Blog Archive

Wednesday, March 25, 2020

பேரைச் சொல்லவா......2

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழவேண்டும் .

பேரைச் சொல்லவா.  2   நன்றி சாந்திமா, அமைதிச் சாரல் 

தாயும் சேயும் நலமாக இருக்க   வீட்டருகில் இருக்கும் பிள்ளையாருக்கு

 தேங்காய்கள் வேண்டிக் கொள்ளப் பட்டன.

ஸ்ரீனிவாசப் பெருமாளிடம்  அர்ச்சனைகள்.

இத்தனையும் செய்தும் பிறந்ததென்னவோ ஒரு வெள்ளை சைனா  பொம்மை போல

ஒரு சின்னக் குழந்தை.



பாட்டி(மதுரை)'அட ராமா , நாராயணா,(எங்க அப்பா) என்னடா இப்படி ஒரு கண்ணு.

 மூக்கு இருக்கும் இடம் தெரியவில்லையே. கீத்து மாதிரி கண்ணு.இந்தப் பக்கம் தண்ணீர் விட்டால்

அந்தக் கண்ணுக்குப் போயிடும் போல இருக்கே""

என்று வழக்கம் போல பரிகாசம் செய்தாலும் ஆசையாக மடியில் எடுத்துவைத்துக் கொண்டு

தன் பெயரையே வைக்கும் படி சொல்லிவிட்டார்.

அதனால் முதல் பெயர் திருவேங்கட வல்லி!!

அம்மாவுக்கு  வில்லிபுத்தூர் பாவையின் மேல் அளவிட முடியாத பாசம். அதனால்

ஆண்டாள் என்றும் கூப்பிடுவதாக  ஏற்பாடு ஆச்சு.



மாமாக்கள் சும்மா இருப்பார்களா. குழந்தை பிறந்த அன்று ஜெமினி தயாரிப்பான 'சந்திரலேகா' படம்

வெளிவந்தது.



அதனால் மாடர்னா அந்தப் பெயரும் வைக்கணும் என்று வேண்டுகோள்.

ஆகக்கூடி மூன்று பெயர் நெல்லில் எழுதியாகி விட்டது.

வேறு யார் ''ரேவதி'' என்னும் பெயர் சொன்னார்களோ

தெரியவில்லை. அதுவும் சேர்ந்து கொண்டது.



கொஞ்சம் வருடங்களானதும் சுயமாக(!)ச் சிந்திக்கும் திறன் பெற்ற

ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து  அப்பா, திருமங்கலத்துக்கு

மாற்றலாகி வந்து, ஆறாவது படிக்க திருமங்கலம் போர்ட்  உயர்நிலைப் பள்ளியில்

 சேரப் போனபோது, 'தன் பெயர் ரேவதி' என்று ஹெச்.எம்.

எனப்படும் தலைமை ஆசிரியையிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு

என்ட்ரன்ஸ் டெஸ்டும் எழுதியாச்சு.:)

ஆண்டாள் ''நா.ரேவதி'' ஆனது இப்படித்தான்.

பரீட்சைக்கு அழைத்து வந்தது  ஐந்தாவது வகுப்பு வரை படித்த ஆதாரப் பள்ளியின்

தலைமை ஆசிரியை, பெரிய டீச்சர்.

அதனால் பெயர் மாற்றுவது ஆண்டாளுக்குச் சுலபமாகிவிட்டது.

தேர்வு முடிந்து அழைத்துச் செல்ல வந்த அப்பாவின் கைகளில்

அந்தப் பள்ளியில் சேர்த்துக் கொண்டதற்கான ரசீதைக்  கொடுத்தார் ஆசிரியை.

பெயரைப் பார்த்ததும் அப்பாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

''பிஞ்சிலே பழுத்ததா'? என்று  வேறு  ஒன்றும்  சொல்லாமல்

வீட்டுக்கு அழைத்துச் சென்று அம்மாவிடமும் சொன்னார்.

