Blog Archive

Wednesday, April 01, 2020

எது சுதந்திரம். Old post 2018



WEDNESDAY, AUGUST 29, 2018


எது சுதந்திரம்.

Vallisimhan
எல்லோரும் நலமாக வாழவேண்டும் 


உடலொன்றைக் கொடுத்த கடவுள்,
உயிரையும் நினைவுகளையும் அதனுள் புகுத்தி இன்னார இன்னார் உனக்கு அன்னை தந்தையர் 
என்று அறிமுகப் படுத்திவைக்கிறான்.

குழந்தைப் பருவம், பள்ளிப் பருவம்,பிறகு திருமணம்.
இதில் ஆண் குழந்தைகளுக்குப் பொறுப்பும், சுதந்திரமும் கூடுதல்.
பெண் குழந்தை  திருமணம் ஆகும் வரை அப்பா
சொல்படி.
அப்படியே திருமணமான பிறகு கணவன் சொல்படி.
Add caption


என் வாழ்க்கை இப்படித்தான். மற்ற பெண்களின் வாழ்க்கை பற்றி அதிகமாகத் தெரிந்து கொண்டது என் புக்ககப்   பெரியோர்களின் கட்டுமானத்துக்குள் கற்றது.

பெரிய குடும்பமாக இருந்ததால் அவர்களுக்குள் ஒற்றூமையாக இருக்கும் போது இந்தச் 
சின்ன மருமகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.

வேலை எல்லாம் முடிந்தததா, பக்கத்தில் இருக்கிற ஆஞ்சனேயரைப் பார்த்து விட்டு வாயேன்
என்பார் பாட்டி.
போவேன்.
அறுபத்து மூவர் உற்சவங்கள் போது தினப்படி வெளியே போக 
அனுமதி உண்டு.
என் கணவர் கேட்பார். உனக்கு மட்டும் புது செருப்புத் தேவைப்படுவதே 
இல்லையே.
அவரிடம் சொல்ல முடியுமா, வெளியில் சென்றால்தானே செருப்பு உபயோகமாகும். என்று.
15  வருடங்களுக்குப் பிறகு நிலைமை  மாறியது.
குழந்தைகள்  கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தார்கள்.
திடீரென்று வேலை முடிந்தால் வீட்டை விட்டு வெளியே செல்லலாம்
என்பது எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.

வலியத் தேடி வந்த வாய்ப்பு ஒரு பப்ளிஷிங்க்  நிறுவனத்தில்
அழைப்பு வந்ததுதான்.
கோவிலில் சந்திக்கும் பெண் தான் வேலைபார்க்கும் கம்பெனியில் சேர விருப்பமா. என்றதும் திகைத்துப் போனேன்.
நான் பட்டதாரி இல்லையே என்றேன்.
உனக்குப் புத்தகங்கள் பிடிக்குமா. என்றாள்.
என் உயிரே அவைதான் என்றேன்.
அப்போது வந்து பார். பிடித்தால் சேர்ந்து கொள்.
உனக்கு முடிந்த நேரங்களில்
புத்தகங்களை அறிமுகப் படுத்திப் பள்ளிகளில் அவற்றை விற்கவேண்டும்..

அவை விலை உயர்ந்த வெளினாட்டுப் புத்தகங்கள்.
குழந்தைகளின் படிப்பு, குழந்தை வளர்ப்பு  ஆரோக்கியம், 
 விஞ்ஞான வளர்ச்சி, சமையல் கலை என்று பத்துப் பதினைந்து வகைகள் இருக்கின்றன.
என்று சொன்னதுதான் தாமதம்.சரி என்று விட்டேன்.
சுதந்திரமாகச் செயல் பட்டது அப்போதுதான்.
இப்போது சுதந்திரமாக இல்லையா என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.
எப்போது  முழு சுதந்திரம்.

முதுமை சுதந்திரம்.....

