Blog Archive

Monday, April 20, 2020

பேனாவின் காலங்கள்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழவேண்டும்.

நம்ம ஏரியா , கவுதமன் ஜி பக்கத்தில் , அன்பர் சுப்பிரமணியம்,
அழகாக பேனாவால்
எழுதி பகிர்ந்திருந்தார்.
பேனாக்களும், இங்க பாட்டில்களும்,
இங்க்  கரைகளும் ஆக்கிரமித்த காலம் ஒன்று இருந்தது.
கடிதங்கள், பத்திரங்கள்  எல்லாம் எழுத அவை உபயோகப் பட்டு வந்தான்.
எழுத்தாளர்களின் முக்கிய படைப்புகளும் 
பேனாவால் எழுதப் பட்டவையே.


எகிப்து  மன்னன் சொல்வதையெல்லாம் 
படி யெடுக்க ஒரு ஆள் எப்பொழுதும் இருப்பாராம்.

அங்கேதான் பாப்பிரஸ் மரம், ஓலைகள்,எழுத்தாணிகள் 

உபயோகப்பட்டு வந்தன.

நம் அரசர்களும்  ,புலவர்களும் எழுத்தாணி உபயோகித்ததைத் திரைப் படங்களில் பார்த்து இருக்கிறோம்.

ஏடுகளைப்  பார்த்து நாடி ஜோஸ்யம் சொல்வதையும் 
பார்த்திருக்கிறேன்.
நம் தமிழ்த் தாத்தா,எத்தனை இடங்களுக்குச் சென்று காவியங்களை மீட்டு வந்தார் என்பதுவும் தெரியும்.
நம் கீதா சாம்பசிவம்  அவரைப் பற்றி   எழுதியது எல்லாமே காவியம்.

நாங்கள் படிக்கும் போது ஆறாம்  வகுப்பிலிருந்து பேனாவைக் கையில் பிடிக்கக் கற்றுக் கொடுக்கப்படும்.

அந்த லாவகத்தைக் கற்க நான் மிகச் சிரமப்பட்டேன்.

குழந்தைகள்  காலத்தில் ரியினால்ட்ஸ் வந்து விட்டது.
எங்கள் மகனுக்கும் ,அவன் தந்தைக்கும் பழைய பேனா  மோகம் நிறைய உண்டு.
பலவிதமான உலகத்தரம் மிக்க பேனாக்கள்  துபாயில் ஆன்ட்டிக்  கடையில் கிடைக்கும்.
பேனா, வாட்ச்,  என்று ஒரு பொக்கிஷத்தையே சேமித்தார்கள் 
தந்தையும் மகனும்.
அப்பா  ரிடையர் ஆகும் வரும் தபால் ஆபிஸ் கட்டைப் பேனா, இங்க பேனா, என்று விதவிதமாக வைத்திருப்பார்.
கணினி எல்லாம் தொட்டதில்லை. என் மக்களுக்காகவும் , எத்தனை ஜாதகங்கள் எழுதி ருப்பாரோ கணக்கு இல்லை.

1996  வரை டயரி எழுதி வர  வருடா வருடம் தம்பிகள் பேனாக்களும் டயரிகளும் கொடுப்பார்கள்.
Add caption
பழைய காலத்து இங்க்  குப்பிகள் 

 பழைய   ஃ பௌண்டைன்  பென் 

பச்சை இங்க்  என் விருப்பம்.







16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இங்க் பேனா எழுதவே மிகவும் பிடிக்கும்...

கரந்தை ஜெயக்குமார் said...

பள்ளி நாட்களில் இங்க் பேனாவில் எழுதியதுதான்
இன்று காலம் மாறிவிட்டது
இப்பொழுது இங்க் பேனாவில் எழுத வேண்டும் என்ற ஆவல் வருகிறது, ஆனால் வாங்கி எழுதினால், எழுத்துத்தான் வரமறுக்கிறது

KILLERGEE Devakottai said...

ஆம் இன்று எழுதுவது குறைந்து விட்டது.

நெல்லைத் தமிழன் said...

