அத்தனை மழையிலும் தளராமல் நின்ற இந்தப் பூக்களைக்
கண்டு மகிழும் வாய்ப்பு .இதுவும் கடவுள் கருணைதான்.
இவை யோசிக்குமா. இடிக்கிறதே என்று ஓட முடியுமா.
நின்றுதானே சமாளிக்கின்றன
என்ற எண்ணங்கள் ஓட ,
நேற்று நட்ட
கருவேப்பிலை செடியையும் பார்த்தேன்.தொட்டியோடு கவிழப் போகிறதே என்று
கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன். அதுவும்
சமாளித்துக் கொண்டு இலைகளை அசைத்துக்
கொண்டிருந்தது. உள்ளே இருந்ததை விட வெளியே
அதற்கு செழிப்பு கூடி இருந்தது என்றே சொல்ல
வேண்டும். இன்னும் ஒருமாதம் தான் குளிர் வந்துவிட்டால்
வீட்டுக்குள் வந்துவிட வேண்டிய செடி.
வினோதமான ஊர். விபரீதக் காற்று.!!
இவைகளை அந்த சூறாவளி தீண்டாமல் விட்டதே என்று நிம்மதி.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆஸ்டிரோ ஃபோபியா..... இதுதான் அந்த பயத்தின் பெயர்.
எப்போது இந்த பயம் ஆரம்பித்தது என்று தெரியாது.
முன்பு பட்டாசு வெடிக்கும் போது உடமபு
அதிர்ந்து ஜுரமே வந்து விட்டதாக அம்மா சொல்வார்.
உலகமே எல்லாவற்றையும் ஆனந்தமாக அனுபவிக்கும்
ஒரு சமாசாரம்., நமக்கு திகிலாகப்
போவது எதனால். ?
இதோ நேற்று வந்த சூறாவளி வார்னிங்க் 7 மணி நேரம் நீடித்தது.
இந்த ஊரின் மேல் பகுதியில் சுற்றி அடித்து நொறுக்கி விட்டு
இந்த ஊரின் கீழ்ப் பகுதியில்
ஆடிக் கொண்டிருந்த போது
உறங்கச் சென்றேன்.
எப்போதும் தூங்கும் பழகிய அறையில்
தூங்காமல் பேரனின் அடக்கமான சின்ன அறையில்
உறங்கினேன். பாவம் அந்தப் பிள்ளை
நீ படுத்துக்கோ பாட்டி என்று சொல்லி
என் அறையில் உட்கார்ந்து
படித்துக் கொண்டிருந்தது.
பெண்ணுக்கு என் முகத்தில் காணப்பட்ட பீதி
இன்னும் சங்கடத்தைக் கொடுத்தது.
https://youtu.be/hXNpkH6MNps
அதாவது அதிக சத்தம் கேட்டால் வரும் பயத்துக்கு மறு பெயர்.:)
உலகில் எதற்கெல்லாம் ஃபோபியா இருக்கிறதோ
தெரியாது.
எல்லோரும் நிதானமாக இருக்க நான் மட்டும் இந்த
இடி மின்னலுக்குப் பயப்பட வேண்டும்?
இந்தக் கேள்விக்குத் தான் விடை தேடிக் கொண்டிருந்தேன்.
என்னைப் போலவே நிறைய ஜீவன்கள்
இந்த ஃபோபியாவுடன் உறவு கொண்டிருக்கிறார்கள்
என்று தெரிந்தது.
இந்த பயத்துக்கான எத்தனையோ அறிகுறிகளில்
அல்லது ஃபிசிகல் பாதிப்புகளில் இரண்டு எனக்கு
ஒத்து வந்தன.
1, இடி சத்தம் கேட்டதும் பாதுகாப்பான மூலையில் சென்று
காதுகளை மூடிக் கொள்வது.
