Blog Archive

Wednesday, March 17, 2021

80, 90 களின் நினைவுகளில்.....

85 களின் நினைவுகளில்.....

சில குழந்தைகள் கல்லூரிகளில் சேர்ந்தார்கள். சிலர்
 பள்ளியில் இருந்தார்கள்.

வரிசையாக வீட்டுக் குழந்தைகளும் தோழிகளின் குழந்தைகளும் 
பெரியவர்கள் ஆகிக் கொண்டிருந்த காலம்.

வெளி மானிலங்களுக்குச் சென்று படித்த 
சிங்கத்தின் அக்கா மகன்,
சில நாட்கள் நம் வீட்டுக்கும் வருவான்.
அவனுக்கு மிகப் பிடித்த பாடல்
நம் கீதா சாம்பசிவம் முந்தைய பதிவில் சொல்லி
இருந்த ''சிட்டி ஆயி ஹை '' பாடல். தான்.
வெளினாடு போகப் போகும் தன்னை நினைத்து

சோகப்படும் அன்னையின் நினைவு வர அவன் கண்களும்
கலங்கும்,
''மாமி, அம்மாவிடம்  நிறையப் பேசுங்கள்''
என்றே சொல்லிச் சென்றான்.
இன்றும் பேரன் பேத்திகளோடு நன்றாக இருக்கிறான்.

அன்புத் தோழி  கீதா சாம்பசிவம்
சொல்வது போல எத்தனையோ தபால்,எத்தனையோ
கடிதங்கள் நம் வாழ்வைச் செழிப்பாக்கின.

தாயின் 3 பக்கக் கடிதத்திற்கு ஒரு பக்கத்தில்
பதில் சொல்லும் புத்திர, புத்திரிகள்:)

புதிதாக மணம் புரிந்து அமெரிக்கா சென்ற மகளின் கடிதத்தைப் பிரிக்கக்
கூட மனம் இல்லாமல்
கண்ணீர் விட்ட அம்மாவையும் எனக்குத் தெரியும்.
நான் 10 வருடங்கள் கழித்து இதே போலக்
குழந்தைகளின் குரலுக்கும்
கடிதங்களுக்கும் காத்திருக்கப் போகிறேன் என்று அப்போது தெரியாது.

வெளியூரிலிருந்தாலும் உள்ளூரிலிருந்தாலும்

ஒரே ஒரு ஃபோன் செய்ய மாட்டாளா, என்று ஏங்கிய என் பெற்றோரையும்
நினைவில் பதிகிறேன்.
தன் வெற்றிகளை அன்புடன் பகிர்ந்து கொண்ட
பெரிய தம்பி எல்லாத்தையும் அந்த தபால் அட்டையில் எழுத முயற்சிப்பான்.
சின்னவனுக்கோ அவ்வளவு பொறுமை கிடையாது,
கோவையிலிருந்து பஸ் ஏறிப் பார்க்க வந்து விடுவான்.

அவர்களைப் பார்த்துப் பார்த்தே எங்கள் குழந்தைகளும் 
பொறுப்புடன் திகழ்கிறார்கள்.

ஒருத்தருக்கு ஒருத்தர் மனம்விட்டுப் பேச வேண்டும். மற்றவர்களின்
சுகதுக்கங்களுக்கு  சந்தோஷமும் ஆதரவும்
சொல்ல வேண்டும்.
இணையத்தின் இணையற்ற தபால்காரர்
நம் வலைப் பதிவுகள்.

என்றும் எல்லோரும் நலத்துடனும் , மகிழ்ச்சியுடனும் இருக்க 
இறைவன் அருளட்டும்.

21 comments:

நெல்லைத் தமிழன் said...

ஆஹ்ஹா... தபால்காரர் நம் வாழ்வில் கொண்டுவந்த மகிழ்ச்சியை நினைவில் கொண்டுவந்துவிட்டீர்கள்.

எப்போதுமே அடுத்த தலைமுறை, முந்தைய தலைமுறைக்கு கொஞ்சம் குறைவாகத்தான் பாசத்தைக் காண்பிக்கிறதோ?

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
ஆமாம்மா. நம் வாழ்வின் ஆதாரம் நல்ல
சொந்தங்களையும் கொண்டாடும் தபால் துறையைச் சேர்ந்தவர் என் அப்பா.
இப்பொழுதும் தபால அலுவகங்களைக்
காணும் போது மனம் மகிழ்ச்சியுறும் பந்தம் அது.
இந்த ஊரிலும் தபால் அலுவலகங்களுக்கு
மகளுடன் செல்வேன். ஜரூராக வேலை செய்து கொண்டிருப்பார்கள்!!!!
நன்றிமா.

