Blog Archive

Saturday, April 25, 2020

எங்கோ ஆரம்பம் சீக்கிரம் விலகும்.

வல்லிசிம்ஹன்  எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 
எங்கோ ஆரம்பம் சீக்கிரம் விலகும்.

மாற்றங்கள் கொண்டு வந்தது இந்த நிகழ்வு.

குடும்பம் ஒன்றானது. ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம். சில புதுப்
படங்களைப் பார்க்கிறோம்.
வளர்ந்த முடியை அவரவர் சரி செய்து கொள்கிறார்கள். தெருவெங்கும் நிசப்தம். நடக்கும் செல்லங்களும் அவர்களது எஜமானர்களுமே(!!!!)
இருக்கிறார்கள்.

முகமூடி இல்லாமல் யாரும் வண்டி ஏற முடியாது.
வண்டியே  நகர மறுத்தது.
அதற்கு உயிர் கொடுக்கும் பாட்டரிக்கு உயிர் கொடுக்க
ஒரு கேபீள் தேவை.

அந்தக் கேபிள் கொண்டுவருவதற்கும் யாரிடமும்
முனைப்பு இல்லை.
அமேசான் வழி அதை வாங்கியாச்சு.
இனி நம் கையே நமக்கு உதவி.
பழைய பதற்றங்கள்,
ஓடு ரயிலைப் பிடி,
 எழுந்திரு ப்ராஜெக்டை முடி,
20ஆம் தேதிக்குள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்
என்பதெல்லாம் இல்லை.
எல்லோரும் வீட்டில் இருப்பதால், முதலாளி,தொழிலாளி
என்ற பேதம் சற்றே ஒதுங்கி விட்டது.
பேசுவதில் ஒரு நிதானம். அடக்கம் எல்லோரிமும் வந்திருக்கிறது.

அம்மா நாள் முழுவதும் செய்யும் வேலைகளைப்
பார்க்கிறார்கள். அவரவர் அறைகளைச் சுத்தம் செய்வதிலும், 
உடைகளை எடுத்து வைப்பதிலும் அதிக கவனம் காட்டுகிறார்கள்.
மாப்பிள்ளை எல்லா வேலைகளிலும் பங்கு கொள்கிறார்.

 அவ்வப்போது விவாதங்கள் வராமல் இல்லை.
வீட்டுக்குள்ளே அடைந்து கிடப்பது
பலவித பயங்களை எழுப்புகிறது. என்னால் முடிந்தவரைப்
பேரப்பிள்ளைகளிடம் அணைப்பு காட்டி,
உலகத்தில் ஆரோக்கியத்துக்கு மேல் எதுவும் இல்லை
என்பதைச் சொல்லுகிறேன்.
பயத்தினால் வரும் சினங்கள் சற்றே அடங்குகின்றன.

மீண்டும் கலகலப்பு சேர்ந்து கொள்கிறது.
மீண்டும் பாஹுபலி பார்த்தோம்.
மஹாபாரதத்துக்கும் இந்தப் படத்துக்கும் இருக்கும்
ஒற்றுமை,வேற்றுமைகளை விவாதிக்கிறோம்.

ஒரு குடும்பம் முன்னேற வேண்டும் என்பதில் தந்தைக்கும் 
தாய்க்கும் இருக்கும் பொறுப்புகளையும்
அதை வெற்றி பெற வைப்பது பிள்ளைகளின் 
கடமை என்பதையும் அவர்களுக்குச் சொல்ல வேண்டி இருக்கிறது.
அவர்கள் வளரும் சமுதாயம் ஒரு சுய நல சமுதாயம். 

20 வயதுக்குள் சம்பாதிக்கும் திறன் வந்து விடுகிறது.
அத்துடன் பெற்றோரின் இன்றைய ய மனதுக்கும் 
அமெரிக்கப் பிள்ளை மனதுக்கும் எத்தனையோ
சிந்தனையில் தடுமாற்றங்கள்.

