செய்தி உபயம் ,தம்பி முகுந்தன் ,மதுரை.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++
வெங்காய புராணம் ( தொடர்கிறது)
எனக்குத்தெரிந்த ஒரு வெங்காய வெறியர் ஒருவர் காசிக்குப் போவதாக சொன்னார், காசிக்குப் போனால் நமக்கு பிடித்த காய்கறி ஏதாவது ஒன்றை விட்டு விட வேண்டும் என்ற வழக்கம் உள்ளதால், நான் அவரை “உங்களுக்கு மிகவும் பிடித்த காய்கறி எது?” என்று கேட்டேன்.
“வெங்காயம்” என்றார்.
“அப்படியானால் நீங்கள் காசியில் வெங்காயத்தை விட்டு விட வேண்டும்” என்றேன். “அப்படியானால் கங்கையில் வேணாலும் 4 வெங்காயத்தை விட்டு விடுகிறேனே” என்றார். “நோ, நோ, நீங்கள் அதை சாப்பிடுவதை விட்டு விட வேண்டும்”. என்றேன்.
“எத்தனை நாளைக்கு?” என்றார்,
“ஆயுள் முழுவதும்” என்றேன்.
உடனே அவர் “விட்டு விடகிறேன்” என்றார்.
“ஆகா, உங்களுக்குத்தான் காசி மீது எவ்வளவு நம்பிக்கை, மரியாதை” என்றேன்.
அவர் “இல்லை நான் காசிக்குப் போவதை விட்டு விடுகிறேன்” என்றார். '
“நோ காசி ஈவன் இஃப் இட் கம்ஸ் ஓசி” என்று ஒரு ரைம் அடித்தார்.
அவருடைய வெங்காய பக்தியைக்கண்டு நான் அசந்து போனேன். எனக்குத் தெரிந்து காசிக்குப்போய் வெங்காயத்தை விட்டவர்களை நான் இதுவரையிலும் பார்த்ததில்லை. ஆனால் வெங்காயத்துக்காக காசியை விட்டவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் என்பது என்யூகம்.அவர்களுக்கு ஏற்கனவே பிடிக்காத காயை இந்த சாக்கில் விட்டவர்கள்தான் அதிகமாக இருக்குமோ என்று சந்தேகம் தோன்றுகிறது. எங்கே காசிக்குப்போனால் வெங்காயத்தை விட்டு விட நேருமோ என்ற பயத்தில் நான் இது வரையில் காசிக்குப் போனதில்லை.
மற்ற காய்கறிகள் போல் இல்லாமல் வெங்காயம் வாங்குவது ரொம்ப சுலபம். முத்தலா, இளசா என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதை மற்ற காய்கறிவகைகளப்போல கிள்ளிப் பார்க்க வேண்டியது இல்லை. வெண்டைக்காய் போல் உடைத்துப் பார்க்க வேண்டியது இல்லை. பீன்ஸ் போல் ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து வளைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதை அப்படியே அள்ளிப்போட்டுக்கொண்டு வரவேண்டியதுதான். பெரிய வெங்காயம் வாங்கும்போது அத்துடன் சிறிய வெங்காயம் கலக்காமலும், சிறிய வெங்காயம் வாங்கும்போது அத்துடன் பெரிய வெங்காயமோ அல்லது மிகச்சிறிய தூளாகிவிட்ட வெங்காயமோ கலக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். வெறும் தோலையும் வாங்கக்கூடாது. இப்படி வாங்கிய பச்சை வெங்காயத்தை பல வாரங்கள்வரை சேமித்து வைக்கலாம். இதுவே அதைப்பதுக்கி வைக்க ஏதுவாகிறது. இதனால் இது அரசியல் வாதிகளுக்கு தேர்தல்நேரத்தில் கை கொடுக்கும் காயாக மாறிவிடுகிறது. அது சமைக்கப்பட்டு விட்டால் அதன் ஆயுள் ஓரிரு நாட்கள் தான்.
வெங்காயங்கள் பல உருவம் எடுக்கும். அது ஒரு தோழமைக்காய் . வேறே பல காய்களோட சுமுகமாக உறவாடும். முரண்டு பிடிக்காது சில காய்கறிகள்மாதிரி.
**வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா தோசை, வெங்காய ரவா மசாலா தோசை, வெங்காய சட்டினி, வெங்காய தக்காளி சட்னி, வெங்காய தயிர்ப் பச்சடி. வெங்காய ஊறுகாய் என வெங்காயம் பத்துக்கு மேலேயே பல அவதாரங்கள் எடுக்கும். நொறுக்குத்தீனிகளில் டாப் ஏற்கனவே நான் சொன்னது போன்று வெங்காய பக்கவடா.