கோமதி அரசு said...

பாடல்கள் இனிமை.

கடிதங்கள் கொண்டு வந்த இன்ப துனபங்கள், பாசங்கள், பரிவுகள் எத்தனை எத்தனை! , கடிதம் வர காத்து இருந்த காலங்கள் எல்லாம் மிக இனிமையானவை.

நான் கல்யாணம் ஆகி கணவர் வீட்டுக்கு செல்லும் போது என் அம்மா அப்பா, குடும்பத்தை பிரிந்து வரும் போது அழது பக்கத்து வீட்டு அத்தையிடம் அம்மாவை பார்த்துகொள்ள சொல்லியது எல்லாம் நினைவுகளில்.


பதிவு நிறைய அன்பான மலரும் நினைவுகளை சொல்லியது .

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

இனிய நினைவுகளை வார்த்தைகளால் தொகுத்து கட்டி மணம் வீசும் மாலையாக்கியிருக்கிறீர்கள். அந்த காலத்தில் சென்னையிலிருக்கும் போது எங்கள் அம்மாவிடமிருந்து வரும் கடிதத்திற்காக காத்திருப்பேன்.அதை விட அம்மா விழிகள் பூத்திருக்க காத்திருந்த நாட்களை நான் ஊருக்கு செல்லும் போது, அவ்வளவு வருத்தத்துடன் சொல்லி புலம்புவார்."ஒரு கால் கடிதாசியில் நலமாவது வாரத்துக்கு முறை எழுதி போடக்கூடாதா? கதையெல்லாம் அதற்கு பிறகு ஒரு கடிதத்தில் நிதானமாக நேரம் பார்த்து அடித்துக் கொள். வாராவாரம் உன் கடிதத்தை பார்த்தால் உன்னைப் பார்ப்பது போன்று இருக்கிறது." இதை சொல்வதற்குள் அவர் கண்களில் ஆறாக நீர் பெருகும். இதை எழுதும் போதும் அந்த நாளைய நினைவில் என் மனமும், கண்களும் கலங்குகிறது.

இணைய தபால்காரரைப்பற்றி அழகாக சொல்லியிருக்கிறீர்கள். (நம் பதிவுகள்) அருமையாக எழுதியுள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,

அப்பா எப்பொழுதுமே சொல்வார். கீழ் நோக்கி ஓடும் தண்ணீர் என்று.

என் பெற்றோர் மிக மிகப்பாசமாக இருப்பார்கள்.
அதனாலயே நான் சரியாக நடந்து கொள்ளவில்லையோ
என்று தோன்றும்.:(
என் மகள், இல்லம்மா நீ தாத்தா பாட்டியிடம் மிக
நன்றாகப் பார்த்துக்கொண்டாய்.
ஹாஸ்பிட்டலில் நீ தானேம்மா கூட இருந்தாய் என்றெல்லாம்
சொல்கிறாள்.

எங்கள் குழந்தைகள் மிக மிக அக்கறையுடன் நடந்து கொள்வார்கள்.
இறைவன் நம்மிடம் இரக்கத்துடன் தான் இருக்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,நம் அடுத்த தலைமுறை வரை
அஞ்சல் கையில் வருவது இருந்தது.

பேரன் பேத்திகளுக்கும் வாழ்த்தட்டைகள் அவ்வளவு ஸ்டாம்ப் வாங்கி அனுப்பி இருக்கிறேன்.
இண்டர்னெட் வந்தது... எல்லாம் இணைய மயமாகிவிட்டது.

நீங்கள் அடுத்த வீட்டு அம்மாவிடம் சொல்லி
விடைபெறும் காட்சி

கண்ணில் நிற்கிறது. நல்ல பாசம் மிக்க மகள்.
கடிதங்கள் நம் மனதோடு பேசும். வாழ்வை நிறைவாக்கும்.
வாழ்க வளமுடன் என் அன்புத் தங்கச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
கால் கடுதாசி!!!!!! எத்தனை நாட்களாச்சு இந்த சொல் கேட்டு!!!!
நீங்கள் எழுதி இருப்பது அத்தனையும் உண்மை.

என் அம்மாவும் இதையே சொல்வார்.
மூன்று குழந்தைகளும்
ஒரு அளவு வளரும் வரையில் எனக்கு
நிஜமாகவே நேரம் கிடைப்பது அரிதாக
இருந்த காலம்.