Vallisimhan

சுதந்திரம் என்பது கொடுத்து வருவதா. நாமாக எடுத்துக் கொள்வதா.
பெரியவர்கள் இருக்கும் வீட்டில்
மருமகள்களுக்கெல்லாம் சீக்கிரம் சுதந்திரம் என்கிற வார்த்தையை

உபயோகிக்க முடியாது.
பெரியவர்கள் காலையிலிருந்தே ஒரு திட்டம் போட்டு வைத்திருப்பார்கள். அது கோவிலாக இருக்கலாம், உறவினர்கள் வருகையாக இருக்கலாம்,

நம் குழந்தைகளின் பள்ளி விஷயமாக இருக்கலாம்.
 வைத்தியர் வருகையாக இருக்கலாம்.
எல்லாவற்றையும் யோசித்து நாம் இன்று 75 பைசா தொலைவில்
இருக்கும் பெற்றோரைப் பார்த்துவிட்டு  3 மணிக்குள் திரும்பலாம் என்று ,
யோசித்துப் பாட்டியிடம் பர்மிஷன் வாங்கினால்
, நாளைக்குப் போயேன். அரைமணி நேரத்தில் உன் பெரிய மாமனார் மாமியார்
வருகிறார்கள். அவர்கள் கிளம்ப மதியம் ஆகிடும்.
என்று சொன்னதும் எனக்கு சுருதி இறங்கிவிடும். என் மாமியார் அப்போது கை கொடுக்க நினைப்பார்.
அவள் போகட்டும். அவ அம்மாவுக்குக் கையே தூக்க முடியலையாம்.
என்னன்ன்னு போய்ப் பார்த்து விட்டு வந்துவிடுவாள். நான் இங்கே
பார்த்துக் கொள்கிறேன் என்பார்.

உன்னை நம்ப முடியாது. திடீர்னு தலைவலி வந்தால் கஷ்டம்.
நாளைக்குப் போகட்டுமே என்பார்  பாட்டி.

முடிந்தது அன்றைய உரையாடல். ஒரு மணிக்குப் பாட்டிக்குக் காப்பி
போட்டுக் கொடுக்கவும், விருந்தாளிகள் வரவும்.
அரிசி உப்புமா கிண்டவும் நேரம் போய்விடும்.


எதற்கு இந்த விலாவரிக் கதை என்று தோன்றும்.
எல்லா வீடுகளிலும் நடக்கும் விஷயம் தானே.

 ஆனால் 28 வயதில் இதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு இல்லை.
எதிர்த்துப் பேச பெற்றோர் கற்றுத்தரவும் இல்லை.

மீண்டும் 1989க்கு வருவோம்.  7 வருடங்கள் கழித்து மகள் திருமணம்.
அவள் அப்பா காரோட்ட, என் அப்பா வழிகாட்ட  அந்தத் திருமணம் நல்லபடியாக
நடந்தது.

அந்தத் திருமணத்துக்கு, என் ஐந்து வருட சம்பாத்தியமும்
 ஒரு நகையாக அவள் கழுத்தில் ஏறியது.

வரிசையாக வாழ்வின் ஏற்றம் பள்ளம் எல்லாம்
தாண்டிக் கண்விழிக்கையில் 2006 வந்திருந்தது.
இப்பொழுது என்னை இரு என்று சொல்லவும் ஆளில்லை.
போ என்று சொல்லவும் சந்தர்ப்பம் இல்லை.
குழந்தைகள் இருக்குமிடம் உதவி செய்யப் புறப்பட்டோம்

சிங்கம் எங்கும் சென்று வந்துவிடுவார். எனக்கு போகும் இடைத்திலும் வீட்டு சம்பந்தமான வேலைகள் இருக்கும். அன்பினால் செய்ய வேண்டிய
தேவைகள் அவை.
2010லிருந்து இருவருக்குமே வெவ்வெறு சிகித்சைகள்.

தவறேதும் இல்லை. கண்ணியமான சந்தோஷத்துடன் கடந்தது வாழ்க்கை.
2013இல்  சிங்கம் இறைவனடி சேரும் வரை.
பிறகு என் வாழ்க்கை  குழந்தைகள் கையில்.