அது தோசையோட சேந்து வெங்காய தோசைஆகும். உருளைக்கிழங்கோடு சேந்து மசாலா ஆகும். இந்த மசாலா பூரிக்கும் தோழன். தோசைக்கும் நேசன். அப்படி ஒரு காம்பினேஷன். நீ இல்லாமல் நானில்லை. நானில்லாமல் நீ இல்லை என்ற அளவுக்கு அவை இணை பிரியாத ஒரு பந்தத்தை ஏற்படுத்திக்கொள்கின்றன.
இது தவிர வெங்காய ரவா தோசையும் உண்டு , வெங்காய ரவா மசால்தோசையும் உண்டு. மசால்தோசையையும், , பூரி மசாலாவையும் பீட் பண்ணும் கூட்டணி இனிமேல்தான் பிறந்து வரணும்.
மசால் தோசைக்கு ஏற்கனவே உலக மகாரசிகர்கள் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு வீடியோவில், மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அமெரிக்கன் வைஸ் பிரசிடெண்ட், கமலா ஹாரிஸ், தன் அமெரிக்க நண்பிக்கு மசால்தோசை செய்து காட்டும் வீடியோ ஒன்று வெளியானது. அந்த தோசை எப்படி இருந்தது என்று எனக்குத்தெரியாது. அதைப்பார்த்தே, எனக்கு எங்க வீட்டு மசால்தோசையை சாப்பிட்ட திருப்தி. அந்த அளவிற்கு மசால் தோசையின் மகிமை கடல் கடந்து சென்று இருக்கிறது,
அதேபோல் பூரிமசாலாவின் பெருமையை உலகறிய அமெரிக்காவில் இன்னொரு அமெரிக்க வாழ் இந்திய பெண்மணி விமலா வாரிஸ் பெரிய அதிகாரப்பொறுப்பை ஏற்கும்நாள் என்னாளோ அன்னாளே பூரி மசாலாவின் பொன்னாள்.
உருளைக்கிழங்கு வெங்காய கூட்டணிக்கு இணையான அரசியல் கூட்டணி இந்திய, ஏன் உலக அரசியலிலேயே இன்னும் உருவாகவில்லை. எந்த பிரசாந்த் கிஷோராலும் உருவாக்க முடியாது.
மசாலா கூட்டணியில் பிறந்தது தான் சமோசா. வட இந்தியாவில் இதன் ரசிகர்கள் அதிகம். ஆனால் இது நம் தமிழ்நாட்டின் இட்டிலி , தோசை, வடையுடன் போட்டி போட முடியுமா தெரியவில்லை. இதில் உ.மசாலாவின் டேஸ்ட்டை அதன் தடித்த மேல் ஓடு குறைத்து விடுவதாக என் நாக்கு சொல்கிறது,..பாவ் பாஜியில் வெங்காயம் பங்கு வகிக்கிறது . பேல்பூரியில் பங்கு கொள்கிறது, சாண்ட் விச்சில் இடம் பிடிக்கிறது. சமைக்கப்பட்ட பின் வெங்காயத்தின் ஷெல்ப் லைப் குறைவு என்பதாலே வெங்காயம் சேர்ந்த பண்டங்களை ரொம்ப நாள் வைத்து இருக்க முடியாது. அப்படி வைத்திருக்கும் அளவிற்கு அதை யாரும் விட்டு வைக்க மாட்டார்கள். இது ஸ்நாக்ஸாக வெங்காய பக்கவடாவில் மட்டும்தான் இடம்பெறுகிறது. மற்ற ஸ்நாக்குகளில் இடம் பெறுவதில்லை. குறிப்பாக தமிழ் நாட்டுத் தின்பண்டங்களில் இது அதிகமாகக் காணப்படுவதில்லை. அது எனக்குப் பெருத்த ஏமாற்றம்தான்.