இதெல்லாம் மாற இறைவனே ஏற்படுத்திக் கொடுத்த 
ஒரு சந்தர்ப்பமாகப் பார்க்கிறேன்.
பணமிருந்தால் எதை வேண்டுமானாலும் 
சாதிக்கலாம் என்ற மன நிலை 
எங்கோ ஒரு மூலையில் படிவதை முளையிலே
கிள்ளி எறிய மாபெரும் சந்தர்ப்பம்.

சாதி த்தவர்களை முடக்க ஒரு கிருமியால் முடிந்ததென்றால்
இறைவனின் தீர்மானத்தை நாம் மதிக்க வேண்டும் 
என்ற ஒரு பொறி இப்போது
பற்றிக் கொள்கிறது. நமக்கு ஆன்ம பலம் நிறைய.
அதை இந்தக் குழந்தைகளிடமும் போதிக்க எங்களுக்கு வரம் கொடுத்திருக்கிறான் 
இறைவன். 
நாம் அனைவரும் வாழ்வோம் அவனுடைய கருணையால்.

27 comments:

கோமதி அரசு said...

தலைப்பும் பதிவும் அருமை.
நன்றாக சொன்னீர்கள்.
வீடுக்குள்ளேயே அடங்கி கிடப்பது சில நேரங்களில் சினத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை.

நல்வழியில் நடந்த நீங்கள் உறுதுணையாக இருக்கிறீர்கள்.
இறைவன் அருளால் அனைவரும் வாழ்வோம்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.

Bhanumathy V said...

//சாதி த்தவர்களை முடக்க ஒரு கிருமியால் முடிந்ததென்றால்இறைவனின் தீர்மானத்தை நாம் மதிக்க வேண்டும் என்ற ஒரு பொறி இப்போதுபற்றிக் கொள்கிறது.//இந்த காலகட்டத்திற்கு தேவையான பாசிட்டிவ் அப்ரோச். நன்றி.

நெல்லைத் தமிழன் said...

நல்ல கோர்வையா சிந்தித்து யதார்த்தமா எழுதியிருக்கீங்க.

உண்மைதான். இது குடும்ப உறுப்பினர்கள் நெருக்கமாவதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம். வீட்டுத் தலைவிகளின் பொறுப்பையும் கடமையையும் உணருவதற்கான சந்தர்ப்பம்.

நெல்லைத் தமிழன் said...

இது கடந்துபோய்விடும். ஆனால் இது நமக்குத் தந்த நல்ல அனுபவங்களை நாம் மறந்துவிடக் கூடாது.

துரை செல்வராஜூ said...

பயனுள்ள சொற்களால்
நிறைந்துள்ளது பதிவு..

எத்தனையோ நல்லபழக்க வழக்கங்கள்
மீண்டும் தழைத்திருக்கின்றன இந்த சூழ்நிலையில்...

அவற்றை அப்படியே கொள்ளப்
போகின்றோமா...

அல்லது மறுபடியும் கீழே கொட்டிச் சிதற
விடப் போகிறோமா...

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
இனிய காலை வணக்கம்.
மிக நன்றி மா. சோதனைக்காலங்களில் தான் நாம் இறைவனை
இன்னும் நெருக்கமாக உணர்கீறோம்.
பயந்து ஒன்றும் ஆகப் போகிறதில்லை.
பயத்திற்குப் பதிலாக நம்பிக்கை வைப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமதி மா,
இனிய காலை வணக்கம்.
சாதித்தவர்கள் என்பதோடு கூட
இயற்கையை அதிகபட்சம் அழித்தவர்களைச் சொல்ல வேண்டும்.

