஜன்னலோரத்தை அவர்கள் பிடித்துக் கொண்டதால்
நாங்கள்  அடுத்த இருக்கைகளைத தேடி  அமர்ந்துகொண்டோம்.

பரஸ்பர அறிமுகத்தை அடுத்து நான் மௌனமாக
 இயற்கைக் காட்சிகளைப் பார்த்துகொண்டு ரசித்தவாறு
வந்தேன்.
எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத பசுமை. அது.
அந்த அம்மாவோ வெறித்த
 நோக்கோடு எல்லோரையும் கவனித்துவந்தார்.
 கணவரோ.. (பெயர்    திரு  ரவிச்சந்திரன்.)

எங்கள் வீட்டுக்காரரிடமும் மகனிடமும் தான் தலைமை வகித்த 
  உலோகங்கள் சம்பந்தப்பட்ட  கம்பெனி யில் தன்
தனிமனித சாதனைகளை
 விஸ்தாரமாக எடுத்து  உரைத்துக் கொண்டு வந்தார்.

என் அருகே இருந்த   அம்மா

...வசந்தா ரவிச்சந்திரன்
கூடக் கூட  எதோ முனு முணுத்தவாறு வந்தார்.

எப்பப்   "பார்த்தாலும்" நான் நான்"  தான். மத்தவாளைப் பத்தியும் கேக்கணும்,

கொஞ்சம் வாயை மூடிக் கொண்டு வரக் கூடாதோ'

நான் ''அவர் எதோ சுவையாகத்தானே சொல்கிறார்."

இல்ல,
" நான் இந்தக் கதையை பத்துவருஷமாக் கேக்கறேன்.
விடவும் முடியலை. சேரவும் முடியலை "என்றவள்
 கண்ணில் தண்ணீர்.
சங்கடமாக இருந்தது.'நீங்களாவது தமிழ் பேசறவர்களாகக்   கிடைத்தீர்கள்.

இல்லாவிட்டால் நான் பேசவே முடியாது."

''எப்படி இந்த வயதிலும் உங்களுக்குக் கருத்து வித்தியாசம் இருக்கிறது. ?''

இது   நான்.
(என்னவோ சம்சாரக் கடலில் சாதித்துவிட்ட  தொனி வந்துவிட்டதோ?)


''எங்கள் திருமணம் நடந்து நாற்பத்தி ஐந்து  வருடங்கள் ஆகின்றன. முதலில் குழந்தை பிறக்கப் போகும் சந்தோஷத்தைப் பகவான் கொடுத்தான்.

அது இல்லாமல் போயிற்று.
அதன் பிறகு என்ன  முயற்சி மேற்கொண்டும் ஒன்றும் பயனில்லாத நிலையில்

தம்பி மகனைத் தத்தெடுக்கலாம் என்று நான் சொல்ல, உங்கள் பிறந்தக

   மனிதர்கள்  இங்கு வந்து சாப்பிட்டு
அழிக்க வேண்டாம்"
சாப்பிட, நான் சம்பாதிக்க முடியாது. நாம் இருவர் போதும் ''என்று ஒரே உறுதியாக இருந்துவிட்டார்.

கொஞ்சக்காலம்
தனிமையில் வருத்தப் பட்டேன்.
பிறகு வேறு விஷயங்களிலும் ஆன்மீகத்திலும்
மனதைச் செலுத்தி விட்டேன்."

என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த போதே நாங்கள் இறங்கும் இடம் வந்தது. அங்கிருந்து
படகுப் பயணமாகக் கடைசி நிலையத்தை
அடைவதாக ஏற்பாடு.

திருவாளர்களும் திருமதிகளுமாக  அந்த அழகான  படகில் ஏறி உள்ளே சென்று அமர்ந்து கொண்டோம். .எங்க
மகன் அனைவருக்கும் காபி, கேக்  என்று வரவழைத்து உற்சாகமான சூழ்நிலையை ஏற்படுத்தினான்.

அவனையே கண்ணிமைக்காமல்  பார்த்துக் கொண்டிருந்தார்  வசந்தா.

அவரது கவனத்தைக் கலைக்கும் வண்ணமாக அவர்களது
 பயண விவரங்களைக் கேட்டேன்.

''ஆமாம்  அவர் விருப்பம் . இங்கெல்லாம் வரவேண்டும் என்று.