எனக்குத்தெரிந்தவரையில் வெங்காயம் இட்லியுடன் நேராக சேர்வதில்லை எக்செப்ட் ஏஸ் சைட் டிஷ். சாம்பார் அண்ட் சட்டினி உருவத்தில். இதேபோன்று வடையுடன் சேர்ந்தால் வெங்காயவடை. இதற்கென்றே ஒரு ரசிகர்கூட்டம் இருக்கிறது. எனக்குத்தெரிந்த ஒரு சூப்பர்ஸ்நாக்ஸ் வெங்காய பக்கவடாதான். இதை எழுதும்போதே என் நாக்கு சப்பு கொட்டுகிறது. இந்த வெங்காய பக்கவடா சில ஆண்டுகளில் இண்டர்நேஷனல் ஸ்னேக்ஸாக டிக்ளேர் செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை., இது தவிர தினசரி சமையலில் வெங்காயம் வெகுவாக பல காய்களுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகின்றன. முந்திரி பருப்பு போட்டு அப்போதுதான், பறித்துக்கழுவிய கொத்தமல்லியைத்தூவிய வெண்பொங்கலுக்குத்தொட்டுக்கொள்ள வெங்காய கொத்சு காம்பினேஷனக்கு வேறு எதுவும் ஈடும் ஆகாது. இணையும் ஆகாது. ஆகா, ஆகா, ஆகா. வெறும் சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி அது சூடு ஆறுவதற்குள் சாப்பிட்டு இருக்கிறீர்களா? அந்த சுகமே சுகம்..
எனக்குத்தெரிந்து வெங்காயத்துக்கு நாம் எந்த பண்டிகைகளிலும் இடம் கொடுத்தது கிடையாது. அது ஒரு காலத்தில் நம் தீபாவளிப்பண்டிகையின்போது இடம் பெற்றது வெங்காய வெடி என்ற பெயரில். ஆச்சரியமாக இருக்கிறதா? அதை எதன்மீதாவது பலமாக வீசினாலோ, ஒங்கி அடித்தாலோ அது வெடித்து சத்தம் வரும். இந்த சாக்கிலே பலர் தீபாவளியின் போது இதை வாங்கி தங்களுக்குப்பிடிக்காதவர்கள் மீது தங்கள் வன்மத்தைக் காட்டுவார்கள். இதனால்பல விபத்துகள் ஏற்படவே அதற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இன்று அது காணாமலே போய்விட்டது. பேர்தான் வெங்காய வெடியே தவிர , அந்த வெடியில் வெங்காயம் கிடையாது. பார்ப்பதற்கு சிறிய வெங்காயம் போல் இருந்ததால் அதற்கு அந்தப் பெயர்
வெங்காயத்திலும், பூண்டிலும் மனிதர்களை மெல்லக் கொல்லும் விஷத்தன்மை கொண்ட 21 பொருட்கள் இருப்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. (உதாரணம்: டாக்டர். ரோபர்ட் சி பெக், அமெரிக்கா அவர்களின் ஆராய்ச்சி) மேலும், மனிதனின் மூளை வளர்ச்சிக்கு இவை தடையாக இருப்பதாகவும் கூறுகின்றனர். இதைப் பற்றி நம்மில் பலரும் கவலைப்படத் தேவை இல்லை.
பூண்டும், வெங்காயமும் பல வகையான நன்மைகளைக் கொண்டிருந்தாலும் அதை தினசரி பயன்பாட்டிற்கு உட்கொள்வது நல்லதல்ல என ஆயுர்வேதம் கூறுகிறது. .
வெங்காயம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் முக்கியமான பக்கவிளைவுகளில் ஒன்று வாய் துர்நாற்றம் ஆகும்.
An apple a day keeps the doctor away
A garlic a day, keeps everyone away
இது வெங்காயம் சாப்பிட்ட வாய்க்கும் பொருந்தும்
வலுவான வெங்காயத்தின் வாசனையானது நீண்ட நேரத்திற்கு உங்கள் வாயை விட்டு போகாது. எனவே பொது இடங்களுக்கு செல்லும் முன் அதிகளவு வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
முக்கியமாக பல்டாக்டரிடம் போகும்போது இதைத்தவிர்ப்பது உங்களுக்கு நல்லது. இல்லாவிட்டால் பல் டாக்டர் சாபத்துக்கு நீங்கள் ஆளாக நேரும். வெங்காயம் சாப்பிட்ட வாயை அவர் நெருங்க பயப்பட்டு ஏதாவது எசகு பிசகாக பல்லுக்குப்பதில் உங்கள் நாக்கைப் பிடுங்கிவிடலாம். அதற்கப்புறம் நீங்கள் வெங்காயத்தைப்பார்க்கத்தான் முடியுமே ஒழிய ருசித்து சாப்பிட முடியாது. அதே போல உங்கள் நட்பு நீடிக்க வேண்டும் என்றால் வெங்காய சமாசாரங்கள் சாப்பிட்டவுடன் உங்கள் நெருங்கிய நண்பன் அல்லது நண்பிகளுக்கு அருகில் செல்வதைத்தவிர்க்கவும்.
இப்படி வெங்காய மகிமையைப் பத்தி மணி கணக்கா சொல்லிக்கிட்டே போகலாம்., இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருக்கு.ஆனா?