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்த கண்ணன் நம்மையும் காக்கட்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
இனிய காலை வணக்கம் மா.
இன்னும் நிறைய எண்ணங்கள்
மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இன்னோரு
நாள் பார்க்கலாம்.
ஆமாம் பாடங்களை மறக்கக் கூடாது.
பகவான் நம்மைக் காக்கட்டும்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு,

நாம் நம்பலாம். அப்பா.
நன்மைகள் நடக்கட்டும். மாற்றம் நல்லதை நோக்கி நகரட்டும்.
எங்கே எல்லாமோ மக்கள் இருக்கிறார்கள்.
கவலை இல்லாமல் இல்லை.
பீதியை நகர்த்திவிட்டு
பிரார்த்திக்கலாம். வாழ்க வளமுடன்.

ஸ்ரீராம். said...

மிகவும் அழகாக எழுதி உள்ளீர்கள். பற்பல ஆண்டுகளுக்குப் பின் குடும்ப உறவுகளின் பலம் அனைவருக்கும் புரிகிறது. வேலைகளைப் பகிர்ந்து செய்யும் மனமும் வருகிறது. பணத்தால் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்கிற மமதை குறைகிறது.

Geetha Sambasivam said...

உண்மையை மென்மையாகச் சொல்லி இருக்கிறீர்கள். மனோபலம் அனைவருக்கும் பெருக இறைவனைப் பிரார்த்திப்போம். மற்றவற்றை "இதுவும் கடந்து போம்!" எனச் சொன்ன மாதிரி இதைச் சொல்ல முடியவில்லை. எல்லாம் இறைவன் கைகளில். ஒரு சின்னக்கிருமியால் உலகையே ஆட்டிப் படைக்க முடிகிறது. அதை நிறுத்துவது இறைவன் கைகளில். அவனிடம் சரண் அடைவோம்.

வெங்கட் நாகராஜ் said...

இன்றைய சூழலை சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள் மா...

இதுவும் கடந்து போகும்.

பலரின் மனதில் இருந்த அழுக்குகள் விலகி இருக்கிறது. அதே சமயம் அதீத சுயநலமும் பலரிடத்தில் நிறையவே வெளிப்படுகிறது.

நலமே விளையட்டும். அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

KILLERGEE Devakottai said...

அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் அம்மா இறையை நம்பும் நிலைக்கு இயற்கை கொடுத்த சிறு வாய்ப்பு இது.
வாழ்க வையகம்.

Thulasidharan V Thillaiakathu said...

சாதி த்தவர்களை முடக்க ஒரு கிருமியால் முடிந்ததென்றால்
இறைவனின் தீர்மானத்தை நாம் மதிக்க வேண்டும்
என்ற ஒரு பொறி இப்போது
பற்றிக் கொள்கிறது.//

மிகச் சரியான வரிகள் வல்லிம்மா. ரசித்த பதிவு. மென்மையாகச் சொல்லில் செல்கிறீர்கள். உண்மைதான் நிறைய கற்றுக் கொள்கிறோம். எனது பதிவிலும் கூட இறையயை நம்பிக் கடக்க வேண்டும் என்றிருக்கிறேன். இதுவும் கடந்து போகும்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா ஆஹா மயிலிறகால் வருடிக் கொடுப்பது போல அழகான வார்த்தைகள் ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க... கடைசியில் சொன்னது 100 சதவிகிதம் உண்மை...வெரி வெரி பாசிட்டிவ். இது இதுதான் வேண்டும். நிறைய கற்கிறோம். இயல்பு வாழ்க்கை திரும்பியதும் கற்றதை மறக்காமல் அதை இறுதிவரை நாம் கடைப்பிடிக்கவும் வேண்டும்.

விரைவில் உலகம் இயல்புனிலைக்குத் திரும்ப வேண்டும் அம்மா.

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

பல உண்மைகளை உணர வேண்டிய நேரம் அம்மா இது...

மாதேவி said...