இங்கேயே  முடிந்தாலும் சரி"
 என்று 
அவர் சொன்னது ,எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

"'உடனே  அவர் முகத்தில் சிரிப்பு. அப்படியெல்லாம் 
செய்யமாட்டேன். ஜஸ்ட்   ஒரு நினைப்பு." என்றார்.
படகின் ஓரத்தில்   நின்று அலைகளின் அழகைப் பார்த்தவாறு வந்தோம்.
காற்று அதிகமாகவே
இருந்ததால்.நான் உள்ளே செல்ல முற்பட்டேன்.
தடால் என்ற சத்தம்.
என்னவோ எதோ என்று மீண்டும் வெளியில் வந்தால் ,

 மாமி அங்கேதான் இருந்தார்.

மாமாவைக் காணோம்.

அதற்குள் படகின் அடித்தளத்தில்
 சலசலப்பு.
திரு. ரவிச்சந்திரன் அவர்கள் படிகளில் சறுக்கிக் 
,கழிப்பறைக்குச் செல்லும் இடத்தில் விழுந்திருந்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.
வசந்தா மாமியின் முகத்தில்   கலவரம் கூடிக்  கொண்டே சென்றது.

'பாவி மனுஷன். பக்கத்துக் கைப்பிடியப்
 பிடித்துக் கொண்டு இறங்கக் கூடாதோ." என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்தார்.

அதற்குள் அந்தப் படகின்   முதலுதவி  டாக்டர் வந்து. மாமாவின்  உடல் நிலையைப் பரிசோதித்துக் காலில் சிறிய காயம் மட்டும் பட்டிருப்பதாகவும், மற்றபடி அவருக்குக்  கவலைப் படும்படியாக
அடி படவில்லை என்று
கைத்தாங்கலாக   அவரை

 மேலே அழைத்து வந்தனர்.
'ஏன்னா, என்றபடி அருகில் விரைந்த
வசந்தாவை அவர் பக்கத்தில் அணுக விடவில்லை.
ஐ ஆம் ஒகே.
நீ விழாமல்  toilet போய்   வா.,"
 என்றபடி எங்கள்

மகனின் உதவியோடு   இருக்கையில் அமர்ந்தார்.

நான் கீழே சென்ற வசந்தாவுடன்
 கொஞ்ச நேரம் இருந்து ஆறுதல் சொல்லிவிட்டு, மேலே வந்தோம்.

'"நாம் ஊருக்குத் திரும்பி விடலாமா. பாஷை தெரியாமல் அவஸ்தைப்

படவேண்டாமே!!!!" என்றவளை எரிப்பது போலப் பார்த்தார் அந்த மனிதர்.''

ஊரிலிருந்து கிளம்பும்போதே உன் அபசகுனப் பேச்சை ஆரம்பிச்சையே.

இப்ப எனக்கு ஏதாவது ஆகணும்னு காத்துக் கொண்டிருந்தியாக்கும்

என்று''படபடத்தார்.




மற்ற பயணிகள் வசந்தா வடித்த கண்ணீரைப் 
புரிந்து கொள்ளாவிட்டாலும் , அருகில் வந்து ஆறுதல் சொன்னார்கள்.
எனக்குத்தான் கவலை
 அதிகமானது.

அப்பொழுது வாயை மூடியவர்தான்  வசந்தா.. படகு விட்டு இறங்கி   சக்கிர
 வண்டியில் கணவரை ஏற்றிக் கொண்டு,  பக்கத்தில் இருக்கும
 அவசர வைத்திய உதவியை  நாடிச் சென்றனர்..

விடைபெறும்போது வசந்தாவின் கண்கள் என்னைப் பார்க்கவில்லை.

உலகத்தில் மனைவிகளாகப் படைக்கப் பட்ட எத்தனையோ
 மரக்கட்டைகளைப் போல நடந்து கொண்டிருந்தார்.

**************************************************************************
டிஸ்கி
எல்லா  மனைவியரும் எல்லாக் கணவர்களுக்கும் இது பொருந்தாது.நமக்குத் தெரியும் தானே.:)
 அனுபவம் பலவிதம்!!

















-






18 comments:

கோமதி அரசு said...

பயண அனுபவம் மறக்கவே முடியாது போலவே!
அந்த அம்மாவின் பேச்சு. கணவர், மனைவி உரையாடல், அவர் சொன்ன கதை எல்லாம் மனதை கஷ்டபடுத்துகிறது.

இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள்.


//இருவரும் சென்னையில் ஒரு டூரிஸ்ட் கம்பெனியில் பாக்கேஜ் டூர் எடுத்துக் கொண்டு
இருபது நாட்கள் ஐரோப்பியப் பயணமாக வந்திருக்கிறார்கள்.//

பாவம் இப்படி பயணத்தில் கீழே விழுந்து விட்டாரே! தொடர்ந்து பயணத்தை நல்லபடியாக முடித்து ஊர் போய் சேர்ந்து இருக்க வேண்டும்.
மனதஒ நோகடிக்கிற மாதிரி பேசினால் எப்படி மகிழ்ச்சியாக சுற்றிப்பார்க்க பிடிக்கும்.

கோமதி அரசு said...

இரண்டு காணொளிகள் மிகவும் அருமையாக இருக்கிறது. இயற்கை காட்சிகள் கண்ணை நிறைக்கிறது.

ஸ்ரீராம். said...

​பயண அனுபவங்கள் நடுவே ஒரு தம்பதியின் அனுபவம். நாம் எப்படி இருக்கிறோம் என்கிற சுய அலசல் வருவடகியும் தவிர்க்க முடியவில்லை. வசந்தாக்கள் பாவம்தான்.சுதந்திரம் இல்லாத பெண்கள்.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் மா. காலை பார்க்கலாம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பயண அனுபவத்தை ரசித்தேன். இறுதியில் சற்று நெருடலோடு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,

எத்தனையோ ஆதர்ச தம்பதிகளையும் பார்க்கிறோம்
இங்கே.
80 வயது தாத்தா பாட்டிகள் சிரித்துப் பேசி
உண்டு மகிழ்ந்துதான் வாழ்கிறார்கள்.

நம் இந்தியக் குடும்பங்களில் இந்த மாறுதலைச் சில தம்பதியினரும் மட்டுமே
பார்க்க முடியும்.

அதுவும் குழந்தைகள் இல்லாத குடும்பத்தில்
இந்த மாதிரி இறுக்கம் மிகுந்து விடுகிறது.
என்னால் அந்தப் பெண்மணியின்
கலக்கத்தை மறக்க முடியவில்லை.
எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு
அந்தக் கணவர் ஒரு உதாரணம் அம்மா.
உங்கள் மனசைக் கஷ்டப் படுத்தியதற்கு மன்னித்து விடுங்கள்.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

இரண்டு காணொளிகளும் அருமை"
உண்மைதான் மனதை இலகுவாக்கும்
நாடுகளில் ஸ்விட்சர்லாந்தும் ஒன்று.

இப்போது டூரிஸம் அதிகரிக்க
எங்கு பார்த்தாலும் அவர்களின் காட்டுக் கத்தல். அவரவர் நாடுகளில் சத்தம் போடாமல் இருப்பவர்கள்
இந்த ஊரில் மட்டும் அதிர அதிர
பேசுகிறார்கள்:) நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

ஏன் பாசமும் நேசமும் வற்றிப் போகிறது
என்பதும், நேசம் நிறைந்த தம்பதிகளைப்
பார்ப்பதும் அவரவர் வாழ்க்கைச் சூழ்னிலைகளால் ஏற்படும்
மாற்றம்.

இயல்பாகவே சிங்கம் போன்ற பெருந்தன்மை
படைத்தவர்களைக் காண்பது அபூர்வம்.
அன்று நடந்ததைப் பார்க்கும் போது
மேலும் மேலும் என் கணவரின்
நற்குணம் புரிந்தது.
நம் வாழ்வின் துண நலங்களை நாம் சீக்கிரமே
உணர வேண்டும்.
உங்கள் இருவரின் வாழ்வும் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

இப்படியும் ஆண்கள்/கணவன்மார்கள் இருக்கிறார்களே. உங்கள் மகிழ்வான பயணத்தில் வேறொருவரால் கூடவே இப்படி ஒரு அனுபவம். பாவம் அந்த அம்மா.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

//உங்கள் பிறந்தக

மனிதர்கள் இங்கு வந்து சாப்பிட்டு
அழிக்க வேண்டாம்"
சாப்பிட, நான் சம்பாதிக்க முடியாது.//

நான் நான் என்று தானே பேசுவது மற்றவரை பேச விடாமல், தன் சுயபிராதபம் பேசுவது ந்னு வாசித்ததுமே மனிதரின் சுவபாவம் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது.

