Blog Archive

Tuesday, September 01, 2020

நாடியைத் தேடி சுவடி கண்டு.....3

வல்லிசிம்ஹன்
நாடியைத் தேடி சுவடி கண்டு.....3
+++++++++++++++++++++++++++++++++++++
நாங்கள் நாடியைப் பற்றிக் கேள்விப்பட்டு,
அந்த நண்பர் சொன்ன விலாசத்தில் 
சென்று, எங்களுக்குச் சம்பந்தப் பட்ட 
சுவடிகளைக் கண்டெடுத்து அவர் படித்தது
போன பதிவுகளில்.

அடுத்த வாரம் எங்கள் முன் ஜென்மம் பற்றிப் படித்தால்
இப்போது இருக்கும் பிரச்சினைகளுக்கு
வழி பிறக்கும் என்று சொன்னதும் எங்களுக்கும் அது நியாயமாகவே
பட்டது. ஏனென்று தெரியாமல் 
வாழ்வில் திடீரென்று நடக்கும் மாற்றங்களுக்குப்
பதில் தேட முனைந்தோம்.

அடுத்த வாரம் அதே வியாழக்கிழமை மீண்டும் நானும் கணவரும் அதிகாலை எழுந்து
சீக்கிரமே காஞ்சீபுரம் சென்றடைந்தோம்.
அகத்தியர் நாடி ஜோதிடம் அமைந்த வீட்டுக்கு சென்று
நாங்கள் கோவிலுக்குப் போய் தரிசனம் முடித்து வருவதாகச் சொல்லி விட்டு
அன்னை காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தோம்.
தெய்வ தரிசனம் எப்போதும் போல் மனதுக்கு உறுதி கொடுத்தது.

மீண்டும் நாடி நிலையத்துக்குச் சென்றபோது
அவர்கள் தயாராக இருந்தார்கள்.
.
முதலில் இவரது சுவடியை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்கள்.
அவர்கள் படித்தார்கள் என்று சொல்வதை விட இசையுடன்
பாடினார்கள் என்றே சொல்ல வேண்டும்.
எதிரே அகஸ்திய மாமுனியின் பெரிய படம். சிவ சக்தி ,கணபதி முருகன் என்று சேர்த்த
அழகான ஓவியம்.
கூடவே பெருமாள் தாயார்,கண்ணன் என்று ஒரு சுவர் முழுவதும்
தெய்வங்கள் ஆக்ரமித்து இருந்தார்கள்.


இவரது சுவடியின் சாரம்.
700 ஆண்டுகளுக்கு முன் கலிங்கத்து நாட்டில் இவர் அந்தணர் குடும்பத்தில்
பிறந்து மிகக் கஷ்டப் பட்டு முன்னேறி அரசாங்கத்தில்
பெரிய வேலையில் அமர்ந்து
சுகமாக இருந்ததாகவும்.
தன் பெற்றோரை அலட்சியப் படுத்தியதாலும்,
பிறகு திருந்தி அவர்களை நல்ல முறையில் கடையேற்றிதானகவும்
சொல்லி,
அந்தச் சில வருடப் பிழையே காரணமாக
இப்போது சில தடைகள் ஏற்படுவதாகவும்,
சில கோவில்கள் சென்று வந்தால்,
அங்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டால்  நிலைமை சீராகும் என்றும் படித்தார்கள்.

இவருக்கு என்னவென்று தெரியாத கோபம்,சங்கடம்.
ஓகே.மேல பார்க்கலாம் என்றார்.
அடுத்தது என் சுவடி.
பயமாக இருந்தது. அவர் படிக்கத் தொடங்கியதும்
சரி போ எல்லாம் அனுமானம் தானே என்று நினைத்தேன்.
அவர், நான் 500 ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு வியாபாரக் குடும்பத்தில்
பிறந்து ,தனவந்தருக்கு வாழ்க்கைப் பட்டு,
கணவனை அவரது கடைசி காலத்தில்
சரியாகக் கவனிக்காமல், இருந்துவிட்டுப்
பிறகு அவருக்கு மருந்துகள் கொடுத்து அவரைத் தேற்றியதால்
இந்தப் பிறவியில் நல்ல பிறப்பை அடைந்திருப்பதாகவும்,
மக்களால் நல்வாழ்வு தொடரும் என்றும்,
ஏழு வாரங்கள் சனி பகவானுக்கு எள்ளு தீபம் ஏற்றி
ஏழு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்றும் சொல்லி
முடித்தார். பரிகார சுவடிகள் பற்றி அடுத்த பதிவில்
சொல்கிறேன்.
இவரது ரியாக்ஷன் தான் சிரிப்பு வந்தது.
என்னாயா போன ஜன்மத்துல நம்மளைக்
கவனிக்கலியா நீ. அதுதான் இப்போ
நன்றாகக் கவனிக்கிறியா என்று கலாய்த்தார்.
எனக்குப் போன ஜன்மத்தில் கணவரை அலட்சியம் செய்தேன் என்பதே
அதிர்ச்சி!!!! மீண்டும் பார்க்கலாம்.
உலகில் அனைவரும் நோய் நொடி இல்லாமல்
சுகமாக இருக்க அன்னை காமாட்சி அருள்வாள்.Maangaadu Sri Kamakshi Amman - Hindupedia, the Hindu Encyclopedia



9 comments:

Bhanumathy V said...

