Blog Archive

Monday, December 07, 2020

அன்றாட களிப்புகள் சில .........

கௌரி கல்யாண  வைபோகமே.

அன்புத் தோழியின்  பேத்தி திருமணம் 
பிரமாதமாக  நடந்தேறியது. சென்னையில் இப்போது வெகுவாக நோய்த் தொற்று குறைந்திருப்பதாகச் சொன்னார்கள்.++++++++++++++++++++++++++


வல்லிசிம்ஹன்
+++++++++++++++++++
கல்யாணப் பெண் ஆஸ்திரேலியாவில் படிப்பவள்.
மணமகனும் அங்கேயே கிடைத்ததால்   இணைய வழி நிச்சயம் செய்து 

இரு வார விடுமுறையில் வந்தவர்களுக்குத் திருமணம் செய்து அனுப்பி வைத்தாச்சு.

ஜெட் ஸ்பீட்  என்றால் இதுதான்.

பெரிய வீடு என்பதால்   , வீட்டுக் கூடத்தில் முக்கிய உறவினர்களை 
மட்டும் அழைத்து  எந்த முக்கிய   பத்ததிகளையும் 
விடாமல் ஒரு வேளை    பந்தி , நலங்கு  என்று  நிறைவேற்றினார்கள்.

மற்றவர்கள் இணையத்தில் கண்டு களி த் தார்கள்.
எல்லோருக்கும் விஸ்தாரமான ரிசப்ஷன் வருகிற வருடம்  தருவதாக உறுதி 
சொல்லப்பட்டிருக்கிறது.

வாழ்க மணமக்கள் .

இந்தத் திரை அரங்கம் திண்டுக்கல்லில் நாங்கள் 
பல திரைப்படங்களைக் கண்டு மகிழ்ந்த இடம்.
இப்போது இடிக்கப் போகிறார்களாம்.
பழைய செய்திதான். இந்தத் தொற்று பல ஆயிரக்கணக்கான  மக்களின் 

வாழ்வில் பல சோகங்களைக் கொண்டுவந்துவிட்டது.
அதில் ஒன்று சினிமா திரை அரங்குகள்.

வாழ்க்கையின்  ஒரு  பெரிய பங்கு  திரைப்படங்களுக்கு உண்டு,.
இப்போது எல்லாமே இணையத்தில் கிடைக்கும் காலம்.

நாங்கள் வளரும் காலத்தில்  குதிரை வண்டியில் ஏறி சினிமா பார்க்கப் 
போவதே ஒரு விழா,.
வெளியூர்ப்பயணங்கள்   ஒரு விழா.

எல்லாமே நிறைந்திருப்பது போல நாட்கள் நகரும்.
தோழிகளுடன்  பேசிக் கழித்த நாட்கள் 
இப்போது வாட்சப் வாசகர்களோடு   ஓடுகிறது.

நமக்கென்று  ஒரு வளையம். நட்பு, அன்பு எல்லாம் சேர்ந்து 
நம்மை நடத்துகிறது. 
இணையத்துக்கு என் நன்றிகள்.

எங்கள் வீட்டில் இருந்து கொண்டு


  காவல் செய்து ,செடிகளைக் கவனித்துக் கொண்டு வந்தவர் இரண்டு நாட்கள் முன் இறைவனடி சேர்ந்தார்.
அவர் அங்கே  ஐயப்பனார் போல இருந்ததால் நான் மிக நிம்மதியாக இருந்தேன்,.
அவரது பேரன் பேத்திகள் மாலை 
நேரத்தில் வந்து விளையாடும்.
வீடே    களிப்பில்  அமிழ்ந்து போல ஒரு தோற்றம் கொடுக்கும்.
இனி அவர் குடும்பத்தார் மீண்டு வரவேண்டும் 
என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் அன்பு அருணாச்சலத்துக்கு 
விடை கொடுக்கிறோம்.
அவரை மாதிரி நேர்மையான மனிதரைக் காண்பது மிக மிக அபூர்வம்.இன்று முதல் அவர் புதல்வர்கள் 
முறை போட்டு இருக்கப் போகிறார்கள்.கடவுளுக்கு 
நன்றி.

எல்லோரும் வாழ்க வளமுடன்.









13 comments:

Geetha Sambasivam said...

வித்தியாசமான செய்திகள். முதல் செய்தியின் மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள், ஆசிகள். திரை அரங்கு இடிக்கப்படுவது குறித்து எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. மதுரை தங்கம் தியேட்டரும் ஷாப்பிங் மாலாக மாறிவிட்டதாகச் சொன்னார்கள். அவை எல்லாம் ஒரு காலத்தின் அந்த அந்த ஊரின் அடையாளங்கள். இப்போது காலம் முற்றிலும் மாறி விட்டதே!

Bhanumathy V said...

திருமணத்தை விரைவாக முடித்தவர்களை பாராட்டலாம். நாங்கள் கூட ஆன் லைனில் ஒரு திருமணம், இரண்டு நிச்சயதார்த்தங்கள் பார்த்தோம்.

நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பது கஷ்டம். அப்படிப்பட்டவர்களின் மறைவு அதைவிட கஷ்டம்.

திருச்சியில் பல தியேட்டர்கள் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸாக மாறி விட்டது என்று அறிந்த பொழுது அந்த தியேட்டர்களுக்கு படம் பார்க்கச் சென்றதுதான் நினைவுக்கு வந்தது. நீங்கள் சொல்லியிருப்பது போல குதிரை வண்டியில் செல்வோம். மாரீஸ்ராக், மாரீஸ் ஃபோர்ட், மாரீஸ் 70mm என்ற மல்டி பிளக்ஸில் ஒன்றே ஒன்றுதான் இயங்குகிறது என்று அறிந்த பொழுது கூட அடப்பாவமே என்று தோன்றியது.

Bhanumathy. V said...

செய்திகளை இப்படி கதம்பமாக முதல் முறையாக வெளியிடுகிறீர்களோ?

ஸ்ரீராம். said...

முன்பே திரை அரங்குகளுக்கு வரவேற்பு குறைந்ததால் வேறு கல்யாண மகால்களாக, ஷாப்பிங் நாள்களாக மாற்றிக் கொண்டிருந்தார்கள்.  இப்போது இந்தத் தோரின் விளைவுகளால் நிலைமை இன்னும் மோசம்.  பத்து சதவிகிதத்துக்கும் குறைவாகவே தியேட்டருக்கு வருகிறார்களாம் மக்கள்.  செய்தி படித்தேன்.

ஸ்ரீராம். said...

திருமணம் செய்துகொண்ட தம்பதியருக்கு வாழ்த்துகள்.  வாழ்க வளமுடன்.  

ஸ்ரீராம். said...

திரு அருணாச்சலம் மறைவு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.  நீங்கள் சொல்வதுபோல அந்தக் குடும்பம் அதிலிருந்து மீண்டு வரவேண்டும்.

கரந்தை ஜெயக்குமார் said...

இந்தத் திரையரங்கைப் பற்றி இயக்குநர் மிஸ்கின் எழுதியிருந்தார்

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இனிய காலை வணக்கம்.
ஆமாம் மதுரை நிறைய மாறிவிட்டது.

நாமே இந்த 10 மாதங்களில் எத்தனையோ விஷயங்களுக்குப் பழகிவிட்டோம்.

பல செய்திகள் மனதில் வந்து விழும்போது
எதைச் சொல்வது எதை விடுவது
என்று தோன்றியது.
எல்லாவற்றையும் பதிந்து விடலாம் என்ற நோக்கத்தில வந்த பதிவு மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமா,
இனிய காலை வணக்கம்.
காலம், மனிதர்கள் என்று மாறிக் கொண்டே இருக்கிறது.
நாங்கள் திருச்சியில் இருந்த போது மாரிஸ் ஒரே ஒரு தியேட்டராக இருந்தது
அருணா என்று இன்னோரு தியேட்டரோ.
நினைவில்லை.

உண்மையாக உழைப்பவர்களைக் காண்பது அருகிப் போன காலம்
இது.கணவர் மறைந்து வீட்டைப் பூட்ட வேண்டிய நிலையில்
வெளியே இருக்கும் அறையில் தங்கிக் கொள்ள அவர்
சம்மதித்ததே பெரிய வரம்.

ஒரு நாள் தவறாமல் அங்கேயே இருந்தார்.சரியாக ஏழு வருடங்கள்.
இனிமேல் யோசிக்க வேண்டும்.

நல்ல விஷயங்களில் இணையம் வழியாவது பங்கெடுத்துக் கொள்ள முடிவது
ஒரு மகிழ்ச்சிதான். நன்றி பானுமா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் பானுமா. இரண்டு மூன்று செய்திகளை
இப்பொழுதுதான் முதல் தடவையாகப்
பதிகிறேன்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
நற்காலை வணக்கம் மா.
எல்லாவற்றையும் சந்திக்க வேண்டிய காலம்.

பக்குவப் படத்தான் நேரமாகிறது.
அருணாச்சலம் கடின உழைப்பாளி. இத்தனை வருடங்கள்
அங்கே இருந்து கவனித்துக் கொண்டதற்கு நிறைய நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

ஆமாம் தியேட்டர்கள் நிலை பரிதாபம் தான். நமக்கும் அந்த
அனுபவம் விட்டுப் போகிறது.
தொற்று விலகப் பிரார்த்திப்போம்.
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜெயக்குமார். இந்தச் செய்தியை அனுப்பியவர் அதை சொல்லி இருந்தார்.
திரு. மிஷ்கின் திண்டுக்கல்காரர் என்பதே அதிசயமாக இருந்தது.

வெங்கட் நாகராஜ் said...

ஜெட் ஸ்பீட் கல்யாணம் - மணமக்களுக்கு வாழ்த்துகள்.


அருணாச்சலம் அவர்களின் இழப்பு - குடும்பத்தினருக்கு இரங்கல்கள்.

தியேட்டர் - நிறைய இப்படி நடக்கிறது என்பது வருத்தம் தான்.