இத்தனைக்கும் என் தந்தை பத்து பதினைந்து இன்லாண்ட் லெட்டர்களை
விலாசம் எழுதிக் கொடுப்பார்.
வாரம் ஒரு முறை அம்மாவுக்கு இரண்டு லைன் எழுது
என்று சொல்லியே கொடுப்பார்.

ஏன் மந்தமாக இருந்தேன் என்று தெரியவில்லை
இப்போதும்.
உங்கள் அம்மாவையும் உங்களையும் நினைக்கும் போது
தொண்டை அடைத்துக் கொள்கிறது.

வல்லிசிம்ஹன் said...

நீங்களும், அன்பு கோமதியும் சொல்லி இருப்பதை எனக்கு வந்த இன்னோரு கடிதமாகவே எண்ணுகிறேன்.
இந்தப் பாசம் தான் நம் வாழ்க்கையின் அடிப்படை.
என்றும் நலமுடன் இருங்கள் அம்மா.

Angel said...

அம்மா அப்பாவுக்கு ஓரிரண்டு கடிதங்கள் எழுதியதோடு சரி பிறகு  தொலைபேசியில் அழைப்பேன் .ஆனா எங்கம்மாக்கு எழுதுவதே பிடிக்கும்  எங்க மகளுக்கும் கடிதம் எழுதினார் .வாழ்த்தட்டைகளும் தொடர்ந்து வரம் 2012 வரை..அது பொற்காலம் .ஒவ்வொரு பதிவுகளுக்கும் சென்று பதில் அளிப்பதும் ஆனந்தம் தான் 

Angel said...

என் கணவர் திருமணத்துக்குமுன் எழுதிய கடிதம் அவருக்கே போய் சேர்ந்த காமெடியும் உண்டு :) பின்னே அனுப்புனர் பெறுநர் ரெண்டிலும் அவர் பெயரையே எழுதிட்டார் :)

ஸ்ரீராம். said...

கடிதக் காலங்கள்!  அவை மிக இனிமையானவை.  காத்திருத்தல், வராவிட்டால் வரும் பாசக்கோபமும், கொஞ்சம் லேட்டாகவாவது வந்து விட்டால் வரும் சந்தோஷமும், அதற்குள் அவசரப்பட்டு ஆத்திரத்தில் நாம் ஒரு லெட்டர் எழுதி இருந்தால் அதைச் சமாளிக்க அவசரஅவசரமாய் அடுத்த அடஜஸ்ட்மென்ட் கடிதமும்....

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
ஆமாம் உங்கள் திருமணம் போது, தொலைபேசுவது சுலபமாகிவிட்டது .

உங்க வீட்டுக்காரரின் வேகம் புரிகிறது.
சிங்கம் எனக்கு பசுமலைக்குக் கடிதம் எழுதுவார்.

சேலத்திலிருந்து.
PASUMALLAI என்று விலாசம் பார்த்து அப்பா சிரிப்பார்.
அவர் வந்ததும் கேட்டேன்.

சீக்கிரம் வந்து சேரும்னு அப்படி எழுதினேன் என்று சிரிப்பார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
:)
டிட்டோ.
நான் தான் அவரிடம் சண்டை போடுவேன்.
சனிக்கிழமை தான் அவருக்கு நேரம் கிடைக்கும்.
ஒரு கவர் நிறைய பத்துபக்கம் எழுதி அனுப்புவார்.
நான் அதற்குள் மூன்று கடிதங்கள்
அனுப்பிவிடுவேன்.
மிக மிக இனிமையான காலங்கள்.
எல்லாக் கடிதங்களிலும் ஒரே ஒரு கேள்வி,,,மீண்டும் மீண்டும்.
எப்போதிரும்பி வருவே:)

வல்லிசிம்ஹன் said...

உங்கள் அம்மா, பேத்தியை நிறைய மிஸ்
செய்திருப்பார் அன்பு ஏஞ்சல்.
மகள் நன்றாக வளர்ந்து
நலமுடன் வாழட்டும்.

Geetha Sambasivam said...