அனேகமாகக் குழந்தைகளும் ,நாய்ச் செல்லங்களும்
இந்த மாதிரி செய்யுமாம். என் போலக் கிழங்களுக்கும்
அது நீடிக்கின்றதால் கொஞ்சம் பலமான பயம்தான்.:)
2, இது போல நேரங்களில் இதயத் துடிப்பு அதிகரித்து,
மூச்சு விடுவதும் சிரமப்படுமாம்.
படபடப்பு உண்டு. மூச்சு சிரமம் எல்லாம் இல்லை.
எனக்கு மின்னல் கண்ணில் படாமல்,
சத்தம் காதில் விழாமல் இருந்தால்
போதும்.!!
சென்னையில் அனேகமாக மாடிப்படி வளைவில்
நல்ல ஜமக்காளம் போட்டுக் கொண்டு,
கம்பளியையும் போர்த்திக் கொண்டு
காதில் பஞ்சும் வைத்துக் கொண்டு விடுவேன்.
இந்தப் பயத்துக்கு நிவாரணம் கிடையாது.
வேண்டுமானால் சைக்கியாட்டரிஸ்ட் கிட்டப்
போய் , கௌன்சலிங்க் எடுத்துகலாம்.
அவரும் ஒரு சிமுலேஷன் போல ஒரு அறையில்
நம்மை உட்கார வைத்து
இடி ,மின்னல் முழங்க வைப்பாராம்.
இரண்டு மூன்று தடவை கேட்டால்
பாதி சரியாக ஹேது உண்டாம்!!
தெரியாமல் தான் கேட்கிறேன். அது பொய்யான
சத்தம் நிஜமில்லை என்று தெரிந்த உடனே நமக்கு
அந்த சூழ்னிலைக்கான பயம் போய்விடுமே.
இந்த ஊர் ரேடியோ, டிவி, மொபைல் ஃபோன் மாதிரி
Your area is under threat of Tornado watch.
please be safe. gO to your basement and stay away from windows
என்று தொடர்ந்து அலறிக் கொண்டிருந்தால்
நான் என்ன,, ஆனானப் பட்ட சிங்கமே
அதிருவார் என்றே நினைக்கிறேன்.
எப்படித் தான் இந்த ஊர் மக்கள்
பழைய நாட்களில் குதிரை மேல் பயணித்தார்களோ.?
பழைய கதைகளில் பாறைக்குப் பின்னால் ஒண்டிக் கொண்டிருக்கும்
கதா நாயகர்களைப் பற்றிப் படித்திருக்கிறேன்:)
அவர்களுக்கு எல்லாம் வெதர் ரேடியோ இல்லையே.
சுற்றுமுற்றும் உணர்ந்து தங்களைக் காப்பாற்றி கொண்டிருப்பார்கள்.
இவ்வளவு ஆனபிறகும் சுவர்க்கோழியின் ரீங்காரம்
கேட்டுக் கொண்டே இருந்தது.
நேற்று மதியம் தென்பட்ட அணில்கள்,
பறவைகள் எல்லாம் மீண்டும் இன்று காலைதான்
வெளியே வந்தன,.
இன்று மாலையும் காற்றும் மழையும் உண்டு என்று நேற்றைக்கே
புண்ணியவான் சொல்லிவிட்டார்.
முன்பெல்லாம் நிறைய ஊர்க்காரர்கள்
அவதிப்பட்டதால் இப்பொழுது இந்த அதி நவீன எச்சரிக்கைகளைக்
கொண்டு வந்திருக்கிறார்கள்.
நம்மூர் மாதிரி பகல் இரண்டு மணி செய்தியில்,
இன்று மாலை மழையோ இடியுடன் கூடிய பலத்த மழையோ
இருக்கலாம் என்று சொல்லும் காலம்
இல்லை.
இந்த சூறாவளியின் போதும்
சாலையில் விரையும் வாகனங்களும்
சைக்கிள்களும் ஓயவில்லை.
அவரவர் வேலையை வேறு யார் செய்யமுடியும்.
மொத்தத்தில் ஒரு நொடி கூட
அஜாக்கிரதையாக இருக்க முடியாத மணி
நேரங்கள் மூளையில் பதிவாகி விடுகின்றன.