வரச்சொன்னால் போவேன். அந்த ஊர் விசா முடிந்ததும் வேறு இடம்.
அவர்கள் உலகம் வேறு. என் உலகம் வேறு.
இணையத்தில் புகுந்தததால் 80 சதவிகித விடுதலை.
முன்பு முதுமை வரமா சாபமா என்று ஒரு தொடர் போனது.
\
இப்பொழுது சொல்கிறேன்
முதுமைக்கு உண்டான தளர்வு வந்தாலும் உடல் ஆரோக்கியமும்
மனத்திடமும், கை நிறையப் பணமும், எது நடந்தாலும்
பொறுமை காப்பதும் தெரிந்தால் இது சுதந்திர முதுமையே.
வாழ்க வளமுடன்.
வல்லிசிம்ஹன்

27 comments:

வெங்கட் நாகராஜ் said...

எல்லாம் நல்லதற்கே என்று எடுத்டுக் கொண்டால் எல்லாம் நலமே.

உங்கள் பழைய பதிவுகளை மீண்டும் இங்கே தருவதால் படிக்க ஒரு வாய்ப்பு.

நெல்லைத் தமிழன் said...

//சுதந்திரமாகச் செயல் பட்டது அப்போதுதான்.// - நிரம்ப எண்ணவோட்டங்களை ஏற்படுத்துது உங்கள் பதிவு. எத்தனையோ பெண்கள் அப்பா, பிறகு கணவன் என்று சொல்பேச்சு கேட்டே வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் மனதிலும் எத்தனையோ எண்ணங்கள், ஆசைகள் இருந்திருக்கும்.

சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை

என்ற வரிகள்தாம் நினைவுக்கு வருகிறது.

(ஒரே விஷயம் இருமுறை வந்திருக்கிறது இடுகையில்)

நெல்லைத் தமிழன் said...

//அவர்கள் உலகம் வேறு. என் உலகம் வேறு.//

எப்போதும் இப்படித்தான் வல்லிம்மா. பசங்க சின்னவங்களா, நம்மிடம் தேவைகளை எதிர்பார்க்கும்போதும், பதின்ம வயதுக்கு வந்துவிட்டாலே அவர்கள் உலகம் வேறு நம் உலகம் வேறு என்பதுதான் நிதர்சனம்.

நீங்க ஆரோக்யமா இருக்கணும் எனப் ப்ரார்த்திக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், மிக நன்றி மா. காதில் விழும் செய்திகள் மனதை வளர்ந்த வைப்பதால்

பழைய பதிவுகளைப் புதுப்பிக்கிறேன் . எனக்கு என் உபதேசம்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா, நீங்கள் இப்பொழுதே உணர்நது விட்டீர்கள். எனக்குப் புரியத்தான் நேரமாகியது.:)

உங்கள் பிரார்த்தனைகளுக்கு. நன்றி மா. இரண்டு தடவை காப்பி பேஸ்ட் செய்து விட்டேன் போல.

நேற்று மெசஞ்சரில் வந்து ஒருவர். புத்திமதி சொன்னார். எல்லோர் பதிவுகளுக்கும் சென்று
கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று.

எனக்கு அது கொஞ்சம் சிரமம் என்று வெளியே வந்து விட்டேன்.

அட்வைஸ் எனக்கே கஷ்டமாக இருக்கும் போது மற்றவர்களுக்கு நான் சொல்லக் கூடாது இல்லையா:)

அதனால் இரண்டு வருடங்கள் முன் எழுதியதைப் பகிர்நதேன்.

ஜீவி said...

எனது பதினாறு வயதில் வீடு வீடாக பத்திரிகைகளைப் போட்டு நியூஸ் ஏஜென்சி
நான் நடத்தியிருக்கிறேன் என்றால், நீங்கள் புத்தகங்களை பள்ளிகளில்
விற்பனை செய்பவராய் இருந்தீர்களா?..

ஜீவி said...

இது என்ன கேள்வி, 'முதுமை வரமா, சாபமா?' என்று.

