Blog Archive

Wednesday, September 09, 2020

திருமதி சாந்தி ரங்கநாதன் ,மதுப் பழக்கத்திலிருந்து விடுதலை வாங்கித் தருபவர்

வல்லிசிம்ஹன்
அனைவரும்  நலம் பெற  பிரார்த்தனைகள்.

திருமதி 
சாந்தி ரங்கநாதன்

 T.T R  Foundation.TTK Hospital (T.T. Ranganathan Clinical Research Foundation)
முதலில் ஒரு அருமையான மனுஷி.

என் மாமனாரும் இவரது மாமனாரும்  சினேகிதர்கள்.
இவர்கள் வீட்டில் அனைவரும்  மாமியாருக்கும் அறிமுகமானவர்கள்.
சாந்தி அவ்ர்களின் கணவர் குடிப் பழக்கத்தால்
சிறு வயதிலேயே பாதிக்கப் பட்டு
அமெரிக்காவில் சிகித்சை மேற்கொண்டும்
பயனில்லாமல் உயிர் இழந்தது மிகப் பெரிய சோகம்.

நான் இவரை முதன் முதலில் ஒரு தோழியின் கணவருக்காகச் சந்தித்தேன்.
1981 ஆரம்பம் என்று நினைவு.
அந்த முகத்தைப் பார்த்ததுமே தோழியை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை
வந்தது.
அவ்வளவு அமைதியான முகம்.
அதிராத குரல்.

மியூசிக் அகாடமியின் எதிர்த்தாற்போல் அப்போது இருந்த
வீட்டின் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய கூடத்தில் 
குடிப் பழக்கம் உள்ளவர்களையும் ,அவரது குடும்பங்களையும்
சந்தித்துத் தீர்வுகள் சொல்லத் தொடங்கினார்.

ஒரு புத்த சன்னியாசினி போலத் தெளிந்த ஆனால்
சோகம் படிந்த முகம். உலகையே காக்க வேண்டும் என்கிற தீர்மானம்.
எங்கள் எல்லோருக்கும் தன் தொலைபேசி நம்பரைக் கொடுத்து
எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கச் சொன்ன
தைரியம்.

முதலில் அவரைக் கண்டதும் அழுதுவிட்ட தோழியை
தோளில் தட்டி
சரிப்படுத்தலாம் பொறுமையாய் இருங்கள்
என்ற பாந்தம்.
அங்கிருந்து வெளி வந்த போது தோழியின் இறுக்கம்
கொஞ்சம் குறைந்திருந்தது.  பங்களூரில் இருந்தவர்கள். செழிப்புக்குக் குறைவில்லை
அவர்களுக்கு தினம் மது அருந்துவது 
அளவோடு அருந்துவது வழக்கம்.
எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருந்த போது
வந்தது சிரமம். 
கணவருக்கு மட்டும் இல்லை. தோழியின் தம்பிக்கும் சேர்ந்துதான்.
 சட்டென்று எடை குறையத் தொடங்கியதும்
சென்னை வந்து பரிசோதனை செய்தததில்
மதுவை நிறுத்த வேண்டிய கட்டம்.


முதலில் செண்டருக்கு வர மறுத்த  தோழியின் 
கணவருக்கு ஒரு நல்ல தோழராக என் கணவர்
சேர இருவருமாக திருமதி ஷாந்தியைச் சந்திக்க
 பிறகு ஒரு மருத்துவரிடம் உடல் பரிஸோதனை செய்ய ஒப்புக் கொண்டு,
அவர்கள் சொன்ன மருத்துவமனையில்
அனுமதிக்கப் 
பட்டு வெளிவந்த மனிதர் வெகு நாட்களுக்குப் 
பிறகு தெளிவாக இருந்தார்.
தோழிக்குச் சொல்ல முடியாத ஆனந்தம்.

அப்போதுதான் எழுத்தாளர் சிவசங்கரியின் ஒரு மனிதனின் கதை வந்து கொண்டிருந்தது.
எழுத்தாளரும்,
குடிப் பழக்கத்தில் இருப்பவர்களைக் கண்டு
உரையாடினார்.

குடும்பத்துக்காக தனி கவுன்சிலிங்க் செய்யப் பட்ட போது நானும் இணைந்து கொண்டேன்.
எத்தனையோ நல்ல செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஷாந்தி அம்மா, பெருகும் பிரச்சினை சமாளிக்க இந்திரா நகரில் 
பெரிய மருத்துவமனையைக் கட்டினார்,.
நாளுக்கு நாள் அங்கே தீர்வு காண வந்தவர்கள் அதிகரிக்க
மருத்துவர்கள் ,சைக்காலஜிஸ்ட்கள்  எல்லோரும் வந்து சேர்ந்தன.