எனக்கும் பேனா மோகம் சின்ன வயதிலிருந்தே உண்டு. எங்க அப்பா ஹெட்மாஸ்டரா இருந்தப்போ வித்தியாசமான பேனாக்கள் வைத்திருப்பார். அதில் ஒன்று 1 அடிக்கும் நீளமான பேனா. இரு புறமும் திறந்தால் இங்க் பேனா. அதில் நான் பிரில் கறுப்பு மை போட்டு பரீட்சைக்கு (7வது) எடுத்துச் செல்வேன். 4வது படிக்கும்போதே என்னிடம் பேனா உண்டு. சின்ன வயதிலிருந்தே எனக்கு பட்டை அடிக்கும் பேனாதான் பிடிக்கும். அதுக்காக புது நிப்பை தேய்த்துத் தேய்த்து பட்டையா எழுதச் செய்வேன். எப்போதும் கறுப்பு மைதான்.

அதிருக்கட்டும்... நான் அந்தக் காலத்து வகுப்புகளில் மேசை மேலேயே மைக்கூடு, மை வைத்துக்கொள்ளும் அமைப்புடன் கூடிய மேசைகளையும், மையைத் தொட்டு எழுதும் பேனாக்களையும் பார்த்திருக்கிறேன் (உபயோகித்துப் பார்த்ததில்லை).

நான் இங்க் பேனா தவிர வேறு எதையும் படிக்கும் காலத்தில் உபயோகப்படுத்தியதில்லை.

பேனா நினைவைக் கொண்டுவந்துவிட்டீர்கள்

கோமதி அரசு said...

பேனாவின் காலங்கள் பற்றிய பதிவு மிக அருமை.

பார்க்கர், பைலட் பேனா எல்லாம் எப்போது கிடைக்கும் என்று ஏங்கியது உண்டு 9ம் வகுப்பு படிக்கும் போது அப்பா வாங்கி தந்தார்கள். தங்ககலர் மூடி போட்டு இங்க் உறிஞ்சி எடுப்பது பெரிய பெருமைக்கு உரிய விஷயம் போல் இருக்கும்.

சிறு வயதில் இங்க் இல்லை என்றால் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் தோழியிடம் கேட்டால் கழற்றி ஊற்றி தருவாள். அது வெளியே வழிந்து சில நேரம் சீர் உடையில் கொட்டி விடும் வீட்டுக்கு போனால் அம்மாவிடம் திட்டு விழும்.

கணக்கு டீச்சர் இங்க் பாட்டில் வைத்து இருப்பார்கள்"என்னிடம் கேளுங்கள் பசங்களா" நான் தரேன் 10 பைசா வாங்கி கொள்வார்கள்.

எவ்வளவு சமையல் குறிப்புகள் , படித்ததில் பிடித்தது என்று எல்லாம் நோட்டு நோட்டாய் எழுதி வைத்து இருக்கிறேன்.

இப்போதும் ஒரு டையிரியில் ஸ்ரீராம ஜெயம், ஓம் சரவணபவ. ஓம் சாயி ராம், ராம் ராம், ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் எல்லாம் எழுதுவேன் நினைத்த போது.



கோமதி அரசு said...

அப்போது எல்லாம் இங்க் பேனாவைத்து தான் பரீட்சை எழுத வேண்டும்.
பால்பாயிண்ட் பேனாவால் பரீட்சை எழுத விடமாட்டார்கள்.

Avargal Unmaigal said...

ஒரு சில வருடங்கள் வரை அதாவது முந்தைய வேலையில் இருக்கும் வரை பேனா உபயோகித்து இருக்கிறேன்.. வேலைக்காக அல்ல வேலை நேரத்தில் சும்மா இருக்கும் போது மந்தில் தோன்றுவதை எல்லாம் எழுதி வைப்பேன் வீட்டிற்கு வந்ததும் அது பதிவுகளாகிவிடும்.... வேலை நேரத்தில் எப்படி சும்மா இருக்க முடியும் என்று கேட்க கூடாது.. நான் பார்த்தது சேல்ஸ்மேன் வேலை கஸ்டமர் வருகிறார்களா என்று பார்த்து கொண்டே சும்மா இருக்கும் நேரத்தில் எழுதுவதை சொன்னேன்