இன்றைக்கு வரமாக இருப்பது நாளைக்கு சாபமாக இருக்கலாம். நாளைய சாபம் அடுத்த நாளைய வரமாக இருக்கலாம்.

சூரிய சந்திர சுழற்சி போல வரமும், சாபமும் மாற்றி மாற்றி தானே?

எது எது எப்படி நடக்கிறதோ, அது அது அப்படியே நடக்கையில், வரத்தையும் சாபத்தையும் தீர்மானிப்பது யார்?..

நான் தான் தீர்மானிப்பது என்று யாராவது சொல்வார்களேயானால், இந்த வரம்--சாபம் கேள்வியே இல்லையே!

பிலஹரி:) ) அதிரா said...

ஆஆஆ வல்லிம்மாவின் டயரியைப் படிச்சதைப்போல இருக்குது.. அந்தக் காலம் வேறு இக்காலம் முற்றிலும் வேறாகி விட்டதே.. அப்போ உங்களுக்கு மாமியாருடன், பாட்டியும் ஓடர் போட இருந்திருக்கிறா.. அப்போ அது எப்படிப்பட்ட காலம்...

நாம் நினைப்பதுதான் சுகந்திரம், எதையும் பொசிடிவ்வாக ஏற்றுக் கொண்டிட்டால் மனதில் கவலை குறைந்து நிம்மதி பிறக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார்,
நான் புத்தகங்கள் விற்கச் சென்றது என்னுடைய 41 வயதில்.
பல ஊர்களுக்குச் செல்லும் உத்சாகம். உடன் வந்த என் வயதொத்த தோழிகள்,
வீட்டை விட்டு வெளியே செல்லும் சுதந்திரம் எல்லாமே இனிமை.

முதுமை வரமா ,சாபமா என்ற இந்தத் தலைப்பில்
நான்,கீதா சாம்பசிவம், துளசி கோபால் எல்லோரும் மும்முரமாகப்
பதிவுகள் போட்டோம்.
அப்பொழுதிருந்த உத்சாகம் அப்படி.
இப்பொழுது மனது இன்னும் கொஞ்சம் தெளிவானது. அன்றையப் பொழுது நல்லபடியாகக்
கடந்தாலே போதும் என்று நினைப்பு வந்தாச்சு.:)
நானுண்டு, , புத்தகங்கள், என் பாட்டு,பேரனோடு
விளையாட்டு என்று செல்கிறது. குறை ஒன்றும் இல்லை சார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா,
என் மாமியாரும், அவருடைய மாமியாரும் இருந்தார்கள்.
அதுதான் பாட்டி. மிகக் கண்டிப்பானவர்.
ஆனால் நான் நிறையக் கற்றது அவரிடம் தான்.

சுதந்திரம் குறைவு ,பொறுப்புகள் அதிகம்.
இப்பொழுது நினைக்கும் போது
அதெல்லாம் என்னை வருத்தவில்லை.
இன்னும் படித்திருக்கலாம் என்ற லாம் கள்
தான் அதிகம்.

ஒன்றும் குறை இல்லை. இப்பொழுது என் வாழ்க்கை
நண்பர்கள் ,நன்றாகப் படித்தவர்களுடனே நகர்வதெ
நல்ல மாற்றம். நன்றி ராஜா.

ஸ்ரீராம். said...

பழைய நினைவுகள் இனிமை.  ஐந்து வருட சம்பாத்தியம் நகையாய் மகள் திருமணத்துக்கு உதவியது மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்.  நம் சொந்த விருப்பங்களை பூர்த்தி செய்துகொள்வதில் சிறு தடை என்றாலும் சற்று சலனமாகத்தான் இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், அந்தக் காலம் அப்படி.
எல்லாமே பாதிப்பாதி தான். கொடுத்தது பாதி எடுத்தது பாதி.
யாரும் இப்போது இல்லாத நிலையில்
இந்த சிந்தனை கூட தேவை இல்லை. அந்தந்த நாளைப் பொறுத்து எழுத்துகள் வந்திருக்கின்றன. அவ்வளவுதான். நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

முதுமை வரமா சாபமா பற்றிய விளக்கம் அருமை அம்மா...