//என்னாயா போன ஜன்மத்துல நம்மளைக்கவனிக்கலியா நீ. அதுதான் இப்போ
நன்றாகக் கவனிக்கிறியா என்று கலாய்த்தார்.// ஆஹா,என்னவொரு கற்பு! போன ஜென்மத்திலும் நீங்கள்தான் அவருக்கு மனைவியாக இருந்திருப்பீர்கள் என்று நம்பியிருக்கிராரே!! ஸோ, அடுத்த ஜென்மத்திலும் தொடரும் இந்த உறவு. 

திண்டுக்கல் தனபாலன் said...

தகவல் அதிர்ச்சி...

தொடர்கிறேன் அம்மா...

துரை செல்வராஜூ said...

நாடி வழி சில சமயங்களில் உண்மைகள் வெளிப்படுகின்றன... தவறான புரிதலில் பலருக்கு குழப்பம் தான் மிச்சமாகின்றது...

வெங்கட் நாகராஜ் said...

700/500 வருடங்களுக்கு முன்பு - அவ்வளவு வருடங்களா? அதிசமயாக இருக்கிறது. நம்பவும் முடியவில்லை! கிட்டத்தட்ட 10-15 பிறவிகளுக்கு முன்னர் கூட இருக்கலாம்!

ஸ்வாரஸ்யமாகவே தொடர்கிறது. பார்க்கலாம்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு மா.
வருகைக்கு நன்றி.
என் முகம் கலங்கியதைப் பார்த்து அவருக்கும்
வருத்தம்.
அவர் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்.
அப்புறம் என்ன செய்யணும் என்பதுதான் முனைப்பு.

Something clicked in my mind when I saw you"
என்பதே அவரது சொல்.
சூழ்னிலை கலகலப்பாக இருக்க வேண்டும்.
ஆமாம் சரியான வார்த்தை ''கற்பு''
மிக மிக நன்றி பானுமா. உங்கள்
பின்னூட்டத்தை மிக ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் ,
ஆமாம் அது அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
நம்மைப் பற்றி நாமே உயர்வாகத் தானே நினைப்போம்.!!

இது ஒரு கசப்பு மருந்து.
ஒரு எச்சரிக்கை.
நான் அதை மறக்காமல் பிறகு அதி ஜாக்கிரதையாக
செயல்பட்டேன்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
நமக் கூடிய சில செய்திகள்.
எல்லோருக்கும் பொதுவாக ஒரு முன் ஜன்மம்.
அந்தத் தப்பு செய்தாய்
இது போல இருந்தாய். இது போல.
எங்களுக்கு அப்புறம் சென்ற சிலருக்கு
இன்னும் அதிர்ச்சியான சுவடுகள் கிடைத்தன.
அதற்குத் தகுந்தாற்போல் பரிகாரங்கள்
கடுமையாகச் சொன்னார்கள்.

நீங்கள் சொல்வது போல் புரிதலில்
மாறுபாடுகள் இருக்க சாத்தியக் கூறுகள்
உண்டு. நன்றி மா.நல்ல தெளிவான சிந்தனை உங்களுக்கு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,

கலிங்கம் என்றதும் ,வெகு புதுமையாக இருந்தது. ஏழேழ் பிறவி என்பது போல
சொன்னார்களோ. ஆகக் கூடி எங்கேயோ தவறிழைக்கப் பட்டு இப்போது தொடருகிறதோ.
இல்லை அந்த சுவடிகள் அத்தனை. பழமையோ தெரியவில்லை. ஒரே ஒரு ஆறுதல் நாங்கள் பல கோவில்கள் தரிசனம் செய்தோம்
அது ஒரு நன்மை தானே.

கோமதி அரசு said...

நாடி ஜோதிடம் சொன்ன விஷயங்கள் கிட்ட தட்ட எல்லாம் ஒரே மாதிரிதான் அக்கா. என் உறவினர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் பார்த்து போனார்கள். போன ஜென்மத்து பாவம் என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்வார்கள் ஏதாவது நமக்கு கஷ்டம் வந்தால். அதை அவர்கள் வேறு மாதிரி சொல்கிறார்கள்.

ஏதோ கோவில் வழிபாடு ஏழைகளுக்கு உதவி என்றவரை பரவாயில்லை.