ஆனா?…… அட, கிச்சனிலிருத்து வெங்காய பஜ்ஜி வாசனை உம்..உம்...ஆளையே தூக்குதே. சரி.சரி.ஆளை விடுங்க. நான் என் பேவரிட் வெங்காயத்தை ஒரு கை பார்க்கணும், அதனாலே வெங்காய மகிமையை இத்தோட முடிச்சிக்கிறேன்.
வெங்காய சாம்பார் சாதம்
பொட டோ ரோஸ்டும் பிரமாதம்
அந்த கௌரவ பிரசாதம்
அதுவே எனக்கு போதும்
ஹஹ்ஹஹ்ஹ ஹ்ஹஹ்ஹ
ஹஹ்ஹஹ்ஹ ஹ்ஹஹ்ஹ
ஹஹ்ஹஹ்ஹ ஹ்ஹஹ்ஹ
வெங்காய பஜ்ஜி அங்கே
அதன் வாசனை வருது இங்கே
சந்தோஷம் எனக்குப்பொங்க
ஆசை வருது அதைத் திங்க
என்று மனதிற்குள் பாடிக்கொண்டே வீட்டின் கிச்சனை நோக்கி ஓடினேன். ( முற்றும்)
12:12 AM
17 comments:
வெங்காய பகிர்வு மிக அருமை.
கடைசி பாரா கல்யாண சமையல் சாதம் ராகத்தில் பாடி பார்த்துக் கொண்டேன்.
அனபின் கோமதி,
வாழ்க வளமுடன்.
இன்று ஊரில் கல்யாணம் தானே. தாமே பாடிக் களிக்க வேண்டியதுதான் அதுதான் முக்கியம்.
நன்றி மா.
வெங்காயத்தை இவ்வளவு அலசி ஆராய்ந்து ஒரு பதிவு இதுவரை வந்ததில்லை.
வெங்காயம் சாப்பிட்ட வாய் வாசனைக்குத்தான் பயப்படவேண்டி இருக்கு.
நேற்று பெரிய வெங்காயம் சிறிய அளவில் கிடைத்தது, 1 1/2 கிலோ 25 ரூபாய்க்கு வாங்கிவந்தேன். வீட்டில் இது எப்படிச் செலவழியும் என மனைவி குறைபட்டுக்கொண்டார்.
சில காய்களோடு வெங்காயம் சேர்ந்தால் (ஹோட்டல் சாப்பாட்டில்... உதாரணமா வெண்டை கேரட் பீட்ரூட்....) எனக்குப் பிடிப்பதில்லை.
அடேங்கப்பா.. வெங்காய புராணம் சூபபரோ சூப்பர். எவ்வளவு விவரங்கள். வெங்காயம் இன்றி உயிர் வாழ முடியுமோ?!! என் மாமியார் ஆஸியுஸில் வெங்காயம் சாப்பிட்டதில்லை. அவர் ஒரு முக்கியமான சுவையை இழக்கிறார் என்று அடிக்கடி சொல்வேன்.
வெங்காயத்துக்காக காசியை விடுவானேன்? வழக்கம்போல அதிகம் உபயோகிக்காத காயை விட்டு விட்டு வந்து விட வேண்டியதுதான்!
அம்மா.....ஜூப்பர் நம்ம வெங்காயத்தைப் பத்தி என்னா அருமை பெருமை!! எழுதியிருக்கிறார்!
என் பாட்டி வெங்காயம் சாப்பிட்டதே இல்லை. ஆனாலும் எங்களுக்காகத் தனி அடுப்பு வைத்துச் செய்து தருவார். மீக்கு வெங்காயம் ரொம்பப் பிடிக்கும். அதுவும் தின்னவேலி பூரி மசாலா வெங்காயாம் இல்லாமல்? ஆஆஆஆஆ நோ நெவர்!
சின்ன வெங்காயம் அந்த டேஸ்ட்!! தின்னவேலிப்பக்கம் கேரளா எல்லாம் சின்ன வெங்காயப்பயன்பாடுதான் கூடுதல் நான் அறிந்தவரையில்.
செம கட்டுரை. இதன் முந்தைய பகுதி வாசிக்க வேண்டுமே. பார்க்கிறேன் அம்மா...
கீதா
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
என்ற காளமேக புலவர் பாடல் நினைவுக்கு வந்தது. முழுப்பாடல்
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்
ஏரகத்து செட்டியாரே!