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். 55 வயதில் முதுமை வரும் என்று அவ்வளவாக நினைக்கவில்லை. :)இப்போது நினைக்காமல் இருந்தால் தவறு.!

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா, உங்கள் பிரார்ததனைகளுக்கு நன்றி.
சொல்லாத சொற்கள் நம்முடன் வராமல் இருந்தால் நன்மை.-/\-

துரை செல்வராஜூ said...

>>> எது எது எப்படி நடக்கிறதோ, அது அது அப்படியே நடக்கையில், வரத்தையும் சாபத்தையும் தீர்மானிப்பது யார்?..
>>>

அன்பின் ஜீவி ஐயா அவர்களின் கருத்தினை வழி மொழிகின்றேன்...

கரந்தை ஜெயக்குமார் said...

முதுமைக்கு உண்டான தளர்வு வந்தாலும் உடல் ஆரோக்கியமும்
மனத்திடமும், கை நிறையப் பணமும், எது நடந்தாலும்
பொறுமை காப்பதும் தெரிந்தால் இது சுதந்திர முதுமையே.

அருமை
உண்மை

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா உங்கள் பதிவு நிறைய யோசிக்க வைத்து எண்ணங்களைக் கிளறிவிட்டது!!! எனக்கும் இப்படியான எண்ணங்கள் உண்டு.

என்னென்னவோ சொல்ல வந்தாலும் சொல்வது கடினம். எத்தனையோ மேடு பள்ளங்கள். நம் மனதை நம் கையில் பிடித்துக் கொண்டு சந்தோஷமாக பாசிட்டிவாக வைத்துக் கொண்டால் தான் கடந்திட முடியும் இல்லையா அம்மா. இல்லைனா நம் குறைகள் மனதில் பில்டிங்க் எழுப்பிவிடும்...அது அழுத்தம் தாங்காமல் சரியும் போது வேறு விதமாகப் போய்விடும். ஆனால் மனம் என்பது மிக மிக மிக மெல்லியது. ப்ரிட்டில் என்றும் சொல்லலாம் அதை எவ்வளவு ஸ்ற்றாங்காக வைத்துக் கொள்ள முடியுமோ அத்தனை நாம் சுகமாக இருந்திடலாம்...உங்கள் எண்ணங்களை மிக நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது அம்மா..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பதிவில் கடைசியில் முதுமை பற்றி சொல்லியிருப்பது ரொம்ப கரெக்ட்!!!!

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துரை,,
ஜீவீ சாரின் கருத்து அனுபவத்தின் சாரம்.
அப்படியே எடுத்துக் கொண்டு
அதன்படி நடக்க வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்,
என் அறியாமை எனக்கு நிறைய பாடங்களைக் கொடுத்தது.
இப்பொழுது ஒரு ஸ்திர நிலைமைக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
கருத்துக்கு மிக நன்றி மா,

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. தங்களுக்கு எல்லாமே உணர முடிகிறது.
அபூர்வ மனுஷி.

இந்தப் பதிவை ஒரு விவாதப் பதிவாகவே நடத்தினோம்
நாங்கள் ,பத்துவருடங்களுக்கு முன்னால்/
இப்பொழுதும் அப்படித்தான் பார்க்கிறேன்.

மேலோட்டமாகப் பார்த்தால் மஹா பெரிய புலம்பல்:)
அப்படி எழுதி இருக்க வேண்டாம்.
இனி கவனம் செலுத்துகிறேன்.
நன்றி ராஜா.

கோமதி அரசு said...

அக்கா , பதிவு முன்பு படித்து இருந்தாலும் மீண்டும் படிக்க தூண்டும் எழுத்து. நினைவுகளை பகிரும் விதம் அருமை.