எல்லோரும் நலமுடன் இருப்போம்.
16 comments:
இவைகளை அந்த சூறாவளி தீண்டாமல் விட்டதே என்று நிம்மதி.//
பெரிய பெரிய மரம் வேரோடு சாய்ந்து இருக்கும் போது சிறு மலர்களை அது தீண்டாமல் விட்டது நிம்மதிதான்.
இடி, மின்னல், தொடர்ந்து கேட்டால் பயமாகத்தான் இருக்கும். சென்னையில் மாடிப்படி வளவில் அமர்ந்து கொள்ளும் காட்சி மனதில் வந்தது.
பறவைகள், அணில்கள் , முயல்கள் எல்லாம் மழை, புயல், இடி, மின்னல் காலத்தில் என்று நினைப்பேன். எப்படியோ மறு நாள் வெளியே வந்தது மகிழ்ச்சி.
கவனமாக இருங்கள், பேரன் , மகள் எல்லோரும் இருக்கும் போது கவலைபடாமல் இருங்கள். தனிமை இல்லை அல்லவா!
இறைவன் பாதிப்பு இல்லாமல் எல்லோரையும் காக்க வேண்டும்.
காணொளிகள் பார்த்தேன். பயங்கரமாக இருக்கிறது.
படத்தின் காட்சிகள் பயமுறுத்துகின்றன. அதில் மாட்டினால் என்ன ஆவது என்று தோன்றுகிறது. உங்கள் பயம் நியாயமானதுதான். அதிலேயே வளர்ந்து வந்தவர்களுக்கு அது பழகி விடுகிறது. எவ்வளவோ நம் நாட்டைப் பற்றி குறைப்படுகிறோம். இதுபோல எல்லாம் இல்லாமல் வைத்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். நம் நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லோருக்கும் செய்ய முடியாதே.. சாலையோரங்களில் வசிப்பவர்களே அதிகம். எங்கே போவார்கள் அவர்கள் ஒவ்வொருமுறையும்...
வணக்கம் சகோதரி
தங்கள் பதிவில் சூறாவளி பற்றி எழுதியிருந்ததை கண்டு கலக்கமடைந்தேன். பத்திரமாக இருங்கள். பயங்கள் நம் எண்ணங்களை ஊக்குவித்து மனதை கலக்கமுறச் செய்வது உண்மைதான். அதைப்பற்றியும் விபரமாக சொல்லியிருக்கிறீர்கள். நானும் சில பங்கள் காரணமாக இவ்விதம் பதட்டப்பட்டுள்ளேன். பட்டுக் கொண்டுமிருக்கிறேன். காணொளிகளை கண்டேன். சிகாகோவில் நீங்கள் இருக்கும் இடத்தில் மட்டுந்தான் இது போல் அடிக்கடி வருகிறதா? என் பெரிய பையன் அங்கு அடிக்கடி நவம்பர் to பிப்ரவரி மாதங்களில் அலுவலக வேலைக்காக வந்துள்ளார். அவர் கூறும் போது பனிப்புயல் பற்றி கூறியுள்ளார். மழை, காற்றோடு இது மிக பயங்கரமாக இருக்கிறது. கடவுள்தான் நமக்கு எப்போதும் துணையாக இருக்க வேண்டும். நீங்கள் கவனமாக இருங்கள்.நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அங்கே வசிப்பவர்களை நினைத்தால் கவலையாகத்தான் இருக்கிறது
எனக்கும் இடி மின்னல் பயம் நிரம்பவே உண்டு.
ஆனால் மழைக்கோ டொர்னடோவுக்கோ பயப்படுவேன்னு தோன்றவில்லை.
டிவிஸ்டர், அது சம்பந்தமான படங்கள்லாம் ஆர்வத்துடன் பார்த்திருக்கிறேன். எல்லாம் கிராபிக்ஸ் ஒர்க் என்றே நினைத்திருக்கிறேன். உண்மையில் இப்படி இருக்கும் என்ற எண்ணம் வரலை.