திறம்பட நிர்வகிக்கத் தொடங்கினார் ஷாந்தி.
அவர் எப்பொழுதும் சொல்வது.
குடிப்பது ஒரு வியாதி. 
டபடிஸ், இதய நோய் 
போல, சரியான முறையில் அணுகினால் வெற்றி பெறலாம் என்பதே.

அது நிஜமாகவும் தோழி வாழ்க்கையில் நடந்தது.
அவர் மது உண்ணுவதை நிறுத்தி
40 வருடங்கள் ஆயிற்று.
பேரன் பேத்திகளோடு திடமாக இருக்கிறார்.
தன்னால் முடிந்த சமூக சேவைகள் பண உதவிகள் செய்து
வருகிறார்.








குடிப்பழக்கத்துக்கு அடிமையானோரை மீட்கும் மருத்துவமனையை 1980 இல் இந்தியாவிலேயே முதன்முதலில் சென்னையில் தொடங்கியவர்.
சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து 
பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டவர்.

கணவனின் பழக்கட்தைத் திருத்த அமெரிக்கா சென்ற போது
பல செய்திகளைத் தெரிந்து கொண்டாலும்
சிகித்சை அளித்தும்,
இந்தியா வந்த பிறகு, நிலைமை மோசமடைந்து
 தன் இளமை வயதில் 
கணவரை இழந்தார்.

அவரது குடும்பமும் முற்போக்கு சிந்தனைகள் கொண்டது.
அயர்ந்து உட்கார்ந்து வருத்தத்தில் கழிக்க
விடவில்லை அவரது உள்ளக்கனல்.
மீண்டும் அமெரிக்கா சென்று சமூகவியலில்
, மக்களுக்கு உதவி செய்யும் சமூக முன்னேற்றத்துக்கான 
பாடவியலைக் கற்றார்.
அதில் குடிப்பழக்கத்தை நிறுத்துவது 
பற்றியும் அதன் விளைவுகளையும் பட்டப் படிப்பாகப்
படித்து வந்தார்.

சிறிது சிறிதாக சிவசங்கரி அவர்களின் நாவல் மூலம் செய்தி பரவ ஆரம்பித்தது.
என்னையும் என் தோழியையும் வந்தடைந்தது.

இரண்டு வருடங்கள் விடா முயற்சியுடன்,அந்தப் புது வாழ்க்கை முறையைக் கற்றாள்
தோழி.
துணைக்கு நானும் அவளுடன் சென்றேன்.
நிறைய பாதிக்கப் பட்ட மனைவிகளுடன் பழகும் வாய்ப்பும்
குடிப்பழக்கத்திலிருந்து திரும்ப அடி யெடுத்து வைக்கும்
 பாவப்பட்ட மனிதர்களையும் சந்தித்து அவர்கள் 
சிந்தனைகளை அறிய முடிந்தது.

 40 வருடங்களுக்கு முன நடந்த சம்பவம்.
இன்றும் நல்ல படியாக இயங்கி வரும் தொண்டு ஸ்தாபனம்.
ஒரு பாதிக்கப் பட்ட நற்குண மங்கை
இன்னும் பல ஆயிரம் குடும்பங்களில் விளக்கேற்றி வைக்கிறார்.
வாழ்க ஷாந்தி ரங்க நாதன்.




இனி நம் ஷாந்தியைப் பற்றி.

தமிழக அரசின் 2015-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருது பெற்றவர்

1982இல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது.
ஐ. நா. விருது 

12 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

போற்றத்தக்கவரை பற்றிய அருமையான பதிவு.

Geetha Sambasivam said...

இவங்களைப் பற்றி நிறையவே படிச்சிருக்கேன், ஆனால் உங்களுக்கு இவ்வளவு நெருங்கிய பழக்கம் என்பது தெரியாது. நல்ல மனுஷி! இள வயதில் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு அதற்காக வருந்தாமல் சமுகத்திற்கு சேவை செய்ய எவ்வளவு பெரிய மனம் வேண்டும்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயாவுக்கு வணக்கம்.
மிக உயர்ந்த மனுஷி.
ஒரு பந்தா இல்லாமல் சாதாரணத் தொழிலாளர்களிடமும்
,அணுகி அவர்களை நெறிப்
படுத்தியவர். மிக நன்றி மா.

கோமதி அரசு said...