எப்போதும தாய் வீட்டில் விளையாட்டுதனம், குறும்பு, செல்லம் எல்லாம் புகுந்த்வீடு வந்தால் மாற்றம் ஏற்படும்.
அவர்கள் குணநலனுக்கு ஏற்றார்போல் நாம் வளைந்து கொடுப்பது, அவர்கள் வீட்டு பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்வது என்று தான் இருக்கும்.

அதை அழகாய் சொன்னீர்கள்.

பெண் திருமணத்திற்கு உங்கள் சிறு உதவியும் இருந்தது பெருமிதம் தரும் விஷயம் .

இனி என்ன வேண்டும்! எல்லோரும் நலம் வாழ பிரார்த்தனை மட்டுமே . அருமையான் குழந்தைகளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
எத்தனை அன்பான பின்னூட்டம்.

அத்தனையும் உண்மைதான்.
எல்லாமே மனமுவந்து ஏற்றுக்கொண்ட மாறுதல்களே.

மன சுதந்திரம் கட்டுப் படுத்தப் பட்டது முதலில்
மனம் கஷ்டப்பட்டது. பிறகு அதுவே
பழகி விட்டது. பிறகு போகச் சொன்னாலும்
கால் எழும்பவில்லை என்பதுதான் நிஜம்.
குழந்தைகள் நலம் தான் நம் நலம்.
அதற்குத்தான் பிரார்த்தனைகள். வேற வேற ஊர்களில்
இருப்பதால் தினமும் அவர்கள் அழைப்புக்குக்
காத்திருக்கிறேன்.
மற்றவர்களிடம் வாட்ஸாப் வழியாக விசாரிப்பு
தொடர்கிறது.
நல்ல வேளையாக இணையம் ஒத்துழைக்கிறது.
பக்திப் ப்ரவசனங்கள், திரைப்பாடல்கள்,
பேரனோடு மொனோபொலி என்று பொழுது போகிறது.
செய்திகள் காதில் விழாமல் இருந்தால் இன்னும் நலம்/
நன்றி மா.

Geetha Sambasivam said...

ஏற்கெனவே படித்த பதிவு தான். நானும் போட்டிருக்கேனா? நினைவில் இல்லை, பார்க்கணும், 2005 ஆம் வருடம் வலைப்பக்கம் திறந்து பதிவுகள் எழுத ஆரம்பித்தபோது இருந்த உற்சாகம் இப்போக் கொஞ்சம் குறைந்துவிட்டதோ எனத் தோன்றுகிறது. அதிலும் கடந்த 2,3 வருடங்களாகக் கொஞ்சம் சுணக்கம் தான்! ஆனாலும் விடக்கூடாது என வந்து கொண்டிருக்கிறேன். முதுமை என்பதை ஓர் பெரிய விஷயமாக நினைக்காமல் கடக்க முயற்சி செய்கிறேன்.என்றாலும் சுற்று வட்டாரங்களில் இருந்து காதுகளில் விழும் செய்திகள், சற்று கலக்கத்தைத் தான் கொடுக்கிறது. தெரியாமல் இருக்கலாமோ என்னும் எண்ணம் வரத் தான் செய்கிறது. எத்தனை நாட்களோ அல்லது வருடங்களோ தெரியவில்லை. காத்திருப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. நாம் அப்பொழுது எழுதினோம் கண்மணி டீச்சர்
என்று கூட ஒருவர் இதில் கலந்து கொண்டார்.
நம் மனதுக்கு வயதாகவில்லை.
உடல் தளர்வது என்னவோ உண்மை.
இங்கிருக்கும் எண்பது வயதுப் பாட்டிகளுக்கு, நம்
வாழ்வில் நாம் கடந்த சம்பவங்கள்
இருந்ததா தெரியாது. சட்டென்று சமாளிக்கிறார்கள்.
தனியாக இருக்கிறார்கள்.

இந்தத் தொற்று நோய் சகல வயதினரையும்
தாக்குகிறது.
இந்த அச்சுரனையும் வெல்ல துர்கா தேவிதான் வரணும். வருவாள்.

மாதேவி said...

முதுமைபற்றி நல்ல கருத்து.