எந்த வழியாகச் செல்லும், நம் வீடு பாதிக்கப்படுமா என்பதெல்லாம் தெரியாதது உண்மையில் கலக்கத்துக்குரியது.
அன்பின் கோமதி வாழ்க வளமுடன்.
இதை எழுதி முடிக்கும் போது
வெதர் ராடார் சொல்லாத மின்னல் இடி திடீரென்று வந்து
விட்டது.
ஒரு நிமிஷம் சூரிய வெளிச்சத்தில் மிதந்து கொண்டிருந்தோம்
அடுத்த செகண்ட் சீறிக் கொண்டு வந்த புயல். ஒரே
ஒரு வித்யாசம்., மகளும் பேரனும்
பள்ளிக்கூடத்திலிருந்து புறப்பட்டு விட்டார்கள்.:(
மாப்பிள்ளை அவர்களிடத்தில்
பத்திரமாக வந்து சேரும்படி சொன்னார்.
மகளுக்குப் பயம் கிடையாது.
அந்த அரைமணி நேரம் நம் பாபாவின்
தரிசனம் பார்த்துக் கொண்டு வேறொன்றும்
நான் நினைக்கவில்லை.
அவள் வந்து உள்ளே வண்டியை நிறுத்தும் வரை எனக்கு உயிரே
இல்லை.
இந்த ஊர் இப்படித்தாம்மா என்று இரவு
சாப்பாட்டைக் கவனிக்கப் போய்விட்டாள்.
நம் ஊரில் கல்லுக் கட்டிடம் இங்கே
மரக் கட்டிடம் அதுதாம்மா பெரிய வித்தியாசம்.
தெய்வம் எப்போதும் நம் அருகில்
என்று இருக்கக் கற்றுக் கொடுக்கும் தருணங்கள் இவை.
மிக மிக நன்றி அன்பு தங்கச்சி.
உங்கள் புரிதலுக்கும் அன்புக்கும் நன்றி.
அன்பின் ஸ்ரீராம்.
எங்கள் ப்ளாகின் 4000ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.
வளமுடன் இருங்கள்.
இடம் மாறியதால் வரும் சிரமங்களில்
இது ஒன்றுதான் என்ன மிகவும் கலக்கி விடுகிறது.
மற்றபடி நான் சுகமாக இருக்கீறேன்.
நம் ஊரில் சாலையோர மக்களை நான் கடக்கும் போது மிக
மிக வருத்தமாக இருக்கும்.
ஏதோ சில வெள்ளங்கள் நம்மளையும் மீறி மிரட்டி விட்டுப் போகின்றன. எத்தனையோ சேதங்கள்.
எல்லாம் மனித குறுக்கீட்டினால் இயற்கையின் சீற்றம்
பாதிக்கும் நேரங்கள்.
இங்கே அந்த விஷயங்களில் மிக அக்கறை எடுத்துக்
கொள்கிறார்கள்.
இந்த சூறாவளி வேளைகளில்
போலீஸ் வண்டிகள் சுற்றிக் கொண்டே
இருக்கும்.
அவர்களுக்குக் காஃபி, பிஸ்கட்ஸ் என்று யாராவது போகும் வழியில்
கொடுத்தால் உண்டு,.
இறைவன் எல்லோரையும் காக்கட்டும் மா.
அன்பின் கமலாமா,
மிக நன்றி.
இந்த நகர் சமவெளியில் இருப்பதால்
வெப்பம் அதிகரிக்கும் போது காற்று மண்டலம்
வெகுவாக ஈர்க்கப்படுகிறது.
குளிர்காலத்தில் கூட இந்த ஊழிக்காற்று
வரும்.
எங்கேயோ மாட்டிக் கொண்டோமே என்று பயமாக
இருக்கும்.
பயங்கள் நம்மை வெவ்வேறு விதமாகப் படுத்துகின்றன.
நமக்காக் இல்லாவிட்டால் நம் குழந்தைகளுக்காக அவர்களின் குழந்தைகளுக்காகப்
பயங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும்.
இறைவன் கருணையால் தான் மீண்டு வர வேண்டும்.