இப்படியானவர்கள் தன் கூட இருக்கும் நபரையும் பேச விடாமல் இவர்கள் மட்டுமே பேசிக் கொண்டிருப்பார்கள். எதிராளி பேசினாலும் அதை முழுவதும் கேட்காமல் இடையில் கட் செய்து தன்னைப் பற்றி...

வசந்தா அம்மாவைப் புரிந்து கொள்ள முடிகிறது. எத்தனையோ பெண்கள்.
அந்த அம்மாவின் மனம் தளரத் தொடங்கியிருந்திருக்கிறது. பாவம்
இவர்கள் தங்களைப் பாறையைப் போல் வைத்துக் கொண்டால்தான் பாவம் ...

வயதான காலத்தில் கூட நன்றாகச் சிரித்துப் பேசும் முதியோரும் உள்ளனர் ஒருவருக்கொருவர் துணையாக...

இவர்களுக்குக் குழந்தையும் இல்லை. குழந்தை இருந்திருந்தால் கண்டிப்பாக மாற்றம் வந்திருக்கும்

உங்கள் பயணம் அதன் பின் இனிதாக அமைந்ததுதானே அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அதன் பின் அவர்கள் என்ன ஆனார்களோ?

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

காணொளி சூப்பர்..அதுவும் ரிவர் கூடவே வர இடம் எல்லாம் செம

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

போட்டிங்க், லேக் எல்லாம் செம...என்ன அழகு!!! ரொம்ப ரசித்தேன் அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

போட்டிங்க், லேக் எல்லாம் ஆஹா அருவி எல்லாம் செம...என்ன அழகு!!! ரொம்ப ரசித்தேன் அம்மா எனக்கு இது மாதிரி போக பார்க்க எல்லாம் ரொம்பப் பிடிக்கும்

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,

அந்த மாதிரி ஒரு மனிதரை சந்திக்கும் போதுதான்
நம் வாழ்வு எவ்வளவு உன்னதமாக இருக்கிறது
என்று தெரிய வரும் அப்பா.

இதை மறக்காமல் நம் துணைகளை
மதித்து அன்பு செலுத்துவோம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

எல்லோர் மனதிலும் கருணை கொஞ்சமாவது வேண்டும்
இல்லையாமா.
உங்களுக்குச் சொல்லவே வேண்டாம்.உங்களின் புரிதல்
எல்லோருக்கும் இருந்தாலே போதும்.
என்ன கொண்டு வந்தோம். என்ன கொண்டு போகப் போகிறோம்
என்று தெரியாமலேயே
வாழ்க்கைத் துணையை வெறுத்தால்
என்ன செய்ய முடியும்.

வல்லிசிம்ஹன் said...

@ Gomathy Arasu,

பாவம் இப்படி பயணத்தில் கீழே விழுந்து விட்டாரே! தொடர்ந்து பயணத்தை நல்லபடியாக முடித்து ஊர் போய் சேர்ந்து இருக்க வேண்டும்.////////////////////////


அதுதான் பரிதாபம் மா.
நல்ல படியாக ஊருக்குப் போயிருக்க
வேண்டும். நம் பிரார்த்தனைகள் அவர்களுடன்.

வல்லிசிம்ஹன் said...

உங்கள் பயணம் அதன் பின் இனிதாக அமைந்ததுதானே அம்மா/////


அதன் பின் அவர்கள் என்ன ஆனார்களோ?''

போட்டிங்க், லேக் எல்லாம் ஆஹா அருவி எல்லாம் செம...என்ன அழகு!!!////////////////////////////////////////////அன்பின் கீதாமா,
உண்மையிலேயே மிக இனிமையாக அமைந்த பயணம்.

2002 லிருந்து நிறைய பயணம் ஸ்விஸ்ஸுக்கு
வந்திருக்கிறோம். கடவுள் அருள் தான்.

அப்பா இறைவனிடம் சென்றபிறகும்
நான் சென்று வந்தேன்.
வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தே
ஆக வேண்டும்.
இன்றுதான் அதைப் பற்றி படித்தேன்.

அந்தத் தம்பதிகளை இறைவன் கருணையோடு நடத்தி இருக்க வேண்டும்.

உங்களின் வாழ்க்கைப் பயணம் நல்ல இனிமையாக
இருக்க என் பிரார்த்தனைகள்.