மிக உயர்ந்த பெண்மணி. குடும்பங்களில் விளக்கேற்றி வைத்து இருப்பது போற்றத்தக்கது.
அவருக்கும் என் வணக்கங்கள்.
நீங்களும் அவர்களுடன் சென்று சேவை செய்து இருப்பது மிக நல்ல விஷயம்.


அவர்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான சேவை... வாழ்த்துகள்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

இந்தத் தம்பதியினர் வாழ்க்கையைச் சுற்றிப் பல கதைகள்
முன்பு எழுதி இருக்கிறேன்.
கோவையில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் சிலகாலம்
வசித்தார்கள்.
குழந்தைகள் கல்விக்காகவும்
பெற்றொர் நலம் கருதியும் கோவை வந்தனர்.
எத்தனையோ திருப்பங்களுக்குப் பிறகு
வாழ்வில் நலம் கூடியது.
தோழிக்கு தம்பி ஒருவன் தான் துணை.
அவனும் பாதிக்கப் படவே
என்னை நாடினாள். அப்போது சென்னைக்கு நாங்கள் வந்துவிட்டோம்.

மாமியார் வழிகாட்ட, மௌப்ரேஸ் ரோட் வீட்டுக்குச் சென்றது
மனதில் நிழலாடுகிறது.
ஷாந்தி ரங்க நாதன் அவர்களின் பெருமையைக்
கொஞ்சமாகச் சொல்லி விட முடியாது.
அத்தனை அருமையாக வழிகாட்டியவர்.
தோழியின் கணவருக்கு அவரிடம் அவ்வளவு மரியாதை.
அத்தனை சின்ன மெலிய உருவத்தில் இத்தனை
துணிவும்,திறனும் இருப்பதே அதிசயமாக
இருந்தது.
எத்தனை போற்றினாலும் தகும்.'
நன்றி மா.

நெல்லைத் தமிழன் said...

வாழ்க்கைக்கு பெரிய அர்த்தத்தையே கண்டுவிட்டார் சாந்தி ரங்கநாதன் அவர்கள். நீங்க எழுதியிருப்பதுபோல, ஒரு வீட்டின் விளக்கை ஏற்றிவைப்பது, இரண்டு மூன்று தலைமுறையைக் காப்பதற்குச் சமம். வணங்கத் தக்கவரைப் பற்றிய பதிவு அருமை.

ஒரு மனிதனின் கதை - வெளிவந்தபோது நான் படித்து தியாகு குடும்பத்தைப் பற்றி வருந்தியிருக்கிறேன். அது சிவசங்கரியின் மாஸ்டர் பீஸ்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா.
இனிய காலை வணக்கம்.
ஏதோ நல்ல பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் மன தைரியத்தை மிகவும் சோதித்தது.

ஒவ்வொரு மதுப்பழக்கத்துக்கும் பின்னால்
மிக வருந்தக்கூடிய பின்னணி.
அவர்கள் குடும்பமோ அதைவிட பாதிக்கப்
பட்டிருந்தது.

திருமதி ஷாந்தியின் சேவை அளவிட முடியாதது.
இரண்டு வருடங்களுக்கு மேல் என்னால்
போக முடியவில்லை.
அவர்கள் பொறுமை எனக்கு இல்லை.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அன்பு தனபாலன்.
இன்னும் பெரிதாக வளர்ந்துவிட்டது அவரது மருத்துவ மனை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,

அந்த மருத்துவமனைக்கு வருபவர்கள்
75 சதவிகிதம் பாடி, அம்பத்தூர் போன்ற
தொழில் பேட்டையிலிருந்து வருபவர்கள்.

மாத வருமானத்தில் பெரும்பகுதியை கள்ளுக்கடையில் தொலைத்து விட்டு
வறுமையில் வாட வைப்பவர்கள்.

மறு பகுதி நிறைய வருமானம் கொண்ட
பணக்கார இனம்.
அந்த சிகித்சையை விவரிக்க தனி அத்தியாயம்
எழுத வேண்டும்.
தியாகு ஒரு கதை. மிக வருந்தத்தக்க மனிதன்
மாறியது அதிசயம் தான்.
அது இந்த மருத்துவமனை செய்த அற்புதம்.
அது ஒரு தொடர் கதை.

வெங்கட் நாகராஜ் said...

அற்புதமான சேவை செய்யும் ஒரு மனுஷியின் கதை. நல்ல விஷயம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அன்பு வெங்கட்.
வருத்தத்தில் மூழ்கி வாழ்க்கையைத் தொலைக்காமல்
இத்தனை கட்டுக் கோப்பாக ஒரு ஸ்தாபனத்தை வளர்ப்பது
மிகப் பெரிய சாதனை.