உங்கள் மகன் எப்போது வந்தாலும் நலமுடன்
இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இந்த வருடம் கொஞ்சம் கூடுதல் மிரட்டல்.
உயிர் சேதங்கள் இருக்காது. அந்த வகையில்
நன்மை இல்லையாமா.
மிக நன்றி மா.
அன்பின் ஜெயக்குமார்,
அவரவர் வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.
உயிர் சேதம் குறைவுதான்.
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நன்றி மா,
அன்பின் முரளிமா,
வெறும் மழைக்கு யார் பயப்படப் போகிறார்கள்?
டொர்னாடோ வார்னிங்க் உடன்
வரும் மழை இடி மின்னல்
அதற்கப்புறம் வரும் சுழல் காற்று
....பக்கத்து ஊருக்கு வரும்போதே
இங்கே படபடக்கும் காற்று,சத்தமும்.
அத்தனை சுலபமாக ரசிக்க முடியாது மா.
நேற்று அடித்த மழையில் நிறைய
பாதிப்பு.
டிவிஸ்டர் படம் கொஞ்சம் க்ராஃபிக்ஸ்
இருந்தாலும் அது நடந்தது உண்மை.
அது டெக்ஸாஸ் இல்லை கான்சாஸ் இருக்கலாம்.
plains என்பதால் பாதிப்பு அதிகம்.
இயற்கையின் சீற்றம் பயம் கொள்ளத்தான் செய்யும். இதுவும் கடந்து போக வேண்டுவோம்.
அன்பின் மாதேவி,
கிட்டத்தட்ட 10 வருடங்களாக நாம் தொடர்பில் இருக்கிறோம் என்பதே என் பெருமை முன்னே மாதிரி அழகிய தமிழில்
நீங்கள் பதிவிட்டால் நன்றக இருக்கும். பிரார்த்தித்துக் கொள்கிறேன்
நம்மூரில் புரட்டாசி மாதம் மண்ணுருகக் காயும், பொன்னுருகப் பெய்யும்'
என்று பழமொழி சொல்வார்கள்.
அது இங்கே ஆகஸ்ட்டு மாதத்திற்குப் பொருந்துகிறது மா. நலமுடன் இருங்கள்,.
இயற்கைச் சீற்றத்தின் முன் மனிதர்கள் எம்மாத்திரம் என்பதை ஒவ்வொரு முறையும் நமக்குச் சொல்லி விட்டுப் போகின்றன இம்மாதிரியான விஷயங்கள். இந்தியாவிலும், அதிலும் வட இந்தியாவின் மலைப்பிரதேசங்களில் அதிக மழை, Cloud Burst போன்ற விஷயங்களால் நிறைய விபத்துகள் - நேற்று கூட ஒரு மலைச்சரிவு ஹிமாச்சலின் ரெக்காங்க் பியோ பகுதியில்! இது வரை 13 பேர் உயிரிழப்பு - அதிக மழையின் காரணமாக விபத்துப் பகுதியில் தேடுதல் படலம் கூட நடக்க முடியவில்லை என்பது இன்னும் சோகம்! அதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
இடி, மின்னல், சூறாவளி - பயம் பலருக்கும் இருக்கிறது.
உண்மைதான் அன்பு வெங்கட்.
இமாசலப் பிரதேசத்தின் பயங்கரங்களையும், கங்கை நதி வெள்ளத்தில்
மூழ்கும் அனாவசிய விடுதிகளையும்,
எல்லாருடைய எச்சரிக்கைகளையும் மீறி லாபம் பார்க்க விரும்பும்
முதலைகளையும்
கண்டு மனம் மிக வருந்துகிறது.
இங்கே உயிர்கள் மதிக்கப் படுகின்றன.
இயற்கையின் சீற்றம் நம்மை உலுக்கத்தான் செய்கிறது.
நீங்கள் சென்று வராத இடங்கள் மிகக் குறைவும். உங்கள் கருத்தை மிகவும் மதிக்கிறேன்.
Post a Comment