Blog Archive

Monday, September 28, 2020

பயங்கள் அவசியமா....

வல்லிசிம்ஹன்

எல்லாவற்றுக்கும் பயப்பட வேண்டாம். 

"அஞ்சுவது அஞ்சாமை பேதமை''
இது நமக்குத் தெரிந்தது தானே.

 என் வாழ்க்கையில் இது வரை சந்தித்திராத
பயங்களை இப்பொழுது உலகம் முழுவதும் பார்க்கிறேன்.

  நம் ஊரில்  மக்களின் மனதில் ஆடிக்கொண்டிருந்த
பயம் இப்போது கொஞ்சம் தெளிந்திருப்பதாகத் தோன்றுகிறது.
ஊடகங்கள் வழியாக உணரும் செய்தி அது.
இங்கே சாலைகளில் வண்டியை விட்டு இறங்காமல்
ஊரைச் சுற்றிச் செல்லும்போது காணும் வாகனங்களின்
எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

வால் மார்ட், முதலான இடங்களில் 
துளி கூட இடம் இல்லாமல் வண்டிகள் நிற்கின்றன.
எத்தனை நாட்கள் தான் வீட்டின் உள்ளேயே
இருப்பார்கள்.!!!

எங்கள் வீட்டிலும், இன்னும் இரண்டு வீடுகள் தாண்டி இருக்கும் ஒரு குடும்பத்திலும்
வயதான நானும் 95 வயதான பாட்டியும் 
இருப்பதால் அந்த வீட்டுக் குழந்தைகளோ
பெரியவர்களோ மாஸ்க் இல்லாமல் வெளியே
போவதில்லை.
அந்தக் குழந்தைகள் பாடும் சிரமம் தான்.:(
எங்கள் நண்பர் ஒருவரின் தந்தை வீட்டுக் குழந்தைகள் 
வழியே வந்த தொற்றினால் பாதிக்கப் பட்டார்.

இன்னும் இதே போல எத்தனையோ ...

இந்தோனேசியாவில் அமுல் படுத்தப்பட்டிருக்கும்
விதி முறைகள் இங்கே செய்திகளில் பார்த்தேன்.
முறையாக முகக் கவசம் அணியாதவர்களுக்குக் கொடுக்கும் தண்டனையில் ஒன்று
  1,நோய் வந்து இறந்தவர்களை அடக்கம் செய்யும் வேலை.
 2, சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் களைகளை 
சுட்டெரிக்கும் மதிய வேளையில் தொடர்ந்து வேலை செய்து அகற்றுவது.
3,நோய் வந்தவர்களுக்கு மருத்துவ சேவை செய்வது
இப்படிப் போகிறது ....
இவ்வளவு கடுமை காட்டக் காரணம் அங்கே அதிகரித்த
பாதிப்பு.

இங்கே குளிர் ஆரம்பித்துவிட்டது. கூடவே அதிகமாவது 
இன்ஃப்ளூயன்சா போன்ற நோய்கள்.
எனவே அதற்கான தடுப்பூசிகள் , இலவசமாகவே போடப்
படுகின்றன.
கல்லூரிகள் திறக்கப் பட்டு, விஞ்ஞானப் பிரிவை
மருத்துவப் படிப்பைச் சேர்ந்தவர்கள்
வெவ்வேறு மாகாணங்களுக்குச் சென்று விட்டார்கள்.

 பெற்றோர்களுக்கு உள்ளூர பயம் இருந்தாலும்
குழந்தைகளின் விருப்பத்தை அங்கீகரித்து அனுப்பி இருக்கிறார்கள்.
அந்தக் குழந்தைகளுக்கும் பயம் தெரியும்.
கவனமாகவே இருப்பார்கள்.
இறைவன் துணை இருக்கட்டும்.

நோயின் தீவிரம் தெரியாமல் அசட்டுத்தனமாகப்
பேசுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்போது விளைந்திருக்கும் ஒரு நன்மை
வேலை இல்லாமல் பொருளாதாரக் கவலையில் இருப்பவர்களுக்கு
அவர்கள் கௌரவம் பாதிக்கப் படாமல்

அந்த வீட்டுக் குழந்தைகளுக்கு உடைகள், விளையாட்டுப்
பொருட்கள், சிற்றுண்டிகள் என்று கொண்டு போய்
அவர்கள் வாசலில் வைத்து விட்டு வருவது.

இந்த மகிழ்ச்சியைக் கண்கூடாகக் கண்டேன்.இத்தனைக்கும் அவர்களில் பலர் வேறு வேறு
கட்சிகளில் உறுப்பினர்கள்.

அரசியல் இல்லாத இந்த உதவிகளைக் காணும்போது
மனிதம் வாழுகிறது என்பதை உணர்கிறேன்.
ஸ்விட்சர்லாண்டில்  ஜெனிவா, சூரிக் சுட்டுவட்டாரங்களில்
 அதிக அளவு பாதிப்பு இருப்பதாகத்
தெரிய வருகிறது.
 அந்த ஊர்க்காரர்களுக்கும் வீட்டில் 
ஒதுங்குவது பழக்கம் இல்லாத ஒன்று.
எந்த ஊராக இருந்தாலும் அனைவரும் உணர வேண்டியது
நிலைமையின் தீவிரத்தை.
முடிந்தவரைக் கட்டுப்பாடுகளை மீறாமல்
அனுசரிக்க வேண்டும்.
எல்லைக்காவலில் அந்த உயர்ந்த பனிமலையின் 
கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும்
வீரர்கள்,அவர்களின் குடும்பங்கள் செய்யும்
தியாகம் நாம் நலமாக இருப்பதைத்தானே விரும்பும்.

தொற்று நோயின் துயரங்களை அனுபவித்தவர்கள்
தினம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் படும் நோவுகளை.
அதீதமாகப் பாதிக்கப் பட்டவர்களுக்கு 
மன அழுத்தம் அதிகமாகி அவர்கள் வாழ்க்கை நலம் 
கெடுவதை இங்கே தினப்படி செய்திகள்
உறுதிப் படுத்துகின்றன.



இனிவரும் நாட்கள் நன்மை கொண்டுவரப் பிரார்த்தனைகள்.





7 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆம்..தவிர்க்க இயலாது தவிர்த்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து பாதுகாப்பாய் இருப்பதே புத்திசாலித்தனம்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதே நடக்கட்டும்...

கோமதி அரசு said...

இனி வரும் நாட்கள் நன்மை கொண்டுவரப் பிரார்த்தனைகளை செய்வோம் நாள்தோறும் அக்கா.
பதிவு சொல்லும் விஷ்யங்களில் மனிதம் வாழ்கிறது என்பதை படிக்கும் போது மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ரமணி சார்.
சங்கடங்கள் அதிகரிக்கும் போது பொறுமை மிக அவசியம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் நல்லதே நடக்கும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.
ஆமாம், இனம்,நிறம் பார்க்காமல் இது நடக்கிறது.
மிக மிக மகிழ்ச்சி.
அதுவும் நம் இந்தியர்கள் ,இந்த ஊர்க்காரர்களிடம்
தன்மையாகவே நடந்து கொள்கிறார்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நலமே விளையட்டும்.

இங்கேயும் முகக் கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கிறார்கள் - ஆனாலும் பலரும் இதனைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.

நல்லதே நடக்கட்டும்.