'குடும்ப உறுப்பினர்கள் நெருக்கமாவதற்கான சந்தர்ப்பம்' நிச்சயமாக .ஊஉதவும் எண்ணங்கள் எழுகின்றன.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி ,
நீங்கள் நலமாப்பா. பத்த்ரமாக இருங்கள் மா.
இறைவன் துணை இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
அனைவரையும் ஒரு மிரட்டுப் போட்டு வைத்திருக்கிறது.
நாம் பத்திரமாகவும், தைரியமாகவும்
இருந்து விட்டால் போதும்.
இதோ இப்போது கூட இந்தியாவில்
இருக்கும் உறவுகளிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரே கும்மாளம் தான்.

க்ரூப் சாட் வந்ததால் எல்லோரையும் ஒன்றாக
பார்க்க முடிகிறது.
நன்மையே நடக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதமாகப்
பாதிப்பு.தினம் ஒரு செய்தி.
நம் ஊரில் நடக்கும் சங்கடங்களும் வருத்தப்பட வைக்கின்றன.
வரலாறு காணாத நோய்தான்.
உங்களைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருப்பேன்.

காய்கறிகள் கிடைக்கிறதோ. மருந்துகள் யார்
கொண்டு வந்து கொடுக்கிறார்களோ என்று
நினைத்துக் கொள்வேன்.
மெதுவாகக் கடந்து விடுவோம். நம் சமயபுரம் மாரியம்மனும்,
வெக்காளி அம்மனும் பக்கத்தில் இருந்து
காப்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நன்றி மா.
சுய நலம் சிலரிடத்தில் அதிகம் ஆகிவிட்டது.
கடைக்குப் போய்விட்டு வந்து,
எல்லாம் வித்துப் போய்விட்டது என்பார்கள்.
ஆனாலும் பரவாயில்லை.
இங்கே எல்லாம் ஆன்லைன் என்பதால்
வர்ச்சுவல் ஷாப்பிங்க் நன்றாக நடக்கிறது.
இனியும் எல்லாம் நன்மையாக இருக்கட்டும்.
நீங்களும் பத்திரமாக இருக்கவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி, ஆமாம்,
இறைவனை மறக்கக் கூடாது என்பதற்காகவே
வந்த சந்தர்ப்பம்.
நன்மையே நினைப்போம்.
நீங்களும் குடும்பமும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

மிகச் சரியான வரிகள் வல்லிம்மா. ரசித்த பதிவு. மென்மையாகச் சொல்லில் செல்கிறீர்கள். உண்மைதான் நிறைய கற்றுக் கொள்கிறோம். எனது பதிவிலும் கூட இறையயை நம்பிக் கடக்க வேண்டும் என்றிருக்கிறேன். இதுவும் கடந்து போகும்./////////இனிய காலை வணக்கம் அன்பு துளசி.
உங்கள் பதிவையும் படித்தேன். அச்சுறுத்தும்
விவரங்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

என் 72 வருட வாழ்க்கையில், ஃப்ளூ, மலேரியா, மற்ற
எல்லாம் பார்த்திருக்கிறேன்.
இந்தக் கிருமி தொற்று போலப் பார்த்ததில்லை.

எப்பொழுதும் நம் தேசம் ஆத்ம பலத்தாலயே
சிரமங்களைக் கடக்கும். இப்பொழுதும் அந்த நம்பிக்கையே நம்மை வாழ
வைக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் இனிய காலை வணக்கம் ராஜா. நலமாக இருங்கள்.

அபிராமி அன்னை,
நம்மைக் காப்பாள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா. மாதேவி. நலம் வளரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

நம் நட்புகள் எல்லோரும் நல்ல ஆரோக்கிய சிந்தனையுடன் இருப்பதே நம் பெருமை.
பாசிடிவ் பீப்பிள். பாசிடிவ் திங்கிங்க்.
நோயைச் சொல்லி அதை நம் பக்கம் வரவிடாமல் துரத்துவதே
நம் குறிக்கோள்.

எல் கே said...

இது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை இறைவன் உலக வாழும் முறையை மாற்ற விரும்பி செய்வதோ .. விரைவில் சரியாகி அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் .

சர்வே ஜனா சுகினோ பவந்து