ஆனால் இப்ப செய்யும் வேலை அதற்கு தலை கிழானது சும்மா ஒரு நிமிடம் கூட உட்கார நேரம் இருக்காது

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், கைகளுக்கும் நல்லது. மூளைக்கும் நன்மை. நீங்கள் எழுதுவதை எண்ணிப் பெருமை மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு ஜெயக்குமார்,
கையெழுத்து மிக மாறிவிட்டது. எழுத்து எங்கேயோ போகிறது. எழுத வேண்டும்..
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி,
எல்லோரும் கழுதிப் பார்ககலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
இனிய காலை வணக்கம்.

4 ஆம் வகுப்பிலிருந்து எழுத ஆரம்பித்தீர்களா.

ஆமாம் வேறு வேறு பள்ளிகள் வெவ்வேறு விதம்.
நானும் பட்டை அடித்து வித விதமாக எழுத
விரும்புவேன்.
அதற்காகவே அப்பாவிடமிருந்து பழைய பேனா எடுத்துக் கொள்வேன்.

இங்கே குழந்தைகள் நிறைய எழுதுகிறார்கள்.
அதிகமாகப் பாடங்கள். பவர்பாயிண்ட் ப்ரசண்டேஷன் மட்டும் கணினி.
எங்கள் பள்ளி மேஜைகளில் ஒவ்வொருத்தர் மேஜைக்கும் மைக்கூண்டு வைக்கும் பள்ளம் இருக்கும்.
மூடித்திறக்கும் டெஸ்க் உண்டு.
இப்போது எங்கள் வீட்டில் ஒன்று இருக்கிறது.
Auction இல் வாங்கியது. நல்ல நினைவுகளை எழுதி இருக்கிறீர்கள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி ,
இனிய காலை வணக்கம் மா.
எத்தனை நினைவுகள் பேனாவுடன்.
ப்ளூ கலர் ப்ரில் இங்க்.வீட்டிலிருந்து மசிக்கூடு எடுத்துப்
போகாத பரீட்சை நாட்கள்.
அப்போது இங்க் தந்து உதவிய ஸிஸ்டர் ஜேம்ஸ்..
நான் வீட்டில் வைத்துவிட்டு வந்த இன்னோரு பேனாவைப் பியூனிடம் கொடுத்த அனுப்பிய அப்பா.
கறுப்பு இங்க் கிடையாது. நீல இங்க் மட்டும் தான்.

தோழியிடம் கடன் வாங்கித் திருப்பித் தந்த நாட்களும் உண்டு.
படிக்கும் போது பைலட் பென் தான் கோல்.
பார்க்கர், ஷீஃபர் எல்லாம் பிற்காலத்தில்.

ஃபௌண்டன் பென் ,பெயருக்கு ஏற்க ,
நிப்பால் உறிஞ்சி எடுக்கும் அழகு
அத்தனை நினைவுகளையும் கொண்டு வந்து விட்டீர்கள்.
நன்றி கோமதிமா. கல்வி நாட்களுக்கு நன்றி.

மாதேவி said...

பள்ளிக் காலத்தை நினைவூட்டின.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை. உங்கள் கருத்துக்கு பதில் எழுதியதாக
நினைத்துக் கொண்டுவிட்டேன்.

இப்பொழுதும் எழுதுங்கள். எப்படியாவது நேரம்
கிடைக்க என் பிரார்த்தனைகள்.
பேனா நம் வலது கையாக இருந்தது.
இப்போது அந்த இடத்தைக் கணினி பிடித்துக் கொண்டுவிட்டது.

வெங்கட் நாகராஜ் said...

தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களின் கையெழுத்து உங்களையும் பேனா, இங்க், எழுத்து பற்றிய பதிவு எழுத வைத்திருப்பதில் மகிழ்ச்சி. உங்கள் பதிவின் சுட்டியும் அவருக்கு அனுப்பி வைக்கிறேன்.