Jayakumar
ஹாஹாஹா, வெங்காய புராணம் எஸ்விவியை நினைவூட்டியது. இதை எழுதியவர் யாரோ அவர் வெங்காயத்தின் அடிமை என்பதும் புரிகிறது. நல்ல புராணம்.
அன்பு முரளிமா,
வயதாக ஆக வெங்காய மோகம் தணியும்.
அப்பாவின் அல்சருக்கு சிறு வெங்காயத்தைத் தயிரில்
போட்டு சாப்பிடச் சொன்னார்கள்.
அது பலன் கொடுத்தது என்றே நினைக்கிறேன். சமாஸ்ரயணம்
ஆனதும் விட்டு விட்டார்.
தமிழகத்தில் எனக்குத் தெரிந்த இரு குடும்பங்களில்
வெங்காயத்துடன் தான் திருப்பள்ளி எழுச்சியே!!!!
நன்றி மா.
சில காய்களோடு வெங்காயம் சேர்ந்தால் (ஹோட்டல் சாப்பாட்டில்... உதாரணமா வெண்டை கேரட் பீட்ரூட்....) எனக்குப் பிடிப்பதில்லை.""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
Ditto!!!!!!
அன்பு ஸ்ரீராம்,
உங்களுக்கும் பிடிக்குமா!!!
சின்ன மகன் வீட்டில் எல்லோரும் விரும்பி உண்பார்கள். இங்கே
எப்பவாவது உண்டு.
மாமியார் சாப்பிட்டதில்லையா. உலக மஹா அதிசயமாக
இருக்கிறதே.!!!!
பரவாயில்லை மா. சுவை தெரியாத வரை அதை
மிஸ் பண்ண மாட்டோம்:)
இதை எழுதினவர் நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார்
போல. தம்பியிடம் கேட்டேன். எனக்குத் தெரியாதுக்கா
என்கிறான்:)
அவன் வெங்காயம் சாப்பிடுவதை விட்டுப்
பல வருடங்கள் ஆகிறதாம்!!!!!!
வெங்காயத்துக்காக காசியை விடுவானேன்? வழக்கம்போல அதிகம் உபயோகிக்காத காயை விட்டு விட்டு வந்து விட வேண்டியதுதான்!///😂😂அதானே!!! பாலைய்யா சொல்வது போலச் சொல்லணும்:)
ஸ்ரீராம்.
அன்பின் கீதாமா,
வெல்கம் பாக்:)
உண்மைதான் நம்ம ஊரை தின்னவேலின்னு சொன்னவரைப் போற்றுகிறேன். :)
உணவின் ருசியை அறிந்தவர்கள். ரசிகர்கள்.:)
கோவையில் ஷண்முக நாதன் என்பவர் நம்ம ஊர்க்காரர்.அவர்
வீட்டில் வெங்காயம் இல்லாமல்
எதுவும் ஓடாது.:)
மதுரையிலும் சின்ன வெங்காயம் நிறையப்
பயன்படும். வெங்காய மண்டி ரொம்ப ஃபேமஸ்!!!!
சேலத்திலும் பார்த்திருக்கிறேன்.
நன்றி மா.
''மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்
ஏரகத்து செட்டியாரே!""சீரகம் அல்லவோ நாம் வேண்டுவது!!
அன்பு ஜயக்குமார் சார்.
நம் காளமேகம் போலக் கவி பாடுவார் யாரும் உண்டோ!!!
எத்தனை சீராக நம் உடலைச் சொல்லி அகத்தை
மேம்படுத்துகிறார்!!
வெம் காயம் சுக்கானால் யார் வைத்திருப்பார் வீட்டில்.
நாமும் சுக்காகும் வரை அந்த உண்மையை
அறிவதில்லை.
மிக மிக நன்றி சார். மீண்டும் அவ்வை, காள மேகம் வழி செல்ல வேண்டும்.
அருமை அருமை.
ஆமாம் கீதாமா.
ரசித்து எழுதி இருக்கிறார். 45,50 வயதுக்காரராக இருக்கக் கூடும்.:)
இப்போதெல்லாம் வெங்காயம் அவ்வளவு ரசிப்பதில்லை.
இணையத்தில் வெங்காயம் போடாத
சமையலைத் தேடுகிறேன். கால மாற்றம் தான்:)
எஸ்.வி.வி அவர்களும் எழுதி இருக்கிறாரோ
என்னவோ. தேடிப் பார்க்கிறேன்!!!
வெங்காயபுராணம் ரசனை.
வெங்காயத்தை விடுவதாக சொல்லி விட்டு விடாது சாப்பிட்டால் என்னவாகும். ஒருவேளை ஆரோக்கயமாகவே இருப்போம்
Post a Comment