அம்மாவுக்கு அவ்வளவு   இஷ்டம் இல்லை.



''அதென்ன  தானே அழகி தம்புரான் பொண்டாட்டி' னு

அதிகப் பிரசங்கித்தனம்  என்று அலுத்துக் கொண்டார்.



இருந்தாலும் வீட்டில 'ஆண்டாளாகவும் வெளியில் ரேவதியாகவும்''

 இருக்க ஒப்புக் கொண்டார்.

இந்த நாள் வரை அதுவெ வழக்கமாகிவிட்டது.

திருமணத்தின் போது நான் ரேவதியாகவே ஆகிவிட்டேன்.

ஆண்டாள் என்னும் பெயரே ஏதோ ஒன்பதுகஜ மாமியைக் கர்நாடகமான

கோலத்தில் பார்ப்பது போல புகுந்த வீட்டில்  தோன்றியதாம்.!



பிறகு வலையுலகத்துக்கு வந்த போதுச் சரியாக ஐந்து வருடங்களுக்கு

முன்னால், நாச்சியார் பதிவும் வல்லிசிம்ஹனும் உருவானார்கள்.

பழைய பேரில் பாதி, கணவர் பேரில் பாதி.:)



மாற்றுப் பெயர் அவசியமா என்று யோசித்ததற்குப் பெரிய காரணம் ஒன்றும் இல்லை. ஏதோ ஏகப்பட்ட (எனக்கு)த்  தெரிந்த

நபர்கள் படிப்பது போலவும், ஓ நம்ம ரேவதியா இது:( என்று அவர்கள்

நினைத்துக் கொள்ளுவார்கள் என்ற நினைப்புதான் காரணம்:)))))



என்னவோ  நானும் பல அவதாரங்களில் நடமாடிக் கொண்டிருக்கிறேன்.:)))



இந்த மாதிரிப் பெயர் விவரம்,மாற்றம்,காரணம் பற்றி எழுத என் நண்பிகளை

அழைக்கிறேன்.

ஏற்கனவே எழுதி விட்டார்களோ தெரியாது.



அன்பு அக்கா  நைன் வெஸ்ட்  ''நானானி''

அன்பு  துளசிகோபால்

அன்பு  கீதா  சாம்பசிவம்,

அன்பு கோமதி அரசு(திருமதி பக்கங்கள்_)

அன்பு மாதங்கி

அனைவரும் முக்கிய வேலைகளில் இருப்பவர்கள். கொஞ்சம் நேரம் ஒதுக்கி

எழுத வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.






எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்



20 comments:

ஸ்ரீராம். said...

//அதென்ன  தானே அழகி தம்புரான் பொண்டாட்டி' னு//

ஆஹா...    இதுபோன்ற சொலவடைகளைத் தொகுத்து ஒரு பதிவு எழுத வேண்டும் என்று முன்னர் நினைத்துக் கொள்வேன்!

வல்லி என்கிற பெயருக்கான காரணம் தெரிந்தது.   ஓரிருமுறை அந்தப்பெயர் எதிலிருந்து வந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டதுண்டு!  இப்போது விலகியது மர்மம்!  நன்றி சந்திரலேகா திருவேங்கடவல்லிம்மா...

வெங்கட் நாகராஜ் said...

தனிப்பதிவாகவும் இங்கே...

போன பதிவிலேயும் இதை வாசித்தேன் மா.

தொடர்ட்டும் பதிவுகள்.

நெல்லைத் தமிழன் said...

/இந்தப் பக்கம் தண்ணீர் விட்டால்

அந்தக் கண்ணுக்குப் போயிடும் போல இருக்கே"// - ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. ஹா ஹா ஹா.

நெல்லைத் தமிழன் said...