அந்தக் காலம், அது அது அது ஒரு பொற்காலம். இந்தக் காலம் இது இது இது ஏனோ தானோ காலம்! :( என்ன சொல்லறது. இந்த ஸ்பீட் போஸ்டெல்லாம் அறிமுகமே இல்லாத அந்தக் காலத்தில் நாம் எழுதிய கடிதங்கள் அடுத்த நாளே போய்ச் சேர்ந்துவிடும். வீட்டில்தபால்காரர் மணி அடித்தால் ஓடிப்போய் முதலில் வாங்குவதில் போட்டி! அதெல்லாம் இப்போக் கிடைக்குமா? நான் இரண்டாவது பிரசவத்துக்காக மதுரைக்கு வந்தப்போ ராஜஸ்தானில் இருந்து என் கணவர் எழுதும் கடிதங்கள் மூன்றாம் நாள் காலை முதல் டெலிவரியில் வந்துடும். அதைப் படிச்சுப் பார்த்து பதில் எழுதிப் போட்டுட்டுத் தான் சாப்பிட உட்காருவேன். அம்மா இதை எல்லாம் நிதானமாய்ப் பண்ணக் கூடாதா? முதலில் சாப்பிடு என்பார். அதெல்லாம் கேட்டதே இல்லை. இப்போ அந்த நினைவுகள் எல்லாம் பசுமரத்தாணியாய் மனதில் பதிந்துள்ளது.

Geetha Sambasivam said...

சிட்டி ஆயி ஹை பாடலைப் பகிர்ந்ததுக்கு ரொம்ப நன்றி ரேவதி.

Geetha Sambasivam said...

மறுபடியும் சில ஆண்டுகள் கழிச்சுக் கேட்ட இந்தப்பாடல் கண்ணீர் விட்டு அழும்படி செய்து விட்டது. அதில் கடைசியில் சொல்லி இருக்கும் வரிகள் அப்படியே பொருந்திப் போகின்றனவே! ஆனாலும் நம் கைகளில் எதுவும் இல்லை. அவரவர் வாழ்க்கை!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
அந்தப் பாடலை, பங்கஜ் உதாஸ் அப்படி உணர்ந்து பாடி இருக்கிறார்.
ஆமாம் எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கை.
அவர்கள் இருக்கும் ஊர் பிடித்துப் போகிறது.
யாரும் சொந்த ஊருக்குத் திரும்பி வரும் எண்ணத்தில்
இல்லை என்று தெரிகிறது.
நீங்கள் சொல்வது போல நம் மனத்தைத்தான் திடப் படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆமாம் 60,70 களில் கடிதங்கள் சீக்கிரமே
ஊரைச் சென்று அடைந்துவிடும்.

கணவன் மனைவியிடையே பிரிவுத் துயரம் அதிகம் தெரியாமல் இருக்க இதக் கடிதங்கள் தான்
எவ்வளவு உதவின.
மாமா கடிதம் எழுதியதும் நீங்கள் முத்துப் போல உட்கார்ந்து உடனே
பதில் எழுதியதும்
மிகச் சிறப்பு.
அப்போது பதினோரு பன்னிரண்டு மணி அளவில்
தபால் வரும் இல்லையா.

மிக சீக்கிரமாகச் சென்று விட்டது
அந்தக் காலம்.
எல்லா மாற்றங்களையும் பார்த்துக் கொண்டே வருகிறோம்.
நலமுடன் இருங்கள் அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

இரண்டுமே இனிய பாடல்கள் தான். கேட்டு ரசித்தவை. மீண்டும் கேட்க வேண்டும் - மாலையில்!

கடிதங்கள் தந்த மகிழ்ச்சியை இப்போதைய வசதிகள் நிச்சயம் தருவதில்லை. அளவுக்கு அதிகமாக எது கிடைத்தாலும், அதனை மனது அத்தனை ரசிப்பதில்லை. கடிதங்களுக்காகக் காத்திருந்த, பதிலளித்த ஆரம்ப தில்லி நாட்கள் நினைவில் இன்றைக்கும்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.

முதன் முதலில் தில்லி சென்று அங்கே இருக்கும் போது
உங்கள் மன நிலையும் பெற்றோர் மன நிலையையும் ஊகிக்க முடிகிறது.

அஞ்சல்களும் சீக்கிரம் வந்த காலம் அது.
நம் மனமெல்லாம் அதனுடன் செல்லும்.

அது ஒரு தனி,இனிய காலம்.
ஆனால் காத்திருப்பது சில நேரம் கடினம்.
இப்போது நொடி நேரத்தில்
அனைவரையும் அடைய முடிகிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

பாடல்கள் அருமை
கடிதம் இன்று இல்லாமலேயல்லவா போய்விட்டது
கடிதத்தின் அருமையை இன்றைய தலைமுறையினர் அறியமாட்டார்கள்