ஓ... பெயர்க்காரணம் புரிந்தது. என்னடா கீசா மேடம் 'ரேவதி' என்றெல்லாம் எழுதுகிறாரே என்று ஆரம்பத்தில் நினைத்திருக்கிறேன்.

என்ன இருந்தாலும் வல்லிம்மா, வல்லி சிம்ஹன் - இந்த இரு பெயர்கள் அருமை..

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர் சிறக்கட்டும் ...

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஆவ்வ்வ்வ் அழகு, அருமை..

//பழைய பேரில் பாதி, கணவர் பேரில் பாதி.:)//
இபடித்தான் என் பெயரின் எழுட்த்ஹையும் கணவரின் பெயரின் எழுத்தையும் இணைச்சே, நம் பிள்ளைகள் இருவருக்கும் பெயர் வைத்தோம்.. இது என் ஐடியாத்தான் ஹா ஹா ஹா..

கோமதி அரசு said...

ஒரே பதிவு எத்தனை தலைப்புகளில் !

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு ஸ்ரீராம். 2011 இல் இதே மார்ச்
மாதத்தில் எழுதி இருப்பதாக ,பதிவு காட்டியது.
ஆக்சிடெண்டல் மெமரி.

ஒய் நாட்னு பதிந்துவிட்டேன்.
வல்லிம்மா தான் நல்லா ஒட்டிக் கொண்டது.
இந்த வயதுக்கு அதுதான் பொருத்தம்.

வல்லிசிம்ஹன் said...

அதிகப் பிரசங்கித்தனம் எப்பவும் என்னிடம் நிறைய என்று அம்மா
சொல்வார்கள்.
அடக்கி இருக்கலாமேன்னு
பின்னாட்களில் அம்மாவிடம் கேட்பேன்.
தம்புரான் பெண்டாட்டி கொஞ்ச வருடங்களில் காணாமல் போனாள்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட். .கோமதியும் சொன்னார்கள்.
மூன்று பதிவுகளாக வந்துவிட்டதோ.
போரடித்திருக்குமே.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
கீதா, என்னை எப்பவாவது ரேவதி என்பார்கள். முக்கால்வாசி வல்லி தான்.
ஆச்சு ஓட்டியாச்சு 15 வருடங்கள்.
நிறைய நட்புகள் கிடைத்ததே இங்கேதான்.
நிறைய பேர் முகனூலுக்குப் போய்விட்டார்கள்.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், மிக நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

அன்பு பிஞ்சுக் கவிஞர் அதிரா,
அருமையான பெயர்கள் கிடைத்திருக்கும் உங்களுக்கு.
பெயர்கள் என்னை எப்பவும் fascinate செய்யும்:)
அதன் விளைவே இந்தப் பெயர்கள்.
உங்கள் ரசனை அபாரம் கண்ணா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

என்னுடைய சிறுவயதுப் படம் என்னிடம் இல்லை. பார்த்தால்
தெரியும்.
என்னை விட 7 வயது பெரிய மாமா என்னை சப்ப மூக்கு சவள வாயி எப்பக் கல்யாணம்னு கேப்பான்.
பங்குனி மாசம் பத்தாம் தேதி பருப்புக் கல்யாணம்னு
பதில் சவால் விடுவேன்.
அவனும் இந்தக் கொரோனா அண்டாமல் நன்றாக இருக்கணும்.

மாதேவி said...

எத்தனை பெயர்கள் அருமை.

ஜீவி said...

//அம்மாவுக்கு வில்லிபுத்தூர் பாவையின் மேல் அளவிட முடியாத பாசம். அதனால்.. //

நானும் வல்லிக்குக் காரணம் ஸ்ரீவில்லிப்புத்தூர் தான் தீர்மானமாக நினைத்துக் கொண்டிருந்தேன், வல்லிம்மா.

//இருந்தாலும் வீட்டில 'ஆண்டாளாகவும் வெளியில் ரேவதியாகவும்'' இருக்க ஒப்புக் கொண்டார். //

ஹஹ்ஹாஹா.. அழகாகத் தான் எழுதுகிறீர்கள்.

இந்த மாதிரி கட்டுரைகளை எங்கு ஆரம்பிப்பது என்று தெரியாமல் பலருக்கு குழப்பம் ஏற்படுவதுண்டு.
உங்களின் தொடக்கமோ பிரமாதம்.

//தாயும் சேயும் நலமாக இருக்க வீட்டருகில் இருக்கும் பிள்ளையாருக்கு.. //

வெகு சுளுவான நீங்கள் ஆரம்பத்திருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

கல்கி -- தேவனிலிருந்து எத்தனைப் பேரைப் படித்திருப்பீர்கள்?.. அதான் அத்தனையும் கரதலைப் பாடமாக ஆகியிருக்கிறது.

இதை எழுதிக் கொண்டிருந்த பொழுது டக்கென்று வசுமதி ராமசாமி நினைவு வந்தது. ஏன்னு தெரியலே..
கல்கியையும் தேவனையும் நினைச்சிண்டதாலாயா?..
தெரிலே..

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, நலமாப்பா.
நன்றி. பத்திரமாக இருங்கள்/

வல்லிசிம்ஹன் said...

இந்தத் தாயும் சேயும் நலம் ,எங்கிருந்து வந்தது என்று உங்களால்
அனுமானிக்க முடியுமே.
அப்பா கொடுக்கும் வாங்கும் தந்திகளிடமிருந்து தான்.

கல்கி ,தேவன் புத்தகங்கள் எல்லாம் என் 40 வயதுகளில் வாங்க ஆரம்பித்தேன். அவை இன்னும் வீட்டு முன் அறையில் தூசி படிந்து அமர்ந்திருக்கின்றன.
எஸ் வி.ராஜம்மா, வசுமதி ராமசாமி,பிலஹரி

அதற்கு முன்னால், மாயாவி, லக்ஷ்மி, ராஜம் கிருஷ்ணன், சாவி, சிவசங்கரி,சுஜாதா
மணியன் எல்லோரும் கலைமகள், குமுதம்,விகடன் வழி அறிமுகமானவர்கள்.

இவர்களிடமிருந்து ஏதாவது கற்றிருக்கிறேனா என்று தெரியாது.
ஆனால் அவர்களின் எழுத்தின் பாதிப்பு என்னுள் எப்பொழுதும் உண்டு.
எஸ். ஏ.பி, ராமையா, கருணாமணாளன், இன்னும் மறந்துவிட்ட எழுத்தாளர்களின் கதைகள்
எழுத்துகள் ,நியாயங்கள் எல்லாமே என்னை வேறுலகம்
கொண்டு சேர்க்கும்.
வசுமதி ராமசாமி எங்கள் மைலாப்பூர்காரர். மாமியாருக்கு தோழி.
நீங்கள் ஒவ்வொரு தடவையும் நல்ல வார்த்தைகள் சொல்வது
எனக்கு நல்ல ஊக்கம்.
இந்தக் கட்டுரையின் முன் பாகத்தை வெட்டிவிட்டுத்தான் ,பிறகு பதிந்தேன்.
நல்லவேளை அதை நீங்கள் படிக்கவில்லை:)

ஜீவி said...

வசுமதி ராமசாமி ஆனந்த விகடனில் பனித்துளி (பனித்திரையோ?) என்ற நாவலை எழுதியது போலவும் வாசலில் ஒரு பெண் கோலம் வரையும் படமும் தேசலாக நினைவில் தேங்கி நிற்கிறது.

அந்த நாட்களை நினைத்து மனசு மிகவும் நெகிழ்ந்து போயிற்று.

அசோக் லேலாண்ட் சேஷசாயி இவரது மகன் என்பது கெளதமனுக்கு செய்தியாக இருக்கும்.

நன்றி, வல்லிம்மா.